privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை !

பேஸ்புக் யுகத்தில் கொள்கையும் தொண்டரும் கட்சிகளுக்குத் தேவையில்லை !

-

கேம்பிரிட்ஜ் அனலிடிகா : தகவல் திருட்டல்ல – உளவியல் போர் ! பாகம் 4

பேஸ்புக் இல்லையென்றால், ட்ரம்ப் வென்றிருக்க மாட்டார்” என்று சொன்னது அவரது அரசியல் எதிரிகள் அல்ல; மாறாக, டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பணிக்குழுவில் செயல்பட்ட தெரேஸா ஹோங் எனும் பெண்மணி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் அப்படிக் குறிப்பிட்டார்.

ட்ரம்பின் தேர்தல் பணிக்குழுவில் செயல்பட்ட தெரேஸா ஹோங்

சுமார் இருபதாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடந்த தேர்தல் ஒன்றின் போது நடந்த பிரச்சாரங்களையும் அதற்கான உத்திகளையும் நம்மால் நினைவு கூற முடிகிறதா? தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள், கூட்டணி பலாபலன்கள், சாதிய செல்வாக்கு, பணபலம் உள்ளிட்ட அனைத்து விதமான போலி ஜனநாயக கூத்துகளைக் கடந்து களத்தில் செய்யப்பட்ட தேர்தல் பணிகளில் முற்றிலும் வேறு விதமாக அப்போதிருந்தன.

கட்சிகளின் சார்பிலும் வார்டு வாரியாக தேர்தல் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். சுமாராக ஆயிரம் வாக்குகள் கொண்ட வார்டு ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு இந்த ஆயிரம் வாக்குகளைப் பற்றி தலைப்பாடமாகத் தெரிந்திருக்கும். யார் என்ன சாதி, ஒவ்வொரு வீட்டிலும் வேலைக்குச் செல்பவர்கள், என்ன வேலை செய்கிறார்கள், என்ன வருமானம், எத்தனை குழந்தைகள் என்கிற தகவல்களோடு எந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்கிற விவரமும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் (உதாரணம் திமுக, அதிமுக) அந்த குறிப்பிட்ட வார்டில் தங்களுக்கு வரும் நிச்சயமான வாக்குகள் குறித்து தெரிந்திருக்கும். பெரும்பாலும் பிரதான கட்சிகளிடையே மிக மெல்லிய வாக்கு வித்தியாசமே இருக்கும் என்பதால் கட்சி சார்பற்ற, தேர்தல் சமயத்தில் பார்த்துக் கொள்வோம் என இருக்கும் ‘நடுநிலை’ வாக்காளர்களைக் கவர்வதில் மிகுந்த அக்கறை செலுத்துவார்கள்.

வார்டு அளவில் இப்படியென்றால், மாநில அளவிவிலும் கட்சிகளுக்கு இதே போன்ற கணக்குகள் இருக்கும். குறிப்பாக தேர்தல் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாமென இருக்கும் ‘நடுநிலை’ வாக்காளர்களைக் கவர்தற்காகவே அவர்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள். தேர்தல் முடிந்த பின்னரும், தம்மை வெற்றி பெறச் செய்த கட்சி சாராத வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொள்வது பற்றியும், அவர்களைத் தமது கட்சிக்கு சார்புள்ளவர்களாக (தேர்தல் சமயத்திலாவது) மாற்றும் போக்கிலுமே கட்சிகளின் நடவடிக்கைகள் அமையும். சுருக்கமாகச் சொன்னால் வென்றவர்களோ தோல்வியுற்றவர்களோ தாம் பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதி அல்லது மாவட்டம் அல்லது மாநிலம் ஆகியவற்றின் எல்லைகளுக்குள் வாழும் பொதுவானர்களுக்கு நெருக்கமானவர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள பிரயத்தனம் செய்தனர்.

*****

டந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளில் இவ்வாறு கட்சி அல்லது கொள்கைகள் சாராத ‘நடுநிலையாளர்களின்’ சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறார் யேல் பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறை பேராசிரியர் ஈதன் ஹெர்ஷ். இந்தப் போக்கிற்கு மிக முக்கியமான காரணமாக மீப்பெரும் மின்தரவுப் பாய்வு (Big Data Analytics) முறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை முன்வைக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனிமேலும் தங்களை அனைவருக்கும் பொதுவானவர்களாக காட்டிக் கொள்வதற்கான தேவையை இந்நவீன தொழில்நுட்பங்கள் ஒழித்து விட்டன என்கிறார். இதே பொருளில் சி.என்.பி.சி-யைச் சேர்ந்த அரசியல் பிரிவு பத்திரிகையாளர்கள் முக்கியமான கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளனர்.

யேல் பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் துறை பேராசிரியர் ஈதன் ஹெர்ஷ்.

தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள சாத்தியங்களைப் பரிசீலிப்பதற்கு முன் சமூகத்தில் அவ்வாறான சாத்தியங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான சூழல் உருவானதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். தனது கடைசிக் காலத்தில் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்த சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னும், மூன்றாம் உலகநாடுகளில் உலகமயமாக்கல் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட பின்பும், சர்வதேச அளவில் சமூகப் பொருளாதார அரங்கில் சில மாற்றங்கள் ஏற்படலாயின. அதுவரை “கம்யூனிச அபாயத்தை” நோக்கி மக்கள் சென்று விடாதிருக்க பெயரளவிற்கான மக்கள் நலத் திட்டங்களை முதலாளித்துவ நாடுகள் மேற்கொண்டு வந்தன. அதற்கு மேல் “மக்கள் நலன்” என்கிற முக்காடை அவிழ்த்துப் போட்டன ஆளும் வர்க்கங்கள்.

உலகமயப் பொருளாதாரக் கொள்கைகள் மெல்ல மெல்ல பழைய காலங்களில் பெயரளவிற்காவது செயல்பட்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அழித்தொழித்தன. பொதுத்துறைகளை அழித்து அதனிடத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி அமர்ந்து கொண்டது. ஒருபுறம் வாழ்க்கை வசதிகள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில் இன்னொரு புறம் மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து கொண்டே வந்தது. இது முதலாளித்துவ பொருளாதார அமைப்பையே மாபெரும் சூதாட்ட விடுதியாக மாற்றியமைத்ததன் விளைவாகத் தான் 2007-ன் இறுதியில் மாபெரும் பொருளாதார மந்தநிலை துவங்கியது.

இன்று வரை சீரடையாத இந்தச் சூழலை பொருளாதார “மந்தநிலை” என இனிமேலும் முதலாளித்துவ பத்திரிகைகளே கூட அழைப்பதில்லை; அவர்களே கூட இப்போதெல்லாம் கட்டமைப்பு நெருக்கடி என்றே சொல்கின்றனர். சர்வதேச அளவில் மூலதனம் தான் சந்தித்த தேக்க நிலையையும் நெருக்கடியையும் மக்களின் தலைமேல் சுமத்தியது. வங்கிகள் திவாலாகின; அரசே தலையிட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு வங்கிகளை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் தலையீடில்லாத சுதந்திரச் சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் எனக் கூவி வந்த முதலாளித்துவ அறிஞர்களோ மக்களின் வரிப்பணத்தை அரசுகள் அள்ளி விட்டபோது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.

இதன் விளைவாக மக்களுக்கு அரசுகள் மற்றும் வங்கித் துறையின் மீதான நம்பிக்கையே தகர்ந்து போனது. முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் வீதியில் நடந்த முற்றுகைப் போராட்டம் நீர்த்துப் போனாலும், அந்தப் போராட்டம் “முதலாளித்துவம் ஒழிக” என்று உரக்க அறிவித்த செய்தியானது உலகெங்கும் மக்களின் நனவிலி மனங்களில் படிந்து போயுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பாவிலும் போராட்டங்கள் வெடித்தன.

முதலாளித்துவ நாடுகளில் நேரடியாக பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு மக்கள் கிளர்ந்தெழுதார்கள் என்றால், மூன்றாவது உலக நாடுகளில் பல்வேறு வகையான அரசியல் காரணங்கள் முன்னெழுந்து வந்தன. மக்ரீப் நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் வண்ணப் புரட்சிகள் வெடித்தன. இந்தியாவில் அது “ஊழலுக்கு” எதிரான போராட்டங்களாக வெடித்தது. சுருக்கமாகச் சொன்னால் உலகளவில் மக்கள் சமூகம் ஒருவிதமான் கொந்தளிப்பான நிலைக்குச் சென்றது. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் மக்களின் எழுச்சி மிகத் திட்டமிட்ட முறையில் மடைமாற்றப்பட்டு அதையே அடித்தளமாக கொண்டு பாசிச வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டன. உலகெங்கும் “அரசியலற்ற” “நடுநிலையான” பிரிவினர் அரசியல் அரங்கின் ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்தாக வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் – அதாவது கடந்த பதினைந்து ஆண்டுகளில் – சமூகத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழலுக்கு அக்கம் பக்கமாகவே தகவல் தொழில்நுட்ப அரங்கில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்தன. இதே காலகட்டத்தில் தான் சமூக வலைத்தளங்கள் தவிர்க்கவியலாத பிரச்சார சாதனங்களாக நிலைநாட்டிக் கொண்டன. வண்ணப்புரட்சியின் போதும் வால்வீதி முற்றுகையின் போதும் போராட்டங்களுக்காக மக்களைத் திரட்டவும், ஒருங்கிணைக்கவும் அதே சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டன.

*****

மீப்பெரும் மின்தரவுப் பகுப்பாய்வை முதன்முதலாக தேர்தல் உத்தியாக வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தரவுத் துரப்பணம் (Data Mining) மற்றும் அதன் அடிப்படையிலான் நுண் இலக்குகளை நிர்ணயித்து (Micro Targetting) வாக்காளர்களை அணுகுவது போன்ற உத்திகளை 2008 -லேயே வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது ஒபாமாவின் தேர்தல் குழு (Team Obama). இதன் காரணமாக சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே அமெரிக்க பத்திரிகைகள் ஒபாமாவை “பிக் டேட்டா” பிரசிடெண்ட் என்று அடைமொழியிட்டு அழைத்தன.

ஒபாமாவை அவரது தேர்தல் குழு திட்டமிட்ட ரீதியில் ஒரு வணிகக் குறியீடாக (Brand) முன்னிறுத்துவதில் வெற்றிபெற்றது. மேலும், தமக்கு யார் வாக்களிக்கப் போகிறார்கள், நடுநிலையில் இருக்கும் வாக்காளர்களில் யாரையெல்லாம் வென்றெடுக்க முடியும் என்பதைத் துல்லியமாக அறிந்த பின் தமது நேயர்களின் (Target Audience) மனப் போக்கிற்கு ஏதுவாக வாக்குறுதிகள் அளித்தாலே போதுமானதாக இருந்தது. எனவே இதற்கு மேலும் முந்தைய ஜனநாயக கட்சி வேட்பாளர்களைப் போல் போலித்தனமாக தாராளவாத (Liberal) அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஒபாமாவுக்கு இல்லாமல் போனது. அப்போது பொதுவாக முதலாளித்துவத்தின் மீதும், குறிப்பாக வங்கிகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளின் மீதும் அமெரிக்க வாக்காளர்களுக்கு இருந்த அவநம்பிக்கையை வாக்குகளாக அறுவடை செய்யும் உத்தியை அவர் கையிலெடுத்தார். சந்தையில் தாராளவாதம், மூலதனம் செயல்படுவதற்கான சுதந்திரம் போன்ற வழக்கமான பல்லவிகளை அடக்கி வாசித்துக் கொண்டார். சித்தாந்தங்களின் இடத்தை மின்தரவுப் பகுப்பாய்வு தொழில்நுட்பம் மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டது.

இதன் விளைவாகவே ஒபாமா அதிபரான பின் மக்களை உளவு பார்க்கும் ஐந்தாம் படையாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டங்களில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார். 2007ம் ஆண்டு புஷ்ஷின் ஆட்சியின் கடைசிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அமெரிக்க பாதுகாப்புச் சட்டத்தின் (Protect America Act) அடிப்படையில் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு முகமையால் (NSA) துவங்கப்பட்ட பிரிசம் (PRISM) என்கிற இரகசிய திட்டம் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து ஒலிக் கோப்புகள், தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள், மின் கோப்புகள், தேடுதல் விவரங்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகள், கைபேசியில் உள்ள பழைய பதிவுகள், இணைப்பு விவரங்கள் என மின் தரவுகளைச் சேகரிக்கத் துவங்கியது அமெரிக்க அரசு. இவை அனைத்தும் ஊடா மாகாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மீப்பெரும் மின் தரவுக் கிடங்கிற்கு (Big Data lake) அனுப்பட்டன.

மக்களின் ஒப்புதலின்றி அவர்களது விவரங்களைக் களவாடிய அமெரிக்க உளவு நிறுவனம், அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மொத்த சமூகத்தையும் கண்காணிக்கத் துவங்கியது. கூகிள், பேஸ்புக், லிங்க்டின், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும், வெரிசான் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட விவரங்களை மொத்தமாகச் சேமித்து தனித் தனி விவரங்களுக்கு இடையிலான இணைப்புகளை ஆராயும் பணி பிரிசம் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. எட்வர்ட் ஸ்னோடன் மக்களை உளவு பார்க்கும் அமெரிக்க அரசின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

குறிப்பிட்ட ஒரு தலைவர் மேடைகளில் எப்படி நடக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும், முக அசைவு எப்படி இருக்க வேண்டும், பேசும் பொருளில் எதற்கு அழுத்தம் தர வேண்டும், எதிராளியை எந்த இடத்தில் அடிக்க வேண்டும் என்பதெல்லாம் முன்தீர்மானிக்கப்பட்டு “தலைவர்கள்” மேடைகளுக்குப் பின்னே ஒப்பனை அறையில் வைத்து திறமையான இயக்குநனர்களால் “தயாரிக்கப்படும்” போக்கு புதிதல்ல. தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் முன்வைத்து உரையாடுவது, மக்களை வென்றெடுப்பது என்கிற அரசியல் அணுகுமுறையை முதலாளித்துவ கட்சிகள் எப்போதோ கைகழுவின் விட்டன. எனினும், இப்போது அது நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் ஒரு துல்லியத்தை அடைந்துள்ளது. மின்தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பம் சில முக்கியமான சாத்தியங்களை “ஜனநாயகத் தேர்தல்”’ முறைக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது.

ஒரு நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட எண்ணவோட்டங்களையும் அரசியல் சார்பு நிலைகளையும் மிகத் துல்லியமாக அறியத் தருகின்றது. அரசியல் சார்பு நிலை எடுக்காத பொதுவானவர்களின் பிற விருப்பங்களையும் தேர்வுகளையும் பலவீனங்களையும் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களது சிந்தனையை வடிவமைப்பதற்குத் தேவையான பிரச்சார உத்திகளை வகுப்பதற்கு உதவுகின்றது.

ஒருவருடைய முகநூல் செயல்பாடுகளின் மூலம் அவரது தனிப்பட்ட ரசனை, பொருட்களை நுகர்வதில் அவரது தெரிவுகள், கலை, சினிமா உள்ளிட்டவைகளில் அவருக்கு இருக்கும் விருப்பங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதன் ஊடாக அவரை ஒரு குறிப்பிட்ட அரசியல் போக்கினுள் திணிப்பது எப்படி என்பதை கட்சிகளால் இப்போது புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, கருநாடக சங்கீதத்தையும் அனுமன் சாலிசாவையும் தொடர்ந்து கேட்கும் ஒருவரிடம் அயோத்தியில் ராமன் கோவிலை மார்க்கெட்டிங் செய்வது எளிது என்பதை (அவருக்கு அரசியல் ஆர்வமே இல்லையென்றாலும் கூட) பாரதிய ஜனதாவால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

மேலும், தமக்கான ஆதரவுத் தளம் இன்னதென்று தெளிவாக அறிந்து கொண்டபின் வேட்பாளர்கள் இனிமேலும் பொதுவானவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள எந்தப் பிரயத்தனமும் செய்ய வேண்டியதில்லை. அதிகாரத்திற்கு வந்த பின்னும் கூட தனது ஆதரவுத் தளத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்வது, அதை விரிவடைய வைப்பது, அந்த தளத்தில் இருப்பவர்களுக்கான அரசு திட்டங்களை மாத்திரமே முன்னெடுப்பது என மேலும் மேலும் சமூகத்தில் நிலவும் பிளவை ஓட்டுக்கட்சிகள் உத்திரவாதம் செய்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை நரேந்திர மோடியை எப்படி ஒரு வணிக குறியீடாக (Brand) முன்னிறுத்துவதில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் போலிக் கணக்குகளை உண்டாகி அவற்றின் மூலம் விவாதங்களைக் கடத்திச் செல்வது, சமூக வலைத்தளங்களில் இவ்வாறாக நடக்கும் ”விவாதங்களை” மையநீரோட்ட ஊடகங்களிலும் வெளிவரச் செய்வது, இதன் மூலம் தனக்குச் சாதகமான ஒரு பொதுக்கருத்தை கட்டமைப்பது என்கிற செயல் தந்திரத்தை 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றிகரமாக நடத்திக் காட்டியது பாரதிய ஜனதா. ”ஊழலுக்கு எதிராக” மக்களிடையே ஒரு அதிருப்தியை திட்டமிட்டு உருவாக்கிய பாரதியஜனதா, இதற்காகவே இந்தியா பவுண்டேசன், விவேகானந்தா இண்டர்நேசனல் போன்ற முகமூடிகளை அணிந்து கொண்டது. ஒருகட்டத்தில் மக்களின் அதிருப்தியை ஓட்டுக்களாக அறுவடை செய்து முடித்த பின் அந்த ஆதரவுத் தளத்தை அப்படியே இந்துத்துவ பாசிசத்துக்கான வாக்கு வங்கியாக மாற்றி வருகின்றனர்.

தற்போது காங்கிரசும் இதே போன்றதொரு உத்தியைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறது. மோடிக்கு எதிராக ராகுல் காந்தியை ஒரு வணிக குறியீடாக மெல்ல மெல்ல கட்டமைத்து வருகின்றது காங்கிரசு. கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் இதற்கான ஒப்பந்தத்தை காங்கிரசு வழங்கவில்லை என்றாலும், அதே போன்ற நிறுவனங்களைத் தான் அக்கட்சி பணிக்கமர்த்தியுள்ளது. தேசிய கட்சிகள் என்றில்லாமல் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் போன்ற பிராந்திய கட்சிகளுமே தேர்தல் மேலாண்மை நிறுவனங்களை நம்பியே தேர்தல் களத்தில் இறங்குகின்றன. அரசியல் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் மட்டுமின்றி, புதிதாக ஓட்டுப் பொறுக்க வந்துள்ள கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் கூட தேர்தல் மேலாண்மை நிறுவனங்களால் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் மேலாண்மை வேலைகளில் ஈடுபட்டு வரும் இந்தியாபேக் (IndiaPAC) எனும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரைத் தொடர்பு கொண்டு அது போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தோம். அது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கவுள்ளோம்.

மொத்தத்தில் கொள்கை கோட்பாடுகளை எப்போதோ குழிதோண்டிப் புதைத்து விட்ட ஆளும் வர்க்க கட்சிகள், நவீன தொழில்நுட்பம் வழங்கும் அபரிமிதமான சாத்தியங்களை ருசி கண்டபின் பெயரளவிற்காகவது பேசி மக்கள் சார்ந்த அரசியலையும் பாழுங்கிணற்றில் மூழ்கடித்து விட்டன. இனிமேல் தேர்தல்களில் பங்கெடுக்கும் கட்சிகளுக்கு கொள்கைகள் மட்டுமல்ல – தொண்டர்களும் கூட தேவையில்லை எனும் நிலையை தேர்தல் மேலாண்மை நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. அதாவது பிரச்சாரம் செய்யவும், மக்களைத் திரட்டவுமான வேலைகளை இனிமேல் தேர்தல் மேலாண்மை நிறுவனங்களுக்கு அவுட் சோர்ஸ் செய்து விடலாம். திருமணங்களை நடத்தும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களைப் போல தேர்தல் பணிகளையும் மொத்தமாக குத்தகைக்கு விட்டுவிடலாம். இவ்வாறாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிறப்புகளில் ஒன்றாக சொல்லப்பட்ட “தேர்ந்தெடுக்கும் உரிமை” என்பதன் சாயம் முற்றாக வெளுத்து விட்டது.

*****

“குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை அடுத்து வரும் சில அண்டுகளுக்கு ஒடுக்கும் பிரிவினரில் யார் தங்களை பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் செய்ய வேண்டும் என்றும் யார் தங்களை ஒடுக்க வேண்டும் என்றும் தெரிவு செய்யும் உரிமை ஒடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது” என்று பாரிஸ் கம்யூன் அனுபவங்களைக் குறித்து சொல்லும் போது கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவார். தனது அரசும் புரட்சியும் நூலில் இதை மேற்கோள்காட்டும் லெனின், முதலாளித்துவ ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் தெரிவு செய்யும் உரிமையின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவார்.

“Marx grasped this essence of capitalist democracy splendidly when, in analyzing the experience of the Commune, he said that the oppressed are allowed once every few years to decide which particular representatives of the oppressing class shall represent and repress them in parliament!” (Chapter 2: State and revolution – Lenin)

ஆக, முதலாளித்துவ ஜனநாயகத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளப்படும் புனித உரிமையான தேர்தல் முறையானது அதன் பிறப்பிலேயே கோளாறுகள் கொண்டது என்பதை சில நூற்றாண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு மெய்ப்பித்துள்ளனர் மோடியும், ட்ரம்பும்.

(தொடரும்)

– சாக்கியன்

முந்தைய பாகங்கள்: