privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகமல் - ரஜினி அரசியல் வருகை : மதுரை கருத்தரங்க செய்தி

கமல் – ரஜினி அரசியல் வருகை : மதுரை கருத்தரங்க செய்தி

-

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை சார்பில் 24.03.2018 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மதுரை மூட்டா அரங்கத்தில் பேராசிரியர் அ.சீனிவாசன் (தலைவர் ம.உ. பா.மையம், மதுரை மாவட்டக் கிளை) அவர்கள் தலைமையில் “கமல்-ரஜினி அரசியல் வருகை புதுவசந்தமா? புஸ்வாணமா?” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடந்தது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் நாடகத் துறை மேனாள் தலைவர் பேராசிரியர் மு.ராமசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பேரா அ. சீனிவாசன் தனது தலைமை உரையில், “திரைப்படக் கலைஞர்களின் அரசியல் வருகை தமிழகத்துக்கு எந்த புது வசந்தத்தையும் தந்துவிடப் போவதில்லை. அதே நேரத்தில் அது புஸ்வாணமும் இல்லை. அரசியல் என்பது அவர்களுக்கு வேண்டுமானால் புது வசந்தமாகவும் இருக்கலாம் அல்லது புஸ்வாணமாக மாறலாம். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்., ஜெயா எல்லாம் அரசியலில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றியதைப் போல் நாம் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர்கள் நினைக்கிறார்கள், அது தவறில்லை. ஆனால் இதில் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

1980 -ல் புற்றீசல்கள் போல் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்கள் தோன்றியதற்கும் சாராய வியாபாரிகள் எல்லாம் கல்வி வள்ளல்களாக மாறி கல்வி, வணிக மையமாக ஆனதற்கும் காரணம் எம்.ஜி.ஆர் தான். ஜெ.ஆட்சிக்கு வந்த பின்பும் பெரிய மாற்றம் எதுவும் வந்து விடவில்லை. முதல்வராக இருந்த போதே சிறைக்குச் சென்ற அவமானமே நிகழ்ந்தது. இவர்களைப் போல நாமும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கமலும், ரஜினியும் நம்புகின்றனர். காசு கொடுத்தால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று நம்புகின்றனர். ரஜினி பேசும் ஆன்மிக அரசியல் ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து எந்த அளவிற்கு வேறுபட்டது என்று தெரியவில்லை. கமலும் – ரஜினியும் மக்களின் பிரச்சனைக்காக இதுவரை போராடியதும் இல்லை; குரல் கொடுத்ததும் இல்லை. ஆனால் தமிழக மக்களை ஆள வேண்டும் என்ற ஆசை மட்டும் அதிக அளவில் இருக்கிறது.”

பேராசிரியர் மு.ராமசாமி ஆற்றிய உரையின் சுருக்கம் :

“இங்கே கூடியிருக்கும் பலரும் மாற்று அரசியலுக்காக நிற்பவர்கள் என்பது தெரியும். 7 பேர் இருந்தால் சங்கம் வைத்துக்கொள்ளலாம் என்பது போல யார் வேண்டுமானலும் அரசியல் கட்சி தொடங்கலாம். எனவே அவர்கள் இருவரும் கட்சி தொடங்குவதில் தவறில்லை. ஆனால் அவர்களுக்குப் பின்னால் ஒரு மதவாத சக்தி இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அவர்கள் அதை மறுத்தாலும் அவர்களது நடவடிக்கைகள் அவர்களை அடையாளம் காட்டுகிறது. இருவரும் எதிரெதிர் கருத்துக்களைக் கூறுகின்றனர். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பா.ஜ.க.வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் சந்தேகியுங்கள் என்று மார்க்ஸ் கூறியது போல நாமும் எல்லோரையும் சந்தேகிக்கின்றோம். இவர்களையும் சந்தேகிக்கின்றோம்.

எம்.ஜி. ஆரைப் போல ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள். நான் எம்.ஜி.ஆரின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். திரைப்படத்தில் அவர் ஒழுக்கத்தைப் போதித்தார். தனிமனித ஒழுக்கத்தைத் திரைப்படங்களில் காட்டினார். படங்களில் சிகரெட் குடிப்பதில்லை, தண்ணி அடிப்பதில்லை. ஏழை எளிய மக்களின் காவலனாக மட்டுமே நடித்தார். பொதுவுடைமைக் கருத்துக்களை, திராவிடக் கருத்துக்களைத் தனது படங்களில் பாடல்களில் சொன்னார். ஆனால் இந்த நடிகர்களின் படங்களில் எந்த ஒழுக்கத்தையும் காண முடியவில்லை; பார்த்ததில்லை.

சிங்கப்பூர் மருத்துவமனையில் படுத்துக் கிடக்கும் போது தான் யாரும் குடிக்காதீர்கள் என்று இவர் அறிவுரை சொல்கிறார். கல்லூரி விழா ஒன்றில் மாணவர்கள் யாரும் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லிவிட்டு அந்த விழாவில் முழுக்க முழுக்க அவர் அரசியல் மட்டுமே பேசினார். வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பதாகச் சொல்கின்றனர். வெற்றிடம் என்பது கிடையாது. அது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. அவர்களது மனதுக்குள் தான் வெற்றிடம் உண்டாகிவிட்டது. எனவே தான் அதிகார மையத்துக்குள் வர ஆசைப்படுகின்றனர்.

தந்தை பெரியார் சொன்னார் “ ஈ.வெ.ரா -வாகிய நான் திராவிட சமூகத்தை அறிவும் மானமும் உள்ள சமூகமாக மாற்றுவதற்காகவே வருகிறேன். இதற்கு யோக்கியதை எனக்கு இருக்கிறதா என்றால் இதை வேறு யாரும் செய்ய முன்வராத காரணத்தால் இந்தச் சுமையை என் தலையில் தூக்கி வைத்துள்ளேன். சூத்திர சமூகத்தை மானமும் அறிவும் உள்ள சமூகமாக மாற்றுவதே என் கடமை. இதை எப்படி செய்யப் போகிறாய் என்ற கேள்விக்கு எனக்கு இதைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை” என்றார். இந்த சமூகத்தை மானமும் அறிவும் பகுத்தறிவும் உள்ள சமூகமாக மாற்றுவதைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை என்று பெரியார் சொன்னாரே அதைப் போன்று இவர்களால் சொல்ல முடியுமா ? திராவிட இயக்கம் சமூக நீதி பற்றிப் பேசியது.

ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவது பற்றிப் பேசியது. ஆனால் இந்த நடிகர்களின் நோக்கம் என்ன? செயல் திட்டம் என்ன? என்று எதுவும் தெரியாது. ராமனின் செருப்பை வைத்து ஆட்சி செய்ததைப் போல மீண்டும் நாம் ஆட்சிக் கட்டிலில் உட்காரலாமா என்று ஒரு பாதுகை நினைத்ததாக ஒரு கவிதை உண்டு. அதைப் போல் இவர்களும் நினைக்கிறார்கள். அவர்களது கொள்கைகளை அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். தெளிவான பார்வை வேண்டும் .

எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்கு ஒரு விலை இருக்கும். ஆனால் சினிமா டிக்கெட்டில் விலை கிடையாது. எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்ற கணக்கு கிடையாது. நுழைவுக் கட்டணத்தையே கேள்வி கேட்க முடியாத இவர் சிஸ்டத்தை சரி செய்யமுடியுமா? இன்று இருக்கிற சிஸ்டத்தை தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு புதிய சிஸ்டத்தை அந்த இடத்தில் வைப்பதைப் பற்றி பேச வேண்டும். ஆனால் இவர் சொல்கிற சிஸ்டம் மாற்றம் என்பது குப்பையை மட்டும் மாற்றிப் போடுவது தான். இவரை ஆதரிப்பவர்கள் ரசிகர்கள். ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கலாம். அதை இவர்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முனைகின்றனர். இந்த அமைப்பே அவர்கள் பிழைப்பதற்கான வழியைத் திறந்துவிடும். எங்கள் தலை மீது ஏறி அதிகாரம் செய்ய வருவீர்களானால் உங்கள் கொள்கை, கோட்பாடுகளைச் சொல்ல வேண்டும். சாதி மதவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளில் ஈடுபட வேண்டும், ஊழியம் செய்யவேண்டும்.

அரசியல் என்பது அதிகாரத்தை நோக்கிய நகர்வு. அரசு கட்டமைப்பு ஒரு சார்பானது. கார்ல் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றிப் பேசினார். தந்தை பெரியார் பார்ப்பன பனியாக்களது அதிகாரத்துக்கு எதிராக சூத்திர சாதிகளின் எழுச்சியைப் பற்றிப் பேசினார். அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சாதிகளின் விடுதலைக்காகப் போராடினார். அவர்கள் தாங்கள் யாருக்காக நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்தினர். இப்படி சமூகம் இரண்டு தரப்பாக நிற்கிறது. இதில் யார் பக்கம் நிற்கிறோம் என்று சொல்ல வேண்டும்.

மையம் என்று ஒன்றும் இல்லை. ஆன்மீக அரசியல் என்று சொல்லும் போது இந்துத்துவா அரசியல் தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்து வருகிறது. அதற்கும் இந்த ஆன்மீகத்துக்கும் என்ன வேறுபாடு என்று சொல்ல வேண்டும். எந்த தெளிவும் இல்லாமல் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று மட்டும் ஆசைப்படுவது சரி இல்லை. அரசியல் அதிகாரம் பற்றி மாபெரும் சிந்தனையாளர்களின் தெளிவான கோட்பாடுகள் இருக்கும் நிலையில் கூட அதில் பல்வேறு கருத்து மாறுபாடுகள், கட்சிகள், இயக்கங்கள் இருந்துவரும் சூழலில், கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றிக் கனவுகாண்பது வேடிக்கையானது.

தஞ்சை மாவட்டத்தில் சுவரெழுத்து சுப்பையா என்ற ஒரு தி.க. தோழர் இருந்தார். அவர் தனது கை விரலில் துணியைக் கட்டி அதை நெருப்பில் பற்றவைத்து தாரில் முக்கி சுவரில் எழுதுவார். பெரியாரின் சிந்தனைகளை ஒரு சுவர் விடாமல் எழுதினார். பெரியாரின் சிந்தனைதான் எனது முகம், வேறு முகம் எனக்குக் கிடையாது என்று சொன்னார். வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், மலேசியா கணபதி, களப்பால் குப்பு, சீனிவாசராவ் போன்றவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். கன்னடத்துப் பார்பனரான சீனிவாசராவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிற தோழர்களும் விவசாய சங்கத்தில் இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களுடன் தோளோடு தோளாக நின்று போராடினர். அவர்களுக்காக உரிமைக் குரல் எழுப்பினர்.

ஆம்பலாப்பட்டு ஆறுமுகத்துக்கு நேராகத் துப்பாக்கி நீண்டபோது எனது உயிர் எனது மயிருக்குச் சமம் என்று நெஞ்சை நிமிர்த்திக் காட்டினார். மே 5 காரல்மார்க்ஸ் பிறந்த தினத்தன்று ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் இரணியனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார்கள். இவர்களோ மையத்தில் நிற்கின்றனர். ஆனால் நம்மை மார்க்சியமும் பெரியாரியமும் தான் உருவேற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களது அரசியல் வருகை வசந்தமா புஸ்வாணமா என்பதல்ல. சரியா? தவறா? என்று தான் பார்க்க வேண்டும் .

பேராசிரியர் முராவின் உரைக்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிட இயக்கங்கள், எம்.ஜி.ஆர்.பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு முரா பதில் அளித்தார். அனைவரும் இறுதி வரை இருந்து சிறப்பித்தனர்.

இறுதியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டப் பொருளாளர் மு.சங்கையாவின் நன்றி உரையுடன் அரங்கக் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. செல்பேசி : 94434 71003.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க