privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

-

கார்ல் மார்க்சின் மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு !

கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!

தோழர்களே, இரண்டு நிகழ்வுகளை இணைத்து நாம் கொண்டாடுகிறோம். நாம் இணைக்கிற நிகழ்வுகள் என்பதைக் காட்டிலும்  வரலாற்றில் இந்த நிகழ்வுகள் எவ்வாறு இணைந்திருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அறிவியல் துறையில் டார்வினுடைய நூல் வெளிவந்ததைக் குறிப்பிட்ட மார்க்ஸ், அந்தத் துறையில் அது ஒரு புரட்சி என்றார்.

சமூக அறிவியல் துறையில் மார்க்சின் மூலதனம் என்பது ஒரு திருப்பம். சமூக அறிவியலுக்கு அடிப்படை மாற்றத்தைக் கொடுத்தது. அதே போல் அரசியல் வரலாற்றில், உலக வரலாற்றில் ஒரு திருப்பு முனையைக்கொடுத்த புரட்சி என்றால் அது நவம்பர் புரட்சி தான்.

அண்டத்தின் பிறப்பு எனப்படுவது குறித்து ஒரு கருத்து அண்டவியல் துறையிலே உண்டு. பிக் பேங் (மாவெடிப்பு) கொள்கை என்று சொல்வார்கள். மனிதகுல வரலாற்றில் ஒரு நூலாகக் கண்ட மாவெடிப்பு மூலதனம், அரசியல் புரட்சியாகக் கண்ட மாவெடிப்பு  நவம்பர் புரட்சி. அது சோசலிசப் புரட்சிகளின் தொடக்கம் மட்டுமல்ல; அடிமைத் தனத்தில் உழன்றுகொண்டிருந்தநாடுகளில் விடுதலைக்கு வித்திட்ட புரட்சி அது.

மூலதனம் என்கின்ற அந்த நூலில் மார்க்ஸ் வகுத்துக் கொடுத்தபொருளியல் கொள்கை, அதற்கு அடிப்படையாக இருந்த மெய்யியல் அரசியல் இவற்றையெல்லாம் இந்த நாட்டின் எல்லைகளைத் தாண்டிக் கண்டங்களின் அளவில் கொண்டு சேர்த்த புரட்சி இந்த நவம்பர் புரட்சி.

முதன் முதலாக ஜெர்மானியப் பதிப்பிற்காக, மார்க்ஸ் மூலதனத்தை இலண்டனில் வாழ்ந்து கொண்டு எழுதினார். ஆனால், ஆங்கிலத்தில் எழுதாமல், தன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதினார். மார்க்ஸ் மறைந்ததற்குப் பிறகு எங்கெல்ஸ் செய்த மகத்தான காரியம் இரண்டாம் பாகத்திற்காக ஈராண்டு காலம், மூன்றாம் பாகத்திற்காக ஒன்பது ஆண்டு காலம் என அந்த வயோதிகப் பருவத்தில் கண் பார்வை மங்கியிருந்த போது, நோயுற்ற நிலையில், இறுதியாகப் புற்று நோய் தாக்கிய நிலையில் பதினோரு ஆண்டு  காலம் அந்த மூலதனத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிடுவதற்காகவே எங்கெல்ஸ் செலவிட்டார். அது மட்டுமல்ல, அதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட வேறு மொழிகளில் வந்த ஒவ்வொரு மொழிபெயர்ப்பையும் திருத்துவது எங்கெல்சின் வேலையாக இருந்தது.

பாலுக்குள் மறைந்திருக்கிற நெய்யைப் போல், பூவுக்குள் மறைந்திருக்கிற விதையைப் போல், மார்க்ஸ் என்று சொல்லும் போதெல்லாம் அதற்குள் எங்கெல்சும் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கடுத்து நாம் மூலதனம் படைப்பிற்காக நினைவு கொள்ள வேண்டிய ஒரு நபர் இருப்பாரென்றால், அது  ஜென்னி மார்க்ஸ். அவர் பிரபுத்துவ குலத்திலே பிறந்தவர், அவருடைய சகோதரர் பிற்காலத்திலே பிரஷ்ய நாட்டினுடைய அமைச்சரவையிலே உள்துறை அமைச்சராகின்ற அளவுக்கு ஒரு பெரிய குடும்பம்.

மார்க்சுக்கும் ஜென்னிக்கும் பிறந்த குழந்தைகள் ஏழு. பசியால், பட்டினியால் நோயுற்றதால், மருத்துவத்திற்கு  வழியில்லாததால் 7 பேரில் 4 பேர் இறந்து போனார்கள்.

மார்க்சியம் என்ற விரிந்தகன்றமைந்த கருத்துக்குள்ளே மார்க்சிய மெய்யியல், மார்க்சியப்  பொருளியல், மார்க்சிய அரசியல் ஆகியவை அடங்குகின்றன. இப்போது எல்லாவற்றுக்குப் பிறகும் ஒரு இயம் என்று போட்டுவிடுகின்றார்கள். அப்படிப் போட முடியாது. மார்க்சியம் என்றால் என்ன என்கிற போது, லெனின்  பதில் சொல்கிறார், மார்க்ஸ்  கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு ஒழுங்கமைப்பு இது என்கிறார்.

மார்க்ஸ் இரண்டு கண்டுபிடிப்புகளைச் செய்தார். மனித சமூகத்தின் வளர்ச்சி விதியை அவர் கண்டுபிடித்தார்.

மனிதர்கள் தங்கள் தேவைகளுக்காகப் புதியவற்றைப் படைக்க வேண்டியுள்ளது. அப்படிப் புதியவற்றைப் படைக்கிறபோது, அந்தத் தேவை பெருகுகிறபோது, அவர்கள் அதை உற்பத்தி செய்யும்போது பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, தங்களுக்கிடையிலான புதிய உறவுகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த உறவுகள் ஒரு  கட்டத்தில் மேற்கொண்டு உற்பத்தி ஆற்றல்களின் வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிற போது, உறவுகளை மாற்றி அமைக்க வேண்டி வருகிறது. சமூக வளர்ச்சிக்கெல்லாம் மூல காரணமாக இருப்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அதையொட்டி உற்பத்தி உறவுகளின் மாற்றமும் தான் என்ற விதியைக் கண்டுபிடித்தவர் கார்ல் மார்க்ஸ்.

இது ஒரு சாதனை, மூலதனம் முன்னுரையின் முதல் பாகத்தில் மார்க்ஸ் சொல்வார், “முதலாளித்துவம் நிறைய போர்வைகளைப் போர்த்திக் கொண்டு வருகிறது. ஜனநாயகப் போர்வை, பாராளுமன்றப் போர்வை இப்படி என்னென்ன வழிகள்இருக்கின்றதோ, அத்தனைக்குள்ளும் தன்னை ஒளித்துக் கொண்டு வருகிறது. இந்தப் போர்வைகளையெல்லாம் நீக்கி, முதலாளித்துவத்தை அம்மணமாக்கிக் காட்டுகிற வேலைதான் இந்த நூலை எழுதுவதில் எனக்கிருக்கின்ற நோக்கம்” என்று அவர் சொல்லுவார். மூலதனம் அதைத்தான் செய்கிறது.

ஒரு உடற்கூறியல் ஆராய்ச்சியாளன் உடற்கூறுகளைப் பற்றி ஆய்வு செய்யவேண்டுமென்றால், முதலில் அவன் தன் எதிரே உள்ள உடலைப் பார்க்க வேண்டும். தலை, வாய், கண், மூக்கு, தோல், கை, கால் என்று தான் அவன் ஆராய்ச்சி தொடங்கும். வெளியில்  உள்ள தோற்றப்பாடுகள், புலப்பாடுகளைத் தாண்டி, இறுதியாக இருக்கிற சாரம், ஒவ்வொரு உடலிலும் இருக்கின்ற உயிரணுவில் போய் முடியும். இதுவே ஆய்வு செய்கிற முறை.

ஆனால், இந்த முடிவை அவன் மாணவனுக்குக் கற்றுத்தருகிறபோது, அறிவியல் உலகத்தின் முன்னால் படைக்கிற போது எங்கிருந்து ஆரம்பிப்பான்? உயிரணுவிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதையும் விளக்குவான். அதேபோல, இந்தச் சமூகத்தின் உயிரணு என்பது சரக்கு. இந்த உயிரணுவைக் கடைசியாகத் தான் விளக்கமுடியும், ஆனால், மார்க்ஸ் சரக்கு என்பதிலிருந்துதான் மூலதனம் நூலையே ஆரம்பிக்கின்றார்.

ஒவ்வொரு சரக்குக்கும் பயன்பாடு இருக்கிறது. ஒவ்வொரு பயன்மதிப்புள்ள சரக்கையும் சந்தையிலே போய்க் கொடுத்து வாங்குகிறோம். எனவே, அதற்கு மாற்று மதிப்பு இருக்கிறது. ஏதோ ஒருகட்டத்தில் இந்த சரக்கு உற்பத்தி என்பது, பணத்தின் அளவைக் கூட்டக்கூடிய ஒன்றாக மாறுகிறது. பணம், சரக்கு, கூடுதல் பணமாக ஆகிறது. எங்கே இந்த மர்மத்தைக் கண்டுபிடியுங்கள் என்று அவர் அறைகூவுகிறார்.

இந்த ஆய்வில் அவர் முடிவுக்கு வருகிறார். சந்தைக்கு எத்தனையோ சரக்குகள் வருகின்றன. சட்டை வருகின்றது, பேனா வருகின்றது, கட்டிடம் வருகிறது, கல் வருகிறது, இவையெல்லாம் அவற்றின் மதிப்புக்கேற்ப விற்கப்படுவதாகவும் வாங்கப்படுவதாகவும் நாம் அனுமானம் செய்து கொள்ளலாம். ஆனால், அதே சந்தைக்கு ஒரு புதிய சரக்கு வருகிறது. இது ஒரு அதிசயமான சரக்கு, அற்புதமான சரக்கு. அதற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. சட்டைக்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு சட்டையின் மதிப்பைத் தீர்மானிக்கிறது, புத்தகத்திற்குள்ளே அடங்கியிருக்கிற மொத்த மனித உழைப்பு, புத்தகத்தினுடைய மதிப்பைத் தீர்மானிக்கிறது, இவையனைத்தும் தனிப்பட்ட ஒருவரின் உழைப்பல்ல; மாறாக, சமூக உழைப்பு; சமூக அளவிலான சராசரி உழைப்பு.

கார்ல் மாக்ஸின் மனைவி ஜென்னி மார்க்ஸ்.

ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியைச் சந்தையிலே விற்க வருகிறான். அப்படி விற்க வரும்போது அந்த உழைப்புச் சக்தி என்ற சரக்கையும் வாங்குகிறார்கள். இந்த உழைப்புச் சக்தியை ஆலை முதலாளி வாங்கி நுகர்கிறான். நுகர்கிறான் என்றால், அவனுடைய ஆலையில் எந்திரங்கள் மீது, கரியின் மீது, மூலப் பொருட்களின் மீது அவற்றைப் பயன்படுத்துகிறான். இப்படிப் பிரயோகிக்கும்போது ஒரு அதிசய விளைவு ஏற்படுகின்றது.  அது என்னவென்றால், இந்த ஒரு சரக்கு மட்டும் தன் மதிப்புக்கு மேல் கூடுதல் மதிப்பைத் தோற்றுவிக்கிறது.

அவனுடைய 4 மணி நேர உழைப்பு அவன் உழைப்புச் சக்தியின் மதிப்பை நிறைவு செய்துவிடுகிறது. எஞ்சிய 4  மணி நேர உழைப்பு ஒரு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறது. அந்த உபரி மதிப்பு யாருக்குக் கிடைக்கிறது; எந்தமுதலாளியின் கையில் எந்திரங்கள், கச்சாப் பொருள், கட்டிடம் உள்ளிட்ட இதர பொருட்கள் இருக்கிறதோ, அவனுடைய கைகளில் உபரி மதிப்பு சேருகிறது. இதுதான் உபரி மதிப்பு, இதுதான் சுரண்டல் என்று அவர்முடித்து  விடுகிறார். இப்படி உபரிமதிப்பைப் படைக்கிற பணம் மூலதனமாகிறது. மூலதனம் உபரிமதிப்பைப் படைக்கிறது, உபரிமதிப்பு மூலதனத்தைத் தோற்றுவிக்கிறது.

ஒவ்வொரு சரக்கிலும், சமூக அளவில் தேவைப்படுகிற அந்த சராசரி உழைப்பு மதிப்பைத் தீர்மானிக்கிறது. இது எங்கு போய் ஈடேற்றம் பெறுகிறது? ஒருவன் பகவத் கீதை விற்கிறான், இன்னொருவன் பட்டைச் சாராயம்விற்கிறான். பட்டைச் சாராயத்திலும், பகவத் கீதையிலும் சரிசமமான உழைப்பு பங்கிடப்படுகிறது. இந்த உறவு யாருக்கும் யாருக்குமான உறவு? பகவத் கீதையை அச்சிட்டவனுக்கும், பட்டைச் சாராயம் காய்ச்சியவனுக்குமானஉறவு. இந்த உறவு நமக்கு எப்படித் தெரிகிறது? பட்டைச் சாராயத்திற்கும், பகவத் கீதைக்குமான உறவாக நமக்குத் தெரிகிறது. இதைச் சரக்குகளின் மாய்மாலம் என்று மார்க்ஸ் சொல்கிறார்.

இது மனிதர்களுக்கிடையிலான உறவைப் பொருட்களுக்கிடையிலான உறவாகக் காட்டுகிறது. தெருவில் ஒருவர் விளக்குமாறு விற்றுக்கொண்டு போகிறார். ஏய், விளக்குமாறு இங்கே வா என்று நாம் கூப்பிடுகிறோம். ஏனென்றால்,விற்கப்படும் பொருள் அதுதான். அப்படி அந்த விளக்குமாற்றினுடைய மதிப்பில் அடங்கிய ஆள் உருவமாக அந்த நபர் இருக்கிறார்.

உற்பத்தியும் உழைப்பும் சமூகமயமாக்கப்பட்டுவிட்டது. ஆனால், உபரி மதிப்பு முதலாளிகளால் களவாடப்படுகிறது.

ஆனால், ஒரு அம்பானியை,  ஏய்! ஃபோன் இங்கே வா என்று அழைக்க முடிவதில்லை. அங்கே அந்த நிறுவனத்தின் பெயராக அது வந்து விடுகிறது.  ஏனெனில், அதில் சமூக அளவிலான உழைப்பு நிறைந்திருக்கிறது. இப்படி வருகிற போது, சரக்காக விற்கப்படுகிற உழைப்புச் சக்தி யாரிடமிருக்கிறது? தொழிலாளியிடமிருக்கிறது.

கூலித் தொழிலாளி ஒரு முனையில் இருக்கிறான், எந்த உற்பத்திச் சாதனங்களும் அவனுக்குச் சொந்தமில்லை, ஒரு நட்டு, கருவி, போல்டு என எதுவுமே அவனுக்குச் சொந்தமில்லை. இன்னொரு பக்கம் இந்தக் கருவிகள், உற்பத்திச் சாதனங்கள் எல்லாவற்றையும் தன் கையில் தனி உடைமையாக வைத்திருக்கின்ற முதலாளி. இந்த இரண்டு பேருக்கும் இடையிலான அந்த உறவு இருக்கிறதே, அந்த உறவுக்குப் பெயர் தான் மூலதனம்.

மூலதனம் என்றால் கரியில்லை, மூலதனம் என்றால் எந்திரமில்லை, மூலதனம் என்றால் வங்கியிருப்பில்லை. மூலதனம் என்பதின் வடிவங்கள் இவையனைத்துமே. ஆனால், மூலதனம் என்பதின் சாரம் இந்த உறவு தான். மூலதனம் உற்பத்தியாகிறதென்றால், இந்த உறவு உற்பத்தியாகிறது என்பது பொருள்.

முதலாளித்துவத்தினுடைய ஆதி மூலதனத் திரட்டல் என்பது என்னவென்றால், இந்த உறவைப் புதிதாக உண்டுபண்ணுவது. இந்த உறவை உண்டுபண்ணுவது அவ்வளவு எளிதில்லை. நிலத்திலிருந்து விவசாயியைப் பிரிக்கவேண்டும், பட்டறைத் தொழிலிருந்து பட்டறை அதிபரைப் பிரிக்க வேண்டும், கைவினைஞனைக்  கைத்தொழிலிடமிருந்து பிரிக்க வேண்டும், மொத்தத்தில் அவர்களை ஒன்றுமற்ற ஓட்டாண்டியாக மாற்ற வேண்டும்.

இந்திய துணைக்கண்டத்தில் பிரித்தானிய ஆட்சியின் பஞ்சமும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலும், அமெரிக்காவில் ‘கோல்டு ரஷ்’ என்ற பெயரில் செவ்விந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இந்த மூலதனத் திரட்டலினுடைய சாரம்தான்.

இப்போது மூலதனம் பல வடிவங்கள் எடுத்துவிட்டது. இது தேச எல்லைகளை உடைத்துக்கொண்டு பரவுவது பற்றி 1847 -ஆம் ஆண்டு காலக்கட்டத்திலேயே கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ் எழுதினார். முதலாளித்துவ பெருமலையை உடைப்பதற்கு மார்க்சும் எங்கெல்சும் வார்த்த சிற்றுளி கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை.

ஜெய்பூர் நகர விரிவாக்கத் திட்டத்திற்காகத் தமது நிலங்கள் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதை எதிர்த்து ராஜஸ்தான் விவசாயிகள் நடத்திய போராட்டம்.

இன்று சொல்கின்றார்களே, உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்பதான போக்குகள், எல்லாவற்றையும் சரக்குகளாக மாற்றுகிறது. அதாவது கல்வி சரக்கு, கலைகள் சரக்கு என எல்லாவற்றையுமே சரக்குகளாக மாற்றுவது என எல்லா ஒப்பந்தங்களும் நடக்கின்றன. இது முதலாளித்துவ சமூகத்தினுடைய வளர்ச்சி விதி. இந்த விதியை எவனொருவனும் மாற்றி எழுத முடியாது.

எப்படிப் பணம் மூலதனமாகிறது, எப்படி மூலதனம் உபரி மதிப்பைப் படைக்கிறது என்பதை முதலில் கோட்பாட்டளவில், பின்னர் நடைமுறைச் சான்றுகளோடு எடுத்துரைக்கிற நூல்தான் மார்க்சின் மூலதனம். படிக்க முடியாது என்றோ, முடிக்க முடியாது என்றோ கவலைப்படவேண்டாம், முயற்சி எடுத்துப் படிக்க வேண்டும்.

லெனின் அந்த நூலைப் படித்தார். அவர் படித்ததோடு நிற்கவில்லை, அந்த நூல் வரையறுத்துக் கொடுக்கிற விதிகளை, முதலாளித்துவ வளர்ச்சியினுடைய பொருளாதார இயக்க விதிகளைத் தன்னுடைய  நாட்டில் எப்படிப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆய்வில் அவர் ஈடுபட்டார்.

ரஷ்ய முதலாளித்துவ வளர்ச்சி விதியை அவர் ஆய்வு செய்து கண்டுபிடித்த காரணத்தினால்தான், ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை, புரட்சி என்ற ஒரு புள்ளியிலே அவரால் முடிக்க முடிந்தது. நமக்கும் அப்படி ஒரு தேவை இருக்கிறது.

இது அறிவியல் நூல், நம்மைச் சூழ்ந்திருக்கிற சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு, அந்தச் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு அறிவியல் ஆயுதம் இந்த நூல். 27 வயதில் ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகளில் மார்க்ஸ்எழுதினார். அறிவியல் அறிஞர்கள், மெய்யியல் அறிஞர்கள் இந்த உலகைப் புரிந்து கொள்ள முயல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு முக்கியம் இந்த உலகை மாற்றுவது தான். இது நடக்க வேண்டுமென்றால் நாம் உழைக்கவேண்டும். மார்க்சும், எங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஆற்றிய பணி என்பது தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே அறியும்படி செய்ததும், உணரும்படி செய்ததும் தான். இதில் ஒரு வார்த்தைகூட வீணாக எழுதவில்லை. அவர்களுடைய பணியின் சாரம் கனவுகளின் இடத்தில் அறிவியலை வைத்தார்கள்.

நான் இந்த மேடையிலிருந்து அறைகூவலாகச் சொல்கிறேன், மூலதனத்தின் அறிவியல் முடிவுகளை, மார்க்சியத்தின் அறிவியல் முடிவுகளை வேறு ஒரு தளத்திலே நின்று யாரும் கேள்வி கேட்கத் துணிந்தால், நானும்விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். எதையுமே படிக்காமல், யாரையுமே படிக்க விடாமல், மார்க்ஸ் போய்விட்டார், லெனின் போய்விட்டார், புரட்சி எப்படி நடக்கும் என்று பேசிக்கொண்டும், புலம்பிக்கொண்டும்இருப்பவர்களைப்  பற்றி நமக்குக் கவலையில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், நின் வழியே நீ செல் என்று மார்க்ஸ் நமக்கு அறிவுறுத்தினார்.

நாம் கோழைகளல்ல, தடுமாறுகிறவர்களல்ல, தெளிவானவர்கள் என்றால் மார்க்சியம் என்கிற அறிவியலை,  அதைச் சாறு பிழிந்து கொடுக்கிற மூலதனத்தை, அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியிருக்கிற நவம்பர் புரட்சியை, மூலதனம் எப்படி இயங்குகிறது, முதலாளித்துவ அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைக் கற்பிக்கிற அந்தப் பாடத்தைக் கற்போம், உள்வாங்குவோம், மற்றவர்களுக்குக் கற்பிப்போம், மாற்றத்தைக்கொண்டுவருவோம்.

-புதிய ஜனநாயகம், டிசம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com