privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விபாலிடெக்னிக் - ஐ.டி.ஐ தரம் பற்றி ஒரு அமெரிக்க கவலை !

பாலிடெக்னிக் – ஐ.டி.ஐ தரம் பற்றி ஒரு அமெரிக்க கவலை !

-

மிழகத்தின் முறையான உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களில் வெறும் 12% பேர்தான் ஐ.டி.ஐ முடித்தவர்கள் என்கிறது ஒரு ஆய்வு. முறைசாரா உற்பத்தித் தொழிற்சாலைகளில் அவர்கள் வெறும் 9% பேர்தான் இருக்கின்றனர் என்று ஜே-பால் (J-PAL) என்னும் சர்வதேச ஆய்வு மையம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வு மையம் அமெரிக்காவின் பிரபலமான மாசாசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும், அமெரிக்க அரசும் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒன்று. உலகளாவிய வறுமை குறித்து ‘கண்டுபிடிப்பதே’ இந்த மையத்தின் நோக்கம்.

உலகில் வறுமையை உருவாக்குவதன் மூலம் பணம் பார்க்கும் ஒரு வல்லரசு நாட்டின் மையம் எதற்கு இத்தகைய விபரீத ஆய்வில் ஈடுபடுகிறது? வறுமையின் விளைவுகள், போராட்டம், புரட்சி, நெருக்கடிகள் அனைத்தையும் அறிந்து கொண்டு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் செல்வத்தை சேகரிப்பதோ பாதுகாப்பதோ முடியும். ஆகவே அவர்கள் வறுமையை அதன் வரலாற்று சூழலை தெரிந்து கொள்ள பல்வேறு ஆய்வுகளை செய்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

ஜே-பால் எனப்படும் இந்த ஜமீல் – வறுமை ஒழிப்பு ஆய்வகம், தமிழகத்தில் சமீபத்தில் ஐ.டி.ஐ.தொழிற் பயிற்சி நிறுவனங்கள் குறித்து நடத்திய கள ஆய்வு ஒன்றின் அறிக்கையை ‘தி ஹிந்து’ ஆங்கில நாளேடே வெளியிட்டுள்ளது.

இந்த கள ஆய்வுக்கு அவர்கள் மொத்தம் 750 தொழிற்சாலைகளை எடுத்துக் கொண்டனர். தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கோவை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

முறையான உற்பத்தித் தொழிற்சாலைகளில் குறிப்பாக, உணவு பதனப்படுத்துதல், தோல், இரசாயனம், கன பொறியியல், ஆட்டோமொபைல், மென்பொருள் / பீ.பி.ஓ மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் உள்ள 450 தொழிற்சாலைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவ்வமைப்பு அளித்துள்ள அறிக்கையில், ஐ.டி.ஐ -யிலிருந்து ஆட்களை எடுத்துக்கொள்ள மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் மட்டுமே தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறது. ஐ.டி.ஐ -களில் இருந்து ஆட்களை எடுத்துக் கொள்ள முடியாததற்குக் காரணமாக இரண்டு முக்கிய விசயங்களை அந்த நிறுவனங்கள் முன் வைக்கின்றன.

ஐ.டி.ஐ. -களில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுவதில்லை. அடுத்ததாக ஐ.டி.ஐ. முடித்து வருபவர்கள் அதிக சம்பளம் கோருகின்றனராம்.

மேலும் ஐ.டி.ஐ. -களில் பாடத்திட்டம் காலாவதியாகி விட்டதாகவும் தொழிற்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிறுவனங்களில் 84% நிறுவனங்கள், நேரடியாக ஐ.டி.ஐ -களில் படித்து முடித்து வருபவர்களை விட வேறு நிறுவனங்களில் அனுபவம் பெற்றவர்களையே தொழிலாளர்களாக சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே வேலை பார்ப்பவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் என்ற வகையிலும் தொழிலாளர்கள் எடுக்கப்படுகின்றனர். அடுத்தபடியாக நேர்முகத் தேர்வின் மூலமாகவும் வேலைக்கு ஆள் எடுக்கின்றனர்.

அதே போல பணியின் போது அளிக்கப்படும் பயிற்சி சுமார் 40% முறையான உற்பத்தித் தொழிற்சாலைகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வெறும் 10% முறைசாரா உற்பத்தி தொழிற்சாலைகளில் மட்டுமே அளிக்கப்படுகிறது. .

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்துக் கூறுகையில், பயிற்சி முடிந்த பிறகு அதிக சம்பளம் தரும் நிறுவனங்களுக்கு தொழிலாளிகள் வேலை மாறி சென்றுவிடுவது தங்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பதாகக் கூறுகின்றன இந்த பிரச்சினை பீபிஓ மற்றும் தோல் நிறுவனங்களில் பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்களுக்குத் தேவைப்படும் திறன் கொண்ட மாணவர்கள் ஐ.டி.ஐ.யிலிருந்து வெளிவருவது மிகக் குறைவாக உள்ளது என சுமார் 44% முறையான உற்பத்தித் தொழிற்சாலைகள் கூறுகின்றன. இதையே 42% முறைசாரா உற்பத்தித் தொழிற்சாலைகள் கூறுகின்றன.

ஐ.டி.ஐ. -க்களின் பிரச்சினை குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கண்காணிப்பாளர் ஜோதி நிர்மலாசாமி அவர்கள் கூறுகையில், ஐ.டி.ஐ. -க்களின் பாடத்திட்டத்தை மத்திய அரசின் தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் மற்றும் பயிற்சி இயக்குனரகமும் தான் முடிவு செய்யும் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையிடம் சமீபத்திய தொழிற்சாலைத் தேவைகளைக் கலந்தாலோசித்து விட்டுதான் பாடத்திட்டம் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். அதாவது தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வழிகாட்டுதலிலேயே இந்த பாடத்திட்டங்கள் புதுக்கிப்படுகின்றன.

இந்தியாவில் மொத்தம் 88 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ) உள்ளன. இதில் சுமார் 35,000 மாணவர்கள் படிக்கின்றனர். மாநில அரசுகளின் கீழ் உள்ள ஐ.டி.ஐ. களை படிப்படியாக மத்திய அமைப்பின் கட்டுப்பாட்டிற்கு எடுத்து வருவதாகவும் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு இந்திய அரசின் முத்திரை பதித்த சான்றிதழ் தரப்படுவதாகவும் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்திருக்கிறார்.

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சிஐஐ (CII)-ன்  தமிழகப் பிரிவு தலைவர் பொன்னுசாமி கூறுகையில், “சீனா, வியட்நாம், இலங்கையை ஒப்பிடுகையில் ஜவுளித்துறையில் நமது உற்பத்தித்திறனின் அளவு அவர்களில் பாதி அளவுக்குதான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். மேலும் நீண்டகால வேலைகளுக்குப் பதிலாக நாள்கூலி வேலைகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம்காட்டும் போக்கு அதிகரித்திருப்பது கவனத்திற்குரியது என்றும் கூறியிருக்கிறார்.

தொழிற்சாலை வேலைகளுக்கு மாணவர்களை அனுப்ப ஐ.டி.ஐ. -களில் முறையான ஏற்பாடு இல்லை என்றும், தமக்கு குழாய் தொழில் வல்லுனர் மற்றும் மின் தொழில் வல்லுனர்கள் தேவையை ஒட்டி சில ஐ.டி.ஐ. -களை அணுகியபோதும் அவர்கள் அதற்கு எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறியிருக்கிறார் அனைத்திந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஈ.கே.ரகுநாதன்.

தொழிற்சாலைகளுடன் இணைந்து திறன் சார்ந்த பயிற்சி அளிப்பதற்கு  ஐ.டி.ஐ. -கள் முன்னுரிமை அளிப்பதில்லை. ஜே-பால் ஆய்வகம் அளித்துள்ள பரிந்துரைகளில் முக்கியமாக ஐ.டி.ஐ. -களில் தொழிற்சாலைகளின் அதிக பங்கேற்பும், ஐ.டி.ஐ. -களுக்கு அளிக்கும் நிதியில் மாற்றமும் கொண்டுவரவேண்டும் எனக் கூறியுள்ளது.

னி இந்த ஆய்வு குறித்த நமது ஐயங்களைப் பார்ப்போம். வறுமை ஒழிப்பு குறித்து ஆய்வு செய்யும் மேதகு அமெரிக்க நிறுவனம் தமிழகத்தில் தோல், ஜவுளி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செய்த சுற்றுச் சூழல் அழிவு, அதனால் வாழ்விழந்த விவசாயிகள், பிறகு அதனாலேயே அவர்கள் உதிரிப்பாட்டாளிகளாக இதே நிறுவனங்களில் குறைவான கூலிக்கு வரநேர்ந்த அவலம் குறித்து ஆய்வு செய்தால் உண்மையிலேயே தமிழகத்தின் வறுமை குறித்தும் அதன் மூலவர்கள் குறித்தும் அறிய முடியும். திருப்பூர், நொய்யல், பாலாறு, பம்மல், வேலூர் என அதன் ரத்த சாட்சியங்கள் நம் கண் முன்னேயே உள்ளன.

அடுத்து இன்றைய தொழிற்துறை நிறுவனங்களில் உள்ள தொழிலாளிகளில் பெரும்பான்மையினர் ஒப்பந்த தொழிலாளர்கள்தான். ஹுண்டாய் துவங்கி திருப்பூரின் சிறிய பனியன் தொழிற்சாலை முதல் நிரந்தர தொழிலாளிகளை யாரும் பெரும்பான்மையாக வைத்திருப்பதில்லை. காரணம் என்ன? சட்டப்படி நிரந்தத் தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம், இதர உரிமைகளை மிச்சம் பிடித்து பெரு இலாபம் பார்ப்பதுதான்.

இதன் பொருட்டே ஐ.டி.ஐ மாணவர்களை பயிற்சிக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் அதன் பின்னரும் அவர்களை ஒப்பந்த தொழிலாளியாகவே வைத்திருக்கின்றன. அதே போன்று ஐ.டி.ஐ பின்புலமல்லாத உழைப்பாளிகளையும் பயிற்சி தொழிலாளி என்று வைத்து உற்பத்தியை அபாயகரமான சூழலில் தொடர்கின்றன. சட்டப்படி ஒரு ஒப்பந்தத் தொழிலாளியின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களை நீக்கிவிட்டு பின்னர் மறுசேர்க்கை மூலம் மீண்டும் ஒப்பந்த தொழிலாளியாகவே வைத்திருக்கின்றன.

இத்தகைய கோல்மால் வேலைகளை செய்வதால்தான் இந்த முதாளிகள் பெரும் இலாபம் பார்க்கிறார்கள். அல்லது தொழிலாளர் ஊதியத்தை மிச்சம் பிடித்து வரவை பெருக்குகிறார்கள். அடுத்து ஆட்டோமேசன் எனப்படும் தானியங்கி காலத்தில் தேர்ச்சி பெற்ற தொழிலாளிகளே இவர்களுக்கு பல துறைகளில் தேவையில்லை. இதை ஐ.டி முதல் கார் உற்பத்தி முதல் பல துறைகளில் பார்க்கலாம்.

அடுத்து ஒப்பந்த தொழிலாளிகளுக்கு மட்டும்தான் அதாவது தேர்ச்சி பெறாத தொழிலாளிகளுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு கொடுக்க முடியும் என்ற நிலையை இவர்கள் உருவாக்கி விட்டார்கள். அதன் பொருட்டே நமது ஐ.டி.ஐ கல்வி நிலையங்களை தரமற்றதாக மாற்றியிருக்கிறார்கள்.வேலையற்ற ரிசர்வ பட்டாளம் அதிகமாக இருக்கும் போதுதான் கூலியின் சந்தை நிலவரம் மிகக் குறைவாக இருக்கும்.

தமிழ உழைப்புச் சந்தையின் உண்மை நிலை இப்படி இருக்க நமது அமெரிக்க பகவான்கள் எப்படியெல்லாம் ஆய்வு செய்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்! இவர்கள் சொல்வது போல தரம் என்பது பொறியியல், மருத்துவம் அனைத்திலும் அதாவது தனியார் கல்வியில் இல்லை. அப்படி தரம் வேண்டுமென்றால் அதற்கென நட்சத்திர நிறுவனங்களை அரசோ இல்லை தனியார் மூலமாகவோ வைத்துக் கொண்டு தங்களுக்குத் தேவையான திறன் கொண்ட மாணவர்களை கொத்திக் கொண்டு போகிறார்கள்.

பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் இவர்களது நரித்தனம் இத்தகைய ஆய்வின் மூலம் மறைக்க முடியாத ஒன்று. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு அறிவாளிகளுக்கு இந்த குறைந்த பட்ச லாஜிக் கூட தெரியவில்லை என்பது நமது ஆங்கில ஊடகங்களின் தரம். இந்த தரத்தின் வீழ்ச்சி குறித்து நாம் ஆய்வெல்லாம் செய்யத் தேவையில்லை.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க