privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைமாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !

மாட்டுக் கொட்டகை மனிதர்களும் தேநீர்க் கடையும் !

-

மாட்டுக்கொட்டகை மனிதர்களும் தேநீர் கடையும் !

படம் : ஓவியர் முகிலன்

மார்கழியின் அதிகாலைகள்
அவ்வளவு சுகமானவை…,
குளிர்மட்டும் செவிகளை அடைக்கும்.
மற்றபடி
பசு மாட்டுக்கு புல் அறுக்க
அம்மாவோடு சென்ற
பொழுதுகள் பொக்கிஷம் போன்றவை.

அம்மாவின் ஆட்காட்டி விரல் பிடித்து
வயல் வெளிகளில்
ஒரு படை வீரனைப் போல
பயணித்தது இன்றும்…
பசுமை பரப்பி
மனதில் பதிந்து கிடக்கிறது….

நடுங்கும் குளிரில்
லாவகமாய் அருகம்புல்
அறுத்திடும் அம்மாவை..,
புல்லின் நுனியில் நிற்கும்
பனித்துளியின் ஊடாக..,
குறும்பாய் பார்க்கையில்
‘அழுக்கான’ தேவதையை போல்
அம்மா அவ்வளவு
அழகாய் இருப்பாள்…

என்னதான் அருகம்புல்லும்
கோரைப்புற்களும்
அறுத்து வந்து கொட்டினாலும்…
சிறு நீரைப்போல
சில நேரங்களில்
சாணி கழித்திடும்
பிரியத்திற்குரிய
பசுக்களை என்னதான்
செய்துவிட முடியும்..?

நாற்றம் வீடு முழுக்க
பரவும் முன்
அத்தனையும் சுத்தம் செய்து
மாட்டுக்கொட்டகை முழுவதையும்
மணக்க செய்து விடுவாள்..,
சாம்பிராணி புகையுடன்
வலம் வரும் அம்மா.

அப்படி இருந்தும்
மாட்டுக் கொட்டகை குறித்து
பால் எடுக்க வரும்
பாண்டித்துரை உதிர்க்கும்
வார்த்தைகள் அவ்வளவு
பண்பானதாய் இருப்பதில்லை.
அசுத்தமே எங்களது அடையாளம் என்பது
அவருடைய அசைக்க முடியா
நம்பிக்கை போல!

எங்கள் பசுமாட்டின்
மடுவில் நீர் அடித்து
பால் கறந்தால்..,
இரண்டு லிட்டருக்கு மேல்
சாதாரணமாய்
பாத்திரத்தில் பால் நிரப்பும்.

ஆனாலும்
பால்கார பாண்டித்துரை
பால் கணக்கை
சிகரெட் பெட்டி அட்டையில்
குறைவாகவே குறித்து தருவார்.
தவறென்று சுட்டும் நிமிடத்தில் மட்டும்
முறைத்து கொண்டே
முச்சந்தியில் மறைவார்.

‘எளந்தாரியாய்’
ஆன பிறகு அவரைப் போல
வண்டியில் வலம் வர வேண்டும்,
என்ற ஆசைகள்
மனசுக்குள் பட்டாம்பூச்சியாய்
படபடக்கும்…
ஆனால்..,
மேலத்தெருவை நினைக்கையில்
அடி வயிற்றில் பயம் பரவும்.

எல்லா வேலைகளும்
முடித்துத்தான்,
இரவில் அம்மா
கஞ்சியில் கை வைப்பாள்.

பசுமாடு வாங்க
கந்து வட்டி கொடுத்தவன் குரல்
அப்பொழுதுதான்
அம்மாவின் செவிப்பறை கிழிக்கும்.
அந்த கொடுங்குரலின் முன்
தவளை சத்தங்களும்
தானாகவே அடங்கிவிடும்.

அதற்காகவே
அப்பா… எப்பொழுதும்
விரைவாக
வீட்டுக்கு வரமாட்டார்.

என்னதான்
ரத்தமும் வியர்வையும் சிந்தி
பசு வளர்த்து
பால் எடுத்து மேலத்தெரு
பாண்டித்துரைக்கு
கொடுத்தாலும்..,

அவரின் தேநீர்க் கடையருகே
அப்பாவும் நானும்
போய் நின்றால்..,
தனி டம்ளரில்
தேநீர் கொடுத்து..,
நாயைப்போல தரையில்
உட்காரச் சொல்லும்
அவரின்
ஆதிக்க சாதி வார்த்தைகள்
முரட்டுத் திமிருடன்
முகத்தில் அறையும்.

அந்த நிமிடங்கள் தான்
அழுகையையும்..,
கோபத்தையும்
ஒரே நேரத்தில்
கண்களுக்குள் கடத்தும்.

அப்பொழுது மட்டும்
விழிகளிலிருந்து வரும்
ஒவ்வொரு நீர்த்துளியும்
நெருப்பை விட சூடாக
நிலத்தில் ஒவ்வொன்றாய்
விழத் தொடங்கும்.

-முகிலன்

( மதுரை மாவட்டத்தில் மட்டும் 80 -க்கும் மேற்பட்ட கிராமங்களில்
இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது.)


 

  1. பதர்களே, எல்லாருமே நட்சத்திர சாம்பலில் உருவாக்கியவர்கள் தானேடா, எல்லாருக்கும் டீஎன்ஏவில் ATCG தானேடா, இன்றுகூட நீங்க வெளிநாட்டு தெருவில் நடக்கையில் வெள்ளையன் சரிசமனாகதானேடா காரி துப்புகிறான், அவனிடம் போய் சொல்லிப்பார் நீ இந்த சாதின்னு. இப்போ கூட உள்ளூர் சுரண்டிகள் எல்லாரையும் ஒன்றாக தானேடா சுரண்டுகிறான்? அதுகுள்ள ஒனக்கொரு அற்ப பெருமை ??? என்னொரு கேவலமான பிறவி நீ?

    • “மதுரை மாவட்டத்தில் மட்டும் 80 -க்கும் மேற்பட்ட கிராமங்களில்
      இரட்டைக் குவளை முறை நடைமுறையில் உள்ளது”
      Why cry about this,
      boycott these shops-open another shop in that village.
      80 villages it is very minuscule in thousands.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க