முகப்புகல்லூரி முதல்வரை விரட்டுவோம்!" -மாணவிகளின் போர்க்கோலம்!
Array

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

-

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று துவங்கி, வகுப்பு புறக்கணிப்பு, அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மனு கொடுப்பது, கல்வி இயக்குனரிடம் முறையிடுவது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது- என பல கட்டங்களை கடந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது, இக்கல்லூரி மாணவிகளின் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டிருந்த  செல்லம்மாள் கல்லூரியின் முன்னாள் முதல்வர், ‘ஊழல்ராணி’ ரமாராணியை மீண்டும் இதே கல்லூரிக்கு முதல்வராக நியமித்திருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம்.

நன்கொடை என்ற பெயரில் கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி என்று (தாய்வீட்டு சீதனத்தை!) மாணவிகளிடம் மிரட்டிப் பறித்து, தன் வீட்டிற்கு எடுத்து செல்வது; இவரது இலஞ்ச ஊழலை எதிர்க்கும் மாணவிகளை மிரட்டுவது, பழிவாங்குவது – என கல்லூரிக்குள் காட்டுத் தர்பாரே நடத்தியவர்தான், இந்த ரமாராணி!

தனியாருக்கு நிகராக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடக்கும் அட்டூழியங்கள், அடக்குமுறைகள், பகற்கொள்ளை-வழிப்பறிகளுக்கு ஒரு வகைமாதிரிதான் இக்கல்லூரியும் அதன் ஊழல் முதல்வரும்!

ஆக, இத்தகைய ஊழல் பேர்வழி ரமாராணியை தமது கல்லூரியின் முதல்வராக நியமிக்கக் கூடாது; இலஞ்ச ஊழலும் கட்டாய நன்கொடையும் எந்தக் கல்லூரியிலும் தொடரக்கூடாது என்பதுதான் போராடும் மாணவிகளின் கோரிக்கை.

இம்மாணவிகளின் போராட்டத்தின் நியாயத்தையும், இவர்கள் காட்டும் முன்முயற்சியையும் முனைப்பையும் உணர்ந்து, களமிறங்கியது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கல்லூரி வளாகத்துக்குள்ளே முடங்கிக் கிடந்த இப்பிரச்சினையை வீதிக்கு கொண்டு வந்தது. “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டியடிப்போம்!” என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகள் நகரெங்கும் பளிச்சிட்டன.

பச்சையப்பன் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு.வின் கிளை சார்பில், இம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அக்கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி செப்-3 அன்று மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத போலீசு, ஆத்திரமுற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய பு.மா.இ.மு.வின் பச்சையப்பன் கல்லூரி கிளைச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட இருவரைக் கைது செய்து சிறையிலடைக்க எத்தனித்தது!

இத்தகவல் அறிந்த நூற்றுக்கு மேற்பட்ட செல்லம்மாள் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போலீசு நிலையம் முன்பு குவிந்தனர். “எமக்காகப் போராடிய மாணவர்களை விடுதலை செய்! இல்லையேல் எம்மையும் கைது செய்!” எனக் கோரி போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர். வேறுவழியின்றி, அம்மாணவர்களை அன்று மாலையே விடுதலை செய்தது போலீசு!

நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும், இம்மாணவிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சியுற்ற மாவட்ட நிர்வாகம், கல்லூரி முன்பு போலீசுப் படையைக் குவித்தது. குற்றவாளிகளைப் போல் மாணவிகளைக் கண்காணித்தது. கல்லூரி நிர்வாகமோ, போராட்டத்தைத் தூண்டும் ‘அன்னிய சக்திகளை’ அடையாளம் காட்டும்படி மாணவிகளை மிரட்டியது!

இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாத முன்னணியாளர்கள், பு.மா.இ.மு.வின் வழிகாட்டலில், அனைத்து மாணவிகளிடமும் தொடர்ந்து சந்தித்து பேசி நம்பிக்கையூட்டினர். அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

இதனைதொடர்ந்து, செப்-8 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை அணிதிரட்டிக் கொண்டு கல்லூரி கல்வி இயக்குனரை சந்தித்து முறையிடச் சென்றனர். பெருந்திரளாக மாணவிகள் திரண்டு வருவதைக் கண்டு அரண்டுபோன கல்லூரி கல்வி இயக்குனர், அலுவலகக் கோப்புகளை அப்படியே போட்டுவிட்டு பின்வாசல் வழியே அப்போதுதான் ஓடியிருந்தார். அவரைச் சந்திக்காமல், இங்கிருந்து செல்வதில்லை என உறுதியாய் நின்றனர் மாணவிகள். வேறுவழியின்றி, அவருக்குப் பதிலாக நிதித்துறை இணை இயக்குனர் மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக எழுதிக் கொடுத்தார்.

இம்மனு மீதான விசாரணைக்காக ஒருவாரம் காத்திருந்தனர். நடவடிக்கை எதுவுமில்லை. வீதியில் இறங்காமல் இதற்கோர் விடிவுப் பிறக்காது என்பதையுணர்ந்த மாணவிகள், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர்.

அதன்படி, செப்-16 அன்று மெமோரியல் அரங்கம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாய் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். இதனைக் கண்டு பீதியடைந்த கல்லூரி நிர்வாகம், செப். 15-ந் தேதி மாலை 5மணியளவில் திடீரென்று நாளை அனைவருக்கும் “செமினார்” என்றும், அதில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது!

கல்லூரிக்கு முன் முகாமிட்டிருந்த போலீசும் தன்பங்குக்கு  கல்லூரியிலிருந்து ஆர்ப்பாட்டத்துக்குக் கிளம்பிய மாணவிகளைத் தடுத்து நிறுத்த முனைந்தது. மாணவிகளோ “போலீசு கமிசனரிடம் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” என பதிலடி கொடுத்து விட்டு அணி அணியாய் கிளம்பினர், ஆர்ப்பாட்டத்திற்கு!

சென்னை பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் வ.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.மா.இ.மு.வின் மாவட்ட இணைச்செயலர் தோழர் த.கணேசன் மற்றும் போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கண்டன முழக்கமிட்டு நகரையே அதிர வைத்தனர்.

‘‘ஊழல்பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டு விரட்டும் வரை தமது போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ள இம்மாணவிகள், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

  1. Though large number of people actively participated in the struggle to remove the college Principal, I think it was not reported in media. Unless due attention is given to such issues by the media, it seems to be very difficult for other people to understand what is really going aroud them. Media should represent and stand for the truth in a chaotic world.

  2. மாணவிகளின் போராட்டம் வெற்றிபெற துணையாய் இருப்பதுடன் போராட்ட தலைமை எடுத்த காரியம் கைவிடாமல் இருக்க வேண்டும்.

  3. போராட்ட தலைமைக்கும், போராடிய தோழர்கள் மற்றும் மாணவியருக்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் என்றால் பொறுப்பற்றவர்கள் என்ற பொய்யை பு.ம.இ.மு மீண்டும் மீண்டும் உடைக்கிறது…

  4. வினவு இன்னும் நிறைய இது மாதிரி போராட்ட செய்தி போடுங்க…அப்பதான் இந்த அமைதிப்பூங்கா வோட லட்சணம் உலகத்துக்கு தெரியும்

  5. நண்பர்களே எனக்கு காந்தி(ஜி???) யின் மறுபக்கம் குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. உங்களிடம் தகவல்கள் இருந்தாலோ அல்லது தகவல்கள் இருக்கும் வலைப்பூக்கள் தெரிந்தாலோ தயவு செய்து jeevendran@yahoo.com அனுப்பும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க