Friday, June 9, 2023
முகப்புமெரினா - விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!
Array

மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

-

மெரினா: விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

vote-012வெறிநாய் போலீசை ஏவிவிட்டு
மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு!

கடற்கரை அழகைப் பதம்பார்க்கும்
போலீசின் கதை நமக்குத் தெரியாதா?

காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை
அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால்
அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு!

கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை
பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால்
அவன் டூட்டியில் இருக்கும் போலீசு!

உழைக்கும் மக்களின் அனுபவத்தில்
சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து
’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு?

கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க…
ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க…
இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வரும் நாயும்
கொஞ்ச தூரம் நடந்தாலே இரைக்க… வழியில் குறுக்கிட்டு
இடையூறாய் இருக்குதாம்
குப்பத்துப் பிள்ளைகள் விளையாடும் கிரிக்கெட்டு!
விளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலை?
வேறு இடத்துக்கு நடையைக் கட்டு

நடைபழக இடமா இல்லை? போய் கோவிலைச் சுற்று.. இல்லை,
கோட்டையைச் சுற்று! வண்டலூர் பூங்காவில் போய் வசதியாய் நட, கிட!
மீனவர் வளர்த்த கடற்கரையிது, ஒண்ட வந்த பிடாரிகளா நமது உரிமைகளைப் பறிப்பது?

ஏழைகளுக்கு எதையும் மிச்சம் வைக்காமல் தின்று தீர்ப்பது..
ஏறிய தொப்பையை இறக்கி வைக்கவும்..
எங்கள் இடத்தையா நடந்து தீர்ப்பது?
கொஞ்சம் பூங்காவா கொழுப்பர்களுக்கு.. நடைபாதை பூங்கா எத்தனையோ!

அசதியாய் உழைக்கும் மக்கள் இளைப்பாற போனாலும்.. அங்கேயும்
குறுக்கே வந்து பூங்காவை சொந்தம் கொண்டாடும் உங்கள் தொந்தியை விட
எங்கள் அயோத்திக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர் குப்பத்துப் பிள்ளைகள்
விளையாடும் பந்து என்ன நகரின் அழகுக்கு ஆபத்தா?

பணக்கார கும்பலுக்கு கடற்கரையை பட்டா போட்டது பத்தாதா?
கோல்டன் பீச் என்ன வி.ஜி.பி. பெத்து எடுத்ததா? அரசு கொட்டிக் கொடுத்ததா!
கிழக்கு கடற்கரை  ரிசார்டுகள்… கேவலமான நடத்தைகளுக்கு
நீங்கள் கடல் கொண்ட ’கொள்ளை அழகு’ போதாதா!
மூச்சடக்கி முத்தெடுத்து சத்தான மீனெடுத்து சகலருக்கும் கொடுத்து
கடல் சீற்றம், சூறாவளி, சுனாமியில் உறவுகளை பலிகொடுத்து
மீண்டும் கடல்காக்கும் மீனவருக்கே கடற்கரையில் முழு உரிமை உண்டு!

விளையாடத்தடை என்பது வெறும் சாக்கு… படிப்படியாய்
உழைக்கும் மக்கள், மீனவரின் பாரம்பரிய உரிமையை அழிப்பதே அரசின் உள்நோக்கு!

’’பாருங்கள்.. பலகோடியில் அழகுபடுத்தி பசும்புற்களை
உங்கள் பார்வைக்காக வைக்கிறோம்..
அதில் பந்து விழுந்தால் வீணாகாதா?’’ எனப் பசப்புகிற அரசுதான்

பன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளையும், கார் கம்பெனிகளையும் இறக்கிவிட்டு
இந்நாட்டு பச்சைவயல்களையெல்லாம் கருக்கிவிட்டு
கடற்கரையின் செயற்கைப் புல்லுக்கு இரக்கப்படுகிறதாம்..
அரசாங்கப் பொய்களின் அழுத்தம் தாங்காமல் காறித்துப்புது கடல்

கட்டுமரங்களை உடைத்து, கண்ட துண்டமாய் வலைகளை அறுத்து
இறால்களை கொள்ளையடித்து, மீனவர் கையும் காலையும் உடைத்து
நட்டநடுக் கடலில் சுட்டுத் தள்ளுது சிங்களக் கடற்படை!
கட்டுமரங்களை நகர்த்தச் சொல்லி, காயும் வலைகளை அகற்றச் சொல்லி
மீனவப் பிள்ளைகள் விளையாட்டை நிறுத்தச் சொல்லி
கரையில் நெட்டித் தள்ளுது அரசின் கொலைப்படை ! அழகின் பயங்கரம் பார்த்தாயா!

உழைக்கும் மக்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
கரையிலும், கடலிலும் அழகேது?
இலக்கியமெங்கும் நெய்தல் நிலத்தின் கருப்பொருளும், உரிப்பொருளும்
பரதவர் வாழ்வின் பரம்பரை அழகை, உரிமையைச் சொல்லும்!

திமிறும் கடலை இரைக்க வைத்து
உப்புக் காற்றை உலர வைத்து
தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து
களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி
கட்டுமரங்கள் முன்னேறும்.
பரதவர் உழைப்புக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நுரை தள்ளும் கடல்புறத்தைக்
காணும் யார்க்கும்
அது வலைகளில் பின்னிய கவிதைகள்!

மீண்டும் மீண்டும் விழிகளை ஆழம்பார்த்து
வெறுங்காலில் மணல் நடந்து
சளைக்காமல் வந்து வந்து கேட்கும்
சுண்டல் விற்கும் பையனின் சுறுசுறுப்பின் அழகைப் பார்த்து
கூசிப் பின்வாங்கும் கடல்.
கணப்பொழுதில் பத்து இருபது பலூன்களை ஊதி
திரையில் பொருத்தும் பெண் உழைப்பாளியின்
பெரும்மூச்சின் வேகம்பார்த்து வியந்து விசிலடிக்கும் கடல்காற்று

அருமைக் குழந்தைகள் குலுங்கிச் சிரிக்க
அலையோடு விளையாடி மக்கள் அங்குமிங்கும் ஓட
யார்மீதும் மோதாமல் அந்த உழைப்பாளிச் சிறுவன்
குதிரையைச் செலுத்தும் அழகின் லாவகம் பார்த்து
கடல்நண்டு உடல் சிலிர்க்கும்

வறுகடலை சட்டியை ஒரு தட்டுதட்டி
கடலைவண்டிக்காரர் எழுப்பும் கடற்கரை ஓசை..
ஈரமணலோரம் கடலின் இரைச்சலைத் தாண்டி
நம் இதயத்தை இசைக்கும் புல்லாங்குழல் வியாபாரியின் இசை..

இன்னும் எத்தனையோ.. உழைப்பின் ஓசைகளால்
மெருகேறிய மெரினாவின் அழகு

மெல்ல மெல்ல உழைப்பாளர் ஓசைகளையும்
உழைக்கும் மீனவர் உரிமைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு
அங்கே உலகமயத்தின் ’கண்ணைப் பறிக்கும் அழகை’
கட்டியெழுப்பப் போகிறதாம் அரசு!

வாசலில் உழைப்பாளர் சிலை
உள்ளுக்குள் உழைக்கும் வர்க்கத்துக்குத் தடை
மெரினா கடற்கரை ’’உருவாக்கிய வர்க்கத்திற்கா!
பணக்கார உதவாக்கரை வர்க்கத்திற்கா?’’

இது விளையாட்டு விசயமல்ல.. விட்டுவிடாதே
விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!

–          துரை. சண்முகம்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

    • அருமையான கவிதை. இது போன்ற கவிதைகளைத்தான் தோழரிடத்திலிருந்து எதிர்பார்கிறோம். குறிப்பாக கவிதை முடியுமிடங்களில் கடற்கரையின் யதார்த்த காட்சிப்படிமங்களை உழைப்பின் பெருமிதத்தோடு பெறுத்தி எழுதியிருப்பது வெகு சிறப்பு. தமிழையும் சுவைத்து அரசியலையும் உணர்ந்து உணர்ச்சிகளும் தூண்டி….வாழ்த்துக்கள் தோழரே

  1. கிரிக்கட்டை பார்ப்பனிய விளையாட்டாய் கருதும் தோழர் அதற்க்கு வக்காலத்து வாங்குவது ஏன்.அதே கடற்கரை மணலில் வீர விளையாட்டாம் கபடி விளையாட அறிவுறுத்தலாமே.

    இப்படிக்கு பந்தால் அடி வாங்கிய பொதுசனம்

    • இன்று கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையும், இளைஞர்களையும் விரட்டுகிறார்கள். நாளை மொத்தமாக கார்பரேட் கம்பெனிகளுக்கோ அல்லது அரசே சுவரெழுப்பி கட்டணம் வசூலிக்கலாம். கிரிக்கெட்டா கபடியா என்பது பிரச்சனை அல்ல. அதற்கு இடம் கொடுக்காமல், மெரினாவை நம்மிடம் இருந்து பறிப்பதை தடுக்க வேண்டும் என்பதல்லவா கவிதை கோரிக்கை.

      சென்னையில் நல்ல காற்று வாங்க, குறைந்த செலவில் சுற்றி பார்க்க, குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதற்கு மெரினாவை தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் தினந்தோறும் ஆயிரகணக்கில் அங்கு மக்கள் அலைமோதுகிறார்கள். விடுமுறை நாட்களில் லட்சத்தையும் தொடுகிறது.

      மெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை.

    • மெரினாவில் கிரிக்கெட் விளையாட தடை போட்டிருப்பது தெரியாதா?

      மெரினாவில் கிரிக்கெட் விளையாட தடை போட்டிருப்பது தெரியாதா? தடை போட என்ன காரணம்?

      கொழுப்பர்கள் நடை போடலாம். மீனவ பிள்ளைகள் விளையாட கூடாதா?

  2. மெரினாவில் மொத்தமாய் விளையாட்டுக்கே தடை இல்லை. கிரிக்கட் விளையாடத்தான் தடை. பிள்ளைகள் கால்பந்து, கைபந்து, கபடி இப்படி எதையாவது விளையாடலாமே. எதற்காக, நடுத்தர வர்க்க பொதுமக்களுக்காக – ‘அவர்களின் மீது எந்த கிரிக்கெட் பந்து அடியும் விழக்கூடாது’ என்ற ஒரு நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே தெரிகிறது. மற்ற பந்துகளில் அடிபடுவதை விட கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா? காமாலை கண்ணுக்கு….

    • இப்போது கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வது போல் அடுத்த விளையாட்டுகளும் தடை செய்யப்படுவதற்குள் போராடி நமது உரிமையை நிலைநாட்டுவது தானே சாலச் சிறந்தது.

      >> கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா?
      மெரினா போனது கிடையாதா? அங்கே டென்னிஸ் பந்தில் தான் கிரிக்கெட் விளையாடுகின்றனர். மணலில் டென்னிஸ் பந்து தான் ஓரளவுக்கு எழும்பும்.

      • போட்டோவை பார்த்தீர்களா? மணலிலா விளையாடுகிறார்கள்? கிரிக்கட்டை மட்டும் தடை செய்த அரசுக்கு எதிராய் எழுதுகிறேன் பேர்வழி என்று எல்லா விளையாட்டுக்கும் தடை என்பது போன்று ஒரு போலி பிம்பத்தை ஏற்படுத்தவில்லையா இந்த பதிவு?

        நீங்கள்தான் குப்புறவும் விழ மாட்டீர்கள், விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாது. சரி, சரி, டென்னிஸ் பந்தில், 80 km/hr வேகத்தில், அடி பட்டால் ‘மயிலிறகால் தடவினமாதிரி’ இருக்கும் என்றால் அதையும் நம்புவோம். வேறவழி? நாம் வினவு தளத்தில் அல்லவா இருக்கிறோம்?

        இப்படிக்கு கிரிக்கெட் பந்தால் அடி வாங்கிய இன்னொரு பொதுசனம்

        • இத்தனை நாள் மெரினாவில் கிரிக்கெட் தடை செய்யாமல், இப்பொழுது தடை செய்வதன் நோக்கம் என்ன?

          மெரினாவை 18 கோடி செலவில் புல்தரை, அலங்கார விளக்குகள், வாக்கிங் நடைபாதை என்று அழகுபடுத்துகிறார்களாம். மேலும் வாக்கிங் செய்வோருக்கு விளையாடுவது தடையாக உள்ளதாம். இது மேயரின் ஒப்புதல் வாக்குமூலம்.

          அதிகம் சிறார்கள் கிரிக்கெட் விளையாடியதால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் வேறு விளையாட்டு விளயாடியிருந்தால் என்ன செய்திருப்பார்கள். அந்த விளையாட்டும் தடை செய்யப்பட்டிருக்கும்.

          கடற்கரையே மீனவர்களுக்கு சொந்தமானது. முன்பு குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இப்பொழுது அழகு என்ற பெயரில் மீனவப் பிள்ளைகளின் விளையாட்டு உரிமை பறிக்கப்படுகிறது.

    • //மெரினாவில் மொத்தமாய் விளையாட்டுக்கே தடை இல்லை. கிரிக்கட் விளையாடத்தான் தடை. பிள்ளைகள் கால்பந்து, கைபந்து, கபடி இப்படி எதையாவது விளையாடலாமே. எதற்காக, நடுத்தர வர்க்க பொதுமக்களுக்காக – ‘அவர்களின் மீது எந்த கிரிக்கெட் பந்து அடியும் விழக்கூடாது’ என்ற ஒரு நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாகவே தெரிகிறது. மற்ற பந்துகளில் அடிபடுவதை விட கிரிக்கெட் பந்தில் அடிபடுவது பயங்கரமானது. கிரிக்கெட் பந்தில் ஒருமுறையேனும் அடி வாங்கியது உண்டா? காமாலை கண்ணுக்கு….//

      நேற்று தொலைக்காட்சியில் கபடி விளையாடியவர்கள், கைப்பந்து விளையாடியவர்களிடமிருந்து வலையை பிடுங்கி போலீசு வீசியெறிந்ததை காட்டினார்கள்.

  3. கடலோர மேலாண்மை திட்டம் என்ற பெயரில் கடற்கரையோரங்களை பன்னாட்டு மீன் பிடி கம்பெனிகளுக்கு கூறு போட்டு விற்பதுதான் அரசின் திட்டம். இதற்கான திட்ட முன்வரைவு ஏற்கெனவே அரசின் வசம் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் விளையாட தடை என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. மெரீனா முதல் திருவான்மியூர் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அது வந்தால் இடைப்பட்டப் பகுதியில் இருக்கும் மீனவ குப்பங்களும், சிறு வியாபாரிகளும், வீடுகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும். இதற்கான வெள்ளோட்டமாகத்தான் கிரிக்கெட் விளையாடத் தடை போட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

    • திரு. ஆழியூரான்,
      ////அதன் ஒரு பகுதியாகத்தான் கிரிக்கெட் விளையாட தடை என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.////

      தாங்கள் என் அப்படி பார்க்கிறீர்கள்? மெரினாவில் கிரிக்கட் தவிர மற்ற விளையாட்டுக்கள் விளையாடப்பட்டதே – படுவதே இல்லையா? ‘ஏன் அவற்றை தடை செய்யாமல் கிரிக்கட்டுக்கு மட்டும் தடை’ என்று சிந்தித்தால் என்ன?

      கிரிக்கெட்டுக்கும் மற்ற பல விளையாட்டுக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் உள்ளது. மற்ற விளையாட்டுகளில் பந்தை மைதானத்துக்குள் தக்கவைத்து விளையாடுவதே இலக்கு. ஆனால், கிரிக்கெட்டில் அதை மைதானத்தை தாண்டி விரட்ட வேண்டும் என்பதே இலக்கு. அப்படி, அசுரத்தனமான வேகத்தில் அடிக்கப்பட்ட- பறந்து வரும் பந்துக்கு பெரியவர்,சிறியவர், கர்ப்பிணிகள்,ஊனமுற்றோர், முதியோர்,கைக்குழந்தை, சுண்டல்வண்டி,டீ-காபி வண்டி, மின்விளக்கு,இருசக்கர வாகனம், கார்,பஸ் என்று எந்த ‘கண்ணு மண்ணும்’ தெரியாது, என்பதனால்தான்.

      கில்லி(கிட்டிப்புள்), குண்டெறிதல், ஈட்டிஎறிதல், வட்டெறிதல்….இவற்றையும் இவை போன்றவற்றையும் யாராவது விளையாடினால் அவையும் தடை பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்.

  4. // இன்று கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையும், இளைஞர்களையும் விரட்டுகிறார்கள். நாளை மொத்தமாக கார்பரேட் கம்பெனிகளுக்கோ அல்லது அரசே சுவரெழுப்பி கட்டணம் வசூலிக்கலாம். கிரிக்கெட்டா கபடியா என்பது பிரச்சனை அல்ல. அதற்கு இடம் கொடுக்காமல், மெரினாவை நம்மிடம் இருந்து பறிப்பதை தடுக்க வேண்டும் என்பதல்லவா கவிதை கோரிக்கை.

    சென்னையில் நல்ல காற்று வாங்க, குறைந்த செலவில் சுற்றி பார்க்க, குழந்தைகள் ஜாலியாக விளையாடுவதற்கு மெரினாவை தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால்தான் தினந்தோறும் ஆயிரகணக்கில் அங்கு மக்கள் அலைமோதுகிறார்கள். விடுமுறை நாட்களில் லட்சத்தையும் தொடுகிறது.

    மெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை.//

    இதைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது. கம்யுனிசவாதிகள் தங்களை இவ்வளவு தரக்குறைவாக கீழ்த்தரமாக சிந்திச்சு போகதா ஊருக்கு வழி தேடக்கூடாது.

    நீங்கள் சொல்வது போல் மெரீனாவை கார்பரேட் கம்பெனிகளிடம் அரசு கொடுத்தால் அதை நம்மால் கேள்வி கேட்கமுடியும் போரடி மீட்கமுடியும் இது ஜனநாயக நாடு பொது மக்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தடுக்க முடியும் இது ஒன்றும் சீனா கிடையாது பெய்ஜிங்கில் நடந்ததைப் போன்று இங்கு ஒன்று நடக்காது.

    மீண்டும் சொல்கிறேன் இது ஜனநாயக நாடு சீனாவைப் போன்று சர்வதிகார நாடல்ல …

    நீங்கள் சொல்வதைப் போன்று அப்படி ஒன்றும் கனவிலும் நடைபெறாது. நீங்கள் கவலைப் படவேண்டாம்.

    கம்யுனிஸவாதிகளின் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் உண்டு ஆனால் இதை போன்று கீழ்த்தரமாக சிந்திப்பதை விட்டு விட்டு பயனுள்ள வகையில் சிந்தித்தால் நன்றாக இருக்கும் .

    // மெரினா பொது மக்களுடையது. அங்கு விளையாடுவது என்பது மக்களின் உரிமை. //

    மெரீனா எல்லாருக்கும் பொதுவானது அதில் குப்பத்து பசங்க குறைந்த சதவிகிதமே விளையாடுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா.

    நீங்கள் நடந்து செல்லும் போது சரி விடுங்கள் குப்பது ஆட்கள் கடலில் மீன்பிடித்துவிட்டு மெரினாவில் ஓய்வெடுக்க வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அவர்களின் மண்டையில் கிரிக்கெட் பந்து பட்டு மண்டை உடைகிறது என்று வைத்து கொள்வோம் அப்பொழு என்ன செய்வது?

    எல்லோருடைய மண்டையை உடைக்கலாம் என்கிறீர்களா?

    உங்களுடைய குப்பத்து ஆட்கள் ஓய்வெடுக்க வேண்டாமா அவர்களின் சிறு மழலைகள் விளையாட வேண்டாமா ?

    நன்றி,

    • இதே மெரீனாக் கடற்கரை 1985க்கு முன்னாடி முழுக்க மீனவர்களுக்கு சொந்தமாக இருந்தது. அது பல நூற்றாண்டுகளாக மீனவர்கள் வலை காயப்போடும் இடமாகவும் சிறு வள்ளங்களை நிறுத்தி வைக்கும் இடமாகவும் இருந்தது. இக்கடற்கரையிலிருந்து அழகு கெடுகிறது எனச் சொல்லி மீனவர்களை அப்புறப்படுத்தச் சொன்னவர் ‘மீனவ நண்பன்’ எம் ஜி ஆர். முடியாது..இது எம் சொந்த பூமி எனப் போராடினார்கள் மீனவர்கள். தேவாரம் எனும் ஏவல் நாயை ஏவிவிட்டு 19 மீனவர்களின் உயிரைத் துப்பாக்கிச்சனியனால் பறித்தெடுத்துத்தான் மெரீனாவை அழகுபடுத்தினார் ‘மீனவ நண்பன்’. இப்போது மெரீனாவை வணிகமயமாக்கும் திட்டத்துடன் 55 கோடிரூபாயை உலகவங்கி அரசுக்குக் கொடுத்து அழகுபடுத்தச்சொல்கிறது. இனி அடுத்த திட்டம், அங்கிருக்கும் சிறுவியாபாரத்துக்குத் தடைபோட்டு, நுழைவுக்கட்டணம் வசூலித்து தீம்பார்க்குகள் போன்று அமைத்து அனைத்தையும் காசாக மாற்றப்போகிறது அரசு. உலகவங்கியின் கைக்கூலி அரசுக்கு இடைஞ்சலாக கிரிக்கெட் ஆடுபவர்கள் தெரிகின்றனர்.. இந்த இடைஞ்சலைப் போராக மாற்றாவிட்டால், இருக்கும் உரிமையும் பறிபோய்விடும்..அன்று மீனவநண்பன் 19பேர்களின் உயிரைக் குடித்துவிட்டு அதே மரீனாவில் கல்லறையில் படுத்துக்கொண்டான். 19 பேர்களின் துயர்துடைப்பதாகக் கூறிக்கொண்டு அதே ஏகாதிபத்திய என்.ஜி.ஓ. ரோட்டரி கிளப், குப்பத்து சனங்களில் பாதிப்பேரை விலைக்கு வாங்கி கடற்கரைசாலைக்கு அந்தப் பக்கத்துக்கு துரத்தி ‘ரோட்டரி நகர்’களை உருவாக்கியது…இது ஏதோ..கிரிக்கெட் பந்தால் அடிபட்டுவிடுவார்களே எனும் அக்கறை அல்ல…நீண்டகால சதித்திட்டத்தின் ஒரு பகுதி..நாகராசு

    • //நீங்கள் சொல்வது போல் மெரீனாவை கார்பரேட் கம்பெனிகளிடம் அரசு கொடுத்தால் அதை நம்மால் கேள்வி கேட்கமுடியும் போரடி மீட்கமுடியும் இது ஜனநாயக நாடு பொது மக்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் தடுக்க முடியும் இது ஒன்றும் சீனா கிடையாது பெய்ஜிங்கில் நடந்ததைப் போன்று இங்கு ஒன்று நடக்காது.//

      வாங்க சார்… வாங்க.. உங்களத்தான் நெம்ப நாளா நாங்க எதிர்பார்த்திட்டிருந்தோம்..
      இதே ஜனநாயக நாட்டில் தான் மேதாபட்கர் என்கிற அம்மாள் பல ஆண்டுகளாக நர்மதை நதியைக் காக்க போராடி சடைஞ்சு போயி அலையிராங்க.. உங்களத்தான் அவங்க தேடிகிட்டு இருக்காங்க.. போயி இதே வார்த்தைய அப்படியே அவங்களுக்கும் சொல்லுங்க..

      சரி விடுங்க.. இப்ப கரண்ட் மேட்டருக்கு வாங்க

      ஒரிஸ்ஸாவில் கோண்டு இன மக்கள் தெய்வமாய் கும்பிட்டு வணங்கி வரும் மலைகளையெல்லாம் வெளிநாட்டுக்கம்பெனிக்கு வித்துப்புட்டாங்க..

      அந்த மலைகளில் இருக்கும் பாக்ஸைட்டின் மதிப்பு மட்டுமே 4 ட்ரில்லியன் டாலர்களாம்; நம்ம மொத்த உள்நாட்டு மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாம்!! .. மேலும் 28 வகையான அரியவகை தாதுக்கள் அங்கே கிடைக்குதாம் அந்த மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான மலைகளை வித்துட்டாய்ங்க இந்த மலைவிழுங்கி மகாதேவ ஆட்சியாளர்கள்..

      இந்த கொள்ளையை எதிர்க்கும் ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி கொன்றுகுவிக்கிறது அரசு… நீங்க தான் கொஞ்சம் வந்து கோண்டு இன மக்களின் தெய்வத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் இருந்து மீட்டுக் கொடுங்களேன் – உங்க ஜனநாயக முறையில் போராடி!

      யோவ்… நீயெல்லாம் பேப்பரே படிக்க மாட்டியாய்யா? நாட்ல விவசாய நிலம், ஆறு, குளம், மலைன்னு இருக்கறதெல்லாத்தையும் சல்லிசா வந்த விலைக்கு வித்துகிட்டிருக்கு கவுர்மெண்டு… பாரதமாதாவுக்கு மாமா வேலை பாக்கறதுக்குன்னே ஒரு அரசாங்கம்! எதிர்த்துக் கேட்கறவனை வாயிலையே போட்டு கொல்றான்.. இவரு பெரிய நன்னூல் மாதிரி வந்துட்டாரு அறிவு சொல்ல..

      • ஜனநாயக முறையில் மனித உரிமைகள் மீறப்படுவதை அம்பலப்படுத்திய பினாயக் சென்னை(இவர் ஒரு டாக்டர் பிறகு மனித உரிமையாளராக செயல்பட்டார்) விசாரணையின்றி ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையில் வதத்தைதது அரசும், நீதிமன்றமும், போலீசும்.

  5. மெரினா நீண்ட நாட்களாகவே பன்னாட்டு நிதிமூலதனத்தின் வேட்டை இலக்காக இருந்து வந்துள்ளது. மலேசியாவுடன் மெரினாவை விபச்சார-கேளிக்கை விடுதியாக்கும் ஒப்பந்தம் சில வருடம் முன்பு கைசாத்திடப்பட்டது.

    சென்னை வளர்ச்சித் திட்டம் என்று தரகு முதலாளிகள் சங்கம் போட்டுக் கொடுத்துள்ள திட்டத்தின்படி சென்னையில் யார் யார் வசிக்கலாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதிதான் ஒரு பக்கம் ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் நூறு வருடங்களாக கடை வைத்திருப்பவர்களையும், சேரி-குடிசை வாழ் மக்களையும், எளிய ஜனங்களையும் அவர்களின் வீடுகளையும் துடைத்து எறிந்து வருவதும், மெரினாவில் விளையாடக் கூடாது என்ற தடையும்(கிரிக்கெட்டு மட்டுமல்ல, எல்லா விளையாட்டையுமே போலீசு தடுத்து வருகிறது)

  6. இங்கே கவிதையின் கருத்தை எதிர்த்து பின்னூட்டம் இடும் பலருக்கு ஒரு டீக்கடையில் வேலை செய்யும் சிறுவனை விடவும் சமூக அறிவு குறைவாக உள்ளது. என்னவென்று இவர்களுடன் விவாதிப்பது.

  7. கிரிக்கெட் விளையாடுற பசங்கள திபு திபுன்னு துப்பாக்கியோட ஆயுதப்படை போலிசு விரட்டுது. அதுக்கு சப்ப கட்டு கட்டுறீங்களே வெக்கமா இல்ல..

    • அமெரிக்க அணுஆயுதக் கப்பல் சென்னை துறைமூகத்தில் நங்கூரம் இட்டது – 2 ஆண்டுகளுக்கு முன். அமெரிக்க வீரர்கள் சர்வசாதாரணமாகக் கேள்விமுறை ஏதும் இன்றி சென்னையில் சந்து பொந்துகளில் சுற்றிவந்தார்கள். அவர்களின் பாதுகாப்பை கியூ பிராஞ்சும், மப்டியில் வலம் வந்த எல் அண்ட் ஓ (அதாங்க..சட்டம் ஒழுங்கு) கவனித்துக் கொண்டது..அரசு அதிகாரிகள், அமெரிக்க வீரர்களின் காமவெறி தணிக்க கோடம்பாக்கத்தின் துணைநடிகைகளையும் மூன்னாள் கதாநாயகிகளையும் (அமெரிக்கப் படையின் ரேங்குக்கு ஏற்றாற்போல) கூட்டிக்கொடுத்து லீ மெரிடியனிலும் தாஜ், சவேராவிலும் ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் கிருஷ்ணாலீலைகளுக்கு பாதுகாப்புக் கொடுத்தது நம்ம காக்கிப்படைதான்.. அதே மாமாப்படைதான் நம்மக்கள் கிரிக்கெட் ஆடினால் மண்டையைப் பிளக்க ஓடிவருகிறது..பிக் பாக்கெட் அடிக்கிறது..இந்தக் கொடுமையில் இவர்களை ‘காவலர் நம் நண்பர்’ என்று அழைக்கணுமாம்..தூ..மானக்கேடு..இன்னமும் சகித்துக் கொண்டிருக்கிறோமே..அதற்கும் ஒரு தூ..

  8. Yo! ithukku per than Articale…Arumai arumai…Aana onnu…anka cricket vilayadarathu NORTH INDIANS (Settu pasanga)…Namma payaluga yar irukka…avanukalathan police virattanum….
    Super Articale..But did not Accept PERANMAI articale…..

  9. தோழர் துரை சண்முகத்திற்கு, சக்கரை நோய் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் வந்து விடுகிறது. எனவே இந்த இரண்டு வார்த்தைகளை தவிர்த்திருக்காலம் என்பது எனது கருத்து. மற்றபடி அனைத்தும் உண்மையே. நமக்கு கிரிகெட் உடன்பாடு இல்லையென்றாலும் இந்த போராட்டம் என்பது நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது என்பதால் இதனை கண்டிப்பாக ஆதரித்தே ஆக வேண்டும்.

    உண்மையில் இந்த அழகுபடுத்தும் திட்டம் பட்டினப்பாக்கம் வரை உள்ளது. மலேசிய நிறுவனமொன்று இப்பகுதியை கேளிக்கை பூங்காவாக மாற்ற வரைவு திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதனால்தான் பட்டினபாக்கம் அரசு குடியிருப்புகள் செப்பனிடாமல் இடிப்பதற்கு உத்தேசித்துள்ளனர் அதன் நிலையை காட்டி. அப்போது கண்டிபாக அங்குள்ள மீனவர்களும் அப்புறபடுத்தபடுவார்கள். அதன் முன்னோட்டமே இது

  10. ஆயிரகணக்கான மக்கள் வந்து போகிறார்கள். அவர்கள் மீது பட்டு மண்டை உடையும் என்கிறார்கள். சரி. உங்க மனித நேயம் புரியுது!

    அரசு உங்க மனித நேய மூகமூடியோடு உள்ள நஞ்சு வச்சில்ல சட்டம் போடுது! அதைப் பத்தி தான் பதிவும், ஆதரவு பின்னூட்டங்களும். அதைப் பத்தி எதிர் பின்னூட்டங்கள் இடுகிற உங்க கருத்து என்ன?

  11. கிரிகெட் விளையாடுவதால் மண்டை உடையும் உடையாது என்பது இங்கு விவாத பொருள் அல்ல. மெரினா அழகை ரசிப்பதாக இருந்தால் இன்றே இப்பொழுதே சென்று ரசியுங்கள். பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இன்றியமையாதது அப்படித்தானே ஒருகாலத்தில் இருந்தது. நிறைய பள்ளிக்கூடங்கள் மைதானம் என்றால் என்னவென்று தெரியாமல் கிடக்கின்றன. உழைப்பு மட்டும்தான் சுரண்டபடுவதாக எண்ணுகிறோம். சின்ன சின்ன இளைப்பாறும் இடங்களும் அதில் தப்பவில்லை என்பதை எப்பொழுதுதான் உணரபோகிறோமோ தெரியவில்லை. பிரச்சினை என்னவென்று தெரிகிறது, பிரச்சினை வடிவம் தெரிகிறது. வருங்கால தலைமுறைகள் விடியலுக்காக என்ன செய்யபோறோம்? என்ற கேள்வியோடு விவாதங்களை செய்யலாமே. மெரினா கடற்கரை மட்டுமல்ல தமிழக கடற்கரைகளை கைப்பற்றி கொள்வதற்கு பணக்களுகுகள் வட்டமடித்துக்கொண்டு இருக்கின்றன. பண முதலைகள் சுற்றவர மதில்களை கட்டி பெண்களை வைத்து சொகுசு பார்களை அமைத்த பின் எட்டி பார்க்கிற பொருளாகத்தான் கடற்கரை இருக்கும். அப்பொழுது கவலைபட்டு மலரும் நினைவுகளாக மனதில் வைத்துகொண்டிருக்கப் போகிறோமா?

  12. கவிதையில் சில இடங்கள் உடன்பாடு இல்லாத ஒன்றாகப் படுகிறது.

    சர்க்கரை நோய் அதிகமாக ஏழைகளையும் நடுத்தரவர்க்கத்தையும்தானே தாக்குகிறது. பின் எதற்காக அதற்கு நடைப்பயிற்சி செய்பவர்களைச் சாடுகின்றீர்கள்…

    மெரினாவில் கிரிக்கெட் விளையாடுபவர்களில் பலரும் பணக்கார வீட்டு பையன்கள் எனத் தெரிய வந்தால் என்ன செய்வது…

    நன்றியுடன்
    நல்லசிவம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க