privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஇந்தியத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் பங்கு என்ன ?

இந்தியத் தேர்தலில் கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் பங்கு என்ன ?

-

கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் ! பாகம் 3

ந்தியாவின் பீகார் மாநிலத்தில் 2010 -ம் ஆண்டு நடந்த மாநிலத் தேர்தலின் போது வாக்காளர்களை மிக ஆழமாக ஆய்வு செய்யும் ஒப்பந்தம் எமக்கு கிடைத்தது. இதில் மையமான சவால் என்னவென்றால், 15 ஆண்டுகால மோசமான ஆட்சிக்குப் பின் ஏழ்மையும் மாநிலத்தின் பின் தங்கிய நிலையும் மாறாத நிலையில் ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்குகளில் எத்தனை சதவீதம் மாறிச் செல்லும் என்பதைக் கணிப்பது தான்.

எங்களுடைய ஆராய்ச்சிகளைத் தாண்டி கிராம அளவில் கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தி அதன் மூலம் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் தகவல் தொடர்பு சங்கிலி ஒன்றை உருவாக்கும் பணியையும் நாங்கள் மேற்கொண்டோம். முடிவில் எமது வாடிக்கையாளர் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். அதில் நாங்கள் குறிவைத்து வேலை செய்த தொகுதிகளில் 90% சதவீத வெற்றியைப் பெற்றிருந்தார்.

– கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா இணையதளத்தில் இருந்து…

*****

வனிஷ் குமார் ராய் பீகாரைச் சேர்ந்தவர். சொந்தமாக எந்த கொள்கையோ கோட்பாடோ இல்லாத அவனிஷ், பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக தேர்தல் ஆலோசகராக 1984 முதல் செயல்பட்டு வந்தார். 2009 -ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கவுதம் புத்தா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மகேஷ் சர்மாவுக்காக தேர்தல் ஆலோசகராக வேலை பார்த்தார். எதிர்பாராதவிதமாக அந்த தேர்தலில் மகேஷ் சர்மா 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைகிறார். மகேஷ் ஷர்மா தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் சர்மா

அவனிஷ் குமார் ராயால் இந்த தோல்வியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. லண்டனைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவரிடம் இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்து அவனிஷ் குமார் பேசிக் கொண்டிருந்த போது அவர் எஸ்.சி.எல் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். வாக்காளர்களின் அரசியல் தீர்மானங்களை கண்டுபிடிப்பதில் எஸ்.சி.எல் நிறுவனத்திற்கு உள்ள திறமைகள் குறித்து தனது நண்பரின் மூலம் கேள்விப்படும் அவனிஷ் குமார், அந்நிறுவனத்தின் தேர்தல் பிரிவு தலைவரான டேன் முரேசனைத் தொடர்பு கொள்கிறார். ரொமானியரான முரேசன், எஸ்.சி.எல் நிறுவனத்தின் வேறு மூன்று தேர்தல் வல்லுநர்களோடு இந்தியா வந்து சேர்கிறார். இவர்களது நோக்கம் கவுதம் புத்தா நகர் தொகுதியில் மகேஷ் சர்மா தோல்வியடைந்தது எப்படி என்பதைக் கண்டு பிடிப்பதே.

முரேசனும், அவருடன் வந்த குழுவும் மொழிபெயர்ப்பாளர்களுடன் கவுதம் புத்தா நகருக்கு நேரடியாகச் சென்றனர். அங்கே வாக்காளர்களை நேரில் பார்த்து பேட்டியெடுத்தனர். சுமார் ஒரு மாத காலம் கள ஆய்வு செய்த பின் எடுக்கப்பட்ட வீடியோக்களை முக அசைவுச் சோதனைக்கு உட்படுத்தி, அவற்றில் பேசிய வாக்காளர்கள் பொய் சொன்னார்களா என்பதை உறுதி செய்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் சில ஆச்சரியமான உண்மைகள் வெளியாகின.

கவுதம் புத்தா நகர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மகேஷ் சர்மாவை ஒரு அரசியல்வாதியாகவோ, மருத்துவராகவோ (அவருக்கு நோய்டாவில் பெரிய மருத்துவமனை இருந்தது) பார்க்கவில்லை. மாறாக, அவர் ஒரு பணக்கார தொழிலதிபர் என்றே பார்த்துள்ளனர். மேலும் வாக்காளர்களைக் கவர்வது போன்ற உத்திரவாதங்களை வழங்காமல் பொத்தாம் பொதுவாக உங்களுக்குச் சேவை செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், மகேஷ் சர்மாவின் பிராமண உதவியாளரின் மேல் அந்த தொகுதியின் சில பகுதிகளில் இருந்த பிராமண வாக்காளர்களுக்கு அதிருப்தி இருந்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் மொத்தமாக பி.எஸ்.பிக்கு வாக்களித்துள்ளனர்.

மகேஷ் சர்மாவின் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய உதவிய லண்டன் குழுவினரின் தொழில் நேர்த்தி அவனிஷ் குமாருக்கு திருப்தியளித்துள்ளது. அவனிஷ் குமார் தனது நண்பரும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் ஒருவரின் மகனுமான அம்ரிஷ் தியாகியுடன் சேர்ந்து அவலெனோ பிசினஸ் இண்டெலிஜன்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்களை சாதி, மத, இன, மொழி மற்றும் அவர்களது அரசியல் தேர்வுகள் வாரியாக வகைபிரிக்கும் வேலையில் அவனிஷ் குமார் ஈடுபட்டிருந்தார். 2010 -ம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் முரேசனைத் தொடர்பு கொள்ளும் அவனிஷ் குமார், எஸ்.சி.எல் நிறுவனத்தோடு கைகோர்த்துக் கொண்டு அம்மாநில தேர்தலில் பா.ஜ.க – ஜனதாதளம் கூட்டணிக்காக வேலை செய்கிறார்.

2011 -ம் ஆண்டு தில்லிக்கு வரும் முரேசனும் அலெக்சாண்டர் நிக்சும் இந்தியத் தேர்தலில் மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வு மற்றும் அதனடிப்படையில் வாக்காளர்களை வகை பிரிப்பது என்கிற தமது தொழில் திறமைகளை காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதாவிடம் கடை விரிக்கின்றனர். சாதி வாரியான ஆய்வுகள், வாக்காளர்கள் வகைப்படுத்தல், பண்பின் அடிப்படையில் வாக்களிக்கும் முறை, ஊடகங்களைக் கையாள்வது, வாக்காளர்களை குறிவைத்து பிரச்சார திட்டம் வகுப்பது, வாக்குச்சாவடி மேலாண்மை உள்ளிட்ட திறமைகள் தம்மிடம் இருப்பதாக கூறிக் கொண்டு இரண்டு முதன்மைக் கட்சிகளையும் இவர்கள் அணுகியுள்ளனர்.

2013 -ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன் காங்கிரசு கட்சி சார்பாக தேர்தல் காண்டிராக்டை வென்றுவிட வேண்டும் என்பதே நிக்சின் நோக்கமாக இருந்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆளும் கட்சியாக இருப்பதால் காசு செலவழிப்பதில் காங்கிரசு கஞ்சத்தனம் பார்க்காது என நிக்ஸ் கருதியுள்ளார்.

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவுக்கு தேர்தல் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு காங்கிரசு இழுத்தடித்து வந்த நிலையில், அமேதி, ராய்பரேலி, ஜெய்பூர் புறநகர் மற்றும் மதுபானி ஆகிய நாடளுமன்றத் தொகுதிகள் குறித்து தனித்தனியே ஆவணங்களைத் தயாரித்து இலவசமாக கொடுத்துள்ளது எஸ்.சி.எல். இந்த ஆவணங்களில் மேற்படி தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் சாதி, மத பிரிவுகள், அவர்களின் அரசியல் சார்புகள், ஒவ்வொரு பகுதியின் (தெருக்கள் உள்ளிட்டு) குறிப்பான பிரச்சினைகள் என விரிவாக பட்டியலிடப்பட்டு அவர்களைக் கவர்வதற்கு எம்மாதிரியான வாக்குறுதிகள் கொடுக்க வேண்டும் என்கிற ஆலோசனைகளும் இருந்துள்ளன. இந்த இலவச சேவையால் காங்கிரசைக் கவர காய் நகர்த்திக் கொண்டிருந்த அதே நேரம் பாரதிய ஜனதாவுக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மூலம் பாரதிய ஜனதாவையும் அணுகியுள்ளனர். பாரதிய ஜனதாவின் மிஷன் 272-க்கான கால் சென்டர்களை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் இந்திய கூட்டாளி அவலென்கோ நிர்வகித்தது என பின்னர் வெளியான தகவலை இங்கே பொருத்திப் பார்த்தால், எஸ்.சி.எல் பா.ஜ.கவுக்காக காங்கிரசை டபுள் கிராஸ் செய்ய முயற்சித்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.

இதற்கிடையே கென்யாவில் 2013 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் இதே போன்ற பித்தலாட்ட வேலைகளைச் செய்ய சென்ற முரேசன், அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் உயிரற்ற உடலாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். டான் முரேசனின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து காலியான பணியிடத்திற்குத் தான் தற்போது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவை அம்பலப்படுத்திய கிறிஸ்டோபர் வைலி தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும், தான் இறப்பதற்கு முன் கென்ய தேர்தலில் துணை பிரதமராக இருந்த உகுரு கென்யாட்டாவுக்காக பணிபுரிந்துள்ளார் முரேசன். அதன் பின்னர் 2013 -ம் ஆண்டு நடந்த கென்ய தேர்தலில் உகுரு முராட்டா வென்று பிரதமாராக பதவியேற்றார்.

எஸ்.சி.எல். -ன் இந்திய கூட்டாளியான அவெலென்கோ நிறுவனம், பாரதிய ஜனதாவுக்காக நான்கு தேர்தல்களில் பணியாற்றியுள்ளது. குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் மிஷன் 272+ திட்டத்திற்காக கால் சென்டர்களை ஏற்படுத்துவது, தொகுதி வாரியாக வாக்காளர்களை வகைபிரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்துள்ளனர். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்காக அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்காகவும் அவலெனோ பணிபுரிந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க வாழ் இந்தியர்களை டிரம்புக்கு ஆதரவாக வளைப்பதற்கான செயல்தந்திரங்களை கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவுக்காக வகுத்துக் கொடுத்துள்ளார் அம்ரிஷ் தியாகி.

*****

லகளவில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மற்றும் பேஸ்புக்கின் தகவல் திருட்டு சூடான விவாதப் பொருள் ஆகி வரும் நிலையில், இந்தியாவில் காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தகவல் திருட்டில் ஈடுபட்டதாக பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகின்றன. காங்கிரசின் செயலியை கைப்பேசியில் நிறுவியுள்ள பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு தாம் எவ்வகையான பகுப்பாய்வுகளும் செய்யவில்லை என அறிவித்துள்ள அக்கட்சி,  பயனர்களிடையே பொதுவாக எழுந்துள்ள சந்தேகங்களைக் கணக்கில் கொண்டு தமது செயலியை ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

ஒருபடி மேலே சென்றுள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்தியர்களின் தகவல்களை சட்ட விரோதமாக சேகரிக்கும் வேலையில் பேஸ்புக் ஈடுபட்டால் அதன் தலைவர் மார்க் ஸூக்கர்பெர்க்கை இந்தியா அழைத்து வந்து விசாரிக்கவும் தயங்க மாட்டோம் என மார் தட்டியுள்ளார். மேலும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி உள்ளிட்ட கணினி “வல்லுநர்கள்” குழு தமது கட்சியின் செயலியான ‘நமோ ஆப்’ எவ்வகையிலும் தகவல் சேகரிக்கவில்லை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணினிப் பாதுகாப்பு வல்லுநர் எலியாட் ஆல்டர்சன் பாரதிய ஜனதா உருவாக்க முயற்சிக்கும் நீர்குமிழிகளை குண்டூசியால் குத்தியுள்ளார். மோடியின் நமோ செயலியை நிறுவினால் செல்பேசியின் இயங்குதளம், எந்த செல்பேசி நிறுவனத்தின் மூலம் இணைப்பு பெறப்பட்டது, மின்னஞ்சல்கள், போட்டோக்கள், பாலினம், பெயர் உள்ளிட்ட விவரங்களை பயனாளிகளுக்கே தெரிவிக்காமல் in.wzrkt.com எனும் இணையதளத்திற்கு அனுபப்படுகின்றது என்பதை அம்பலப்படுத்துகிறார் எலியாட்.

மேற்படி இணையதளத்தை தகவல் திருட்டில் ஈடுபடும் மோசடியானது (Phishing) என்று ஜீ-டேட்டா எனும் ஆண்டி வைரஸ் நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. மேலும் நமோ செயலி நமது தகவல்களை அனுப்பி வைக்கும் சம்பந்தப்பட்ட in.wzrkt.com எனும் இணையதளம் கிளெவர்டாப் எனும் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. தற்போது எலியாட்டின் அம்பலப்படுத்தல்களுக்குப் பின் ஓசையின்றி நமோ செயலியின் தனித்தகவல் பாதுகாப்புக் கொள்கையை (privacy policy) மாற்றியமைத்துள்ளனர். எலியாட்டின் ட்விட்டர் பக்கம்

தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்காளர்களை சாதி, மத, இன, மொழி அடிப்படையில் வகைபிரிப்பது, சமூகத்தை இதனடிப்படையில் பிளவுண்டாக்கும் கலவரங்களில் ஈடுபடுவது, ஒரு சமூகத்திற்கு எதிராக இன்னொரு சமூகத்தை நிறுத்தி ஓட்டுக்களை அறுவடை செய்வது, பொய்ச் செய்திகளையும், போலியான தகவல்களையும் பரப்பி விடுவது பாரதிய ஜனதாவுக்குப் புதிதல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் ஆப்கோ எனும் நிறுவனத்தை இதற்காகவே பாரதிய ஜனதா அமர்த்தியிருந்ததை அப்போதே கோப்ரா போஸ்ட் இணையதளம் அம்பலப்படுத்தியிருந்தது. இது குறித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பே வினவிலும் எழுதியிருந்தோம்.

இதுவரை நாம் பார்த்த தகவல்களை தொகுப்பாக பார்க்கும் போது, முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிறப்புக்களாகச் சொல்லப்படும் அதன் தேர்தல் முறை குறித்து உங்கள் மனதில் அடிப்படையாக சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா? அவை குறித்து அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..

(தொடரும்)

– சாக்கியன்

முந்தைய பாகங்கள்: