privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகுஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !

குஜராத் தேர்தல் : தோல்வி பயத்தில் பாக் பீதி கிளப்பும் மோடி !

-

“குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடப் பார்க்கிறது. காங்கிரசின் அகமது பட்டேலை குஜராத்தின் முதல்வராக ஆக்க பாகிஸ்தான் சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மணிசங்கர் ஐயரின் வீட்டில் ஒரு சந்திப்பு நடந்துள்ளது. அந்த சந்திப்பில், பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தலைவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த சந்திப்புக்குப் பின் தான் என்னை “கீழ்த்தரமானவன்” என மணிசங்கர் ஐயர் ஏசினார். என்னைக் கீழ்த்தரமானவன் என்று ஏசியதன் மூலம் என்னை மட்டுமல்ல, குஜராத் மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளையும் ஏழைகளையும் காங்கிரசு இழிவு படுத்தியுள்ளது” – கடந்த ஞாயிற்றுக் கிழமை, பத்தாம் தேதி குஜராத் மாநிலம் கலோல் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இவ்வாறாகப் பேசியுள்ளார் மோடி.

இதற்கு சில நாட்கள் முன்பு தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, வாக்காளர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டும்? (ராமர்) கோவிலா, (பாபர்) மசூதியா? என்ன வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” எனப் பேசியுள்ளார். அதற்கு ஒரு சில நாட்கள் முன் பேசிய அமித்ஷா, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமெனில் குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும் எனப் பேசியுள்ளார்.

குஜராத் மாநில தேர்தல் கூட்டங்களுக்காக மத்திய அமைச்சரவை மொத்தத்தையும் பாரதிய ஜனதா களமிறக்கி விட்டுள்ளது. பாரதிய ஜனதா பேச்சாளர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கே நட்சத்திர அந்தஸ்து உள்ளது. எனவே, தனது பேச்சில் நவரசமும் சொட்ட வேண்டும் என்பதில் மோடி கவனமாக உள்ளார். ஆவேசம் பொங்கி வரும் போது சட்டென தாழ்ந்து கண்ணீர் மல்குகிறார் – தழுதழுக்கும் குரலில் பேசிக் கொண்டு அப்படியே நூல்பிடித்து மேலேறி ஆத்திரத்தில் வெடிக்கிறார். தனது உணர்ச்சிகளுக்கான கச்சாப் பொருளை எங்கிருந்து வேண்டுமானாலும் மோடியால் எடுத்தாள முடிகிறது.

இப்படித் தான் கடந்த 9 -ம் தேதி லூனாவாடாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, “விசயம் தெரியுமா மக்களே… காங்கிரசு எனது பிறப்பையே சந்தேகித்து விட்டது. சல்மான் நிஜாமி எனும் பொறுப்பான காங்கிரசு தலைவர் எனது தாய் தந்தை யார் எனக் கேட்டு விட்டார். (குரலில் தழுதழுப்பு, வழிவதற்கு கண்ணீர் கட்டி நிற்கிறது. அடுத்து சட்டென குரல் உயர்கிறது) நான் இந்த மண்ணின் மைந்தன். இந்த தேசத்தின் மைந்தன். லூனாவாடாவின் மைந்தன். இந்த நாட்டின் மக்களே எனது தாய் தந்தையர். காங்கிரசு என்னை ரொம்பக் கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறது மக்களே” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் இந்த பேச்சைத் தொடர்ந்து இணையத் தேடு பொறியான கூகிளில் சல்மான் நிஜாமி யார் என்கிற தேடுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சொல்லப் போனால் காங்கிரசு கட்சியே சல்மான் நிஜாமி யார் எனத் தேடிக் கொண்டிருந்தது. உண்மை என்னவெனில், காஷ்மீரைச் சேர்ந்த சல்மான் நிஜாமி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் காங்கிரசில் சேர்ந்துள்ளார். கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நபரான சல்மானின் கருத்தை காங்கிரசு கட்சியின் அதிகாரப் பூர்வ கருத்து போல மேடையில் பேசி அனுதாபம் தேட முயற்சி செய்துள்ளது பின்னர் அம்பலமானது.

அதே போல உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டுமா, மசூதியைக் கட்ட வேண்டுமா என்பதை குஜராத்தில் பாரதிய ஜனதாவுக்கு விழும் வாக்குகள் எப்படி தீர்மானிக்கும்…? என்கிற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கும் மத்தியிலும் சரி, அயோத்தி அமைந்திருக்கும் உத்திரபிரதேசத்திலும் சரி – அதிகாரத்தில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான்.

“பாகிஸ்தான் சதி” விவகாரத்தைப் பொறுத்தவரை, மோடி தனது பேச்சில் குறிப்பிட்டது போல் ஒரு கூட்டம் நடந்தது என்பது மட்டுமே உண்மை – மற்ற அனைத்தும் பச்சைப் பொய்கள். மணிசங்கர் ஐயர் வீட்டில் நடந்தது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் முந்தைய தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் இந்திய பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானுடன் இராஜீய உறவுகளைப் பேண அதிகாரப்பூர்வமான தொடர்புகளைப் பராமரித்து வரும் அதே வேளையில் அதிகாரப்பூர்வமற்ற தொடர்புகளையும் இந்திய அரசு பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கான இந்திய அரசின் கவுன்சில் ஜெனரலாக பணியாற்றிய மணிசங்கர் ஐயர் இது போன்ற சந்திப்புகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.

மணிசங்கர் ஐயரின் வீட்டில் நடந்த விவாதத்திலும் அதைத் தொடர்ந்து நடந்த விருந்திலும் கலந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி தீபக் கபூர், மேற்படி கூட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவது குறித்தே பேசப்பட்டதெனவும் மற்ற விசயங்களைப் பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது.

ஒருவேளை மோடி குறிப்பிடுவதைப் போன்ற “சதி” உண்மை என்றால், அதைக் குறித்து சி.பி.ஐ, இண்டெலிஜன்ஸ் ப்யூரோ போன்ற அமைப்புகள் விசாரித்து “சதியில்” தொடர்புடையவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் பிரச்சார மேடையில் ஒப்பாரி வைப்பதில் இருந்து தெரிவது என்னவென்றால், ஒன்று – மோடி குறிப்பிடும் சதி பொய்; அல்லது, நாட்டிற்கு எதிரான சதிச்செயலுக்கு எதிரான நடவடிக்கையை முறியடிக்க பிரதமர் எனும் முறையில் மோடி தவறியிருக்கிறார்.

***

குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்கிற கணிப்புகளைக் கடந்து இந்துத்துவ கருவறையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. பிரச்சாரத்தின் துவக்கத்தில் வாக்களிக்கப்பட்ட வளர்ச்சியும் குஜராத் மாடலின் பயன்களும் எங்கே எனக் கேள்வியெழுப்பியது காங்கிரசு.

பெரும் முதலாளிகளுக்கு பாரதிய ஜனதா சலுகைகளை வாரி வழங்குவதாக அக்கட்சி குற்றம் சாட்டியது – காங்கிரசின் சொந்த பொருளாதாரக் கொள்கையும் பாரதிய ஜனதாவின் கொள்கையும் வேறு வேறல்ல என்கிற எதார்த்தம் ஒருபுறமும், பாரதிய ஜனதாவைத் தாக்கும் போக்கில் முதலாளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்கிற உண்மை இன்னொருபுறமும் கிடுக்கியாய் இறுக்கிய போது காங்கிரசின் சுருதி மெல்லக் குறைந்தது.

எனினும், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பாரதிய ஜனதாவின் பொருளாதாரத் தோல்விகளை காங்கிரசு கட்சி தனது துவக்க கட்ட விவாதத்தில் முன்னிறுத்தவே செய்தது. பணமதிப்பழிப்பும், ஜி.எஸ்.டியும் குஜராத்தின் வணிக சமூகத்தை பாதாளத்தின் ஆழத்தில் அமிழ்த்திவிட்டிருப்பதையும், வேலை வாய்ப்பற்ற பட்டேல்களின் ஆத்திரத்தையும் உணர்ந்த பாரதிய ஜனதா மெல்ல மெல்ல விவாதத்தை மோடியின் ஆளுமையை மையப்படுத்தியும், இந்துத்துவ செயல்திட்டத்தை நோக்கியும் இழுத்துச் சென்றுள்ளது.

கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இந்துத்துவ போதை ஊசிக்கு குஜராத் “இந்து” வாக்காளர்களை அடிமைப்படுத்தியுள்ளது பாரதிய ஜனதா. எனினும், மாறியுள்ள பொருளாதாரச் சூழலில் பழைய அளவுகளில் “சரக்கை” ஏற்றினால் போதை ஏற மறுக்கிறது என்பதை தாமதமாக உணர்ந்துள்ள அக்கட்சி, தற்போது வீரிய ரக இந்துத்துவ போதைச் சரக்குகளை பிரச்சார மேடைகளில் அறிமுகம் செய்து வருகிறது.

ஓட்டரசியலின் வெற்றிகளுக்காக அரசியல் கட்சிகள் கேடுகெட்ட நிலைகளுக்கெல்லாம் தாழ்ந்து செல்லத் தயங்காது என்பதை கடந்த கால வரலாறுகளில் இருந்து நாம் அறிவோம்; எனினும், பா.ஜ.க-வின் அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக் கூடிய கட்சி சமகால வரலாற்றில் வேறெதுவும் இல்லை என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியே சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா அடைந்துள்ள பதற்றம் இவர்களைத் தோல்வி அறியாதவர்களாக ஊடகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பம் போலியானது என்பதை உணர்த்தியுள்ளது.

மேலும் :


 

  1. ஐயோ பாவம் வினவின் நிலைமை இப்படி ஆகியிருக்க தேவையில்லை. குஜராத் மற்றும் ஹிமாச்சல் இரண்டு இடங்களிலும் பிஜேபி வெற்றி பெற போகிறது 🙂

    அடுத்து பிஜேபி சென்ற முறை இவ்வுளவு ஒட்டு வாங்கியது இப்போது ஓட்டுகள் குறைந்து இருக்கிறது.
    மெஷின் hack செய்து விட்டார்கள்

    இப்படி எதாவுது சொல்லி வினவு மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான் 🙂

    மகிழ்ச்சி

    • பீதி கிளப்பியது உண்மை. பீதி கிளப்பி வெற்றி பெற்றுள்ளார் என்பதை ஏற்கிறீர்களா?

      • ஏன் EVM யை விட்டு விட்டிர்கள், சொல்ல வேண்டியது தானே பிஜேபி EVM யை tamper செய்து வெற்றி பெற்றார்கள் என்று….

        உங்களின் புலம்பல்களை எல்லாம் மக்கள் ஏற்கவில்லை. இந்த தேர்தல் வெற்றி மூலம் பணமதிப்பு நீக்கத்தை மக்கள் ஏற்று கொண்டு இருக்கிறார்கள், நீங்கள் கடுமையாக எதிர்த்த GST வரி விதிப்பை ஏற்று கொண்டு இருக்கிறார்கள். இனியும் நீங்கள் EVM பற்றி பேச முடியாது, GST பற்றியும் பேச முடியாது.

        • பாகிஸ்தான் சதி என்று மோடி பேசியது உண்மையா இல்லையா? அது சரியா என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

          • எல்லோருக்கும் பாகிஸ்தான் சதி பற்றி தெரிந்த விஷயம் தான் அவர்கள் இந்தியாவிற்கு (மோடிக்கு) எதிராக சதி செய்யவில்லை என்றால் தான் அது செய்தியாக இருக்கும்.

            ஆனால் மணிசங்கர் அய்யர், மன்மோகன் சிங் எல்லாம் பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்தார்கள் என்பதை நான் ஏற்கவில்லை, அப்படி மோடி பேசியது தவறு. அவர் பாகிஸ்தான் சதி செய்கிறது என்பதோடு நிறுத்தியிருக்க வேண்டும்.

          • ///நான் ஏற்கவில்லை///

            நீங்கள் ஏற்கவில்லை. ஆக, மோடி பொய் சொன்னார் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். நன்று!

            மேலும், மோடி சொன்னதை நீங்கள் ஏற்கவில்லை என்றாலும், மோடியை உங்களைவிட அளவுக்கு அதிகமாக நம்பியவர்கள் அந்தப் பொய்யை ஏற்றார்களா இல்லையா என்பதும் தான் கேள்வி.

            நீங்களே ஏற்காத, மோடி சொன்ன பொய்யைப் பற்றியும், மோடி தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தை தவிர வேறு எதற்காக அந்தப் பொய்யைச் சொன்னார் என்பதயும் பற்றி தான் இந்தக் கட்டுரை பேசுகிறது. இந்தக் கட்டுரையில் நீங்கள் எங்கே முரண்படுகிறீர்கள்?

  2. என்னை பொறுத்தவரையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடித்து இருக்கிறது, நிச்சயம் இது நல்ல விஷயம் தான்.

    அதேபோல் இப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தால் மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார்…

    • பா.ஜ.க விற்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பா.ஜ.க என்பதெல்லாம் ஏமாற்று தான்.. வெற்றி பெறுவது பா.ஜ.க வாக இருந்தாலும் சரி காங்கிரசாக இருந்தாலும் சரி, இந்த தேர்தல் முறையின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

  3. //அடுத்து பிஜேபி சென்ற முறை இவ்வுளவு ஒட்டு வாங்கியது இப்போது ஓட்டுகள் குறைந்து இருக்கிறது.
    மெஷின் hack செய்து விட்டார்கள்//

    நீங்களே சொல்லி விட்டீர்கள். அப்புறம் என்ன…

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க