privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்

காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்

-

பத்திரிகை  செய்தி

16.02.2018

காவிரி நீர்மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம்

காவிரி நீர்ப்பங்கீடு குறித்த உச்சநீதிமன்றத்தீர்ப்பு வழக்கம்போல தமிழகத்தை வஞ்சிப்பதாகவே வந்துள்ளது. 27 ஆண்டுகால நெடிய,சலிப்பும் களைப்பும் ஊட்டக்கூடிய இழுத்தடிப்புக்குப்பிறகும் தமிழகத்தின் நலனையும், நியாயத்தையும் புறக்கணித்துவிட்டு மோடி அரசின் விருப்பத்தை தீர்ப்பாக அறிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நீண்ட விசாரணை, ஏராளமான புள்ளிவிவரங்கள், வல்லுனர் கருத்துகள் யாவற்றையும் ஆய்ந்து 2007 -ல் வழங்கப்பட்ட 192 டிஎம்சி நீர்  பதினோறாண்டுகளுக்குப்பிறகு 177.25 டிஎம்சி என குறைக்கப்பட்டிருக்கிறது. மருமகளால் இல்லை என விரட்டப்பட்ட பிச்சைக்காரரை மாமியார் அழைத்து அவள் என்ன சொல்வது, நான் சொல்கிறேன் ‘இல்லை போ’ என விரட்டியது போல் உச்சநீதிமன்றம் தமிழகத்தை விரட்டியிருக்கிறது.

கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும். தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர்ப்பற்றாக்குறை, தொடர்ந்து குறைந்துவரும் பருவமழை இவற்றை சற்றும் கவனத்தில் கொள்ளாது நிலத்தடி நீர் பொங்கி வழிவதைப்போல் எண்ணி தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் இருப்பதால் 14.75 டிஎம்சி நீரைப் பறிப்பதாகத் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனக்கூறியிருப்பதையும் காவிரி எந்த மாநிலத்திற்கும் தனி உரிமை அல்ல எனக்கூறியிருப்பதையும் கண்டு சிலர் ஆறுதல் அடையக்கூடும். காவிரி நீர் தொடர்பான எந்த உத்தரவையும் கர்நாடக அரசு கடுகளவும் மதித்ததில்லை. மத்திய அரசுகளோ தமிழகத்தின் நியாயத்தை சற்றும் கண்டுகொண்டததில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் உச்சநீதிமன்றம் போட்ட எல்லா உத்தரவுகளையும் காலில் போட்டு மிதித்ததை உச்சநீதிமன்றத்தால் கைகட்டி வேடிக்கைதானே பார்க்க முடிந்தது. மோடி அரசும், ஆர்எஸ்எஸ் பார்ப்பன இந்துமதவெறிக்கும்பலும் அனைத்து அரசு நிறுவனங்களையும் தமிழக மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஒடுக்கவதற்குமே பயன்படுத்தும் நேரத்தில் உச்சநீதிமன்றமும் அதேவேலையைச் செய்திருக்கிறது.

தமிழகத்தை குறிப்பாக காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி நிலக்கரி,பெட்ரோல், எரிவாயு இவற்றைக் கொள்ளையடிக்கத்துடிக்கும் மோடியின் எஜமானர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் கைகோர்த்து  நிற்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு சுப்ரமணியசாமி காவிரி நீர் கிடைக்காது எனத் தீர்ப்பெழுதினார். இப்போது உச்சநீதிமன்றம் அதை வழிமொழிந்திருக்கிறது.

வஞ்சகத்தில் வீழ்வதா இல்லை எதிர்த்து நின்று வீழ்த்துவதா என்பதை தமிழக மக்கள் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

தங்கள்
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

*****

காவிரித் தீர்ப்பில் வஞ்சகம் ! மீண்டும் தமிழகத்தின் மீதான டெல்லி தாக்குதல் !

தமிழக அரசே, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களே உடனே ராஜினாமா செய்யுங்கள் ! தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை !

நாள் : பிப்ரவரி 17,
நேரம் : காலை 11.30 மணி

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதை – கடலூர் மண்டலம்.

*****

காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிப்பு!
காவிரி நீரில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி யாக குறைத்தும், கர்நாடகத்திற்கு 284.75 டி.எம்.சி யாக அதிகரித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அயோக்கியத்தனமானது ! தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!” என்ற ழுழக்கங்களை முன்வைத்து இன்று 16.2.2018 மாலை 3.00 மணியளவில், மத்திய அரசு நிறுவனமான நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு  பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களையும், பு.மா.இ.மு தோழர்களையும் உடனே கைதுசெய்து மண்டபத்தில் அடைத்தது போலிசு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. 9445112675

*****