privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்சோடா பாட்டில் பார்ப்பனர்கள் - காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?

சோடா பாட்டில் பார்ப்பனர்கள் – காலச்சுவடு போன்ற லிபரல் பார்ப்பனர்கள் : என்ன வேறுபாடு ?

-

சோடா பாட்டில் பார்ப்பனப் பொறுக்கிகள் !

ண்டாள் விவகாரத்தில் எச். ராசாவின் பேச்சு, புதிய தலைமுறை நெறியாளர் செந்திலுக்கு அளித்த பேட்டியில் எஸ்.வி. சேகரின் பேச்சு, ஜீயரின் சோடாபாட்டில் எச்சரிக்கை – ஆகியவற்றுக்குப் பின்னர் இவர்களைப் பார்ப்பனப் பொறுக்கிகள் என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்குமெனத் தோன்றுகிறது.

இருப்பினும், ஊடக உலகில் பொறுக்கி என்ற சொல், லுங்கியை ஏற்றிக் கட்டிய சூத்திர தோற்றத்துடனும், சூத்திர அரசியல்வாதிகளின் நடத்தையுடனும் மட்டுமே இணைத்துக் காட்டப்பட்டிருப்பதால், இது பொருத்தமில்லையென்றும் சிலருக்குத் தோன்றக்கூடும்.

பார்ப்பனர்கள் என்றால் மென்மை, நாகரிகம் என்பதாகவும், தன் இயல்பில் நாகரிகமற்றவர்களான பிற சாதியினர் நாகரிகமடைவதென்பதே பார்ப்பனப் பண்பாட்டுக்குப் பழக்கப்படுவதுதான் என்பதாகவும்தான் பொதுப்புத்தி இருக்கிறது. ஆம். பெரியார் பிறந்த மண்ணாகிலும் தமிழகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.

”நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்” என்று ஜீயர் சொன்னதை விமரிசித்துப் பேசியவர்களும் கூட, ”ஜீயர் இப்படிப் பேசலாமா?” என்றார்கள். பேசியவர்களுக்கு ஜீயரைப் பற்றிய மயக்கம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் அப்படி பேசக் காரணம் மக்களிடம் பார்ப்பனர்கள் குறித்து நிலவுகின்ற மேற்சொன்ன பொதுப்புத்தி. இந்த மடமையை அகற்றுவதுதான் நம் வேலையேயன்றி, இந்த மடமையை அனுசரித்துப் பேசுவது அல்ல.

சோடா பாட்டில் பார்ப்பனப் பொறுக்கிகள் !

நயினார் நாகேந்திரன், வைரமுத்துவைக் கொலை செய்தாலென்ன என்று பேசியபோது மேடையில் அமர்ந்திருந்த ஜீயரும் பிறரும் புன்முறுவலுடன் அதை ரசித்தார்கள்.  ”நாங்கள்லாம் பயந்து ஒடுங்கிடுவோம்னு நெனச்சீங்களா?” என்பது எஸ்.வி.சேகர் பேசிய வசனம் மட்டுமல்ல, மேடைக்கு மேடை எச்.ராசா பேசி வருவதும், வைரமுத்துவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பார்ப்பனர்கள் பேசுவதும் இதைத்தான். இறுதியாக பார்ப்பன குருபீடமான துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில், ”மாறி வரும் தமிழகத்தில் பூசல்களை உருவாக்கக்கூடிய விமரிசனங்களைத் திராவிட அரசியல்வாதிகளும் சிந்தனையாளர்களும் கைவிடுவது நல்லது. இல்லையென்றால், அமைதியாக நடக்கும் போராட்டங்கள் வன்முறையாகவும் மாறலாம்” என்று மிரட்டியிருக்கிறார் குருமூர்த்தி.

சட்கோப ராமானுஜ ஜீயர் தலைமையில் வைரமுத்துவைக் கண்டித்து கோவை மாவட்டம், காரமடையில் ஹிந்து பார்ப்பனர்கள் நடத்திய ஊர்வலம்

இவ்வாறு ஜீயர் முதல் குருமூர்த்தி வரை எல்லோருமே தாங்கள் சோடா பாட்டில்கள்தான் என்று நிரூபித்துக் கொள்வது குறித்து நாம் ஒரு வகையில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். பார்ப்பன பொறுக்கித்தனம், தனது அலங்காரங்களையும் சாத்வீகத் தோற்றத்தையும் களைந்து விட்டு, தனது கருத்துக்குப் பொருத்தமான மொழியில் வெளி வந்துகொண்டிருக்கிறது.

எச்.ராசாவின் மீசையை மழித்து மொட்டையடித்து மேடைக்கு மேல் ஒரு மேடை போட்டு உட்கார வைத்தால், அவர்தான் ஜெகத்குரு. எஸ்.வி. சேகருக்கு காவி அணிவித்து, கையில் குச்சியைக் கொடுத்தால் அவர்தான் ஜீயர். இருவருக்குமிடையிலான ஒற்றுமை தொந்தியில் மட்டும் இல்லை, மண்டைக்குள் இருக்கும் சரக்கும் ஒன்றுதான். ”நான் போலீசு இல்லடா, பொறுக்கி” என்ற சாமி பட வசனத்தைத்தான் தனது பாத்திரத்துக்கு ஏற்ப மாற்றிப் பேசியிருக்கிறார் சோடாபாட்டில் ஜீயர்.

* * *

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் யூ டியூபில் ஆண்டாள் விவகாரம் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்துகள் இப்பிரச்சனையுடன் தொடர்புள்ளவை.

ஆண்டாள் பிரச்சனையை அணுக வேண்டிய முறை பற்றி விளக்கிவிட்டு, வைரமுத்து மன்னிப்பு கேட்டிருக்கக்கூடாது என்றும் ஞாநி சரியாகவே சொல்லியிருந்தார். அந்த உரையின் கடைசிப் பகுதியில் அவர் கூறியிருந்த கருத்துகள் நம் கவனத்துக்குரியவை.

காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் ஞாநி

”ரொம்ப அதிர்ச்சியாக இருக்கக்கூடிய விசயம், ரொம்ப சாதுவானவர்கள், அமைதியானவர்கள், எந்த வம்புதும்புக்கும் போகாதவர்கள் என்று நாம் கருதக்கூடிய கதாகாலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் திருவல்லிக்கேணி, சீரங்கம் கோயில் வாசலில் போராட்டம் நடத்துகிறார்கள். எங்களைப் பழிக்கிறவன் தலையை வெட்ட நாங்கள் தயங்கமாட்டோம் என்கிறார்கள். வேளுக்குடி கிருஷ்ணன் மாதிரி, பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று சொல்லி, சங்கப் பரிவாரம் தமிழ்ச் சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிப்பதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறார் ஞாநி.

”பார்த்தால் சாதுவாக இருக்கக்கூடியவர்களெல்லாம் வன்முறையாகப் பேசுகிறார்கள். இதை நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று ஞாநி சொல்லியிருக்கிறாரே, அந்த வரிதான் நம் கவனத்துக்குரியது. இவ்விசயம் தொடர்பாகப் பல ஆண்டுகளுக்கு முன் அவருடன் நடந்த ஒரு சிறு விவாதம் நினைவுக்கு வருகிறது.

புதிய கலாச்சாரம் இதழில், ”ஹே ராம்” திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை. ”பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது கருத்து அமைந்திருந்தது.

”மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்”  என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை.

”இதை அவர்களிடம் நாம் எதிர்பார்க்கவே இல்லை” என்று தற்போது பார்ப்பன நடுத்தர வர்க்கத்தினர் குறித்து ஞாநி வெளிப்படுத்தியிருக்கும் அதிர்ச்சி, அன்று ”ஹே ராம்” திரைப்பட விமரிசனத்தையொட்டி அவர் தெரிவித்த கருத்தின் தொடர்ச்சியாகவே அமைந்திருப்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்.

* * *

 ஆண்டாள் விவகாரத்தில், இந்துக் கடவுளையும் மத நம்பிக்கையையும் காயப்படுத்தி விட்டதாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு இவர்கள் எவ்வளவுதான் முயன்ற போதிலும், இந்தப் பிரச்சினைக்காகப் போராடத் திரண்ட ஹிந்துக்களில் ஆகப்பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாகவே இருந்தனர் என்பது தொலைக்காட்சிகளைக் கண்ட அனைவரும் புரிந்து கொண்டிருக்கக்கூடிய உண்மை.

தமிழாற்றுப்படை உரைவீச்சு நடத்திவரும் கவிஞர் வைரமுத்து

பார்ப்பனப் பெண் என்று நாங்கள் நம்புகின்ற ஆண்டாளைத் தேவதாசி என்று எப்படிச் சொல்லலாம்? என்பதுதான் பார்ப்பன சமூகத்தின் மத உணர்வை புண்படுத்திய மையப்பிரச்சினை. இசை வேளாளர் குலத்தில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கர்நாடக இசையின் நாயகியாக்குவதற்கு முன், அவருக்கு மடிசார் அணிவித்துப் பாப்பாத்தியாக ஞானஸ்நானம் செய்து வைத்தவர்கள், கேரளத்தில் யதுகிருஷ்ணா என்ற தலித் இளைஞரை அர்ச்சகராக்குவதற்கு முன் அவரைப் பார்ப்பானாக மாற்ற பத்தாண்டுகள் பயிற்சி கொடுத்தவர்கள், ஆண்டாள் என்ற பார்ப்பனப் பெண்ணைத் தேவதாசியாக மாற்றுவதை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? அருவெறுப்பான இந்த பார்ப்பன சாதி உணர்வுதான் மத உணர்வாக வேடம் கட்டிக் கொண்டது.

மேற்கூறிய உண்மைகள் அறிவுத்துறை சார்ந்தோர் அறியாததல்ல. இருப்பினும் ஒரு சாதி என்ற முறையில் பார்ப்பன சமூகத்தினர் குறித்துப் பலருக்கும் ஒரு தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.

லிபரல் பார்ப்பனர்கள் என்றொரு வகையினர் இருப்பதாக ஒரு புரிதல் அறிவுத்துறையினர் மீது மட்டுமின்றி, மொத்த சமூகத்தின் பொதுப்புத்தியின் மீதும் கவிந்திருக்கிறது. சாதுவானர்கள் என்ற ஞாநியின் மதிப்பீடும் ஏறத்தாழ இதுதான். லிபரல் என்பதற்கு பொது வரையறை எதுவும் கிடையாது. மட்டன் சாப்பிடுவது, சரக்கடிப்பது போன்றவற்றில் தொடங்கி சாதி பாராட்டாமல் வீட்டுக்கு சாப்பிட அழைப்பது, சாப்பிடப்போவது என்பது வரை லிபரலுக்கான இலக்கணம் மதிப்பிடுவோரின் அளவுகோலுக்கு ஏற்ப வேறுபடக்கூடும்.

சாதி என்பது ஜனநாயக விரோத நிறுவனம். சாதி உணர்வு என்பது ஜனநாயக விரோத உணர்வு. லிபரல் எனப்படுபவர் சாதியை இழிவாகவும் அநீதியாகவும் கருதுபவரா, தன்னளவில் சாதி உணர்வை ஆபாசம் என்று கருதி வெறுப்பவரா, நடைமுறையில் சாதியப் பண்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவரா, சாதி மறுப்பைக் குடும்பத்திலும் அமல்படுத்துபவரா என்ற கேள்விகளையெல்லாம் யாரும் கேட்பதில்லை.

லிபரல் என்றழைக்கப்படும் ஜனநாயக உணர்வு சாதியை மறுத்துத்தான் வரமுடியுமேயன்றி, சாதியின் முன்னொட்டாக வர முடியாது. தமிழ்ச்சாதி என்று கூறுவதும், சாதி சமத்துவம் என்ற ஆர்.எஸ்.எஸ். இன் கருத்தும் அடிப்படையில் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவையனைத்தும் படிநிலை சாதி ஆதிக்கத்தைச் சாதி வித்தியாசம் என்று திரித்துக் காட்டுபவை.

காலச்சுவடு இதழின் ஆசிரியர் கண்ணன்

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் என்ற பிரச்சினையில் பார்ப்பனரல்லாத பல சாதியினர் வெவ்வேறு கோயில்களில் பூசாரிகளாக இருப்பதைக் காட்டி, சாதி என்பது ஒரு பன்மைத்துவ (Plural)  பண்பாடேயன்றி, பார்ப்பனிய ஒடுக்குமுறை அல்ல என்று நிறுவுவதற்கு சங்கப் பரிவாரத்தினர் முயற்சிப்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.

இனி லிபரல் பார்ப்பனர் விவகாரத்துக்கு வருவோம்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் பஞ்சாயத்துத் தலைவராக முடியாமல் தடுத்தவர்களைத் தேவர் சாதி வெறியர்கள் என்று குறிப்பிட்டு நாம் எழுதியபோது, யாரோ சிலர் அந்த ஊரில் சாதிவெறியுடன் நடந்துகொள்கிறார்கள் என்பதற்காக தேவர் சாதியினர் அனைவரையும் வெறியர்கள் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்று அச்சாதியினர் விமரிசித்தார்கள். இளவரசன் கொலையின் போது வன்னிய சாதிவெறி என்று எழுதியபோதும் இதே விதமான கேள்வி அந்த சாதிகளைச் சேர்ந்தோரால் எழுப்பப்பட்டது.

இதே சாதியில் பிறந்திருந்தாலும், சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது. தங்களை ஜனநாயக உணர்வு கொண்டவர்களாகக் கருதிக்கொள்பவர்கள் பலரும், பொதுமேடையேறி தமது சாதிகளைச் சேர்ந்த சாதிவெறியர்களைக் கண்டிப்பதில்லை. மாறாக, சாதிவெறி தலைவிரித்தாடும் தருணங்களில் சாமர்த்தியமாக மவுனம் சாதிக்கிறார்கள். இது ஆண்டாள் விவகாரத்தில் மவுனம் சாதிக்கின்ற அல்லது மழுப்பி பேசுகின்ற பார்ப்பன அறிவுத்துறையினருக்கும் பொருந்தும்.

இளவரசனை வெட்டிக் கொன்றதைப் போலவோ, கௌசல்யாவின் கணவன் சங்கரை வெட்டிக் கொன்றதைப் போலவோ தங்கள் ஆட்கள் நடந்து கொள்வதில்லையென்பதால், தங்கள் சாதிக்கு இயல்பிலேயே ஒரு லிபரல் குணாதிசயம் இருப்பதாக பல நடுத்தர வர்க்கப் பார்ப்பனர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த பல நடுத்தர வர்க்கத்தினரும்கூட அவர்களைப் பற்றி இத்தகைய அபிப்ராயத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். சாதுவானவர்கள் என்ற ஞாநியின் கருத்துக்கு இப்படி ஒரு பொருளும் இருக்கிறது.

சாது, மென்மை,- நாகரிகம் என்று எந்த சொல்லால் குறிப்பிடுவதாக இருந்தாலும், அந்தப் பண்பை பல்வேறு சாதியினரிடமும் உருவாக்குவதில் நவீனக் கல்வியும் நகரமயமாக்கமும் பெரும்பங்காற்றியிருக்கிறது. எல்லோருக்கும் முன்னதாக நகரமயமானவர்களும் கல்வி மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பைப் பெற்றவர்களும் பார்ப்பனர்கள். இது சொல்லிக்கொள்ளப்படும் அவர்களது மென்மைக்கு முக்கியக் காரணம். இதற்கும் மேற்பட்டு தாங்கள் தனிச்சிறப்பான முறையில் பண்பானவர்கள் என்று தமிழகத்துப் பார்ப்பனர்கள் கருதும் பட்சத்தில், அவர்களைப் பண்படுத்திய பெருமை பெரியாரையே சாரும்.

சாதியை மறுக்கின்ற நவீனக் கல்வி, பகுத்தறிவு அல்லது பொதுவுடைமைக் கருத்துகள்தான் ஒருவரிடம் ஜனநாயகப் பண்பைக் கொண்டுவருகிறதேயன்றி, சாதி – மத நிறுவனங்களுக்குள்ளிருந்து ஜனநாயகப் பண்புகள் ஒருபோதும் வருவதில்லை. ”வீழ்ந்தேன் என்று நினைத்தாயோ” என்று எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும், ஜீயரும், குருமூர்த்தியும் இன்று பேசிவரும் பேச்சுகளே இதற்குச் சான்று.

நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று தி.மு.க. பேச்சாளர்கள் தங்கள் கட்சியைப் பற்றி மேடையில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். பெரியாரைத் தாக்குப் பிடித்து நின்று, திராவிட இயக்கத்தில் ஊடுருவி – உடைத்து, – ஊழலில் ஊறவைத்து, அதனைக் கைப்பற்றியிருக்கும் தமிழகத்துப் பார்ப்பனர்கள்தான் உண்மையில் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அழைக்கப்பட வேண்டியவர்கள்.

ஜெயலலிதாவின் ஊழல் மறைக்கவே முடியாதவாறு நாறும்போதும் சரி, பார்ப்பனப் பொறுக்கித்தனம் அல்லது சங்க பரிவாரத்தின் பாசிசத் தாக்குதல்கள் நியாயப்படுத்தவே முடியாத அளவுக்குத் தலைவிரித்தாடும்போதும் சரி, சம்பவாமி யுகே யுகே என்று பார்ப்பன மேன்மையை காப்பாற்றுவதற்கு அந்தந்த சூழலுக்குப் பொருத்தமான அவதார புருஷர்கள் களமிறங்குகிறார்கள்.

பார்ப்பனமயமாக்கப்பட்ட சூத்திரசாதியை சேர்ந்த காலஞ்சென்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி(இடது) மற்றும் கேரளாவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த யது கிருஷ்ணா (கோப்புப் படங்கள்)

இதன் பச்சையான வடிவம் தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க. வினருடன் பங்கேற்கின்ற சமூக ஆர்வலர்கள் அல்லது வல்லுநர்கள். நைச்சியமான வடிவம் அறிவுத்துறையினர். ஆண்டாள் விவகாரம் குறித்த காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கு ஒரு சான்று. வளைத்து நெளித்து அது கூறுகின்ற கருத்து இதுதான்.

வைரமுத்து எனப்படுபவர் விளம்பரம் தேடும் ஒரு அரைவேக்காடு. பரபரப்பைக் கிளப்பும் நோக்கத்துக்காக, தெரிந்தேதான் அவர் கட்டுரைக்கு தொடர்பேயில்லாமல் இந்த வாக்கியத்தை நுழைத்திருக்கிறார். பிறரால் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் தேவதாசிகளுக்கும் தன்னைத்தானே கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்ட ஆண்டாளுக்குமிடையிலான வேறுபாடு தெரியாதவர். ஆண்டாள் தேவதாசியே ஆனாலும், கவிஞராகத்தான் அவரைக் காணவேண்டும். அவரால் ஆண்டாளின் கவித்துவப் பரப்பை அணுக முடியவில்லை. வைரமுத்துவுக்கு எதிராக இத்தனை நியாயங்கள் இருந்த போதிலும், பெரும்பான்மைத் தாலிபான்களிடமிருந்து வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் – இந்த தலையங்கத்தின் தலைப்பு, ”அசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக்கூட்டும் தாலிபானியம்.”

”வைரமுத்து பிரச்சினை முக்கியமில்லை. இந்துக்களை இழிவுபடுத்தியோ, ஒரு சமூகத்தினரை மட்டும் விமரிசித்தோ யாரும் பேசக்கூடாது என்பதுதான் எங்கள் போராட்டத்தின் நோக்கம்” என்று திருவல்லிக்கேணியில் கூடிய பூணூல் அணிந்த ஹிந்துக்கள் வெளிப்படையாக அறிவித்தார்கள். இருந்த போதிலும், காலச்சுவடுவுக்குள் இருக்கும் லிபரல் மனச்சாட்சி அவர்களைப் பார்ப்பனர்கள் என்றோ, பார்ப்பனியம் என்றோ அழைப்பதை அனுமதிக்கவில்லை. எனவேதான், அக்கிரகாரத்தை அடையாளப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் என்ற சொல்லை இறக்குமதி செய்கிறது.

அப்போதும் தாக்குதல் தாலிபான் மீது இல்லை. தலையை எடுப்பேன், நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் பேசி வைரமுத்துவுக்கு சாகித்ய அகாதமி அவார்டு கொடுத்ததைப் போல மதிப்பைக் கூட்டிவிட்டீர்களே என்பதுதான் அவர்களது அங்கலாய்ப்பு.

”கழுதையாகவே இருந்தாலும் அது எங்கள் கடவுள். எங்கள் மத நம்பிக்கை. அதைப் பற்றி எவனும் பேசக்கூடாது” என்கிறது பார்ப்பனக் கும்பல். நாச்சியார் திருமொழியின் கற்பூர வாசனை தெரியாத ஒரு கழுதையை அடித்து, அதைப் பிரபலமாக்கி விட்டீர்களே என்று வருந்துகிறது காலச்சுவடு. ஆமையைத் திருப்பிப் போட்டல்லவா அடிக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்ற, வன்முறையில் ஈடுபடாத சாதுவின் கூற்றாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

– மருதையன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com