privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !

மோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !

-

புது தில்லி இந்திய அரசின் தலைநகர் மட்டுமல்ல, வன்முறைகளின் தலைநகரும் கூட!

டொனால்ட் ட்ரம்பின் மகளோடு ஹைதராபாத்தில் நடந்த பெண் தொழில் முனைவர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கே அரபு, ஆசிய நாடுகளின் பெண் தொழில் முனைவோர் பற்றிய பல்வேறு பில்டப்புகள் பல்வேறு அரண்மனை – நட்சத்திர விடுதிகளில் பெரும் ஆடம்பரத்துடன் நடைபெற்றன.

உண்மையில் இந்தியாவில் பெண்களின் நிலை என்ன என்பதை கீழ்க்கண்ட புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்த விவரம் திருவாளர் மோடி அவர்கள் குடிகொண்டிருக்கும் புதுதில்லிதான் மிகப்பெரும் குற்ற நகரம் என்பதை நிரூபிக்கின்றது.

இந்திரப்பிரஸ்தமாக இருந்த காலம் தொட்டு தில்லியை முகலாயர்கள்தான் அதிகம் ஆண்டார்கள் என பாஜக சங்கிகள் இந்த வன்முறை சாதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நினைக்கலாம். ஆனால் 47-க்கு பின்னர் தில்லியில் பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சிகளில் பாஜகவும் ஒன்று. இன்று ஆம் ஆத்மியே அங்கே ஆண்டாலும் பாஜகதான் சமூக அளவில் வலைப்பின்னல் கொண்ட கட்சியாகும். ஆகவே தில்லியின் வன்முறைப் பாவத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு கொடுக்குமாறு ஒரு ஆர்.எஸ்.எஸ் நபர் கேட்கவே முடியாது. இது போக தில்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வருகிறது.

இருபது இலட்சத்திற்கு மேல் மக்கள் வாழும் 20 இந்திய நகரங்களில் தில்லிதான் கொலை, வன்புணர்ச்சி, கடத்தல் உள்ளிட்ட வன்முறைகளில் முதலிடத்தில் இருக்கிறது. நவம்பர் 30 2017 அன்று 2016-ம் ஆண்டிற்கான தேசிய குற்றப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்ட போது தில்லியின் இந்த சாதனை இடம் தெரிய வந்தது.

டெல்லியில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு சுமார் 1,222 வன்முறைகள் நடக்கின்றன. இந்த குற்றங்கள் அனைத்தும் இந்திய குற்றப் பிரிவு சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களாகும். தில்லிக்கு அடுத்தபடியாக கொச்சியில் ஒரு இலட்சம் பேருக்கு 757 வன்முறைகளும், ஜெய்ப்பூரில் 756 வன்முறைகளும் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 19 பெரு நகர குற்றங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டால் தில்லியின் பங்கு அதில் 39% ஆகும். அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு நகரம் 9%, மும்பை 8% பங்குகளையும் குற்றக் கணக்கில் கொண்டிருக்கின்றன. இந்திய குற்றப் பிரிவு சட்டங்களின்படியான குற்றங்கள் 2014-ம் ஆண்டில் 1,39,707 எண்ணிக்கையில் இருந்து 2016-ம் ஆண்டில் 1,99,445 அளவுக்கு உயர்ந்து விட்டன. இந்த வளர்ச்சியின் விகிதம் 43% ஆகும்.

2016-ம் ஆண்டில் 19 பெருநகரங்களில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 2,194 ஆகும். இதில் தில்லியின் எண்ணிக்கை மட்டும் 479 ஆகும். அதாவது ஒரு இலட்சம் மக்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். பீகாரின் தலைநகரம் பாட்னாவில் 2016-ம் ஆண்டில் 195 கொலைகள் நடந்து இரண்டாம் இடத்தை பெற்றிருக்கின்றது. பீகாரில் பாஜக ஆதரவோடு திருவாளர் நிதீஷ் குமார் ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளைக் கடத்தி பிணையத் தொகை கேட்கும் குற்றத்தை எடுத்துக் கொண்டால் 2014-ம் ஆண்டை விட 30% கூடுதலாக பெருநகரங்களில் நடந்திருக்கின்றது. சென்ற ஆண்டில் நடந்த மொத்த 11,589 ஆட்கடத்தல் குற்றங்களில் தில்லியில் மட்டும் 5,925 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதன்படி தினசரி 16 ஆட்கடத்தல் குற்றம் தில்லியில் நடக்கிறது. இதற்கு அடுத்த படியாக மும்பையில் 1,949 சம்பவங்களும், பெங்களூருவில் 974 சம்பவங்களும் நடந்திருக்கின்றன. பாட்னாவில் ஒரு இலட்சம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 ஆட்கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தேசிய சராசரி ஒரு லட்சம் பேருக்கு 77.2 என்றால் தில்லியில் மட்டும் அது 182 ஆக இருக்கிறது.

தேச அளவில் 2014-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 38,385 நடந்தன என்றால் 2016-ம் ஆண்டில் 9% உயர்ந்து 41,761 ஆக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கணவன் மற்றும் அவனது உறவினர்களால் நடக்கும் தாக்குதல்கள், சித்திரவதைகளே பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் கிட்டத்தட்ட 29% அளவில் முதல் இடத்தை பிடித்திருகிறது. அதற்கு அடுத்தபடியாக பெண என்பதற்காக நடக்கும் தாக்குதல்கள் 25%, கடத்தல் 22%, வன்புணர்ச்சி 12% என்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

படம்: indiaspend.com

தில்லியில் கணவன் – உறவினர்களால் நடக்கும் தாக்குதல்கள் 3,645 என்றால், ஹைதராபாத்தில் 1311, ஜெய்ப்பூரில் 1008 ஆகவும் இருக்கின்றன. தேசிய அளவில் ஒரு இலட்சம் பெண்களில் 22.6 பேருக்கு வன்முறைகள் நடக்கிறது என்றால் ஜெய்ப்பூரில் மட்டும் எழுபது பேருக்கு நடக்கிறது. இந்த இடங்களில்தான் பத்மாவதி திரைப்படத்தின் மூலம் ராஜபுத்ர பெண்களை இழிவு படுத்துவதாக பாஜக தலைமையில் போராட்டம் நடக்கின்றது.

சென்ற 2016-ம் ஆண்டில் 19 பெருநகரங்களில் நடந்த வன்புணர்ச்சி குற்றத்தை எடுத்துக் கொண்டால் தில்லியில் மட்டும் 1,996 நடந்திருக்கின்றன. அதாவது தினசரி அங்கே 5 பெண்கள் ரேப் செய்யப்படுகின்றனர். தேசிய அளவில் ஒரு இலட்சம் பெண்களில் 9.1 பேர்களுக்கு ரேப் நடக்கிறது என்றால் தில்லியில் மட்டும் 26.3, ஜெய்ப்பூரில் 22.8, இந்தூரில் 17.2 ரேப்புகளும் நடக்கின்றன. இந்த இலட்சணத்தில் ராஜஸ்தானை ஆள்வது பாஜக-வின் ஒரு பெண் முதல்வர்.

தில்லியில் மட்டும் 144 வரதட்சணை கொலைகள் பதிவாகியிருக்கின்றன. ஒரு இலட்சம் பெண்களில் கிட்டத்தட்ட இரண்டு பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பாட்னாவில் வரதட்சணை குற்றங்களின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 7.9, கான்பூரில் 3.7, லக்னோவில் 3 ஆகவும் இருக்கின்றன. உ.பியில் ஆதித்யநாத்தின் தலைமையில் இந்துமதவெறியர்கள் ஆள்வது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டில் 19 பெருநகரங்களில் இந்திய குற்றவியல் சட்டப்படி பதிவான 5,15,635 குற்றங்கள் போக பல்வேறு சிறப்பு சட்டங்கள், உள்ளூர் சட்டங்கள் மூலம் பதிவான வன்முறைகள் 2,95,002 ஆகும். இச்சட்டங்களின் படி மோட்டார் வாகனச் சட்டம், நில வருவாய்ச் சட்டம், கந்து வட்டி சட்டம் போன்றவற்றிலும்  பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை கூட்டினால் மொத்தம் 8,08,637 குற்றங்கள் நடந்திருக்கின்றன.

ஒட்டு மொத்த குற்றங்களையும் எடுத்துக் கொண்டால் கொச்சியில் ஒரு இலட்சம் பேருக்கு 2,553.1, நாக்பூரில் 1714.6, சென்னையில் 1308.6, தில்லியில் 1263.9, சூரத்தில் 1,243.3 என பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கொச்சி எனும் மாநகரம் கேரள அடையாளத்தை இழந்து ஒரு மெட்ரோ நகரமாக மாறியிருக்கும் போது வன்முறையிலும் அதன் சுவடுகளை பதித்துச் செல்கிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மோடியின் ஆட்சியில் குற்றங்கள் கூடி அதன் மகுடமாக தில்லி இருக்கிறது.

மேலும் படிக்க:

India’s crime capital: Delhi sees most murders, rapes, abductions in 2016

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க