privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ

காவிரி நதி யாருக்குச் சொந்தம் ? வீடியோ

-

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையைக் கேலிக்குள்ளானதாக மாற்றி இருக்கிறது இத்தீர்ப்பு. ஏற்கனவே தமிழகத்துக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான பங்கான 192 டி.எம்.சி நீர் அளவை மேலும் குறைத்துத் தீர்ப்பளித்து, தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது.

அயோக்கியத்தனமான இத்தீர்ப்பு ஒருபுறம் வரும் போது, மற்றொரு புறத்தில் தமிழகம் காவிரியை நம்பியிருக்கக் கூடாது . கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும், தமிழகத்தில் நீர் மேலாண்மைத்திட்டங்களை அமல்படுத்துவதையும் குறித்தும் விவாதத்தை திட்டமிட்டு கிளப்பியிருக்கிறது, பாஜக. சுப்பிரமணியசாமி திமிராகப் பேட்டியளிப்பது மட்டுமல்ல, சாதாரண மக்கள் மத்தியிலும் அத்தகைய கருத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகின்றது பாஜக கும்பல்.

அதனை மறுத்து, காவிரி நமது உரிமை என்பதை வரலாற்றுத்தரவுகளுடன் நிலைநாட்டுகிறது இந்தக் காணோளி

பாருங்கள், பகிருங்கள்

காவிரி நதி யாருக்குச் சொந்தம்?

1. தென்னிந்தியாவில் ஓடும் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்குப் பிறகு மூன்றாவது பெரிய நதி காவேரிதான். கர்நாடகா மாநிலத்தில் குடகு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் தலைக்காவிரி எனும் இடத்தில் காவிரி ஆறு பிறக்கிறது

2. கர்நாடகாவில் தோன்றி, தமிழகத்தில் ஓடும் காவிரி நதியோட நீளம் 800 கி.மீட்டர். தமிழகத்தின் பூம்புகாரில்தான் காவிரி கடலில் கலக்கிறது. காவிரி நதி நீர் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சொந்தம்.

3. ஒரு நதி இரண்டு, மூன்று நாடுகளில் ஓடினாலும், அதன் நீரைப் பயன்படுத்தும் முதல் உரிமை என்பது நதியின் கழிமுகப் பகுதிக்குத்தான் சொந்தம். இது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அப்படிப் பார்த்தால் காவிரி நதி மீதான தமிழக உரிமையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

4. திருச்சிக்கு அருகே இருக்கும் கல்லணையில் கி.பி 2-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, உலக அளவில் நான்காவது மூத்த அணையும், இந்திய அளவில் முதல் மூத்த அணையுமாகும். இந்த அணையை கி.பி 1804-ம் ஆண்டில ஆங்கிலேய இராணுவ என்ஜினியர் கேப்டன் கால்டுவெல் புதுப்பித்தார். காவிரி நதியின் வெள்ளத்தை திருப்பி விடவும், விவசாய பாசன வசதிக்காகவும்தான் கரிகால் சோழன் இந்த அணையைக் கட்டினார்.

5. காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட போது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1892-ஆம் ஆண்டிலேயே மைசூர் அரசுக்கும், சென்னை மாகாண அரசுக்கும் முதன் முறையாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1924-ஆம் ஆண்டில் போடப்பட்டது. அன்றே ஒப்பந்தைத்த மீறி கர்நாடகா அரசு 11 டிஎம்சி கொள்ளளவில் கட்ட வேண்டிய கிருஷ்ணராஜ சாகர் அணையை 41.5 டி.எம்.சி கொள்ளளவில் கட்டியது.

6. காவிரி போல இந்தியாவில் ஓடும் சில நதிகளை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்களை ஒட்டி, நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு 1956-ம் ஆண்டு சட்டப்பிரிவு 262 இயற்றப்பட்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் படி நதிநீர் சிக்கல் வந்தால் நாடாளுமன்றம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும்.

7. 1990-ம் ஆண்டில்தான் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி “காவிரி நடுவர் மன்றம்” அமைக்கப்பட்டது. இந்த மன்றம் 1991-ம் ஆண்டில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடகம் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும். இந்த தீர்ப்பை ஒட்டி கர்நாடகாவில் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் கலவரத்தை கன்னட இனவெறியர்களும், காங் – பாஜக கட்சிகளும் நடத்தினார்கள்.

8. காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 16 வருடங்கள் கழித்து 2007-ம் ஆண்டு, பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி காவரி நதி நீரில் தமிழகத்திற்கு 419 டிஎம்சி நீரும், கர்நாடகாவிற்கு 270 டிஎம்சி நீரும், கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 7 டிம்சி நீரும் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் ஒராண்டில் 192 டிஎம்சி நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். ஆனால் கர்நாடகா மாநிலம் இந்த தீர்ப்பை கடுகளவு கூட மதிக்கவில்லை. தமிழகத்திற்கும் நீரை வழங்கவில்லை.

9. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு இந்திய அரசின் அரசாணையாக கெசட்டில் 2013- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்படி சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கர்நாடகம் நீரை திறந்து விடவில்லை. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் தொடுத்த வழக்கில்தான் 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதன்படி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீரப்பில் சொல்லப்பட்ட 192 டிஎம்சி நீரை 177.25 டி.எம்.சியாக குறைத்து தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

10. காவிரி நீரை நம்பித்தான் தமிழகத்தில் 24.5 இலட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி நீர்தான் தமிழகத்தின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீர் ஆதாரம். டெல்டா மாவட்டங்களில் 15 இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் சம்பா பயிரை நம்பி 40 இலட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவை சாகுபடியே நடைபெறவில்லை. சம்பா பயிருக்குக்கூடத் தண்ணீர் கிடைக்காது என்ற நிலையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

11. காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகா அடாவடியாக நடந்து கொள்வதைப் பற்றி முன்னாள் மத்திய நீர்வளத்துறை செயலர் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்கிறார்?

“சம உரிமை என்ற ஹெல்சிங்கி கோட்பாட்டையும், சமத்துவமான பயன்பாடு என்ற ஐ.நா தீர்மானத்தையும் கர்நாடகம் ஏற்க மறுப்பதனால்தான் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைகின்றன. தமிழகத்துடன் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்ற சொற்றொடரைப் பயன்படுத்தவே கர்நாடகம் மறுக்கிறது. எங்களுக்குப் போக எவ்வளவு தர முடியும் என்றுதான் பேசுகிறது. அதையும் தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று கூறுகிறது. அதனால்தான் மேலே உள்ள பகுதிகள் ஒரு ஆற்றின் இயல்பான நீரோட்டத்தை தடுப்பதாக இருந்தால், கீழே உள்ள பகுதிகளின் ஒப்புதல் இன்றி செய்யக்கூடாது என்ற சர்வதேச நெறியை அது மீறுகிறது. இதன்படி பார்த்தால் இந்தியாவைக் கேட்காமலேயே பிரம்மபுத்திராவுக்கு குறுக்கே சீனா அணை கட்டிக்கொள்ளலாம் என்று ஆகிவிடும்.”

12. உச்சநீதிமன்றத்தைப் பற்றியும் ராமசாமி ஆர். ஐயர் என்ன சொல்றாரு பார்ப்போம்.

““நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்தான். ஆனால் நடுவர் மன்றத்தில் தமிழகம் இடைக்கால நிவாரணம் கோரியபோதும் சரி, ஆணையத்தின் இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த கர்நாடகம் மறுத்தபோதும் சரி, தமிழகம் எழுப்பிய சட்டரீதியான கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்காமல் நழுவியது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு எதிராக 2007-ல் கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 262 இன் படி தனக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். மாறாக, மேல்முறையீட்டை அனுமதித்து அதனைக் கிடப்பில் போட்டிருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.
இன்னைக்கு இந்த தீர்ப்பில்தான் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு எதிரா தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

13. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் கர்நாடகாவின் நலனுக்கு எதிராக உள்ளதுன்னு கர்நாடக அரசு சொல்கிறது. அது உண்மையா? இதைப் பற்றியும் ராமஸ்வாமி ஆர். ஐயர் சொல்றாரு பாருங்கள்.

“1924 ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்கும்போது அது ஒரு நியாயமற்ற ஆவணமாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்தில் மைசூர் அரசின் மீது அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கு காரணம் பிரிட்டிஷாரின் வலிமை அல்ல. மாறாக, ஆற்றின் தலைக்கட்டுப் பகுதியில் உள்ளவர்கள் மீதுதான் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிந்து நதி விசயத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீது கட்டுப்பாடு அதிகம். அதேபோல கங்கை விசயத்தில் வங்கதேசத்தைக் காட்டிலும் இந்தியா மீதுதான் கட்டுப்பாடு அதிகம். 1924-ல் கர்நாடகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அதற்குப் பின் காவிரியில் வரிசையாக அணைகளைக் கட்டி விட்டனர். இப்போது தமிழகம்தான் பாதிக்கப்பட்ட மாநிலம்.!” என்கிறார் ராமசாமி ஐயர்.

14. தமிழகத்தில ஆறு, ஏரி, குளம்ணு எல்லா நீராதரங்களையும் சேர்த்துப் பார்த்தால் கூட ஒரு வருசத்துக்கு கிடைக்கும் நீரின் சராசரி அளவு 835 டிஎம்சி தான். கர்நாடகாவுல ஆறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு ஒராண்டிற்கு 3,475 டி.எம்.சி. இதுல கடல்ல 1500 டிஎம்சி நீர் கலக்க, பாசனத்திற்கு 1,872 டி.எம்.சி பயன்படுது. கர்நாடகாவில் 11 பெரிய அணைகளின்கொள்ளளவு 705 டிஎம்சி. தமிழக்தின் 11 பெரிய அணைகளின் கொள்ளளவு 190 டி.எம்.சி.
ஆக இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் நீர் வளத்தில் பல மடங்கு வலிமையுடன் கர்நாடக மாநிலம் இருப்பதும் தமிழகம் பலவீனமாய் இருப்பதும் புரியும். எனில் காவிரியும் நமக்கு இல்லை என்றால் தமிழகம் பாலைவனமாகத்தான் ஆக வேண்டியிருக்கும்.

16. இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைக்கும், காவிரிப் பிரச்சினையில் மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருக்கு. காங்கிரசு பா.ஜ.க., கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிக்கின்ற வாய்ப்பு கர்நாடகத்தில் இருப்பதும், தமிழகத்தில் இல்லாதிருப்பதும்தான் தமிழகத்துக்கு எதிரான இந்த ஓரவஞ்சனைக்கு காரணம் என்று இதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இது கொஞ்சம் மேலோட்டமானது.

இந்த தேசியக் கட்சிகள் தமிழகத்தில் செல்வாக்கு பெற முடியாமல் இருக்க என்ன காரணம்? “ஆரிய – பார்ப்பன எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத எதிர்ப்பு” உள்ளிட்ட திராவிட இயக்கம் சார்ந்த கருத்தியல்கள் மீது இருக்கும் காழ்ப்புதான், இவர்களுடைய தமிழ் வெறுப்புக்கு மிக முக்கியமான காரணம்.

இத்துடன் காவிரி டெல்டா மாவட்டங்களின் அடியில் கொட்டிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி மதிப்பு கொண்ட நிலக்கரியையும், மீத்தேனையும் கைப்பற்றும் ஆளும் வர்க்கங்களின் நோக்கமும், விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்த விரும்பும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கையும தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்குப் பின்னணியாக உள்ளன.

இப்போது இருக்கம் மோடி அரசுக்கு நம்மீது காழ்ப்பும், பகையும் அதிகம். மெரினாவில ஜல்லிக்கட்டிற்காக நாம நடத்திய டெல்லிக்கட்டை இப்போது காவிரிக்காக நடத்த வேண்டியிருக்கிறது.  இல்லையென்ன்றால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் இனி பாலைவனமாக மாறிவிடும். காவிரிக்காக வீதியில் இறங்குவோம், மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை தட்டிக் கேட்போம்.

தொடர்புக்கு:
அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876
மின்னஞ்சல் : vinavu@gmail.com

 

  1. காவிரின்னா… கர்நாடகம் பிரச்சனைப் பண்ணும். அதனால, நம்ம விவசாயம் அழியுது இப்டிதான் தெரியும்.

    படிச்சாலும், இப்படி பளிச்சினு மனசுல உட்காருமானு தெரியல.

    இதமாதிரியே, பாபர் மசூதி, முல்லைபெரியாறு…..மார்ச் 8 போன்ற வரலாற கொடுத்த நல்லாயிருக்கும்.

    சிறப்பா, அழுத்தமா பேசினவங்க பேரு தெரியல…. காவிரிஆறு எங்க ஆரம்பிச்சு நம்ம எப்படி வந்தடையுதுனு மேப்புல காட்டியிருக்கலாம். காவிரி, அவங்க தரலை நமக்கு பாதிப்பு சரி, நம்ம அந்த தண்ணி வேண்டாமுன்னா அவங்களுக்கும் பாதிப்பு இருக்குமுல்ல…. அத தெரியபடுத்தியிருக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க