privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

-

மார்ச் – 8 உலக மகளிர் தினத்தையொட்டி  பெண்கள் விடுதலை முன்னணி  சார்பாக  தருமபுரி, பென்னாகரம்  ஊரில்  8.03.2018 அன்று மாலை  தோழர் பழனியம்மாள்  தலைமையில்  பொதுக்கூட்டம்  நடந்தது.

தலைமை உரையில் “மார்ச் – 8  இன்றைக்கு  திருவிழாவை  போல  ஒரு கொண்டாட்ட நாளாக  கொண்டாடுகின்றனர்.  ஆனால் மார்ச் -8  பெண்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம்,  வாக்குரிமை, சங்கம் சேரும் உரிமை, போன்ற பல்வேறு  உரிமைகளை   கம்யூனிசப் போராளி  கிளாரா ஜெட்கின்  தலைமையில் ஆயிரகணக்கான  பெண்கள் ரத்தம் சிந்தி   உரிமைகளை    பெற்றெடுத்த    போராட்ட நாள்தான்  மார்ச் -8.

அப்படி  போராடி பெறப்பட்ட உரிமைகளை  இழந்து நிற்கிறோம். அதோடு  இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை, சிரியா போரில் பெண்களை கொல்கிறார்கள், ஈழப்போரிலே 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட   பெண்கள்  விதவையாகியுள்ளார்கள், இங்கே டாஸ்மாக்  மூலம் ஆயிரக்கணக்கான  பெண்களை  விதவையாக்கியிருக்கிறார்கள். எனவே  இதனை  அனுமதிக்க கூடாது, அன்றைக்கு  சுதந்திரப் போராட்டத்தில்   பெண்கள்தான்     முன்னின்று   போராடினார்கள்.  இன்றைக்கும்  பெண்கள்  அணைவரும்   ஒன்றிணைந்து   சமூகப் போராட்டங்களில்  பங்கெடுக்க  வேண்டும். அப்போதுதான்   பெண்களுக்கான  விடுதலையை  சாதிக்க முடியும்” என்றார்.

அடுத்தாக தோழர் வனிதா பேசுகையில், “இன்றைக்கு முதலாளித்துவம் லாபத்துக்காக பெண்களை ஆபாசமாக விளம்பரப்படுத்துவது, பெண்களை நுகர்வு பொருளாக பார்ப்பது என்கிற வக்கிரத்தை   திட்டமிட்டே பரப்புகின்றனர். அதோடு  அவனுடைய   லாபத்துக்காக  பெண்களை குறைந்த கூலிக்கு  அமர்த்தி  சுரண்டுவதும்  அரங்கேறி வருகிறது.  மேலும்  பெண்களை  பாதுகாக்க  பல சட்டங்களை  கொண்டுவந்தாலும் ,  அதற்கு எதிராகவே  இந்த  அரசு  இருப்பதால் சட்டங்கள் மூலம் பெண்களை பாதுகாக்க முடியாது.  இதனால் பெண்கள்  விடுதலை பெற ஆண்களோடு  இணைந்து   வீதியில்  இறங்க வேண்டும் அது ஒன்றுதான்  தீர்வு.” என்றார்.

சென்னை   பெண்கள் விடுதலை முன்னணியின்  தோழர் திலகவதி சிறப்புரையாற்றினார். “பெண்கள்  எப்போதுமே திருமணம், படிப்பு, போன்ற பல்வேறு விஷயங்களில் தங்களுடைய  விருப்பங்களை வெளிப்படையாக சொல்லமுடியாத சூழ்நிலையில்தான்  இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகமாக  இருந்து கொண்டிருக்கிறது.  மேலும் முதலாளிகளின்  லாபத்துக்காக கழிவறைக்கு சென்று  வந்தால்  கூட  ஏன்  இவ்வளவு  நேரம்  என்று  கேட்பது, சில  ஆலைகளில் நாப்கின்  கொடுக்கிறேன்  என்று  பெருமையாக பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால்  அத்தொழிற்சாலைகளின்  பண்டக சாலைகளில் ஆண்  பணியாளர்களை  வேலைக்கு  நியமித்துள்ளனர். இதனால் பெண்கள் சங்கடமாக, கூச்சப்பட்டுக்கொண்டு  நாப்கினை  கேட்பது இல்லை. அதை கேட்க முடியாதபடிக்கு அவர்களிடம் அடிமைத்தனம் திணிக்கப்பட்டிருக்கிறது.  இப்படி  அனைத்திலும்  உளவியல் ரீதியான ஒடுக்குமுறையும் அன்றாடம்  அனுபவிக்கின்றனர். பெற்ற தாயே  தின்பண்டங்களில் கூட பெண்ணுக்கு குறைவாக கொடுப்பதில் இருந்து பல அடிமைத்தனங்களை இயல்பாக செய்கிறார். சமூகத்திலோ பெண்களுக்கான சமவெளி என்பது இன்னமும் உருவாகவே இல்லை. நிர்பயா  பாலியல் பலாத்காரத்திற்கு  பிறகு  தண்டனை  வழங்ககப்பட்ட பிறகும்  பாலியல் வன்முறைகள் குறையவில்லை.

அந்த அளவுக்கு பாலியல் நுகர்வு வெறி  சமூகத்தில்  புரையோடிபோயிருக்கிறது.  இதையெல்லாம்  இடித்துரைத்து   சரியான பாண்பாடுகளை  மக்களிடம்  கற்றுக் கொடுக்க வேண்டிய  ஊடகங்கள்  மாமா வேலையைத்தான்  செய்கிறது.  எந்த நேரமும்  சினிமா, சீரியல்கள்  அனைத்திலும்  பெண்களை   நுகர்வு பொருளாக காட்டுவதைதான்  செய்கிறது.

எனவே  இதனையெல்லாம் தடுத்து  நிறுத்த வேண்டுமானால்  பெண்களும்  சமூக போராட்டங்களில்  பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் ஆணாதிக்க  சுரண்டலில் இருந்து, சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறமுடியும். அதைதான் ரஷ்யாவில் தோழர் லெனின் தலைமையில் சாதித்தனர்.  பெண்கள்  குடும்ப  ஒடுக்குமுறையிலிருந்து  விடுவிக்க,  சமூதாய கூடங்கள் , குழந்தைகள்  காப்பகம், சமூதாய  உணவு கூடங்களை,  அமைத்து பெண்களும் உற்பத்தியில் ஈடுபட்டனர். பெண்கள் மகப்பேறு காலங்களில்  விடுப்புடன் கூடிய  ஊதியம்  எல்லாம்  வழங்கி  பெண்கள்   விடுதலையை  சாதித்தனர்.

அத்தகைய   போராட்டம்தான்   தீர்வு. அதற்கு  பெண்கள்  சமூக போராட்டங்களில்   பங்கெடுப்போம்  பெண்கள்  விடுதலையை  சாத்தியமாக்குவோம்.” என்று  அறைகூவல்  விடுத்தார்.

இதில்  சாராய ஒழிப்பு  பெண்கள் குழு அனுபவ உரை,  பள்ளி மாணவிகள் கவிதை வாசிப்பு,  கலைநிகழ்ச்சிகள்  நடைபெற்றது.  இதில்  நூற்றுக்கணக்கான  பொதுமக்கள், பெண்கள்  கலந்து கொண்டனர்.  பெண்களுக்கான   பாதுகாப்பை, விடுதலையை  சட்டத்தின்  மூலமாக    சாதிக்கமுடியாது. மாறாக  பெண்கள்   சமூக போராட்டங்களில்  பங்கெடுப்பதுதான்  தீர்வு என்பதை  உணர்த்தும் விதமாக  இக்கூட்டம்  அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு.
தருமபுரி. தொடர்புக்கு : 80989 08438.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க