privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !

ஜம்முவில் ரேப்பிஸ்ட்டை காக்கப் போராடும் பா.ஜ.க !

-

சென்னை சிறுமி ஹாசினி கொலையை யாராலும் மறந்திருக்க முடியாது. அச்சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற கிரிமினல் தஷ்வந்துக்கு சமீபத்தில்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

ஜம்முவில் ஹாசினியைப் போன்ற 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கிரிமினலை அவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யக் கோரி, பாஜகவும், ‘ஹிந்து ஏக்தா மன்ச்’ என்ற ஹிந்துத்துவா கும்பலும் இணைந்து ஜம்முவில் போராட்டம் நடத்தியுள்ளன. இக்கும்பல் நடத்திய கண்டனப் பேரணியில் தேசியக் கொடியும் எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா

ஜம்முவின் கத்துவா பகுதியில் உள்ளது கசானா என்ற கிராமம். அப்பகுதியில் குஜ்ஜார் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பழங்குடியின மக்களாகிய இவர்கள், பெரும்பாலும் நாடோடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். சுஃபி இசுலாம் மதப்பிரிவை பின்பற்றி வருகின்றனர்.

கசானா கிராமத்தில் இருந்து குஜ்ஜார் இன மக்களை வெளியேற்றி அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் செய்து வந்துள்ளனர்.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக அப்பகுதியின் போலீசு நிலையமான ஹிராநகர் போலீசு நிலைய போலீசு அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு போலீசை வைத்து அப்பகுதி மக்களை தொடர்ந்து மிரட்டவும், தாக்குதல் தொடுக்கவும் செய்து வந்தனர். இந்தக் கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டு குஜ்ஜார் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஹிராநகர் போலீசு நிலையத்தில் சிறப்புப் போலீசு அதிகாரியாக பணிபுரிந்து வந்த கஜீரியா என்பவர், குஜ்ஜார் இன மக்களின் மீது இத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்து வந்தார்.

கடந்த ஜனவரி 10 அன்று ஆசிஃபா என்ற 8 வயது சிறுமி தனது வீட்டுக் குதிரையை, அருகில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அச்சிறுமி வீடு திரும்பவில்லை. அப்பகுதி மக்கள் அச்சிறுமியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ஹிராநகர் போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர் ஆசிஃபா-வின் பெற்றோர்கள். போலீசு விசாரணையையோ, தேடுதலையோ தொடங்கவே இல்லை.

இதனைத் தொடந்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக சிறுமி காணாமல் போன பின்னர் 8 நாட்களுக்குப் பிறகு சிறுமி ஆசிஃபா-வின் உயிரற்ற உடல் எடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, உடல் முழுவதம் கடுமையான காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பது, பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.

பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கிரிமினலை அவன் ஹிந்து என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யக் கோரி, பாஜகவும், ‘ஹிந்து ஏக்தா மன்ச்’ கும்பல் நடத்திய ஊர்வலம்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களும், எதிர்க்கட்சிகளும் துரித நடவடிக்கை எடுக்காத அப்பகுதி போலீசு நிலைய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக காஷ்மீரின் மெஹபூபா அரசு போலீசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் இது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றையும் அமைத்து, நீதிவிசாரணைக்கும் உத்தரவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு ஏதுமறியாத ஒரு சிறுவனைக் குற்றவாளி எனக் கைகாட்டியது. அது அப்பகுதி மக்களால் பொய் என நிரூபிக்கப்பட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு நேர்மையாக விசாரணை நடத்தவில்லை என்பது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசு விசாரணையைத் துரிதப்படுத்தியது.

விசாரணையில் ஹிராநகர் போலீசு நிலையத்தின் சிறப்பு போலீசு அதிகாரியான கஜூரியாவை கைது செய்தது போலீசு. கஜூரியா, ஏற்கனவே குஜ்ஜார் இன மக்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டவர் என்பது மட்டுமல்லாமல், அவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ஆசிஃபா-வின் பெற்றோர் முதல்நாள் முதற்கொண்டு குற்றம் சாட்டிவந்திருந்தனர்.

குற்றப்பிரிவு போலீசின் அறிக்கையின் படி, ஆசிஃபாவின் மீதான பாலியல் வல்லுறவும், கொலையும், குஜ்ஜார் இன மக்களை மிரட்டி அப்பகுதியை விட்டு விரட்டுவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டது.

போலீசின் கையாலாகத்தனத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள். ஆனால் கஜூரியா கைது செய்யப்பட்ட பின்னர், ஹிராநகரின் எம்.எல்.ஏ-வான பாஜகவைச் சேர்ந்த குல்தீப், அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்களின் மத்தியில் பேசி இப்பிரச்சினையை மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்றியிருக்கிறார்.

ஒரு குழந்தை வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதற்கு நியாயமும் விசாரணையும் கேட்டு போராடிய அதே மக்கள், பாஜக, ஹிந்து ஏக்தா மஞ்ச் ஆகிய அமைப்புகளின் உந்துதலால், ஒரு கிரிமினலை விடுதலை செய்யக் கோரும் பேரணியில் பங்கேற்கின்றனர்.

பாஜக மற்றும் ‘ஹிந்து ஏக்தா மன்ச்’சை சேர்ந்த கிரிமினல்கள் கசானா கிராமத்தவர்களை, அச்சிறுமியின் உடலை புதைக்க அனுமதிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள பகுதியான பந்தி -க்கு உடலைக் கொண்டு சென்று புதைத்தனர் அச்சிறுமியின் பெற்றோர்கள்.

இதனால் ஆத்திரமடைந்த இந்துத்துவா கும்பல், குண்டர்களைக் கொண்டு கசானா கிராமத்தில் குஜ்ஜார் மக்கள் வாழும் பகுதிக்குச் செல்லும் தண்ணீர் பைப்பை உடைத்து உள்ளனர். மேலும், பந்தி பகுதியில் குஜ்ஜார் மக்கள் வாழும் பகுதிக்கான தண்ணீரையும் நிறுத்தியுள்ளனர். சிறுமியின் உடலைப் புதைக்க அனுமதித்த ’குற்றத்திற்காக’ ஒருவாரத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி தவிக்கின்றனர், பந்தி பகுதி குஜ்ஜார் இன மக்கள்.

8 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திக் கொன்ற ஒரு கிரிமினலை விடுதலை செய்ய நடத்தப்பட்ட பேரணியில், பாஜக தேசியக்கொடியை ஏந்தி சென்றிருப்பதன் மூலம், இந்திய தேசியத்தின் ஆணாதிக்க, இந்துத்துவப் ‘பெருமிதத்தை’ வெளிப்படுத்தியிருக்கிறது. அதனைப் புரிந்து கொள்ளத் தவறினால், பாரப்பனிய இந்துமதவெறியின் பாசிச அரசியல் தமிழகத்திலும் ‘தலையெடுக்கும்’.

செய்தி ஆதாரம் :