Saturday, June 10, 2023
முகப்புகுறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!
Array

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

-

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

vote-012மலைகளின் அரசி அழைக்கின்றாள்…
மேட்டுப்பாளையத்திலிருந்து மேலேறும் உங்களை
மலைவாழை மடல்கொண்டு விசிறி
காட்டுப்பூக்களின் நறுமணமும், பனிசுகமும்
நாடி நரம்புகள் எங்கும் தழுவி
மலைகளின் அரசி அழைக்கிறாள் உங்களை!

பள்ளத்தாக்கில் புகையும் கதைகள்…
யாரும் கேட்காமலே அதோ பாதாளத்தில்
எத்தனை இசைகள்…
பார்க்க பார்க்க புத்துணர்ச்சியூட்டும்
பச்சிலை கவிதைகள்..
பூவென நினைத்து கை வைத்தால்
பறக்கும் புதுவிதத் தும்பி
வண்ணப் பூச்சி என மெதுவாய் போய்
பிடித்தால் சிரிக்கும் பூ!

உயிரினச் சூழலின் ஒட்டுமொத்த அழகிலும்
மனதை இழப்போரே!
ஊட்டியை ஊட்டி வளர்த்தும்- நீங்கள்
துய்க்கும் அழகை தூக்கி நிறுத்திய
தொழிலாளர்களை அறிவீரா?

மலையும் மலைசார்ந்த இடமும்
குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர்
கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் மலைக்கு ஏற
சாலை அமைக்கையில் சறுக்கி விழுந்து
நொறுங்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
காட்டு விலங்குகள் குதறி மலைப்பாம்புகள் கடித்து
அவர் வாயில் தள்ளிய நுரைகளின் விஷமேறி
நீலம் பாரித்தது வானம்.

வளைந்து செல்லும் பாதையின் வனப்பிற்காக
தம் இரத்தம் பிசைந்து கொடுத்த தொழிலாளர்
எலும்புகள் முறியும் சத்தம் கேட்டு
எங்கோ மலைமுகட்டுக்கு ஓடி
பீதியில் உறைந்தது மேகம்.

விழுந்து துடித்து வனாந்திரத்தில் அனாதையாய்
கதறியவர் குரல்கள் பாறையில் மோதி
கல்லாய் சமைந்தன கானகமெங்கும்.

சுரண்டலின் ருசி கண்ட வெள்ளைப் பன்றிகள்
மலைகளைக் குடைந்தன…
காடுகள் அழித்து பாறைகள் சிதைத்து
கடும் உழைப்பினால்
தொழிலாளர் நுரையீரலைக் கிழித்து,
காற்றும் ஒதுங்க அஞ்சும் மலைச்சரிவில்
தேயிலைப் பயிரிட அவர் கால்களை விரட்டின…
கூடையைத் தலையில் மாட்டி, தாய்பால் மாரில் கட்டி
தேயிலைப் பறிக்குமாறு கைகளை ஒடித்தன..

கோத்தகிரி, குன்னூர், கொடநாடு
தேயிலைத் தோட்டத்தை ரசிப்பவர்கள்…
உழைப்பின் சூழலை உணர்ந்ததுண்டா?

மலைப்பனியில் உறையும் நிலா
குளிருக்கு இறுக்கிய சிறகுகளை
எடுக்க முடியாத பறவைகள்…
ஓசை ஏதுமற்று வாய் கட்டிப்போன காற்று..
இந்தக் கொடும்பனியின் கொட்டமடக்கி
தேயிலைக் கொழுந்துகளை சூடேற்றும்
தொழிலாளர் கரம்பட்டே
உயிரினச்சூழல் உயிர்பெற்று விழித்தெழும்…
உழைப்பாளர் விடும் மூச்சின் வெம்மை பட்டே
சில்லிட்டுப் போன சூரியன் தைரியமாய் வெளியில் வரும்.

இதழருகே நீங்கள் எடுத்துச் செல்லும்
தேநீர் குவளையில் எழும்பும் ஆவி
எத்தனை தொழிலாளர்களுடையது தெரியுமா!

விரிந்த உலகத்தின் இயற்கையெல்லாம்
வியக்கும் அற்புதம் தொழிலாளி—- அவர் மேல்
தான் சரிந்து விழுந்ததாய்ச் சொல்லும்
கொலைப்பழி கேட்டு
மலைகளின் அரசி கதறுகிறாள்…

’’மலைவெளியோ.. சமவெளியோ
சாவது பெரிதும் தொழிலாளி
காரணம் யார்? முதலாளி!
மலைச்சரிவில் மட்டுமா? தேயிலை விலைச்சரிவிலும்
வீழ்ந்தாரே தொழிலாளி! காரணம் அந்த முதலாளி!
வரைமுறையற்ற நிலச் சுரண்டல் காடுகள் கொள்ளை
இயற்கையின் மடியில் வெடிவைக்கும் குவாரி, ரியல் எஸ்டேட்
நீலமலைத் திருடர்களின் சுரண்டலுக்கெதிராய் போராடாமல்
மண்ணை இழந்ததால் தன்னை இழந்தீர்!
எதை, எதையோ பார்த்தீர்கள் மலையேறி
எல்லோர்க்கும் எதிரி முதலாளித்துவம்
எனும் உண்மையைப் பார்க்க மறந்தீரே!

இனியேனும்.. எதிரியை ஒழிக்கப் பாருங்கள்
என் அழகின் சிரிப்பைத் தாருங்கள்!’’
அதோ.. மலைகளின் அரசி கதறுகிறாள்.

—– துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்! மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக்

    • முகில் பின்னூட்ட டப்பாவில் தமிழை ஆங்கில உச்சரிப்பில் எழுத என்ற பெட்டியை டிக் செய்து இதை தமிழில் அடிக்க பாருங்களேன்

  2. மண்ணே பெத்த பிள்ளைகள சரிஞ்சு கொன்னதுக்காவ அழுவுததை சண்முகம் அண்ணாச்சி தத்ரூபமா வடிச்சிருக்காக.அவுகள தொடர்ந்து எழுதச் சொல்லுங்க. அப்படியே “தீக்கொழுந்தையும்” போட்டு விடலாம்லா?

    • சரிதாம்லா, அண்ணாச்சி சொல்லுறத வினவுகாரவுக கேட்டா நல்லாறுக்கும்லா

  3. கவிதை என்றால் இலகுவில் புரிய கூடாது என்பதான கருத்துக்கள் பிரச்சாரம் செய்யப்படும் இன்றைய சூழலில் நெஞ்சை வதைக்கும் ஒரு கவிதை எளிய தமிழில் .தோழர் துரை.சண்முகத்திற்கு என் வாழ்த்துக்கள் .

  4. காட்சிகளை அழகாக படம் பிடிப்பதைப்போல, தோழர் அழகாக வரி பிடித்திருக்கிறார். உண்மைதான், எல்லா உழைப்பிற்கும் பின்னே எத்தனை பேர் உழைப்பை மறைத்துவிடுகிறார்கள். மறந்து விடுகிறார்கள். அதை உணராத வரை எதிரியும் புலப்பட போவதில்லை.

  5. //// இதழருகே நீங்கள் எடுத்துச் செல்லும்
    தேநீர் குவளையில் எழும்பும் ஆவி
    எத்தனை தொழிலாளர்களுடையது தெரியுமா!
    ////

    அற்புதமான கவிதை.

  6. ஓ… மனதைப் பிசைகிற வார்த்தைகள்.. கவிமனம் என்பது அழகியலைத் தான் தேடும் என்று கூப்பாடு போடும் சில இலக்கியவாதிகளுக்கும் அவர்கள் பேளுவதையே இலக்கியம் என்று நம்பும் கூட்டத்திற்கும் இந்தக் கவிதை ஒரு சவுக்கடி. இயற்கையின் அழகை மட்டும் ரசிக்கும் மக்களை அங்கே
    தொழிலாளியின் உழைப்பையும் இவர்கள் அங்கே இயற்கை எழிலை ரசிக்க காரணமாய் மாண்டுபோன தொழிலாளர்களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது கவிதை.

    இதயம் என்று ஒன்று உள்ளவர்களையும் அதில் ஈரம் கொஞ்சமாவது இருப்பவர்களையும் இக்கவிதை கண்ணீர் சொரிய வைக்கும்.. மட்டுமல்லாமல்
    போராடக் கூப்பிடும் அதன் அழைப்பும் கேட்காமல் இருக்காது.

  7. உதகை இனி கோடை வாச ஸ்தலமல்ல! ரத்த வாடை மிகுந்த நாச ஸ்தலம் என வழங்கப்படட்டும்!

  8. தமிழர் அழிவில் ருசி கண்ட இந்தி ஆரியம்
    தமிழரைக் குடைந்தன…
    தமிழை படித்து தமிழ்மறை சிதைத்து
    கடும் காழ்ப்பினால்
    தமிழர் நுரையீரலைக் கிழித்து,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க