privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !

உச்சநீதிமன்ற நெருக்கடி : ஜனநாயக உரிமை காக்க செயலில் இறங்குவோம் !

-

                                                          பத்திரிக்கை செய்தி                                 நாள் – 13-1-2018

நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து என உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் -மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் – நீதிமன்றத்திற்கு வெளியே வந்து நாட்டு மக்களை எச்சரித்திருக்கிறார்கள். ஜனநாயத்தின் பிற தூண்கள் எனப்படும் சட்டமன்றம் பாராளுமன்றம், நிர்வாகம் அனைத்தும் செல்லரித்து மக்களிடம் மதிப்பிழந்துவிட்ட நிலையில்  நீதித்துறைக்கு பேராபத்து காப்பாற்றுங்கள் என நீதிபதிகளே சொல்கிறார்கள்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகள் ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டுகிறார்,  நீதிபதிகள் நியமனத்தில் கலந்தாலோசிப்பதில்லை,  மருத்துவகல்லூரி ஊழல் வழக்கு, நீதிபதி லோயா மரணம் என சில பிரச்சினைகளைக் கூறியுள்ளார்கள். பலவற்றை கூறினால் தர்ம சங்கடமாக இருக்கும் என தவிர்க்கிறார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை பாதுகாக்க எங்களுக்கு வேறு வழியில்லை. தலைமை நீதிபதியுடன் பேசித் தீர்வுகாண நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எங்களை இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்து விட்டன என சொல்லி எழுந்து செல்கிறார்கள்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், அதிகார வர்க்கம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் தோற்றுப் பல்லிளித்துவிட்ட நிலையில், நீதித்துறைதான் கடைசி நம்பிக்கையாக இருக்கிறதென்று பலகாலமாக சொல்லி வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கையை இல்லை என்பதுதான் உண்மை.

காவிரி வழக்கில் இருபது ஆண்டுகளாகியும் இன்று வரை தண்ணீர் வரவில்லை. தீர்ப்பும் அமல்படுத்தப்படவில்லை.

பாபர் மசூதி வழக்கில் புராண கட்டுக்கதையை வைத்து  தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அப்சல் குரு ஆதாரமில்லாமல் தூக்கிலிடப்பட்டார். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக பல்லாயிரம் முஸ்லிம் மக்களை கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் குற்றமே செய்யவில்லை என்று சம்மந்தப்பட்ட சிபிஐ விசாரணை அதிகாரி வாக்குமூலம் கொடுத்த பின்னரும் 24 ஆண்டுகளாக அவர் சிறையில் வாடுகிறார்.

ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முறைகேடான பிணை, குமாரசாமியின் முறைகேடான தீர்ப்பு, பிறகு மீண்டும் ஜெ அரசின் கொள்ளை என அடுக்கடுக்காக அநீதிகள் நடந்தன. பிறகு அவர் மரணம் அடையும் வரை வழக்கின் இறுதி தீர்ப்பை வழங்காமல் இழுத்தடித்தது உச்ச நீதிமன்றம்.

நீட் தேர்வு வழக்கில், நீட் வேண்டாம் என தீர்ப்பு வழங்கி முடிந்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்காமலேயே, மீண்டும் முறைகேடாக நீட் தேர்வை அமுல்படுத்த உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்துப் போராடித்தான் தமிழக மக்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொண்டார்கள்.

மக்களின் உரிமைக்கு எதிரான நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கு நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். கீழிருந்து மேல்வரை நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போய்விட்டது.

தனியார் மருத்து கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய வழக்கில் தலைமை நீதிபதி மிஸ்ரா மீது ஊழல் புகார், அருணாசல முதல்வர் கலிகோ புல் தற்கொலை கடிதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார், நீதிபதிகள் தத்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் உட்பட  பல உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்று நீதித்துறை ஊழலுக்கு மிக நீண்ட பட்டியல் இருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் நீதித்துறையை காவி மயமாக்கும் முயற்சி தொடங்கி விட்டது. ஆர்.எஸ்.எஸ் சார்பு நபர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்கப்படுகிறார்கள். மோடி அரசுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் வேட்டையாடப்படுகின்றார்கள்.

குஜராத் போலி மோதல் கொலை வழக்கில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை விடுவிக்க 100 கோடி பேரத்தை எதிர்த்த சி.பி.ஐ. நீதிபதி லோயா என்பவர் 2014 –ல் மர்மமாக இறந்து போகிறார். அவருக்கு பின் வந்த நீதிபதி அமித்ஷாவை உடனே விடுவிக்கிறார். நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதை முடக்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குஜராத்தில் மோடி அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதி ஜெயந்த் பட்டேல் என்பவரை கர்நாடகாவிற்கும் பிறகு பதிவி உயர்வை தடுப்பதற்காக அலகாபாத்திற்கு மாற்றபட்டார். அதனை அவர் எற்க மறுத்து ராஜினாமா செய்தார். குஜராத் கலவர வழக்கில் நீதித்துறை வழக்கறிஞராக வாதாடிய கோபால் சுப்ரமணியம் என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நீதிபதியாக விடாமல் மோடி அரசு தடுத்தது. மத்திய அரசிற்கு எதிராக உத்திரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சென்னைக்கு மாற்றப்படுகிறார். குஜராத் போலி மோதல் வழக்கில் அமித் ஷா வை விடுவித்ததற்காக  அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கவர்னராக நியமிக்கப்படுகிறார்.

உயர் நீதிமன்றங்களில் இன்னும் 40 சதவீத நீதிபதிகள் நியமிக்க வேண்டியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால்  எச்.ராஜாக்களைப் போன்றவர்கள் நீதிபதிகளாவார்கள். நாடு எதிர் நோக்கியிருக்கும் அபாயம் இதுதான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசின் சேவகராக செயல்படுகிறார், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை விட கொடூரமான ஒரு காலத்துக்குள் நாடு சென்று கொண்டிருக்கிறது.

பெயரளவிலான ஜனநாயகமும் இல்லாமல் முடக்கிவிட்டு, அதிகார வர்க்கம், ஊடகங்கள் முதல் நீதித்துறை வரை அனைத்தையும் தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்துத்துவ பாசிசத்தின் கீழ் நாட்டை கொண்டுவர முயற்சிக்கிறது மோடி அரசு. இதற்கு தலைமை நீதிபதி ஒத்துழைக்கிறார் என்பதைத்தான் நான்கு நீதிபதிகளின் கூற்று நிரூபிக்கிறது.

மக்களின் ஜனநாயக உரிமைக்கு உச்ச நீதிமன்றம்தான் காவலன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வீதிக்கு வந்து விட்டார்கள். ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள். ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று  மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இனி யாரிடமும் முறையிட்டுப் பயனில்லை. மோடி அரசின் இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளிலிருந்து  ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை உடனே செயலில் இறங்க வேண்டிய தருணம் இது.

வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்