Saturday, September 23, 2023
முகப்புநவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!
Array

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

-

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தாமும்!!

vote-0121917 நவம்பர் 7 உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரசியாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உலகிலேயே முதல் முறையாக தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் முதல் அரசு mரசியாவில் அமைக்கப்பட்டது. ஆண்டைகளின் வரலாற்றை புரட்டி போட்டு அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும்  என்று உலகுக்கு காட்டிய நாள். கூலிகளாகவும், பஞ்சப் பராரிகளாகவும் ஆளும் வர்க்கத்தால் ஏய்க்கப்படிருந்த கூட்டம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.

தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைத்தவுடன், அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டு அச்சத்திலிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்தது. ஜாரினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் அன்று முதல் விடுதலை வழங்கப்பட்டது. ரசியா முழு சுதந்திர நாடாக, சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.

இன்று நவம்பர் 7, ரசிய புரட்சி நாள். அந்த ரசியப்புரட்சியின் 92வது நினைவு நாள். தோழர்கள் அனைவருக்கும் எமது நவம்பர் 7 புரட்சி  தின வாழ்த்துக்களையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைக்க அரும்பாடுபட்ட தோழர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை  “ஸ்டாலின் சகாப்தம்” என்னும் ஆவணப்படத்தில் “புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி” தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் தோழர் ஸ்டாலினின் இளமைக்காலம், புரட்சிகர பாதைக்கு அவர் வந்து சேர்ந்தது பற்றி, ரசிய புரட்சியில் அவரது பங்கு, உழைக்கும் மக்களின் தலைவராக அவர் உருவானது பற்றி, ஸ்டாலின் ஆட்சியில் சோசலிசத்தின் சாதனைகள், மார்க்சிய லெனினியத்தை திரித்த புரட்டல்வாதிகள், தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை பரப்பிய துரோகிகள், இரண்டாம் உலக போரில் உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய பாசிசத்தை செம்படை வீழ்த்துதல், போருக்கு பின் மறுநிர்மானம்,  தோழர் ஸ்டாலினின் அன்றைய சாதனைகளை இன்றைய இந்தியாவின் நிலைமையுடன் பொருத்தி இங்கும் ஒரு புரட்சியின் தேவையை வலியுறுத்தி இந்தியாவிலும் ஒரு சோசலிச புரட்சியை நாம் செய்ய வேண்டியதையும், அதற்காக நாம் அணி திரளவேண்டிய அவசியத்தையும் விளக்கிச் செல்கிறது இப்படம்.

உழைக்கும் மக்களின் நாயகனான தோழர் ஸ்டாலின் பெயரை கேட்டாலே காய்ச்சிய எண்ணையை காதில் ஊற்றியது போல் ஓலமிடுகிறது முதலாளித்துவ கூட்டம். தோழர் ஸ்டாலின் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீது தான் எத்தனை எத்தனை பொய்களும், அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. ஸ்டாலின் சர்வாதிகாரி, கொலைகாரன், கொடுங்கோலன். ஸ்டாலின் ஆட்சியின் கீழ் லட்சக்கணக்கான ரசிய மக்கள் உரிமைகள் ஏதுமின்றி மந்தைகளை போல கொல்லப்பட்டார்கள். சோசலிச கொள்கையை மக்கள் மீது திணிக்கும் பொருட்டு உக்ரைனில் மாபெரும் படுகொலைகளும், பேரழிவும், பஞ்சமும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது என்கிற அவதூறுகள் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது. இவற்றுக்கெல்லாம் என்ன பதில்? இது பற்றி இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறதா? இல்லை, இந்த ஆவணப்படம் தோழர் ஸ்டாலின் மீது செய்யப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு பதிலளிக்கவில்லை, மாறாக ஸ்டாலின் கால ரசியாவின் சாதனைகளையும், அவர் ஆட்சி காலத்தின் அரசியல் நெருக்கடிகளையுமே விளக்குகிறது. எனவே தோழர் ஸ்டாலின் பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பற்றி சற்று விரிவாக பார்ப்ப்பது அவசியம்.

ஸ்டாலின் யார்? இட்லர் யார்? சர்வாதிகாரி யார்?

ஸ்டாலின் குறித்து செய்யப்படும் அவதூறுகளை பொதுவில் கீழ் கண்ட வகைகளில் தொகுக்கலாம். ஐரோப்பா அமெரிக்காவிலும் இது தான் வாதம் தமிழகத்திலும் இது தான் வாதம்.

  • ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன்.
  • ஸ்டாலின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்கவில்லை. கட்சி ஊழியர்களே வாய் திறக்க முடியவில்லை. இரும்புத்திரையின் சர்வாதிகாரம் ஆட்சி செய்தது.
  • தனது கொள்கைகளை திணிக்க லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.
  • உக்ரைனில் மட்டும் பல லட்சம் பேரை கொலை செய்தார்.
  • ஸ்டாலின் – இட்லர் இரண்டு பேரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.

என்பது போன்ற கேள்விகளை எல்லாம் ரசிய மக்களோ உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களோ முன் வைக்கவில்லை. மாறாக முதலாளித்துவத்தையே மூச்சு காற்றாய் சுவாசித்து முண்டாமாய் மட்டுமே வாழ்ந்து அறிவை(!) வளர்த்து கொண்ட அறிவு ஜீவிகளுடையது தான் இந்த கேள்விகளும் அவதூறுகளும்.

ஸ்டாலின் சர்வாதிகாரியா? ஆம், நாம் மறுக்கவில்லை. ஸ்டாலின் சர்வாதிகாரி தான். ஆனால் யாருக்கு? ஸ்டாலினை கண்டு அஞ்சுபவர்கள் யார்? தோழர் ஸ்டாலினை கண்டு ரசிய மக்களோ அல்லது இந்திய மக்களோ அஞ்சவில்லை, ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் ஸ்டாலின் அன்புக்குரிய தோழர். அப்படி என்றால் அவரை கண்டு அச்சம் கொள்வோர் யார்? வேறு யார், முதலாளித்துவ கூட்டம் தான் ஸ்டாலினை கண்டு பீதியடைகிறது.. அவர்கள் தான் ஸ்டாலின் என்றாலே அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். தோழர் ஸ்டாலின் மீது இவர்கள் கட்டமைக்கும் அனைத்தும் பொய்கள், புனைவுகள். நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன.  ஆனால் நம்முடைய விமர்சனங்களுக்கும் விமர்சனம் என்கிற இவர்களுடைய அவதூறுகளுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. இரண்டும் தன்மை ரீதியிலேயே வேறு வேறானவை. இவர்களுடைய ஸ்டாலின் எதிர்ப்பு என்கிற வாதத்தின் முனையை பிடித்துக்கொண்டு அதனுடைய வேரை நோக்கி நகர்ந்தோம் எனில் அது ஏகாதிபத்திய தொடர்பில் போய் முடிவதை காணலாம். உதாரணமாக ஜெயமோகனோ, அ.மார்க்சோ முன் வைக்கிற ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளின் மூலம் ராபர்ட் கான்குவிஸ்ட், சோல்சனிட்சன் என்று துவங்கி ராபர்ட் ஹெர்ஸ்ட்,பாசிஸ்ட் ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் என்கிற மர்மத்தொடர்பில் போய் முடியும்.

ஸ்டாலின் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எது அடிப்படை? எந்த சான்றுகளிலிருந்து இவர்கள் தமது வாதத்தை வைக்கிறார்கள்? ஸ்டாலின் பற்றி இவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி எழுத்தாளர்களிடமிருந்து தான் பெறப்படுகின்றன.

உக்ரைன் பஞ்சம், உக்ரைன் படுகொலைகள் உண்மையா ?

உக்ரைனில் மட்டும் ஸ்டாலின் 30 லட்சம் பேரை கொன்று குவித்தாராம். இதை புத்தகங்களிலும் மேலை நாடுகளின் பாட நூல்களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த வாதம் தமிழகத்திலும் ஸ்டாலின் தொடர்பாக வைக்கப்படுகிறது. இது உண்மையா? இல்லை என்றால் இந்த கட்டுக்கதைக்கான அடிப்படை என்ன ?

உலகையே அச்சுறுத்தி வந்த பாசிச இட்லர் உக்ரைனை தனது போர்வாளில் வென்றெடுக்க கனவு கண்டான். ஜெர்மனியர்கள் வாழ்வதற்கு புவிப்பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாக உக்ரைன் இருந்தது. விரிந்த ஜெர்மனி என்கிற இட்லரின் நாஜிக்கனவில் உக்ரைனும் இருந்தது. உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கெதிராக போர் தொடுக்க வேண்டும். அதற்கு முன் கூட்டியே சில தயாரிப்பு பணிகளை செய்ய வேண்டி இருந்தது. இந்த நோக்கத்துடன் நாஜி கோயபல்ஸ் தலைமையிலான சோசலிசத்திற்கு எதிரான ஒரு மாபெரும் பிரச்சார இயக்கம் ஜெர்மனியால் துவக்கப்பட்டது.  “உக்ரைனில் சோசலிச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஸ்டாலினுடைய செம்படை கொலை செய்தது. பேரழிவு பஞ்சத்தை உருவாக்கியது, பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள். இதன் காரணமாக மட்டுமே ஸ்டாலின் ஆட்சியில் உக்ரைனில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்” என்கிற அவதூறை பரப்புவதையே மையமாக கொண்டிருந்தது அந்த சோவியத் எதிர்ப்பு நாஜி இயக்கம். உக்ரைனை சோவியத்திடமிருந்து ஜெர்மனி விடுவிக்க வேண்டும் என்கிற பொதுக்கருத்தை உலக மக்களிடம் உருவாக்க வேண்டும் என்பது தான் இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கம். அதன் பிறகு உள்ளே நுழைந்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பது தான் பாசிச இட்லரின் திட்டம். ஆனால் பெரு முயற்சி எடுத்தும் இட்லரின் இந்த பிரச்சாரம் உலக அரங்கில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து நாஜிக்களுக்கு உதவ தானாகவே ஒரு கோட்டீஸ்வரன் முன்வந்தான். அவன் தான் ரடால்ப் ஹெர்ஸ்ட். இவன் அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிக்கை முதலாளி. 1930 களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக விளங்கினான். 1934ல் ஹெர்ஸ்ட் ஜெர்மனிக்கு சென்ற போது இட்லர் அவனை தனது விருந்தாளியாகவும், நண்பனாகவும் வரவேற்றான். அதன் பிறகு சோவியத் ரசியாவிற்கு எதிரான பிரச்சார கட்டுரைகள்,  ‘சோவியத் ரசியாவில் நடக்கும் அட்டூழியங்கள்’,  ‘பெருந்திரள் படுகொலைகள்’, ‘திட்டமிட்ட பட்டினி சாவுகள்’ என்னும் பொய் கதைகள் ஹெர்ஸ்டின் நாளேடுகளில் தினமும் வெளி வந்தது. இட்லரின் நண்பனான கோயரிங்கின் ஸ்டாலின் பற்றிய அவதூறு கட்டுரைகள் தொடர்ச்சியாக ஹெர்ஸ்டின் நாளிதழ்களில் வெளிவந்தன. ஸ்டாலினை கொலைகாரனாக சித்தரிக்க கையில் கத்தியுடன் இருக்கும் தோழர் ஸ்டாலினை பற்றிய கேலிச்சித்திரங்களும் இடம் பெற்றன. பரபரபூட்டுவதற்காக தொடர்ச்சியாக உக்ரைன் விஷ்யம் எழுதப்பட்டது. பத்திரிகையில் பிரசுரிப்பதற்கான செய்திகள் அனைத்தையும் ஜெர்மனியின் உளவுப்படையான கெஸ்டபோ தான் நேரடியாக வழங்கியது.

இந்த தொடர் பிரச்சாரத்தின் மூலம் உலக அரங்கில் ஒரு பொதுகருத்தை சோவியத்துக்கு எதிராக திருப்புவதில் நாஜிக்கள் ஹெர்ஸ்டின் உதவியால் வெற்றியும் பெற்றார்கள். இப்படித்தான் ஸ்டாலின் உக்ரைன் மக்களை கொன்ற சர்வாதிகாரியானார்.

ஆனால் அதன் பின்னர் இவை அனைத்தும் முதலாளித்துவ அவதூறுகள் என்பதை கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் உலகுக்கு அம்பலப்படுத்தினார்.

முதலாளித்துவ சர்வாதிகாரத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஒரே தராசில் நிறுத்தி  ‘இரண்டுமே சர்வாதிகாரம் தான்’ என்று செல்லும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் இந்த கருத்து நேரடியாக ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கு மேலும் தூபம் போட்டு பாசிச இட்லருக்கு நிகராக தோழர் ஸ்டாலிக்கும் கருப்பு சாயம் பூசி வரலாற்றில் ஒதுக்கும் செயலாகும்.

ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன் – யார்  இவர்கள் ?

இவர்கள் அத்தனை பேரும் பெரிய மனிதர்கள். மாபெரும் அறிவாளிகள். பேராசிரியர்கள். ஆனால் இது இவர்களின் ஒரு பக்கம் தான் இவர்களின் இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவர்கள் அத்தனை பேரும் கூலிக்காக எழுதிய ஏகாதிபத்திய கூலியாட்கள்.

ராபர்ட் கான்குவெஸ்ட் ஒரு கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். இவர் ஸ்டாலின் பற்றியும் சோவியத் பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டாம் உலகப்போர் பற்றியும், சோவியத் ஒன்றியம் ஸ்டாலின் பற்றியும் எல்லா பொய் கதைகளையும் உருவாக்கியதில் இவர் தான் முதன்மையான நபர், முக்கியமான நபர். உக்ரைன் படுகொலைகள், பட்டினிச்சாவுகளை ஹெர்ஸ்ட் 60 லட்சம் என்றான், இவரோ தனது கணக்குக்கு அதை 150 லட்சமாக உயர்த்திக்கொண்டார்.

சோவியத் மீது படையெடுக்க தயாராகும்படி அமெரிக்க மக்களை அறை கூவி அழைக்கும் தனது தேர்தல் பிரச்சாரத்திர்கு உரை எழுதி தரும் படி 1988ல் ரீகன் இவருக்கு ஒரு வேலையை ஒப்படைத்தார்.

அதன் பிறகு தான் கான்குவெஸ்டின் முழு கைக்கூலித்தனமும் வெளியே தெரிந்தது. இவன் பிரிட்டனுடைய இரகசிய உளவுப்படையின் பொய் பிரச்சாரத்துறையின் ஏஜெண்ட் என்பதை பிரெஞ்சு பத்திரிகையான  ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியது.

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரும் சோவியத்துக்கு எதிராகவும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகவும் பொய்களை மட்டுமே எழுதி வந்த கைக்கூலி எழுத்தாளர்கள் தான். இவர்கள் அனைவரும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்காக பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மை 1996ல் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.

சோல்சனிட்சன் என்கிற எழுத்தாளன் சோவியத்தையும், ஸ்டாலினையும் மிக மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதினான். அவனுடைய எழுத்துக்கள் அனைத்தும் பொய்களையும், அவதூறுகளையுமே கொண்டிருந்தது.

அமெரிக்க வெறி நாய் வியட்நாமில் நுழைந்து, அங்கே வாங்கிய அடியால் வாலை சுருட்டிக்கொண்டு மீண்டும் அமெரிக்கவிற்குள்ளேயே ஓடிப்போனதை இந்த உலகமே மகிழ்ச்சியோடு பார்த்தது. அமெரிக்கா அடி வாங்கி அய்யோ வென்று  நிற்கும் அந்த நிலையிலும் இந்த சோல்சனிட்சன் என்ன சொன்னார் தெரியுமா? அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு, அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோல்சனிட்சன் பிரச்சாரம் செய்தார்.

எழுத்தாளனுக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை?

இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

ஆக தோழர் ஸ்டாலின் பற்றி பேசுகிறவர்கள் அத்தனை பேரும் இது போன்ற ஏகாதிபத்திய கூலிக்காசுக்கு எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து தான் விவரங்களை எடுத்துக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இது போன்ற காசுக்கு எழுதும் கைக்கூலி எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்த அதே சமயம் அந்த பொய்களை அம்பலப்படுத்தி உண்மையை எழுதிய எழுத்தாளர்களும் இருந்தார்கள். அவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகளோ, ஸ்டாலின் ஆதரவாளர்களோ இல்லை, மாறாக அவர்கள் அனைவரும் முதலாளிய ஜனநாயகவாதிகள் தான். ஆனால், நேர்மையான பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இவர்கள் தவிர வேறு பலர் கூட எழுதியிருக்கலாம் அது பற்றிய விவரங்கள் நமக்கு தெரியவில்லை.

திட்டமிட்டே பேரழிவு பஞ்சம்’ என்று எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத அவதூறை பரப்பும் அறிவு ஜீவிகள் ஒருபோதும் இது உண்மையா என்று ஆராய்ந்ததில்லை. ஆராய முற்பட்டதும் இல்லை. ஆராய்ந்தால் திட்டமிட்டே பரப்பப்பட்ட தோழர் ஸ்டாலின் மீதான இந்த அவதூறுகளுக்கு  ராபர்ட் கான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், பெரும் முதலாளி வில்லியம் ஹெர்ஸ்ட் இவர்களுடன் பாசிச இனவெறியன் இட்லர் போன்றோர் அடங்கிய கூட்டமே காரணம் என்பது நிருபணம் ஆகும்.

ஸ்டாலின் – இட்லர் ஒப்பந்தம் சரியானதா?

ஸ்டாலினுக்கு இட்லர் கொடுங்கோலன் என்று தெரியாதா? பிறகு ஏன் ஸ்டாலின் இட்லருடன் ஒப்பந்தமிட்டார் என்று சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றின் பக்கங்களை புரட்டி கூட பார்க்காத சிலர் ஸ்டாலின் பற்றி கேட்கும் எதிர்மறையான கேள்விகளுள் இதுவும் ஒன்று. தோழர் ஸ்டாலின் இனவெறியன் இட்லரின் பாசிச அபாயத்தை கண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுகொள்ள அழைத்தார். ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தோழர் ஸ்டாலினுடைய அழைப்பை ஏற்கவில்லை. இதில் குறிப்பாக காய் நகர்த்தியது பிரிட்டன் தான்.  பிரிட்டன் சோவியத் யூனியனை தாக்குமாறு இட்லரை ஊக்குவித்தது. இட்லர் சோசலிச ரசியாவை அழிக்க இறங்கினான் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. அந்த போரில் இட்லர் நிச்சயம் தனது பலத்தை முழுமையாக இழந்து விடுவான். அத்துடன் சோவியத்தின் கம்யூனிச அபாயமும் அழியும். இட்லரும் அழிவான் அல்லது பலவீனமடைவான். பிறகு பிரிட்டன் மட்டும் தான் ஐரோப்பாவின் மாபெரும் சக்தியாக இருக்கும் என்று மனப்பால் குடித்தது பிரிட்டன். அதனால் தோழர் ஸ்டாலினின் ஒப்பந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. உலக நாடுகளை அச்சுருத்தும் பாசிசத்தின் போக்கை கண்டு உலக நாடுகளை காக்கும் பொருட்டும், ஏகாதிபத்தியத்தின் கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில் உழைக்கும் மக்களின் ரத்தமும் வியர்வையும் கொண்டு கட்டியெழுப்பிய சோசலிச சமூகத்தை காக்கும் பொருட்டும் அவர் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஒப்பந்தம் கோரினார். அவை சாத்தியமற்று போனதால் இட்லரிடம் நேரடியாக ஒரு இடைகால ஒப்பந்தம் போட்டுக்கொள்ள தோழர் ஸ்டாலின் தயாரானார். (இந்த இடைக்கால அவகாசம் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம்) இடைகால ஒப்பந்தம் என்பது பல்வேறு சாதக பாதகங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வகுக்கப்பட்ட ஒரு செயல் தந்திரம். உலக யுத்த சூழலில் சோவியத் ரசியாவை தற்காத்துக் கொள்ளவும் செம்படையை பாசிசத்துக்கு எதிராக ஆயத்தபடுத்திக்கொள்ளவும் ஒரு இடைக்காலம் தேவை என்பதாலேயே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அன்றைய சூழலில் இட்லர் போர்வெறி கொண்டு அலைபவனாக மாபெரும் பலத்துடன் இருக்கிறான். அப்போதைக்கு அவனோடு மோதி வெல்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. காரணம் சோவியத் படைகள் அவ்வளவு பலத்துடன் இல்லை. எனவே தன்னை தயார் படுத்திக்கொள்ள ஒரு சிறு இடைவெளி ரசியாவுக்கு தேவையாக இருந்தது. அதன் காரணமாகத்தான் இந்த ஒப்ப்ந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தம் போடப்பட்டது, இட்லர் படையெடுப்பான் ரசியா அழியும் ஏகாதிபத்தியங்களின் கனவு தகர்ந்தது. ஒப்பந்தப்படி ரசியா 1939லிருந்து 1941வரை போரில் ஈடுபடவில்லை. செம்படை தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில், போருக்கு ரசியா தயாராக இல்லாத நிலையில் இட்லர் ரசியாவின் மீது திடீரென்று படையெடுத்தான். இரண்டாவது உலகப்போர் மிக உக்கிரமாக நடந்தது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கோழைகள் எல்லாம் இட்லருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்கள். தோழர் ஸ்டாலின் தலைமையிலான செம்படை தான் பாசிசத்தை வீழ்த்தி உலகை காத்தது.

தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை அள்ளி வீசும் அறிவு ஜீவுகள் ஸ்டாலின் வாழ்ந்த காலகட்டத்தையும் சோவியத் ரசியாவின் புறச் சூழ்நிலையையும் காண மறுக்கின்றனர்.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எதையும் மறைத்துக்கொள்வதில்லை. தோழர் ஸ்டாலின் மீது எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அந்த காலச்சூழலுடன் பொறுத்தி பார்க்க வேண்டும்.

கடுமையான விமர்சனத்திற்கு ஆட்பட்ட தோழர் ஸ்டாலின் வாழ்ந்த காலம்  சோசலிச ரஷ்யாவின் குழந்தைப் பருவ காலம்’

ரஷ்யபுரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளிலேயே மாமேதை லெனின் மரணமடைந்தார். அவர் மறைவிற்கு பின் லெனினுடைய பொறுப்புகள் அனைத்தும் ஸ்டாலினிடம் வந்தன. ரசியாவை சதி செய்து கவிழ்த்து மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டுவருவதற்கு ஏகாதிபத்தியங்கள் காத்துக்கிடந்தன. ரசியாவை கொத்திக்குதற தலைக்கு மேல் சுற்றி வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறமும், கட்சிக்குள் இருந்து கொண்டே சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்த டிராஸ்கி போன்ற ஏகாதிபத்தியவாதிகளை கையாள்வது  இன்னொருபுறம்;  இவ்வாறு பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் நிறைந்த காலகட்ட்த்தோடு தோழர் ஸ்டாலினின் ஆட்சி காலம். அவருடைய நடவடிக்கைகளையும் அத்துடன் வைத்து தான் நாம் மதிப்பிட வேண்டும்.

ஸ்டாலின் தலைமையில் சோவியத்தின் சாதனைகள்

இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிச கொடுங்கோலன் இட்லரை வீழ்த்திய போரில் சோசலிச ரசியாவுக்கு ஏற்பட்ட சேதம் கணக்கில் அடங்காது. இரண்டு கோடிக்கும் அதிகமான ரசிய மக்கள் மட்டும் போரில் கொல்லப்பட்டார்கள். இரண்டரை கோடி மக்கள் வீடுகளை இழந்தனர். 1710 நகரங்கள் மற்றும் நகர்புற குடியிருப்புகளை 70,000க்கும் அதிகமான கிராமங்களை, சுமார் 32,000 தொழில் நிறுவனங்களை, 98,000 கூட்டு பண்ணைகளை, ஐயாயிரம் அரசு பண்ணைகளை நாஜிக்கள் அழித்தொழித்தார்கள்.

சோசலிச கட்டமைப்பின் இரண்டாவது புத்துயிர்ப்புக்காக தோழர் ஸ்டாலினால் சரியான தொலைநோக்கு திட்டங்களை முன்வைத்து போருக்கு முன் இருந்த தொழில் வளத்தை விட அதிகமான தொழில் வளத்தில் சோசலிச ரசியாவை முன்னெடுத்து சென்றார். சோவியத் யூனியன் இனி மீள்வது மிகவும் கடினம், தொழிற்துறையின் மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதல்களிலிருந்து மீள்வதற்கு மட்டுமே இன்னும் சில பத்தாண்டுகள் தேவைபடலாம் என்று சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் மதிப்பிட்டு எழுதினார்கள். ஆனால் வெறும் மூன்றே ஆண்டுகளில் 1948 தொழிற்துறை உற்பத்தி 1940ன் உற்பத்தியை விட மிஞ்சியது. 1940ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1949ம் ஆண்டில் தொழிற்சாலை மற்றும் அலுவலக தொழிலாளர்களுக்கான வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்தது.

சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம். ஜார் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட பின் தங்கியிருந்தது. புரட்சிக்கு பின்னர் இருபதே ஆண்டுகளில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றிருந்தோரின் சதவிகிதம், இந்தியாவை காலனியாக்கி வைத்திருந்த, உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்து மடங்கு உயர்ந்திருந்தது.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் காமராஜர் ரசியாவுக்கு போயிருந்த போது, ஒரு நாள் இரவு ஒரு ஒன்பது மணியை போல வெளியே போய் சும்மா ஒரு நடை நடை நடந்து விட்டு வரலாமா என்று தனக்கு துணையாக வந்திருந்த கைடிடம் கேட்கிறார். போகலாமே, வாருங்கள் போகலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கிறார். அப்போது அவர்கள் ஒரு கட்டிடத்தை கடந்து செல்கிறார்கள், அந்த கட்டிடத்திலிருந்து கசமுச கசமுச என்று சத்தம் வருகிறது, உடனே காமராஜர் அங்கேயே நின்று அது என்ன சத்தம் என்கிறார். உடனே கைடு மக்கள் படிக்கிறார்கள், இரவு பள்ளி என்கிறார். காமராஜர் பார்க்க முடியுமா என்கிறார். பார்க்கலாமே, வாருங்கள் பார்க்கலாம் என்று அந்த கட்டிடத்திற்குள் அழைத்துச்செல்கிறார். உள்ளே பார்த்தால் அனைவரும் வயதானவர்களாக இருக்கிறார்கள். உடனே காமராஜர் என்ன இது எல்லோரும் வயதானவர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இப்போது தான் படிக்கிறார்களா என்று கேட்கிறார்.அதற்கு கைடு இல்லையில்லை இவர்களுக்கு தாய் மொழியான ரஷ்யன் தெரியும். தற்போது பிரெஞ்சு கற்றுவருகிறார்கள் என்கிறார். காமராஜர் வியந்து போகிறார். இது தோழர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த நிகழ்வு. சோவியத்தின் வளர்ச்சிக்கு இது போல ஆயிரம் சம்பவங்களை உதாரணங்களாக சொல்லலாம்.

தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரசியாவின் உழைக்கும் மக்கள் முன்னால், போருக்கு பிந்திய தொழிற்துறையின் அதிவேக முன்னேற்றத்தை சாதித்த உழைத்த மக்களின் முன் ஸ்டாலின் சர்வாதிகாரி என்று புலம்பி தீர்ப்பவர்களின் கூச்சல்கள் அனைத்தும் காணாமல் போகும்.  தோழர் ஸ்டாலினுடைய புகழை அவதூறு அலைகள் வீசியெறியமுடியாது என்பதற்கு சோவியத் மக்களோடு நின்று அவர் கட்டியெழுப்பிய சோசலிச கோட்டையை உடனே தகர்க்க முடியாமல் 40 வருட போராட்டத்திற்கு பிறகே தகர்க்க முடிந்துள்ளது என்கிற ஒன்றே போதுமான சான்று.

அமெரிக்க பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் ஸ்டாலின் என்றால் சர்வாதிகாரி, சர்வாதிகாரி என்றால் இட்லர், ஸ்டாலின், மாவோ போன்றோர்கள் என்கிற விசமத்தனமான கருத்து ஆழமாய் இளம் வயதிலேயே விதைக்கப்படுகிறது.

’’‘தோழர் ஸ்டாலின் என்றால் உழைக்கும் வர்க்கத்தின் தோழர்’ என்னும் உண்மையான கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதில் முதல் முயற்சி என்கிர வகையில் சில பிழைகள் இருப்பினும் “புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி” தோழர்களின் இந்த கன்னி முயற்சி வரவேற்கத்தக்கது. ஸ்டாலின் சகாப்தம் என்கிற இந்த ஆவணப்படம் வெளி வந்த சில நாட்களிலேயே முதல் பதிப்பு அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

தோழர் ஸ்டாலின் பற்றிய அவதூறுகளை நம்புகிறவர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்தின் பொய்களைத் தான் நம்புகிறீர்கள். ஸ்டாலின் பற்றி உங்களுக்கு கூறப்படுபவை அனைத்தும் பொய்களே. ஸ்டாலினை கண்டு முதலாளிகள் அச்சப்படுகிறார்கள் எனவே தான் பீதியூட்டும் பொய் கதைகளை பரப்பி விடுகிறார்கள். உழைக்கும் மக்கள் தோழர் ஸ்டாலினை கண்டு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நம்முடைய தோழர். ஸ்டாலின் குறித்த அவதூறுகளிலிருந்து உண்மையை அறிய விரும்புபவர்கள் அவசியம் இந்த குருந்தகட்டை வாங்கிப்பார்க்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் ஸ்டாலினை உண்மையாக அறிவீர்கள்.

இதை தயாரித்து வெளியிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இதே போல் நம் நாட்டில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான வர்க்க போராட்டத்திற்கு தீ மூட்டிய மாவீரன் பகத் சிங் பற்றிய ஆவணப்படத்தையும் தயாரிக்க வேண்டும். இந்திய இளைஞர்களுக்கு தீ மூட்டும் திரியாய் இந்திய வரலாறு உள்ளவரை வாழும் தோழர் பகத்சிங்கையும் நாம் நினைவு கூறுவோம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதுவரை பார்க்காதவர்கள் அனைவரும் இந்த ஸ்டாலின் பற்றிய ஆவணப்படத்தை அவசியம் வாங்கிப்பாருங்கள்.

மீண்டும் அனைவருக்கும் எமது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்.

——————————————————————————————————————————
– கட்டுரையாளர்: சர்வதேசியவாதிகள்

***

ஸ்டாலின் சகாப்தம் - டிவிடி

படத்தை பெரியாத பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஸ்டாலின் சகாப்தம் – ஆவணப்படம் DVD

தயாரிப்பு; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விலை ரூ. 70.00

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று.

10, ஔலியா சாகிப் தெரு,
எல்லீசு சாலை,
சென்னை – 600 002

தொலைபேசி – 044 2841 23677

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்