முகப்புதடுப்பூசி மருந்து தனியாருக்கு - பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
Array

தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

-

தடுப்பூசி மருந்து தயாரிப்பு தனியாருக்குத் தாரைவார்ப்பு - பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்

திருநெல்வேலி மாவட்டம், ஆலம்பட்டினம் பஞ்சாயத்து யூனியனின் ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணகுமார் என்ற இரண்டு வயது குழந்தை காச்சலுடன் கீழ்தாடை இறுக்கமாகி அசைக்க முடியாமல், ஜன்னி நோய்க்கு ஆளான நிலையில் அனுமதிக்கப்பட்டான். அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு ஒவ்வாத நிலையில் உடல் மெலிந்து காணப்படுவதாகவும்; அவன் பிழைப்பதற்கான வாப்புகள் குறைவு என்றும் குடும்பத்தாரிடம் கூறிவிட்டனர். 6 மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் காலில் ஏற்பட்ட வெட்டு காயத்திற்கு உள்ளூரில் உள்ள கிளை சுகாதார நிலையத்தில் டி.டி. ஊசி (ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி) போடுவதற்கான மருந்து இல்லாமல் போனதால் ஏற்பட்ட விபரீதம் இது. சரவணக்குமாரின் பெற்றோர்கள் தங்கள் அன்பு மகனை எப்படிக் காப்பாற்றுவது என்று புரியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இது ஏதோ சரவணகுமார் என்ற குழந்தைக்கு மட்டும் விதிவிலக்காக நடந்த சம்பவம் அல்ல. நாடு முழுவதும் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் எதிர்காலம் இதை நோக்கிதான் போய்க் கொண்டிருக்கிறது. இந்த செய்தியை அரசே உறுதிப்படுத்தியுள்ளது. டிசம்பர் 2008-இல் 13 மாநிலங்களை ஆய்வு செய்த சுகாதார துறை அதிகாரிகள் பீகார், சட்டிஸ்கர், அஸ்ஸாம், கேரளா மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் தொண்டை அழற்சி, ஜன்னி, காசநோய், கக்குவான் இருமல் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

இதேபோல் ஒரிசா, மேற்குவங்கம், திரிபுரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான பல்வேறு தடுப்பூசிகள் மிகவும் அற்பமான அளவில் மட்டுமே அரசு மருத்துவமனையில் இருப்பு உள்ளதாக செய்தி ஊடகங்களும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கூறுகின்றன. மேற்கு வங்கத்தில் தொண்டை அழற்சி மற்றும் ஜன்னி நோய்க்கு எதிரான தடுப்பூசி அறவே இல்லை. கையிருப்பாக, ஒட்டுமொத்த தேவையில் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இத்தகைய பற்றாக்குறையால் நாடு முழுவதும் 10 முதல் 30 சதம் வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுதல் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் உடல் நலன் மற்றும் ஆயுட்காலம் கேள்விக்குள்ளாகி விட்டது. ஏன் இந்த அவலநிலை? இதற்கான பின்னணி என்ன?

2001-ஆம் ஆண்டு இந்திய அரசு, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் உலக தரத்தை எட்ட “மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள்” சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தமானது, மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பரிந்துரையான, “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” பின்பற்ற வேண்டும் என்பதே ஆகும். தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் என்ற அமைப்பு, மேற்குறிப்பிட்ட பரிந்துரையைச் செயற்படுத்தவும், அவ்வப்பொழுது மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களை ஆய்வு செய்து பரிந்துரைகள் பின்பற்றப்படுகிறதா, இல்லையா என்பதைச் சோதித்து அறிவதும், அதன் அடிப்படையில் உரிமம் கொடுப்பது அல்லது நிராகரிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இவ்விசயங்கள் நடைமுறையில் இருந்தால் மட்டுமே, ஒரு நாட்டின் நிறுவனங்கள் உலக சந்தையில் மருந்தையோ அல்லது தடுப்பூசிகளையோ விற்பனை செய்ய முடியும்.

கடந்த 20 ஆண்டுகளாக உலக வங்கி கட்டளைக்கிணங்க அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனியார்மயம், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. அண்மைக் காலம் வரை மத்திய சுகாதார துறையின் தடுப்பூசி போடும் திட்டங்களுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை பொதுத்துறை நிறுவனங்களே உற்பத்தி செய்து கொடுத்தன. குறிப்பாக நாய்க்கடிக்கான ரேபீஸ் தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து வந்த குன்னூரில் அமைந்துள்ள பாஸ்டர் ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள பி.சி.ஜி. தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும் கிங் ஆராய்ச்சி மையம், மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியிலுள்ள பாம்புக் கடிக்கான தடுப்பூசி ஆராய்ச்சி மையம் ஆகியவை தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தன.

இப்படி குழந்தைகளின் நலன்களுக்கு அடித்தளமாக இருந்த மூன்று நிறுவனங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் சொல்லி கொள்ளும் அளவில் அரசு நிதி ஒதுக்கீடோ அல்லது ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கான நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. எந்த ஒரு நவீன வசதியும் இன்றி சுமார் 30 சதவீத விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையின் ஊடாகவே இவை இயங்கிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு தருணங்களில் அரசு இந்நிறுவனங்களை மூட முயற்சி செய்தது. ஆனால் தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக, அரசால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் வெறி நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்தை தயாரித்து வந்த குன்னூர் பாஸ்டர் ஆராய்ச்சி மையத்தை பலத்த எதிர்ப்புடன் அரசு மூடியாது.

உலக சந்தையில் விற்பனைக்கு வரும் ஒட்டுமொத்த தடுப்பூசியில் 60 சதம் இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைத்தவிர, கணிசமான அளவில் மருந்துகளும் ஏற்றுமதி ஆகிறது. இவ்விரண்டின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 24,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் பெரும்பான்மையாக தனியார் நிறுவனங்களே ஈடுபடுகின்றன. இந்த ஏற்றுமதி எந்த ஒரு தொய்வுமின்றி நீடிக்க வேண்டும் என்றால், ஆரம்பத்தில் கூறப்பட்ட உலக சுகாதார அமைப்பின் “உற்பத்திக்கான சிறந்த முறைகள்” நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பரிந்துரைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த பின்னணியில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் பெறாமலும் ஆட்கள் பற்றாக்குறையிலும் செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களின் தடுப்பூசி உற்பத்திக்கான உரிமத்தை, அன்புமணி இராமதாஸ் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த சுகாதாரத் துறை இரத்து செய்தது. இந்த பொதுத்துறை நிறுவனங்களை மாற்று வேலையில் ஈடுபடுத்தப் போவதாகவும் அறிவித்தது.

குழந்தைகளுக்குத் தேவையான 80 சதவீத தடுப்பூசிகளை நிறைவு செய்து அவர்களின் நலனைக் காப்பாற்றுவதைவிட, தனியார் நிறுவனங்கள் உலகச் சந்தையில் மருந்து மற்றும் தடுப்பூசிகள் விற்பதையே முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் அரசு கருதுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு லைசென்சு இரத்து செய்த பிறகு, சுகாதார துறையின் செயலாளர் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் “பொதுத்துறை நிறுவனங்களை உற்பத்தி செய்ய அனுமதித்தால் 24,000 கோடி ரூபா மதிப்புடைய ஏற்றுமதியானது கேள்விக்குள்ளாகிவிடும்” எனக் கூறினார். அப்பட்டமாக, மக்களின் நலனை விட முதலாளிகளின் நலனே அதிமுக்கியம் என அரசு கருதுவதன் வெளிப்பாடுதான் இது.

பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களை மூடியபின், சுகாதார துறை தனது தடுப்பூசி திட்டங்களுக்குத் தேவையானவற்றை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா.  பயாலாஜிக்கல் இவான்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்களிடமும் மற்றும் இந்திய இம்யுனாலஜிக்கல் லிமிடெட் என்ற அரசு நிறுவனத்திடமும் கொள்முதல் செய்தது. இதில் “பயாலசிக்கல் இவான்ஸ்” என்ற நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதில் சந்தேகம் இருப்பதாக இந்நிறுவனத்தை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு அறிவித்துள்ளது. இருப்பினும் அரசு, தடுப்பூசி கொள்முதலைத் தொடர்ந்தது.

2007-08-இல் ஒட்டு மொத்தமாக குழந்தைகளுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 32.2. கோடி ரூபாய் விலையில் மைய அரசின் சுகாதாரத் துறை கொள்முதல் செய்தது. 2008-09-இல் அதைவிடக் குறைவான அளவிலான மருந்துகளை ரூ. 64.29 கோடிக்குக் கொள்முதல் செய்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடித்ததற்கும், அரசு இத்தனியார்மயக் கொள்ளைக்கு உடந்தையாக நிற்பதற்கும் இப்புள்ளி விவரமே சாட்சியமாக உள்ளது.

தனியார் நிறுவனங்கள் உள்நாட்டு தேவை பற்றியோ, அரசின் தேவை பற்றியோ கண்டுகொள்வதில்லை. அவர்களின் கவனம் முழுவதும் உலகச் சந்தையில் விற்று கோடிக்கணக்கான இலாபத்தை கல்லா கட்டுவதுதான். அதையும் மீறி அரசின் தேவையை நிறைவேற்ற, தடுப்பூசிகளுக்கு யானை விலை கேட்டு நிர்ப்பந்தித்தார்கள். இந்த உண்மையை மனசாட்சியுள்ள அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள். சுகாதார துறையே கூட ஓர் அறிக்கையில் “ஒட்டு மொத்த நாடும் தடுப்பூசி பற்றாக்குறையில் தவிக்கும் போது, தனியார் நிறுவனங்கள் கை கொடுக்கவில்லை” என்று கூறுகிறது. இந்தப் பின்னணியில்தான், நாடு முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

தனியார்மய கொள்கை மற்றும் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக அரசு எந்த ஒரு முதலீடுமின்றி பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழித்து கலாவதியாக்கியது. இரண்டாவதாக, தனியார் மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றுவதற்கு ஏதுவாக பொதுத் துறை நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கி நாட்டு மக்களின் நலனை பறிகொடுத்தது. இதன் மூலம் ஆண்டுதோறும் பிறக்கும் 2.6 கோடி குழந்தைகளின் நலனும் இதர மக்கள் பிரிவினரின் நலனும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டு தட்டம்மைக்கும், கக்குவான் இருமலுக்கும், வெறிநாய்க் கடிக்கும் நமது அன்புக் குழந்தைகளைப் பறிகொடுக்கப் போகிறோமா? அல்லது நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வையே பறித்து வரும் தனியார்மயக் கொள்ளையர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் எதிராக வீதியில் இறங்கிப் போராடப் போகிறோமா?

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு -2009

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு  2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

ஏழையின் கண்கள் என்ன விலை?

  1. போலீசு லைசன்சு ரவுடி போல் தனியார் நிறுவனங்கள் லைசன்சு கொள்ளையர்கள். தனியார்மயம் என்பது கொள்ளைமயமானது. தனியார்மயத்தினால் ஒருசிலரின் வசதிகள் உயருவதைப் பார்த்து நம்மில் சிலர் கைதட்டி ஆர்ப்பரிப்பதுதான் வேதனையானது. ஆனால் பல லட்சம் மக்கள் இதுபோல் மடிவதை கூறினால் ஆய்வறிக்கைகளை நோண்டுகின்றனர். 

  2. கட்டுரையில் முக்கிய விசியங்கள் சொல்லப்படவில்லை.

    தனியார்மயமாக்கும் இந்திய அரசு என்று பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு சரியல்ல.
    இந்த‌ நாட‌க‌த்தின் முக்கிய‌ பாத்திர‌ம் திருவாள‌ர் அன்பும‌ணி ராம‌தாஸ். அவ‌ர்
    ம‌த்திய‌ சுகாத‌ர‌த்துறை அமைச்ச‌ராக‌ இருந்த‌ 5 வ‌ருட‌ங்க‌ள் செய்த‌ ச‌திதான்
    இந்த‌ “த‌னியார்ம‌ய‌ம்”. இந்திய‌ ச‌ரித்த‌ர‌த்தில், சுகாதாரத்துறையில் அவ‌ரை போல்
    “கொள்ளைய‌டித்த‌” அமைச்ச‌ர் யாரும் இல்லை. இனியும் இருப்ப‌து ச‌ந்தேக‌ம்.
    ப‌ல‌ ஆயிர‌ம் கோடிக‌ள் “ச‌ம்பாத்திதார்” என்கிறார்க‌ள்.

    சென்னை, கிண்டியில் உள்ள‌ பி.சி.ஜி இன்ஸ்டியுடில் என‌து ந‌ண்ப‌ர் சுமார்
    20 ஆண்டுக‌ளாக‌ ஒரு ஊழிய‌ராக‌ வேலை பார்க்கிறார். ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள்
    சொல்லியிருக்கிறார். அன்பும‌ணியும், இந்த‌ நிறுவ‌ன‌ டைர‌க்ட்ட‌ர்
    ஒருவ‌ரும் “கூட்டு” சேர்ந்து செய்த‌ ச‌திக‌ள், ஊழ‌ல்க‌ள் மிக‌ மிக‌
    கொடுமையான‌வை. அற்ப‌ கார‌ண‌ங்க‌ள் காட்டி இது போன்ற‌
    மூன்று நிறுவ‌ன‌ங்க‌ளை மூடி விட்டு, பிணமி பெய‌ரில் துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌
    த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ஆர்ட‌ர்க‌ளை மாற்ற‌ பெரிய‌ ச‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌து.
    ந‌ல்ல‌ வேளையாக‌, இம்முறை அன்பும‌ணி அமைச்சராக‌ முடிய‌வில்லை.

    மூட‌ப்ப‌ட்ட‌ இம்மூன்று நிறுவ‌ன‌ங்க‌ளை மீண்டும் திற‌க்க‌ முய‌ற்சிக‌ள்
    ந‌ட‌க்கின்ற‌ன‌. அந்த‌ ஊழ‌ல் டைர‌க்ட்ட‌ர் மாற்ற‌ப்ப‌ட்டு, அவ‌ர் மீது
    விசார‌ணை ந‌ட‌க்கிற‌து.

    இது போன்ற‌ மிக‌ முக்கிய‌ துறையை த‌னியார்ம‌ய‌மாக்க‌ யாரும்
    வ‌லியுற‌த்த‌வில்லை. இது ஒரு கூட்டு ச‌தி. ஊழ‌ல் அமைச்ச‌ரும், அதிகாரிக‌ளும்,
    சில‌ ஊழிய‌ர்க‌ளும் சேர்ந்து செய்யும் ச‌து.

    ம‌ற்றொரு விசிய‌ம் : தொட‌ர் ஊழ‌ல்க‌ள். ம‌ருத்துவ‌ துறை டி.டி.எம்.எஸ்
    ஒருவ‌ர் ச‌மீப‌த்தில் ல‌ஞ்ச‌ம் வாங்கும் போது கைதானார். அவ‌ர் ஒரு
    பெண் அதிகாரி. இது ஒரு ஸாம்பிள்தான்.

    த‌னியார்ம‌ய‌ம் அனைத்து துறைக‌ளிலும் தீர்வாகாது. அர‌சு செய்ய‌ வேண்டிய‌
    அடிப்ப‌டை க‌ட‌மைக‌ளை ச‌ரியாக‌ செய்யாம‌ல‌ த‌டுப்ப‌து இந்த‌ ஊழ‌ல் அமைப்பும்,
    அத‌னால் ப‌ல‌ன‌டையும் ஒரு குழுவும்தான்.

  3. சில மாதங்களுக்கு முன் ஃபிரன்ட்லைன் பத்திரிக்கையில் இதை பற்றிய ஒரு விரிவான கட்டுரை வந்தது. அதே போல பல இதழ்களிலும் இது பற்றி தகவல்கள் வெளி வந்தன. பார்க்கவும்.

  4. […] This post was mentioned on Twitter by ஏழர, ஏழர. ஏழர said: @spinesurgeon @thamizhsasi @rozavasanth தடுப்பூசி சரியா தவறா என்பதை விட போட தடுப்பூசி வேண்டாமா? இந்தியாவின் நிலை http://bit.ly/YtOD3 […]

  5. […] கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.http://naayakan.blogspot.com/2010/07/blog-post.htmlhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=73504https://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.html […]

  6. […] கீழே சில இணைப்புக்கள் கொடுத்துள்ளேன் பார்வையிடவும்.http://naayakan.blogspot.com/2010/07/blog-post.htmlhttp://www.yarl.com/forum3/index.php?showtopic=73504https://www.vinavu.com/2009/09/24/vaccine-privatization/http://healernews.blogspot.com/2010/05/blog-post_16.html […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க