முகப்புமே தினத்தில் கனவுகளுடன் வினவு !
Array

மே தினத்தில் கனவுகளுடன் வினவு !

-

leninஅன்பார்ந்த நண்பர்களே,

அடி மனதின் ஆழத்தில் நனவாக நடந்தேற முடியாத ஆசைகளுடன் புதையுண்டு அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு நித்திரை கொள்ளும் மனம், அடுத்த நாளின் உயிர்த்தெழலுக்காக அந்த ஆசைகளை கனவுலகில் நிஜம் போல நிகழ்த்தி ஆசுவாசப் படுத்தும். அப்படித்தான் போதாமைகளுடனும், நம்பிக்கையற்றும், சலித்துப் போன விரக்திகளுடனும் கடந்து செல்லும் நாட்களில் கனவுகள் கனவாகவே நமத்துப் போகின்றன.

2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினேழாம் தேதி வினவுத் தளத்தை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. இணைய உலகில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் எமது கருத்துக்களை வாசகருடன் நெருக்கமாக பகிர்ந்து கொள்வதைத் தாண்டி வேறு திட்டம் இல்லை. ஆயினும் நாட்படச் சென்ற பதிவுகளில் பல, அரசியல் தொடங்கி பண்பாடு, சமூகம் வரை அனைத்தும் கூர்மையாக உடனுக்குடன் எழுதப்பட்டு, படிப்பவர்களின் சுய அனுபவத்தில் புரட்சிகர அரசியலை நம்பிக்கையுடனும், நெருக்கமாகவும் முன்வைத்ததன. விவாதத்துடன் பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கை வலைப்பூ என்ற வரம்பை கடந்து சென்றது. நாங்கள் அவ்வளவாக எதிர்பார்த்திராத இந்த உற்சாக வரவேற்பு வலைப்பூ எனும் பகுதிநேர, தனிப்பட்ட விருப்பத்தில் எழுதும் தன்மையை எங்களுக்கே தெரியாமல் மாற்றியமைத்து, முழுநேரமாக ஒரு செய்திப் பத்திரிகைக்குரிய பரப்பில், சமூகத்தை அடியோடு மாற்றியமைக்கும் நோக்கில், கண்ணோட்டத்தை தோழமையோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் எழுதுவதாக மாறிப் போனோம்.

வாசகர்கள் செப்பனிட்டு, பதம்பார்த்து, அங்கீகரித்து, கற்றுத்தந்த இந்தப் பாதையில் தீர்மானகரமாக பயணம் செய்யும் நோக்கில்தான் நாங்களும் கனவுகளைக் கண்டடைந்தோம். இந்தக் கனவுகள் எல்லாம் இனிய நினைவுகளின் இணைப்பில் மலர்ந்தவையல்ல. ஈழத்தின் துயரக் குரலிலிருந்தும், உலகமயத்தின் பெயரில் சுரண்டலும், நெருக்கடியும் இந்திய உழைக்கும் மக்களின் தலையில் இடியாய் இறங்கியிருக்கும் தருணத்திலிருந்தும், தமிழகத்தின் அரசியலை வணிக நோக்கில் இலாபம் பார்க்கும் தொழில் போல மாற்றியமைத்திருக்கும் அரசியல்வாதிகளின் இரைச்சலிலிருந்து விடுபடும் கடினமான கடமையிலிருந்தும், பல்வேறு காரணங்களால் வாழ்க்கையைப் பல தேசங்களில் சிக்க வைத்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் சிந்தனையை இணைக்க முடியுமா என்ற ஆசையிலிருந்தும் இந்தக் கனவுகள் மலர ஆரம்பித்தன.

அப்படித்தான் கருத்துப்படம், ஒளிப்படம், போராட்டச்செய்திகள், பதிவுலகில் பெயர் பெற்ற எழுத்தாளர் நண்பர்களின் எழுத்துக்களெல்லாம் வினவில் பூக்க ஆரம்பித்தன. ஒரு வகையில் சொன்னால் வினவின் பாதையை வினவே தெரிவு செய்து கொண்டது. இந்தப் பாதையில் அது கோரும் கடமையை ஆற்ற விரும்பும் நாங்களும், அதற்கு கைகோர்க்கும் நீங்களும் இணைந்து பயணம் செல்கிறோம். இந்தப் பாதை இன்னும் விரிந்து பரந்து செல்லும் போது நாங்களும் அதற்காக தயாராக வேண்டும் என்பதுதான் எங்களுக்குரிய சிக்கல். இப்போது கனவே எங்களை மகிழ்ச்சியாக அச்சுறுத்துகிறது. எனினும் நீங்களும் இந்த இன்பச்சுமையை சுமந்து கை கோர்ப்பீர்கள் என்பதால் இந்தப் பாதையில் நாங்கள் தனியாக செல்லவில்லை.

மனித குலம் தனக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அருகதையைப் பெற்றிருக்கும் ஓரிரு தினங்களில் மே தினமே முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது. அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியை பறித்துக் கொண்டு துன்பத்தையே முடிவேயில்லாத அமத சுரபியாக அள்ளி வழங்கியிருக்கும் இந்த சமூக அமைப்பின் விசித்திரமான இயக்கத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுத் தந்த நாள் மே நாள். தொழிலாளி வர்க்கம் எவ்வளவு ஆழமாக இந்த விதியை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மானிட குலம் தன் துயரங்களிலிருந்து விடுதலை அடையும். உலகமயத்தின் விஷக் கொடுக்குகளிலில் சிக்கி வதைபடும் பெரும்பான்மை மக்களின் நோக்கில் பார்த்தால் இன்றைக்கு மே தினம் நிச்சயமாக கொண்டாட்ட தினமாக இல்லை. மாறாக போராட்டத்தை பற்றியெழும் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு முன்னிலும் அதிகமாய் உணர்த்தும் விரிந்த பொருளினை மே தினம் கொண்டிருக்கிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க, புதிய வரலாற்றை கட்டியமைக்கப் போகின்ற மே தினத்தில் வினவு புதிய வசதிகள், வடிவமைப்பில் உங்களைச் சந்திக்கிறது. இதன் தொழில் நுட்ப பணிகளுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காகவே இரண்டு வாரங்களாக புதிய இடுகைகள் வெளியிட இயலவில்லை. அதே நேரம் மே தினத்திற்குள் இந்த வேலை கைகூடுமா என்ற நிச்சயமின்மையால் இதை முன்கூட்டியே அறிவிக்கவும் இல்லை. வினவு.காமின் வேலைகளை மனமுவந்து எடுத்துக் கொண்டு நிறைவேற்றிக் கொடுத்த நண்பர் ரவிசங்கர் அவர்களுக்கு எமது நன்றிகள். புதிய வினவின் வசதிகளுக்கேற்ப உங்களின் பங்கேற்பும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த இரண்டாம் பயணத்தை ஆரம்பிக்கிறோம். இனி வழக்கம் போல தேவைக்கேற்ற இடுகைகள் மற்ற பகுதிகள் தொடர்ந்து வரும்.

உலகத் தமிழ் மக்களுக்கு வினவு ஒரு நம்பகமான தமிழ்ப் பத்திரிகையாக மட்டுமல்ல, சமூக அநீதிகளின் பால் வெறுப்புற்று சோர்வுற்று படுத்திருக்கும் இதயங்களை வருடி உலுக்கி நம்பிக்கையை விதைக்கும் தோழனாகவும் செயல்படும்.

அனைவருக்கும் மே தின வாழத்துக்கள் !

தோழமையுடன்
வினவு

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


 1. உலகின்
  உழைக்கும் வர்க்கத்தின் தலைவர்
  யாராலும் தூற்ற இயலாத தலைவர்
  எங்கள் தோழர்
  லெனின் புகழ் அனைவரின்
  செவிகளையும் எட்டட்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க