Sunday, June 4, 2023
முகப்புபஞ்சாப் 'கலவரம்' – தலித் மக்களின் போராட்டம் !
Array

பஞ்சாப் ‘கலவரம்’ – தலித் மக்களின் போராட்டம் !

-

பஞ்சாப் சீக்கிய தலித்துக்கள் போராட்டம்

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவதும் பெரும் கலவரம் நடப்பதாகவும் இது சீக்கிய இனத்தின் எழுச்சியாகவும் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கலவரம் சீக்கிய மக்களிடம் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் என்பதும் பலருக்கு தெரியாத ஒன்று.

சீக்கிய மதம் கோட்பாடு ரீதியாக பார்ப்பனிய இந்து மதத்தின் சாதியத்தை எதிர்க்கிறது என்றாலும் நடைமுறையில் இங்கும் சாதி பலமாக வேர்விட்டிருக்கிறது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த குரு ரவிதாஸை தங்களது முன்னோடியாக தலித் சீக்கியர்கள் கருதுகின்றனர். இந்தப் பார்வையில் உருவானதுதான் தேரா சச் காந்த் எனும் சீக்கிய மதப்பிரிவு. பஞ்சாப் முழுவதும் செல்வாக்கோடு இருக்கும் இந்தப் பிரிவில் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களே பின்பற்றுபவர்களாக உள்ளனர்.

ஆனால் இந்தப் பிரிவை ஆதிக்க சாதி சீக்கியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஜாட் முதலான ‘மேல்’சாதி சீக்கியர்கள் இன்றும் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களை சமூகரீதியாக அடக்கியே வாழ்கின்றனர். மேலும் தேரா சச் காந்த் பிரிவில் குருநாதர்கள் இப்போதும் உண்டு. இதற்கு மாறாக மைய நீரோட்ட சீக்கியப் பிரிவில் வாழும் குருநாதர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை பத்தாவது குரு கோவிந்த் சிங்கோடு குருநாதர் பரம்பரை முடிகிறது.அவர்களைப் பொறுத்தவரை கிரந்தசாகிப் புனித நூல்தான் வழிபடப்பட வேண்டும். தலித் மரபில் குருமார்கள் தொடருகிறார்கள். இப்படி மதரீதியிலும் ஆதிக்க சாதி சீக்கியர்கள் தலித் சீக்கியர்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்தப் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது.

இந்நிலையில் தேரா சச் காந்த்தின் தலைவர் குரு சாந்த் நிரஞ்சன் தாஸூம், இந்த பீடத்தின் இரண்டாவது தலைவரான குரு சாந்த் ராமா நந்தும் ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருக்கும் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஆலயத்திற்கு மதச் சடங்கு ஆற்ற சென்றார்கள். இந்த ஆலயத்திற்கு இவர்கள் வந்து செல்வதை வியன்னாவில் இருக்கும் ஆதிக்கசாதி சீக்கியர்கள் விரும்பவில்லை. அங்கே மொத்தம் 3000 சீக்கிய மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த ஆலயத்திற்குள் துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் புகுந்த ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் ஆறுபேர் அங்கு கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். உள்ள இருந்த நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட சீக்கியர்கள் அதை எதிர்த்து போராடுகிறார்கள். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குரு சாந்த் ராமா நந்த் (57) இறந்து போகிறார். மற்றொரு குருவான நிரஞ்சன்தாஸ் (68) அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி சீக்கியர்களை கோவிலில் உள்ள மக்கள் திருப்பித் தாக்கியதில் அவர்களில் இரண்டுபேர் அபாய கட்டத்திலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை கைது செய்த வியன்னா போலிசு விசாரணையை நடத்தி வருகிறது.

குரு சாந்த் ராமா நந்த் இறந்த செய்தியைக் கேட்ட உடனே ஆத்திர மடைந்த தலித் சீக்கிய மக்கள் அதுவும் வெளிநாட்டில் கூட தனது குருநாதரை ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் கொன்றதைக் கேட்டு பதறி கோபம் கொண்ட மக்கள் பஞ்சாப்பில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பொதுவில் ஆதிக்க சாதி சீக்கியர்கள் வர்க்க ரீதியிலும் மேல்நிலைமையில் இருப்பதால் அவர்களது அலுவலகம், வாகனங்கள், கடைகள் அனைத்தும் எரிக்கப்பட்டன. கூடவே அரசு அலுவலகங்கள், ரயில்கள் எல்லாம் தாக்கப்பட்டன.

பஞ்சாப்பின் நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலிசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இராணுவமும் பஞ்சாப்பில் அமைதியைக் கொண்டுவர இறக்கி விடப்பட்டுள்ளது. தலித் சீக்கியர்கள் அதிகமிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.  ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்கள் இத்தனை காலமும் அடங்கிக் கிடந்த தலித் சீக்கியர்கள் ஆவேசத்துடன் எழுந்திருப்பதைக் கண்டு பொருமுகிறார்கள்.

மற்ற படி எந்த அரசியல் கட்சியும் தலித் சீக்கியர்களின் பக்கம் இல்லை, எல்லாம் உயர் சாதி தரப்பை ஆதரித்துத்தான் இயங்குகின்றன. வெளிநாட்டில் கூட தமது மக்கள் ஆதிக்க சாதி சீக்கிய வெறியர்களால் தாக்கப்படுவதைக் காணசகிக்க முடியாமல் பஞ்சாபின் தலித் மக்கள் போராடுகிறார்கள். வரலாற்று ரீதியாகவே வஞ்சிக்கப்படும் இந்த சமூகம் இப்போது திருப்பித் தாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் ஒடுங்கிப் போவதாகவே இருக்க மாட்டார்கள். அதனால்தான் இந்த பஞ்சாப் ‘கலவரம்’ மற்றபடி இந்த உண்மையை மறைத்து பிரதமரும், சிரோன்மணி அகாலி தள கட்சியும் சீக்கிய மக்களை அமைதி காக்குமாறு வேண்டுவதெல்லாம் பலனளிக்காது. ஆதிக்க சாதி சீக்கிய வெறி தண்டிக்கப்பட்டால்தான் இந்தக் ‘கலவரம்’ தணியும்.

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


  1. உண்மை என்னான்னே தெரியாம நம் தமிழ் ‘உணர்வாளர்கள்’ சீக்கிய இன எழுச்சி, வெங்காயம், வெள்ளப்பூண்டுன்னு எழுதி இன்றைய தமிழ்மணம் இலவச ஆவி எழப்பும் சேவையை முடிச்சிட்டாங்க

  2. விளக்கத்துக்கு நன்றி! இப்போதுதான் நடப்பது என்ன என்று ஓரளவுக்காவது புரிகிறது.

    ஆனால் எத்தனை காரணங்கள் இருந்தாலும் அலுவலகங்களும், வாகனங்களும், கடைகளும், அரசு அலுவலகங்களும், ரயில்களும் தாக்கப்படுவது பெரும் தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனக்கு தோன்றியபடி தண்டனை அளிக்க ஆரம்பித்தால் இந்தியா போன்று ஓரளவே அநியாயங்கள் நடக்கும் நாட்டில் பண பலமும் அதிகார பலமும்தான் வெல்லும்.

  3. வியன்னாவில் இச்சம்பவம் நடந்தவுடன் பல தமிழ் தேசியவியாதிகள் வாய் கிழிய சொன்னார்கள் அங்க பார் ஒரு சீக்கியன அடிச்சுட்டாங்கன்னா பஞ்சாப் பத்தி எரியுது ஆனா தமிழ் நாட்டுல ……
    உண்மை நிலவரமே தேரா சச்சா என்ற தலித் சீக்கிய மக்களின் போராட்டம்தான் ,இது குறித்து எப்பத்திரிக்கையும் தெளிவாக விளக்காத நிலையில் நக்கீரன் மட்டும் தான் ஒற்றை வரியில் தேரா சச்சா தலித் மக்களின் பெரும்பான்மையான சீக்கிய அமைப்பு என போட்டிருந்தது(நேற்று).
    இது குறித்து ஒரு முடிவுக்கு காலையில் வந்திருந்த நேரம் இக்கட்டுரை வந்தது மிக்க பயனுள்ளதாக அமைந்திருந்தது. இது போல ஏதாவது ரெண்டு பேர் அடித்து கொண்டால் கூட அது தேசிய இன போராட்டம் என கூறும் தமிழ் தேசிய வியாதிகள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்
    கலகம்

  4. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்களாகவே இருக்கட்டும்;கண்ணீல்படுகிற பொருட்கள் அனைத்தையும் உடைப்பதை எப்படி போராட்டமாக கொள்ள முடியும். அது இன்னொரு பிரிவு உழைக்கும் மக்களூக்கு எதிரானது அல்லவா. எதிரி யார் என்ற வரையறுப்பின்றீ நடைபெறும் இப்போரட்டங்களை ஆதரிப்பது கம்யூனிசப் போராட்டங்கள் குறீத்த எதிர்மறைப் புரிதலை உருவாக்கும் அச்சம் உள்ளது.

  5. //மேல்சாதி சீக்கியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.// மேல்சாதி என்ற சொற்பிரயோகம் சரியல்ல! கீழ்சாதி என நாம் சொல்வதில்லை. ஒன்று அடைப்புக்குறிக்குள் போட வேண்டும். அல்லது ஆதிக்க சாதி என சொல்லப்பட வேண்டும். ஏற்கனவே ஒருமுறை சுட்டிக்காட்டப்பட்டு மாற்றிக்கொண்டீர்கள். மீண்டும் அதே தவறு. கவனம் கொள்ளவும்.

    • விக்ரமாதித்யன்,

      தவறுகளை திருத்தி விட்டோம், இனி கவனமாக இருப்போம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

      நட்புடன்
      வினவு

  6. பஞ்சாப் ‘கலவரம்’ – தலித் மக்களின் போராட்டம் !…

    ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு சீக்கிய குரு கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் முழுவ…

  7. முற்றிலும் தமிழ் வாசகர்களுக்கு வேறு எந்த செய்தி ஊடகமும் கூறாத புதிய தகவல்.
    மிக்க நன்றி.
    அதே நேரம், கீழ் சாதி சீக்கியர்கள் செய்த அட்டூழியம் அனைத்தும் ‘எதிர்தாக்குதல்’ என்று வினவு நியாப்படுத்த முயன்றிருப்பது வேதனை தருகிறது. ‘ஆதிக்கசாதியின் அடக்குமுறை தவறு எனும் அதேவேளை ஒடுக்கபட்டோரின் வன்முறை தான் சரியான தீர்வு’ என வினவு நினைக்கிறதா என்ன?

    • நண்பரே,

      தலித் சீக்கியர்களின் ‘வன்முறை’ என்பது வரலாறு முழுவதும், நிகழ் காலத்திலும் அவர்கள் மீது ஆதிக்கசாதி சீக்கியர்கள் தொடுத்து வரும் வன்முறையின் எதிர்விளைவே. இந்த சாதி ஒடுக்குமுறை பல்வேறு அளவுகளில் அன்றாடம் நிகழ்ந்து வந்தாலும் அதை நாம் வன்முறை அற்றதாக அல்லது இயல்பான ஒன்றாக கருதி விடுகிறோம். இந்த அநீதி தண்டிக்கபடாதவரை. அல்லது தடுத்து நிறுத்தப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்களின் ‘வன்முறையை’ நாம் கண்டிக்க இயலாது. இதை நாம் ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமா என்பதல்ல பிரச்சினை. அதன் மூல காரணம் வேரறுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதுதான் பிரச்சினை.

      நட்புடன்
      வினவு

      • நன்று வினவு.
        அப்படியென்றால், இதே அளவுகோளைத்தான், ஈழ போருக்கும், காஷ்மீர் போருக்கும், பாலஸ்தீன போருக்கும், மாவோயிஸ்ட் போருக்கும் பேணுவீர்களா? ஒரு இடத்தில் சாதி என்றால், வேரொரு இடத்தில் மொழி, பிரிதொரு இடத்தில் மதம், மற்றொரு இடத்தில் இனம். மொத்தத்தில் ஆதிக்க பிரிவினருக்கு எதிரான‌ அடக்கப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவினருடைய‌ போர்கள்தானே அவை? இந்த அளவுகோளுடன் தங்கள் கைகளில் ஆட்சி இருந்தால், உங்கள் ராணுவமும் போலிசும் என்ன பண்ணும்?

        உலகிலேயே “தூய்மையான ஆட்சி” நடப்பதாக முஸ்லிம்களால் நம்பப்படும் சவூதியில் ஷியா குடிமக்களுக்கு அப்பட்டமான பாகுபாடு காண்பிக்கப்படுகிறதே! /// இந்த அநீதி தண்டிக்கபடாதவரை. அல்லது தடுத்து நிறுத்தப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்களின் ‘வன்முறையை’ நாம் கண்டிக்க இயலாது. இதை நாம் ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமா என்பதல்ல பிரச்சினை. அதன் மூல காரணம் வேரறுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதுதான் பிரச்சினை./// சிறுபாண்மையினருக்காக (சாதி, இன, மொழி, மத) அரசு இறங்கி வந்தால் (இட ஒதுக்கீடு, சலுகை என்று) , பெரும்பாண்மை சமுதாயம் அரசுக்கு எதிராய் திரும்பிவிடுவதால் ஆட்சி போய் விடுகிறதே? பின் எப்படி ஜனநாயக அரசு மூல காரணத்தை சரி செய்யும்?

        ஆக, இந்த சமத்துவ மாற்றம் மக்களிடமிருந்து அல்லவா வரவேண்டும்! இன்னும் புரியவில்லை என்றால், குஜராத்தில் சூடான இரத்தக்கறையுடன் மோடி வென்றது ஜன்நாயகம் மூலம் தானே! எவராவது ஓட்டுப்போட்ட குஜராத் மக்களை குறை கூறியது உண்டா? அராஜகமிழைப்போரை விட அராஜகம் செய்வோரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதுதானே மகா பாதக செயல்? அழகிரியை விட மதுரை மக்கள்தானே மோசமானவ்ர்கள்? மூல காரணம் வேரறுக்கப்படும் வரை_ அதற்கு பலநூறு ஆண்டுகள் ஆனாலும், அப்பாவி மக்கள் (ஒடுக்கப்பட்டோர் கலவரத்தில் உயிர்,சொந்தம், சொத்து, மானம், நிம்மதி இழந்தோர்) அல்லல் பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?

        அதனால்தான் கேட்கிறேன், ஒடுக்கப்பட்டோரின் வன்முறையை அவர்களுக்கு அநீதி இழைத்தவர்களை விட்டுவிட்டு அப்பாவிகள் மேல் நடத்துவது அராஜகமில்லையா?

        நட்புடன்,
        mmm,

        • MMM,

          தலித்துக்கள் மீது அன்றாடன் நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்படாதவரை அவர்களின் எதிர் வன்முறையும் நிறுத்தப்படாது என்ற எளிய உண்மையை புரிந்து கொள்வதற்கு எதற்காக இத்தனை சிக்கலான ஒப்பீடுகள் என்பது தெரியவில்லை. பஞ்சாப்பில் ஆதிக்கசாதி வெறியர்கள் யாரும் கொல்லப்பட்டதாக தகவல் இல்லை. அவர்களின் சொத்தும், அதிகமும் ஆதிக்க சாதியினருக்கு பயன்படும் பொதுச் சொத்துக்களும்தான் அங்கே தாக்கப்பட்டிருக்கின்றன. சிலநாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தில் மூன்று தலித்துக்கள் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்கள். இப்படி அன்றாடன் நிகழும் வன்முறைகள் நமது கவனத்திற்கு வராமல் போனதன் மர்ம்மென்ன? வியன்னாவில் தலித்துகளின் குரு கொல்ப்பட்டிருக்கிறார். அந்த கோபத்தை பஞ்சாப் தலித்துக்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆதிக்கசாதி வெறியர்கள் பெரும்பாலும் சட்டத்தாலும் நீதியாலும் தண்டிக்கப்படுவிதில்லை என்பதையும் இங்கே நினைவு கூரவேண்டும். இப்படி நீதி கிடைக்காத தலித்துக்கள் என்ன செய்யவேண்டுமென உங்களைப் போல நடுநிலைமயில் சிந்திப்பவர்கள் வழிமொழியலாமே?

          நட்புடன்
          வினவு

  8. நன்று. அப்படியென்றால், இதே அளவுகோளைத்தான், ஈழ போருக்கும், காஷ்மீர் போருக்கும், பாலஸ்தீன போருக்கும், மாவோயிஸ்ட் போருக்கும் பேணுவீர்களா? ஒரு இடத்தில் சாதி என்றால், வேரொரு இடத்தில் மொழி, பிரிதொரு இடத்தில் மதம், மற்றொரு இடத்தில் இனம். மொத்தத்தில் ஆதிக்க பிரிவினருக்கு எதிரான‌ அடக்கப்படும் ஒடுக்கப்பட்ட பிரிவினருடைய‌ போர்கள்தானே அவை? இந்த அளவுகோளுடன் தங்கள் கைகளில் ஆட்சி இருந்தால், உங்கள் ராணுவமும் போலிசும் என்ன பண்ணும்?

    உலகிலேயே “தூய்மையான ஆட்சி” நடப்பதாக முஸ்லிம்களால் நம்பப்படும் சவூதியில் ஷியா குடிமக்களுக்கு அப்பட்டமான பாகுபாடு காண்பிக்கப்படுகிறதே! /// இந்த அநீதி தண்டிக்கபடாதவரை. அல்லது தடுத்து நிறுத்தப்படாத வரை ஒடுக்கப்பட்ட மக்களின் ‘வன்முறையை’ நாம் கண்டிக்க இயலாது. இதை நாம் ஆதரிக்கிறோமா எதிர்க்கிறோமா என்பதல்ல பிரச்சினை. அதன் மூல காரணம் வேரறுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதுதான் பிரச்சினை./// சிறுபாண்மையினருக்காக (சாதி, இன, மொழி, மத) அரசு இறங்கி வந்தால் (இட ஒதுக்கீடு, சலுகை என்று) , பெரும்பாண்மை சமுதாயம் அரசுக்கு எதிராய் திரும்பிவிடுவதால் ஆட்சி போய் விடுகிறதே? பின் எப்படி ஜனநாயக அரசு மூல காரணத்தை சரி செய்யும்?

    ஆக, இந்த சமத்துவ மாற்றம் மக்களிடமிருந்து அல்லவா வரவேண்டும்! இன்னும் புரியவில்லை என்றால், குஜராத்தில் சூடான இரத்தக்கறையுடன் மோடி வென்றது ஜன்நாயகம் மூலம் தானே! எவராவது ஓட்டுப்போட்ட குஜராத் மக்களை குறை கூறியது உண்டா? அராஜகமிழைப்போரை விட அராஜகம் செய்வோரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவதுதானே மகா பாதக செயல்? அழகிரியை விட மதுரை மக்கள்தானே மோசமானவ்ர்கள்? மூல காரணம் வேரறுக்கப்படும் வரை_ அதற்கு பலநூறு ஆண்டுகள் ஆனாலும், அப்பாவி மக்கள் (ஒடுக்கப்பட்டோர் கலவரத்தில் உயிர்,சொந்தம், சொத்து, மானம், நிம்மதி இழந்தோர்) அல்லல் பட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா?

    அதனால்தான் கேட்கிறேன், ஒடுக்கப்பட்டோரின் வன்முறையை அவர்களுக்கு அநீதி இழைத்தவர்களை விட்டுவிட்டு அப்பாவிகள் மேல் நடத்துவது அராஜகமில்லையா?

Leave a Reply to mmm பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க