privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் - படங்கள்...

மீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! சென்னை, மதுரை, ஓசூர், விருதை ஆர்ப்பாட்டம் – படங்கள் செய்திகள்

-

மீனவர் துயரத்துக்கு நீதி வேண்டும் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

சென்னையில்…

சென்னை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள ஆர்மீனியன் தெருவில் 11-12-2017 அன்று காலை 11:00 மணியளவில் “மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்!” என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் பேசிய பொழுது “ஒக்கி புயல் பேரழிவால் 2000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்றும், இவர்களை மீட்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், புயல் எங்கு உருவாகி எந்த தேதியில் எந்த திசையை நோக்கி எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்; அப்படி வீசும் போது என்னென்ன பாதிப்புகளை அறிந்து முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் மக்களை எச்சரிப்பதும் அரசின் கடமை.

ஆனால் இவற்றில் எதையும் அரசு செய்யவில்லை. மீனவர்கள் போராடிய பிறகு தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்பது அரசுக்கே தெரியும். அதன் பிறகு கூட மீனவர்களை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையும் செய்யாமல், போராடுகின்ற மக்கள் மீது பொய் வழக்கு போட்டு ஒடுக்குகின்ற வேலையை அரசு செய்கிறது. மீனவ மக்களுடன் இணைந்து போராடிய மக்கள் அதிகார தோழர்களை கைது செய்து லாக்கப் சித்திரவதை செய்து சிறையில் அடைத்துள்ளது இந்த அரசு. எந்தவொரு மக்கள் பிரச்சனைகளையும் தீர்க்க முடியாமல் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது.

மக்களுக்கு மீன்களை உணவாக தருவது மட்டுமல்லாமல் பல ஆயிரம் கோடி அந்நிய செலாவணி நாட்டிற்கு ஈட்டித் தருபவர்கள் மீனவர்கள். சென்னை வெள்ள பேரழிவில் படகை எடுத்து வந்து மீட்டது முதல் மெரினா போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு உணவு இடம் அளித்து உதவியது முதல் போலீசின் காட்டுமிராண்டி தாக்குதலை எதிர்கொண்டு தங்களிடம் தஞ்சமடைந்த மாணவர்களை பாதுகாத்தது வரை மக்களின் போராட்டத்தில் மீனவர்களின் பங்கு அளப்பரியது. எனவே அவர்களுக்காக போராடுவது அனைவரின் கடமை” என்று பேசினார்.

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

நீதி வேண்டும்! நீதி வேண்டும்!
ஒக்கிப்புயல் பேரழிவில்
பலியான மீனவர்களின்
துயரத்திற்கு நீதி வேண்டும்!

புயலை பற்றிய முன்னறிவிப்பு
செய்யவில்லை! செய்யவில்லை!

ஆழ்கடல் மீனவர்களுக்கு
தகவல் இல்லை! தகவல் இல்லை!

புயலில் சிக்கிய மீனவர்களை
உடனடியாக காக்கவில்லை!

இறந்த மீனவர் உடலை கூட
மீட்கவில்லை! மீட்கவில்லை!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மீனவர்கள் காணவில்லை!

கதறுகிறார்கள் மீனவ மக்கள்
அரசின் காதில் கேட்கவில்லை!

அனைத்திலும் இந்த அரசு
தோல்வியடைந்து நிற்கிறது!

போராடுகின்ற மக்கள் மீது
வழக்கு போட்டு மிரட்டுகிறது!

மத்திய மாநில அரசுகள் தான்
மீனவர்களின் துயரத்திற்கு
காரணமான குற்றவாளிகள்!

தோள் கொடுப்போம்! துணை நிற்போம்!
மீனவ மக்களின் துயர் துடைக்க
தோள் கொடுப்போம்! துணை நிற்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்
சென்னை – 91768 01656.

*****

ஓசூரில்…

க்கிப் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் போராட்டங்களை ஆதரித்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே இன்று 11.12.2017 மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புயல் முன்னறிவிப்பு இல்லை! ஆழ்கடல் மீனவர்களுக்கு தகவல் இல்லை! புயலில் சிக்கிய மீனவர்களை உடனே காக்கவில்லை! இறந்த மீனவர்களின் உடலை உடனே மீட்கவில்லை! அனைத்திலும் இந்த மத்திய மாநில அரசுகள் தோல்வி அடைந்து நிற்கிறது.

மீனவர்கள் துயரத்திற்கு மத்திய மாநில அரசுகள்தான் குற்றவாளிகள்..! மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும் என்ற முழக்கங்களை முன்வைத்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வமைப்பை சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, மக்கள் அதிகாரம் அமைப்பின் பாகூலூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர் ரவிச்சந்திரன் தனது உரையில், பேரிடர் மீட்புக்கு ஒத்திகையெல்லாம் பார்க்கின்ற இந்த அரசு பேரிடரின்போது அதை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பியும், சென்னை நகரம் என்றால் பெயரளவிலான கண்துடைப்பு நடவடிக்கையாவது எடுத்த இந்த அரசு, கடலோர மீனவ மக்கள் விசயத்தில் பாரபட்சமாக நடந்துக்கொள்கிறது என்ற அரசின் அலட்சியப்போக்கை அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய தோழர் பரசுராமன் தனது உரையில், ஏற்கனவே தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு பல்வேறு முறைகளில் அவமானப்படுத்தப்பட்டு தங்களின் வாழ்வாதாரங்களை கார்ப்பபரேட்டுகளின் நலனுக்காக சிறிது சிறிதாக பறிகொடுத்துவரும் மீனவர்கள் இந்த ஒக்கிப்புயலால் ஒரேயடியாக ஆயிரக்கணக்கில் வாழ்விழந்து, காணாமல் போயுள்ளனர். சில மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துப்போயுள்ளனர்.

ஒக்கிப்புயல் தாக்குதலை முன்னறிந்தும் இந்த அரசு கடலுக்கு செல்லும் மீனவர்களை எச்சரிக்காது மவுனம் காத்து கொலைசெய்துள்ளது. இதே ஒரு கார்ப்பரேட் முதலாளி பாதிக்கப்படுவதாக இருந்தால் இந்த அரசு இப்படி மவுனம் காக்குமா? என கேள்வி எழுப்பி பேசினார், மீனவர்களை காப்பாற்ற துப்பில்லாத இந்த அரசு மீனவர்களுக்காக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்கள் ஏழு பேரை கைதுசெய்து தாக்கி சித்திரவதை செய்து சிறையிலடைத்துள்ளது. அரசின் இந்த இழி செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், நிபந்தனையின்றி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என அறிவித்துப்பேசினார்.

மேலும், இந்த ஒக்கிப்புயலால் பாதிக்கப்பட்டு சொல்லொணாத் துயரத்தில் கிடக்கும் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினை என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. மீன் சாப்பிடுகிற எல்லாரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும். இந்த மீனவர்களை கார்ப்பரேட்டின் நலனுக்காக காவு கொடுத்து விட்டால்.. அவர்கள் கடல் பரப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்டால் இங்கே நாம் இயற்கையான, சுவையான மீன் சாப்பிடமுடியாது. மாறாக,  விசத்தைதான் சாப்பிடவேண்டிவரும் என்பதுமட்டுமல்ல, இங்கே ஓசூரில் வடமாநில தொழிலாளர்கள் போல் அற்ப கூலிக்கு கார்ப்பரேட்டின் அடிமையாக  உழலவேண்டிய அபாயம் இதில் அடங்கியுள்ளது.

இதை தொழிலாளர்கள் சிந்தித்துப்  பார்த்து நம்முடைய பிரச்சினையும், மீனவர்களின் பிரச்சினையும் வேறுவேறல்ல என்பதை உணர்ந்து, இந்த செயலிழந்த அரசுக்கட்டமைப்புக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என உணர்த்திப் பேசியது, அங்கே இருந்த தொழிலாளர்கள், கடைவியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நல்ல ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தொடர்புக்கு :
மக்கள் அதிகாரம்,
தர்மபுரி மண்டலம்.
தொடர்புக்கு – 81485 73417, 80152 69381.

*****

மதுரையில்…

“செத்துப்போன டெட்பாடி அரசு தான் மீனவர்களின் அவலத்திற்கு காரணம்! அதிகாரத்தை கையில் எடு !” என்ற தலைப்பில் மதுரையில் 11.12.2017 காலை 11 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை பகுதி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை தாங்கினார். “மக்கள் பிரச்சனைகளை இந்த அரசு அநீதியாகவும், அகம்பாவத்துடனும் கையாள்கிறது.  அனைத்து பிரிவு மக்களும் போராடுகின்றனர்.  இன்றைய மீனவர் துயரத்திற்கும் இந்த அநீதியான அரசு தான் காரணம்.  இந்த அரசுக்கு எதிரான பல்வேறு பிரிவு மக்களின் போராட்டங்களை ஒருங்கிணைத்து போராட வேண்டும்.

அநீதி இழைக்கப்பட்ட கடலோடிகளுக்கு, அதேபோல இந்த அரசால் அநீதிக்கு ஆளான பிற பிரிவு மக்கள்தான் முன்வந்து உதவ வேண்டும்.  இந்த அரசு மக்களுக்காக எதையும் செய்ய வக்கற்றது என்பதையும், இந்த அரசை ஒழித்துக் கட்டாமல் மக்களுக்கு விடிவு இல்லை” என்பதையும் விளக்கி தலைமையுரை ஆற்றினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் ஆனந்த் தனது உரையில், ” குமரி மீனவர்கள் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணி வேண்டும்.  ஆனால் மீனவர்கள் வேண்டாம்” என அரசு செயல்படுவதையும்,  ஓக்கி புயல் கடலோடிகளின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள அவலத்தை விட அரசின் அலட்சியம் ஏற்படுத்தி உள்ள பாதிப்புகளை உணர்ச்சிகரமான உரைச் சித்திரமாக வழங்கினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், குமரியின் கடலோடிகள் செத்துக் கொண்டிருக்கும் போது, மோடி-டெட்பாடி கும்பல் ஆர்.கே.நகரிலும் குஜராத்திலும் ஓட்டுக்கு என்னென்ன முறைகேடுகளில் ஈடுபடலாம் என காட்டிய அக்கறையில் ஒரு துரும்புகூட மக்கள் மீது காட்டவில்லை என்பதையும்,  பதவி வெறி பிடித்து அலையும் மோடி-டெட்பாடி கும்பலை ஒழிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையும் விளக்கினார்.

மதுரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தோழர் பிரகாஷ், “மீனவர் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு ஆக்கபூர்வ திட்டமும் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை.  கொள்ளை அடிப்பதும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்வதும் தான் அவர்களின் நோக்கம்.  முற்றிலும் மக்கள் விரோதமாகிவிட்டது இந்த அரசமைப்பு.  இனியும் பொறுமை ஏன் ?” என போராடும் மக்களை அறைகூவி அழைத்தார்.

மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி, விவசாயிகள் செத்துப் போகிறார்கள், மாணவர்கள் செத்துப் போகிறார்கள், பேருந்து தொழிலாளர்கள் செத்துப் போகிறார்கள், நெசவாளர்கள் சிறு வணிகர்கள் மீனவர்கள் என அனைவரும் செத்துப் போகிறார்கள்.  இந்த கேடு கெட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து தனித்தனியாக போராடி ஒவ்வொரு பிரிவு மக்களும் செத்துப் போகிறார்கள்.  இனி சாக வேண்டியது இந்த அரசமைப்பு மட்டும் தான்.  மக்களைக் கொல்லும் இந்த அரசமைப்பை சாகடிக்கும் போராட்டத்தைத் தான் இனி அனைத்து பிரிவு மக்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி போராடும் மக்களுக்கு போராட வேண்டிய திசையை காட்டினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ்,புயல் வருவதை முன்னரே அறிவித்து மக்களை காக்க முடியாத வானிலை மையம் எதற்காக ?  கடலில் தத்தளிக்கும் மீனவ மக்களை காப்பாற்ற வக்கில்லாத கடற்படையும் கடலோர காவற் படையும் எதற்காக ? பேரிடர் மீட்புப் படை எந்த மயிரை புடுங்க ? கடற்படையின் கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் யாருக்கு சேவை செய்ய?  கட்டுமரம் செலுத்தும் கரங்கள் கடற்படையை நடத்தட்டும் !  துடுப்பு பிடித்த கரங்கள் துப்பாக்கிகள் ஏந்தட்டும் !  வள்ளம் தள்ளிய கரங்கள் இந்த அரசமைப்புக்கு எதிராக போர்வாளை ஏந்தட்டும் ! என அனைவருக்கும் விளங்கும் படி எழுச்சியுரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் பொதுமக்களை நின்று கவனிக்கும்படியும், உணர்ச்சிகரமாகவும் எழுச்சிகரமாகவும் எழுப்பப் பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை.

****

விருத்தாச்சலத்தில்…

மீனவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 11.12.2017 அன்று  விருத்தாசலம் பாலக்கரை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் முருகானந்தம் (வட்டார ஒருங்கிணைப்பாளார்) தலைமை தாங்கினார். அவர் பேசியபோது “மும்பை தாஜ் ஓட்டலை தீவிரவாதிகள் தாக்கிய போது முப்படைகளும் முந்தி கொண்டு பார்ப்பனிய உயர்தட்டுவர்க்க மக்களை காப்பாற்றியது. இங்கோ தமிழக மீனவர்கள் ஆயிரகணக்கில் செத்து மடிந்துள்ளனர். காணாமல் போனவர்களையும் காப்பாற்றாமல் உள்ளது.” எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் மா. மணியரசன் (பு.மா.இ.மு. செயலர்) கண்டன உரையாற்றினார். அவர் தனது உரையில், “நீதிபதி புயல் பாதிப்பு என்பது இயற்கை சீற்றம் அதனால் அரசை திட்ட கூடாது என்கிறது. நீதிமன்றம் சரி புயல் முடிந்த பின் எந்த வேலையை, பாதிப்பை சரி செய்துள்ளது. இந்த அரசு தோற்றுபோய்விட்டது. மக்களுக்கு எதிராக இருக்கிறது.” எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் புஷ்பதேவன் (ம.உ.பா.மை. மா.செயலாளர்) பேசியபோது, ”ஜெயலலிதா இறந்தார் அது ஓர் உயிர்தான் அதற்கு இந்த அரசு 108 கமிஷன் விசாரணை கமிட்டி வைக்கிறார்கள். குமரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளனர். இதற்கு என்ன செய்துள்ளது அரசு?” எனப் பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம். மாநில ஒருங்கிணைப்பாளார் தோழர் சி.ராஜு “வங்ககடலிலும், ஒக்கி புயலுக்கு பலியாகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் செத்து மிதந்து கொண்டு இருக்கிறார்கள். புயல் வரும் என்று கணித்து கூற முடியாத இந்த அரசு மீனவர்களின் பலி எண்ணிக்கையை அறிவிப்பதற்கு கூட மக்கள் ரயில்மறியல், கடலில் இறங்கிபோராட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தவேண்டியுள்ளது. அதோடு இவர்களுடைய கடற்படை விமானபடை, விமானந்தாங்கிய போர்கப்பல் அனைத்தும் கார்ப்ரேட் நலனுக்காகவும் பணக்கார வர்க்கத்தினர்க்கும் தான் பயன்படுகிறது. மீனவர்கள் இறப்பது என்பது கார்ப்ரேட்களுக்கு சாதகமானது தான். அதனால் தான் மீனவர்கள் இறப்பதை பற்றி அரசு கவலைபடுவதில்லை கடல் வளங்களை பாதுகாப்பவர்கள் மீனவர்கள்.

ஒட்டு மொத்தமாக உழைக்கும் மக்களுக்கு எதிராய் போன இந்த அரசு மக்கள் வாழ்வாதாரத்திற்கும் உரிமைக்காகவும் போராடினால் ஒடுக்குகிறது. சென்னையில் செவிலியர்கள் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் மூன்று நாள் தொடர்ந்து போராடினர். ஆனால் அரசோ நீதிமன்றத்தின் உதவியோடு போராட்டத்தை ஒடுக்கியது இதே போல் தான் போக்குவரத்து தொழிலாளர், அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தையும் அச்சுறுத்துகிறது. மேலும் மீனவர்களுக்கு உதவ போன மக்கள் மீதும் மக்கள் அதிகார தோழர்கள் மீதும் பொய்வழக்கு போட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அரசை தூக்கியெறிவோம். ஆதிகாரத்தை மக்களுகானதாக மாற்றுவோம்.” என தனது உரையை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க