privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !

மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !

-

ற்ற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்த கட்ட கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

பொதுவாக நம்மைச் சுற்றிய உலகை சில விதிகளையும் நிகழ்முறைகளையும் கொண்ட கண்ணோட்டத்தை பயன்படுத்தி புரிந்து கொள்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்குப் பிறகு இப்போது திரட்டப்படும் தரவுகளின் அளவு பிரம்மாண்டமாக உயர்ந்து வருகிறது. உலகில் ஒவ்வொரு நாளும் திரட்டப்படும் தரவுகளின் அளவு 2013-ல் 4.4 லட்சம் கோடி ஜி.பியாக இருந்தது. இது 2020-ல் 44 லட்சம் கோடி ஜி.பியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெரும் அளவிலான தரவுகளை திரட்டுவதற்கும், சேமிப்பதற்கும், அவற்றை ஆராய்ந்து முடிவுகள் எடுக்கவும் தேவைப்படும் உத்திதான் செயற்கை நுண்ணறிவு.

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை உலகெங்கிலும் உள்ள பல கோடி நோயாளிகளின் மருத்துவ பதிவுகள், சிகிச்சை தொடர்பான விபரங்கள், உடலில் பொருத்திக் கொள்ளும் உடல்நிலை கண்காணிப்பு கருவிகள், உணர்விகள் பதிவு செய்யும் தரவுகள் திரட்டப்படுகின்றன. பெரும் அளவிலான இந்தத் தரவுகளை பயன்படுத்தி நோயாளிகளின் தேவைகளையும், பழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை வடிவமைப்பது சாத்தியமாகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ செயலிகள் (Apps) பல உருவாக்கப்பட்டு வருகின்றன.

வழக்கம் போல, மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஐ.பி.எம் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் வாட்சன் என்ற கருவி.

ஐ.பி.எம் வாட்சன் புற்றுநோய் மருத்துவர்களுக்கான ஒரு தனிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவரின் குறிப்புகளிலும், சோதனை அறிக்கைகளிலும் உள்ள தகவல்களை உள்வாங்கி குறிப்பிட்ட சிகிச்சை முறையை பரிந்துரைக்க வல்லதாக வாட்சன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் முந்தைய வாழ்நிலை, மருத்துவ அறிவு, பிற ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவுகள் இவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டிய பொருத்தமான சிகிச்சையை அடையாளம் காண்கிறது.

ஐ.பி.எம் நிறுவனத்தின் இன்னொரு மென்பொருள் மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை). கதிரியிக்கவியலிலும், இருதயவியலிலும் படங்களை அலசி ஆய்வு செய்து பிரச்சனைக்குரிய பகுதிகளை மனிதர்களை விட கூடுதல் துல்லியத்துடன் அடையாளம் கண்டு நோயை கண்டுபிடித்து சொல்கிறது மெடிக்கல் சீவ்.

ஐ.பி.எம்-க்கு போட்டியாக டெல், எச்.பி, ஆப்பிள், ஹிட்டாச்சி, லுமினோசோ, அல்கெமி ஏ.பி.ஐ, டிஜிட்டல் ரீசனிங், ஹை ஸ்பாட், லுமியாட்டா, சென்டியன்ட் டெக்னாலஜிஸ், என்டெர்ரா, ஐ.பிசாஃப்ட், நெக்ஸ்ட் ஐ.டி என்று பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தத் துறையில் குதித்துள்ளன.

இவ்வாறு மருத்துவத் துறை மேலும் மேலும் பெரிய கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று, நிதி மூலதனத்தின் லாப வேட்டைக் களமாக மாற்றப்பட்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள்

சமீபகாலங்கள் வரை நோய் கண்டறியும் கணினி செயலிகள் குறிப்பிட்ட நோய்களை இலக்காக வைத்து அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட முன் ஊகங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பான செயலி உருவாக்கப்பட வேண்டியிருந்தது. எனவே அவற்றை மிகக் குறுகிய வரம்பில் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. அவற்றின் பலனும் குறைவாகவே இருந்தது. எனவே அவை மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.

இதற்கு மாறாக இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையிலான செயலிகள் உடல் முழுவதுக்குமான பல வகை நோய்களை கையாள முடிவதோடு எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் போன்ற அனைத்து வகையான கருவிகளின் படங்களையும் அலசும் திறனை கொண்டுள்ளன.

மெடிக்கல் சீவ் (மருத்துவ சல்லடை)

மரபணுவியலிலும், மரபணு ஆய்விலும் பெரும் அளவிலான மரபணுவியல் தகவல்களையும் மருத்துவ பதிவுகளையும் கொண்ட தரவுத் தளங்களிலிருந்து குறிப்பிடத்தக்க போக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

மனித ஜீனோம் திட்டத்தின் தந்தைகளில் ஒருவரான கிரெய்க் வென்டர் ஒரு நோயாளியின் டி.என்.ஏ-வின் அடிப்படையில் அவரது உடல் தன்மைகள் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும் மென்பொருளை உருவாக்கி வருகிறார். Human Longevity (மனித வாழ்நாள் நீட்டிப்பு) என்ற அவரது நிறுவனத்தின் மூலம் அவர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜீனோம் வரிசைப்படுத்தலையும், முழு உடல் ஸ்கேனையும், விபரமான மருத்துவ பரிசோதனையையும் வழங்குகிறார். இந்த ஒட்டு மொத்த நடைமுறை மூலம் புற்றுநோய், இரத்தம் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது.

நோயாளிகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந் தரவுகளை பயன்படுத்துவதற்கான ஒரு முக்கியமான உதாரணம், பெர்க் ஹெல்த் என்ற போஸ்டனைச் சேர்ந்த உயிர்மருந்து நிறுவனம். தரவுகளை அகழ்ந்து ஒரு சில மக்கள் ஏன் நோய்களிலிருந்து சமாளித்து பிழைத்து விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் தற்போதைய சிகிச்சைகளை மேம்படுத்துவதோடு புதிய சிகிச்சைகளை உருவாக்கவும் முடிந்தது.

அறுவை சிகிச்சை துறையில் டாவின்சி சி.எச்.டி என்ற கருவி அறுவை சிகிச்சை தானியக்க கருவிகளை உருவாக்கியுள்ளது. உடல் உள் உறுப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மீச்சிறு அளவு துளைகள் மூலம்ரோபோக்களை அனுப்பி வைத்து மருத்துவர்கள் உள் உறுப்புகளின் நிலையை துல்லியமாக கண்டு கொள்வதை சாத்தியமாக்குகிறது.

இன்னும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

டாவின்சி சி.எச்.டி முறை

இங்கிலாந்தைச் சேர்ந்த பாபிலோன் என்ற இணைய மருத்துவ சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு செயலியை (App) நாடி என்னென்ன பிரச்சனை என்று ஒரு மருத்துவரிடம் சொல்வது போல அதனிடம் விளக்க வேண்டும். உங்கள் பேச்சை உணர்ந்து கொண்டு அதிலிருக்கும் நோய் அடையாளங்களை கண்டறிந்து, ஏற்கனவே உங்களைப் பற்றி சேமித்து வைத்திருக்கும் மருத்துவ விபரங்களையும், பொதுவான மருத்துவ தகவல்களையும் பயன்படுத்தி உங்களுக்கு வந்திருப்பது என்ன நோய் என்று சொல்கிறது அந்தச் செயலி. அதை தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. இந்தச் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கும் பாபிலோன் என்ற நிறுவனம் தனக்கு சந்தா கட்டும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் சேவையை வழங்குகிறது. காசிருப்பவனுக்கே சேவை.

நோயாளி மருந்துகளை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று கண்காணிப்பதற்கு ஏ.ஐ கியூர் (AiCure) என்ற செயலியை நேஷனல் ஹெல்த்கேர் இன்ஸ்டிட்யூட் உருவாக்கியிருக்கிறது. ஒரு ஸ்மார்ட் ஃபோனையும், கேமராவையும் பயன்படுத்தி சொன்ன நேரத்தில் சொன்ன மருந்தை ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று தகவலை அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

இத்தகைய செயலிகள் எதற்கு பயன்படும்?

நிதிமூலதன நிறுவனங்களும், மிகப்பெரிய மருந்து நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும்தான் இது முதன்மையாக பயன்படுத்தப்படும். உதாரணமாக, மருந்தக சோதனைகள் மூலம் மருந்துகளை உருவாக்குதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பிடிப்பது, பல நூறு கோடி டாலர் செலவு பிடிப்பது. இந்த நிகழ்முறையை வேகப்படுத்துவதும், செலவுகளை குறைப்பதும் இன்றைய மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், மருந்துகளின் விலையை தீர்மானிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தாங்கள் செய்த செலவை விட பல்லாயிரம் மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றன.

ராயல்டி ஃபார்மா என்ற நிறுவனம், ‘தான் எந்த ஒரு பொருளையும் கண்டுபிடிப்பதிலோ, உற்பத்தி செய்வதிலோ விற்பதிலோ ஈடுபடுவதில்லை’ என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. ஆனால் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமை அதன் வசம் உள்ளது. இந்த உரிமைகளின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மதிப்பு $1500 கோடி (சுமார் ரூ 1 லட்சம் கோடி) என கணக்கிடப்படுகிறது.

தமது மருந்துகளை விற்று பல ஆயிரம் கோடி லாபம் சம்பாதிப்பதற்காக விற்பனை முயற்சிகளிலும், விளம்பரங்களிலும் பணத்தைக் கொட்டுகின்றன மெர்க், கிளாக்சோ ஸ்மித்கிளைன், நோவார்டிஸ், ஃபைசர், ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் மருந்துகள் இந்தியா போன்ற நாடுகளில் சோதனைச் சாலை எலி போல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன.

இது போன்று மருந்துகளின் காப்புரிமைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவற்றின் மீதான உரிமத் தொகையை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற்று கொழுக்கும் நிதி சூதாட்ட நிறுவனங்கள் ஒருபுறம். மறுபுறத்தில் கொள்ளைக் கூடாரமாக நிற்கின்றன, மருத்துவமனைகள்!

மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் எப்படி உள்ளன?

மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருக்கும் அதிநவீன உயர்திறன் கொண்ட மருத்துவக் கருவிகள், அங்கு பணிபுரியும் நூற்றுக் கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்கள் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கான கடவுச் சீட்டு பணம்தான்.
அமெரிக்காவில் மருத்துவமனை கட்டணத்தை கட்ட முடியாத முதியவர்களையும் ஆதரவற்றவர்களையும் ஆம்புலன்சில் ஏற்றி ஆளரவமற்ற சாலை ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு போய் விடுகிறார்கள். இதே அணுகுமுறையைத்தான் சென்னை முதல் சிக்காகோ வரை எல்லா கார்ப்பரேட் மருத்துவமனைகளும் கடைப்பிடிக்கின்றன.

கடந்த 100 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களையும் வளர்ச்சியையும் தன் வசப்படுத்திக் கொண்ட முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் உலகம்தான் இது. கார்ப்பரேட் மருந்து நிறுவனங்கள் தமது புதிய மருந்துகளை சோதித்து பார்க்கும் சோதனை எலிகளாக மக்களை பயன்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மூலம் மருத்துவ சேவை பணம் படைத்த மேட்டுக் குடியினருக்கு மட்டும் கிடைப்பதாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெரும் லாபத்தை குவிக்கும் ராயல்டி ஃபார்மா போன்ற நிதி சூதாட்ட நிறுவனங்களின் உலகமாக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவம்.

மருத்துவம் சார்ந்த செயலிகள் ராயல்டி ஃபார்மா போன்ற கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் சென்று எந்த மருந்துகளின் காப்புரிமையை வாங்கினால் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

சென்ஸ்.லி என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மோலி என்ற செயற்கை நுண்ணறிவு செயலி நோயாளி எப்படி இருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளவும் உரிய சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. பணக்கார நோயாளிகள் மருத்துவரை பார்த்து விட்டு வந்த பிறகு அடுத்த தடவை மருத்துவரை பார்க்கப் போவது வரை இடைப்பட்ட காலத்தில் மருத்துவ உதவிகளை நோயாளிகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கவனிப்பையும், நோய் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பையும் வழங்குகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவிலியரை பணிக்கு அமர்த்தி சம்பளம் கொடுப்பதை விட மென்பொருள் செயலி மூலம் வேலையை நிறைவேற்றி லாபத்தை அதிகரித்துக் கொள்ள முயலுகிறது முதலாளித்துவம்

பிற துறைகளை போலவே மருத்துவத் துறையிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்கவும், உழைக்கும் மக்களை விலக்கி வைக்கவும், உழைப்பாளர்களை சுரண்டவுமே பயன்படுத்தப்படுகிறது.

ரோபோ (robot) என்ற செக் மொழி சொல்லின் பொருள் அடிமை என்பதாகும்.

அதாவது ரோபோக்கள் என்பவை சிக்கலான செயல்களை தாமாகவே செய்யக் கூடிய எந்திர அடிமைகள்.

‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது. எந்திரங்களை இயக்கும் பணியில் அமர்த்தப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் மேலும் மேலும் அதிக நேரம் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். அதன் மூலம் ஈட்டும் வருமானத்தின் மூலம் வீட்டில் பாத்திரம் கழுவ எந்திரம், துணி துவைக்க எந்திரம், வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய எந்திரம் என்று வாங்கி விடலாம். ஆனால், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்குப் போய் 10-12 மணி நேரம் உழைத்து மூலதனத்துக்கு உபரியை வாரி வழங்கினால்தான் அத்தகைய வாழ்வு சாத்தியமாக இருக்கும். எனவே, உண்மையில் ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய் விடும்.

மறுபுறம், தனது லாப ஈட்டலுக்கு தேவையில்லாத பெரும்பாலான உழைக்கும் மக்களை உபரி உழைப்புப் பட்டாளமாக சந்தையில் குவித்து பொருளாதார ஏற்றத் தாழ்வை இன்னும் அதிகரிக்கச் செய்யும் மூலதனம்.

தொழில்நுட்பங்கள் மூலதனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது மேலும் மேலும் சுரண்டலை தீவிரப்படுத்தி உழைக்கும் மக்களையும், இயற்கை வளங்களையும் பேரழிவிற்கு தள்ளுகின்றன என்பது கடந்த 200 ஆண்டு கால அறிவியல் வரலாற்றின் அனுபவம்.

தொழில்நுட்பங்களை அவற்றை படைத்த, அவற்றை பயன்படுத்துகின்ற பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சோசலிசப் புரட்சி மூலம் மட்டுமே இந்த உலகையும் உலக மக்களையும் மூலதனச் சுரண்டலில் – ஆதிக்கத்தில் இருந்து நாம் காப்பாற்ற முடியும்.

– குமார்
புதிய தொழிலாளி, ஜனவரி 2018
New Democratic Labour Front I.T. Employees Wing

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க