privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !

-

பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நடக்கும் வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் சில நாட்களில் நடக்க இருக்கிறது. இதை ஒட்டி இந்துமதவெறியைக் கிளப்பி ஆதாயம் பார்க்கும் நோக்கில் பார்ப்பனிய இந்துமதவெறி இயக்கமான விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று முதல் ஒரு ரத யாத்திரையை சரியாகச் சொன்னால் ரத்த யாத்திரையை துவக்க இருக்கிறது.

புறப்படத் தயாராகும் ரத்த யாத்திரை

“ராம ராஜ்ஜிய ரத யாத்திரை” என்ற பெயரில் அயோத்தியில் துவங்கும் ரத்த யாத்திரை, ஆறு மாநிலங்களில் பயணித்து இறுதியில் தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் முடிகிறது. பயண காலம் இரண்டு மாதங்கள்.

இந்து மதவெறியை நேரடியாக கிளப்பி ஆட்சியைப் பிடித்த பாஜக முதல்வர் யோகி ஆதித்தியநாத் இந்த யாத்திரையை அயோத்தியில் இன்று (13.02.2018 ) துவக்குகிறார். துவக்கும் இடத்தின் பெயர், இவர்களே வைத்துக் கொண்டதின் படி “கரசேவக்புரம்”. இந்த ரத்த யாத்திரை உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடக்க இருக்கிறது.

பாஜக-வின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1990-களில் துவக்கிய முதல் ரத யாத்திரை சோமநாத்தில் துவங்கி அயோத்தியில் முடிவுற்றது. இடையில் பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் அரசாங்கத்தால் அத்வானி கைது செய்யப்பட்டாலும் யாத்திரையின் ரத்தவெறி நிறவேறவே செய்தது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரச்சாரப் பயணமாக சித்தரிக்கப்பட்ட அந்த யாத்திரை, பல நூறு முஸ்லீம் மக்களைக் கொன்று கலவரங்களை உருவாக்கியது. குஜராத்தில் இந்த யாத்திரை பயணித்த போது திருவாளர் மோடி அவர்கள் அத்வானியின் சாரதி போன்று ரதத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதியை இடிக்கவும், பிறகு ஆட்சிக்கு வரவும் பாஜக-விற்கு இந்த யாத்திரை பயன்பட்டது.

மூன்றே நாளில் கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ் படைதிரட்டும்! – மோகன் பகவத். கருத்துப் படம் : வேலன்

மார்ச் 14-ல் பாபர் மசூதி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை நிலத் தகராறாக மட்டுமே கருதுமென தெரிவித்திருந்தாலும், மனுநீதியின் படியும், பார்ப்பனிய பாஜகவின் நீதிமன்ற செல்வாக்கின் படியும் தீர்ப்பு அவாளுக்கு ஆதரவாகவோ, இல்லை சுற்றி வளைத்து ஆதரவாகவோதான் வருமென்பதை எவரும் யூகிக்க முடியும்.

அத்வானி யாத்திரை முடிந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் இந்துமதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் பல நூறு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். இன்று பொருளாதார அரங்கில் நாட்டு மக்களை வாட்டி வதைத்து வரும் பா.ஜ.க, மற்றொரு முனையாக இந்துமதவெறியை மீண்டும் கையில் எடுத்து நாட்டு மக்களை சிதைக்க முடிவு செய்திருக்கிறது.

இதனால்தான் என்னவோ ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்றே நாட்களில் சங்கிகளின் படையைத் திரட்ட முடியுமென திருவாய் அருளியிருந்தார்.

இனி தினசரி செய்தித்தாட்களில் மக்களின் வாழ்வியல் இழப்புக்கள், போராட்டங்கள் குறித்த செய்திகளுக்கு இணையாக இந்துமதவெறியர்கள் நடத்தும் கலவரங்களும், பாபர் மசூதி இடத்தை சங்கிகளுக்கு வழங்க வேண்டிய நியாயத்தையும் விளக்கியும் பல செய்திகள் வரும்.

கல்வி, வரலாறு, அரசுத்துறைகள், நீதித்துறைகள், ஊடகங்கள் அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.

புரட்சிகர – ஜனநாயக அமைப்புகள் அணிதிரண்டு பார்ப்பனிய இந்துமதவெறியை முறியடிக்க வேண்டிய தருணமிது!

செய்தி ஆதாரம்: