privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !

-

டந்த 2017 நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அரபிக் கடலில் வீசிய ஒக்கி புயல் தமிழகம் மற்றும் கேரளாவில் மிகப்பெரிய பேரழிவைத் தோற்றுவித்துள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த டிசம்பர் 27, 2017 அன்று பாராளுமன்றத்தில் அளித்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, தமிழ்நாடு,கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் 661 மீனவர்களைக் காணவில்லை.

இதில் தமிழக மீனவர்கள் 400 பேர், கேரள மீனவர்கள் 261 பேர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அறிவிப்பின்படி குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் 243 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை, இதில் குமரி மாவட்ட மீனவர்கள் (சொந்த மாவட்டம்) 176 பேர், இதர தமிழக மாவட்ட மீனவர்கள் 41 பேர், இதர மாநில மீனவர்கள் 26 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை இணை அமைச்சர் திரு.கிரண்ரிஜு தெரிவித்த தகவலின்படி கேரளாவில் 74 மீனவர்களும், தமிழகத்தில் 19 மீனவர்களும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்றவர்களைக் காணவில்லை. இதுவரை கரை திரும்பாத அனைவரும் இறந்து விட்டார்கள் என்று முடிவு செய்து, அவர்களுக்கு இறுதிச் சடங்கையும் செய்து விட்டார்கள் மீனவர்கள்.

ஆழ்கடல் மட்டுமல்லாது குமரி மாவட்டத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது ஓகி புயல்.சுமார் 7000 வீடுகள்,லட்சக்கணக்கான மரங்கள்,பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்திருக்கிறது.

ஓகி புயல் பேரழிவு குறித்து மக்கள் கருத்து: ஓகி புயல் பேரழிவுக்கு அரசுதான் காரணம் என குமரி மாவட்ட மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள். குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகக் காரணம் என்கிறார்கள். இரு அரசுகளும் இதை மறுக்கின்றன.

உண்மை அறியும் குழுவின் நோக்கம் மேற்கண்ட இரு கருத்துக்களில் உண்மை எது? நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியிட்ட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள்.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள் :

சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
ம.லயனல்அந்தோணிராஜ், மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம், மதுரை
டி.வி.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்,ம.உ.பா.மையம்,நாகர்கோவில்
அரி ராகவன், வழக்கறிஞர், மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம், தூத்துக்குடி
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், வழக்கறிஞர், திருச்சி
தாஜுதீன், வழக்கறிஞர், திருச்சி
விஜீலால், ஓய்வு பெற்ற ஆசிரியர், ம.உ.பா.மையம்,நாகர்கோவில்
இராஜேந்திரன், சட்டக் கல்லூரி மாணவர், திருச்சி

கள ஆய்வு :

டிசம்பர் 25, 2017 -க்குள் ஆழ்கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்பாவிட்டால் இறந்ததாகக் கருதுவோம் என்று குமரி மாவட்டம் தூத்தூர் பகுதி மீனவர்கள் அறிவித்ததை அடுத்து, மேற்கண்ட உண்மை கண்டறியும் குழு டிசம்பர் 26, 27, 28 – 2017 தேதிகளில் குமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை கிராம மக்களைச் சந்தித்து விசாரித்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,குளச்சல் மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சென்று அரசு தரப்பின் தகவலைக் கேட்டது. ஓகி புயல் பாதிப்பு குறித்த வினவு இணையதளத்தின் கண்ணீர்க் கடல் ஆவணப்படச் செய்திகளைச் சேகரித்துப் பதிவு செய்தது. மக்களின் வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவசியமான இடங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்களின் கருத்துக்கள்

இடம் : நீரோடி,
பெயர் : கிளிமான்ஸ் (நீரோடி மீனவர்)

இங்கு நடந்த பேரழிவு குறித்து அரசு முன்னரே தெரிவிக்கவில்லை. இங்கு 50-க்கும் மேற்பட்ட மீனவர்களின் புகைப்படம் உள்ளது. இவர்கள் தற்போது உயிருடன் இல்லை. நாங்கள் 100 நாட்டிக்கல்( 1 நாட்டிக்கல் = 1.820 கி.மீ.) தாண்டி மீன்பிடிக்க கடலுக்குள் செல்வோம். 5 மற்றும் 6 நாட்கள் கடலில் இருப்போம். இந்த பேரழிவுக்கு பின்னர் 50 நாட்டிகல்வரை மட்டும் தான் கப்பல்படை சென்றது. தமிழ்நாடு அரசு எங்களைக் காப்பாற்றும் என்று எண்ணி இருந்தோம். இந்தப் பேரழிவுக்கு அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு. முக்கியமாக தமிழ்நாடு அரசு தான் காரணம். புயல் ஏற்பட்டு இரண்டு நாட்கள் கழித்து தான் எங்களுக்கு புயல் பற்றி தகவல் தெரிவித்தனர். இந்த அரசு புயலில் இருந்து காப்பாற்ற எந்த முன்னறிவிப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதுவரை எந்த அரசு அதிகாரியும் எங்களை விசாரிக்க வரவில்லை. இதுவரை எந்த நீதியும் அரசு எங்களுக்கு வழங்கவில்லை.

ராஜீ வயது 45 – மீனவர் – நீரோடி – புயலில் சிக்கித் தப்பித்தவர்

நான் 12 வயது முதல் கடலினுள் மீன்பிடிக்கச் சென்று வருகிறேன். நாங்கள் மொத்தம் 6 பேர் கடலிற்குள் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றோம். இதில் நான், மார்க்கண்டேயன், என்னுடைய மாமா மற்றும் 3 பேர் அடக்கம். ஏறத்தாழ 80 நாட்டிகல் வரை கடலினுள் சென்றோம். வியாழக்கிழமை புயல் வந்து. இதில் 6 பேரும் புயலில் சிக்கிக் கொண்டோம். எனக்கு உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. 2 இரவு 2 பகல் முழுவதும் படகை பிடித்து 3 பேர் தப்பித்தோம் 3 பேர் இறந்துவிட்டனர். எங்களை காப்பாற்றியது எங்களது மீனவர்கள் தான். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். கடற்கரை ஓரமாக வந்துவிட்டு எங்களை சந்திக்காமல் சென்று விட்டார்.

கிளமெண்ட் வயது 50 – மீனவர் – நீரோடி – புயலில் சிக்கித் தப்பியவர்

எங்களுக்கு புயல் வரும் என்று தெரியாது. எங்களுக்கு புயல் குறித்த எந்த தகவலையும் அரசு வழங்கவில்லை. எங்களுக்கு புயல் குறித்து முறைப்படி தகவல் தெரிவித்து இருந்தால் நாங்கள் நிறையப் பேர் பிழைத்திருப்போம். கடலுக்குள் புயலில் சிக்கி, 1 -ம் தேதி மிகுந்த கஷ்டப்பட்டு கரைக்கு வந்தோம். நாங்கள் கடலில் இருந்து கரைக்கு வந்த பின்னர் அதிகாரிகளிடம் கடலினுள் பலர் உயிருக்குப் போராடுவதாகத் தெரிவித்தோம். அதன்பின்பும், அதிகாரிகள் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக எங்களையும் கடலினுள் சென்று, எங்கள் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியையும் தடுத்தனர். அவர்கள் உரிய நேரத்தில் முயற்சி எடுத்திருந்தால் நிறைய பேரைக் காப்பாற்றியிருக்கலாம். அரசிடம் மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய தொழில்நுட்பம், கருவிகள் எதுவுமில்லை.

எட்வின் – வயது 45 – மீனவர் – நீரோடி – புயலில் சிக்கித் தப்பியவர்

கடலில் சிக்கிக் கொண்ட எங்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. அரசு வைத்திருந்த தொழில்நுட்பக் கருவியினால் எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இந்த கருவியினால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை மற்றும் பாதுகாப்பு இல்லை. கப்பல் படை அதிகாரிகள் தங்களுடைய வயர்லெஸ் கருவி மூலம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. கடலில் கடத்தல் நடந்தால் இவர்கள் வரமாட்டார்களா? நாங்கள் நான்கு நாட்கள் கடலினுள் தத்தளித்துக் கொண்டு இருந்தும் எங்களை காப்பாற்ற கப்பற்படை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்தக் கப்பல்படை எதுக்கு உள்ளது?

எங்கள் ஊரில் சுமார் 40 பேர் இறந்து உள்ளனர். 1 -ம் தேதி அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை. நாங்கள் சொன்ன நேரத்தில் அவர்கள் கடலினுள் சென்றிருந்தால் நிறையப் பேரைக் காப்பாற்றி இருக்கலாம். 5 -ம் தேதிக்கு பின்னால் தான் 13 பேர் இறந்திருப்பார்கள்.
இறந்தவர்கள் அனைவருக்கும் செல்போன் இருந்தது. அவர்கள் நிச்சயம் செல்போன் வாயிலாக தகவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து இருப்பார்கள். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. எங்கள் பகுதி மீனவர்கள் சிலரை நாங்களே கடலினுள் சென்று காப்பாற்றினோம். இதுவரை எந்த நிவாரணமும் அரசு எங்களுக்கு வழங்கவில்லை. எங்களுக்கு எந்தவித நிவாரணமும் தேவையில்லை. அரசுதான் இந்தச் செயலுக்குப் பதில் சொல்லவேண்டும்.

கேரளாவில் பாதிப்புகள் இருந்தும் சரியான தகவல்களை கொடுத்து நிறைய மீனவர்களை அந்த அரசு காப்பாற்றியது. எங்களுக்கு என்று ஒரு அமைச்சர் இல்லை. எங்களால் அரசுக்கு நிறைய வருமானம் உள்ளது. ஆனால் எங்கள்அழிவு தான் அரசின் நோக்கம். எங்களை அப்புறப்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. “இது ஒக்கி புயலல்ல மோடி புயல்”

இஸ்ரேல் – வயது 68 – மீனவர் – நீரோடி – புயலில் தப்பியவர்

14 -வயது முதல் கடலிற்குள் மீன் பிடிக்க சென்று வருகிறோம். ஒரு நாள் கடலில் தத்தளித்து கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அரசு வாக்கிடாக்கி போன்ற எந்த கருவியையும் பயன்படுத்தவில்லை. இப்புயலில் சிக்கி தவித்து வந்தவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் முயற்சி எடுத்து இருந்தால் நிறைய மீனவர்களை காப்பாற்றி இருக்கலாம். அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

நிதின்குமார் – மீனவர் – வள்ளவிளை கிராமம் – புயலில் தப்பியவர்

எங்கள் ஊரில் 68 பேரைக் காணவில்லை, 8பேர் இறந்துவிட்டனர். புயல் பற்றிய தகவல் எங்களுக்கு தெரியாது. சரியான தகவல்களை அரசு உடனுக்குடன் தெரியப்படுத்தி இருந்தால் நிறையப் பேரை காப்பாற்றி இருக்கலாம். இந்த செயலுக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசு ஒரிசாவில் புயல் ஏற்பட்ட போது மீனவர்களை உடனே காப்பாற்றியது. இப்போது எல்லா வசதியும் இருந்தும் மத்திய அரசு காப்பாற்றவில்லை. சாதாரணப் புயலை நாங்கள் சமாளித்து விடுவோம்.புயல் காற்று 120 கி.மீ வேகத்தில் வந்தது.காற்று இவ்வளவு வேகத்தில் வரும் என்ற தகவலை அரசு எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. இதுதான் பிரச்சனைக்குக் காரணம்.

சுஜீன் – நீரோடி

இத்தாலி நாட்டு கப்பல் காப்பாற்றியதை இவர்கள் காப்பாற்றியதாக பொய் கூறுகிறார்கள். டாட் என்ற கருவியை 121 முறை எங்கள் மீனவர்கள் ஆபத்து நேரத்தில் பயன்படுத்தியும் எங்கள் மீனவர்களை காப்பாற்ற இந்த அரசு முயற்சிக்கவில்லை. இந்த டாட் என்ற கருவியை நாங்கள் தவறாக பயன்படுத்தினால் ரூபாய் 25000 /- தண்டத் தொகை கட்ட வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம், பாதிக்கப்பட்ட எங்களைக் காண எங்கள் தொகுதி M.P இதுவரை வரவில்லை. எங்களுக்கென்று மத்தியில் ஒரு அமைச்சர் இல்லை. எங்களால் அரசுக்கு நிறைய வருமானம் கிடைக்கின்றது. எங்களுக்கென்று ஒதுக்கிய நிதி என்னவாயிற்று ? நாங்கள் பலருக்கு வேலை கொடுக்கின்றோம். இந்த நாட்டிற்கு கடலோர பாதுகாப்பு வழங்குகின்றோம். எங்களது படகுகள் நவீனபடுத்தப்பட வேண்டும். கடலில் மிதக்கும் எங்களது மீனவர்களின் உடல்களை இந்த அரசு மீட்டுத் தர வேண்டும். எங்களுக்கு நிவாரணம் இரண்டாம்பட்சம்தான். தவறான தகவல்களை பத்திரிக்கைக்கு கொடுத்து எங்களையும், இந்நாட்டு மக்களையும் அரசு அதிகாரிகள் ஏமாற்றுகிறார்கள்

நாங்கள் சாலை மறியல் செய்த பிறகுதான் கப்பல் படையை அனுப்பினார்கள். கப்பல்படையினரும் தாமதமாகத்தான் வந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் வந்தார்கள். 60 நாட்டிகல் எல்லைக்குள்தான் கப்பல்படை தேடிவிட்டு வந்தார்கள். இதனால் தான் அதிக மீனவர்கள் இறந்தனர். அரசிடம் மீனவர்களை காப்பாற்றுவற்கு உரிய எந்தத் திட்டமும் இல்லை. மீனவர்கள் மீது அக்கறை இல்லை. மீனவர்களை இவர்கள் நேரடியாக சந்திக்கவில்லை. டிஜிட்டலில் தான் சந்திக்கிறார்கள். இந்த அக்கறையின்மைக்கு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வருகிற 31 -ம் தேதி வரை இந்த அரசுக்கு கெடு வைத்துள்ளோம். அரசின் செயல்பாடுகளை பொறுத்து பின்னர் முடிவு எடுப்போம்.

டிக்ஸன் (38) – படகு உரிமையாளர் – வல்லவிளை – அரசு சார்பில் தேடுதல் பணிக்கு கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டவர்

டிக்சன்

பெரிய படைகள் இருந்தும் இந்த அரசு எங்களைக் காப்பாற்றவில்லை. இறந்த மீனவர்களின் உடல்களை நாங்கள் தான் கடலினுள் சென்று மீட்டு வந்தோம். எங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றுவது தான் அரசின் திட்டமாக உள்ளது. கடலில் இருந்து 500 மீட்டர் தாண்டித் தான் குடியிருக்க வேண்டும் எனத் திட்டம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

எங்களுக்கு டாட் என்ற தகவல் தொடர்பு வசதியை அரசு வழங்கியது. கடலில் ஆபத்து ஏற்படும் காலத்தில் டாட் கருவியில் உள்ள பட்டனை அழுத்தினால் உடனே கப்பல்படை விரைந்து வந்து உதவி வழங்கும் என்று கூறினார்கள். இந்த டாட்(DAT) கருவி பட்டனை புயலில் சிக்கிய மீனவர்கள் பலமுறை பயன்படுத்தியும் கப்பற்படை எந்த உதவியும் வழங்கவில்லை. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் எங்களை போன்ற மீனவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.

Coast Guard – கடலோர காவல் படை அதிகாரிகளை நாங்கள் கேட்டபோது புயல் வரப்போகுது என்று தகவல் முன்பே கூறிவிட்டோம். மீன்வளத்துறைதான் உங்களுக்கு தகவலை சரியாகச் சொல்லவில்லை. அதனால் அவர்களிடம் போய் கேளுங்கள் என்கிறார்கள். நாங்கள் எதை நம்புவது என்றே தெரியவில்லை. இவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களது மீனவ மக்களைக் கொலைசெய்துவிட்டனர் .

நாங்கள் மறியல் செய்தபின் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்து எங்களிடம் பேசினார். பின்பு நான் உட்பட ஏழு பேரை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பலில் தேடுவதற்காக அழைத்துச் சென்றனர். எந்த இடத்தில் எங்கள் மீனவர்கள் மீன் பிடிப்பார்கள் என்ற விபரத்தை அவர்களிடம் சொன்னோம். காலையில் அங்கு செல்வோம், இப்போது தூங்குங்கள் எனச் சொல்லிவிட்டார்கள். விடிந்தபின் பார்த்தால் கன்னியாகுமரி அருகில் கப்பல் நிற்கிறது. கரையிலிருந்து 25 நாட்டிகல் மைல் தூரத்தில்தான் கப்பல் இருந்தது. நாங்கள் எவ்வளவோ மன்றாடியும், மறுநாள் செல்வோம் என்றனர். அன்றும் கரையின் அருகிலேயே இருந்தனர். அதற்கடுத்த நாள் எங்களுடன் வந்த ஒருவர் “தேடுங்கள், இல்லாவிட்டால் கரையில் எங்களை விடுங்கள், இல்லாவிட்டால் கடலில் குதித்து விடுவேன்” என்று சொன்னபின் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து வந்தனர்.

அன்று மாலை 4 மணிக்கு துறைமுகம் வந்தும் கப்பல் கரைக்குச் செல்லவில்லை, நாங்கள் ஆத்திரப்பட்ட போது, “புரிந்து கொள்ளுங்கள்,எங்களால் 30 நாட்டிகல் மைல் தூரம்தான் செல்ல முடியும்,அதற்குள்தான் தேடச் சொல்லி உத்தரவு. உத்தரவு வந்தால்தான் கரைக்குப் போக முடியும்” என்று கப்பல்படை அதிகாரி சொன்னார். இதனை நான் வாட்ஸப்பில் போட்டுவிட்டேன். அது மீடியாவில் வந்துவிட்டது. உடனே அதை அழிக்கச் சொல்லிவிட்டார்கள், பின்பு நேராக கலெக்டர் அலுவலகம் வந்து, 250 நாட்டிக்கல் தூரம் வரை நன்றாகத் தேடியதாக ஒருவரை ஊடகங்களுக்குச் சொல்லச் சொல்லி பின்பு அனுப்பி விட்டார்கள்.

மற்றுமொரு முக்கியச் செய்தி. என்னுடைய கொழுந்தியா ரேஸ்மி கன்னியாகுமரியில் வசிக்கிறாள். அவள் இன்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் சொல்வது “எங்கள் ஊரான கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் முன்பே புயல் வரப்போகுது என்று அறிவித்துவிட்டார்கள். ஆகையினால் எங்களது ஊரிலிருந்து தொழிலுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்துவிட்டனர். புதிதாக யாரும் தொழிலுக்கும் செல்லவில்லை.” ஆகையினால் கன்னியாகுமரியில் மீனவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை.

இப்போ எங்களுக்கு ஒன்று மட்டும் தெளிவா தெரியுது. அது என்னன்னா… Coast Guard அதிகாரி மற்றும் என் கொழுந்தியாள் ரேஸ்மி சொன்னது, மற்றும் எங்களை கடலுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது, ஆகியவற்றிலிருந்து தூத்தூர் பகுதியை சார்ந்த மீனவ மக்கள் கடலிலேயே சாகட்டும் என்று வேண்டுமென்றே தகவலும் சொல்லவில்லை; காப்பாற்றவும் இல்லை! எங்கள் மக்களைக் கொலை செய்து விட்டார்கள். இவர்கள் இறப்பிற்கு இந்த அரசு தான் காரணம். நாங்கள் இணையம் வர்த்தகத் துறைமுகத்தை எதிர்த்துப் போராடியதால் இப்படி பழிவாங்கியுள்ளனர். நாங்கள் இந்த அரசை எதிர்த்து போராடத் தயாராக உள்ளோம். எங்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும் விதமாக இந்த அரசு செயல்படுகிறது.

ஆல்பர்ட் – வல்லவிளை கிராமம் – வினவு இணையதளத்தின் கண்ணீர்க் கடல் கலந்துரையாடல் நிகழ்வில் தெரிவித்தவை

மூன்று வகையில் மீன்பிடி தொழில் தூத்தூர் மீனவர்கள் செய்கிறார்கள். இதில் இரண்டு வகை மீனவர்கள் ஒரு நாளில் வந்து விடுவார்கள். மூன்றாவது வகை மீனவர்கள் 10, 15, 30, 50 நாட்கள் வரை கடலில் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட மீனவர்கள் பெரும்பாலும் லட்சத்தீவு அருகில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். உடனே அரசு செயல்பட்டிருந்தான் காப்பாற்றியிருக்கலாம். புயல் வந்து 10 நாட்கள் கழித்து பாதர் சர்ச்சில் பேசிய செய்தியை பதிவு செய்து ஹெலிகாப்டரில் சென்று கடலில் ஒலிபரப்பினார்கள். இதை ஏன் முன்பே செய்யவில்லை? நிர்மலா சீத்தாராமனிடம் லட்சத்தீவு அருகில் சென்று தேட மும்பை, கோவாவில் இருந்து கப்பல் அனுப்புங்கள் என டிசம்பர், 3-ம் தேதியே சொன்னோம்.

எதுவும் செய்யவில்லை. நாங்கள்தான் சிலரைக் காப்பாற்றினோம். எங்கள் மீனவர்கள் நீந்தியே லட்சத்தீவு வந்துள்ளனர். அவர்களை கப்பற்படை காப்பாற்றியதாக பொய்ச் செய்தி போட்டார்கள். அரசும், கப்பல்படையும் சொல்லட்டும் கடலில் எந்த பொசிசனில் காப்பாற்றினார்கள் என்று? கப்பலின் Voyage data recorder பதிவை வெளியிடச் சொல்லுங்கள். நாங்கள் காப்பாற்றியதை நாங்கள் வெளியிடுகிறோம். நாங்கள் 1, 2 தேதிகளிலேயே கொச்சியிலிருந்து 64 டிகிரி கிழக்கில் தேடுங்கள் என்று 10 ஜிபிஎஸ் பொசிசன்கள் கொடுத்தோம், 720 நாட்டிகள் மைல் தூரத்தில் தேடச் சொன்னோம். இவர்கள் 30 – 60 நாட்டிகல் தூரத்தைத் தாண்டவில்லை. நாங்கள் சொன்ன தூரம் ஹெலிகாப்டரில் சென்றால் 3-4 மணி நேரத்தில் வந்துவிடும், இவர்கள் செல்லவில்லை.

மீனவர்களுக்காக தனி சேட்டிலைட் விட்டுள்ளதாக சென்ற ஆண்டே மோடி சொன்னார். எந்தப் பயனும் எங்களுக்கு இல்லை. 1, 2 தேதிகளில் எங்கள் பகுதியைச் சேர்ந்து சுமார் 1800 மீனவர்கள் கடலுக்குள் இருந்தார்கள். சொந்தமுயற்சியிதான் பலரும் தப்பித்தார்கள். அரசு திட்டமிட்டு இந்த மரணங்களை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்துறை கிராமம்- சர்ச் முன்பு

ஜோன்ஸ் – வயது 60 மற்றும் உடன் இருந்த 15 மீனவர்கள்

எங்கள் ஊரில் 65 பேர் இறந்துள்ளனர். எங்களுக்கு டாட் என்ற கருவியை கொடுத்துள்ளனர். இந்த டாட் மூலம் மீனவர்களுக்கு ஆபத்து, கப்பல் கடலில் மூழ்குதல். மீனவர்கள் உயிருக்கு ஆபத்து மற்றும் போட் தீப்பிடித்தல் ஏதேனும் ஆபத்து ஏற்படின் இதன் பட்டனை அழுத்தினால் உடன் கப்பல்படை அதிகாரிக்கு தகவல் சென்று எங்களை விரைந்து காப்பாற்றுவார்கள். இதன்படி புயலின் போது பல தடவை இந்த பட்டனை அழுத்தியும் எங்கள் மீனவர்களைக் காப்பாற்ற ஒரு அதிகாரி கூட கடலிற்குள் வரவில்லை.

இந்தாண்டு கிறிஸ்துமஸ்கு நாங்கள் யாரும் புத்தாடை போடவில்லை. இந்த அரசு எங்களை மாற்றான் வீட்டு பிள்ளையைப் போன்று பார்க்கிறது. இந்த பேரழிவைக் காண பாரத பிரதமர் வந்தார். எங்களில் ஒருவரைக் கூட அவர் பார்க்கவில்லை. எங்களது மீனவரின் உடலுக்கு 20 லட்சம் நிவாரணம் என்று அரசு அறிவித்து உள்ளது. ஆனால் கடலினுள் மிதக்கும் எங்களின் மீனவரின் உடலை எடுக்க இந்த அரசு முயற்சிக்கவில்லை. ஏனென்றால் ஒரு மீனவரின் உடலை மீட்டால் அவனுக்கு உடனே ரூபாய் 20 இலட்சம் அரசு வழங்க வேண்டும் என்பதால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு விமானத்திற்கு விபத்து ஏற்பட்டு கடலிலுனுள் விழுந்தால் உடன் உயரிய கருவிகளைக் கொண்டு உடனே தேடிக் கண்டுபிடிப்பார்கள். ஆனால் பல மீனவர்களின் உடல் கடலில் மிதக்கின்றது. ஒரு உடலைக்கூட இதுவரை இந்த கப்பல்படை மீட்கவில்லை.

நாங்கள் புயலினால் மீன் பிடிக்க கடலினுள் சென்று ஒரு மாதமாகப் போகிறது. வறுமையில் வாடுகின்றோம். வேலைக்கு செல்லாததால் பட்டினியாக பல நாட்கள் இருக்கின்றோம். இந்த தருவாயில் நிவாரணம் தான் எங்களுக்கு முக்கியமானதாக படுகின்றது. இந்த அரசினை எதிர்த்து போராடினால் கிடைக்கும் நிவாரணமும் நின்று போய்விடும் என அஞ்சுகின்றோம். கடலினுள் விபத்தினால் மீனவர்கள் இறந்தால் 1 இலட்சம் என அரசு அறிவிக்கின்றது. சென்னையில் மழைக்கு 1 குழந்தை இறந்தால் 10 இலட்சம் அறிவிக்கின்றது. 1 மீனவரின் உயிர் 1 இலட்சம் தானா ?

எங்களை அரசு பாரபட்சமாகப் பார்க்கின்றது. எங்கள் ஊரில் உள்ள ஒரு மீனவர் குடும்பத்தில் இருந்த ஆண்கள் 4 பேரும் இறந்துவிட்டனர். அக்குடும்பத்தில் இப்போது ஆண்களே இல்லை…

சுனாமியை எதிர்கொண்ட மீனவர்கள் இந்த புயலிற்கு பின்னர் கடலினுள் மீன் பிடிக்க செல்வதற்குப் பயப்படுகிறார்கள். இதுவரை அரசு இந்த புயலின் சேதத்தை தேசிய பேரிடர் என்று அறிவிக்கவில்லை. எங்களை கேரள அரசுடன் இணைத்து விடுங்கள். கேரள அரசு எங்கள் மீது அக்கறை காட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு மத்திய அரசு தான் தண்டிக்கப்பட வேண்டும் . இந்த புயல் பற்றிய தகவலை எங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் எங்கள் மீனவர்களை கொலை செய்து விட்டனர். தமிழக முதல்வர் காணாமல் போன மீனவர்களில் கடைசி ஆள்வரை கிடைக்க தேடுதல் முயற்சி செய்வதாக கூறியுள்ளார். இனிமேல் இவர்களால் இறந்த மீனவர்களின் உடலைக்கூட மீட்க முடியாது. நடுக்கடலில் உள்ள மீனவர்களின் உடலை சுறா மீன்கள் தின்றுவிடும். மீனவர்களின் உடலும் கிடைக்காது, நிவாரணமும் கிடைக்காது.

ஜெயராஜ் – வயது 34 / 17 த/பெ லூபர்ட் – சின்னத்துறை .

எந்த ஒரு புயல் வந்தாலும் 3 நாட்களுக்கு முன்னர் அரசுக்குத் தெரிந்துவிடும். வானிலை ஆராய்ச்சியாளருக்குத் தெரியும். எங்கள் ஊரிலிருந்து கப்பலில் வேலை செய்பவர்களுக்கு 28 -ம் தேதியே தகவல் வந்துவிட்டது. ஆனால் இதை மக்களுக்கு அரசு தெரியப்படுத்தவில்லை. தாமதமாக தெரியப்படுத்தியுள்ளனர். இதனால்தான் எங்கள் ஊரில் நிறையப் பேர் இறந்துவிட்டனர்.

திரு . ஆரோக்கியதாஸ் – சின்ன பாதிரியார் – தூத்தூர் சர்ச்

நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்திருக்கிறோம். முதல்வர் எடப்பாடியாக இருக்கட்டும், பிரதமர் மோடியாக இருக்கட்டும், எங்களது கிராம மக்களைப் பார்க்காமல், நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வராமல் ஊருக்கு வெளியே ஒரு இடத்தை Fix பண்ணி அங்கேயே பேசிவிட்டு போய்விட்டார்கள். ராகுல்காந்தி மட்டும் மக்களை சந்தித்துப் பேசினார்.

29 -ம் தேதிதான் புயல் குறித்து எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். அதை நாங்கள் சர்ச்சில் அறிவித்தோம். ஆனால் அதிக வேகத்தில் காற்று வீசும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. புயல் வந்தபிறகு கூட இந்த கடலோர காவல்படை மீனவர்களை காப்பாற்ற நினைக்கவில்லை. நாங்கள் எங்களது மீனவர்கள் கடலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர் அவர்களை உடனடியாக காப்பாற்றுங்கள் என்று 1 -ம் தேதி கூறியும் பலநாட்களுக்குப் பிறகுதான் தேடினார்கள்.
தூத்தூர் கிராமத்தில் இருந்து 30 மீனவர்கள் கடலுக்குள் சிக்கிய மீனவர்களை காப்பாற்றப் போனார்கள். ஆனால் அங்கு சேதமடைந்த போட்டில் வெறும் ஐடி கார்டும் அழுகிய நிலையில் எங்களது மீனவர்களின் உடல்கள் மட்டும்தான் மிஞ்சியது. தூத்தூரில் மட்டும் 32 பேர் இறந்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் சொல்றாங்க, சமவெளியில் நடந்தால் மட்டும்தான் பேரிடர். கடலில் நடந்ததை பேரிடராக குறிப்பிட முடியாது என்று சொல்கிறார்கள். எங்களது மீனவர்கள் கடலுக்குள் சென்றவர்கள் புயல் அடித்தப் பிறகு கடலில் கிடந்த மற்றும் கிடைத்த மரக்கட்டைகளை பிடித்து கரையை வந்தடைந்தார்கள். ஆனால் கடலோர காவல் படை, சொந்த முயற்சியில் கரை திரும்பிய எங்களது மீனவர்களை பிடித்துக்கொண்டுவந்து, அவர்கள் காப்பாற்றியதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கின்றனர், செய்தி ஒளிபரப்புகின்றனர்.

திரு. பிபின்சன் – தலைமை பாதிரியார் – தூத்தூர் சர்ச்

இந்திய கடலோர காவல்படை மீனவர்களுக்கு ஒத்துழைப்பதில்லை. இந்த அரசு தன்னிடம் உள்ள சாதனங்களை பிரயோசனப் படுத்துவதில்லை. அனைத்து சாதனமும் தூசி பிடித்துக் கிடக்குது. இந்த Coast Guard ஒரு Limited ஏரியாவை வைத்துக்கொண்டு அதற்கு மேல் போவதில்லை. இந்த அதிகாரிகள் 60 – 80 நாட்டிகல் மைல்தான் போனார்கள், அதற்குமேல் போகவில்லை. இங்கு எல்லாம் corrupted சிஸ்டம். fully corrupted, corrupted அதிகாரிகள் corrupted system -த்தை உருவாக்குகின்றனர். இது எப்படி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

கடலில் இறந்தவர்கள் எல்லாம் புயலுக்கு முன்பாக போனவர்கள். இவர்களுக்கு அரசு முறையாக தகவல் கூறி இருந்தால் கரை திரும்பி இருப்பார்கள். அல்லது நாங்களே செய்தி கொடுத்து இருப்போம். ஆனால் information கொடுக்கவில்லை, வேண்டுமென்றே தவிர்த்து விட்டனர். எங்களுக்கு தகவல் 29 -ம் தேதி மாலை 3 மணிக்கு தான் சொல்கிறார்கள். 15 நாட்கள் வெயிட் பண்ணி தர்ணாப் போராட்டம் நடத்தி முதலமைச்சரை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. ஒன்றும் செய்ய முடியாது.

இவங்க நியூட்ரலாக யோசிப்பது இல்லை. miss ஆனவங்களை 7 வருசம் கழித்து தான் இறந்ததாகக் கூறுகின்றனர். 7 பேர் பியான் புயலில் இறந்தார்கள் ஆனால் அந்த இறந்த 7 பேருக்கு இன்று வரை நிவாரணம் அரசு கொடுக்கல. 31 மீனவர்கள் எங்களது பகுதியில் இருந்து 5 போட்டுகளில் தேட சென்றனர். அவர்களையும் தேடவிடாமல் தடுத்து அனுப்பி விட்டனர். அதற்கான டீசல் செலவைக்கூடத் தரவில்லை. சமவெளியில் எப்படி toll ( சோதனைச் சாவடி ) இருக்கிறதோ அதே மாதிரி கடலிலும் இருந்து கொண்டு அதிகாரிகள் எங்களை காப்பாற்ற விடாமல் தடுத்து நிறுத்தி விட்டனர்.

ஜேக்கப் – தூத்தூர்

சார் நீங்க வேணும்னா பாருங்க ஒரு அரசியல்வாதியைக் கூட எங்கள் பகுதிக்குள் இனி நுழைய விட மாட்டோம். 1 -ம் தேதி என் அண்ணன் கில்பர்ட் கடலிலுள் மீன்பிடிக்கச் சென்றவர் இறந்துவிட்டார். அவர்தான் கிட்டத்தட்ட 36 வருடமாக மீன்பிடி தொழில் செய்து எங்களை எல்லாம் படிக்க வைத்து, கல்யாணம் பண்ணி வைத்தார். நீங்க நல்லா தெரிஞ்சுக்குங்க, உப்பு நீரில் கால் வைக்கத் தெரியாதவர்களைத்தான் கடலோர காவல்படை, மீன்வளத்துறையில் அதிகாரிகளாக நியமிக்கின்றனர். எங்கள் மீனவ மாணவர்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் எடுத்தால் கூட அவர்களை சாதி வேற்றுமை பார்த்து வேலை தருவதில்லை, இதுதான் நிலைமை.

ப்ரட்டி மற்றும் சில இளைஞர்கள் – கடலோர காவல்படை கப்பலில் தேடச் சென்றவர்  – பூத்துறை

ஏற்கனவே இத்தாலி கப்பல் இந்திய மீனவர்களைச் சுட்டதில் இருந்து எனக்கு அரசைப் பற்றித் தெரியும், எனது போட்டும் புயல் காற்றில் சிக்கிக் கொண்டது. கடலுக்குள் போன போட் இரவு கரை திரும்பவில்லை என்றால் நாங்கள் மறுநாள் காலை எங்களது மீனவர்கள் சென்று கடலிலுள் தேடுவோம் . 30 -ம் தேதி புயல் தாக்கியது 1 -ம் தேதி எங்களோட போட் செயிண்ட் ஆண்டனி, ஆபத்தில் இருப்பதாகத் தெரிந்தது. எங்களோட போட் எந்த Direction -ல் இருந்து மீன் பிடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். 2 -ம் தேதி எங்கள்ட போட்டில் நாங்கள் தேடப்போன போது அரசு எங்களை ( Coast Guard ) போக விடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. நீங்கள் கடலினுள் போகத் தேவையில்லை, இன்னொரு பெரிய புயல் வருகிறது என்று நிறுத்தி விட்டனர்.

மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 3 -ம் தேதி வந்து எங்கள் மீனவ மக்களை சந்திக்காமல் போய்விட்டார். நாங்கள் கேட்டோம் ஏன் எங்களுக்கு முன்கூட்டியே சொல்லவில்லை என்று? அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கே தெரியாது என்று கூறி விட்டனர். எங்கள் போட்டில் ஆபத்து நேரத்தில் பயன்படுத்த ஒரு டாட் கருவி இருக்கும். அதை அழுத்தினால் அதிகாரிகள் போய் மீனவர்களை போய் காப்பாற்ற வேண்டும். ஆனால் எங்களது மீனவர்கள் அமுக்கியும், காப்பாற்றப்படவில்லை.

காணாமல் போன எங்கள் கிராம போட்டுகள்
1. தூய அந்தோணியார்
2. கிரிஸ்மா
3. அமலிமோல்
புயலில் சிக்கிய தூய அந்தோனியார் போட்டில் உள்ளவர்களை மீட்க கிரிஸ்மா போட் முயற்சித்தது. ஆனால், கிரிஸ்மாவும் அதில் இருந்த மீனவர்களும் சேர்ந்து இறந்து விட்டனர்.

நான் அரசு சார்பில் கப்பலில் தேடப் போனவர்களில் ஒருவன். 7 பேர் நாங்கள், Coast guard கப்பலான அபராஜ் கப்பலில் மீட்க புறப்பட்டுச் சென்றோம். ஆனால் அதிகாரிகள் நாங்கள் சொல்லும் SPOT -க்கு அருகில் கூடப் போகவில்லை. நாங்கள் 7 பேரும் COAST GUARD உடன் 4 –ம் தேதி தூத்துக்குடியில் புறப்பட்டு வெறும் கடல் ஓரங்களிலேயே அழைத்துச் செல்லப்பட்டோம். சும்மா சுற்றிக் காண்பித்தார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் போகச் சொன்னோம். சரி நீங்கள் போய் சாப்பிட்டுக் கீழே இருங்கள் SPOT வந்த உடன் உங்களை கூப்பிடுகிறாம் என்றார்கள். சரி என்று நாங்களும் அவர்களது பேச்சை நம்பி கப்பலின் கீழ் அறைக்கு வந்து விட்டோம். பின்பு மாலை 4 மணிக்கு மேலே வாருங்கள் என்று எங்கள் ஏழு பேரையும் அழைத்தார்கள்.

உங்களுடைய spot, நீங்கள் கூறிய இடம் வந்துவிட்டது என்றனர்.நாங்கள் நம்பி மேலே வந்தால் வெறும் 30 நாட்டிக்கல் மைலில் தான் நிற்கிறார்கள் இவர்கள். அதாவது கடற்கரை தெரியும் தூரத்தில் நின்று கொண்டு உங்களது spot வந்துவிட்டது என்றார்கள். உடனே நாங்கள், என்ன சார் இடம் வந்துவிட்டது என்கிறீர்கள்? நாங்கள் குறிப்பிடும் பகுதிக்குப் போகாமல் கரை ஓரமாகவே போகிறீர்கள் என்று கேட்டதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. பின்பு எங்களுக்கு எல்லை இவ்வளவுதான் எங்களால் வர முடியும். இதைத் தாண்டிப் போகமுடியாது. என்று ஒரு அதிகாரி கூறுகிறார். சரி, நீங்கள் ராத்திரி சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுங்கள் அதாவது நீங்கள் 5-ம் தேதி காலை நீங்கள் குறிப்பிடும் பகுதியில் கூட்டிப் போகிறோம் என்றனர். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை.

5-ம்தேதி, மேலே வாருங்கள் நீங்கள் சொன்னபகுதி வந்துவிட்டது, ஒரு போட் தெரியுது என்றனர். நாங்களும் அதை நம்பி மேலே வந்து பார்த்தால் அது சிறீலங்கா போட். அதன்பின் எங்களுக்கு ஜிபிஎஸ் மூலம் ஏரியா பார்க்கத்தெரியும் என்பதால், அவர்களுக்குத் தெரியாமல் கப்பலின் ஜிபிஎஸ் பார்த்தோம், அது 30 நாட்டிகல் தூரம்தான் காட்டியது. என்ன சார் இது நாங்கள் சொன்ன இடத்துக்குப் போகாமல் வெறும் 30 நாட்டிக்கல் மைலில் இருந்து கொண்டு வந்துவிட்டது என்கிறீர்கள் என்று சண்டை போட்டதற்கு புரிந்து கொள்ளுங்கள், எங்களுக்கு அவ்வளவு தூரம் தான் அனுமதி என்றனர். அதாவது தூத்துக்குடியில் புறப்பட்டு கன்னியாகுமரி, குளச்சல் எனச் சென்றுவிட்டு, எங்கள் ஏழு பேரையும் வைத்து மறுபடியும் தூத்துக்குடி சென்றுவிட்டு விட்டனர்.

அதிகாரிகளிடம், என்ன சார் நிர்மலா சீதாராமன் கடைசி ஆள் கிடைக்கும்வரை கோஸ்ட்கார்டுடன் தேடுங்கள், எல்லோரையும் காப்பாற்றாமல் விடமாட்டோம் என்றாரே சார்! அது என்னாச்சு? என்று கேட்டதற்கு உயர் அதிகாரிகள் எங்களுக்கு இவ்வளவு தான் அனுமதி தந்துள்ளார்கள் என்றனர். இந்த மத்திய அரசு, மாநில அரசு எங்களை இனப்படுகொலை செய்துவிட்டனர். இதற்கு எல்லாம் காரணம் இந்த மாவட்ட அதிகாரிகளும், இந்த அரசினுடைய அலட்சியமும் தான். ஆனால் ஒன்று மட்டும் நல்லா தெரியுது எங்களை வேண்டுமென்றே கொலை செய்துவிட்டனர்.

ராபின் – தூத்தூர் கிராமம்

முதலமைச்சர் அருமையாய் பார்த்தார் மக்களை அல்ல, ஒரு கல்லூரிக்கு வந்துவிட்டு போய்விட்டார். எங்கள் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வரவில்லை. ஏதும் தவறு செய்யவில்லை என்றால் நேரடியாக மக்களை வந்து சந்திக்க வேண்டும் தானே? ராகுல்காந்தி சின்னத்துறை வந்து சென்றார். தூத்தூர் வரவில்லை. எல்லா அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எங்களை நேரடியாகதான் அடித்துக் கொல்லவில்லை. மற்றபடி எங்களைக் கொலை செய்துவிட்டனர். இந்தப் பகுதியில் வரவேண்டிய இணயம் துறைமுக திட்டம் தடுக்கப்பட்டதால் எங்களைக் கொன்றுவிட்டார்கள்.

ஜிஜோ. த/பெ விக்டர் – தூத்தூர் கிராமம்

வருசத்துக்கு ஒரு பெரிய அலை வந்து எங்களுடைய 50 வீடுகள் அழிய நேரிடுகிறது. ஆனால் இதுவரை இந்த அரசு அதிகாரிகள் எந்த ஒரு உதவியும் செய்து தந்ததில்லை. ஒரு விசைப்படகு செய்ய 70 லட்சம் வரை செலவு செய்து கடன் வாங்கி தொழிலுக்கு போகிறோம். அதற்கான Tax எல்லாம் செலுத்துகிறோம். எங்களுக்கென்று ஒரு பேங்க் லோன் கொடுத்ததில்லை. கேட்டால் போட்டுக்கெல்லாம் லோன் கிடையாது, எதாவது சொத்து இருந்தால் கொண்டு வா என்கிறார்கள். எங்களுக்கு இந்த கடலை விட்டால் ஏது சொத்து ? நாங்கள் பிறந்ததிலிருந்து இங்குதான் இருக்கிறோம். நாங்கள் சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும் செலவினங்களுக்கே போய்விடுகிறது, எப்படி சேமிக்க முடியும்? எங்கள் இந்த நிலைமைக்கு அரசு தான் காரணம் சார்.

முட்டம் மீன்பிடி துறைமுக போட் உரிமையாளர்கள்

நாங்களும், எங்களது முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பல போட்களும் புயலில் சிக்கித் தப்பினோம். நாங்கள் தப்பியதற்கு முக்கியக் காரணம், எங்கள் போட் நீளமாக, பெரிதாக இருந்ததுதான். கேரளாவில் நீளமான போட்டை அனுமதிக்கிறார்கள். ஆனால், தூத்தூர் மீனவர்கள் எங்கள் போட்டில் பாதி அளவுதான் வைத்துள்ளனர். கூடுதல் அளவை தமிழக அரசு அனுமதிப்பதில்லை. சிறிய போட் என்பதால்தான் தூத்தூர் பகுதி மீனவர்கள் புயல் காற்றைச் சமாளிக்க முடியவில்லை, அதனால் இறந்துவிட்டார்கள். இதுதான் பிரச்சனை

திரு. மனோ தங்கராஜ்  – சட்டமன்ற உறுப்பினர் – பத்மநாபபுரம் தொகுதி – குமரி மாவட்டம்

பிரச்சனை புயல் காற்று குறித்து முன்கூட்டியே அறிவிக்காதது மட்டுல்ல, பாதிப்பு வந்தபின்பும் அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், மீட்புப் பணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் கீழே உள்ள அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர். ஓகி புயல் குறித்து, அரசின் கொள்கை முடிவு என்ன? என்பதே பலநாட்கள் தெரியவில்லை. எல்லாமே அலட்சியமாகத்தான் நடந்தது. பாதிக்கப்பட்ட கிராமங்கள் எங்கள் தொகுதிக்குள் தான் வருகிறது.

ஆனால் என்ன செய்வது? சட்டமன்ற உறுப்பினரான எனக்கே 30 -ம் தேதி புயல் வருகிறது என்று தெரியாது. நான் வழக்கமாக கிளம்பி வெளியில் செல்லத்தயாரான போது திடீரென கடும் வேகத்தில் காற்று அடித்து, மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. இதனால் எந்த தடுப்பு முறையும் பின்பற்ற முடியவில்லை. வழக்கமான புயல் என்றால் மழைதான் விழும், காற்று அதிக வேகத்தில் வீசப் போகிறது என யாரும் எதிர்பாக்கவில்லை. அரசோ, மாவட்ட நிர்வாகமோ அறிவிக்கவில்லை.
புயல் வீசியப் பிறகு ஒரு மீட்டிங் கலெக்டர் வைக்கிறார். அதில் அந்த அதிகாரிகள் மிகக் குறைந்த சேதத்தையே சொன்னார்கள். அதையே அரசுக்கு அறிக்கையாகவும் அனுப்பியுள்ளனர். 6000-7000 வீடுகள் சேதமடைந்துள்ளது, அரசுக்கு சொந்தமான ரப்பர் மரங்கள் மட்டும் சுமார் 1.6 இலட்சம் விழுந்துள்ளது என்றால் உண்மையான சேதத்தை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். கடலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த கணக்கே மாவட்ட நிர்வாகத்திடம் இல்லை.

அதிகாரிகளும், அரசும் இணைந்து நிவாரணமாக பகுதியாக சேதமடைந்த வீட்டிற்கு ரூபாய் 5,100 /- முழுவதுமாக சேதமடைந்த வீட்டிற்கு ரூபாய் 95,000/- ரப்பர் ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 18,000/- என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கே செல்லவில்லை, இவர்களாகவே தோராயமாக அறிவிக்கின்றனர்.

விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 525 ரப்பர் மரங்கள் இருக்கும் 1 மரத்திற்கு இந்த அரசு ஒதுக்கியது ரூபாய் 31 மட்டும்தான். இதில் புதிய ரப்பர் மரம் உருவாக்க முடியமா? அந்த மரம் வளரும்வரை விவசாயிகளுக்கு ஏற்படும் வருமான இழப்புகளுக்கு யார் பொறுப்பு?

பிரதமர் மோடி வந்தார் ஆனால் அவர் கன்னியாகுமரியிலேயே இருந்து கொண்டு டிஜிட்டலில் சேதத்தைப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார். நான் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. மோடி இரண்டு கேள்விகள் கேட்டார் .

1) நீங்கள் பிரதமர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயம் செய்கிறீர்களா ?

2) விவசாய விளைபொருட்களை எங்கு விற்கிறீர்கள் ?

மீனவர்கள் சேட்டிலைட் போன் கேட்டபோது, இது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பார்த்துதான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு உயிர் இழப்பு, உற்பத்தி செலவு, இழப்பை கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும். இப்பிரச்சனையிலும் மதவாத அரசியல் செய்கிறது பாஜக.

அரசு தரப்பு கருத்துக்கள்

Dr. பரிதாபானு – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – நாகர்கோவில்

எங்கள் கலெக்ரேட்டில் அனைத்து Dissaster management system உள்ளது, அதை நாங்கள் முழுமையாகப் பயன்படுத்திவருகிறோம். இந்த ஓகி புயலின்போது, கூடுதலாக இரண்டு நபர்களை வைத்து மிகவும் சீரியசாக வேலை செய்தோம்.

எங்கள் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு Dissaster member இருப்பார். அவர்களை எப்பபோது வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளலாம். ஓகிப் புயலின்போது சுமார் 2000 பாதிக்கப்பட்டோர் அழைப்புகளை ஏற்றுத் தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம். ஒரே ஒரு நாள் தான் புயல், ஆனால் அதனுடைய அழிவு என்பது மிகவும் பேரழிவு, அதை நான் மறுக்கமுடியாது.

கடலோரக் காவல்படை மூலம் மீனவர்களை மீட்டுள்ளோம். அதை நீங்கள் நம்பாவிட்டால் பரவாயில்லை, ஆனால் கடலோர காவல்படையுடன் ஏழு மீனவர்கள் மீட்கப் போனார்கள்.
அதில் இருவர் ஊடகங்களில் சொன்னார்கள், ஆழ்கடலில் சென்று தேடினோம் என்று. அதை நான் வீடியோ எடுத்து வைத்து இருக்கிறேன். இதை எப்படி மறுக்க முடியும்? எனவே மாவட்ட நிர்வாகம் சரியாகத்தான் வேலை செய்துள்ளது. இன்று மத்தியக் குழு சேதங்களை மதிப்பிட வந்துள்ளது. கலெக்டர் அந்த வேலையில்தான் உள்ளார். பேரிடர் தொடர்பு எண் ; 1077 யாரும் எப்போதும் அழைக்கலாம்.

ஒகிப் புயலின்போது 15 நாட்கள் மிகவும் கடுமையாகப் போராடி rehbilitation வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதாவது 300 பேர் சிறப்பு டீம் கொண்டு ஒவ்வொரு வீடாக 8 கிராமங்களுக்கும் சென்று அவர்களுடைய வாக்களர் அட்டையை வைத்து கேட்டு துல்லியமான தகவல்கள் கணக்கிட்டு வைத்துள்ளோம்.

இதுவரை மொத்தம் 8 பேர் உடல் கிடைத்துள்ளது. அவற்றை டி.என்.ஏ. டெஸ்ட் செய்து அவர்கள் குடும்பத்துக்கு தலா 20 இலட்சம் என்று 1 கோடியே 60 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் தான் என் கையில் செக் தயார் செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக அவர்கள் கையில் கொடுத்தேன். மேலும் மத்தியக்குழு இன்றும், நாளையும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுவார்கள். அதன்பின் உரிய நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தகுந்த நிவாரண உதவிகளும் செய்து கொண்டிருக்கிறோம். மிகவும் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒக்கி புயலின்போது வெறும் இரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன். அவ்வளவு கடுமையாக மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்து தருகிறோம் .

மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,குளச்சல்

பெயர் தெரிவிக்க விரும்பவில்லை – மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி

எங்கள் மீன்வளத்துறைக்கு அதாவது குளச்சல் மீன்வளத்துறைக்கு சென்னையில் இருந்து 28 -ம் தேதி அறிவிப்பு வந்தது. ஆனால் எங்கள் துறை மற்றும் மற்றதுறை அதிகாரிகளின் அலட்சியத்தினால் தான் இவ்வளவு இறப்பு. இவர்கள் கொஞ்சம் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் கொஞ்சப் பேரையாவது காப்பாற்றி இருக்கலாம். அதிகாரிகளின் மெத்தனம் தான் இறப்புக்குக் காரணம் சார். இதை நான் சொல்லக் கூடாது, ஆனால் உண்மை அதுதான்.

குமரி மாவட்டத்தில் AD அலுவலகம் மொத்தம் மூன்று உள்ளது

1. கன்னியாகுமரி
2. குளச்சல்
3. நாகர்கோவில்

ஆனால் DD அலுவலகம் நாகர்கோவிலில் தான் உள்ளது. வழக்கமாக DD அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு புயல் குறித்த அறிவிப்பு வரும், வந்தவுடன் தான் நாங்கள் மீனவ மக்கள் குடியிருக்கும் பகுதிகளுடைய பாதிரியார்களிடம் சொல்வோம். சக அலுவலகத்திலிருந்து செய்திகள், அறிவிப்புகள் வந்தால்தான் கூற முடியும். நாங்கள் சொன்னபின் மீன்பிடிக்க போக வேண்டாம் என்று பாதிரியார்கள் அறிவிப்பார்கள்.

ஆனால் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களுக்கு இந்த அறிவிப்பால் எந்தவித பயனும் கிடையாது. அவர்களை காப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, ஏனென்றால் அதற்கான எந்த வசதிகளும் மீன்வளத்துறையில் இல்லை.

போட்டுக்கு லைசென்ஸ் உள்ளவங்க வந்து சொல்லிட்டு போவாங்க. இங்கு டோக்கன் முறை உள்ளது. அதை நாங்களும் பின்பற்றுவதில்லை, மீனவர்களும் வந்து டோக்கன் வாங்கிச் செல்வதில்லை. ஏனென்றால் டோக்கன் முறை என்பது விடியற்காலை வந்து டோக்கனை வாங்கிவிட்டு மீன்பிடிக்க சென்றுவிட்டு அன்று இரவு திரும்பிவிட வேண்டும். ஆனால் யாரும் அன்றே வருவதில்லை, இந்த டோக்கன் முறையும் தற்போது நடைமுறையில் இல்லை. சில மீனவர்கள் தெரிந்தே ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். மற்ற நாட்டு எல்லைக்கும் செல்கின்றனர். சிலர் எல்லை எதுவரையிலும் உள்ளது என்று தெரியாமல் செல்கின்றனர். நம்முடைய கடல் எல்லை என்பது 300 நாட்டிகல் மைல். அப்படியிருக்கும் போது அங்குகூடச் சென்று ஏன் மீனவர்களைக் காப்பாற்றவில்லை என்பது தெரியவில்லை!

வெளிநாட்டு கப்பல் ஒன்று எல்லையில் நுழைந்தால் உடனே விசாரணை செய்து பிடித்து விடுகின்றனர் என்பது உண்மைதான். எங்கள் குளச்சல் மீன்வளத்துறைக்கு என்று ஒரு ரோந்து போட் உள்ளது, அதுவும் தற்போது முட்டத்தில் உள்ளது. அதை நாங்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அதை ஓட்டுவதற்கான டிரைவர் இல்லை. அதனால் அப்படியே படகை இயக்காமல் போட்டுவிட்டார்கள். அந்தப் படகும் 10 வருடங்களுக்கு முன் கலைஞர் இருந்த நேரத்தில் கொடுத்தது. கொடுக்கும்போதே டிரைவர் இல்லாத ரோந்து போட்டை தான் தந்தார்கள், அப்படி ரோந்து போட் கடலுக்குள் போக வேண்டும் என்ற நிலை வந்தால் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து டிரைவரை உரிய அனுமதிபெற்று வரவழைத்து குளச்சல் மீன்வளத்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகள் அவர்களுடன் செல்வார்கள்.

இப்படித்தான் இங்கு குளச்சல் மீன்வளத்துறை செயல்பட்டு வருகிறது. வானிலை அறிவிப்பு, மீனவர்களுக்கு ஐடி கார்ட் கொடுப்பது, போட் முன்பதிவு, டோக்கன் விநியோகிப்பது மட்டும்தான் எங்கள் பணி. மீனவர்களை ஆபத்தில் இருந்து மீட்கும் பணி எங்கள் குளச்சல் அலுவலகத்துக்கு கிடையாது, கடலில் செல்வதற்கே எங்களுக்கு வாய்ப்பில்லை. கடலோர காவல்படையோ, கப்பல்படையோதான் அதைச் செய்ய வேண்டும்.

தேவராஜன் – குளச்சல் – முன்னாள் மீன்வளத்துறை மேற்பார்வையாளர்.

பொதுவாக தூத்தூர் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பவர்கள். அதனால் அவர்களைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினம். அதற்கான சிஸ்டமும் எங்களிடம் இல்லை. அதிகாரிகளின் அலட்சியம் தான் இறப்புக்குக் காரணம். ஏனென்றால் புயலின்போது கடலோர காவல்படை ஒரு போட்டில் கடலுக்குள் சென்றுள்ளது. அங்கு போட் கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை அருகில் வந்து பார்த்துவிட்டு அப்படியே காப்பற்றாமல் திரும்பிச் சென்று விட்டார்களாம். மற்ற மீனவர்கள் இவரின் கண்முன்னே மூழ்கி இறந்துவிட்டார்களாம். இதை அந்த போட்டில் இருந்து தப்பிப் பிழைத்து வந்த ஒரு தெரிந்த மீனவர் என்னிடம் சொன்னார். உண்மையைச் சொன்னால் ஊர் மக்கள் பிரச்சனை செய்து விடுவார்கள் என்ற பயத்துடன் என்னிடம் மட்டும் சொன்னார். அவர் சொன்னதை உங்களிடம் சொல்கிறேன், ஏன் இந்த Coast Guard இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை .

இயற்கை பேரிடர்கள் குறித்த சட்டத்தின் நிலை பேரிடர் மேலாண்மை சட்டம், 2005(THE DISASTER MANAGEMENT ACT,2005) இச்சட்டத்தின் பிரிவு-2 பேரிடர் என்றால் என்ன? என்று வரையறுக்கிறது. அவ்வரையறையின்படி இயற்கை மற்றும் மனிதர்கள் நடவடிக்கையால் குறிப்பிட்ட அளவிற்கு உயிர்சேதம், பாதிப்பு அல்லது சொத்துக்களுக்குச் சேதம் அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவது “பேரிடர்” என்கிறது.

பிரிவு 2(e)-ன்படி பேரிடர் மேலாண்மை என்பது பேரிடர் அபாயத்தைத் தடுப்பது, பாதிப்பைக் குறைப்பது, தயார் நிலையில் இருப்பது, காப்பாற்றுவது, நிவாரணம் வழங்குவது, மறு நிர்மாணம் செய்வது.

கடந்த கால இயற்கைப் பேரழிவுகள் குறித்த அரசின் நிலை :

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் (NATIONAL DISASTER MANAGEMENT AUTHORITY,GOVERNMENT OF INDIA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் கடந்த 1972 -ம் ஆண்டிலிருந்து 2014 வரையிலான 30 பாதிப்புகள், முக்கிய பேரழிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.அவற்றில் கடந்த 2010 -ஆம் ஆண்டிலிருந்து வகைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரழிவுகளில், குறிப்பிட்ட சில பேரழிவுகள் இவை

1. 2010 – ஜம்மு காஷ்மீர்-லே-லடாக் பனிச் சரிவு- இறப்பு 257 பேர்
2. 2011 – சிக்கிம்- நில நடுக்கம் – இறப்பு 97 பேர்
3. 2011 – தமிழ்நாடு – தானே புயல் –இறப்பு 47 பேர்
4. 2011 – ஒரிசா – வெள்ளம் – இறப்பு 45 பேர்
5. 2012 – தமிழ்நாடு – நீலம் புயல் – இறப்பு 65 பேர்
6. 2013 – ஒரிசா-ஆந்திரா – பிலியான் புயல் – இறப்பு 23 பேர்
7. 2013 – ஆந்திரா வெள்ளம் – இறப்பு 53 பேர்
8. 2014 – ஜம்மு-காஷ்மீர் வெள்ளம் – இறப்பு இல்லை
9. 2014 – ஆந்திரா – ஹீட் ஹட் புயல் – இறப்பு இல்லை

மேற்கண்ட விபரங்களிலிருந்து இறப்பே இல்லாத புயல், வெள்ளம் முதல் 23 பேர் இறப்பு வரை மிகப்பெரிய பேரழிவுகள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் மேலாண்மைக்கு சட்டப்படியான பொறுப்பு யார்?

பேரிடர் மேலாண்மை சட்டம், 2005, பிரிவு. 3 – தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன் தலைவராக இந்தியப் பிரதமர் இருப்பார். மற்ற 9 உறுப்பினர்களை பிரதமரே தேர்வு செய்வார் எனக் கூறுகிறது.

பிரிவு. 14 – ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலப் பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதன் தலைவராக மாநில முதல்வர் இருப்பார். மற்ற எட்டு உறுப்பினர்களை அவரே நியமிப்பார் என்று கூறுகிறது.

பிரிவு. 25 – ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் அந்த மாவட்ட ஆட்சியர் தலைவராக இருப்பார். மாவட்ட எஸ்.பி, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர்.

தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டம், 2016 இத்திட்டத்தின்கீழ் பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்புக்கான கேபினட் குழுவும், தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியமும் பேரிடர் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டிய முக்கிய அமைப்புகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் சூறாவளிக்கு பொறுப்பான துறையாக MINISTRY OF EARTH SCIENCE உள்ளது.
புயல், சூறாவளி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை முன்னறிவிக்க வேண்டிய பொறுப்பு மத்தியில் MINISTRY OF INFORMATION AND BROADCASTING-க்கும், மாநிலத்தில், மாநில, மாவட்ட பேரிடர் மேலாண்மை வாரியங்கள், வானியல் தகவல் துறை, வருவாய்துறைகளுக்கு உள்ளது.

மேற்கண்ட மக்களின் வாக்குமூலங்கள், மீன்வளத்துறை, குமரி மாவட்ட நிர்வாகத் தகவல்கள், மத்திய, மாநில அரசுகளின் பத்திரிக்கைச் செய்திகள், நாடாளுமன்ற அறிவிப்புகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான சட்டம், திட்டம், கடந்த கால விபரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.

உண்மை அறியும் குழு ஆய்வு முடிவுகள்

  1. ஓகி புயல் குறித்த முன்னறிவிப்பு மீனவர்கள்,விவசாயிகள், குமரி மாவட்ட மக்களுக்கு சரியாக செய்யப்படவில்லை. குறிப்பாக மிக அதிக வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும், இதனால் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்படவில்லை. இதுதான் கடும் பாதிப்புகளுக்கு மூலகாரணம்.
  2. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு புயல், சூறாவளி, சுனாமி குறித்து எச்சரிக்கை செய்ய அரசிடம் வழிமுறைகளே இல்லை.
  3. இரு மாநிலங்களில் சுமார் 661 மீனவர்களை இன்றுவரை காணவில்லை.நூற்றுக்கும் மேலானோர் இறந்துள்ளனர். பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. இம் மாபெரும் அழிவை “பேரிடர்” என்று இன்றுவரை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தினார்கள். இது மீட்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. இந்நிகழ்வு ஒட்டு மொத்த அரசு நிர்வாகக் கட்டமைப்பும் ஊழல்பட்டு, தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.
  4. பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பான திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தத் தயார் நிலையில் இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இத்திட்டம் நடைமுறையில் இல்லை. ஆழ்கடல் மீனவர்களைக் காப்பது குறித்த திட்டமே இல்லை.
  5. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடக்கவேயில்லை. குறிப்பாக ஆழ்கடலில் சிக்கிய மீனவர்களை வேண்டுமென்றே சாகவிட்டு விட்டது மத்திய, மாநில அரசுகள். தப்பிப் பிழைத்த கொஞ்சப் பேரும் சொந்த முயற்சியால், மற்ற மீனவர்கள் உதவியால்தான் பிழைத்துள்ளனர்.
  6. மீனவர்கள் மீதான அரசின் இந்த வெறுப்புக்கு இந்தியக் கடலோரங்கள் முழுவதும் கார்ப்பரேட் நலனுக்கான அணு உலை, துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள், சுற்றுலா விடுதிகள் அமைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக உள்ளார்கள் என்ற கோபமே முக்கிய காரணம்.
  7. பாதிக்கப்பட்ட மக்கள், பாஜக காலூன்ற முடியாத தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், குமரி மாவட்ட மீனவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க கிருத்தவர்களாக இருப்பதும் மோடி அரசின் திட்டமிட்ட அலட்சியத்துக்கு முக்கியக் காரணம்.

பரிந்துரைகள் :

  1. உரிய தருணத்தில் ஓகி புயல் மற்றும் காற்றின் வேகம் குறித்து முன்னறிப்புச் செய்யாது, மீட்புப் பணிகளில் திட்டமிட்ட அலட்சியம் காட்டி, நூற்றுக்கும் மேலானோர் இறப்பிற்குக் காரணமான அரசின் செயல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-அ மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம்,2005 பிரிவு-56 மற்றும் 61-ன் கீழ் தண்டனைக்குரியது.எனவே, இக்குற்றத்திற்கு சட்டப்படி பொறுப்பான தேசிய பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் பிரதமர் திரு. மோடி, மாநில பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் தமிழக முதல்வர் திரு. பழனிச்சாமி, கன்னியாகுமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர், மாவட்ட ஆட்சியர் திரு. சஜன்சிங் சவான் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
  2. ஓகி புயல் பேரழிவில், வானியல் துறை, மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல் படை, குமரி மாவட்ட வருவாய்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் புரிந்த மனிதக் குற்றங்கள் குறித்து, பணியில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  3. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு உடனே சேட்டிலைட் போன் வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதி மீனவர்கள் கொண்ட பேரிடர் கால மீட்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
  4. கேரளாவில் வழங்கப்பட்டது போல் உடனே ரூ.20 லட்சம் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். 7 ஆண்டுகளுக்குப் பின்தான் இறப்பு என அறிவிக்கப்படும் என்ற நடைமுறையைத் தளர்த்த வேண்டும்.
  5. பொருட்கள் மற்றும் விவசாய அழிவிற்கு உற்பத்தி மற்றும் நீண்டகால வருமான இழப்பை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்.
  6. அரசு மேற்கண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால், குமரி மாவட்ட மீனவர்கள்-விவசாயிகளுடன், இதர தமிழக மக்கள் இணைந்து போராட வேண்டும்.

நாள் : 07.01.2018
உண்மை அறியும் குழு

(மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்ட உண்மை அறியும் குழுவின் பரிந்துறைகள் பற்றி பல்வேறு செய்தித் தாள்களில் வெளியான செய்திகள் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

 

  1. //எங்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்றுவது தான் அரசின் திட்டமாக உள்ளது. கடலில் இருந்து 500 மீட்டர் தாண்டித் தான் குடியிருக்க வேண்டும் எனத் திட்டம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.//

    Than we have to plan/Declare “TEN Kilometer along the COAST as a SEPARATE NATION”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க