privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

கிருஷ்ணகிரி : வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி !

-

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு பகுதியில் வனத்துறையினரின் அலட்சியத்தால் மூன்று விவசாயிகள் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்துள்ள சின்னாறு அருகில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் காட்டுயானை ஒன்று கடந்த 03.02.2018 சனிக்கிழமை அன்று அவ்வழியே போவோர் வருவோர் அனைவரையும் துரத்தியது.

பந்தரக்குட்டை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய விவசாயி v. ராஜப்பா என்பவர் இதனை அறியாமல் தனது வீட்டிலிருந்து தேநீர் கடைக்கு சென்றுகொண்டிருந்த போது திடீரென காட்டுயானை அவரைத் துதிக்கையால் தூக்கி வீசிக் கொன்றது.

இதனை கண்டு அந்த வழியே சென்ற இரு இளைஞர்கள் பலவ திம்மனப்பள்ளியை சேர்ந்த ரங்கநாதன் (38), பந்தரக்குட்டையை சேர்ந்த முனிகிருஷ்ணன் (22) ஆகியோர் அவரது உடலை மீட்க சென்றனர். அவர்களையும் அந்த காட்டுயானை விட்டுவைக்கவில்லை. துதிக்கையால் தூக்கி வீசிச்சென்றது. இதில் படுகாயமுற்ற அவ்விரு இளைஞர்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

அடுத்து அன்று மாலையே 7.30 மணியளவில் அதே காட்டுயானை தேவர்குட்டப்பள்ளியை சேர்ந்த விவசாயி முனிராஜ் (60) என்பவரை கொடூரமாக தாக்கிக்கொன்றது. இவர் சின்னாறு பகுதியில் நடந்துசென்றுக் கொண்டிருந்தபோது திடீரென துரத்திச்சென்று துதிக்கையால் தூக்கி வீசியும், தந்தத்தால் குத்தி கிழித்தும் கொன்றது. இதனால் முனிராஜ் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்துப்போனார்.

அதற்கடுத்த மறுநாள் காலை 8.00 மணியளவில் அதே பகுதியில் ஒட்டையனூரை சேர்ந்த விவசாயி தேவன் (52) என்பவர் நடந்துச்சென்று கொண்டிருந்தபோது அதே காட்டு யானை ஓடிவந்து அவரை துதிக்கையால் தூக்கி வீசியும் மிதித்தும் கொன்றது.

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் மூன்று விவசாயிகளை காட்டுயானை தாக்கி கொன்றதால் மக்கள், இது வனத்துறையினரின் அலட்சியத்தாலும் அவர்களின் செயலற்றப் போக்காலும் நடத்தப்பட்ட படுகொலை என்பதை தங்களின் அனுபவத்திலிருந்து உணரந்து போராட்டத்தில் குதித்தனர். இந்த காட்டுயானையின் அட்டூழியத்திற்கு ஒரு முடிவுக்கட்டப்படாமல் நாங்கள் பிணத்தை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று அறிவித்து மக்கள் திரண்டு போராடினர்.

தேசிய நெடுஞ்சாலைப் பகுதியையொட்டி இந்த சின்னாறு பகுதியில் மக்கள் இவ்வாறு அறிவித்து போராடியது காட்டுத்தீயாய் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் பரவி மக்கள் திரளத்தொடங்கினர். நெடுஞ்சாலையில் போவோர் வருவோரும் அதில் பங்கேற்றனர். அதற்கு பிறகுதான் மாவட்ட கலெக்டர், போலிசு, வனத்துறையினர் நூற்றுக்கணக்கில் வரவழைக்கப்பட்டு அந்த காட்டுயானையை தேடி, மயக்க ஊசிப்பொறுத்திய துப்பாக்கியால் அதனை சுட்டு மயக்கமுறச்செய்து, வனத்துறையினரால் கொண்டுவரப்பட்ட சிறப்பு வாகனத்தில் ஏற்றிக்கொண்டுச் சென்றனர்.

யானையை விரட்ட போதுமான உபகரணங்கள், பட்டாசுகள் வனத்துறையினருக்கு வழங்கப்படவில்லை. எனவே, கடந்த ஒரு வாரகாலமாகவே யானையை பிடிக்கமுடியாமல் வனத்துறையினர் திண்டாடினர் என்று வனத்துறையினர் சார்பானவர்கள் தெரிவிக்கின்றனர்.

யானை மிதித்து விவசாயிகள் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டதும் வழக்கம் போல விவசாய நிலங்களை சேதம் செய்துள்ளது அதனை விரட்ட சென்றவர்களை மிதித்து கொன்றுள்ளது என்று நினைத்து அப்பகுதிக்குச் சென்றோம். ஆனால், உண்மை நிலைமையோ வேறுவிதமாக உள்ளது.
குறிப்பாக, சின்னாறு சுற்றுவட்டாத்தில் உள்ள இந்தப் பகுதி என்பது காட்டை ஒட்டியும் ஆங்காங்கே ஒரு வீடு என்ற வகையிலும் உள்ள மேட்டு நிலப்பகுதி. மேலே சொல்லப்பட்ட கிராமங்களும் அப்படிப்பட்டவைதான்.

இந்த கிராமங்களில் 6 மாதத்திற்கு ஒரு முறை யானைகள் கூட்டமாக வருவது வழக்கம். ஆனால், இத்தனை காலத்தில் அவை ஊருக்குள் வந்ததில்லை. மலைமேல் உள்ள அவற்றின் பாதையில் செல்லும். “எங்களுக்கு நினைவிருக்கும் வரையில் யானை மிதித்து இறந்தவர்கள் என்பது இந்த பகுதியில் இல்லை” என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு யானை மிதித்து இறப்பதும், அடுத்தடுத்து மூன்று பேர் இறந்தது என்பதும் இதுவே முதல் முறை என்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு, ஒரு காட்டு யானையின் குட்டி வழிதவறி சென்றுவிட்டது. அதன் பின்னர், குட்டியை பிரிந்த தாய் யானை மனநிலை (மதம்பிடித்து) பாதிக்கப்பட்டு கூட்டத்திலிருந்து பிரிந்து அலைந்து திரியத் தொடங்கியது. இப்படித்தான் ஒற்றை யானையாக அது சூளகிரி வனப் பகுதிக்கு வந்தடைந்ததுள்ளது. இதனை விரட்ட நினைத்த வனத்துறையோ, அப்போதே இந்த காட்டு யானையை மயக்க ஊசிப் போட்டு பிடிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, வனப்பகுதியின் ஒரு சிறிய பகுதியில் தீ வைத்து விரட்ட முயற்சித்தனர். தீயில் சிக்கிய யானையின் வால் மற்றும் காது பகுதி எரிந்து போய்விட்டது. அதனால் கோபம் அடைந்த யானை சூளகிரியை அடுத்துள்ள சின்னாறு பகுதிக்குச் சென்றுள்ளது. அங்கு கண்ணில் படுபவர்களைத் தாக்கிக் கொன்றுள்ளது.

அந்தவகையில்தான் யானை தாக்கி மூன்று பேர் இறந்து, இரண்டு இளைஞர்கள் படுகாயமுற்ற சம்பவம் நடந்துள்ளது. இதனை உணர்ந்த மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய பின்னர்தான், மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு யானையை மயக்க ஊசி போட்டுப் பிடித்துச் சென்று பிலிகுன்டு வனப்பகுதியில் கொண்டு சேர்த்துவிட்டு வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறையினரின் அலட்சியம், வனத்துறையினரிடம் போதுமான வசதிகள், யானையைக் கட்டுப்படுத்த தேவையான பொருட்கள் இன்மை போன்றவை தான் இந்த மூன்று விவசாயிகளின் மரணத்திற்கு காரணங்களாக உள்ளன.

யானைகளால் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க, மக்கள் கமிட்டி அமைத்து வனத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும், வனத்தில் கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் கம்பெனிகளை விரட்டியடிப்பதும், வனத்தை அழிக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் இன்று அவசர அவசியமான உடனடி நடவடிக்கைகளாக உள்ளன.

மதயானையைவிட மோசமான இந்த அரசு அதிகாரத்திற்கு போட்டியாக மக்கள் தங்களின் அதிகாரத்தை நிறுவுவதற்கான திசையில் தடம்பதித்து முன்னேற வேண்டும், என்பதைத்தான் தற்போதைய மக்களின் போராட்ட அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-செய்தியாளர் புதிய ஜனநாயகம்,
ஒசூர்.