முகப்பு10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்?
Array

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்?

-

10 வயது மாணவன் தீக்குளித்து சாவு! மொட்டு கருகியது ஏன்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஞானபிரகாசத்தின் 10 வயது மகன் பிரதீஷ் ஒரு நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். காலாண்டு தேர்வில் தமிழ் பாடத்தை சரியாக எழுதவில்லை என ஆசிரியை விஜயலட்சுமி அவனை கண்டித்தார். இனி சரியாக எழுதவில்லை என்றால் அவனை 4ஆம் வகுப்பு அனுப்பி விடப்போவதாகவும் எச்சரித்தார்.

மதியம் மனமுடைந்த அந்த சிறுவன் அழுது கொண்டே வீடு வந்தான். ஆறுதல் கூறிய தாயார் மேரி லதா இது பற்றி ஆசிரியையிடம் பேசுவதாக தேற்றி அவனுக்கு உணவு வாங்குவதற்காக அருகாமை கடைக்குச் சென்றார்.

அந்நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்த பிரதீஷின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவனோ வழியிலேயே இறந்து போனான். பின்னர் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் ஆசிரியை விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.

இது 19.09.2009 தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி.

ஆசிரியையை உண்மையிலேயே குற்றவாளியா?

அந்த மாணவன் படித்த பள்ளி அநேகமாக அரசுபள்ளியாக இருக்க வாய்ப்பு உண்டு. லாரி ஓட்டுநர் குடும்பத்தில், மண்ணெண்ணை வைத்து சமையல் செய்யும் வீட்டில் அந்த சிறுவனுக்காக சில ஆயிரங்கள் செலவழிக்கப்பட்டு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்திருப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் பிரச்சினையே அந்த மாணவன் தமிழ் பாடத்தேர்வு சரியாக எழுதவில்லை என்பதே. தமிழுக்காக மெட்ரிகுலேஷன் பள்ளியில் திட்டு வருவதற்கும் வாய்ப்பில்லை.

ஆங்கிலக் கான்வென்டுகள் காளான்களைப் போல முளைத்து வளர்ந்திருக்கும் இந்த 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் அநேகர் அரசு பள்ளியில்தான் படித்திருக்கக்கூடும். அரசு பள்ளிகளில் கண்டிப்பும், தண்டிப்பும் அங்கு படித்த எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அப்போது நாம் அடைந்த பள்ளி தண்டனைகளை மீட்டுப் பார்ப்போம். அதிலென்ன பிரச்சினையை அன்று கண்டோம்?

அரசு பள்ளிகளில் அடிவாங்கி வளர்ந்த முந்தைய தலைமுறை மாணவர்கள் இது போல மனமுடைந்து போவதில்லை. வீட்டிலும், பள்ளியிலும் இப்போதை விட அப்போது கட்டுப்பாடு அதிகம். இந்த தண்டனைகளை கடந்துதான் அநேகம் பேர் வந்திருக்கிறோம்.

அதிலும் ஆரம்ப வகுப்பு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியப் பணியாற்றுவது இன்னும் சிக்கலானது. ஏழைப்பின்னணியிலும், உதிரியான குடும்ப வாழ்க்கையிலிருந்தும் வரும் இந்த சிறுவர்களை படிக்க வைப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் சேவை மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரியர்கள் கூட தேவை கருதி மாணவர்களை தண்டிப்பது, அடிப்பது உண்டு. ஆசிரியர்களை விடுங்கள் வீட்டில் சிறுவயது குழந்தைகளின் சேட்டை எல்லை மீறும்போது பெற்றோரே அடிப்பதில்லையா?

இங்கு விஜயலட்சுமி அடித்ததாக செய்தில்லை. சும்மா 4ஆம் வகுப்பிற்கு அனுப்புவதாக மிரட்டியிருக்கிறார். இதை ஒரு பெரிய குற்றமாக கருத முடியாது. மேலும் அவன் இனி நன்றாக எழுதவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அந்த ஆசிரியை குற்றவாளியில்லை.

இப்போதும் தனியார் பள்ளிகளில் கூட 100 சதவீத வெற்றி ரிசல்ட்டுக்காக மாணவர்களை எந்திரங்கள் போல அடிமைகளாகத்தான் நடத்துகின்றனர். பெற்றோரும் அதை எதிர்மறையாக புரிந்து கொள்வதில்லை. சில சமயம் எல்லை மீறும் தனியார் ஆசிரியர்களால் கூட பல விபரீதங்கள் உடல் காயங்கள் நடந்திருக்கின்றன. பள்ளி நிர்வாகத்தின் வெற்றி விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். இதன்படி இவர்களும் இங்கே  அடிமைகளாகத்தான் பணிபுரிகின்றனர். இப்படி ஆசிரியர்களும் அடிமை, மாணவர்களும் அடிமை என்றால் ஜனநாயகம் எங்கிருந்து பூக்கும்?

இறுதியில் தோல்வியுறும் மாணவர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது முக்கியமாக 10,12 பொதுத்தேர்வுகளின்போது நடக்கிறது.

தேர்வு முடிவு வெளியாகும் காலத்தில் மனமுடைந்த மாணவர்களை பெற்றோர்கள் மருத்துவத்திற்காக அழைத்து வருவது ஆண்டுதோறும் நடப்பதாக மருத்துவர் ருத்ரனும் தெரிவிக்கிறார்.

தனியார் பள்ளிகளின் கல்வி தரத்திற்கு ஈடு கொடுக்கா விட்டால் ஒவ்வொரு அரசு பள்ளிகளும் அதை சாக்கிட்டு மூடப்படலாம், அல்லது வேறு பள்ளியுடன் இணைக்கப்படலாம், அல்லது அந்த ஆசிரியர்கள் இடம் மாற்றம் செய்யப்படலாம். இத்தகைய நிர்ப்பந்தங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கின்றது.

குறிப்பாக இன்னும் நிலவுடமை பண்பாடு கோலேச்சும் இந்த சமூகத்தில் பெற்றோரும், ஆசிரியரும் வளரும் வாரிசுகளை தமக்கு விதிக்கப்பட்ட அடிமைகளாகத்தான் கருதுகின்றனர். இளையோருக்கு தேவைப்படும் சுதந்திரமும், அரவணைப்பும் இங்கு இல்லை. பயந்து கொண்டு வாழ்வதே சிறுவர்களின் பொது போக்கு. முக்கியமாக கீழ் மட்ட வர்க்கங்களில் இந்த போக்கு அதிகம். மேல் நோக்கிய வர்க்கங்களில் செல்லமும், ஆடம்பரமும் இருப்பதால் அங்கே சிறுவர்களைக் கண்டுதான் மற்றவர் பயப்படவேண்டும்.

இதனால் ஒரு மாணவனை நண்பனைப் போல மதிப்பு கொடுத்து கற்றுக் கொடுக்கும் பார்வையெல்லாம் நமது ஆசிரியர்களிடம் இருக்காது. அப்படியே ஒரு சிலர் முயன்றாலும் மாணவர்களின் சமூகச் சூழல் அதை மறுப்பதாகி விடுகிறது. பெரிதாகி வரும் வர்க்க முரண்பாடுகளுக்கேற்ப மாணவர்களும் தமது வர்க்கங்களைத் தாண்டி இப்போது இணைய முடிவதில்லை. முந்தயை தலைமுறைக்கு அந்த வாய்ப்பு இருந்தது. தனிமைப்படும் மாணவர்களின் பண்புகள் பிரச்சினை வரும்போது அதீதமாக வெளிப்படுவதும், அதை கட்டுப்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும் திணறுவதும் இப்போது முகத்திலடிக்கும் உண்மை.

5ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஒரு ஆசிரியையின் நடத்தையால் தற்கொலை செய்து கொண்டான் என்ற அதிர்ச்சியும், வேதனையும் நம்மை தாக்குகிறது என்றாலும் ஆய்ந்து பார்த்தால் அந்தப் பெண்மணி அப்படி ஒன்றும் பெரிதாக தவறிழைக்கவில்லை.

பத்தாம் வகுப்பிலும், +2விலும் வருடந்தோறும் நடக்கும் தற்கொலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்கே வந்து விட்டது என்பதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

முழுக்குடும்பமும் வேலைக்கு போனால்தான் வாழ முடியுமென்ற நிலையில் மேற்படிப்பில் ஏதாவது தேறினால்தான் உருப்படியாக ஏதும் ஒரு வேலை கிடைக்கும் என்ற சூழலில் குறிப்பாக தோல்வியுறும் பள்ளி இறுதியாண்டு மாணவிகளின் தற்கொலைகளைக்கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் பிரதீஷின் தற்கொலையை என்னவென்று சொல்வது?

பத்து வயதிலேயே அவன் வாழ்க்கை குறித்த அச்சத்தை அடையும் அளவுக்கு முதிர்ந்த சிந்தனை அவனிடம் வர வாய்ப்பில்லையே? பின் ஏன்? அறுபது வயது ரஜினியின் சேட்டைகளையோ, விரகதாபத்துடன் ஆடும் ஒரு குத்தாட்ட நடிகையையோ பார்த்து ஆடும் நடிக்கும் குழந்தைகளைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்வர். பள்ளி ஆண்டு விழாக்களிலும் இவை சாதாரணம். தனது உலகிற்கு எது அதிகம் தெரிகிறதோ அதைப் போலச்செய்யும் இந்த பாவனை பொருளறிந்து செய்யப்படுவதில்லை. உலகை, சமூகத்தை எளிமையாக அறியும் குழந்தைகள் உலகில் பெரியவர்களின் பாவனைகளே முக்கியமானதொன்றாக மாறிவிட்டால் பிஞ்சு பழுப்பதால் வரும் பிரச்சினைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும்.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் விலங்கு நிலையிலிருந்து பின்னர் படிப்படியாக மனித நிலைக்கு வளருகிறது. இன்று இந்த மாற்றத்தை கையில் வைத்திருப்பவர்கள் பெற்றோர்களா, இல்லை மற்றவர்களா?

சக்திமான்/பவர் ரேஞ்சர் சாகசங்களைப் பார்த்து அப்படியே செய்தும் சில சிறுவர்கள் இறந்திருக்கிறார்கள். இதுவும் போலச்செய்தல்தான். நிழலை நிஜமென்று நம்பி உண்மையை மறுக்கும் சிந்தனை இத்தகைய தொடர்களைப் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படுகிறது. ஆனால் இவையெல்லாவற்றையும் விட அதிக வேறுபாடு கொண்டது பிரதீஷின் தற்கொலை. இங்கே போலச்செய்தல் மட்டுமல்ல, கருத்து ரீதியாகவும் பல அலைக்கழிப்பிற்கு ஆளாகி அந்த சிறுவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான். இது எப்படி சாத்தியம்?

இங்கே குற்றவாளிக் கூண்டில் அந்த ஆசிரியை மட்டுமல்ல தமிழும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆங்கிலப்பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்பது நவீனபாணியாக ஏற்கப்பட்ட காலத்தில், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும், மக்கள் உரையாடல்களிலும் தமிங்கிலீஷே அதிகராப்பூர்வமான மொழியாக மாறிவிட்ட நேரத்தில் அந்த சிறுவன் தமிழை நல்லமுறையில் எப்படி எழுத முடியும்? விரைந்து சாகும் தமிழை ஒரு பிஞ்சு மனதில் துளிர வைக்கமுடியுமா என்ன? சுற்றியுள்ள உலகில் தமிழ் வழக்கழிந்து வரும் நேரத்தில் ஒரு மாணவனை அதுவும் ஐந்தாம் வகுப்பு மாணவனை தமிழ் பாடத்தில் தேற வைப்பது எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். எனில் தமிழை தின்று வரும் ஆங்கிலம்தான் இங்கே வில்லனா? இல்லை ஆங்கிலம்தான் இனி வாழ்க்கை மொழி என தீர்மானித்திருக்கும் சமூக சக்திகள் காரணமா?

இயற்கை உலகை தமிழாலும், செயற்கை உலகை ஆங்கிலத்தாலும் அறிய நேரும் சூழலில் ஆங்கிலத்தை அறிய முடியவில்லையே என குற்ற உணர்வு கொண்ட தமிழக இளைஞர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர். தாய் மொழியால் வாழ முடியாது என்பது விதியாகி சகலத்திலும் கோலேச்சும் அன்னிய மொழியை கற்க முடியாமலும் திக்கி திணறியபடிதான் வாழ்க்கை நகர்ந்து வருகிறது. இதையெல்லாம் விஜயலட்சுமி போன்ற ஆசிரியப் பெண்கள் அறிய வேண்டும். அப்போதுதான் தமிழை ஒழுங்காக எழுத முடியாத சூழலைப் புரிந்து கொண்டு வேறு முயற்சிகளை எடுப்பதற்கு அறிவு ஆயத்தப்படும். இன்றைய சமூகத்தின் நவீன சூழல் குறித்து எந்த ஆசிரியருக்கும் அப்படி ஒரு புரிதல் இல்லை என்பதும் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பாடத் திட்டம் என்ற அளவுகோலின்படி கற்றுக் கொடுப்பதே என்பதும்தான் யதார்த்தம்.

விவரம் புரியாத குழந்தைகளை விட்டுவிடுவோம். விவரம் தெரியவேண்டிய இந்த ஆசிரியர்களுக்கு இதை யார் கற்றுக் கொடுப்பது?

ஐந்தாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு அனுப்பப்படுவோமோ என்பது அந்த சிறுவனை அப்படி ஏன் பாதித்திருக்கிறது? அந்த வகுப்பில் தமிழை சரியாக அதுவும் பாடத்திட்டத்தின்படி எழுதாமல் இருப்பதில் வேறு சில மாணவர்களும் இருந்திருக்கக்கூடுமே? எட்டாம் வகுப்பு வரை ஃபெயில் என்பதே இல்லை என்பது கூட இந்த சிறுவர்களுக்கு தெரியாமல் போயிருக்கிறது. எல்லாம் ஆசிரியர் தீர்மானிப்பதே பள்ளி வாழ்க்கை என்பதே இந்த மாணவர்களின் பொது அறிவாக இருக்கிறது.

தந்தையின் கடின வாழ்க்கையை அந்த சிறுவனும் அறிந்திருக்க வேண்டும். லாரி ஏறினால் இறங்குவதற்கு சில நாட்கள் ஆகிவிடும். குடும்பத் தொடர்பே மாதத்தில் சில நாட்கள்தான். இத்தகைய கடின வாழ்வுதான் நமக்கும் இறுதியில் கிட்டிவிடுமோ என அவன் எண்ணியிருப்பானோ? தேவாலயத்தில் பளீர் உடைகளுடன் வரும் மற்ற சிறுவர்கள் போல தானும் வாழமுடியாமல் போய்விடுமோ என்றும் அவன் சிந்தித்திருப்பானோ?

இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழமைகள் அவன் வாழ்க்கையில் ஒரு வேளை சில விசேட காரணங்களினால் இல்லாமல் போயிருக்குமோ? நட்பு வட்டத்தில் வளைய வரும் சிறுவர்கள் இப்படி எளிதில் உணர்ச்சி வசப்படமாட்டார்கள். நட்பு வட்டத்திற்கு ஒதுக்க வேண்டிய நேரத்தை டி.வி எடுத்துக்கொண்டிருக்குமோ? ஏழைக் குடும்பமென்றாலும் டி.விதான் தமிழகத்தின் தேசியப் பொருளாகிவிட்டதே. கனாக்காணும் காலங்களும், சன் டி.வியின் தொடர்களும் எல்லா வகை வாழ்க்கை சதிகளையும், சம்பவங்களையும், திட்டமிடுதலையும் கற்றுத்தருகின்றன. பருவத்திற்கு வராத வயதிலேயே பாலியல் வேட்கை, பணத்திற்காக கொலை செய்ய திட்டமிடுதல், சக மாணவனை பணையக் கைதியாக்கி கொல்லுதல் போன்றவையெல்லாம் சமீபத்திய சிறுவரது வன்முறைகளில் சேர்ந்திருக்கின்றன. அப்படித்தான் தீக்குளிப்பையும் அந்த டி.வி பெட்டியைப்பார்த்து பிரதீஷ் பயின்றிருப்பானோ?

பிஞ்சிலே பழுக்கவைக்கும் முயற்சிகளில் தொலைக்காட்சி ஊடகம் பாரிய பங்களிப்பதன் மூலம் இன்றைய சிறுவர்களது ஆளுமை கூட டி.விதான் கட்டியமைக்கிறதா?

இல்லை அவனது தாய் மற்ற சிறுவர்களோடு பழகுவதை கண்டிப்புடன் நிறுத்தியிருப்பாரோ? இதெல்லாம் ஒரு நடுத்தர வர்க்கத்தில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் சமூகமாக வாழ்வது அத்தியாவசியமாகத்தானே இன்றும் இருக்கிறது? இல்லை அதுவும் மாறி வருகிறதா?

இந்தப் பிரச்சினையை தாய் தனது ஆசிரியையிடம் பேசுவாதக கூறினாலும் அதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்த உலகில் தனது பிரச்சினையை தாயால் கூட தீர்க்க முடியாது என்ற தனிமைச் சிந்தனை அந்தச் சிறுவனுக்கு எப்படி வந்தது? யார் அதைக் கற்றுக் கொடுத்தது?

அந்த மாணவனது பெற்றோர் தனது மகனது யாரும் எதிர்பார்த்திராத சாவு குறித்து இன்னமும் அழுது கொண்டிருப்பார்கள். அந்த செய்தியைப்படித்தவர்கள் அதை மறக்க முயற்சித்திருப்பார்கள். என்றாலும் குழந்தைகளும், சிறார்களும் ஏதோ ஒரு வீட்டில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அதனால் அடுத்த அதிர்ச்சிக்கு நாம் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

  1. எதிகால சந்ததயெய் நினைத்து பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.இதை நாம் எப்படி எதிர் கொள்ள போகிறோம்.எப்படி பெற்றோர்களுக்கு புரிய வைக்க போகிறோம்.அப்படி புரியவைத்தல் மட்டும் இந்த பிரச்சனை தீர்த்து விடுமா?அதோடு ஒரு பெரிய சமூக மார்த்ற்றதையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த சூழல் ஏற்படுதிஎருக்கிறது.எத்தனையோ விசஎங்களுக்க்க போராடும் நாம் ஏன் yedharkkaga ஒரு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய கூடாது?அது அடுத்த தலைமுறை பாதுகாக்கவும் அது முற்போக்கானதாகவும் இருந்து இது போன்ற விசஎங்களை எதிகாலத்தில் முன் எடுக்கவும் வாய்பாக அமையுமே

  2. மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. தொலைகாட்சி, கல்வி முறை, சினிமா என்று பல வழிகளில் குழந்தைகள் இன்று உளவியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாகி வருகின்றனர். விடலைப் பருவத்தினர் சில சமயங்களில் தவறான முடிவு எடுத்து விடுவது உண்டு.. ஆனால் இன்னும் குழந்தைப் பருவத்தையே கடந்திராதே இந்த சிறுவனின் முடிவை  நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. 

  3. தொலைகாட்சி-அனைத்து வாரப்பத்திரிகைகளின் வன்முறை பல எளிய குடும்பங்களில் அந்த வன்முறைகளைப்பற்றி குழந்தைகள் முன்னிலையில் விரிவாக பேசவைத்திருக்கிறது. விளைவு இது போன்ற ஈடுசெய்ய முடியாத இழப்புக்கள், கட்டுரை மிக ஆழமாக விவாதித்திருக்கிறது . பல பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டும்

  4. This problem is based on the television mega serials scenes and also the parents speech.Because your speech is watching by your childrens sincerely and then they are taking the happenings in his minds.
    Please all parents keep your activities clean and clear with others(neighbours,friends,if unknown persons also).Because you are the first rolemodel for your childrensand also they are watching everything.
    Talk to your childrens with happiness and get the news from childrens about daily happenings.
    (ie .,what he saw,what he enjoys,what he talks to others,What he observes and what happens from morning to evening in outside.Don’t deal this like enquiry.Just deal with happiness to your childrens.)

  5. நல்ல பதிவு, ஆங்கிலம் எழுத தவறி திட்டு வாங்கிய காலம் போய், தமிழ் எழுத ததிங்கினத்தோம் போடும் காலம் வந்துவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் நான் சந்தித்த சிறுவர்கள் பலர் தமிழ் எழுத தெரியாதவர்கள். அதே சமயம், இந்த பிஞ்சு மனதில் தற்கொலை செய்து கொள்ளும் அளவு எண்ணம் வந்ததை நினைத்தால் மனம் பதறுகிறது, அப்படி எப்படி சிந்திக்க முடியும், நிச்சயம் சாவு என்பதை புரிந்து கொண்டிருக்க மாட்டான், பிரச்சனையிலிருந்து தப்பிக்க இதை ஒரு வழிமுறையாக செய்திருப்பானோ? என்ன கொடுமை

  6. கட்டுரை பல கேள்விகளையும், ஆழ்ந்து யோசித்தலையும் கோருகிறது. தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்கிறவர்களை, இந்த கட்டுரை சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன்

  7. நல்ல கட்டுரை. பல கேள்விகளை எழுப்பி, முன்முடிவுகள் இல்லாமல் பல விசியங்களை ஆராய்கிறது.

    கடந்த 40 ஆண்டுகளில் இந்திய கல்வி அமைப்பில், பள்ளி பாடாத்திட்டத்தின் அளவு மற்றும் சுமை பல பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை உருவாக்குபவர்கள் விவேகமற்ற குரூர மனோபாவம் கொண்டவர்கள் போல தென்படுகிறது. 20 ஆண்டுகளில் நடுனிலை மற்றும் உயர்னிலை பள்ளி பாடத்திட்டம் சுமார் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்று கல்லுரியில் இருந்த பாடத்திட்டம் இன்று பள்ளி அளவில். உயர் வகுப்பில் இருந்தவை இன்று நடுனிலை பள்ளி திட்டத்தில். மிக கொடுமையான சுமை.

    பாட‌ங்க‌ளை புரிந்து, சொந்த‌ வார்த்தைக‌ளில் எழுதுவ‌தை த‌டுத்து, அப்ப‌டியே ம‌ன‌ப்பாட‌ம் செய்யும் முறை
    இன்று மிக‌ ப‌ர‌வ‌லாக்க‌ப்ப‌ட்டுள்ளது. இது க‌ல்வியே அல்ல். மேற்க‌த்தைய‌ நாடுக‌ளில் இப்ப‌டி இல்லை.
    அங்கு ப‌ள்ளி க‌ல்வி மிக‌ எளிதான‌து. ஆசிரிய‌ர்க‌ளே பாட‌த்திட்ட‌த்தை பெரும‌ள‌வில் தீர்மானிப்ப‌ர். இறுதி தேர்வுக்கு ம‌ட்டும் முக்கிய‌த்துவ‌ம் இல்லை. இங்கு போல கடூம் சுமை இல்லை. ஆனந்தமான கல்வி முறை. ஆக்டிவிட்டி பேஸ்ட் லேர்னிங் என்பார்க‌ள். இங்கு ச‌மிப‌த்தில் அதை த‌மிழ‌க‌ அர‌சு ஆர‌ம்ப‌ பள்ளிக‌ளில் அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து. ஆனால் அர‌சு ஆசிரிய‌ர்க‌ள் அதை முழுவ‌துமாக‌ க‌ற்று ஏற்ப‌தில் இன்னும் த‌டை இருக்கிற‌து.

    அர‌சு ப‌ள்ளிக‌ளில் க‌ல்வித்த‌ர‌ம் மிக‌ மிக‌ மோச‌மாக‌ உள்ள‌து. வ‌ட‌ இந்தியாவில் ந‌ட‌ந்த‌ ஆய்வில், ந‌டுனிலை ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளில் பெரும்பாலோன‌ரின் எழுதும் திற‌ன் ம‌ற்றும் க‌ண‌க்கு ப‌ற்றிய‌ அறிவு மிக‌ மிக‌ மிக‌ குறைவாக‌ உள்ள‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து. கிர‌மாபுர‌ அர‌சு ப‌ள்ளிக‌ளில், ப‌ல‌ ஆசிரிய‌ர்க‌ள் ஒழுங்காக‌ வ‌குப்புக‌ளுக்கு வ‌ராம‌ல், ச‌ம்ப‌ள‌ம் ம‌ட்டும் வாங்கும் நிலை. அடிப்ப‌டை கார‌ண‌ம் அவ‌ர்க‌ள் “நிர‌ந்த‌ர‌” ஊழிய‌ர்க‌ள். அவ‌ர்க‌ளை கேட்க‌ ஆளில்லை. ப‌ல‌ கால‌ங்க‌ளுக்கு முன், ப‌ஞ்சாய‌த்து போர்ட் ப‌ள்ளிக‌ள், ப‌ஞ்சாய‌த்தார‌க‌ளில் நேர‌டி க‌ட்டுப்பாட்டில் இருந்த்து. ஆசிரிய‌ர்க‌ளும் நேர்மையாக‌, திற‌மையாக‌ போதித்த‌ன‌ர். இன்று அர‌சு ஊழிய‌ர்க‌ள் ஆகி, மாவாட்ட‌ க‌ல்வி அலுவ‌ல‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருப்ப‌தால், ல‌ஞ்ச‌ம் ம‌ற்றும் அர‌சிய‌ல் த‌லைவிரித்தாடுகிற‌து. அத‌ன் கார‌ண‌மாக‌வே, ஏழைக‌ள் கூட‌ முடிந்த‌ வ‌ரை க‌ட்ட‌ண‌ம் அதிக‌ம் கொண்ட‌ த‌னியார் ப‌ள்ளிக‌ளை நாடுகின்ற‌ன‌ர். வேற‌ வ‌ழியே இல்லாத‌வ‌ர்க‌ள் தாம் அர‌சு ப‌ள்ளிக‌ளை நாடுகின்ற‌ன‌ர். ஆனால் சுமார் 40 ஆண்டுக‌ள் முன்பு வ‌ரை நிலைமை அப்ப‌டி இல்லை. த‌னியார் ப‌ள்ளிக‌ளே அன்று அபூர்வ‌மாக‌ இருந்த‌து..

  8. இன்றைய சின்னத்திரை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் (இவையிரண்டும் இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய கிருமிகள்), தன் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டிலும் எப்படியாவது அதிக பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில்லாக வேண்டும் என்ற பெற்றோர்களின் சுயநலம் மற்றும் பிற வசதியான குடும்பங்களை பார்த்து பொறாமைப்படும் எண்ணம், ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டோம் என்று சாதாரண மக்களை ஏமாற்றிக்கொண்டு மேல்தட்டுக் குடும்பங்களின் பிள்ளைகள் மட்டும் பயன்பெற இங்குள்ள மேலாதிக்கவாதிகளால் நடத்தப்படும் ஆங்கில கான்வென்டுகள் மற்றும் அதன் பாடத்திட்டம், பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கை முதலாளிகளால் அறிமுகப்படுத்தப்படும் ஆடம்பர பொருட்கள், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சமூகம்… இவற்றிற்கெல்லாம் அடிமைப்பட்டு இன்றைய இளைய தலைமுறையினர் சிக்கி சீரழிகின்றனர்.

    நல்ல உணவு இல்லை, விளையாட நேரம் கிட்டுவதில்லை, தரமான பொருட்கள் இல்லை, மனிதநேயத்தை இழந்து கொண்டிருக்கும் மக்கள்… இதுதான் இன்றைய சமூகத்தின் நிரந்தர நிலையா? இதற்கெல்லாம் என்னதான் தீர்வு???

    தோழமையுடன்,

    செந்தில்.

  9. Teachers in private institutions are paid very less but the profit of promoters of private schools are too high.They have to prove themselves to be good teachers to get higher salaries but in govt schools there is no such responsibility.

  10. கல்லூரிகளில் வாங்கப்படும் நன்கொடைகள் சில மாதங்கள் முன்பு தலைப்பு செய்திகளாகி தற்போது மறக்கப்பட்டு விட்டது. ஆனால் பள்ளிகளில் அடிக்கப்படும் கொள்ளைகள் பற்றி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. உதாரணமாக சென்னை பத்மா சேசாத்ரி மில்லேனியம் பள்ளியில் ரூ. முப்பதாயிரம் அட்மிசன் கட்டனாமக் வசூலிக்கப் பட்டு அதற்க்கு ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த கொள்ளையை கேட்க எந்த கல்வித் துறை அதிகாரியும் தயாராக இல்லை. இது தவிர வருடம் முபத்தாராயிரம் கட்டணமாகவும் வசூலிக்கப் படுகிறது. அப்படியெனில் பணக்காரர்களுக்கு ஒருவிதமான கல்வியும் ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வியும் தரப்படுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதில்லையா. சட்ட விரோதமான வசூல் கொள்ளைகளில் ஈடுபடும் இந்த பள்ளிகளில் எப்படி நெறிமுறைகளை நாம் எதிர்பார்க்க முடியும். இதில் படிக்கும் மாணவர்கள் என்ன ஒழுக்க முறைகளை கற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.

  11. ஒரு சமூகத்தையே அழித்துக் கொண்டிருக்கும் பிரச்னை இது. கற்பித்தல் குறித்த சமூக அக்கறை இல்லாத ஆசிரியர்களாக இவர்கள் இருப்பது முக்கியமான காரணம். இதை அலட்சியப்படுத்தும் அரசும் குற்றவாளியே! ‍‍‍ ‍‍
    ‍‍‍ ‍‍‍‍‍_ குருசாமிமயில்வாகனன்.

  12. eppoluthellam tv naadakam paarkum pertrorkal veliye than pillaikal vilaiyadum poludhu ethavadu aludhu pulampinal naadakam sariyaka parka mudiyamal pogume eandru pillaikalaiyum thanudan amara vaithukondu naadakam parkindranar.ethanal chinna vayathile antha pillaikal periyavarkal poll yosikka aarampithuvidukirarkal.siru vayathileye mananilai paathikappadavum aalakirarkaal. tv naadakangalai athikam pottu makkalin sinthanaiyai malungatikum intha thaniyar tv niruvana muthalalikalaiyum atharkku thunai nirkum arasaium maatramal petrorkalaiyum pillaikalaiyum mattum mattra muyarchippathu kadiname.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க