privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!

-

வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் !
போலீசு இராச்சியத்தை முறியடிப்போம் !!

 

பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்?

 

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் குறிப்பிடத்தக்கது வழக்குரைஞர் போராட்டம். இந்தக் கோரிக்கையை முன்வைத்து சனவரி 30 அன்று துவங்கிய நீதிமன்றப் புறக்கணிப்பு பிப்ரவரி 17 வரை தொடர்ந்த்து. போராட்டத்தில் சோனியா, மன்மோகன், பிரணாப் முகர்ஜி உருவப்பொம்மைகள் எரிந்தன. எதிர்த்த காங்கிரசுக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். படகிலேறி முல்லைத்தீவுக்குப் பயணம் புறப்பட்டார்கள் தூத்துக்குடி வழக்குரைஞர்கள். தமிழகத்தின் மற்றெல்லாப் பிரிவினரின் போராட்டங்களுக்கும் வழக்குரைஞர்களின் போராட்டம் உத்வேகம் கூட்டியது. கருணாநிதி அரசுக்கும் காங்கிரசுக்கும் இது ஆத்திரம் ஊட்டியது.

பிப் 17 – சுப்பிரமணிய சாமி அய்கோர்ட்டுக்குள் நுழைந்தார்.

பார்ப்பன வெறியன், தமிழ் மக்கள் விரோதி, சி.ஐ.ஏ உளவாளி எனப் பன்முகம் கொண்ட அந்த அரசியல் தரகனின் முகத்தில் அழுகிய முட்டை வீசப்பட்டது. நீதிமன்றத்தின் புனிதம் கெட்டது, அரசியல் சட்டத்தின் ஆட்சி குலைந்தது என்ற கூக்குரல்கள் எழுந்தன.

பிப் 19 – வழக்குரைஞர்கள் மீது போலீசின் திட்டமிட்ட தாக்குதல். 60 வழக்குரைஞர்களுக்கு மண்டை, கை கால்கள் உடைந்தன. தடுக்க வந்த நீதிபதிகளுக்கும் அடி. 5 மணி நேரம் தொடர்ந்து நடந்த போலீசின் கோரதாண்டவத்தில் நீதிமன்ற வளாகமோ நொறுக்கப்பட்டது. தொலைக்காட்சிக் காமெராக்களின் கண் முன்னே நடத்தப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டத்திற்காக ஒரு போலீசுக்காரன் மீது கூட வழக்கு இல்லை. அரசும் ஊடகங்களும் போலீசின் பக்கம் உறுதியாக நின்றன. ஈழப்பிரச்சினையில் கருணாநிதியை எதிர்த்து சண்டமாருதம் செய்த கட்சிகள் யாரும வழக்குரைஞர்களுக்காகப் போராடவில்லை.

பிப்ரவரி 20 முதல் ஒரு மாத காலம் நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர் தமிழகம் முழுவதுமுள்ள வழக்குரைஞர்கள்.

ஈழத்தின் இராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தமிழகத்தின் போலீசு கொடுங்கோன்மையை உலகுக்கு அறிவித்தது.

அரசியல் சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் மேலாண்மை, வழக்குரைஞர்களின் ஜனநாயக உரிமைகள், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகள் அனைத்தும் காற்றில் பறந்தன. சட்டம் ஒழுங்கு என்ற இரு சொற்கள் மட்டுமே அனைத்தையும் தீர்மானித்தன. இந்த இரு சொற்களின் பொருளையோ போலீசு தீர்மானித்த்து.

இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையின் மீது சிங்கள இராணுவம் போர் தொடுத்துள்ளது போல,

இங்கே

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஜனநாயக உரிமைகளின் மீது போலீசு போர் தொடுத்துள்ளது.

அங்கே துப்பாக்கி, இங்கே தடிக்கம்பு.

இந்தப் போராட்டத்தில் துவக்கம் முதலே வழக்குரைஞர்களுக்கு ஆதரவாகவும் போலீசு இராச்சியத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பினர் இந்தக் “குற்றத்துக்காகவே” கைது செய்யப்பட்டனர். போலீசால் தாக்கப்பட்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்துக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. நெடிய போராட்டத்துக்குப்பின், நாளை (மார்ச் 25) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

பிரச்சினைதான் முடிந்து விட்டதே. வழக்குரைஞர்கள் நீதிமன்றம் திரும்பி விட்டார்களே, பின்னர் ஏன் இந்தப் பொதுக்கூட்டம்?

ஏனென்றால், பிரச்சினை முடியவில்லை. வழக்குரைஞர்களின் புறக்கணிப்புப் போராட்டம் மட்டும்தான் முடிந்திருக்கிறது. இதைச் சொல்வதற்குத்தான் பொதுக்கூட்டம்.

புரியும்படி வேறு ஒரு கோணத்திலும் சொல்ல்லாம். புலிகளை தோற்கடித்து விட்டால், ஈழத் தமிழர் பிரச்சினை முடிந்து விடும் என்கிறார் ராஜபக்சே. ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாதல்லவா?

இதுவும் அப்படித்தான். பொதுக்கூட்டத்துக்கு வாருங்கள்!

பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

செனைனை

 

25 மார்ச், புதன்கிழமை, மாலை 6 மணி

 

தலைமை:

தோழர் முகுந்தன்,

தலைவர், பு.ஜ.தொ.மு

உரையாற்றுவோர்:

வழக்குரைஞர் ராஜு,

ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

வழக்குரைஞர் சங்கர சுப்பு,

தலைவர், இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் கழகம்

வழக்குரைஞர் திருமலைராசன்,

முன்னாள் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு

தோழர் மருதையன்,

பொதுச்செயலர், ம.க.இ.க

கலைநிகழ்ச்சி: ம.க.இ.க கலைக்குழு.

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

மேலும் விவரங்களுக்கு : வினவு (91) 97100 82506