privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபோலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

-

பேரெழுச்சி! போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்க மாநிலம் இதுவரை கண்டிராத பழங்குடியின மக்களின் ஆயுதம் தாங்கிய பேரெழுச்சி! கடந்த நவம்பர் முதல் வாரத்தில் வெடித்தெழுந்த இப்பேரெழுச்சி மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் புயல் போலச் சுழன்று வீசியது. “ஐயோ! மாவோயிஸ்டு பயங்கரவாதிகள்! சிங்கூர்நந்திகிராமத்தைத் தொடர்ந்து இங்கேயும் ஊடுருவி விட்டார்கள்” என்று அலறியது, மே.வங்க போலி கம்யூனிச அரசு. “மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து விட்டது” என்று புலம்பின முதலாளித்துவ நாளேடுகள். “இம்மாவட்டங்களில் எங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லை” என்றுபீதியில் கூச்சலிட்டனர் அரசு அதிகாரிகளும், போலீசாரும்.

வில்அம்பு, கோடாரி, அரிவாள் முதலான மரபு வழி ஆயுதங்களுடன் பல்லாயிரக்கணக்கான சந்தால் பழங்குடியின மக்கள், இம்மாவட்டங்களிலுள்ள போலீசு நிலையங்களை முற்றுகையிட்டு, போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இம்மாவட்டங்களை இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளையும் அகலமான குழிகளை வெட்டித் துண்டித்தனர். சாலையில் மரங்களை வெட்டிப் போட்டு தடையரண்களை உருவாக்கினர்.

“கடந்த பத்தாண்டுகளாக மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று பொய்க்குற்றம் சாட்டி வதைத்துச் சிறையிடப்பட்டுள்ள அனைத்து அப்பாவி பழங்குடியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்; கடந்த நவம்பர் முதல் வாரத்தில் லால்கார் பகுதியில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டுப் பழங்குடியினரை மிருகத்தனமாக வதைத்த குற்றத்துக்காக, போலீசு உயரதிகாரி ராஜேஷ்சிங், சந்தால் பழங்குடியின மக்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டுப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தாக்குதலில் ஈடுபட்ட லால்கார் போலீசார் மக்கள் முன் மூக்கு தரையில்படும்படி கீழே படுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதோடு, புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

வறுமைவேலையின்மை, அரசின் புறக்கணிப்பு, போலீசின் அடக்குமுறை முதலானவற்றால் ஏற்கெனவே குமுறிக் கொண்டிருந்த சந்தால் பழங்குடியின மக்களை, நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட போலீசு அடக்குமுறையானது பேரெழுச்சிக்குத் தள்ளியது. சந்தால் பழங்குடியின மக்கள் மீதான போலீசு வெறியாட்டத்துக்குக் காரணம் என்ன?

மே.வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள், காடுகள் நிறைந்த பின்தங்கிய பகுதியாகும். சந்தால் பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டங்களில் சமூக நலத்திட்டங்கள் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, சந்தால் பழங்குடியின மக்கள் வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இப்பகுதியில் இயங்கிவரும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் இம்மகளை அமைப்பாக்கி, அரசியல்படுத்திப் போராட்டங்களைக் கட்டியமைத்து வந்தனர். நக்சல்பாரி தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில், மே.வங்க போலீசு பயங்கரவாதிகள் இப்பகுதியில் அப்பாவி மக்கள் மீது வன்முறைவெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதும், மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அப்பாவிகளைக் கைது செய்து வதைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது.

இச்சூழலில், உள்நாட்டுவெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாச சேவை செய்துவரும் போலி கம்யூனிச ஆட்சியாளர்கள், இப்பகுதியில் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவக் கிளம்பினார்கள். ஏற்கெனவே சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பொ.மண்டலத்தை நிறுவி, மக்களின் எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கி, நாடெங்கும் அம்பலப்பட்டுப் போன சி.பி.எம்.ஆட்சியாளர்கள். இம்முறை இத்திட்டம் பற்றி மக்களுக்குத் தெரிவிக்காமல், சதிகார முறையில் நிறைவேற்றிடத் துடித்தனர்.

இருப்பினும், ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக சந்தால் பழங்குடியினர் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து 5,000 ஏக்கரில் சி.பொ.மண்டலம் நிறுவப்படவுள்ள உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கியதும், மாவோயிஸ்டுகள் இச்சிறப்புபொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணிதிரட்டி வந்தனர். கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அவசர அவசரமாக இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அறிவிக்கப்பட்டு, மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில், மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத் தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பில்லை.

இருப்பினும், மறுநாளே மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் பழங்குடியின மக்கள் மீது மே.வங்க போலீசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளையும், சைக்கிள்பாத்திரங்கள் போன்றவற்றைக் கூட விட்டுவிடாமல் நாசமாக்கிய போலீசார், மூன்று பள்ளிக்கூட மாணவர்களை அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகப் பொய் வழக்கு போட்டு கைது செய்து வதைத்தனர். சீதாமணி முர்மூ என்ற பெண்ணை துப்பாக்கிக் கட்டையால் போலீசார் தாக்கியதில் அவரது கண்களில் இரத்தம் பீறிட்டு, இன்று அவர் பார்வையிழந்துள்ளார். பல கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பலருக்கு எலும்பு முறிந்து மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர், வியாபாரி, கண்பார்வையற்ற முதியவர் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டுக் கொடூரமாக வதைக்கப்பட்டனர். உள்ளூர் போலீசும் ரிசர்வ் போலீசும் சேர்ந்துகொண்டு விடியவிடிய 3 நாட்களுக்கு நடத்திய இத்தாக்குதலால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.

போலீசு அடக்குமுறையால் துவண்டுபோன சந்தால் பழங்குடியின மக்களிடம் நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், லால்கார்ஜார்கிராம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி விவாதித்து, அதனடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர். மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்கள் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி” நிறுவப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 6ஆம் தேதி இரவு 5,000 பேருக்கு மேலாக வில்அம்பு, கோடரி, அரிவாள்களுடன் அணிதிரண்ட பழங்குடியின மக்கள் லால்கார் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுச் சூறையாடி, போலீசாரை நையப்புடைத்துக் கொட்டடியில் தள்ளிப் பூட்டினர். தொலைபேசிமின்சார இணைப்புகளைத் துண்டித்தனர்.

மறுநாள், நவம்பர்7; அந்நவம்பர் புரட்சி நாளில் மேற்கு மித்னாபூர் மாவட்டமெங்கும் ஆயுதமேந்திப் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பேரணி நடத்திய பழங்குடியின மக்கள், அம்மாவட்டத்தை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் அகலமான குழிகள் வெட்டி முற்றாகத் துண்டித்தனர். சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுத் தடையரண்களை ஏற்படுத்தினர். சமரசம் பேச வந்த கீழமை நீதிமன்ற துணை மாஜிஸ்திரேட் பழங்குடியின மக்களால் “கெரோ” செய்யப்பட்டதால், அவரும் போலீசாரும் வாகனங்களை விட்டுத் தப்பியோடினர்.

அடுத்த இரு நாட்களில் மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி சந்தால் பழங்குடியினர் நிறைந்த புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் வில்அம்பு, கோடாரி, அரிவாள், துடப்பக்கட்டையுடன் போலீசு அடக்குமுறைக்கு எதிராகவும், சி.பொ.மண்டலத்துக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கானோரின் எழுச்சிமிகு பேரணிகள் தொடர்ந்தன. இம்மாவட்டங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு, போலீசு நிலையங்களும் அரசு அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டன. போலீசாரும் அரசு உயர் அதிகளாரிகளும் இம்மாவட்டங்களை விட்டுத் தப்பியோடினர். நவம்பர் 10ஆம் தேதியன்று பல்வேறு பழங்குடியின அமைப்புகள் ஒன்றிணைந்து தாஹிஜுரி எனுமிடத்தில் சாலை மறியல் நடத்தியபோது, தடியடி நடத்திக் கலைக்க முயன்ற போலீசாரை 5000க்கும் மேல் திரண்ட பழங்குடியின மக்கள் ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவுக்குத் துரத்தி துரத்தி வந்து விரட்டியடித்தனர். இம்மூன்று மாவட்டங்களில் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘விடுதலைப் பிரதேசங்களாக’க் காட்சியளித்தன.

அரண்டு போன போலிக் கம்யூனிச ஆட்சியாளர்கள் சர்வகட்சி கூட்டத்தைக் கூட்டி, பழங்குடியின மக்களிடம் சமரசம் பேச வருமாறு அழைத்தனர். ஆனால், எல்லா ஓட்டுக்கட்சிகளும் தங்களுக்குப் பழங்குடியின மக்களிடம் செல்வாக்கு இல்லை என்று கூறி மறுத்துவிட்டன. மித்னாபூர் மாவட்டம், பின்பூர் தொகுதியில் பழங்குடியின மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற ஜார்கந்து கட்சி (நரேன்பிரிவு) எம்.எல்.ஏ.கூடச் சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தூது செல்ல மறுத்துவிட்டார். இதற்கிடையே, போலீசு அடக்குமுறையைக் கண்டித்து, திரிணாமூல் காங்கிரசு கட்சியினர் மித்னாபூர் மாவட்ட நீதிமன்றத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்திய சோசலிஸ்ட் ஐக்கிய மையக் கட்சியினர் ஜார்கிராம் பகுதியில் கடையடைப்புப் போராட்டத்தையும், பேரணிமறியல் போராட்டங்களையும் நடத்தினர். ஜார்கந்த் திசாம் கட்சி மூன்று மாவட்டங்களில் வெற்றிகரமாக கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது.

மே.வங்க ‘இடது சாரி’ கூட்டணியிலுள்ள வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான நந்தகோபால் பட்டாச்சார்யா, “அரசு அடக்குமுறையின் எதிர்விளைவுதான் சந்தால் பழங்குடியனரின் எழுச்சி” என்று ‘இடதுசாரி’ அரசைச் சாடியுள்ளார். கூட்டணியிலுள்ள பார்வர்டு பிளாக் கட்சியின் செயலரான அசோக் கோஷ்,”பழங்குடியின மக்களை நீண்டகாலமாகப் புறக்கணித்து ஒடுக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இக்கிளர்ச்சி. இதற்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடுவதில் பயனில்லை” என்று சி.பி.எம். ஆட்சியாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், நந்திகிராம வழியில் மோட்டார் சைக்கிள் ரௌடிப் படைகளைக் கொண்டு தாக்க சி.பி.எம்.குண்டர்களை ஏற்பாடு செய்தனர். சி.பி.எம்.கட்சியின் அமைச்சர் சுஷந்தாகோஷ், மாவட்டச் செலாளர் தீபக் சர்க்கார் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளுடன் குண்டர் படை கட்டியமைக்கப்பட்ட போதிலும், பழங்குடியின மக்களின் கோபாவேசத்தைக் கண்டு அஞ்சி, இத்தாக்குதல் திட்டத்தை சி.பி.எம்.கட்சி நிறுத்தி வைத்துவிட்டது.

வேறுவழியின்றி பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்களை கமிட்டி”யிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த விழைவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர். மக்கள் கமிட்டியினரோ, இப்பேச்சுவார்த்தை பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் முன் பகிரங்கமாக நடத்தப்பட வேண்டும்; அதற்கு முன் போலீசு அதிகாரிகள் மக்களிடம் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அதிகார வர்க்கமோ தங்களை “கெரோ” செய்து அவமானப்படுத்தி விடுவார்கள் என்று அஞ்சி , இதற்கு உடன்பட மறுத்தது.

இந்த இழுபறியோடு போராட்டத்தை மேலும் நீட்டித்தால், கூலிஏழைகளான பழங்குடியினருக்கு மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் இடர்ப்பாடுகள் பெருகும் என்பதால் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு, போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தைச் சமூகப் புறக்கணிப்பு செய்யுமாறு பழங்குடியினருக்கு மக்கள் கமிட்டி அறைகூவல் விடுத்துள்ளது. இதனால் போராட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாகவோ, அதிகார வர்க்கபோலீசு ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாகவோ கருத முடியாது. மக்கள் கமிட்டியின் சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பினால், இனி தவித்த வாய்க்கு தண்ணீர் கூட பழங்குடியின மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று உள்ளூர அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது அதிகார வர்க்கமும் போலீசும். இதுவே பழங்குடியின மக்களின் பேரெழுச்சிக்குக் கிடைத்த வெற்றி.

நேற்று, சிங்கூர்நந்திகிராமத்தில் சி.பி.எம். குண்டர்களையும் போலீசையும் கொண்டு வெறியாட்டம். இன்று, மித்னாபுரில் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் கொண்டு பாசிச பயங்கரவாதம். மே.வங்கத்தை ஆளும் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியினர் உழைக்கும் மக்களின் எதிரிகளாக, பாசிஸ்டுகளாகச் சீரழிந்து விட்டதற்கு அண்மைக்கால நிரூபணங்களே இவை. இப்போலி கம்யூனிஸ்டுகளை நேற்றுவரை நம்பிய மே.வங்க உழைக்கும் மக்களே. அவர்களின் பாசிச ஒடுக்குமுறைக்கும் முதலாளித்துவ சேவைக்கும் எதிராகப் பேரெழுச்சியில் இறங்கியுள்ள நிலையில், புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். அணிகள் இனியும் இத்துரோகக் கட்சியில் நீடிக்க அடிப்படை ஏதாவது இருக்கிறதா?

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008, (அனுமதியுடன்)

  1. நானோ பேக்டரிக்காக எங்கிட்ட துட்டு வாங்கிட்டு கடைசீசீசீல கால வாரி உட்டுட்டானுங்க பிளடி Fellows, நான் குஜராத்துக்கு போறேன் bye

  2. என்னாது போலி கம்யூனிஸ்டா?
    இங்கேயும் போலியா?
    தல சுத்துதுடா சாமி……!!!!!!!!!!!

  3. நக்சல்பாரி, நந்திகிராம், சிங்கூர் என்ற வரிசையில் இன்று மித்னாபூர், புருலியா, பங்குரா மக்களின் எழுச்சி.

    தொடரட்டும் மக்கள் எழுச்சி!
    விடியட்டும் புதிய ஜனநாயக புரட்சி!

  4. மணியோசை இது
    யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
    குருடர்கள் போல் யானையை பார்த்த காலம் மாறும்
    மாற்ற முயலுவோர்க்கு
    ஊக்கம்தரும் மணியோசை இது

    தோழமையுடன்
    செங்கொடி

  5. என்னுடைய உடன்பிறவா சகோதர்ரகளை பற்றி நீங்கள் பிதற்றியிருப்பது எனது உள்ளத்தை காயப்படுத்துகிறது. இதற்கு நீங்கள் வழக்கை சந்தித்தே ஆகவேண்டும். வினவு எப்போது ஒழியும் என தமிழ்மண மக்கள் எனக்கு தினமும் ஈமெயில் அனுப்பி கொன்டிருக்கிறார்கள்.

  6. போலிகள் இப்போது துரோகியிலிருந்து எதிரியாக பாசிஸ்டாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றார்கள்.இனியும் அதில் புரட்சிகர அணிகள் என்று சொல்லிக்கொண்டு
    மக்களை கோமாளிகள் ஆக்குவதில் பலனில்லை.
    “புரட்சி யாளர்கள் புதைக்கப்படுவதில்லைவிதைக்கப்படுகிறார்கள்” என்று டைபி போர்டுகளில் எழுதப்பட்டிருக்கும்.
    உண்மை அது புரட்சியாளர்களுக்கு மட்டுந்தான் பாசிசவாதிகளுக்கு அல்ல
    தயவு செய்து உங்களை புரட்சிகர அணியென்று சொல்லாதீர்கள். அது புரட்சிக்கு மாபெரும் இழுக்கு.

    படிக்க : வாடா வாடா வாடா தோழா

    http://kalagam.wordpress.com/2008/11/18/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%be-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be/

    கலகம்
    http://kalagam.wordpress.com/

  7. வினவு, போன பதிவுல பீ.முரளி80 நீங்க போலி கம்மினிஸ்டு, சைனா, கியூபா பத்தியெல்லாம் எழுதினப்பறமா கருத்து சொல்லுறேன்னாறே….. நீங்க அதெல்லாம் எப்ப எழுத போறீங்க..

  8. எதனை நோக்கிய பயணமிது?
    எதனை அடைவதற்கான பாதை இது?
    மேற்கு வங்க அரசு ஒன்றும் கம்யூனிசமே புரியாதவர்களும் அல்ல பிடிக்காதவர்களும் அல்ல. நிலமில்லா விவசாயிகளுக்கு நிலம் கொடுத்தது போன்ற ஏராளமான கம்யூனிச கொள்கைகளை அமல்படுத்தத்தான் செய்கிறார்கள். நாட்டையே வேறு பாதைக்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிற மோடியைப்போன்றோரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாடீர்கள் நீங்க. ஏன் என்றால் மேற்கு வங்கத்தில் நமக்கு இருக்கும் போராடும் உரிமை குஜராத்திலோ அல்லது கர்நாடகத்திலோ கிடையாது.
    குஜராத்தில் லட்சோப லட்சம் இஸ்லாமிய காணாமல் போனார்களே, அப்போது நாம் எங்கே போனோம்?
    நமக்குத்தான் மேற்கு வங்க அரசை கவிழ்ப்பதில் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கிறது. முடிந்தால் அங்கே எதையாவது செய்து காட்டுங்கள்?
    பொது மக்களுக்கு இந்த கம்யூனிச சண்டையெல்லாம் புரியாது. அவர்களைப்பொறுத்த வரை நீங்களும் ஒன்றுதான் சி.பி.எம்மும் ஒன்றுதான். 110 கோடி மக்களை திரட்டுவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
    உங்களுடைய மொழியில் புரட்சி என்றால் என்ன?
    எதனை நோக்கிய பயணமிது?
    எதனை அடைவதற்கான பாதை இது?

    • தீபா, நீங்கள் இன்னமும் இந்த தளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளை படிக்கவில்லை என தெரிகிறது… குஜராத், ஒரிசா மாநிலங்களில் நடந்த இந்து பார்ப்பன பாசிச படுகொலைகளை கண்டித்து பல பதிவுகளும் பலவித ஆர்பாட்டங்களும், பல பொது கூட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன…

      https://www.vinavu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF/

      //பொது மக்களுக்கு இந்த கம்யூனிச சண்டையெல்லாம் புரியாது. அவர்களைப்பொறுத்த வரை நீங்களும் ஒன்றுதான் சி.பி.எம்மும் ஒன்றுதான். //
      இதுவும் ஒரு முக்கிய பிரச்சினையே… போலிகளை மக்களுக்கு அம்பலப்படுத்தாமல் மக்களை இன்று திரட்ட முடியாது…

      இதோ இந்த இணைப்பில் உள்ள அறிக்கை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களால் ஆராய்ந்து எழுதப்பட்டது… இதனை படித்த பிறகாவது, மேற்கு வாங்க அரசின் அவலட்சணத்தை தெரிந்து கொள்ளுங்கள்…

      http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6002:2009-07-16-19-03-27&catid=105:kalaiarasan

  9. தங்களது பதில் வெறும் விதண்டாவாதமாக இல்லாமல், தெளிவான பாதையை செல்வதாக இருக்குமென நம்புகிறேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க