முகப்புஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!
Array

ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!

-

ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் தாக்கப்படுதல்! மனுவாதிகளுக்கே மனுதர்மம் கற்பித்த உலகமயம்!!

ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு நான் சொல்லும் ஒரே அறிவுரை: இங்கே வர வேண்டாம். இங்கே வாழ்க்கை இல்லை.

கடந்த மே மாத இறுதியில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய இளைஞர்களால் கத்தியால் தாக்கப்பட்ட பல்ஜித் சிங் என்ற இந்திய மாணவர் மருத்துவமனைப் படுக்கையிலிருந்து கூறிய வார்த்தைகள் இவை. இந்திய ஆங்கில ஊடகங்களில் ஏறத்தாழ மூன்று வாரங்களுக்கு இக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டது. சவுரப் சர்மா என்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலிய திருட்டுக் கும்பலால் ஓடும் ரயிலில் சரமாரியாகத் தாக்கப்பட்டார். கண்காணிப்புக் கேமராவில் பதிவான இக்காட்சியும், பல்ஜிந்தர் சிங்கின் பரிதாபமான வேண்டுகோளும், சமூக விரோத கும்பலால் ஸ்க்ரூ டிரைவர் கொண்டு தாக்கப்பட்டு, கோமா நிலையில் படுக்கையில் கிடந்த ஸ்ரவண் குமார் தீர்த்தலா என்ற மாணவரின் மருத்துவமனைக் காட்சியும், 24 மணி நேரமும் இந்தியத் தொலைக்காட்சிப் பெட்டிகளை ஆக்கிரமித்தன. பரிதாபமும், ஆவேசமும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பின்ணணி இசையோடு தொலைக்காட்சிகள் சாமியாடத் துவங்க, பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்திய மாணவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த ஆறு தாக்குதல்கள் மென்மேலும் உருவேற்றின. ஒரு இந்திய மாணவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மீண்டும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். பறவைக் காய்ச்சலை விட அதி வேகமாகப் பரவிய பரபரப்பு, ரிஷிமூலமான மெல்போர்னில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வித்திட்டது. எங்களுக்கு நியாயம் வேண்டும்!‘, ‘ஆஸ்திரேலிய இனவெறி ஒழிக!என ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தியப் பிரதமர் ஆஸ்திரேலியப் பிரதமருக்கு அவசரமாக போன் செய்தார். ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர், தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு உடனடியாக வாக்குறுதி அளித்தார். ஆஸ்திரேலிய அரசு தாக்குதல்களைத் தடுக்க தனிப்படை அமைத்தது. அமிதாப் பச்சன் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்தார். ஆமிர் கான் கொதித்தார். டெல்லியில் திரண்ட சிவசேனா கட்சியினர் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட்டின் உருவப் படத்தை தீயிட்டுக் கொளுத்தி பரபரப்பூட்டினர்’. மூன்று வாரத்திற்குப் பிறகு, இனவெறி எதிர்ப்புக்கெதிரான இந்த மகாபாரத (அக்கப்)போர், ’போரடிக்கும்என்ற ஒரே காரணத்திற்காக, துவக்கி வைத்த தொலைக்காட்சிகளாலேயே அறிவிப்பின்றி முடித்து வைக்கப்பட்டது. அப்படி என்னதான் ஆஸ்திரேலியாவில் நடந்தது என்கிறீர்களா, அதுதான் உலகமயம் மனுதர்மம் கற்பித்த கதை!

ஆஸ்திரேலிய அரசு தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் பெருமிதமாக குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா தனது கல்வி, பயிற்சி நிறுவனங்கள் குறித்து பெருமிதம் கொள்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் எம்மிடம் கல்வி கற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2008 சேர்க்கை கணக்கின்படி 80,000 இந்திய மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.‘ ’உலகத் தரமான கல்வி, சுலபமாக நிரந்தரக் குடியுரிமைஎன வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுக்கும் ஆஸ்திரேலியாவில், கல்வி ஆண்டுக்கு 12 பில்லியன் மதிப்புள்ள பணம் புரளும் தொழிலாக விளங்குகிறது. இந்திய மாணவர்களிடமிருந்து மட்டும் ஏறத்தாழ வருடம் 2 பில்லியன் டாலர் வந்து சேர்கிறது. உயர் கல்வி தொழில்நுட்பப் படிப்புகள்தான் என்றில்லாமல், குறைந்த செலவிலான கேட்டரிங் முதலான தொழில் சார் படிப்புகள் மூலம் கூட ஆஸ்திரேலிய சொர்க்கத்தில் கால் வைக்க வாய்ப்புகள் பெருகியதையொட்டி இந்திய உயர் வர்க்க, நடுத்தர வர்க்க மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு படையெடுப்பது அதிகரித்த வண்ணமிருக்கிறது.

பல்கலைக் கழகங்களுக்கு அருகிலேயே தங்குவது அதிக செலவாகக் கூடியதென்பதால், இந்திய மாணவர்கள் பொதுவில் புறநகர்களில் தங்குகின்றனர். உணவகங்களில் பணிபுரிவது முதலான பல்வேறு பகுதி நேர வேலைகளுக்கு இரவு நேரங்களில் கூட செல்கின்றனர். அகால நேரங்களில், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்து வேலை செய்ய வேண்டிய சூழல் காரணமாக, இயல்பாகவே சமூக விரோத கும்பல்களுக்கு இரையாகின்றனர். ஏறத்தாழ திருடர்களுடைய கைவரிசைக்கு ஆளாவதில், மூன்றிலொரு பங்கு இந்தியர்களே என ஆஸ்திரேலியக் காவல்துறையே ஒத்துக் கொள்கிறது. மற்றொருபுறம், அதிகரித்து வரும் இந்திய மாணவர்களுக்கு எதிரான ஆஸ்திரேலிய வெள்ளை இனவெறியும் அதிகரித்து வருகிறது. 2004-ல் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் ஆஸ்திரேலியர்களுக்கே!என ஒரு வெளிப்படையான இனவெறிப் பிரச்சாரம் பல்கலைக் கழக வட்டாரங்களில் வலம் வந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இனவெறி கொண்ட சமூக விரோத கும்பல்களும், விட்டேத்தியான போதை அடிமைகளும், தனித்து தெரியும் இந்தியர்களை தாக்கி வந்தனர். கொள்ளையடித்தனர். இந்நிலையில், மூன்று வார இடைவெளியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் இந்திய ஊடகங்களின் கையில் காட்சி ஆதாரங்களோடு சிக்க, ஊடக மகாபாரதம் வெடித்தது.

சில குற்றங்கள் இனவெறி கொண்டவை. பல குற்றங்கள் சந்தர்ப்பவசமானவை. இந்திய மாணவர்கள் தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக் கொண்டனர்.என மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் விக்டோரியா மாகாண காவல்துறை தெரிவித்தது. ஆஸ்திரேலியப் பிரதமர் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார். அதே வேளையில், இந்திய மாணவர்களின் கட்டுப்பாடற்ற நடத்தையும் ஒரு முக்கியக் காரணம் என ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களே வலுவாக முன்வைத்தனர். பொதுவில் விலை உயர்ந்த செல்போன், கணிப்பொறிகளை பகட்டாக வைத்துக் கொள்வது, குடிபோதை ரகளைகள், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது, பாலியல் குற்றங்களைப் புரிவது, குறிப்பாக பஞ்சாபி மாணவர்களின் கட்டுப்பாடற்ற கும்பல் நடத்தை, ஆரவாரம் ஆகியவை இனவெறியை மேலும் வளர்த்து விடுவதாக உள்ளது என சுட்டிக் காட்டினர். மேலும் ஆஸ்திரேலிய இந்திய மாணவர்கள் சங்கமும் பல சமயங்களில் இந்தியர்கள் முதலான ஆசிய நாடுகளை சேர்ந்த குற்றவாளிகளும், இந்திய மாணவர்கள் மீதே தாக்குதல் தொடுப்பதை ஒத்துக் கொண்டது.

ஒட்டுமொத்தத்தில் இனவெறியே இல்லை எனக் ஒரு பிரிவினர் கூறுவது விவரங்களிலிருந்தே ஏற்கத் தக்கதல்ல. மேலும், உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, ஆஸ்திரேலியப் பொருளாதாரம் தேங்கி நிற்கிறது. கடந்த ஓராண்டில் ஆட்குறைப்பு, ஆலை மூடல்கள் என வேலைவாய்ப்பின்மை 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. உள்ளூர நிரம்பியிருக்கும் ஆஸ்திரேலிய, வெள்ளையின வெறியும், சமூகக் குற்றங்கள் பெருகுவதற்கான நிலைமைகளும் இனவெறியை ஊட்டி வளர்க்கின்றன. ஆனால், தமது சக மாணவர்கள் அராஜகத்திலும், குற்றங்களிலும் ஈடுபடும் பொழுது, தட்டிக் கேட்க முன்வராத இந்திய மாணவர்களும், அவர்களது தீடீர் நண்பர்களான இந்திய ஊடகங்களும் ஆஸ்திரேலிய இனவெறிக்கெதிராக மட்டும் கூப்பாடு போடுவது ஏன்? பல்லாண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டுநர்களாக பணிபுரியும் இந்தியத் தொழிலாளிகள் இவ்வாறு இனவெறித் தாக்குதல்களுக்கு ஆளான போது சற்றும் வெளிப்படாத தார்மீக ஆவேசம், தற்பொழுது மடை திறந்து பாய்வதேன்?

இரு நாட்டு மாணவர்களுக்கும் இடையே பயத்தையும், பரபரப்பையும் இந்தியாவின் 24 மணி நேர தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் தூண்டி விட்டனர்.எனஆஸ்திரேலியத் தூதுவர் ஜான் மெக்கார்த்தி நொந்து கொண்டது மிகையில்லை. ஆஸ்திரேலியா வாழ் இந்தியரான மருத்துவர் யது சிங், ‘இந்திய தலைவர்களும், ஊடகங்களும் அறிவுப்பூர்வமான முறையில் நிலைமையை ஆராயவில்லைஎன கடுமையாக விமர்சித்தார். 24 மணி நேர தொலைக்காட்சி யுகத்தில் ஆராய்ச்சியாவது, அறிவாவது? செய்திகளைச் வாசித்து விட்டுப் போக இது சரோஜ் நாராயணசாமி காலமல்ல. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகளுக்கு நடுவில், ரிமோட் கண்ட்ரோலை இயக்க விடாமல் செய்ய, வேறு சேனல்களில் பார்க்கக் கூடிய திரைப்படங்களையும் விஞ்சியதாக, செய்திகள் விறுவிறுப்பாக இருக்க வேண்டும்.

மே இறுதி வாரத்தில் முதன்மையாக வலதுசாரிக் கருத்துக்களை வெறிக் கூச்சலிடும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், முற்போக்கு வேடமிடும் சி.என்.என் ஐபிஎன், என்டி டிவி முதலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் ஒரு கணம் அதிர்ச்சியூட்டக் கூடிய மேற்கூறிய தாக்குதல்களின் காட்சிப் படங்களுடன் தமது ஆரவாரத்தை துவங்கினர். ஸ்க்ரூ டிரைவரால் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடிய ஸ்ரவண் குமாரின் உறவினர் ஆஸ்திரேலியா செல்ல சி.என்.என் ஐபிஎன் ஏற்பாடு செய்தது. அத்தொலைக்காட்சிக்கு ஸ்ரவண் குமாரின் குடும்பம் நன்றி செலுத்தும் படலம் ஒரு எபிசோடாக அரங்கேறியது.

தனது செய்தி விவாதத்திற்கு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அளித்த தலைப்பு: இந்தியர்களைக் குறித்த அச்சம், உலக யதார்த்தமா? அடி வாங்கியதும், பயந்து போனதும் இந்தியர்கள், தலைப்பு முரணாக இருக்கிறதே என ஆச்சரியப்படாதீர்கள்! கருத்தையும், விவாதத்தின் முடிவையும் தெளிவாக அறிவித்து விட்டுத்தான் விவாதங்கள் கட்டியமைக்கப்படுகின்றன. இந்தியர்கள் ஜொலிக்கிறார்கள். அதிகப் பணம் கட்டிப் படிக்கிறார்கள். திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் ஆஸ்திரேலியர்களுக்கு கோபம் வருகிறதுஎன மேட்டுக்குடி அறிவுஜீவிகள் அடித்துச் சொன்னார்கள். காசிலிருந்தே நியாயத்திற்கான கோபம் பிறக்கும் மேல்தட்டு மனோபாவத்தின் தெளிவான உதாரணமாக செய்தி தொகுப்பாளர் அர்னாம் கோசுவாமி தனது திருவாய் மலர்ந்தருளினார். இந்தியப் பணம் வேண்டும், பாதுகாப்பு மட்டும் கொடுக்க முடியாதா?‘ எங்கேயோ கேட்ட குரலாக இல்லை, ஆம். இதே மேட்டுக்குடி கும்பல்தான் பாதுகாப்பு இல்லையேல், வரி இல்லைஎன மும்பை தாக்குதல்களையொட்டி ஆவேசக் கூச்சலிட்டது. இதன் தாத்பர்யம் என்னவென்றால், வரி கட்டாதவர்களுக்கு பாதுகாப்புத் தேவையில்லை என்பதுதான்.

ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சிமன் கெரியன் இந்திய வர்த்தக அமைச்சரிடம் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இந்திய மாணவர்களின் வரத்தை தடுத்து விடும் எனத் தமது கவலையை வெளியிட்டார். பொருளின் தரம் மட்டுமல்ல, பாதுகாப்பான சூழலும் தான் மாணவர்களை ஈர்க்கும்!என்றார். என்ன ஒரு கச்சிதமான பதில்! மாநகராட்சிப் பள்ளிகளில் தமது குழந்தைகளை படிக்க வைக்கக் கூடிய பெற்றோர் கேட்க முடியாத கேள்வியும், பெற முடியாத பதிலும் இங்கே சர்வதேச உள்ளடக்கத்தில் வெளிப்படுகின்றன. இனவெறி, இனவெறிக்கான காரணங்கள், தமது தரப்பில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்பதான குறைந்தபட்சப் பரிசீலனை என எதுவும் கிடையாது. காசு கட்டினோம்லடாஎன ஆணவம் பொங்கி வழிய நியாயம் பேசுகிறது பணக்கொழுப்பு. எனவே, சாதாரண இந்திய டாக்சி டிரைவர்கள் அதே ஆஸ்திரேலியாவில், சொல்லப்படும் இதே இனவெறியால் தாக்கப்படுவதைப் பற்றி கண்ணியமான கனவான்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அவர்கள் என்ன ஆஸ்திரேலிய அரசுக்கு காசா கட்டியிருக்கிறார்கள்?

நிலத்தை விற்று, ஆடு மாடுகளை விற்று, வீட்டை விற்று, கந்து வட்டிக்கு கடன் வாங்கி எப்படியேனும் பெரும் பணம் சம்பாதித்து வறுமையிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கனவுகளோடு, சவுதி, துபாய் முதலான அரேபிய நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் கிராமப்புற விவசாய இளைஞர்கள் பிழைப்பு தேடி பயணிக்கிறார்கள். பலர் மொத்தப் பணத்தையும் இழந்து ஏமாறுகிறார்கள். பலர் குடும்பத்தைப் பிரிந்து, கொத்தடிமைகளாக உழன்று பிணமாகத் திரும்புகிறார்கள். மலேசிய ஹோட்டல்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐந்து நிமிட உணவு இடைவேளையில் உணவு உட்கொண்டு, ஒரே அறையில் நாற்பது பேர் தங்கி, அன்றாடம் 18 மணி நேரம் வேலை செய்கிறார்கள். முதலாளிகள் கடவுச் சீட்டைப் பறித்துக் கொள்கின்றனர். கொடுமை பொறுக்காது தப்பிக்க முயல்பவர்கள், சிறை பிடிக்கப்படுகின்றனர். சமீபத்திய புள்ளி விவரங்களின்படி மலேசியாவில் ஏழு முகாம்களில் ஏழாயிரம் தமிழர்கள் இவ்வாறு வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நர்ஸ் வேலை, வீட்டு வேலை என அழைத்துச் செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் துபாயில் தேசியப் பிரிவினைகளைக் கடந்து பல நூறுத் தொழிலாளிகள் கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடியதற்காக கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நுனிநாக்கு ஆங்கிலத்தில் தங்களது அவலங்களைச் சொல்லத் தெரியாததுதான் அந்தத் தொழிலாளிகள் செய்த பிழையோ? அல்லது இத் தொழிலாளிகள், ’அச்சப்படத்தக்க அளவுக்கு ஜொலித்துக் கொண்டிருக்கிறஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உரிமை கொண்டாடத் தகுதியற்றவர்களோ?

ஆம், இது இந்திய குடிமக்கள் சார்ந்த பிரச்சினையல்ல. உலகமயத்தின் உயர் குடிமக்கள் குறித்த பிரச்சினை. உலகமய சொர்க்கத்தின் உயர் குடிமக்களோடு ஒன்றாக வாழ விரும்புகிற இந்தியாவின் உயர் குடி மக்கள், சொர்க்கத்தில் தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என நிராகரிக்கப் படும் பொழுது, அதிர்ச்சியோடும், மூர்க்கத்தோடும் எதிர்கொள்வது குறித்த பிரச்சினை. சொந்த நாட்டுப் பண்ணையார்த்தனம் வெளிநாட்டில் செல்லுபடியாகத்தால் வரும் ஆவேசம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் அனைத்து செல்வங்களையும் அனுபவிக்க தகுதியும், திறமையும், உரிமையும் பெற்ற தங்களையா இப்படி நடத்துவது எனக் கொதிக்கும் உலகமய இந்தியர்கள் தங்கள் இருப்பை ஆவேசத்தோடு நிறுவ முயலும் வெட்கமற்ற, அருவெறுக்கத்தக்க பிரயாசை குறித்த பிரச்சினை. இத்தாக்குதல்களையொட்டி, ‘இந்தியர்களின் வளர்ச்சியை வளர்ந்த நாடுகள் ஏற்றுப் பழகிக் கொள்வதற்கான காலம் வந்து விட்டதுஎன்ற மேலாண்மை நிபுணர் அரிந்தாம் சௌத்ரி அகந்தையோடு அறுதியிடுவதிலும், ‘உலகமயம் குறித்து எத்துணைப் பீற்றிக் கொண்டாலும், நாம் உலமயமான சமூகமாக மாறவில்லை. உலகமயமாக்கப்பட்ட சந்தை மட்டும் போதாது, உலகமயமான கிராமமாகவும் அது இருக்க வேண்டும்என அமெரிக்காவில் வாழும் ஒரு இந்தியக் கனவான் தமது பதிவில் உருகுவதிலும், வெளிப்படுத்துவது வேறென்ன? இத்தகைய உலகமய இந்தியர்களின் அதிதீவிரக் கலாச்சாரப் படைகளாக, கருத்துருவாக்க தூண்களாகத்தான் வட இந்திய ஊடகங்கள் செயல்படுகின்றன. ஷில்பா ஷெட்டி விவகாரம் தொடங்கி, ஹர்பஜன் சிங் விவகாரம் தொட்டு, மேலை நாட்டு விமானங்களில் இந்தியர்களிடம் பாகுபாடு என இனவெறிக்கெதிராகப் போராடும் இந்த யோக்கிய சிகாமணிகளின் உண்மையான யோக்கியதை என்ன? சி.என்.என். ஐபிஎன் தனது செய்தி விவாத நிகழ்ச்சிக்கு வைத்த தலைப்பு: இன்னுமா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வெள்ளையர்கள் மட்டும்மனப்பான்மையில் வாழ்கின்றன? இன்னுமா என்றால், அப்படியென்ன உலகம் அடியோடு மாறியா போய் விட்டது?

இந்த நாட்டில் இன்னும் தலையில் பீ சுமந்து மக்கள் வாழ்கிறார்கள். செருப்பு தைப்பதற்காக ஒரு சாதி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது பிணங்களைப் புதைக்கக் கூட சுடுகாடு இல்லை. கோவில்களில் நுழைந்தால் கொலை செய்யப்படுகிறார்கள். கயர்லாஞ்சி போன்று குடும்பத்தோடு கொலை செய்ய பஞ்சாயத்துக்கள் தீர்ப்பு சொல்கின்றன. சாதி மட்டும்தானா, ‘எல்லா வட இந்தியர்களும்(உ.பி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள்) மகாராஷ்டிராவிற்கு பிழைக்க வரும் பொழுதே, உள்ளூர் மக்களை ஒடுக்கும் நோக்கத்தோடுதான் வருகிறார்கள்என பகிரங்கமாக கொக்கரித்து, பரிதாபத்துக்குரிய உ.பி டாக்சி டிரைவர்களை அடித்து துவைக்க காரணமாக இருந்த ராஜ் தாக்கரே இன்னும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை, பச்சிளம் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல், மூன்றே நாட்களில் கொன்று குவித்து, பிணங்களின் மீதேறி பவனி வரும் நரேந்திர மோடி இன்னும் இந்த நாட்டில்தான் இருக்கிறான். சாதி, இனம், மொழி, பால் என கால் செருப்பை விடக் கேவலமாக பல்வேறு மக்கள் பிரிவினரை இவர்கள் நசுக்கி ஒடுக்கும் போது, இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்னும் உயர் சாதியினர்மட்டும் என்ற மனப்பான்மையில்கள் மிதந்து திரியும் போது, இவர்களை மட்டும் ஆஸ்திரேலிய வெள்ளையன் சமமாக நடத்த வேண்டுமாம்!

ஆஸ்திரேலிய இனவெறிக்கு எதிரான இவர்களது சாமியாட்டம் உச்சத்தில் இருந்தபோது, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரையாளர் கீழ்க்கண்டவாறு எழுதினார். சரி. எதிர்ப்பு தெரிவித்தாகிவிட்டது. அத்தோடு முடித்துக் கொள்ளவேண்டும். ரொம்பவும் துள்ளுவது ஆபத்து. இந்தியாவில் நிலவும் தீண்டாமையை நிறவெறிக் குற்றத்தின் கீழ் பட்டியலிட வேண்டுமென்று ஐ.நா வில் முன்பு சிலநாடுகள் முயற்சித்தன. அன்று நல்லவேளையாக நம்முடைய சிறந்த சட்ட வல்லுநர்கள் அங்கே இருந்தார்கள். தீண்டாமை நிறவெறிக் குற்றம் ஆகாது என்று வாதாடி நிறுவினார்கள். இல்லையேல் நாம் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வந்திருப்போம். நாலையும் யோசித்துப்பார்த்து முடித்துக் கொள்ளுங்கள்என்று அறிவுரை கூறியிருந்தார்.

எனக்கு மேலே உள்ளவன் கையால் நான் செருப்படி பட்டாலும் பரவாயில்லை, எனக்குக் கீழே உள்ளவனை மிதிக்கும் உரிமை வேண்டும்என்று கருதும் இந்த மனோபாவத்தை என்னவென்று அழைப்பது? மனுதர்ம மனோபாவமா, அல்லது பிராந்திய வல்லரசு மனோபாவமா?

ஒரு வருடம் முன்பு, இதே ஆஸ்திரேலியாவில் ஒரு நூற்றாண்டுக் காலம் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளை இனவெறி கொண்டு ஒடுக்கியதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் கெவின் ரூட். இரண்டாயிரமாண்டு ஆதிக்க வெறிக்கு அயோக்கியர்களே, கேவலம் ஒரு சடங்குத்தனமான மன்னிப்பேனும் நீங்கள் கேட்டதுண்டா?

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு -2009

புதிய கலாச்சாரம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள் !

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2 )

கருகும் கனவுகள் !

 1. ஆஸ்தேரலியாவில் செய்யப்பட்ட தாக்குதல்களுக்கு இப்படி ஒரு ஆதரவா?. இதிலாவது நீங்களும் ஜெயமோகனும் ஒரே அலைவரிசையில் இருக்கிறீர்கள்.
  அவர் இந்திய மாணவர்களுக்கு பொறுப்பு இல்லை, பொது இடங்களில் இங்கிதமாக
  நடக்கத் தெரியாதவர்கள் என்று தாக்குதலுக்கு ‘காரணம்’ கற்பித்தார்.நீங்களோ அதைவிட ’லாஜிக்’கலாக எழுதியிருக்கிறீர்கள். மருதையன், ஜெயமோகனும் இண-ந்து மாணவர் மீதான தாக்குதல் சரியே , இன்னும் உதையுங்கள் என்று கூட்டங்களில் ஒரே மேடையில்
  பேசுவதைக் கேட்க தமிழர்களுக்கு வாய்ப்பு தருவீர்களா?. அடுத்த இதழில் ஜெயமோகன் எழுதியதையும் வெளியிடலாம்.

  வெளி நாட்டில் நீங்கள் இவ்வாறு தாக்கப்பட்டாலும் சரிதான், இந்தியர்களை அடிப்பது நியாயம்தான் என்று ஏற்றுக் கொள்ளும்
  ’பரன்த’ மனம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.

  • அப்பாவித் தமிழா,

   //நிலத்தை விற்று, ஆடு மாடுகளை விற்று, வீட்டை விற்று, கந்து வட்டிக்கு கடன் வாங்கி எப்படியேனும் பெரும் பணம் சம்பாதித்து வறுமையிலிருந்து தப்பித்து விடலாம் என்ற கனவுகளோடு, சவுதி, துபாய் முதலான அரேபிய நாடுகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் கிராமப்புற விவசாய இளைஞர்கள் பிழைப்பு தேடி பயணிக்கிறார்கள். பலர் மொத்தப் பணத்தையும் இழந்து ஏமாறுகிறார்கள். பலர் குடும்பத்தைப் பிரிந்து, கொத்தடிமைகளாக உழன்று பிணமாகத் திரும்புகிறார்கள். மலேசிய ஹோட்டல்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஐந்து நிமிட உணவு இடைவேளையில் உணவு உட்கொண்டு, ஒரே அறையில் நாற்பது பேர் தங்கி, அன்றாடம் 18 மணி நேரம் வேலை செய்கிறார்கள். முதலாளிகள் கடவுச் சீட்டைப் பறித்துக் கொள்கின்றனர். கொடுமை பொறுக்காது தப்பிக்க முயல்பவர்கள், சிறை பிடிக்கப்படுகின்றனர். சமீபத்திய புள்ளி விவரங்களின்படி மலேசியாவில் ஏழு முகாம்களில் ஏழாயிரம் தமிழர்கள் இவ்வாறு வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நர்ஸ் வேலை, வீட்டு வேலை என அழைத்துச் செல்லப்பட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் துபாயில் தேசியப் பிரிவினைகளைக் கடந்து பல நூறுத் தொழிலாளிகள் கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடியதற்காக கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நுனிநாக்கு ஆங்கிலத்தில் தங்களது அவலங்களைச் சொல்லத் தெரியாததுதான் அந்தத் தொழிலாளிகள் செய்த பிழையோ? அல்லது இத் தொழிலாளிகள், ’அச்சப்படத்தக்க அளவுக்கு ஜொலித்துக் கொண்டிருக்கிற’ இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உரிமை கொண்டாடத் தகுதியற்றவர்களோ?//

   வினவு கட்டுரையில் குறிப்பிடப்படும் மேலேயுள்ளவர்கள் இந்தியர்களும் அல்ல தமிழர்களுமல்ல என்பதால்தான் அப்பாவித் தமிழனின் உள்ளம் கொதிக்க வில்லயோ?

 2. //ஒரு வருடம் முன்பு, இதே ஆஸ்திரேலியாவில் ஒரு நூற்றாண்டுக் காலம் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளை இனவெறி கொண்டு ஒடுக்கியதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார் கெவின் ரூட்.//
  .//இரண்டாயிரமாண்டு ஆதிக்க வெறிக்கு அயோக்கியர்களே, கேவலம் ஒரு சடங்குத்தனமான மன்னிப்பேனும் நீங்கள் கேட்டதுண்டா?//

  In Aust, it was over so he beg apologize. In india, is it over?.

 3. இந்திய தேச பக்தர்கள் AKA இந்து மத வெறியர்கள் அல்லது சிறுபான்மை மக்கள் மீது வெருப்புகொண்டோர் சென்ற வருடம் அனுப்பிய மினஞ்சல் செய்தி தொடர் அனுப்பல் ஒன்று.

  The views of Patriotic Australian Prime Minister India Needs A Leader Like This !

  Prime Minister John Howard – Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia , as the government targeted radicals in a bid to head off potential terror attacks.

  Separately, Howard angered some Australian Muslims on Wednesday by saying he supported spy agencies monitoring the nation’s mosques. Quote: ‘IMMIGRANTS, NOT AUSTRALIANS, MUST ADAPT. Take It Or Leave It. I am tired

  of this nation worrying about whether we are offending some individual or their culture. Since the terrorist attacks on Bali , we have experienced a surge in patriotism by the majority of Australians.’ ‘This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom’ ‘We speak mainly ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society . Learn the language!’ ‘Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation,

  and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.’ ‘We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.’ ‘This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, ‘THE RIGHT TO LEAVE’.”If you aren’t happy here then LEAVE. We didn’t force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.’

  Maybe if we circulate this amongst ourselves, Indian citizens will find the backbone to start speaking and voicing the same truths.

 4. //இரண்டாயிரமாண்டு ஆதிக்க வெறிக்கு அயோக்கியர்களே, கேவலம் ஒரு சடங்குத்தனமான மன்னிப்பேனும் நீங்கள் கேட்டதுண்டா?//

  பார்ப்பன இந்து சாதி வெறி நாய்களின் முகத்தில் அடித்தார் போல் இருக்கிறது தோழர்

 5. Has the communists ever apologized for the mass murders of Stalin, Pol Pot and all the human rights violations done in the name of communism. Have the naxalites ever apologized for their
  killings and for the atrocities committed by them.
  The students who go to Austrlia, the workers who go to Malaysia – they all should be treated fairly. and should not be subjected to violence It is as simple as that. Your article does not take this stand. Instread you are using this to indulge in your
  petty politics.

 6. well written article. those are random events. but not racial. indian media made the matter worse. fuck the indian media. who do they think they are. i agree with most part of the article btw.

 7. good article.this is the one what i thought while i saw news channels.

  another point ..when the same time this incident happend indian army raped two indian citizen in sophian ,kashmir.This media not even telecast ed this incident for two days. i dont know why? weather two murder or attack on personal is important?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க