privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் - அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ

பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ

-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா? தீர்ப்பு கூறுவது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற தலைப்பில் 02.12.2017 அன்று சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்  ஆற்றிய தலைமை உரை:

னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணை திமுகவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 6 அர்ச்சகர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன. அதில் படித்து பல மாணவர்கள் வேலை கிடைக்கும் எனக் காத்திருந்தனர். இந்நிலையில் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலைச் சேர்ந்த சிவாச்சாரியர்கள் வழக்குப் போட்டு மாணவர்களை அர்ச்சகர் பணிக்கு எடுப்பதை நிறுத்தி வைத்தார்கள்.

இந்நிலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களைச் சந்தித்து சங்கமாக ஒருங்கிணைந்து போராடினால் தான் தீர்வு கிடைக்கும் எனக் கூறி அவர்களை ஒருங்கிணைத்தனர்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைக்குப் பதில் அதனை சட்டமாகக் கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனெனில் ஒரு அரசாணையை இன்னொரு அரசாணையைக் கொண்டு நிறுத்திவிடலாம்.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும், வழக்கில் தீர்ப்பு வந்த போதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. வழக்கை வெற்றிகரமாக கொண்டு செல்ல திமுக மற்றும் தி.க.-வை தொடர்பு கொண்ட போது அவர்கள் முன்வரவில்லை. வழக்கில் அர்ச்சகர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த போதும் அவர்கள் யாரும் வாய்திறக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு தேவையற்ற, குழப்பம் மிக்க தீர்ப்பு. இந்த வழக்கில் சிவாசாரியார்கள் முன்வைத்த வாதம், “இது காலங்காலமாக பின்பற்றப்படும் ஆகம விதிகளுக்கு எதிரானது” என்பதே. பல பிற்போக்கான வழக்கங்கள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருபவைதான். ஆனால் அவை அனைத்தும் இன்று சட்டவிரோதமானவை, குழந்தைத் திருமணம், சாதிய தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல், பாலியல் வேறுபாடு பாராட்டுவது போன்றவை அதற்கு சில உதாரணங்கள்.

இந்த வழக்கைப் பொறுத்த வரையில், இந்த வழக்கில் சில பழைய  வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஆதார அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பெழுதியுள்ளது. 1908-கமுதி, சங்காலிங்கம் வழக்கையும், அதன் பின்னர் நடைபெற்ற இளை வாணியர்கள் வழக்கையும் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

கமுதி கோவிலிலே நுழைவதற்கு நாடார்கள் போராட்டம். 1908-ல் தீர்ப்பு – மனுதர்மத்தின் படி உள்ளே நுழையக் கூடாது. இளை வாணியர் – பனகுடி கிராமத்தில் இராமலிங்கர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு வழக்கு போடுகிறார்கள். பிராமனர், முதலியார், மற்றும் பிள்ளைமார் சாதியினர் தடுக்கிறார்கள்.

மனுதர்ம வழக்கப்படி பிராமணர்கள் கர்ப்பகிரகத்திற்கு உள்ளே வரை செல்லலாம். சூத்திரர்கள், கொடிமரம் வரைக்கும் வரலாம். ஈன ஜாதியினர் கோபுர தரிசனம் தான் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறது.

அந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்புகளும், இந்திய அரசியல் சாசன சட்டம் உருவாவதற்கு முன்னரே வழங்கப்பட்ட தீர்ப்புகள். அத்தீர்ப்பை மனுதர்மத்தின் அடிப்படையில் வழங்குவதாகவே அந்நீதிபதிகள் அன்று கூறியுள்ளனர். அதனை இன்று அரசியல் சாசன சட்டத்தின் படி செயல்படுகின்ற நீதிமன்றம் ஆதார அடிப்படையாக எடுத்துக் கொள்ளமுடியுமா?

அதே போல நீதிபதி மகாராஜன் குழு அறிக்கையில், “சேஷம்மாள் வழக்குத் தீர்ப்பிற்குப் பிறகும் வாரிசுகள் தான் அர்ச்சகராக இருக்கிறார்கள். 1,144 பேரில் 83 பேர் மட்டும் தான் கோர்ஸ் படித்தவர்கள். மற்றவர்கள், வாரிசுரிமையில் வந்திருக்கிறார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது. எந்தக் கோவிலும் ஆகமத்தை பின்பற்றவில்லை.. ஆகமத்தில் சம்பளம் இல்லை. இன்று அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் கொடுக்கிறது . இது ஆகம மீறல் அல்லவா ?

அரசாங்கம் அர்ச்சகர் பக்கம் இல்லை. ஆனால் நீதிமன்றம் பார்ப்பனர்களின் கோட்டையாக இருக்கிறது. ஒரு அரசுப் பணியில் என் பங்காளிக்கு தான் வேலை கொடுக்கமுடியுமென்று கூற முடியுமா?. படித்து தகுதி வாய்ந்தவர்களை மட்டுமே போடவேண்டும். அர்ச்சகர் விவகாரமும் அப்படித்தான்.

தமிழகத்தில் அத்தகைய சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். அதற்கு சமூகத்தில் இருந்து அழுத்தம் வரவேண்டும்.

***

பத்திரிக்கையாளர் சுருதிசாகர் யமுனன் உரை – வீடியோ

தீர்ப்பு சொல்லவரும் விசயம் என்ன ?. அடுத்து என்ன செய்ய முடியும் ? இதற்கு மதம் சார்ந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுளின் ரூபமாக அரசனை மக்கள் மத்தியில் நிலைநாட்ட, அதிகாரத்தை கட்டுப்படுத்த சமூகத்தில் பூசாரி என்ற ஒரு மதகுரு தான் தோற்றத்தின் அடிப்படை. அன்று பூசாரிக்கு இருந்தது அதிகாரம், இன்று அதிகாரமும் பணமும். காலங்காலமாக அவர்களுக்கு இருக்கும் அதிகாரம், அதனை அவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எகிப்து தொடங்கி இன்று வரை இது தான் நிலைமை.

பல்லவர்கள் காலத்தில் தான் கோவில்கள் அதிகமாக கட்ட ஆரம்பித்தனர். வேதங்களில் பலி கொடுக்கும் விசயம் தான் அதிகம். ஆடு, மாடு என அனைத்தையும் பலி கொடுத்த பிராமண மதத்திற்கு எதிராக புத்தமதமும், ஜைனமதமும் உருவாகிறது, புத்தருக்கு பிறகு பெரும் பகுதி மக்கள் புத்தரை பின்பற்ற ஆரம்பித்தனர், பின்னர் பார்ப்பனர்கள் பௌத்தர்களைப் பின்பற்றினர்.

அதனைப் பின்பற்றி தான் சிலை வழிபாடு, கோவில், ஆகமம் ஆகியவை எல்லாம் வந்தன. கோவில் குளம், கடவுள் சிலை, கோவில் கட்டிடம் குறித்த ஒழுங்குமுறையே ஆகமங்கள். அனைத்து ஆகமங்களும் யாருக்கும் முழுமையாகத் தெரியாது.  108 வைணவ ஆகமங்கள், 28 சைவ ஆகமங்கள். முழுமையாகப் படித்தவன் யாருமில்லை.

ஆகவே ஆகமம் என்பது யாருக்கும் முழுமையாகத் தெரியாத ஒரு விசயம். அதில் இது இருக்கிறது என பார்ப்பனர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது. ஆர்ட்டிகிள் 14-ன் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம்.  ஆர்டிக்கிள் 25,26 – மதம் சார்ந்த உரிமையைப் பாதுகாப்பது. ஆனால் ஹதியா வழக்கில் இச்சட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன.

இவ்வழக்கில் அவர்கள் வைக்கும் வாதம் என்ன? எல்லா பிராமணர்களாலும் கர்ப்பகிரகத்துக்குள் போக முடியாது. குறிப்பிட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தான் போக முடியும். ஆகவே இது தீண்டாமைச் செயல் கிடையாது என எதிர்வாதம் வைக்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டமும் ஹிந்து தத்துவத்தைப் போலவே இருகிறது. ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.

பழைய ரிஷிகளின் வம்சத்தில் வந்தவர்கள், அந்தந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் பெரும்பான்மையினருக்கு தங்கள் கோத்திரம் என்னவென்று தெரியாது. இதனை அடிப்படையாக வைத்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . யாராவது , தான் இந்த கோத்திரத்தின் வழியில் தான் இருக்கிறேன் என்று போய் சொன்னால், உடனே அந்த நியமனத்த்கை எதிர்த்து வழக்கு போடுவார்கள். பலபல வித்தைகள் செய்து பிராமணர்கள் அல்லாதவர் அர்ச்சகர் ஆக முடியாது என்று கூறுகின்றனர்.

இது போல தனித் தனியாக பல வழக்குகள் போட்டால், ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தால் போதும், பல ஆண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கலாம். அடி வேரே அறுந்து கிடக்கிறது. இந்நிலையில் மேலே சிறிது பச்சை இருக்கிறது என்பதால் அது துளிர்க்கும் என்று நம்பக் கூடாது. ”ஆகமங்களில் இருக்கும் விசயங்கள் அரசியல் சட்டத்தை மீறாத வகையில் அர்ச்சகர்களை நியமிக்கலாம். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கோத்திரத்தில் தான் பிறந்து இருக்க வேண்டும்” என்பதுதான் தீர்ப்பு.

அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

திமுக 2006இல் வெறும் அரசாணைதான் கொண்டு வந்தது. அதனை எப்போது வேண்டுமானாலும் இன்னொரு அரசாணை கொண்டு மாற்றலாம். சட்டமாகக் கொண்டு வரவில்லை. இவ்வழக்கை எடுத்து வாதாடியவர், மூத்த வழக்கறிஞர் ராவ். கடைசி வாதங்களை முன்வைத்த பிறகு சென்னை வந்தவரிடம் பேசிய போது, தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஒவ்வொரு செங்கலாக உருவினால் தான் பெரிய சுவரை உடைக்க முடியும். இடைநிலை சாதியினரிடம் பரந்துபட்ட மக்களிடம் இதனைக் கொண்டு செல்லவேண்டும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இதனை மாற்ற வேண்டும். இதுதான் தீர்வு.