privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்வரலாறுகையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !

கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !

-

கையூர்.  கேரளத்தின் வடகோடியில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு குட்டி கிராமம்.  அந்தக் கிராமம் தான்  விவசாயிகள் இயக்கத்தின் தொட்டில் என அழைக்கப் படுகிறது.

நம்பியார், நாயனார் என்ற இரண்டு நிலப்பிரபுக்களின் இரும்புப் பிடியில் புழுக்களைப் போல வாழ்ந்து கொண்டு இருந்தனர் அந்தக் கிராமத்தின் கூலி-ஏழை விவசாயிகள்.

நிலப்பிரபுக்களிடம் அனுமதி வாங்காமல், யாரும் திருமணம் கூட செய்ய முடியாது.  அனுமதியுடன் சேர்த்து திருமணச் செலவுகளுக்காக பத்து ரூபாயோ பதினைந்து ரூபாயோ கடனாகத் தருவார் நிலப்பிரபு.  கடனுக்கு வட்டியாக நிலப்பிரபுக்கள் கூறும் ஏவல்களை செய்ய வேண்டும்.  மேலும், தமது தோட்டத்தில் தான் விளைவித்த நெல்லையும், காய்கறிகளையும், பழங்களையும் அவருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும்.  பின் சில ஆண்டுகள் கழித்து வட்டிக்கும் முதலுக்கும்  தமது துண்டு நிலத்தை நிலப்பிரபுக்களிடம் ஒப்படைத்து அவர்காட்டும் தாள்களில் ரேகை பதிய வேண்டும்.  பின் அவரிடமே பண்ணையடிமையாக காலம் கழிக்க வேண்டும்.  நிலப்பிரபு நல்ல மன நிலையில் இருந்தால், அவரிடமே நிலத்தை குத்தகைக்கு எடுக்கலாம்.  குத்தகையாக விளைச்சல் முழுவதையும் செலுத்த வேண்டும்.  நிலப்பிரபு பெரிய மனது வைத்து ஏதோ கொஞ்சம் நெல்லை திருப்பித் தருவார்.  காலில் விழுந்து அந்தக் கருணையை ஏற்க வேண்டும்.

கையூர் தியாகிகளின் நினைவுத் தூண்.

இத்தகைய சூழலில் தான் கம்யூனிஸ்டுகள் அந்த கிராமத்திற்கு அறிமுகமானார்கள்.  அவர்களின் வழிகாட்டலின் கீழ் சங்கம் கட்டினார்கள் கூலி-ஏழை விவசாயிகள்.  உழுபவனுக்கு நிலம் என முழங்கினார்கள்.  குத்தகை விவசாயிகள் அறுவடையை கைப்பற்ற துணையாக நின்றது சங்கம்.  விவசாயிகள் தமது தேவைகளை தீர்த்துக் கொள்ள வழிகாட்டியது சங்கம்.

மடித்துக் கட்டிய வேட்டியுடன், தோளில் போட்ட துண்டுடன், காலில் செருப்பு அணிந்து நம்பியார், நாயனார் முன் நடக்க வைத்தது சங்கம். திருமணம் முதல் மரணம் வரை நிலப்பிரப்புக்களிடம் கையேந்த வேண்டிய நிலையை ரத்து செய்தது சங்கம்.

நிலப்பிரபுக்களின் சுரண்டித் தின்ற வயிறு எரிந்தது.  வெள்ளை எஜமானின் காலில் விழுந்து கெஞ்சினார்கள் ஜென்மிக்கள். (ஜென்மி = நிலப்பிரபு).  “விவசாய சங்கம் கட்டி, பிரிட்டிஷ் சர்க்கார் ஒழிகன்னு கோஷம் போடறானுங்க” என வெள்ளையனின் கால்களை நக்கினார்கள்.

ஒரு போலீசுக்காரனை ஜென்மீக்களின் காவலாக அனுப்புகிறது பிரிட்டிஷ் அரசு.  விவசாயிகளின் பேரணியை மறித்து பாலர் சங்கத் தொண்டன் ‘சூரிக்கண்டன் கிருஷ்ணன்’ என்ற சிறுவனை எட்டி உதைக்கிறான் அந்தப் போலீசு சுப்பராயன்.  வெகுண்டெழுந்த விவசாயிகளின் எதிர்ப்பை பார்த்து அஞ்சி ஓடி ஆற்றில் குதித்து மூழ்கிச் சாகிறான் சுப்பராயன் எனும் அந்த கைத்தடி.

போலீஸ் சுப்பராயனின் சாவுக்கு பழிதீர்க்க கையூர் வருகிறது போலீசுப் படை.  வாச்சாத்தி, ஜாலியன் வாலாபாக், தாமிரபரணி, கொடியன்குளங்கள் அரங்கேறுகின்றன.   வீடுகள் கொளுத்தப் படுகின்றன, விவசாயிகளின் மண்டைகள் உடைக்கப் படுகின்றன.  உயிரை விட்டவர்கள் கணக்கும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளானவர்கள் கணக்கும் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. எஞ்சியவர்களை கைது செய்து வழக்கு போடுகிறது அரசு.  விவசாய சங்கத்தின் தலைவர்களும் சரணடைகின்றனர்.

1) மடத்தில் அப்பு (சங்கத் தலைவர்)
2) கோயில்தட்டில் சிருகண்டன் (சங்கச் செயலாளர்)
3) பொடவரா குஞ்ஞம்பு (சங்கத் தொண்டர்)
4) பள்ளிக்கல் அபூ பக்கர் (தொண்டர் படை தலைவர்)
5) சூரிக்கண்டன் கிருஷ்ணன் (பாலர் சங்கத் தலைவர்)

ஆகிய அய்ந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.  பின்னர் சூரிக்கண்டன் கிருஷ்ணன் சிறுவர் என்பதால் அவரது மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனை விதித்தது.

மற்ற நால்வரையும்  29 மார்ச், 1943 ஆம் தேதி கண்ணூர் சிறையில் தூக்கில் ஏற்றிக் கொன்றது பிரிட்டிஷ் அரசு. தூக்குத் தண்டனைக்கு சிலநாட்கள் முன்பாக சிறையில் அவர்களை சந்திக்கிறார்கள் சில தோழர்கள்.

அப்போது,”மக்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேனோ, அதை எல்லாம் எனக்குக் கற்றுத் தந்தது கட்சிதான்.  நான் என் கடமையை சரியாக செய்ததாக கட்சி கருதினால், அதுவே எனக்குப் போதும்” என்கிறார் சங்கச் செயல் வீரர் தோழர் குஞ்ஞம்பு.

“நமது தியாகிகளின் வாழ்வில் இருந்து தான் நாங்கள் ஊக்கம் பெற்றோம்.  அவர்களோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கும் கிடைக்கும் என கனவிலும் கருதவில்லை.  சாவதற்கு நாங்கள் அஞ்சவில்லை என தோழர்களிடம் கூறுங்கள்.  என் அம்மா மிகவும் வயதானவர்.  அவருக்கு ஆறுதல் கூறுங்கள்.  என் தம்பிகள் மிகவும் சிறியவர்கள்.  அவர்களை கட்சி பணி செய்யச் சொல்லிக் கொடுங்கள்”, என்கிறார் தொண்டர் படைத் தலைவர் தோழர் அபூ பக்கர்.

“கட்சி வளர்ந்து வருகிறது என்ற நல்ல செய்தியோடு வந்திருக்கிறீர்கள்.  கூடுதல் பலத்தோடு நாங்கள் தூக்குமேடை ஏறுவோம்.  நாங்கள் கட்சியில் சேர்ந்ததே இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக உழைக்கவும் சாகவும் தானே”, என்கிறார் சங்கத் தலைவர் தோழர் அப்பு.

“நாங்கள் சாதாரண விவவாயிகளின் மகன்கள்.  எங்கள் நான்கு பேரை தூக்கில் போடலாம்.  ஆனால், இந்தியாவிலோ கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் அழித்து விட முடியாது.  அவர்களின் வாழ்விற்கும் விடுதலைக்கும் கூடுதலாக உழைக்க முடியவில்லையே என்பது தான் கவலையாக இருக்கிறது”, என்கிறார் சங்கச் செயலாளர் தோழர் சிருகண்டன்.

இந்திய விவசாயிகள் இயக்கத்தின் முதல் தியாகிகளான அப்பு, சிருகண்டன், குஞ்ஞம்பு, அபூ பக்கர் தூக்கு மேடை ஏறி, இதோ எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி டெல்டா விதர்பா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் என நாடெங்கிலும் வயல்வெளிகளில் விவசாயிகளின் பிணங்கள் முளைக்கின்றன. இன்றோடு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிகிறது. மோடி அரசின் துரோகங்களுக்கு நாம் வைக்கும் முற்றுப்புள்ளி எப்போது? கையூர் தியாகிகளின் நினைவுநாளில் உறுதி பூணுவோம்.

  • இரணியன் பால்ராஜ்.

குறிப்பு :

1) கையூர் போராட்டம் பற்றி கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதிய “சிரஸ்மரனே” நாவல் தமிழில் “நினைவுகள் அழிவதில்லை” என பி.ஆர்.பரமேஸ்வரன் மொழிபெயர்பில் வந்துள்ளது.  என்.சி.பி.ஹெச் வெளியிட்டு உள்ளது.
2) “மீன மாசத்திண்டே சூரியன்” கையூர் போராட்டம் பற்றிய மலையாளத் திரைப்படம். யூ டியூபில் கிடைக்கும்.
3) “நினைவுகள் அழிவதில்லை” கையூர் போராட்டம் பற்றிய தமிழ்த் திரைப்படம், யூ டியூபில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க