privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் - கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் !

அமெரிக்க தேர்தலில் ரசியத் தலையீடும் – கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் கூட்டும் !

-

கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் ! பாகம் 2

கிறிஸ்டோபர் வைலின் கதை மிக சுவாரசியமானது. தற்போது 28 வயதான அவருக்கு சிறுவயதில் அவதானக் குறை மிகையியக்க குறைபாடு (ADHD; Attention deficit hyperactivity disorder) மற்றும் கற்றல் குறைபாடு (dyslexia) உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தன. இதன் காரணமாக தனது 16 -வது வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார். அதன் பின் ஒரே வருடத்தில், கனேடிய எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வேலை செய்துள்ளார்.18 -வது வயதில் ஒபாமாவின் தேர்தல் பணிக்குழு மீப்பெரும் மின்தரவு பகுப்பாய்வு முறையின் அடிப்படையில் வகுத்த தேர்தல் பரப்புரை உத்திகள் குறித்து கேள்விப்படுகிறார்.

கிறிஸ்டோபர் வைலின்

அதைத் தொடர்ந்து மின்தரவுகள், மீப்பெரும் மின்தரவுகள் மற்றும் அதன் பகுப்பாய்வு முறைகள் (Big Data Analytics) குறித்து மிகக் குறைந்த காலத்திலேயே சொந்த முறையில் படித்துத் தேர்கிறார். தனது 19 -வது வயதில் சொந்த முறையிலேயே கணினிச் செய்நிரல்கள் (Code) எழுதக் கற்றுக் கொள்ளும் கிறிஸ்டோபர் வைல், ஒபாமாவின் தேர்தல் பணிக்குழு பின்பற்றிய முறைகளை கனேடிய எதிர்கட்சித் தலைவரின் தேர்தல் குழுவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அதன்பின் 2010 -ல், தனது 20 -வது வயதில், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் சட்டம் படிக்கத் துவங்கியுள்ளார்.

இதற்கிடையே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆளுமைத் திறனை மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்யும் முறைகள் குறித்து ஆராய்ந்து வந்தனர். மிஷேல் கோஷின்ஸ்கி மற்றும் டேவின் ஸ்டில்வெல் ஆகிய இம்மாணவர்கள் 2007 -ம் ஆண்டு வாக்கில் முகநூல் செயற்களனில் (Facebook Platform) இயங்கும் செயலிகள் சிலவற்றை உருவாக்கினர். இதில் மைபெர்சனாலிட்டி (Mypersonality) எனும் வினாடி-வினா செயலி வைரலாக பரவுகின்றது.

உளவியலில் பின்பற்றப்பட்டு வந்த சோதிப்பு முறையான வெளிப்படைத்தன்மை, எச்சரிகைத்தனம், வெளிப்படுத்தும் முறை, ஒப்புக்கொள்ளும் தன்மை, நியோரோடிசம் (Openness, conscientiousness, extroversion, agreeableness and neuroticism – OCEAN) போன்றவற்றை மைபெர்சனாலிட்டி செயலியில் கேட்கப்பட்ட கேள்விகள் அடிப்படையாக கொண்டிருந்தன. இதில் பங்கேற்றவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தங்களது தனிப்பட்ட தகவல்களை அளிக்க முன் வந்திருந்தனர்.

தமது ஆராய்ச்சிகள் குறித்தும், சமூக வலைத்தளங்களில் பெற்ற மின்தரவுகளைக் கொண்டு மனிதர்களை உளவியல் ரீதியில் பகுத்தாய்வது குறித்தும் இவ்விரு மாணவர்களும் தாக்கல் செய்த ஆராய்ச்சிக் கட்டுரை மிக முக்கியமானது.

டேவின் ஸ்டில்வெல் (இடது) மற்றும் மிஷேல் கோஷின்ஸ்கி

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களை அதிகம் கவர்ந்ததென கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகதின் உளவியல் துறையின் உறுப்பினர் ஒருவர் கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடும் போது, “நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதுவாக மாறுகிறீர்கள் என்று சொல்வார்கள்.. இந்த ஆராய்ச்சியின் தன்மைகள் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கு விவரிக்கப்பட்டன. ஆராய்ச்சியின் போது சில ஆச்சர்யமான விசயங்கள் தெரியவந்தன. உதாரணமாக, முகநூலில் உள்ள “நான் இசுரேலை வெறுக்கிறேன்” என்கிற பக்கத்தை விரும்பியவர்கள் பெரும்பாலும் நைக் ஷூக்களையும், கிட்கேட் சாக்லேட்டுகளையும் விரும்புகிறவர்களாக இருந்தனர்” என்றுள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் மிகப் பெரிய ஒப்பந்த நிறுவனமான போயிங் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய ஆராய்ச்சிப் பிரிவு (DARPA – Defence Advanced Research Projects Agency) போன்றவர்கள் கோஷின்ஸ்கியின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி அளித்துள்ளன. 2013 -ம் ஆண்டில் கோஷின்ஸ்கியின் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட பின் அதில் கிறிஸ்டோபர் வைலியும் ஆர்வம் காட்டுகிறார்.

2011 -ம் ஆண்டு நடந்த கனேடிய தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றியும், லிபரல்கள் மற்றும் டெமாக்ரேட்டுகளின் தோல்வியும் கிறிஸ்டோபர் வைலியிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியிருந்தன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்து வந்த ஆராய்ச்சிகளை தேர்தல் கணிப்புகளுக்குப் பயன்படுத்துவது குறித்து கிறிஸ்டோபர் வைலி யோசிக்கத் துவங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு 24 வயது.

கனேடிய லிபரல் மற்றும் டெமாக்ரேட் அரசியல்வாதிகளுடன் கிறிஸ்டோபர் வைலிக்கு இருந்த தொடர்புகளின் மூலம் அவர் எஸ்.சி.எல் குழுமத்தோடு பரிச்சயமாகிறார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா என்கிற நிறுவனத்தை எஸ்.சி.எல் குழுமம் துவங்கிய போது அதில் கிறிஸ்டோபர் வைலி இடம் பிடித்துக் கொண்டார். எஸ்.சி.எல் குழுமம் அச்சமயத்தில் தனது உளவு மற்றும் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக மீப்பெரும் மின்தரவுகளின் அடிப்படையிலான உளவியல் போர்முறைகளை (Psychological operations or psyops) உருவாக்கி வந்தது.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் வதந்திகள், தவறான தகவல்கள், உண்மைகளை மறைப்பது உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் தரவு ரீதியிலான மேலாண்மையை (informational Dominance) ஏற்படுத்தி அதன் மூலம் மக்களின் மனங்களை தாம் விரும்பியபடி மாற்றுவது இந்தப் போர்முறையின் அம்சம். இதனோடு மீப்பெரும் மின்தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் மனோவியல் பாகுபடுத்தல்களைச் (Profiling) செய்வது, பின் அதைத் தேர்தல்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது என்கிற போக்கில் கிறிஸ்டோபர் வைலி செயல்படத் துவங்கினார். அடுத்த சில மாதங்களிலேயே அமெரிக்க ரிபப்ளிகன் கட்சியின் புரவலர்களில் ஒருவரான ஸ்டீவ் பேனோனின் தொடர்பு கிறிஸ்டோபர் வைலிக்கு கிடைக்கிறது.

ராபர்ட் மெர்சர்

ஸ்டீவ் பேனோனின் மூலம் மற்றுமொடு வலதுசாரி சார்பு முதலாளியான ராபர்ட் மெர்சரின் அறிமுகம் கிறிஸ்டோபர் வைலிக்கும் எஸ்.சி.எல் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் அலெக்சாண்டர் நிக்ஸ்க்கும் கிடைக்கிறது. ராபர்ட் மெர்சர் ஏற்கனவே செயற்கை நுண்ணறிதிறன் மூலம் ஹெட்ஜ் பண்ட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் 2014 -ம் ஆண்டில் மிஷேல் கோஷின்ஸ்கியும் டேவின் ஸ்டில்வில்லும் மற்றுமொரு ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றனர். “கணினி அடிப்படையிலான ஆளுமை மதிப்பீட்டு முறைகள் மனிதர்களால் செய்யப்படும் மதிப்பீடுகளை விடத் துல்லியமானவை” எனும் தலைப்பில் வெளியான இந்த ஆராய்ச்சிக் கட்டுரை கிறிஸ்டோபர் வைலிக்கும் அலெக்சாண்டர் நிக்சுக்கும் மேலும் புதிய வாசல்களைத் திறந்து விடுகின்றது.

ஆனால், இந்த ஆராய்ச்சிகளை எல்லாம் நடைமுறையில் பரிசோதிக்க மின்தரவுகள் தேவையாய் இருந்தன. இதற்காக எஸ்.சி.எல் நிறுவனம் அலெக்சாண்டர் கோகன் என்பவரால் நடத்தப்பட்டு வந்த குலோபல் சையன்ஸ் ரிசர்ச் என்கிற நிறுவனத்தை 2014 -ம் ஆண்டு மத்தியில் அணுகுகின்றது. கோகனின் நிறுவனம் திஸீஸ்மைடிஜிடல்லைஃப் (thisismydigitallife) எனும் ஆளுமையைப் பரிசோதிக்கும் வினாடி-வினா செயலி ஒன்றை உருவாக்குகின்றது. இதன் மூலம் அந்தச் செயலியில் பங்கேற்பவர்கள் மட்டுமின்றி அவர்களின் முகநூல் நண்பர்கள் பட்டியலில் இருந்த பயனர்கள் உள்ளிட்டு சுமார் 5.12 கோடி அமெரிக்க பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கின்றனர்.

இவ்வாறு சேகரிக்கப்படுவது “சட்டவிரோதம்” அல்ல; ஆனால், அவற்றை அந்த விவரங்களுக்குச் சொந்தக்காரர்களான முகநூல் பயனர்கள் அறியாமல் மற்றொரு நிறுவனத்திற்கு கைமாற்றி விடுவது சட்டவிரோதம் என்கிறது இங்கிலாந்தின் சட்டம். கோகனின் செயலி தம்முடைய சர்வர்களில் இருந்து விவரங்களை இழுத்துக் கொண்டிருப்பதைக் கண்ட பேஸ்புக் நிர்வாகிகள், கோகனிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு கோகன், தான் மின்தரவுகளை “ஆராய்ச்சிப் பணிகளுக்காக” சேகரிப்பதாக விளக்கம் அளித்தவுடன் பேஸ்புக்கின் நிர்வாகிகள் திருப்தியடைந்துள்ளனர்.

அலெக்சாண்டர் கோகனின் நிறுவனத்தின் மூலம் மின்தரவுகளைப் பெற்றுக் கொண்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, அதன் மேல் கோஷின்ஸ்கி மற்றும் டேவிட் ஸ்டில்வெல் ஆகியோரின் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு கிறிஸ்டோபர் வைலி உருவாக்கிய மின்தரவுப் பகுப்பாய்வுக்கான செய்நிரல்களைக் கொண்டு ஆய்வு செய்கின்றது. இந்த ஆய்வின் முடிவுகளின் படியே ட்ரம்பின் தேர்தல் பணிக்குழுவுக்கு எந்த வாக்காளரை எப்படிக் கவரலாம், ட்ரம்பைக் குறித்து நேர்மறை எண்ணங்களை உருவாக்க எம்மாதிரியான உத்திகளைக் கையாள்வது உள்ளிட்ட விவரங்கள் தெரியவருகின்றது.

இதில் ரஷ்ய தொடர்பு எங்கிருந்து வந்தது?

அமெரிக்க அரசின் நலன்களுக்கும், ரசிய நலன்களுக்கும் பொருளாதாரம், புவிசார் அரசியல், இராணுவம் உள்ளிட்ட தளங்களில் உள்ள முரண்பாடுகளும், இவ்விரு நாடுகளுக்குள் உள்ள ஏகாதிபத்திய போட்டியும் அனைவரும் அறிந்த இரகசியங்கள் தான். எனவே, அதிபர் பதவியில் இருப்பது டொனால்ட் ட்ரம்ப்பா அல்லது ஹிலாரி கிளிண்டனா என்பதை மட்டும் கொண்டு இவ்விரு நாடுகளுக்கிடையே இருக்கும் முரண்பாடுகளோ அல்லது சமநிலையோ தீர்மானிக்கப்படாது. அமெரிக்க மற்றும் இரசிய முதலாளித்துவ நலன்களையே அதிபர் நாற்காலியில் உள்ள எவராக இருந்தாலும் பிரதிபலித்தாக வேண்டும்.

ரசிய அதிபர் புடினுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இவையெல்லாம் இருந்தாலும் கூட ஹிலாரி கிளிண்டனுக்கும் (அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அமெரிக்க முதலாளித்துவ பிரிவினருக்கும்) இரசியாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதில் டொனால்டு ட்ரம்ப்பைக் காட்டிலும் அதீத ஆர்வம் இருந்தது. தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து வந்த நிலையிலேயே இது அப்பட்டமாக எதிரொலிக்கவும் செய்தது. ரசியா விவகாரங்களைப் பொறுத்தவரை, தேர்தல் பிரச்சாரங்களின் போது டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக மிதவாத நிலையையும் ஹிலாரி கிளிண்டன் தாக்குதல் நிலையையும் எடுத்தனர். தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிகார வர்க்கத்தினரிடையே ஹிலாரி கிளிண்டன் போர் வெறி மிகுந்தவர் (Hawkish) என்று அறியப்பட்டிருந்தார்.

நேரடியாகவும் திரைமறைவு இராஜதந்திர ரீதியிலும் ஹிலாரி கிளிண்டனின் தோல்வியில் ரசியாவுக்கு ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் வெளியான தனது பேட்டிகளில் இரசிய அதிபர் புடின் இதை (ட்ரம்பின் வெற்றியில் இரசியாவுக்கு உள்ள ஆர்வத்தை) வெளிப்படையாகவே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து வந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டன. இது ஹிலாரி கிளினடனுக்கு தேர்தலில் கடும் பின்னடைவை உண்டாக்கியது. இந்நடவடிக்கையின் பின் இரசிய ஹேக்கர்கள் இருந்தார்கள் என ஜனநாயகக் கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

இன்னொரு பக்கம் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அமெரிக்க அடையாளங்களோடு போலி பயனர் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் அமெரிக்க வாக்காளர்களிடையே ஹிலாரிக்கு எதிரான மனப்போக்கை ஏற்படுத்தியதிலும் இரசியாவின் பங்கு உள்ளதென குற்றம்சாட்டப்பட்டது. தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க் எப்.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றது.

இப்போது நாம் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரத்திற்கு வருவோம்.

ஜி.எஸ்.ஆர் நிறுவனத்தை உருவாக்கிய அலெக்சாண்டர் கோகன், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரியும் அதே நேரம் இரசியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்திலும் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். மேலும், இரசிய அரசாங்கத்திடம் இருந்து “சமூக வலைத்தளங்களில் அழுத்தம், மனநலம் பேணுவது” குறித்த ஆய்வுகளுக்காக நிதியுதவியும் இவருக்குக் கிடைத்துள்ளது.

மேலும், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இரசியாவின் இரண்டாவது பெரிய எண்ணை நிறுவனமான லூக் ஆயில் (Lukoil) நிறுவனத்தை அணுகியுள்ளது. அதாவது அமெரிக்க வாக்காளர்கள்களின் தெரிவுகள் லூக் ஆயில் நிறுவனத்தின் வணிக நலன்களை எவ்வாறு பாதிக்கும் அல்லது நலன்பயக்கும் என்பதை தமது நிறுவனம் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் பகுத்தாய்ந்து சொல்ல முடியும் என்று கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா முன்வைத்துள்ளது. இங்கே லூக் ஆயில் நிறுவனத்தின் தலைவர் வாகிட் அலெக்பெரோவ் முன்னாள் சோவியத் அமைச்சர் என்பதோடு புடினின் நெருங்கிய நண்பரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

லூக் ஆயில் நிறுவனத்துடன் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா பகிர்ந்து கொண்ட ஆவணங்களில் “கிசுகிசு பிரச்சாரங்களின்” மூலம் 2007ம் ஆண்டு நைஜீரிய தேர்தலில் தலையீடு செய்தது உள்ளிட்ட தமது பராக்கிரமங்களை பட்டியலிட்டிருந்தது. லூக் ஆயில் நிறுவனம் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவுக்கு தேர்தல் ஒப்பந்தங்கள் அளித்ததற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை எனினும், தேர்தல் முடிவுகளை இவ்வாறான முறைகளின் மூலம் விரும்பிய திசைக்கு மடைமாற்றலாம் என்கிற ஆலோசனைகளை வழங்கியுள்ளது நிரூபணமாகியுள்ளது.

இதன் மூலம் அமெரிக்க தேர்தலில் இரசிய தலையீடு என்பது குறித்த விவாதங்கள் தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஊடகங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் இந்திய தேர்தல்களில் தலையிட்டது குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

(தொடரும்)

– சாக்கியன்

முதல் பாகத்துக்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க