privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் - மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

-

வருகிறது வேலை வரம்பு ஒப்பந்தம்! தொழிலாளிகளின் இரத்தம் உறிஞ்சும் ஏகாதிபத்தியம் மோடி கும்பலின் கூட்டுச் சதி!

துவரை ஓர் ஒப்பந்த தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதாக இருந்தாலும் கூட தொழிற்தகராறு சட்டத்தின் படி, பன்னாட்டு கம்பெனிகளும் தரகு முதலாளிகளும் தொழிலாளிக்கு முன்கூட்டியே நோட்டீசு வழங்க வேண்டும்; உரிய இழப்பீடு தர வேண்டும்; வேலையை விட்டு நீக்கியதை அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

தொழிலாளிகளின் உரிமைகள் என்று பெயரளவு அம்சங்கள் கூட இனி இல்லை. ஆம். மோடியின் மத்திய அமைச்சரவை சத்தமேயில்லாமல் அனைத்து துறைகளிலும் கால-வரம்பு வேலை ஒப்பந்தத்தை  அமல்படுத்துவதற்கு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி இசைவு தெரிவித்திருக்கிறது.

வேலை வரம்பு (Fixed Term Employment) ஒப்பந்தம் என்றால் என்ன?

வேலை வரம்பு ஒப்பந்தம் என்பது முதலாளிகளின் விருப்பப்படி வேலை வாய்ப்பு வழங்கும் ஒப்பந்தமாகும். அதாவது ஆலையிலும் கம்பெனியிலும் இனி வேலை இருந்தால் மட்டுமே தொழிலாளி பணிக்கு அமர்த்தப்படுவார். பணிபாதுகாப்பு, வேலை உத்தரவாதம் என்ற எதுவும் இனி கிடையாது.

வேலை உத்தரவாதம் என்பதில் ஆறுமாதம் கால வேலை, ஒரு வருட வேலை என்ற கணக்கு வழக்கு எல்லாம் இனி இல்லை. குறிப்பிட்ட புராஜெக்ட் முடிந்தவுடன் தொழிலாளி அப்புறப்படுத்தப்படுவார். பணிபாதுகாப்பு என்பதில் தொழிற்தகராறு சட்டம் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு இனி பொருந்தாது. அதாவது முதலாளி தொழிலாளியை வேலையை விட்டு நீக்க நோட்டீசு கொடுக்க தேவையில்லை; இழப்பீடு கொடுக்கத் தேவையில்லை; அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியமுமில்லை.

இந்தியத் தொழிற்துறையில் வேலை வரம்பு ஒப்பந்தம் கொண்டுவரப்போகும் மையமான மாற்றம் என்ன?

நிரந்தரத் தொழிலாளி என்று யாரும் இனி வருங்காலத்தில் கிடையாது.

பன்னாட்டு கம்பெனிகள் குறைந்த கூலி கொடுத்து கொள்ளை இலாபம் அடிப்பதற்கு ஏதுவான வகையில் தான் இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்யும்படி ஒப்பந்தத் தொழிலாளர் முறை, தொழிற்சங்க உரிமை இரத்து, தொழிலாளர் சட்ட விதிகள் பொருந்தாத சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று பல அடுக்குச் சுரண்டல் முறை இந்தியத் தொழிலாளிகள் மீது தொடுக்கப்பட்டு வந்தது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒப்பந்தத் தொழிலாளிக்கும் கீழாக நிரந்தர தொழிலாளிகளை ஒழிக்கும் விதத்தில் வேலை வரம்பு ஒப்பந்தம் கொண்டுவரப்படுகிறது. இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஆகக் கேடான சுரண்டல் முறை இது.

இந்தியாவில் வேலை வரம்பு ஒப்பந்தம் இப்பொழுதுதான் கொண்டு வரப்படுகிறதா?

இல்லை. வேலை வரம்பு ஒப்பந்தம் இதுவரை ஆடை (Apparel) உற்பத்தித் துறையில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுவந்தது. இனி இந்த இந்த ஒப்பந்தம் இந்தியாவின் அனைத்து தொழிற்துறைகளிலும் அமல்படுத்தப்படவிருக்கிறது.

வேலை வரம்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் கூறும் காரணம் என்ன?

அந்நிய நேரடி முதலீட்டைக் கவருவதற்கு வேலை வரம்பு ஒப்பந்தம் அவசியம் என்கிறது மோடி அரசாங்கம்.

வேலை வரம்பு ஒப்பந்தத்தால் பலன்பெறப் போகிறவர்கள் யார்?

முந்தைய கேள்வியின் தொடர்ச்சியாக பார்த்தால், இந்த ஒப்பந்தம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்திய தொழிற்துறையை முற்றாக அடகு வைக்கும் திட்டமாகும். அரசாங்கத்தின் அறிக்கைப்படி சீசன் முதலீடு செய்பவர்களுக்கு இது பேருதவியாக இருக்குமாம். அதாவது கணநேரத்தில் அந்நியமுதலீடு உள்ளே வந்து முதலாளிகளுக்கு இந்திய சட்டங்களால் எந்தப்பங்கமும் நேராமல் குறைந்த கூலியுழைப்பைப் பயன்படுத்தி கொள்ளை இலாபத்தை இனி சுரண்டிக் கொள்ளலாம் என்பதே இதன் சாரம்.

வேலை வரம்பு ஒப்பந்தத்திற்கு மோடியின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது எப்பொழுது?

இக்கேள்வியின் முக்கியத்துவத்தையும் மோடி நாட்டை விற்கும் வேகத்தையும் தொழிலாளிகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். எப்பொழுதும் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது, விசயங்களை அறியாமல் இருப்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு ஊறுவிளைவிக்கிற செயலாகும்!

வேலை வரம்பு ஒப்பந்தத்தின் அம்சங்கள் ‘தொழிற்துறை பணிகளுக்கான (நிலை ஆணைகள்) மைய விதிகள் (சட்டதிருத்தம்) -2018’ இல் வரைவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆங்கிலப் பெயர் Industrial Employment (Standing orders) Central (Amendment) Rules -2018.  இந்த வரைவு அறிக்கைக்கு மோடியின் மத்திய அமைச்சரவை டிசம்பர்-15-2017 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

வேலை வரம்பு ஒப்பந்தம் பற்றிய செய்திகளை எங்கு தெரிந்து கொண்டீர்கள்?

இனி உரிமைகள் ஏதும் கிடையாது என்பதை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிடுகிரது பிசினஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிக்கை.

இது பற்றிய செய்தி தொடர்ச்சியாக பிசினஸ் ஸ்டேண்டர்டு இதழில் டிசம்பர் 27 – 2017 அன்றும் 09 – ஜனவரி – 2018 அன்றும் வந்துள்ளது. பிசினஸ்ஸ் ஸ்டேண்டர்டு இதழ் முதலாளிகளுக்கானது! ஆகவே தொழிலாளிகள் மீதான இந்தச் சுரண்டல் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் தனது எசமானர்களுக்கு பிசினஸ் ஸ்டேண்டர்டு இதழ் வழங்கியுள்ளது. ஆளும் வர்க்க ஊடகங்கள் தொழிலாளிகளுக்கானதல்ல என்பதைச் சொல்வதற்காக இந்தக் கேள்வி.

தொழிற்சங்கங்கள் இதை எதிர்த்து போராடவில்லையா?

உண்மையை சொல்லப் போனால் 1991இல் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் புகுத்தப்பட்ட காலத்திலிருந்தே ஏகாதிபத்தியங்கள், வேலை வரம்பு ஒப்பந்தத்தைக் கொண்டு வரத்துடித்தன. அப்போதைய தொழிற்சங்கங்களின் ஓரளவு எதிர்ப்பால் தான் இந்த ஒப்பந்தம் இத்துணைகாலம் காங்கிரசாக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் தள்ளிப்போடப்பட்டு வந்தது.

2003 -இல் கால-வரம்பு ஒப்பந்தத்தைத் திணிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதாவைக் முதலில் கொண்டுவந்தது பிஜேபி அரசாங்கம் தான். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் அது பின்வாங்கப்பட்டது. அதற்குப் பிற்பாடான காங்கிரஸ் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததால் அப்பொழுதும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் பின்வாங்கப்பட்டது. மோடி அரசாங்கம் 2015-இல் இதை மீண்டும் தூசிதட்டி எடுத்தது. அப்பொழுது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த பண்டாரு தத்தாரேயா தொழிற்சங்கங்களின் எதிர்ப்பால் மாசோதாவை பின்வாங்கினார். இப்பொழுது 2017 -இல் எந்த சந்தடியுமின்றி மத்திய அமைச்சரவை தொழிலாளிகளின் சுரண்டலுக்கு இசைவு தெரிவித்துள்ளது.

இந்தக் காலகோட்டில் நாம் புரிந்துகொள்வது என்னவெனில் தொழிற்சங்கங்கள் 1990 -களிலிருந்து தற்போதுவரை மறுகாலனியாதிக்கத்தின் தீவிரத்தை எதிர்த்து போராடாமல் நீர்த்து போயிருக்கின்றன. தற்பொழுது கேள்வி கேட்கவும் திராணியின்றி தொழிற்சங்கத் தலைமைகள் சுணங்கியும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவும் ஏகாதிபத்தியம் பேசுவது வெட்டி அரசியல் என்றும் தொழிலாளர் போராட்டங்களை காயடித்திருக்கின்றனர். இப்பொழுது தலைக்கு மேல் வெள்ளம் போய்க் கொண்டிருப்பது அவலமான உண்மையாகும்.

வேலை வரம்பு ஒப்பந்தத்தின் உலகளாவிய பின்னணி என்ன?

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டிக்கு அடுத்தபடியாக மோடி கும்பல் இந்தியாவில் செய்திருக்கும் மிகப்பெரும் சூறையாடல் கால-வரம்பு ஒப்பந்தமாகும். நான்காவது தொழிற்புரட்சி (Fourth Industrial Revolution) மற்றும் தானியங்கு (Automation) தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு ஏகாதிபத்தியங்கள் தன்னை தகவமைத்துக்கொள்வதற்கு இந்தியத் தொழிலாளிகளின் கூலியுழைப்பு மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. 2008 -க்குப்பிற்பாடான பொருளாதார நெருக்கடியிலிருந்தே முதலாளித்துவம் இன்னும் மீளவில்லை. மாறாக இரட்டைச் சரிவில் போய்க்கொண்டிருக்கிறது.

மூலதனக் குவியலற்கும் கூலியுழைப்பிற்குமான முரண்பாடு முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு கூர்மையடைந்திருக்கிறது. அதாவது குறைந்த கூலிக்காக இந்தியா, வங்கதேசம் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மூர்க்கமான தாக்குதலுக்கு இதுவரை உள்ளாகியிருந்த நிலையில் புதிய தாக்குதலாக தொழிலாளிகள் மீதான முற்றுரிமையை இறையாண்மை கடந்து பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

புல்லுருவி மோடி அரசின் கோரப்பற்கள் வெளியில் துருத்திக்கொண்டு நிற்பது தெரிந்துவிட்டது. முழு அம்மணமாக நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறது இந்தக் கும்பல். ஏகாதிபத்திய-மோடி கும்பலின் கூட்டுச் சதியை தொழிலாளிகள் வேரறுக்க ஒன்றிணைய வேண்டும். மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்தால் அன்றி தொழிலாளிகளுக்கு விடிவில்லை!

பாட்டாளிகள் ஒன்றிணைந்து மோடி கும்பலையும் அந்நிய மூலதனத்திற்கு சேவை செய்யும் தரகுமுதலாளிகள், ஊடகம் போன்றவற்றையும் அம்பலப்படுத்த வேண்டும். இந்தக் கோணத்தில் தொழிற்சங்கத் தலைமையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். தொழிற்சங்கமாக ஒன்றிணைய வேண்டும். இதில் ஒன்றுபடும் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.

இருப்பதிலேயே மிக மோசமான போர்க்களம் போராடாமல் விடப்படுவதுதான்!

– இளங்கோ

மேலும் :