முகப்புபொட்டை!
Array

பொட்டை!

-

பொட்டை

நேற்று மாலை பெருநகர ரயில் வண்டியில் ஒரு திரைப்படம் பார்த்து விட்டு நானும், அம்மாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தீடீரென ஒரு கைத்தட்டல் ஒலி.. நிமிர்ந்து பார்த்தால் ஒரு திருநங்கை கைத்தட்டியவாறு நின்று கொண்டிருந்தாள். பின்னர், சீட்டில் சரிந்து நின்றவாறு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கலாம் அல்லது வயதுக்கு மீறிய மூப்பாக இருக்கலாம். அழுக்குப் பிடித்த சேலை… அவலட்சணமான முகம்… நெற்றியில் விழும் ஒழுங்கற்ற சிகை… உண்மையைச் சொன்னால், பரிதாபமாகவும், அதே வேளை அசூயையாகவும் இருந்தது.

ரயில் கடகடத்துக் கொண்டிருந்தது. வேறெங்கோ தலை திருப்பி நின்றிருந்த அத்திருநங்கை சட்டென திரும்பினாள். கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் எதை நினைத்துக் கலங்கக் கூடும்? பிச்சையெடுத்து வாழ நேர்ந்த அவலம் குறித்தா? பிறவியில் நேர்ந்த ஊனம் குறித்தா? இனி ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத குடும்பத்தினரின் நினைவு குறித்தா? அந்தக் கண்ணீரில்… ஒரு கணம் பீதியூட்டும் அவளது முகத்தில்… சுயபச்சாதாபமும், சீரழிவும் கூடி நின்றன. நான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன்.

மறுபடியும் கைத்தட்டல்… அவள் இப்பொழுது கையேந்தியவாறு முன்நகரத் தொடங்கினாள். பலரும் அவளை ஏறிட்டுப் பார்க்காமலிருக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு ஐந்து ரூபாயை அவளது விரல்கள் பட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையோடு அவள் கையில் போட்டேன். எனது இருக்கையிலிருந்து இரு இருக்கைகள் தள்ளி, தனது குடும்பத்தினரோடு இருந்த ஒருவன் சிரித்தவாறு, தீடீரென அவளைப் போலவே கைதட்டினான். அவனது குடும்பப் பெண்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். திருநங்கை திரும்பிப் பார்த்தாள். நேரே அவனிடம் சென்று ஏதோ காரசாரமாக சொன்னவாறு அவனது முகத்துக்கு நேராக கைதட்டினாள். அவன் பதிலுக்கு ஏதோ ஏளனமாக சொன்னான். மயிலாப்பூர் ஸ்டேஷன் நெருங்கியது.

அவனைப் பார்த்து ஏதோ வசைபாடியவாறு வாசலை நோக்கி விரைந்தாள். சிரித்து கெக்கலி காட்டி கொண்டிருந்த அவனது முகம் இருளத் தொடங்கியது. “இதுக்கு மேல ஏதாவது பேசுன, அடிதான்!” என விரல் காட்டி எச்சரித்தான். என்னை கடந்து சென்ற திருநங்கை, வாசலருகே நின்று சற்று உரக்கவே சொன்னாள். “போடா பொட்டை!” கோபம் கொப்பளிக்க அவன் வாசலை நோக்கி விரைந்தான். நான் தலை திருப்பிப் பார்த்தேன். கண்ணிமைக்கும் பொழுதில் அவன், அத்திருநங்கையை தாக்கி ரயிலிருந்து பிளாட்பாரத்தில் தள்ளினான். விருட்டெனத் திரும்பி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வன்முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. “ஏய், ஹலோ, இது என்ன? அவளை ஏன் அடித்தீர்கள்? உங்களால் பிச்சை போட முடியாதென்றால், சும்மா இருக்க வேண்டியதுதானே, எதற்காக கேலி செய்கிறீர்கள்?” என இருக்கையிலிருந்து எழுந்து கத்தினேன். அவன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ உட்கார், அவள் தண்ணியடித்திருக்கிறாள்” என்றவாறு சங்கடத்தோடு இருக்கையில் நெளியத் துவங்கினான். எனது அம்மா என்னை “உட்கார், உட்கார்” என கைகாட்டிக் கொண்டிருந்தாள். அதற்குள் உள்ளே வந்த திருநங்கை கோபத்தோடு அவனை நோக்கிக் கத்தத் துவங்கினாள். என்னிடம் தனது சிராய்த்த முழங்கையைக் காட்டி முறையிட்டாள். நான் கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். “நீ முதலில் இங்கிருந்து போம்மா, இல்லையென்றால் நீ மேலும்தான் அடிபடுவாய்!” என்றேன். அவள் அங்கிருந்து நகர்ந்தாள். நான் இருக்கையில் அமர்ந்தேன். என்னை முறைத்துப் பார்த்த அவன், ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.அவனது குடும்பப் பெண்கள் இப்பொழுது சிரிக்கவில்லை.

ரயில் நிலையத்தை நெருங்கியது. அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் எதுவுமே நடவாதது போல அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதியை விடவும் அவள் அசிங்கமானவளில்லை எனத் தோன்றியது.

பி.கு: நேற்றிலிருந்து வித்யாவின் எழுத்துக்கள் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

நன்றி : போராட்டம்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

 1. பொட்டை!…

  ரயில் கடகடத்துக் கொண்டிருந்தது. வேறெங்கோ தலை திருப்பி நின்றிருந்த அத்திருநங்கை சட்டென திரும்பினாள். கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் எதை நினைத்துக் கலங்கக் கூடும்? https://www.vinavu.com/2009/06/15/apathy/tr

  • மயூ, அப்ப திருநங்கையாக பிறப்பது ஒரு வகையான உடல் ஊனம்தானே? இல்லை என் புரிதலில் தவறா?

   • ஷாகுல், MamboNo8,

    திருநங்கைகள் உயிரியல் ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் ஊனமானவர்கள் அல்லர். அவர்கள் எம்மிலும் (ஆண்/பெண்) வித்தியாசமானவர்கள். அதாவது பெரும்பான்மையிலிருந்து வேறுபட்டவர்கள்.

    கருமை நிறத்தவர், உயரம் கூடியவர், பொன்னிற முடியினர் போன்று மனிதப் பல்வகைமையில் ஒரு பகுதியாக அமைபவர்கள்.

    அவர்களை ஊனமானவர்களாக, குறைபாடானவர்களாகப் பார்த்துவந்த இதுவரையான பார்வை இக்கால அறிவு வளர்ச்சியுடன் மாறி வருகிறது. அவ்வாறு பார்த்து வந்தவர்கள் தமது பார்வையினை அறிவு வளர்ச்சியோடு மாற்றிக்கொண்டு வருகிறார்கள். நானும் பிற்பட்ட காலங்களில் மாற்றிக்கொண்டேன்.

    வினவில் வெளியாகியுள்ள இக்கட்டுரை சொல்ல வரும் செய்தி அருமையானது. முற்போக்கானது. சிறு சொல்லாட்சி உறுத்தியதாலேயே விளக்கம் கேட்டிருந்தேன்.

    ஊனம் என்ற வார்த்தையே தற்போது தவிர்க்கப்பட்டுவருகிறது. விழிப்புலன் அற்றிருத்தல், அவயவங்களை இழத்தல் என்பன சிறப்பான சவால்களாக, சிறப்புத்தேவைகளாக பார்க்கப்படுகின்றன.

  • அய்யா, முடிந்தால் பேசின் பிரிட்ஜ் செல்லவும். அங்கே இந்த திருநங்கைகள் பண்ணும் அட்டகாசம் நேரில் பார்த்தால் புரியும். எழுத அசிங்கமாக இருக்கிரது. ஏதேனும் ஒரு திருநங்கை நல்லவராக இருந்தால் என்ன செய்ய முடியும்?

   • பேசின் பிரிட்ஜ் மட்டுமல்ல சென்னையின் இருப்புப்பாதையின் ஓரங்களில் பல இடங்களில் திருநங்கைகள் விலைமாதராய் அவல வாழ்க்கை வாழ்கின்றனர். ஒரு சராசரி அல்லது மேட்டுக்குடி விலைமாதருக்கு கிடைக்கும் மரியாதை கூட இவர்களுக்கு கிடையாது என்பதால் அவர்களின் மொழி, உடல் மொழி எல்லாம் புதியவர்களுக்கு கடூரமாக இருக்கும். மௌனமாக இழித்தும், பழித்தும் ஒதுக்கும் இந்த சமூகத்திற்கெதிரான எதிர்வினையை அவர்கள் இப்படித்தான் காட்டுகின்றனர். இதை வைத்தே அவர்களை மதிப்பிடுவது சரியாகாது.

    வினவு

   • கார்க்கி,

    திருநங்கைகளின் அட்டகாசம் என்று சொல்லுகிறீர்களே அவர்களை விபச்சாரம் செய்வதும் பிச்சை எடுப்பதும் தவிர பிழைக்க வேறெதும் வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளிய சமூகத்தை பற்றி உங்கள் கருத்து?

    வாந்தியில் புரளும் குடிகாரன், அழுக்குப் பிச்சைக்காரி, மலம்பூசிய பைத்தியக்காரன், திருநங்கை, குஷ்டரோகி, ஈ மொய்கும் சிறுவன் என நடுத்தர மக்களின் மனங்களை குமட்டவைக்கும் காட்சிகள் ஏராளம் ஆனால் இவையெல்லாம் தீடீரென வானத்திலிருந்து குதித்தவை அல்ல நம்மால், நம்மிடையே வளர்த்து பாதுகாக்கப்படுபவை. இவற்றை ஒழிக்க முயற்சியெடுக்காமல் பழிப்பது வீண்.

  • ஊனம் என்றெல்லாம் சொல்ல முடியாது?

   எதில் ஊனம் என்பதை விளக்க வேண்டும். அதாவது ஒரு ஆண் பிள்ளை பெற தகுதியானவன் இல்லை அல்லது பெண்ணை திருமணம் செய்ய தகுதியற்றவன் எனில் அது ஊனமா? எவ்வளவு கேவலம் ஒரு ஆணாதிக்கச்சிந்தனைதான் இந்த கருத்தினை வளர்த்தது.”பாவம் நொண்டி மாரி அவங்களும் ஒரு குறை உள்ளவங்கதான் பாவம் அவங்களும் மனுசங்கதான்”

   அப்படி அல்ல ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படி இவ்வுலகில் வாழ உரிமை இருக்கிறதோ அதே உரிமையில் சற்றும் குறையாது திரு நங்கைக்கும் உள்ளது. அவர்கள் பாவம் என்பதெல்லாம் ஆதிக்க சாதி வெறி பிடித்த பாமக எம் எல் ஏக்கள் சொல்வார்களே”பாவம் தலித்துங்க அவங்களும் சரிசமமா உட்காரணும் ” என்பதை போலத்தான் உள்ளது.

   கலகம்

 2. சிறப்பாக எழுத்து அமைந்துள்ளது, கருத்து மனதைக்கிளறி..மெளனத்தை வரவைக்கிறது
  வாழ்த்துகள்

 3. /பிறவியில் நேர்ந்த ஊனம் குறித்தா? //
  அந்தத் திருநங்கை அங்கவீனமானவரா?

  மயூரன், அவர் திருநங்கையாக பிறந்ததே ஒரு வகையான பிறவி ஊனம்தான் அதை தான் குறிப்பிடுகிறார் என் நினைக்கிறேன்.

  • பிறப்பால் அப்படி இருந்தாலும் அல்லது பிற்பாடு வேறு காரணங்களால் தன் பாலியல் அடையாளங்களை இழந்திருந்தாலும் திருநங்கைகளைப் பார்த்து எள்ளி நகையாடும் ஈன வழக்கம் எந்த வகையிலும் சரியல்ல. பிறப்பால் கண் தெரியாதவர்களைப் பார்த்துப் பரிதாபப் பட்டு, விபத்தில் பார்வை இழந்தவர்களை “ஏ குருட்டுப் பயலே” என்று விளிப்பதற்கு சமமான அசிங்கம் இது. திரைப்படங்களின் இவர்கள் சித்தரிக்கப் படும் விதம் (“பம்பாய்” படம் விதிவிலக்கு) நம் கலாச்சாரத்தின் கோர வடிவையே காட்டுகிறது.

   ஆனால் இவர்கள் அருவருப்பானவர்கள் என்று மற்றவர்களை எண்ண வைத்து அவர்கள் புடவையைத் தூக்கிக் காட்டி விடுவேன் என்று மிரட்டிப் பிச்சையெடுப்பது நாணயத்தின் மறு பக்க அவலம்.

 4. மயூ, உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆங்கிலத்தில் இப்போதெல்லாம் physically challenged என்ற வழக்கு போய் differently abled என்று அழைக்கதுவங்கிவிட்டனர் இருப்பினும் அவையெல்லாம் வெறும் வார்த்தைகளே இந்தியா போன்று சமூக ரீதியாக பழமையின் பிடியிருக்கும் நாடுகள் மட்டுமல்ல முதலாளித்துவ நாடுகளில் கூட திருநங்கைகளுக்கு இன்னமும் சமத்துவம் கிடைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட இம்மக்களுக்கு சரியான தீர்வுதான் என்ன?

  • நன்றி. நீங்கள் சொல்வது உண்மை. வார்த்தைகளில் அல்ல, நடைமுறையில் தான் மாற்றங்கள் உண்டாக வேண்டும். மிக முக்கியமான சட்டங்கள், பொது அமைப்புக்களில் மாற்றங்கள் வேண்டும். கல்வியில், அரசியலில் மாற்றங்கள் வேண்டும். சமூக பொருளியல் அமைப்பில் மற்றம் வேண்டும். புறநிலை மாற்றங்கள் உருவாக வெகுமக்களின் சிந்தனை முறையிலும் மாற்றம் வரத்தொடங்கும்.

   அதே நேரம் வார்த்தை மூலமான வன்முறையினையும் வளர்கிற போக்கில் சிந்திக்கின்ற நாம் தவிர்த்துக்கொள்வது சிறப்பு.

 5. நல்ல பதிவு. திருநங்கைகளை பார்க்கும் விதம் வித்யாவின் எழுத்துக்களை படித்த பிறகு, என் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. முன்பு, அசூசையுடன் அல்லது வித்தியாசமான பிறவியாய் பார்ப்பேன். இப்பொழுது ரயிலிலோ அல்லது எங்கேனும் கண்டால், சிநேகபூர்வமாக பார்க்க முடிகிறது. வித்யா இப்பொழுது அவருடைய தளத்தில் எப்பொழுதாவது எழுதுகிறார். அடிக்கடி எழுத வேண்டும்.

 6. பலரும் சொல்கின்றார்கள் “அவங்களை யார் பாலியல் தொழில் செய்யச்சொன்னாங்க உடம்பு நல்லாத்தானே இருக்கு உழச்சு முன்னேற வேண்டியது தானே” இது “சும்மா கத விடாதீங்க அவன் வாயில மூத்திரம் இருக்கின்ற வர இவன் என்னா பண்ணிணான்” என்ற சாதிவெறியனுக்கு ஒப்பானது.யாரையும் கட்டி போட்டு இழுத்து வந்து பாலியல் தொழில் செய்ய சொல்ல வில்லை. இரு திரு நங்கைகள் ரோட்டில் நடந்து சென்றால் ஆண்கள்,பெண்களின் கேலிக்கும், நமட்டு சிரிப்புக்கும் ஆளாகாது இருக்க முடிகிறதா.

  இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் உளவியல் ரீதியிலான கடு நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு பெரும்பாலான் திரு நங்கைகள் வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழிலையும் பிச்சையெடுத்தலையும்செய்கின்றனர் .பாலியல் தொழிலாளியை ஆணாதிக்கம் உருவாக்கியதோ அப்படித்தான் திரு நங்கைகளை பாலியல் தொழிலாளி ஆக்கியது.தாழ்த்த்ப்பட்ட ஒருவரை எங்கணம் அடையாலம் காட்ட முடியும்.அவரின் சுற்றுபுறத்தை தவிர . ஆனால் திருநங்கைகளுக்கு ?

  திரு நங்கைகள்- ஒரு சமூகத்தின் அவலம்

  http://kalagam.wordpress.com/2008/11/23/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/

 7. நிகழ்வைப் படித்து முடித்ததும் ஒரு மெளனமும், பிறகு வரிசையாய கேள்விகளும் எழுகின்றன. இப்படி தனிநபர்கள் கேலியும், கிண்டல் செய்வது சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன. இதே மாதிரி நிகழ்வுகளும் நிறைய பார்க்க முடியும். ஆனால், மக்கள் நலன் நாடும் அரசு எங்கே போனது? இவ்வளவு காலமும் திருநங்கைகளை கண்டு கொள்ளாத அரசு தான் இத்தனைக்கும் காரணம். லிவிங் மைல் வித்யா சின்ன சின்ன உரிமைகளுக்காக இந்த அரசாங்கத்தோடு எவ்வளவு போராடி, போராடி தளர்ந்து போயிருக்கிறார். இப்பொழுது தான் சில சலுகைகள் அரசு தருகிறது. திருநங்கைகள் இந்த சில சலுகைகளுக்காக சுதந்திரம் (!) வாங்கி 62 வருசம் காத்துகிடக்க வேண்டியிருக்கிறது.

 8. திருநங்கைகளும் மனிதர்கள் தான், அவர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருத்து நிறைந்த கதை.

  வாழ்த்துக்கள்.

 9. @மயூரன்

  //வார்த்தை மூலமான வன்முறையினையும் வளர்கிற போக்கில் சிந்திக்கின்ற நாம் தவிர்த்துக்கொள்வது சிறப்பு.//

  தங்களது அடிப்படையான வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன் மயூரன். தாங்கள் கூறியிருப்பது போல் திருநங்கைகள் உயிரியல்ரீதியாக ஊனமானவர்கள் அல்ல என்ற கருத்தையே நானும் கொண்டிருக்கிறேன். எனினும், இன்றைய சமூகத்தில், குறிப்பாக இந்தியா போன்ற பின்தங்கிய சமூகங்களில் திருநங்கையாக வாழ்வதென்பது ஒரு பெரும் சாபம், வாழ்நாள் முழுதும் தப்பிக்கவியலாது தொடரும் ஊனமாகவே இருக்கிறது எனும் பொருளிலேயே, அவ்வாழ்வின் வலியை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துவது என்ற அடிப்படையிலேயே இச்சொல்லாடலை பயன்படுத்தினேன். எனினும், அது தவறான கற்பிதங்களுக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  @ஜோ
  இது கதையல்ல, உண்மைச் சம்பவம்.

 10. வினவில் வெளிவந்த “பொட்டை” பதிவை ஒரு சிபிஎம் தோழரிடம் பகிர்ந்து கொண்ட பொது, அவர் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

  பகுதியில் நடந்த போராட்டத்தில் கைதாகி, கல்யாண மண்டபத்தில் மாலைவரை தங்க வைக்கப்பட்டிருந்தோம். அதில் திருநங்கையும் ஒருவர்.

  அவரிடம் பேச்சு கொடுத்தேன். “நீங்கள் எப்படி கட்சிக்கு அறிமுகமானீங்க?” continue…

  http://socratesj2007.blogspot.com

 11. என்னன சக மனுசியாக பார்த்தார்கள்…
  வினவில் வெளிவந்த “பொட்டை” பதிவை ஒரு சிபிஎம் தோழரிடம் பகிர்ந்து கொண்ட பொது, அவர் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

  பகுதியில் நடந்த போராட்டத்தில் கைதாகி, கல்யாண மண்டபத்தில் மாலைவரை தங்க வைக்கப்பட்டிருந்தோம். அதில் திருநங்கையும் ஒருவர்.

  அவரிடம் பேச்சு கொடுத்தேன். “நீங்கள் எப்படி கட்சிக்கு அறிமுகமானீங்க?”

  “என்னுடன் ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு நிறைய கடன் இருந்தது. அவனுக்காக என்னிடம் இருந்த பணத்தை கொண்டு பாதிக்கடனை அடைத்தேன். மீதி கடனையும் அடைக்க நானே பொறுப்பேற்று கொண்டேன்.

  சில காலம் கழித்ததும், அவனுக்கு திருமணம் முடிக்க அவனுடைய வீட்டில் ஏற்பாடு செய்தார்கள். இவனும் அதற்கு உடன்பட்டான்.

  சரி! நீ கல்யாணம் செய். ஆனால், உனக்காக நான் அடைத்த கடனை கூட நீ தரவேண்டாம். மீதி கடனையாவது ஏற்றுக்கொள்! என்பதற்கு மறுத்தான். அவன் சம்பந்தபட்ட நபர்களிடமும், வேறு சிலரிடம் முறையிட்டதற்கு என்னை ஒரு மனுசியாகவே யாரும் மதிக்கவில்லை. பிறகு, இந்த பகுதியில் சிபிஎம் அலுவலகம் போய் முறையிட்டேன். அவர்கள் தலையிட்ட பிறகு இந்த பிரச்சனை முடிந்தது.

  இந்த பிரச்சனையில்… தோழர்கள் தான் என்னை சக மனுசியாக மதித்தார்கள். இவர்கள் மத்தியில் தான் இனி இருக்க வேண்டும் என அன்றைக்கே முடிவெடுத்தேன். இப்பொழுது, பகுதி பிரச்சனை எதுவென்றாலும், நானும் கலந்து கொள்கிறேன்” என்றார்
  http://socratesjr2007.blogspot.com

 12. அரவாணிகளுக்கு மக்கட்பேறு கிடையாது. பெண்ணிலிருந்தே பிறக்கிறார்கள். பெண்ணிலிருந்து பிறக்கும் இவர்கள் ஆணைப்போல,பெண்ணைப்போல மனிதர்களே.தொல்காப்பியர் இவர்களை தெய்வத்தோடு இணைத்துவைத்துப் பேசுகிறார். பக்தி இலக்கியங்களில் இவர்கள் தெய்வங்களாகவே கருதப்படுகிறார்கள்.சிவனை நாயன்மார்கள் ஆணாகி பெண்ணாகி அலியாகவுமிருப்பவன் என்கிறார்கள்.திருமாலும் மோகினி அவதாரம் எடுத்து அரவாணிகியிருக்கிறான்.அவன் மகன் காமனும் தன் மகனுக்காக அரவாணியாகியிருக்கிறான்.அர்ச்சுனனும் விதிவிலக்கல்ல.மரபணுக்களினால் ஏற்படும் குழறுபடிதான் காரணம்.அரவாணிகள் பிச்சைஎடுப்பதும் பாலியல்தொழிலில் ஈடுபடுவதற்கும் குடும்பமும் சமூகமும்தான் காரணம்.இவர்களை ஒன்பது என அழைக்கும் அனைவரும் ஒன்பது தான். எவ்வாறெனில் ஒன்பது துளைகளை உடையது மனித உடல். கண்-2 காது-2 மூக்குத்துளை -2 வாய்-1 கருவாய்-1 எருவாய்-1.இனி அவ்வாறு அழைப்பவர்கள் மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொள்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை.என் வலைப்பூவில் vjpremalatha.blogspotஅரவாணி பற்றிய கவிதையைப் படித்தால் இன்னும் புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க