Sunday, June 4, 2023
முகப்புசிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
Array

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

-

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 9

சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!“படுகொலை, படுகொலை” என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் “கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி” என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.  சிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள்  சித்தரித்தன. அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன,  “அரசு சாராத சுதந்திர” ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.

ஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் “தென்னாபிரிக்கா”, “சிம்பாப்வே”, ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின்  படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து “விவசாயிகள்” வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து “ரொடீஷியா” என்ற நாடு உருவாக்கப்பட்டது.

சிசில் ரோட்ஸ்தென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி “சிசில் ரோட்ஸ்” ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு “ரொடீசியா” என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது.  உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு  சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள்,  ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, “லங்கஸ்டர்” ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, “சிம்பாப்வே” என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.

zimbabwe-povertyசுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை “விவசாயிகள்” எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் “நிற வேற்றுமை பார்க்காதவர்கள்”, “கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்” என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே  என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

எது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய  ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. “நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்” என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் “வெள்ளை அகதி” களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. “மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக” பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.

reigerpark_wideweb__470x3030சிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன.  அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு “ஜனநாயகவாதி”யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன்? என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், “ஜனநாயகம், மனித உரிமைகள்” என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.

COMMONWEALTH ZIMBABWE QUITமுகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான்.  சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை.  ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம்  ஸ்தம்பித்துவிடும் என்று,  நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

_38435185_zanupf_ap300அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் “புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை” பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.

ZIMBABWEஇஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த “லங்கஸ்டர்” சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.

zimbabweசிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும்  நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர்.   சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால்,  பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.  “பயங்கரவாத்திற்கெதிரான போர்” சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை.  இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன.  நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…



தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

  1. சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!…

    சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என…

  2. ஜிம்பாப்வே பற்றியும், முகாபே பற்றியும் என்னுடைய புரிதல் தவறாக இருந்தது. உங்கள் கட்டுரை அதை மாற்ற பெரிதும் உதவியது. நன்றி கலையரசன்,

    • ராபர்ட் முகாபே ஒரு அரக்கன் என அகில உலக மீடீயாவும் கார்டூன் கிறுக்கி தள்ளும்போதே நெனச்சேன் ஏதோ பிரச்சனையின்னு. இப்ப புரிஞ்சாச்சு. இந்த ஆப்ரிக்கா செய்திகளை நேர்மையா வெளியிட இந்தியாவுல ஒரு பத்திரிக்கையும் இல்லையே! பொதுவாக முற்போக்கு அன அறியப்படும் தெகல்கா, கவர்ட், பிரன்ட்லைன போன்ற பத்திரிக்கைகள் கூட ஆப்ரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மொத்ததில் இந்த ஆப்பிரக்கா தொடர் பலரது கருத்தை மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையாகாது

  3. முட்டைக்கு நூறு பில்லியன் டாலர் கொடுத்து வாழும் மக்கள் முகாபேயின் ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள் என்பது உங்கள் கருத்தா? சிம்பாப்வே மக்கள் முகாபேக்கு முன்னால் இருந்ததை விட இன்றைக்கு நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? மேலை நாடுகளை எதிர்த்தால் போதும், எப்பேர்ப்பட்ட அயோக்கியனையும் ஆதரிப்பீர்கள் போலிருக்கிறது! நல்ல வேளை இடி அமீன் அதிகாரத்தில் இல்லை.

    • ஆர்.வி… நீங்கள் கூறியிருப்பதை போல கட்டுரையில் எங்குமே இல்லையே.? உங்களுக்கு இப்படி சந்தேகம் வரத்தூண்டிய வரிகளை குறிப்பிட்டால் எங்களுக்கும் புரியுமல்லவா?

    • நன்பரே, 2005-08 சிம்பாவேயின் இருண்ட காலத்தில், நான் அங்குதான் இருந்தேன். மேற்க்குலகம் சிம்பாவை பற்றி தவறாக எழுதின என்பதும். அத்தேசத்தை ஆப்பிரிக்கா உடனான பொருளாதார பனிபோராக பயன்படுத்தின என்பதே உன்மை.

  4. முட்டை மற்றும் நூறு பில்லியன் டாலர் நோட்டு படத்தை பாருங்கள். இப்படி ஒரு படத்தை இந்த பதிவில் போட வேண்டிய காரணம்?

    • பில்லியன் மில்லியனெல்லாம் நமக்கு வேணா பெரிசா இருக்கலாம்.. மத்தபடி அது ஒரு அச்சடிச்ச காகிதம் தானே? சிம்பாவேயின் பொருளாதாரம் பாதாளத்தில் இருப்பது உண்மை தான்… அங்கே ஆப்ரிகர்கள் வெள்ளையன் காலை நக்கிக் கொண்டிருந்தால் ஒருவேளை அவன் வாழ்க்கை ஒளிமயமாகியிருக்குமா என்ன?

      ஆப்ரிகர்கள் இழக்க என்னதான் இருக்கிறது? அவர்கள் தான் ஏற்கனவே எல்லாவற்றையும் இழந்து விட்டார்களே.. ஆனால் அவர்கள் போராட்டம் சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.

      ஆர்வியிடம் இருப்பது ”டைம்ஸ் ஆப் இண்டியா” மனப்பான்மை போலத் தெரிகிறது 😉

      அப்படின்னா என்னான்னு கேட்காதீங்க பாஸ்

      • ஆர்கே,

        இந்த அச்சடித்த காகிதத்துக்கு ஜிம்பாப்வேயில் மட்டும் மதிப்பு இல்லாத காரணம் என்ன என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முயற்சியாவது செய்யுங்கள். ரொம்ப சிம்பிள் – முகாபேவுக்கு முன், இப்போது இந்த இரண்டு தருணங்களில் எப்போது ஒரு கறுப்பு ஜிம்பாப்வேயனின் வாழ்க்கை பெட்டர்?

        // ஆர்வியிடம் இருப்பது ”டைம்ஸ் ஆப் இண்டியா” மனப்பான்மை போலத் தெரிகிறது. அப்படின்னா என்னான்னு கேட்காதீங்க பாஸ் //
        அப்படின்னா என்னான்னு தெரியாதுதான். ஆனால் தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.

        அரை டிக்கெட்,
        அமெரிக்காவை வெளிப்படையாகவே எதிர்க்கும் க்யூபாவிலும், வட கொரியாவிலும், நிலைமை இப்படித்தான் இருக்கிறதா? ஜிம்பாப்வேயை அதல பாதாளத்துக் கொண்டு போனது முகாபே. முகாபே மேலை நாடுகளை எதிர்க்கிறார் (பின் என்ன செய்வார்? இனி மேல் அவரை மேலை நாடுகள் ஆதரிப்பது கஷ்டம். He has crossed the point of no return.) என்பதற்காக அவர் செய்யும் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டாதீர்கள்!

    • முட்டை படத்துக்கு பக்கத்திலேயே உள்ள பத்தியில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறதே. INFLATION என்பது உள்நாட்டு அரசால்தான் உருவாக வேண்டும் என்பது அல்ல பொருளாதார தடைகள் மூலம் எந்த நாட்டின் பொருளாதாரத்தையும் முறிக்கும் சக்தி ஏகாதிபத்தியங்குள்க்கும் அதன் மூலதனத்திற்கும் உண்டு.

    • RV, உங்கள் கேள்விக்கு விளக்கம் எனது கட்டுரையின் கடைசிப் பந்தியில் உள்ளது. அதனை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

      உலகமயமாக்கப்பட்ட உலகில் மேலை நாடுகளை பகைத்துக் கொண்டு நிலைத்து நிற்பது கஷ்டம். கியூபா, வட-கொரியா உதாரணங்களை காட்டி இருக்கிறீர்கள். நல்லது. அந்த நாடுகளில் ஏற்கனவே இருந்த சோஷலிச பொருளாதார திட்டமிடல் காரணமாக சிம்பாப்வே நிலைமை வரவில்லை. முகாபே ஒரு காலத்தில் மார்க்சிசம் பேசியவர் தான். ஆனால் அவரிடம் சரியான மார்க்சிய பொருளாதார திட்டம் எதுவும் இல்லை. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாற்றான எதையும் கொண்டிருக்கவில்லை. முகபேயும் அவரை சார்ந்தவர்களும் செல்வந்தர்களாக உள்ளனர். வெள்ளையின முதலாளிகள் வெளியேற்றப்பட்டு விட்டனர். அதேநேரம் உள்நாட்டு முகாமையாளர்களும் திறமையானவர்கள் அல்ல. அங்கே ஊழல் அதிகம். தானே பணக்காரனாக வேண்டும் என்ற சுயநல மனப்பான்மை இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது. சிம்பாப்வேயின் பொருளாதாரத்திற்கு பிற ஆப்பிரிக்க நாடுகள் உதவ முடியாதா? ஒவ்வொரு நாடும் தனது உற்பத்திப் பொருளை சர்வதேச சந்தையில் விற்க வேண்டும் என்பது சந்தை விதி. எல்லா நாடுகளும் இந்த விதியை புனிதமாக கருதிக் கொள்கின்றன. அப்படியே மீறி நேரடியாக சிம்பாப்வேயுடன் வர்த்தக தொடர்பு வைத்தால், சர்வதேச வர்த்தக சமூகம் தண்டனை கொடுக்க தயாராக உள்ளது. இதனால் சிம்பாப்வேயும் தனக்கு வேண்டிய பொருட்களை சர்வதேச சந்தையில் இருந்து தான் வாங்க வேண்டும். சிம்பாப்வேக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைத் தாண்டி வருவதென்பது சுலபமல்ல. அப்படி வரும் பொருட்கள் அரிதாக கிடைப்பதால் அதிக விலைக்கு விற்படுகின்றன. அதே நேரம் சிம்பாப்வேயின் உள்நாட்டு உற்பத்திகள் ஏற்றுமதியாவதில்லை. இதனால் மக்களிடம் வாங்கும் திறன் மிகக் குறைவு. ஒரு பொருளின் விற்பனை விலை அதிகமாகவும், மக்களின் வாங்கும் திறன் குறைவாகவும் இருக்கும் நிலையில் பண வீக்கம் அதிகரிக்கும். இது தான் சிம்பாப்வேயில் நடந்தது.

      இதற்காக முகாபேயை குற்றம் சாட்டுவது என்பது, பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது போன்றது. கிட்டத்தட்ட சிம்பாப்வே போன்றதொரு நிலைமையை போரினால் பாதிக்கப்பட்ட வட-இலங்கையில் பார்த்திருக்கிறேன். புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட மாகாணத்தின் மீது அரசு பொருளாதாரத் தடை போட்டிருந்தது. அங்கேயிருந்து உற்பத்திப் பொருட்கள் இலங்கையின் பிற பாகங்களுக்கு செல்லவில்லை. அதே நேரம் பல பாவனைப் பொருட்கள் கொழும்பில் இருந்து கொண்டு வர வேண்டி இருந்தது. அத்தகைய நிலையில் ஒரு பாவனைப் பொருளின் விலை, கொழும்பில் விற்பதை விட பத்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. சிம்பாப்வேயின் பொருளாதார பிரச்சினைக்கு நீங்கள் முகாபேயை குற்றம் சாட்டுகிறீர்கள். வட இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளுக்காக இலங்கை அரசு அன்று புலிகளை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. அன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இலங்கை அரசின் முற்றுகைக்குள் இருந்தது. அதே போல சிம்பாப்வே மேலைத்தேய நாடுகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ளது.

      • கலையரசன்,

        முதலில் உங்களுக்கு நன்றி! உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவன். வினவு தளத்தின் ஒரு பெரிய பலம் உங்கள் கட்டுரைகள்.

        ஜிம்பாப்வேயின் இன்றைய நிலைக்கு முகாபேயை விட மேலை நாடுகள்தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறீர்கள். முபாவேவும் ஒரு காரணம்தான், ஆனால் மேலை நாடுகளின் வர்த்தக காலனியலிசமே முக்கிய காரணம் என்று சொல்கிறீர்கள். நான் வர்த்தக காலனியலிசமும் ஒரு காரணம், ஆனால் முகாபேயின் ஆட்சிதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். முகாபேவின் தவறுகளை நீங்களும் பட்டியல் இடுகிறீர்கள்.

        முகாபே கிட்டத்தட்ட முப்பது வருஷங்களாக ஆட்சியில் இருக்கிறார். சர்வதேச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 5 வருஷம் இருக்கலாம். முப்பது வருஷ வீழ்ச்சிக்கு எப்படி 5 வருஷ தீர்மானத்தை காரணமாக காட்டுகிறீர்கள்? நீங்கள் சொல்வது போல “நில அபகரிப்பு” நடந்திருக்கிறது. பிறகு வெள்ளை இன விவசாயிகள் வெளியேறாமல் என்ன செய்வார்கள்?

        முகாபே பாதிக்கப்பட்டவர் இல்லை. பாதிக்கிறவர்.

  5. தோழர் அர டிக்கட்டு சொல்வது சரியானது தான்.
    மேற்கத்திய நாடுகள் ஏன் முகாபேவை எதிர்க்கின்றன என்று தான் யோசிக்கவேண்டியதிருக்கிறது, ஏனென்றால் மூலதனத்திற்கு எதிராக உயிரோடிருப்பதே பயங்கரவாதம் தான் அவர்களுக்கு.

    தோழமையுடன்
    செங்கொடி

  6. நண்பர் ஆர்வி,

    நில அபகரிப்பு என்று கூறுவதே தவறான சொற்பாவனை என கருதுகிறேன். ஏற்கனவே அபகரித்து வைத்திருந்ததை மீட்டெடுத்திருக்கிறார்கள் என்பது தான் சரியானதாக இருக்கும். தற்போதைய பொருளாதார நிலைக்கு யார் அதிக காரணம் என்பது பக்க நிலையை மட்டும் சார்ந்ததல்ல. நூற்றாண்டுகளாய் சுரண்டிக்கொண்டிருந்து விட்டு, வெளியேரும் போதும் சுரண்டலுக்கு ஆதரவான சட்டங்களை தக்கவைக்கும் ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அவைகளை முழுமையாக தகர்க்கமுடியாதபடி நிர்ப்பந்தங்களையும் கொடுத்துவிட்டு; முப்பது ஆண்டுகள் ஆண்டுவிட்டாரே என்பது எப்படி சரியாகும்? முகாபே சரியான திசையில் செல்லவில்லை, தவறுகள் செய்திருக்கிறார். அவைகளை நியாயப்படுத்த முடியாது. ஆனால் சரியாய் செப்பனிடாதவன் இடித்தவனைவிட குற்றவாளியா?

    தோழமையுடன்
    செங்கொடி

  7. செங்கொடி,

    // நில அபகரிப்பு என்று கூறுவதே தவறான சொற்பாவனை என கருதுகிறேன். //
    நானும் அப்படித்தான் கருதுகிறேன். அதனால்தான் கலையரசன் அந்த சொற்றொடரை பயன்படுத்தி இருந்தாலும், அதை அடைப்புக்குறிகளுக்குள் எழுதி இருக்கிறேன். வெள்ளையர்கள் பல விவசாய முன்னேற்றங்களை கொண்டு வந்திருப்பார்கள்தான். ஆனால் நிலம் ஆப்பிரிக்க குடிகளிடம் ஒரு clan-க்கு உரிமையாக இருந்திருக்கும், அங்கே திடீரென்று நிலம் தனி மனித உடைமை என்று ஐரோப்பியர்களின் பழக்கத்தை அங்கே கொண்டு வருவது,அந்த நிலத்தின் மேல் அவர்களுக்கு உள்ள உரிமையை கேள்விக்கு உண்டாக்குகிறது என்பது என் எண்ணம்.

    // ஏற்கனவே அபகரித்து வைத்திருந்ததை மீட்டெடுத்திருக்கிறார்கள் என்பது தான் சரியானதாக இருக்கும். //
    திருடன் இன்னொரு திருடனிடம் – இல்லை, இன்னொரு திருடனின் சந்ததியினரிடம், திருடிய பொருளை இன்னும் உபயோகமானதாக ஆக்கிய சந்ததியினரிடம் – பிடுங்கி எடுப்பதை மீட்பு என்று சொல்லாதீர்கள். அப்படி நிலம் “நியாயமாக” பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால் ஜிம்பாப்வேயின் நிலை இவ்வளவு மோசமானது எப்படி என்று யோசித்து பாருங்கள். இன்றைய வெள்ளை ஜிம்பாப்வேயினர் பலர் ஜேப்பியார் போன்றவர்கள் இல்லை. அவர்களை எடுத்துவிட்டு கருப்பு ஜேப்பியார்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாடிவிட்டு மற்றவர்களை சுரண்டி வாழ்கிறார்கள். தோல் நிறம் மாறிவிட்டதால் அதிகமாக சுரண்டினாலும் பரவாயில்லை என்று சொல்வது தவறு. அடிமைக்கு எஜமான் கறுப்பாய் இருந்தால் லாபமா, வெளுப்பாய் இருந்தால் நஷ்டமா?

    // முகாபே சரியான திசையில் செல்லவில்லை, தவறுகள் செய்திருக்கிறார். அவைகளை நியாயப்படுத்த முடியாது. ஆனால் சரியாய் செப்பனிடாதவன் இடித்தவனைவிட குற்றவாளியா? //
    முகாபே சரியாக செப்பனிடவில்லை என்பதெல்லாம் சரி இல்லை. அவர் செப்பனிடவே இல்லை. இருந்த கொஞ்சநஞ்சத்தையும் இடித்து தள்ளிவிட்டார்.

  8. நண்பர் ஆர்வி,

    ” திடீரென்று நிலம் தனி மனித உடைமை என்று ஐரோப்பியர்களின் பழக்கத்தை அங்கே கொண்டு வருவது,”

    “இன்னொரு திருடனின் சந்ததியினரிடம், திருடிய பொருளை இன்னும் உபயோகமானதாக ஆக்கிய சந்ததியினரிடம் – பிடுங்கி எடுப்பதை மீட்பு என்று சொல்லாதீர்கள்.”

    நீங்கள் எழுதியுள்ள மேற்கண்ட இரண்டு சொற்றொடர்களுக்குமிடையிலான தொனி மாறுபாட்டை விளங்கிக்கொள்கிறீர்களா?
    முகாபே நியாயமான முறையில் நிலப்பங்கீட்டை செய்யவில்லை தான். ஆனால் நிலப்பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தங்களின் சொந்த நிலத்திலேயே நூற்றாண்டுகளாய் அடிமையாய் கூலியாய் உழைத்தவர்கள் நிலம் பெற்றிருக்கிறார்கள். அது நியாயமான முறையில் நடந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஒரு மூன்றாம்தர அரசியல்வாதியாகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார், என்றாலும் இந்த இடத்தில் நீங்கள் கவனிக்க மறுக்கும் ஒரு விசயம் இருக்கிறது, சர்வதேச சமூகத்தின் பாத்திரம். ரொடீஷிய காலனியாதிக்கம் சிம்பாப்வே மக்களை முன்னேற்றும் நோக்கில் நடைபெற்றிருக்க முடியாது. அதன் பின்னரும் (சிம்பாப்வே ஆன பின்னரும்) ரொடீஷிய தன்மையிலிருந்து மீளாதிருப்பதற்காகவே இன்றுவரை சர்வதேச சமூகம் தடைகளையும், கடன் என்ற பெயரில் கட்டுப்பாடுகளையும் விதித்துவருகிறது. ஆகவே முகாபே என்ற கோட்டின் நீளத்தை அளக்க வேண்டுமென்றால், பக்கத்தில் மிக நீளமாக இருக்கிற காலனியாதிக்க கோட்டையும், இன்னொரு கோடான தற்போதைய சர்வதேச சமூக தடைகள் நிர்ப்பந்தங்கள் என்ற கோட்டையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும். மாறாக அந்த இரண்டு கோட்டையும் விட்டுவிட்டு இந்தக்கோட்டை மட்டும் அளந்துபார்ப்பது தவறான அள‌வீடாகவே முடியும். இது நிச்சயமாக முகாபே என்ற கோட்டின் நீளத்தை குறைக்கும் முயற்சியல்ல.

    தோழமையுடன்
    செங்கொடி

  9. செங்கொடி,

    // ” திடீரென்று நிலம் தனி மனித உடைமை என்று ஐரோப்பியர்களின் பழக்கத்தை அங்கே கொண்டு வருவது,”
    “இன்னொரு திருடனின் சந்ததியினரிடம், திருடிய பொருளை இன்னும் உபயோகமானதாக ஆக்கிய சந்ததியினரிடம் – பிடுங்கி எடுப்பதை மீட்பு என்று சொல்லாதீர்கள்.” //
    எனக்கு ஒரு முரண்பாடும் தெரியவில்லையே!

    // முகாபே என்ற கோட்டின் நீளத்தை அளக்க வேண்டுமென்றால், பக்கத்தில் மிக நீளமாக இருக்கிற காலனியாதிக்க கோட்டையும், இன்னொரு கோடான தற்போதைய சர்வதேச சமூக தடைகள் நிர்ப்பந்தங்கள் என்ற கோட்டையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும். மாறாக அந்த இரண்டு கோட்டையும் விட்டுவிட்டு இந்தக்கோட்டை மட்டும் அளந்துபார்ப்பது தவறான அள‌வீடாகவே முடியும். இது நிச்சயமாக முகாபே என்ற கோட்டின் நீளத்தை குறைக்கும் முயற்சியல்ல. //
    போன மறுமொழியில் “சரியாக செப்பனிடவில்லை” என்று சொல்லி இருந்தீர்கள். எதோ முகாபே முயற்சி செய்த மாதிரியிம், செய்த முயற்சியில் குறைகள் இருந்த மாதிரியும் இருந்தது. இப்போது முகாபேவின் குறைகளை மறுக்க முயற்சி செய்யவில்லை என்று சொல்கிறீர்கள். சரி.

    காலனி ஆதிக்கம் இருந்துவிட்டால் போதும், வரும் ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு கிடையாதா என்ன? சர்வ தேச தீர்மானங்கள், ஒதுக்குதல் முதலியவை முகாபேவின் ஆட்சியின் விளைவுகள். நீங்கள் காரணத்தையும் விளைவுகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள். இன்றைய ஜிம்பாப்வேவின் நிலைக்கு முகாபேவே முக்கிய காரணம் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

    இந்த கட்டுரையிலும் சரி, பல மறுமொழிகளிலும் சரி, முகாபேவின் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் தொனி நிறைய இருக்கிறது. நம்முடைய prejudices தவிர்க்க முடியாதவைதாம். ஆனால் மேலை நாடுகளை எதிர்க்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு திருடனை ஆதரித்து பேசாதீர்கள். முன்பே சொன்ன மாதிரி அடிமைக்கு எஜமான் கறுப்பாக இருந்தால் நஷ்டமா, இல்லை வெளுப்பாக இருந்தால் லாபமா?

  10. நண்பர் ஆர்வி,

    சொந்த நாட்டில், சொந்த மண்ணில் காலாகாலமாய் விவசாயம் செய்துவந்தவர்களை ஆயுத வலிமையால் பறித்து தமக்கு சொந்தமாக்கிக்கொண்டதை குறிப்பிடும்போது, ” திடீரென்று நிலம் தனி மனித உடைமை என்று ஐரோப்பியர்களின் பழக்கத்தை அங்கே கொண்டு வருவது,” என்று குறிப்பிட்ட நீங்கள்; நூற்றாண்டுகளுக்குப்பின் தன் முன்னோர்களுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுக்க்கொண்டதை குறிப்பிடும் போது, “இன்னொரு திருடனின் சந்ததியினரிடம், திருடிய பொருளை இன்னும் உபயோகமானதாக ஆக்கிய சந்ததியினரிடம் – பிடுங்கி எடுப்பதை மீட்பு என்று சொல்லாதீர்கள்” என்று குறிப்பிடுகிறீர்கள். இதில் உங்களுக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை என்றால் ஆச்சரியம் தான்.

    “காலனி ஆதிக்கம் இருந்துவிட்டால் போதும், வரும் ஆட்சியாளர்களுக்கு பொறுப்பு கிடையாதா என்ன? சர்வ தேச தீர்மானங்கள், ஒதுக்குதல் முதலியவை முகாபேவின் ஆட்சியின் விளைவுகள். நீங்கள் காரணத்தையும் விளைவுகளையும் குழப்பிக் கொள்கிறீர்கள். இன்றைய ஜிம்பாப்வேவின் நிலைக்கு முகாபேவே முக்கிய காரணம் என்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை”

    முகாபேவுக்கு பொருப்புகள் இருக்கிறது. அதை அவர் சரியாக நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. ஆனால் எது காரணம்? எது விளைவு? சர்வதேச நிர்ப்பந்தங்கள் முகாபே தன் கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதால் தானா ஏற்படுத்தப்பட்ட‌ன? மக்களை வதைக்கும் பல நாடுகளை சர்வதேச சமூகம் கண்டுகொள்ளாமலிருப்பதும் ஓரளவிற்கு நன்றாக செயல்படும் நாடுகள் மீது பல கட்டுப்பாடுகளை சர்வதேச சமூகம் விதிப்பதும் உலகில் வெளிப்படையாக நடந்துவருகிறது. சர்வதேச நிர்ப்பந்தங்களுக்கான அளவுகோல் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவா எதிர்ப்பா என்பதுதானேயன்றி மக்கள் நலனல்ல. முகாபேயின் காரணங்களுக்கான விளைவுதான் சர்வதேச நிர்ப்பந்தங்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், “பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும்” என்பதை எப்படி பார்க்கிறீர்கள்? ஒருவேளை சானு பிஎப் பின் போராட்ட காரணத்தினாலான விளைவுதான் அதுவோ.

    மீண்டும் சொல்கிறேன் முகாபேவுக்கான சப்பைக்கட்டுகளல்ல இவை ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட்டு முகாபேவை மட்டும் பார்ப்பது சரியான பார்வை இல்லை என்பது தான்

    தோழமையுடன்
    செங்கொடி

  11. செங்கொடி,

    இருவரும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். முகாபேதான் முக்கிய காரணம் என்ற நிலையிலிருந்து நானும், மேலை நாடுகள்தான் முக்கிய காரணம் என்ற நிலையிலிருந்து நீங்களும் மாறப் போவதில்லை. வேறு ஏதாவது பேசுவோமா?

    “முரண்பாட்டை” பற்றி மட்டும் சிறு விளக்கம் – தாத்தாவிடமிருந்து பிடுங்கியது மீண்டும் எனக்கு வந்தால் சரி. தாத்தாவிடமிருந்து பிடுங்கியது வேறு ஒரு திருடனுக்கு போனால் அது மீட்பு இல்லை. எந்த திருடனிடம் என் பொருள் இருந்தால் எனக்கு லாபம்?

  12. கலையரசனின் கட்டுரைகளின் ஒரு பக்க சார்பு தெரிந்ததுதான். புகலி தளத்தில் ஸ்வாட் பள்ளதாக்கில் நடப்பதைப் பற்றிய கட்டுரை அதற்கோருதாரணம். ஜிம்பாவேயில் முகாபே செய்யத்தவறியவையும், தவறாக செய்தவையும் அதிகம்.மேலை நாடுகளை மட்டும் குறை கூறி பயனில்லை. ஜிம்பாவேவின் வளங்களை பயன்படுத்தி யார் லாபம் சம்பாதித்தாலும் அன்றும் இன்றும் பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரம்
    முன்னேறவில்லை. கலையரசன் இதைப் பற்றி விளக்கமாக எழுதமாட்டார். முகாபே குறித்த விமர்சனம் கூட சரியாக வைக்கப்படாது. முகாபே எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார்?. வெள்ளைகாரனே பரவாயில்லை என்றுதானே அவர் கையாண்டவிதம் இருந்தது. அரைவேக்காடு மூன்றாம் உலகவாதம் எதையும் சாதிக்காது. இருப்பதையும் மோசமாக்கும் என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டு ஜிம்பாவே. அதை கலையரசன் எடுத்துச் சொல்லமாட்டார். இப்படி ஒரு பக்க சார்பு கட்டுரைகளின் மூலம் எத்தகைய ஏகாதிப்பத்திய எதிர்ப்பு அரசியல் சாத்தியமாகும்?.

  13. Dear Friends, I was in Zimbabwe during the worst period of 2005-2008, Which is the final period of of the so called Cold war of Africa and Western Countries, Mugabe is really non-corrupt, the fall of zimbabwe start with Congo war which he supports the Black national government which is against the Western governements, first UK, Aus stoped there committiment of peace accord of Lucktsure agreement and then for the retalliation Mugabe went for Farm land ownership reforms. Even now Non of the Zimbabweans not ready to disown there leader, as he is still regarded as the father of the nation there, even the great leader of South African leader Nelson Mandela and Tabo Mbeki, and Mozambique Samora machel are still good friends and supporter for Mugabe, then the primeminister Tsangirai who got the Western Support for his political carrer.
    One thing we must look into zimbabwe issue, the entire Africa, Africa Union, SADC are supported Mugabe Directly, Except Bostwana and Kenyan Opposition parties. And i like to tell all of you, that all the sanctions against zimbabwe is on Human violations and Anti-Democratic Acts, I hope all of us know what the Western Countries preach and follow. Now the Dollarised zimbabwe is back to normal life within a period of 12 months after total distruction of Economy in 10 years. so, look how it possible if still mugabe as president. The So called corruption in zimbabwe is 1000 times better than india. Still the policemen issue the ticket for the fines, and they behave with ordinary people properly, the issue of political is different. Any one who talk about corruption they must check first western countries for the level of corruption because its starts from there only

Leave a Reply to RV பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க