privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !

ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !

-

லக அளவில் வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் மிக அதிகமென ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நடத்திய சர்வேயின் படி கடந்த ஆண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட  சொத்து வளங்களில் சுமார் 73% வளங்கள் 1% பணக்காரர்களுக்கு சொந்தமென்பது தெரிய வந்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ‘வளர்ச்சி… வளர்ச்சி…’ என்று கூறியே கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். மக்களும் நமக்கு வளர்ச்சி வந்துவிடாதா என்ற ஆசையில் மோடியை பிரதமராக்கினர். உண்மை என்ன? மூன்றே முக்கால் ஆண்டுகளில் மோடி உருவாக்கிய அந்த ‘வளர்ச்சியை’ப் பற்றி ஆக்ஸ்ஃபாம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.

உலக அளவில் வருமான ஏற்றத்தாழ்வில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது என ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் 58% சொத்துக்கள், 1% பணக்காரர்களிடம் குவிந்ததுள்ளதாகத் தெரிவித்தது. இந்த ஆண்டு அந்த 1% பணக்காரர்களிடம் கூடுதலாக 15% சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதுதான் நரேந்திர மோடி சாதித்த மற்றும் சாதிக்க விரும்பிய ‘வளர்ச்சி’.

2017 -ம் ஆண்டில் இந்தியாவில் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 4.89 இலட்சம் கோடி அதிகரித்து, அவர்களது மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.20.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்தொகையானது இந்திய அரசு வெளியிடும் பொது பட்ஜெட் தொகைக்கு நிகரானது. அதே போல கடந்த 2017-ம் ஆண்டில், இந்தியாவில் 100கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து குவித்திருக்கும் பில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 17 புதிய பில்லியனர்கள் உருவாகியிருக்கின்றனர். இவர்களையும் சேர்ந்து தற்போது இந்தியாவின் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 101.

பெருமுதலாளிகளின் வாழ்க்கைத்தரம் இப்படி இருக்க, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத்தரம் ஆக்ஸ்ஃபாமின் ஆய்வறிக்கையின் படி எவ்வாறு இருக்கிறது எனப் பார்க்கலாம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 67 கோடி பேரின் வருமானம் இந்த ஆண்டில் வெறும் 1% மட்டுமே உயர்ந்துள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது அந்த 1% உயர்வும், சொத்து அல்ல, வருமானம்தான். ஏறிவரும் விலைவாசியின் மடங்கோடு இந்த 1% வருமான உயர்வை ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக்ஸ்ஃபாம் ஆய்வின் படி இந்தியாவின் முன்னணி ஜவுளி நிறுவனத்தின் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை ஒரு சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். அந்த அளவில்தான் சம்பள உயர்வு இருக்கிறது. இந்த அளவிற்கு இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான கூலி அடிமாட்டுக் கூலியாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல தொழிலாளர் நலச்சட்டங்களை சீர்திருத்தம் என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றிவருகிறது மோடி அரசு.

உருவாக்கப்படும் வளங்கள் எல்லாம், பெரும்பான்மை மக்களின் உழைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவையே. அவர்கள் தங்களின் உழைப்பிற்குக் கொடுக்கப்படும் சொற்பக் கூலியைப் பெற்று, உழைப்பின் வியர்வை காய்வதற்குள் அதனை ஜி.எஸ்.டி.யாகவும், பெட்ரோல் விலை உயர்வாகவும், பேருந்து கட்டண உயர்வாகவும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளின் வசம் வரிச்சலுகைகளாக, மானியங்களாக ஒப்படைக்கிறது இந்த அரசு.

இது ஒரு புறமிருக்க., குறைந்தபட்ச கூலி, வேலை நிரந்தரம் போன்ற அடிப்படை உரிமைகளை உழைக்கும் மக்களிடமிருந்து சட்டங்கள் போட்டு பிடுங்கி வருகிறது மோடி அரசு. விவசாயிகளைப் பொருத்த வரையில், விளைபொருளுக்கு உரிய விலையை நிர்ணயிக்காமல், கொள்முதலை முறைப்படுத்தாமல் அவர்களது கோமணத்தையும் உருவிவிடுகிறது அரசு.

இப்படி நம்மிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் திருடப்படும் இந்த வளங்கள் அனைத்தும்தான் இந்தப் பெருமுதலாளிகளின் சொத்துமதிப்புகளாக உயர்ந்து நிற்கின்றன. ஏழைகள் மற்றும் நடுத்தரவர்க்கத்தின் சொத்துக்களை பறிக்கும் வேலையைத்தான் முதலாளிகள் செய்கிறார்கள். இதனை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொல்லியிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் அல்ல, முதலாளித்துவத்த்தை சீரமைத்து பாதுகாக்க  நினைக்கும், ஆக்ஸ்ஃபாம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே.

முதலாளிகளின் இவ்வளர்ச்சியைத்தான் மோடி இந்தியாவின் ‘வளர்ச்சி’ என்கிறார். இந்த வளர்ச்சியால் வாழ்விழந்த மக்கள் எத்தனை பேர்?