privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

-

ரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றோர்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க உச்சநீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடுத்திருந்தனர். அது கொள்கை விவகாரம் என்பதால் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஏற்கனவே பொருட்கள் தட்டுப்பாடு, இயற்கையை அழித்தல், வேலையின்மை, நோய்கள் இன்னபிற இத்யாதிகள் அனைத்திற்கும் மக்கள் தொகைப்பெருக்கத்தை காரணமாக காட்டி இதுபோன்ற பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுமென்றால் இது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால் மக்கள் தொகைப் பெருக்கத்தை பற்றி மால்தூசின் இந்திய வாரிசுகள் என்ன கூறுகிறார்கள் என்று நாம் பார்க்கத்தான் வேண்டும்.

பொருட்கள் பற்றாக்குறைக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமா ?

ஒரு ரொட்டியை இருவர் பகிர்ந்து கொள்வதை விட மூவர் பகிரும் போது அளவு குறைகிறது. எத்தனை பேர் பகிர்ந்து கொண்டாலும் இங்கே ரொட்டியின் அளவு நிலையானது. இதை மால்தூஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூறினாலும் அதை வரலாறு பொய்யாக்கி விட்டது. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப பொருட்கள் உற்பத்தியாவது அதிகரித்து கொண்டு தான் வருகிறது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் யார் பொருட்களை அதிகமாக நுகர்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது.

அமெரிக்காவின் மக்கள் தொகை உலகில் ஒரு விழுக்காடு தான். ஆனால் அவர்கள் நுகரும் படிம எரிபொருளின் அளவு உலகளவில் நான்கில் ஒரு பங்கு. இந்தியாவின் முதல் ஒரு விழுக்காட்டு பணக்காரர்கள் ஒட்டு மொத்த வளத்தில் பாதிக்கும் அதிகமாக கைப்பற்றி வைத்திருக்கிறார்கள்.

எனவே பிரச்சினை சோற்றுப் பருக்கைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் பெரும்பான்மையான ஏழைகளில் ஒட்டிய வயிறுகள் அல்ல, கூச்சநாச்சமில்லாமல் அகண்டு விரிந்திருக்கும் சிலரது வாய்கள் தான்.

வலுக் கட்டயமான மக்கள் தொகைக்கட்டுப்பாடு தேவையா ?

முன்பை விட சராசரி வயது அதிகரித்திருப்பதுடன் திருமணமாகும் வயதில் உள்ள இளைஞர்களும் அதிகம் உள்ளதால் இன்னும் சில பத்தாண்டுகள் மக்கள் தொகை பெருகத்தான் செய்யும். அதே நேரத்தில் இந்தியாவில் கருவுறும் விகிதமும் குறைந்து கொண்டே தான் வருகிறது.

பீகார், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்கண்டு உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் மாநிலங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் வட இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் இந்திய மாநிலங்கள் படிப்பறிவு, சுகாதார குறியீட்டில் மேம்பட்டு இருப்பது தான்.

தென் இந்திய மாநிலங்களில் தான் படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகளவில் உள்ளது. பொருளாதார ரீதியாக விடுதலை பெற்ற பெண்களால் தான் குழந்தை பெறுவதிலும் சொந்தமாக முடிவெடுக்க இயலும்.

எனில் சமூக பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடுதான் மக்கள் தொகையே ஒழிய நேர்மாறாக அல்ல.

சரி, இரண்டு குழந்தைகள் சட்டத்தை கொண்டு வந்தால் என்ன நடக்கும் ?

இந்திய சமூகம் பெண் குழந்தையை விட ஆண் குழந்தையை விரும்புவது; குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை இரண்டு குழந்தைகள் சட்டம் வந்தால் என்ன ஆகும்? சட்டரீதியாக கருக்கலைப்பை செய்யவியலாத சமூகம் மலிவான, ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற வழியில் பெண்களை கருக்கலைப்பு செய்யத் தூண்டும்.

2001 முதல் 2005 -ம் ஆண்டு வரை இரண்டு குழந்தைகள் சட்டம் அமலில் இருந்த ஆந்திர பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம்,ஒடிஸா மற்றும் இராஜஸ்தானில் இருதார மணம், பெண் குழந்தைகள் இறப்பு, கருவிலேயே குழந்தை பாலினத்தை தெரிந்து கொள்வது, குழந்தைகளை விற்பது உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் அதிகரித்தது வரலாறு.

மேலும் இப்படி வழக்கு போட்டுதான் கட்டாயத்தடை கொண்டு வரவேண்டும் என்றில்லை. மெலிந்தா-கேட்ஸ் அறக்கட்டளை மூலம் பாதுகாப்பில்லாமல் கருத்தடை செய்யப்பட்டு மரணித்த பெண்கள் குறித்த கட்டுரைகள் ஏற்கனவே வினவில் வந்துள்ளது.

மூன்றாவது குழந்தை பிறந்தால் அரசு என்ன செய்ய வேண்டும் ?

அனைத்து அரசு உதவிகளும் மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது ஒரு வழக்கு. மூன்றாவது குழந்தைக்கு இலவச கல்வியைக் கொடுக்கக்கூடாது என்றும் இலவச காப்பீட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் ‘தவறிழைத்த’ பெற்றோர்களுக்கு அரசு வேலை கொடுக்க கூடாது மற்றும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்துகிறது.

இரண்டு குழந்தை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்து மாநிலங்களில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தினர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாமல் பாதிக்கப்பட்டதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதை இந்த வழக்குகள் முன்மொழிகின்றன.

ஆனால் ஏழை எளிய மக்களுக்கான பெரும்பாலான மானியங்கள் ஏற்கனவே ஆதார் என்ற பெயரில் பறிக்கப்பட்டப்பிறகும், அரசு பள்ளிகளை தரமற்றதாக்கிவிட்ட பிறகும், அரசு வழங்கும் விலையில்லா காப்பீட்டின் புருஷ இலட்சணத்தை சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தியப் பிறகும் மானியம், விலையில்லா கல்வி, இலவச காப்பீடு என்று கூப்பாடு போடுகிறார்கள் இந்த எத்தர்கள்.

பரந்துப்பட்ட மக்களுக்கான சமூகப்பொருளாதார முன்னேற்றம் தான் தீர்வு :

ஒரு குழந்தைச் சட்டத்தை சீனா செயல்படுத்தியிருந்தாலும் பொருளாதாரத்திற்கு சிக்கல் என்றானப் பிறகு அதை நீக்கி விட்டது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அத்தகைய சட்டங்கள் எதுமில்லாமலேயே கருவுறும் விகிதமும் மக்கள் தொகையும் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளன.

எனவே பரந்துபட்ட மக்களுக்கான சமூகப் பொருளாதார முன்னேற்றம் மட்டுமே மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுக்குள் வைக்குமே ஒழிய மால்தூஸ் வாரிசுகளின் வெற்றுப் புலம்பல்கள் அல்ல.

மேலும் :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க