முகப்புஅதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !
Array

அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !

-

அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும் !

கசங்கிக் கிடக்கும் பழந்துணியைப் போல அந்தப் பாட்டியின் தோற்றம் மார்க்கெட் சுவரோரம் தென்படும். அடிக்கடி கலைந்து போகும் சுண்டல் வற்றலை விட அதைக் கூறுபிரிக்கும் அவளது கைகளில் அதிகச் சுருக்கல்கள். இமைகளைக் கூட வேகமாக நிமிர்த்த முடியாதபடிக்கு தளர்ந்து போயிருந்தது அவளது உடல். வறுத்தெடுக்கும் வெயிலில் சுருளும் சுண்டை வற்றலை வைத்துக் கொண்டு, தலையில் சீலைத் தலைப்பை போட்டபடி அவள் உட்கார்ந்திருக்கிறாள் என்பதை விட அவளும் ஒரு கூறுகட்டிய சுண்டை வற்றலாக காட்சியளிப்பாள். இந்த வயதிலும் இவள் உழைத்து வாழும்படி என்ன கஷ்டமோ ? ஓய்வெடுக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு உழைப்பா ? எனப் பலவாறு பாட்டியின் மேல் பரிதாபம் மேலிடும்.

எனக்கு சுண்டை வற்றல் தேவையோ இல்லையோ, அந்தப் பாட்டிக்காகவே அடிக்கடி வாங்குவதுண்டு. அன்றும் அதே மனநிலையோடு பாட்டியின் தரைக்கடைப் பக்கம் போனேன். குத்துக்கால் போட்டுக் கொண்டு நான் பேச ஆரம்பித்தவுடன், நடுங்கும் முகத்தை ஒருவாறாக நேர்ப்படுத்திக் கொண்டு இமைகளை குழப்பி ஒரு வழியாக பார்வையை ஊன்றினாள் பாட்டி. ரெண்டு கூறுஎன்றேன். எடுத்துக்க ! என்பது போல பிதுங்கிய உதட்டசைவில் தாடையை அசைத்தாள் பாட்டி. எத்தன ரூபாய் ?” என்றவுடன், “ஆங்.. பத்துஎன்று உதடுகளை உதறினாள். வாங்கிய கூறுக்கு பத்து ரூபாயைக் கொடுத்தவுடன், நடுங்கிய விரல்களால் பணத்தைப் பிடித்து விரித்து ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள்.

விரல்களின் நடுக்கத்துடனேயே அனிச்சைச் செயல் போல் அதை மடக்கி சுருக்குப்பையில் போட்டு சுமாராக கயிற்றை இழுத்து வைத்தாள். முதுமையின் அனுபவத்தையும் உழைப்பின் தீவிரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் இரக்கம் மேலிட பாட்டிக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து பாட்டி இந்தா வச்சுக்குங்கஎன்று நீட்டினேன். சட்டென எதுவும் புரியாத குழப்பத்தில் சுருங்கிய முகத்தை இன்னும் சுருக்கியபடி, சிரமப்பட்டு உற்றுப் பார்த்தாள் பாட்டி. என்னாது.. அதான் காசு குடுத்தியே.. எனக்குதான் வயசாகிப் போயிடுச்சுன்னா நல்லா நீயுங் கெடந்து தடுமார்ற உதடுகள் கோணலாய் போனதைப் பார்த்து, பாட்டி சிரிக்கிறாள் என்பது லேசாகப் புரிந்தது. அதில்ல பாட்டி.. இதச் சும்மா வச்சுக்குங்கஎன்று நான் கையை நீட்டியவுடன் அத்தனை பலம் பாட்டிக்கு எங்கிருந்துதான் வந்ததோ, கையை விலக்கி விட்டு சத்தமாக தே.. என்னா சும்மா கெடைக்குதா உனக்கு காசு.. காசோட அருமை தெரியலியா.. ஒத்த ரூபா சம்பாதிக்க என்னா பாடுபட வேண்டியிருக்கு. நீ பாட்டுக்கு ஈஸியா தூக்கித் தர்ற.. ஹூம் இந்தக் காலத்துப் புள்ளைங்களுக்கு வலி, வருத்தம் எங்க தெரியுது.. உழைக்கிற காசுதாம்பா உடம்புல ஒட்டும்.. நல்ல புள்ளப்பா நீ..என்று பணத்தை வாங்க மறுத்த பாட்டி எனக்கு புத்தி சொல்லி ஏதோ பெரும்பழியிலிருந்து தப்பியது போல முணுமுணுத்துக் கொண்டே வேறு வியாபாரத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். ரொம்பதான் பிடிவாதக்காரப் பாட்டி போல இருக்கு என்று போகிற போக்கில் பக்கத்தில் நின்றவர் தனது புரிதலுக்கு ஏற்றவாறு சிரித்துக் கொண்டு போனார்.

ஆனால், பாட்டியின் உணர்ச்சியோ உழைப்பின் அருமையையும், உழைக்கும் மக்களின் சுயமரியாதையையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவ இருந்தது. எப்படியாவது அடுத்தவன் பாக்கெட்டில் கையை நுழைப்பதையே மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், அரசியல் புத்திசாலித்தனம் என்று பேசுபவர்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் உழைக்கின்ற காசுதான் உடம்பில் ஒட்டும் என்ற பாட்டியின் வார்த்தையில் மிளிர்ந்த நேர்மையும், உழைப்பின் வலிமையும் எனக்கு புதிய கண்ணோட்டங்களை வழங்கியது. அம்பானி என்னடா அம்பானி தில்லுமுல்லுக்காரன்.. தெருவில் கிடந்து நேர்மையாக உழைக்கும் இந்தப் பாட்டியல்லவா நாட்டின் அச்சாணி என்ற பெருமிதத்தோடு பாட்டியைப் பார்த்தபடியே நகர்ந்தேன்.

உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியைதையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திய இன்னொரு சம்பவத்தை சமீபத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இராமநாதபுரம் மாவட்டம் பொந்தம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயதுடைய முத்துராமலிங்கம். இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். நம் நாடு வெளிநாடுகளில் வாங்கியிருக்கும் கடனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்கு ரூ. 30,000 கடன் உள்ளது என்ற செய்தியை பத்திரிக்கையில் படித்த இவர் இதில் தனது பங்கு இந்தியாவின் கடனை அடைக்க விரும்பினார். ஒரு நாளைக்கு ரூ.100 முதல் 150 வரை சம்பாதிக்கும் சுமை தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் கடந்த மே 8 ஆம் தேதி இந்தியாவின் கடனை அடைக்கஎன்று குறிப்பிட்ட ரூ.5000-க்கு டி.டி. எடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ளார். தவிர முத்துராமலிங்கம் பாக்கித் தொகையையும் மெல்ல அடைப்பதாகவும் இனி என்னைக் கேட்காமல் என் பெயரில் கடன் வாங்கக் கூடாதுஎன்றும் கூறியிருக்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த தொழிலாளியின் செய்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கிண்டல், குத்தல் அல்லது ஒரு வகையான அதிரடி பாணி என்று கூட நினைக்கத் தோன்றலாம். ஆழமாகப் பரிசீலித்தால் உழைக்கும் வர்க்கத்திற்கேயுரிய சுயமரியாதை, நாட்டின் மானம் காக்கும் யதார்த்தமான தேசப்பற்று எல்லாவற்றுக்கும் மேலே என்னைக் கேட்காமல் என் பெயரில் இனி கடன் வாங்கக் கூடாது என்ற கண்டிப்பில் உழைக்கும் வர்க்கம் தனது அரசியலதிகாரத்தை பறைசாற்றும் தன்னிலையான போக்கு இதில் வெளிப்படுவதுதான் நாம் காண வேண்டிய, ரசிக்க வேண்டிய பகுதியாகும்.

பல ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு, அரசை ஏய்த்து தொழில் செய்து கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் தங்களுக்கான கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி நியாயம் பேசும் முதலாளிகளின் கேடுகெட்ட செய்கையை இந்த சுமைதூக்கும் தொழிலாளியின் நடத்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர்கள் முத்துராமலிங்கம் போன்ற உழைக்கும் மக்களே என்ற உண்மை தெரிய வரும்.

நாட்டின் மீதான தனது உரிமையை ஒரு சிறிய செயலின் மூலமாக நிலைநாட்டிக் காட்டும் முத்துராமலிங்கம் போல மக்கள் உணர்வு பெற்றுவிட்டால் எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் எப்படிக் கடன் வாங்கினாய் என்ற கேள்வி முதல் .. எங்களைக் கேட்காமல் ஏன் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்தாய்?” என்ற அரசியல் கேள்விகள் வரை கேட்கும்படியாக நிலைமை மாறிவிடும். இந்த திசையில் சிந்திக்குமபடியாக செய்கிறது முத்துராமலிங்கத்தின் பாணி.

படிக்கலேன்னா மூட்டை தூக்கத்தான் லாயக்குஎன்று கேலி பேசும் படித்த வர்க்கம் ஒரு கணம் யோசிக்கவும். ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளி, அதிகம் படிக்காதவர், தேசத்தையே சுமக்கும் அளவுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சுயமரியாதையுடன் தமது ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னுதாரணமாக நம்முன்னே நிற்கிறார். இப்படிப்பட்ட வழிகாட்டிகளிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. இப்படிக் கற்றுக் கொள்வதன் மூலமாகவே நாம் உருப்படுவதற்கும் வழி இருக்கிறது என்று நம்புகிறேன் நான். நீங்களும் மறுக்க மாட்டீர்கள்தானே ?

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009

புதிய கலாச்சாரம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

 1. தொழிலாளி முத்துராமலிங்கம் அவர்கள் நாட்டு கடனை அடைக்க பணம் அனுப்பியதை செய்தித்தாளில் படிக்கும்போது அப்பாவியாக இருக்கிறாரே என நினைத்தேன். ஆனால் “என்னைக் கேட்காமல் என் பெயரில் கடன் வாங்கக் கூடாது” என்று கோரியிருப்பதன் மூலம் பொறுப்புடன் தான் கேட்டுள்ளார் எனத் தெரிகிறது.

 2. நேர்மை, சமூகப் பொறுப்பு, நாட்டுப்பற்று இவற்றை உழைக்கும் வர்க்கத்திடம் மட்டுமே அதிகம் பார்க்க முடியும். தொழிலாளி முத்துராமலிங்கமும், காய்கறி விற்கும் பாட்டியும் இதற்கு வாழும் உதாரணங்கள்.

 3. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ரயில் பயணத்தில் ஒரு சுண்டல் வியாபாரியை பார்த்து அசந்துவிட்டேன்.
  அவருக்கு இரு கைகளும் மணிக்கட்டு வரைதான். உள்ளங்கைகளை இழந்தவர். ஆனால் பிச்சை எடுக்கவில்லை. முடமான இரண்டு கைகளையும் கொண்டே, கூடையை சுமந்து, பெட்டி பெட்டியாக‌
  சென்று சுண்டல் வியாபாரம் செய்தார். கரண்டியை இரு கைகளையும் சேர்த்து பிடித்து கையாண்டார். பணத்தையும் அப்படியே கையாண்டார். தன்மானத்தோடு வாழ்க்கையில் போராடியிய அம்மாமனிதர் எமக்கு எப்போதும் ஒரு மானசீக வழிகாட்டி.

  தன்மான உணார்வு, நேர்மை, கொள்கை பிடிப்பு : இவை உடைய முதலாளிகள் பலரையும் அறிவேன்.
  ஏமாற்றும் குணம் கொண்ட தொழிலார்களையும் அறிவேன். இப்படி பொதுப்படுத்த முடியாது.

  • சுண்டல் விற்கிற சிறு முதலாளிகள்(!) எல்லாம் நேர்மையாக தான் இருப்பார்கள் அதியமான். அவர்களும் தொழிலாளர்கள் வகைகளில் தான் சேர்வார்கள். பெரும் முதலாளிகள் தான் எல்லா திருட்டுத்தனங்களையும் செய்கிறார்கள்.

 4. ஒரு தொழிலாளி மன்மோகனுக்கு புத்தி சொன்ன கதை…

  இந்த சுமைதூக்கும் தொழிலாளியின் நடத்தையை பார்த்தால் இந்த நாட்டின் உண்மையான தேசப்பற்றாளர்கள் யார் என்ற உண்மை தெரிய வரும். https://www.vinavu.com/2009/09/01/life/trackback/

 5. Indha vayadhilum ulaith vaalum andha paatiyai manadhara vangu giren…Andha Muthu ramalingam pannadhu muttal thanamavum ,yedho oru vilambara nokkamum theriyudhu…Krish

 6. உழைப்பின், உழைப்பவரின் தன்மான உணர்வை இந்த மனிதர்களிடம் கற்போம்.
  ஓட்டு போட 500 ரூபாய் வாங்கிய உழைக்கும் மக்களை எந்த லிஸ்டில் சேர்க்கலாம். இடை தேர்தலை அதிமுக புறக்கணித்ததால் ஓட்டின் ரேட்டு குறைந்து 100 ஆனதற்கு ஜெ மீது கோவப்பட்டவர்களின் உணர்வு என்ன வகை. வெறுமனே வாங்கியவர்களை விட, தனக்கு இன்னும் கொடுக்கவில்லையே என ஏங்கியவர்கள் , கோவம் கொன்டவர்களை என்ன சொல்வது.
  நடுத்தர வர்க்கதின் காரியவாதம் உழைக்கும் மக்களின் பெறும் பகுதியை கைப்பற்றி இருப்பதை எப்படி புரிந்து கொள்வது.
  முத்துராமலிங்கமும், சுன்டைக்காய் பாட்டியும் அரிய வகைகள்.
  இந்த மியூசியம் வகையறாகளை வைத்து மட்டும் ‘உழைக்கும் மக்களின் உயர்ந்த பண்பாடு’ பற்றி பேசுவது……
  நாணயமாக பேசுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க