Thursday, December 8, 2022
முகப்புஇங்கே கடல், நிலம், மலை....மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!
Array

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!

-

கடல் மலை விற்பனைக்கு
vote-012விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த வியாபாரிகள், கூலிக் காசுக்காக மக்களை நிலங்களில் இருந்து பிரித்து வீசுகிறார்கள். இன்றைய இந்தியாவின் மக்கள் விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, நோய்க்கு தரமான மருத்துவமின்மை, ஆரம்பக்கல்வி மறுக்கப்படுதல், வேலையிழத்தல் என ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் இன்றைய தினத்தில் காலம் காலமாக வாழ்ந்த நிலங்களை அவர்கள் பறி கொடுத்து விட்டு எங்கோ அரசு கொடுக்கும் தரிசு நிலங்களில் குடிசை போட்டு வாழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மழைக்காலம் தொடரும் என்ற எண்ணத்தில் சென்னை நகரம் முழுக்க ஆயிரக்கணக்கான குடிசைப் பகுதி மக்களை கூவக்கரையோரங்களில் இருந்து இரவோடு இரவாக அப்புறப்படுத்தி செம்மஞ்சேரிக்கு அனுப்பியிருக்கிறது அரசு. அந்த இரவில் சாலையோரத்தில் அமர்ந்திர்ந்த ஒரு குடிசை வாசியிடம் பேசிய போது அவர் சொன்னார் “ சார் நாங்க மொதல்ல கே.கே. நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பக்கம் குடியிருந்தோம். அங்கே எங்க குடிசை எல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிங்க எங்களை அங்கே மீண்டும் குடியேற அனுமதிக்கவில்லை. நாங்க அங்கிருந்து இங்கே வந்து குடியேறினோம். (பச்சையப்பன் கல்லூரிக்கு பின்பக்கம் உள்ள கூவக் கரையோரம்) “ என்று சொன்னார். கே.கே. நகரில் இருந்து இந்த ஏழைகள் இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகாலம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் குடியிருந்த கே.கே.நகர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி தனியார் குடியிருப்புகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

சென்னை ஆயிரம்விளக்கில் இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை; கோடீஸ்வர நோயாளிகள் சிகிட்சை பெற்றுக் கொள்ளும் உயர் தர மருத்துவமனை. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ சமீபகாலத்தில் சந்திக்கும் பெரிய பிரச்சனை டிராபிக் நெருக்கடி அகலமில்லாத சாலை, முண்டியடிக்கும் வாகனங்கள் என அப்பல்லோ திணறிப் போக அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது அப்பல்லோவின் அழகை தொல்லைப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கும் கூவமும் அதை அண்டி வாழும் ஏழைகளும்தான். ஒரே நாளில் மாநகராட்சி அதிகாரிகள் வந்தார்கள் அவர்களை அப்புறப்ப்டுத்தினார்கள். இப்போது அந்தக் கூவத்தின் மேல் பகுதியை மட்டும் நீளமாக மூடி அதை பார்க்கிங் பகுதியாக விஸ்தரித்திருக்கிறார்கள். என்பதோடு இடது பக்க குடிசைப்பகுதியை ஒரு குட்டி பூங்காவாக மாற்றி அதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். இப்போது அந்த இடம் ஏழைகள் நுழைய முடியாத எழில் மிகு சென்னையாக இருக்கிறது.

அரசு புறம்போக்கு நிலங்கள் என்பது ஒரு காலத்தில் ஏழை மக்களின் நிலங்களாக இருந்தன. அவர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப ஒரு குடிசையைப் போட்டு அங்கு வாழ்வார்கள். ஆனால் இப்போது அரசு புறம்போக்கு நிலம் என்பது தனியார் முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள். அரசியல்வாதிகள், ரௌடிகள், ஆகியோரின் சொத்துக்களாக மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் சென்னையை பங்கு போட்டு கபளீகரம் செய்து விட்ட இந்த திருடர்கள் இப்போது சென்னைக்கு வெளியே உள்ள நிலங்களை குறிவைக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூர் சென்ற போது வயல் வெளிகளை எல்லாம் பிளாட் போட்டு விற்க அறிவிப்பு செய்திருக்கிறார்கள். எல்லாமே முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள்.

இன்னொரு ஐந்து ஆண்டுகள் கழித்து உத்திரமேரூர் செல்லும் போது அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும். ஆனால் தொழிற்சாலை வருவதால் அப்பகுதி மக்களுக்கு பயன் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் தனியார்துறை தொழில் வளர்ச்சி  என்பது உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி மட்டுமே வளரும் வல்லமை கொண்டது. முதலில் அவனுடைய நிலங்களை அவனிடம் இருந்து பிடுங்குவது பின்னர் அந்த விவசாயியையும் அவரது குடும்பத்தையும் குறைந்த கூலிக்கு தன் கம்பெனியிலேயே வேலைக்கும் வைத்துக் கொள்வது. காலம் காலமாக நீடித்து வரும் இந்த சுரண்ட்ல் வடிவத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் தொழில் வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு. தஞ்சையில் ரசாயான ஆலை அமைக்கும் டி,ஆர். பாலுவும் இதையேதான் சொல்கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பெயரால் அரசே நிலங்களை சூறையாடும் கொடுமை.

இன்றைய தேதியில் நாற்பதாயிரம் படையினரைக் கொண்ட போர் நடவடிக்கையை மாவோயிஸ்ட் போராளிகள் மீது தண்டகாரன்யா மாநிலங்களில் ஏவியிருக்கிறது இந்திய அரசு. ”ஆபரேஷன் கிரீன்கன்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்போர் பயங்கராவாதிகளுக்கு எதிரானப் போர் என்று பிரகடனப்படுத்துகிற இந்திய அரசு, ஒரு பக்கம் மாவொயிஸ்ட் மக்கள் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை அழித்தொழித்து விட்டு தண்டகாரன்யா மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியார் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது.இப்பகுதியில் ரப்பர், தேயிலை, உள்ளிட்ட ஏராளமான இயற்க்கை வளங்கள் தொடர்பாக 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டிருக்கிறது இந்திய அரசு. இந்த ஒப்பந்தங்களுக்கு விரோதமாக மக்களிடம் நிலம் இருப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. நந்திகிராமில் சி,பி. எம்மின் அடவாடித்தனமான முதலாளிகளுக்காக விவாசியிகளைக் கொன்றதும் அதற்காகத்தான். அதனுடைய தொடர்ச்சிதான் லால்கரில் தொடங்கி வடகிழக்கு எங்கும் பரவி வருகிறது.

நாட்டில் எல்லையோர மாநிலங்களாக இப்பழங்குடி மக்கள் நீண்டகாலமாக தங்களின் பல்வேறு சிவில் உரிமைகளுக்காகவும், பொருளாதார, உழைப்பு உரிமைக்காகவும் போராடிவருகிறார்கள். துவக்கத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தமிழகம். கேரளம், கர்நாடகம் போன்ற பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய நக்சல்பாரிகள் இப்போது ஒன்றிணைந்த மாவோயிஸ்டுகளாக வடக்கு-மத்திய-கிழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் பூர்வீக நிலங்களை தங்களிடமே ஒப்படைக்கக் கோரும் அம்மக்களின் நியாங்களை காது கொடுத்துக் கூடக் கேட்க தயாரில்லாத மத்திய அரசு, அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறது. ஆனால் நிலம் உள்ளிட்ட அவர்களின் ஏனைய கோரிக்கைகள் எதையும் அரசு செவிமடுக்கத் தயாரில்லை. காரணம் நிலம் மக்களிடம் இருப்பதை அரசு விரும்பவில்லை. இது வடகிழக்குக்கிற்கு மட்டுமான பிரச்சனையில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளின் போது கச்சத்தீவு மீட்பும் ஒரு கோரிக்கையாக இங்கே வைக்கப்படுகிறது. ஆனால் கச்சத்தீவு மீட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எஸ். எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடல், கடற்கரை, அதை அண்டிய பிரதேசங்கள் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் எண்ணிலடங்கா ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்திய அரசு. நிலம் எப்படி தனியார் முதலாளிகளுக்கோ அது போல கடலும் தனியார் முதலாளிக்குத்தான்.

வன்னியுத்தத்தின் முடிவையும், தமிழக மீனவர் பிரச்சனையையும் இன்று சரியாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆரமபத்தில் எங்கள் கடலில் வெறும் கட்டுமர மீன்பிடிப்பு மட்டுமே இருந்தது. பின்னர் விசைப்படகு வந்தது. அப்போது கட்டுமர மீன்பிடிப்பை விசைப்படகுகள் அழித்தது சிறிய கண்ணிகளைக் கொண்ட வலைகளைப் போட்டு மீன்பிடித்ததால் கட்டுமர மீன்பிடுத் தொழிலாளர்கள் அடியோடு பாதிக்கப்பட்டார்கள். தமிழகம் முழுக்க கடற்கரை எங்கும் இது மோதலாக வெடித்தது. ஆங்காங்கு கொலைகளும் குண்டு வீச்சுகளும் கூட அப்போது நடந்தது. கட்டுமர மீன்பித் தொழிலில் பாரம்பரீய மீனவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்தனர். விசைப்படகு வந்த போது பெரும் பண்ணைகள் லட்சக்கணக்கில் செலவு செய்து விசைப்படகு வைத்து பெரும் பொருள் ஈட்டினர்.

ஆனால் இந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் சொந்த சகோதரனின் தொழிலை நாம் பாதிப்படையச் செய்து அவன் வீட்டு உலையில் மண்ணள்ளிப் போடுகிறோம் என்ற அக்கரையற்று அவர்களுக்கென்று வகுப்பப்பட்ட விதிமுறைகளையும் மீறி கட்டும்ர எல்லைக்குள்ளேயே மீன் பிடித்து அவன் பிழைப்பைக் கெடுத்தனர். கடைசியில் நாற்பது நாள் மீன்பிடிக்கக் கூடாது என்று மீன் குஞ்சுகள் பெருக்கக் காலத்தில் தடை எல்லாம் கொண்டு வந்து இன்று அது நடைமுறையில் இருந்து வந்தாலும் விசைப்படகுகளில் அசுர வளர்ச்சியும் தொழில் சார் அறம் கடந்த மீன் பிடித்தலும் கட்டுமர மீனவர்களின் வாழ்வைச் சிதைத்தது என்பது உண்மை.

அன்றைக்கு கட்டுமர மீனவர்களுக்காக பேசவோ அவனுடைய வாழ்க்கைப் பாடுகள் குறித்துப் பேசவே எவருமே இல்லாமல் போயினர். பெரும் பண்ணைகள் கடலோர கிராமங்களைக் கட்டுப்படுத்தி தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இன்று  கடந்த இருபது ஆண்டுகளாக கட்டுமர மீனவனின் வாழ்வில் வீசிய சூறாவளி விசைப்படகு மீனவனின் வாழ்விலும் வீசுகிறது. எளியவன் என்பதால் இவர்கள் கட்டுமர மீனவர்களை வதைத்து முன்னேறினார்கள். ஆனால் இப்போதோ இந்த விசைப்படகு மீனவர்களின் முன்னால் நிற்பது பன்னாட்டு பகாசுர மீன் பிடிக் கப்பல்கள். தங்களின் வீட்டு முற்றம் வரை வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். என்ன? என்று கேட்கு யாரும் இல்லை. கட்டுமரங்கள் கரையொதுக்கி வைக்கப்பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக விசைப்படகுகளும் கரையேற்றப்படுகின்றன? ஏன்?

தொடரும்….

வெண்மணி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. நல்ல விசயம்தான் எழுதியிருக்கீங்க… ஒவ்வொரு வருச லீவுக்கு ஊருக்கு பஸ்ல போவ சொல்ல குட்சைங்க காணம போறதும் அங்க அப்பாட்டுமெண்டு வற்றதும் பாக்கறதுதானே.. ஆனா மலைய விக்கறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்

 2. கட்டுரை அருமை.

  ப.சிதம்பரம் தனது தெகல்கா பேட்டியில் ”ஆபரேஷன் கிரீன்கன்ட்” என்று ஒன்று இல்லவே இல்லை. ஊடகங்கள் தான் ஊதிப்பெருக்குகின்றன என்று புளுகினான்..

  வினவு தோழர்களுக்கு, சில எழுத்து பிழைகள் உள்ளன.
  உதாரணம்: கட்டுமர ‘மீன்பிடுத்’ தொழிலாளர்கள்
  ‘மீன்பிடி’ தானே?

 3. ///மலைய விக்கறதெல்லாம் ஓவர்தான்///

  நீலகிரி பகுதியில் மக்கள் சொத்தான காடுகள் அழிக்கப்பட்டு தான் அவ்விடம் தனியார் தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. டாடா, நெஸ்லே, பார்லே போன்ற பெரு நிறுவனங்களின் தோட்டங்களும் அடங்கும். இதில் கொடுமை என்ன வென்றால் ஒரு சில ஆலைகளில் தயாரிக்கப்படும் தேயிலை முழுவதும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தியர்கள் அத்தரமான(!) தேயிலையை பருக தகுதியானவர்கள் இல்லை.

  • adimai surrundal enbathu vellai karan atchiyil arambithathu. netru avan mudalali. indru ullur mudalalli. ok. vizhipunarvu thevai nam makkallukku. nam muyarchi avasiyam thevai. makkal sakthi ondru padavendum . kantheya vazhiyil porada vendum. nam mana sakthi ondru pada vendum. nam sakthiyai adampara porutkallilum tv parpathilum sellavu seigiroom. athai nirutha vendum.

 4. என்னத்த சொல்ல 500 ருபீஸ் க்கு அடகுவைசுபோதே யோசிக்கணணும் , என்ன கேட்ட மக்கள் சரியில்லை, நன்றி வினவு நல்ல கட்டுரை தங்கள் தினமும் இதை போல் கட்டுரை போடுங்கள் .

 5. நிலம் சுரண்டும் சக்திகள் தாமும் பின் வரும் பஞ்சத்திற்கு பட்டினிக்கு முதலாளி என்பதை மறக்ககூடாது .கொழுத்தவன் கொழுப்பு நிரந்தரமா 

 6. இருமுனை கத்தி.விளை நிலம் விலை போனால் லாப நட்ட கணக்கு பார்த்தால் கட்டடம் வரும் கஞ்சி வருமா பணம் வரும் பசிககு பணமா உணவு .அந்த வரிசையில் இவர்கள் விதிவிலககா .மாவ்யச்டுகள் இயக்கபெண்கள் பெரும்பாலும் மாவோ யார் என தெரியாது , அவர் கொள்கை எது என்கூட தெரியாது .அவர்களுக்கு தெரிந்தது மண் விடுதலை சுதந்திரம் தான் வாழும் ஊரில் தெருவில் அதற்கு துப்பாக்கி தூக்க தயார் .இந்திய மக்கள் சுதந்திர பறவைகள் வாழ்க 

 7. தலித்துகளின் காவலர்கள் என்று பீற்றி கொள்ளும் விடுதலை சிறுத்தைகளை போன்ற சந்தர்ப்பவாத கட்சிகள் குடிசைகளை அகற்றும் போது ஓடி ஒளிந்து கொண்டது.

  தலித் கட்சிகள், ஆளும் கட்சியின் ஏவல் நாயாகவும் பிணாமியாகவும் செயல் படுகின்றன.

  தலித் மக்கள் பெரும்பாலும் நம்புவது இந்த கயவர்களை தான். இவர்களை நம்பும் அம்மக்களிடத்தில் இந்த சந்தர்ப்பவாதிகளின் முகத்திரையை கிழித்து அம்மக்களை உழைக்கும் வர்க்கமாக அணிதிரட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது.

 8. மண்ணின் மக்கள் மண்ணை விட்டு பிடுங்கப்பட்டு அகதிகளாகவும், பரதேசிகளாகவும் அலைவதை தினமும் கண்களால் பார்க்கிறோம். கட்டிடத்தொழிளார்கள் என்றும் நிறுவனங்களில் குறைந்த கூலி அடிமைகளாகவும், ஒப்பந்த தொழிளார்கள் என்ற பெயரில் எந்த சட்டதிட்டங்களுக்கும் உட்படாதவர்களாகவும் சொந்த மாநிலத்திற்குள் மட்டுமன்றி பிற மாநிலத்தவர்களும் அதிகமாக உலவுவதை நேரில் தினமும் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் யார்? என்பதை கட்டுரை தெளிவாக கூறுகிறது. கட்டுரையை விமர்சிப்பதுடன் நிற்காமல் சாவது ஒருமுறைதான் என்பதை மறக்காமல் மக்கள் போராட்டத்தினை முனெடுத்து செல்லவேண்டியது எல்லோருடைய கடமையாக உள்ளது.

 9. 1000 ஏக்கர் குறைந்து இப்பொழுதெல்லாம் வியபாரம் இல்லை. ஆம் நகரம் கடந்து பணமுள்ளவன் வளைத்து போடுகிறான். சொற்ப பணத்துக்கு ஆசைப்பட்டு விவசாயி நிலத்தை இழக்கிறான். சமீபித்திய உதாரணம் பல்லவாரம் காங்கிரஸ் பிரமுகர் 1500 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்ததில் முறைகேடு. மும்பையை சேர்ந்தவர் வழக்கு. அவர் என்ன தனக்காகவாக வாங்கினார் இல்லை. ஏதோ ஒரு அன்னிய நிறுவனத்திற்கு வாங்கி கொடுத்து காசு பார்க்க நினைத்தார். ஏமாந்தார்.
  இதுபோல் திருச்சியில், கோவையில், மதுரையில் இதன் பட்டியல் நீள்கிறது. ஆங்காங்கே ஒரு இலட்சம் கொடுத்து இடங்களை வளைத்து போட்டு அதிக விலைக்கு விற்று விவசாயிக்கு கிடைப்பதை காட்டிலும் இடைத் தரகர்கள் அதிக பணம் பார்க்கிறார்கள்,

  இதை காட்டிலும் நடுத்தர வர்க்கம் சொநத் வீடு-வாடகை வீட்டில் கூட வசிக்க முடியாத விலையில் நகரம் மாறிவிட்டது. பணிக்காக நூறு கி.மீ பயணம் செய்ய வேண்டிய அவலம். அதனால்தான் உத்தரமேரூர் விளை நிலைங்கள் தரிசாக மாற்ற படுகின்றன.

  நடுவன்ரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த போவதாக உலகுக்கு அறிவிக்கும் முன் இடைத்தரகர்கள் அறிகிறார்கள். அதை வைத்து பேரம் தொடங்குகிறது. SEZ எனப்படும் சிறப்பு பொருளதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எத்தனை இலட்சம் ஏக்கர்கள். எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எத்தனை விலக்கிக் கொள்ளப்பட்டன. எத்தனை மாற்று திட்டங்களாக அறிவிக்கப்பட்டன..
  எல்லாம் யாருக்காக. இந்த தளத்தில் நீங்கள் பதிந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நாடு முன்னேறுதுங்கிறான், ஜப்பான், அமெரிக்கா மாதிரி………………

 10. மனிதாபிமானத்தின் ஒட்டுமொத்த குத்தகைக்காரராக தன்னை முன்னிறுத்திக் கொண்டு கம்யூனிசத்தின் மீதான தனது அவதூறுகளை நியாயப்படுத்துவதும், முதலாளித்துவத்தின் கொடுங்கோன்மையை மிருதுவாக வருடிவிடுவதுமான வேலை செய்யும் அதியமான் அவர்களை இங்கு அழைக்கிறேன்.

  இந்தப் பதிவை விட்டு விட்டு ஸ்டாலின் பதிவில் அவர் மனிதாபிமான புலம்பலை அலை பரப்புவார் என்பது எனது எதிர்பார்ப்பு.

  என்ன செய்கிறார் பார்க்கலாம் … அதியமானின் மனிதாபிமான மன ஆவேசத்தின் வெளிப்பாட்டை…

 11. என்ன செய்கிறார் பார்க்கலாம் … அதியமானின் மனிதாபிமான மன ஆவேசத்தின் வெளிப்பாட்டை…////

  இங்கும் வந்து மாவோயிஸ்டுகளை வைத்து மனிதாபிமான புலம்பலை முன்னெடுக்க முனைவார்!
  சல்வாஜூடும் மற்றும் மற்ற கூலிக்கு கக்கூசு கழுவும் படைகளின் பழங்குடியினர் மீதான அட்டூழியங்களை மறைத்தும், பழங்குடி மக்களை ஒடுக்குவதன் பின்னால் இருக்கும் ஏகதிபத்திய நிறுவனங்களின் நலன்களை மறைத்தும், நக்சல் பாரிகளின் மீது பாய்ந்து பிராண்டுவதன் மூலம் அவருக்கே உரிய நன்றியை வெளிக்காட்டுவார்!

  • ஏன்னே அவருதான் எதுவுமே எழுதலையே அதுக்குள்ளார ஏன் அவர் அதஇத எழுதுவாருன்னு நீங்களே சொல்லுறீங்க?

 12. இந்திய அரசு, பன்னாட்டு முதலாளிகலின் அடியலாக, நம் பசுமையான வளங்களை வேடையாடும் (GREEN HUNT) இந்திய இரானூவ பசீஸ்டுகளை உழைக்கும் மக்கள் நாம் ஏதிர்த்து போராடுவோம்.

 13. இதையெல்லாம் எதிர்க்க வேண்டுமானால் பல இயக்கங்கள்/அமைப்புகள் ஒன்று கூடிப் போராடவேண்டும்.குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதை ஞாநி எதிர்த்து எழுதுகிறார். அவர் தனி மனிதர்.எத்தனை அமைப்புகள் பொதுப்பிரச்சினைகளுக்கு சேர்ந்து போராடுகின்றன.தேசிய அளவில் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு NAPM இருக்கிறது.தமிழ்நாட்டில் அது எப்படி செயல்படுகிறது.நீங்கள் அவர்களுடன் சேர்ந்து எதாவது செய்கிறீர்களா.
  பூவுலகின் நண்பர்கள், பீஸ் டிரஸ்ட்,சோகோ அறக்கட்டளை,பியுசில் போன்றவைகளுடன் உங்களுக்கு எத்தகைய உறவு/தொடர்பு இருக்கிறது. கட்சிசார்பற்ற இயக்கங்கள்/அமைப்புகள் ஏன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்யக்கூடாது? செய்கிறீர்கள் எனில் அதையும் எழுதுங்கள்.இங்கு என்னப் பிரச்சினை என்று எல்லோருக்கும் தெரியும்.ஊழல் இருக்கிறது என்று மக்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன். கேரளாவில் பழங்குடியினர் போராடினர், ஒரளவு வெற்றி பெற்றனர்.அதைப் பற்றி வினவில் எழுதலாமே.

Leave a Reply to Anonymous பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க