privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் - நேரடி ரிப்போர்ட்

அ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்

-

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வியாழன் 04.01.2018 இரவு முதல் தமிழகம் முழுவதும் 95 சதவீத பேருந்துகள் அந்தந்த பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் முதல் ஊடகங்கள் வரை தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பரப்புரையை செய்து வருகின்றனர்.

கலைஞரகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டம் நடைபெரும் இடத்தில் குவிந்துள்ள தொழிலாளிகள்

போக்குவரத்து கழக ஊழியர்கள் 99 சதவிதம் பேர் தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் நடத்தி வரும் போராட்டத்தை, தொழிலாளர்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில், பிரச்சினைக்கு தீர்வு காண சிறிதும் முயற்சிக்காமல் போராட்டத்தை நியாயமற்றது என்று கூறுவதும், போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்ப போவதாக அறிவிப்பதும், பொது மக்கள் நலன் கருதி எதைப் பற்றியும் சிந்திக்காமல் தொழிற்சங்கங்களை அழைத்து பேசப்போவதில்லை என்று திமிராகவும் அறிக்கை விடுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அரசு சார்பில் அனைத்தும் நிறைவேற்றப்பட்டள்ளதாக கூசாமல் பொய்யும் பேசிவருகிறார். இந்த சூழலில் உண்மை நிலையை அறிய தொழிலாளர்களை சந்திக்க சென்றிருந்தோம்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 05.01.2018 அன்று கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டமைப்பு சார்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒன்றரை வருடமாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையின் மீது தொழிற்சங்கங்களுடன் இதுவரை 21 சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது அரசு. ஆனால் இதுவரை தொழிலாளர்களது பிரச்சனைகள் தீர்த்தபாடில்லை. எனவே கடந்த 2017 மே 15,16 ஆகிய தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அந்த வேலை நிறுத்தத்தையொட்டி மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்கங்களோடு பேச்சு வரத்தை நடத்தியது. தொழிலாளர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு செலவு செய்யப்பட்ட பணம் மூன்று மாத காலத்தில் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இனி தொழிலாளர்கள் பணத்தை செலவு செய்ய மாட்டோம், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்படும் மற்ற பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், 6 மாதமாகியும் அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மிகக் கடினமான பணியைச் செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு மறுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்களுக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

அதேபோல் 04.01.2018 அன்று காலை 11 மணி முதல் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. ஊதியம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மறைமுகமாக ஒப்பந்தத்தை தயார் செய்து தொழிலாளர் துறை அதிகாரிகளையும் அழைத்து பெரும் பகுதி தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் சங்கங்களை புறக்கணித்து சில சங்கங்களை பயன்படுத்தி ஒப்பந்தம் உருவாக்க அரசு முயற்சி செய்தது. இது முற்றிலும் தவறானது என்பதுடன் சட்டத்திற்கும் புறம்பானது.

அதாவது, தொழிலாளர் மற்றும் நிர்வாகத்திற்குமிடையே ஏற்படும் தொழிற்தகராறு, தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2k -ன்படி சமரச பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய கடிதங்களை பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு நோட்டிஸ் அனுப்பி பிரச்சனைகளின் கருத்துக்களை இரு தரப்பிடமும் கேட்ட பின், பெருவாரியான உறுப்பினர்களை கொண்ட சங்கத்தின் உறுப்பினர்களை ஆய்வு செய்து அதன் பின் ஒப்பந்தம் செய்திட வேண்டும். ஆனால் எந்த ஒரு சட்ட விதிகளையும் பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்ட சங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது தொழிலாளர் துறை. கூட்டமைப்பு சங்கங்கள் பேச்சு வார்த்தையில் இருந்த வரை ஊதிய நிலுவைத் தொகை (அரியர்ஸ்) மறுக்கப்படவில்லை. கூட்டமைப்பு சங்கங்கள் உடன்பாடு ஏற்படாத பின்பு வெளியேறிய பிறகு 01.09.2016 முதல் 31.08.2017 வரை அரியர்ஸ் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

வடபழனி பணிமனை தொழிலாளர்கள்

மேலும் பேச்சு வார்த்தையில் பேசியதற்கு மாறாக ஊதிய விகிதம் மாற்றப்பட்டு, குறைந்தபட்ச உயர்வு, அதிகபட்ச உயர்வு என அறிவித்துள்ளதும் தவறான கணக்காகும். குளறுபடியான முறையிலேயே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதிப்புகளையும் சரி செய்து நியாயமான ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கும் உரிமையை போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதை கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்களின் இந்த உறுதியான போராட்டத்தின் மத்தியில் அதிமுக -வின் ஒருசில அல்லக்கைகளை கொண்டு பேருந்து இயக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படியில் வடபழனி பணிமனையில் உள்ள தொழிலாளர்களை சந்திக்க சென்றோம். மக்கள் கூட்டமின்றி காணப்பட்ட டெப்போவில் அதிமுக -வை சேர்ந்த கூட்டம் அலுவலகத்தின் எதிரில் நாற்காலிகளை போட்டு கொண்டு தொலைபேசி மூலம் மற்ற தொழிலாளிகளை வரச்சொல்லி மிரட்டிக் கொண்டு இருந்தனர்.

“ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றால் எட்டு நாள் சம்பளம் பிடித்து விடுவார்கள். இப்ப வர முடியலேனா கூட பரவாயில்லை. நாளைக்கு வாங்க… இன்னைக்கு வந்த மாதிரியே கணக்கில் காட்டி விடுகிறோம் என்றார்கள்.” மேலும் ஒரு படி மேலே சென்று தற்காலிக ஓட்டுனர்கள் சான்றிதழுடன் வருவோர்க்கு வேலை கொடுக்கும் மும்முரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதிமுக அடிமைகளால் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் அனைவரும் பணிமனையின் ஒதுக்குப் புறத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுகையில், இன்று வேலைக்கு வருபவர்களுக்கு கையில் சம்பளம் ஏற்றப்படும் என்று கூறி அவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நேற்றே வேலை முடிந்த தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பாமல் லாட்ஜில் ரூம் எடுத்துக் கொடுத்து தங்க வைத்து மறுநாள் பேருந்தை இயக்கினார்கள் என்று தொழிலாளிகள் கூறுகிறார்கள்.

ஆனால், செவிலியர்கள் போராட்டத்தில் தலையிட்டதைப்போல எங்கள் போராட்டத்தில் தலையிட்டிருந்தால் நீதிமன்றத்தை முற்றுகையிட்டிருப்போம். நீதி மன்றம் என்பது நடுவனாக இருக்க வேண்டும். அதை விடுத்து, தொழிற்சங்க வேலைகளை செய்து கொண்டிருக்கக்கூடாது. முதலாளிகள் போல் நடந்து கொள்ளக் கூடாது. (சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்தை கைவிடுமாறு மிரட்டி உத்தரவிட்டிருக்கிறது. தொழிற்சங்கங்கள் தடையை மீறி போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கின்றன.)

ஏற்கனவே நடந்த வழக்கில் தொழிலாளிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை 12 தவணையில் கொடுக்க சொல்லி உத்தரவு போட்டது. நீ எதுக்கு இத சொல்லுவதற்கு… உனக்கு அது போல கொடுத்தா வாங்குவியா? அவன் உயிரோடு இருக்கும் போதே கொடுன்னு சொல்றத விட்டு, 12 தவணையில் கொடு என்கிறாயே… அவன் செத்த பிறகு பொணத்து மேலே போட சொல்லுறியா? ஒரு நீதிபதி சொல்லாலாமா இந்த வார்த்தைய…! இனிமேல் அந்த நீதிமன்றமே முற்றுகையிடப்படும்.. அதற்கான தொடக்கத்தை போக்குவரத்து தொழிலாளியே ஆரம்பிச்சு வச்சுடுவான்… என்கிறார்கள் கோவமாக!

மற்றொரு தொழிலாளி, “லல்லு பிரசாத் யாதவ் கருவூல பணத்துல ஊழல் பண்ணிட்டான்னு தண்டனை கொடுத்தாங்க. இங்கயும் கருவூலத்தில இருந்து தான் தொழிலாளர் பணம் 7,000 கோடிய திருடி இருக்கனுங்க… இதுக்கு என்ன தண்டனை கொடுத்திருக்கு?”

“ஒண்ணுமே இல்ல சார்… PF பணமே வரமாட்டேங்குது… என்கிட்ட புடிச்ச காசு சொசைட்டில சேரல.. சொசைட்டில உன்னோடது சாட்டேஜ் இருக்குன்னு சொல்றான். LIC -லயும் அதே மாதிரி தான் சொல்லுறான்.

எங்க போக்குவரத்து செயலாளர் சொல்லுறான்…போக்குவரத்து துறையில எந்த இடத்துல கையை வச்சாலும் காசு இல்லன்னு! அந்தளவுக்கு எல்லாத்தையும் உறிஞ்சி எடுத்துட்டானுங்க. மஞ்ச நோட்டிசு தாக்கல் பண்றான் சார் கோர்ட்ல…” என்று போக்குவரத்து அதிகாரிகளின் அய்யோக்கியத்தனத்தை தோலுரிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இருபது ஆண்டு அனுபவமுள்ள ஒரு தொழிலாளிக்கு இரண்டு பாலிசி முடிந்து இருக்கிறது. “போயி பணத்த கேட்டா உன்னோட பாலிசில எட்டாவது மாசம் வரைக்கும் தான் பணம் கட்டிருக்கு. மீதி நாலு மாசத்துக்கு கட்டவேயில்லை என்று கூறியிருக்கிறார்கள்.” ஆனால் அவருடைய சம்பள பில்லில் பணம் பிடித்துள்ளார்கள் என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்.

அருகில் இருந்த தொழிலாளி, “நாங்க என்ன கேக்கிறோம்… நியாயமான சம்பளத்தை கொடுங்கிறோம்… அதை இவனால கொடுக்க முடியல… இதுவே மற்ற துறையில இருக்க ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம், 30 ஆயிரம்னு சம்பளம் கொடுக்குறாங்க… ஆனா எங்களுக்கு அவங்கள விட ரொம்ப கம்மியா கொடுக்குறாங்க.. எங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை….. நீ கொடுக்குற சம்பளம் கல்விக்கும், மருத்துவத்துக்கும் தான் சரியா இருக்கு… நாங்க எப்படி வாழறது … நாங்க குறைவான சம்பளம் கூட வாங்கிகொண்டு வேலை செய்யுறோம்.. ஆனா நீ கல்வியும், மருத்துவத்தையும் இலவசமா கொடு… நாங்க சம்பள உயர்வே கேக்க மாட்டோம்” என்கிறார்.

“சார்..! தொழிலாளர்கள் நான்கு பேர் கூடியிருந்தாலே அதிமுக -காரனும், எங்க கிளை மேலாளரும் எங்கள விரட்டுறதிலேயே குறியா இருக்காங்க. நாங்க இருக்கறதால தொழிலாளிங்க பேருந்த எடுக்க முடியலாயாம். வழக்கத்துக்கு மாறா இந்த பணிமனையில போலிச குவிச்சிருக்காங்க.. இதன் மூலம் இந்த போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கிட வேண்டும்னு நினைக்கிறார்கள். இந்த பணிமனையில், வேலையில் இருந்த பொழுது ரவுடியாக திரிந்த அதிமுககாரர் ஒருவர், ஓய்வு பெற்ற பிறகு பிரச்சனை என்னனு புரிஞ்சிகிட்டு கம்யுனிஸ்ட் தொழிற்சங்கத்தில் தான் வந்து சொன்னாரு.. இன்று எட்டப்பன்களாக இருப்பவர்களும் நாளை இங்கே தான் வர வேண்டும்.”

நாங்கள் கொட்டடியில் இருக்க வேண்டுமா, இல்லை வேலையை தொடர வேண்டுமா என்று இந்த அரசின் நடவடிக்கை தான் தீர்மானிக்கும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு ஜனநாயக சக்திகளிடமும் ஆதரவு கேட்டுள்ளோம். மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டிருக்கின்றோம்.

இந்த முறை எங்களின் போராட்டம் ஒரு அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட போராட்டமாக உள்ளது. எத்தனை அடக்குமுறை வந்தாலும் உறுதியாக போராடுவோம் என்று ஒருமித்த குரலில் கூறுகிறார்கள் தொழிலாளர்கள்!

அவர்களின் போராட்டம் வெல்லட்டும்! அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களாகிய நாமும் களத்தில் இறங்குவோம்!

நேர்காணல், படங்கள் – வினவு செய்தியாளர்கள்


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க