முகப்புபழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!
Array

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

-

vote-012அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ (காட்டு வேட்டை).

சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக் கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரே ஹவுண்ட்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப் படைகளைச் சேர்ந்த ஒரு இலட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் தீவிரப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்திய இராணுவ ஹெலிகாப்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கைக் கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டின் மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீகக் குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூ. 7300 கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கார் அரசு உருவாக்கியிருக்கும் சல்வா ஜுடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 இலட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆபரேசன் கிரீன் ஹன்ட்- இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளைத் துறந்து ஓடுகிறார்கள். “இலங்கை இராணுவத்தின்  இறுதிப்போர்தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாகப் பிரகடனம் செய்திருக்கிறார் சட்டிஸ்கார் மாநில டி.ஜி.பி விசுவரஞ்சன்.

இந்தப் போர்வெறிக்குள் புதைந்திருக்கும்  இரகசியம் இதுதான். தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அற்புதமான அரிய கனிவளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள் மாவோயிஸ்டு கொரில்லாக்கள்.  சிதம்பரத்தின் கொலைவெறிக்குக் காரணம் இதுதான்!

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறு கட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெரிலைட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு  ஒரிசா அரசு 40 கி.மீ நீளமுள்ள நியாம்கிரி மலையைத் தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 இலட்சம் கோடி ரூபாய். இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் 7 சதவீதம்.  இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத் தாதுவில் 20% சட்டிஸ்கார் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாடா, எஸ்ஸார், ஜின்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத் தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத் தரவிருக்கும் விலை – டன்னுக்கு 27 ரூபாய். இவைபோல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள்!

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலம் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10 இலட்சம் பழங்குடி மக்களும் விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாடா, பிர்லா, ஜின்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும், வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோ டின்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளைப் போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாடா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜின்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டி முடித்து விட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாடாவின் இரும்பாலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜின்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப்போர் உண்மையில் மக்களுக்கெதிரான போர்!

“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டு சூழலை பெரிதும் பாதிக்கும் என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன் சிங் கூறும் செய்தி.

இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, இது மக்களுக்கு எதிரான போர்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை. கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போரும் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டு சூழலை’ உருவாக்குவதற்காகத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹுண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். பன்னாட்டு முதலாளிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணிநிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்துக்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம் – நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கை அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக்கொள்கின்றன.

“1994 இல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மய தாராளமயக் கொள்கையிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவவில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன் சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு  சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள்.பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதாரர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடீசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக,  இழப்புக்கும் தியாகத்துக்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக் கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான்,”நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன் சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள்.தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்துவிட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள விடாமல், ஓட்டுக்கு இலஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாக்கத் தாக்குதல்களால் வாழ்க்கை பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக் கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள் என்பதை அரசு அறிந்தே இருக்கிறது. இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் நோக்கம் இதுதான்.

 • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
 • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
 • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்!
 • மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

ஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. இதுவ‌ரை இல்லாத அளவில் நக்சல்பாரிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட தயாராகி விட்டது அரசு.அடுத்த ஆண்டு அரசின் ஒடுக்குமுறை,‍அதை எதிர்த்த நக்சல்பாரிகள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்பது திண்ணம்!

  ஆளும் வர்க்கங்களும் அதன் ஒடுக்குமுறைகளும் வென்றதாக சரித்திரம் இல்லை!அரசை எதிர்த்த நமது போராட்டத்தை ஊக்கத்துடன் முன்னெடுத்துச் செல்வோம்!

  • நக்சல்பாரிகள் ,மாவோயிஸ்ட்கல் எந்த மதத்தை சார்ந்த தீவிரவதிஹல் ?

   • மாவோயிஸ்டுகள் மக்களுக்காக போராடுகிறார்கள். நீங்கள் இல்லாத கடவுளுக்காக போரடுகிறீர்கள். மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்பட, உழைக்கும் மக்களின் தீவிரவாதிகள். 

 2. ஈழத்தை அழித்த‌ இந்திய ஜனநாயகம் இந்திய மக்களையும் அழிக்கிறது !அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ தமிழகம் தழுவிய மாபெரும் பிரச்சார இயக்கம் துவக்கம்.

  http://vrinternationalists.wordpress.com/2009/12/26/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8C-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9/

 3. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று மக்களை மூளை சலவை செய்யும் ‘பயங்கரவாத ஊடகங்களும் பத்திரிக்கைகளும்’ அரசின் மக்கள் விரோத கொள்கைகளையோ, செயல்களையோ மக்களிடம் பெயரளவுக்கு கூட சொல்வதில்லை. (தெகல்கா போன்ற சில பத்திரிக்கைகளை தவிர..)
  இப்படிப் பட்ட ஊடகங்கள் அனைத்து மக்களிடமும் நடுத்தரவர்க (பிழைப்புவாத) மனோபாவத்தை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கின்றன. மக்களிடம் உண்மையை கொண்டு செல்ல வேண்டிய ஊடகங்களே, திட்டமிட்டு ‘நக்சல் பயங்கரவாதம்’ என்னும் பொய்யை பரப்புகின்றன!

  அரசுடன் இந்த ஊடகங்களையும் சேர்த்தே பெரும்பாண்மை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்!

  அரச பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  துணை நிற்க்கும் ஊடக பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவோம்!
  மறுகாலனிய தாசர்களை விரட்டியடிப்போம்!

 4. தமிழ்த் தேசியம் பேசுவோரும், இலங்கைத் தமிழர்களுக்காகக் கண்ணீர் விடுவோரும், தமது முற்றத்திலேயே தொடுக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீதான போரை நிறுத்தப் என்ன செய்யப் போகிறார்கள்.

  • போராடுவோருடன் சேர்ந்து போராடுவோம்! விழிப்புணர்வூட்டுவோருடன் இணைந்து செயல்படுவோம்!

 5. இந்த பிரச்சாரம் நீர்த்துவிடாமல் ஒரு பெரும் மக்களெழுச்சிக்கு முகாந்திரமாக அமையட்டும்.

 6. இதைப் பற்றி விரிவான பல கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் – பலரும் மாவோயிஸ்டு தோழர்களை ஏதோ வேலைவெட்டியில்லாத தீவிரவாதக்
  கும்பல் எனும் அளவிலேயே நினைக்கிறார்கள்; அவர்களுக்கு ஆளும் வர்க ஊடகங்கள் கொடுத்திருக்கும் அறிமுகம் அந்தளவுக்கு தான் இருக்கிறது.

  குறிப்பாக தண்டகாரன்ய பகுதியில் கிடைக்கும் கணிமங்கள் / அங்கே சுரங்க கம்பெனிகள் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. போன்றவை
  பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்தக் கட்டுரைகள் (ஆங்கிலத்திலும் இருந்தால் நன்றாக ரீச் ஆகும்) இணையத்திலிருக்கும் எல்லா
  ஃபோரம்களிலும் பதியப்பட்டு விவாதத்தைக் கிளப்ப வேண்டும்.

  அவுட்லுக்கில் வந்த அருந்ததிராயின் பேட்டி இண்டியன்வேன்கார்ட் தளத்தில் டவுன்லோடு செய்ய முடிகிறது.. அதைக் கூட (ஆங்கிலத்திலிருந்தாலும்) அப்படியே இங்கே மறுபதிப்பு செய்யலாம் என்று நினைக்கிறேன்.

 7. மக்கள் அழிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு, டி.ராஜா, திருமாவளவன்,நெடுமாறன், வை.கோ போன்றோருக்கு ஈழப் பிரச்சனையின் மறுபாகம் என்று சுட்டிக்காட்டி வினவு ஒரு பகிரங்க அழைப்பு விடவேண்டும். தனித்தனியாகவும் அழைப்பு விடுத்து அவர்களின் பதிலைப் பிரசுரிக்க வேண்டும். அவர்களை சந்திக்கு இழுத்து அம்பலப்படுத்த இதுதான் சரியான வழி.!

 8. யாருக்காக உழைக்கிறோம் என தெரியாமல் உழைக்கம் மக்கள் ஒரு புறம். குறுகிய லாப நோக்கிற்காக விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு பேசி விற்கும் ஒரு கூட்டம் மற்றொரு பக்கம். அவர்கள் உள்ளே நுழைவதற்கு சட்டம் இயற்றும் கூட்டம் ஒரு பக்கம். இதில் கடைசியாக சொன்னவர்கள். தெரிந்தே செய்யும் கூட்டம். மற்றவர்களை மாற்றத்தை நோக்கி அழைப்பது நமது கடமை. அவர்கள் வருவார்கள்.

 9. தன்னுடைய நிலத்திற்காக, வாழ்வாதாரத்திற்காக, உரிமைக்காக போராடும் பழங்குடியினரின் போராட்டங்களை தீவிரவாதம் என்றும் மக்கள் விரோத, தேசநலனுக்கு எதிரான வன்முறை என்றும் மக்கள் விரோத முதலாளித்துவ அரசுகள் செய்யும் பரப்புரைகள் நடுத்தர மக்களையும், ஜாதி வெறியர்களையும் எளிதில் நம்பவைத்து ஏமாற்றுவதின் விளைவு….. இங்கே காட்சிப்பதிவாக….. முதலாளித்துவ சிந்தனைவாதிகளின் வெறியாக…..

   <A href=" http://www.youtube.com/watch?v=VLeqXoclhX0&quot;

 10. இப்படி, கொடூரமாக துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்படுவது தங்களது உரிமைகளை கேட்டு ஊர்வலமாக வந்த குற்றத்திற்காக மட்டுமே. காவல்துறை, சட்டம் ஒழுங்கு போன்றவைகள் எல்லாம் ஆதிவாசிகளை காக்க இல்லை என்பதை மற்றும் ஒருமுறை வீடியோ ஆதரத்துடன் நிறுபித்துள்ளது எனது தேசம்.

  ஆடு, மாடுகளை கூட இப்படிக் கொல்வார்களா எனத் தெரியாது.

  ஒடுக்கப்பட்ட மக்கள், ஆதிவாசிகள், பழங்குடியினர் ஏன் போராளிக்குழுக்களின் பின் செல்கின்றனர் என அப்பாவியாக வினவும் “காமன் மேன்” கள் தவறாமல் காண வேண்டிய காணொளி.

  இது போன்ற ஏராளமான கொடூரங்(ன்)களை கேள்விப் பட்டிருப்பினும் வீடியோ இணைப்புடன் காணும் பொழுது நெஞ்சம் பதறுகின்றது. இன்னமும், காந்தி தேசம், அகிம்சை, மக்களாட்சி என புழுகித் திரிபவர்கள் திரும்பவும் ஒருமுறை காணொளி இணைப்பினை காணவும்…

  2007ல் நடைபெற்ற இந்த சம்பவத்தின் மேல் இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என (அப்படி ஏதேனும் நடந்திருந்தால்) யாரேனும் தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.

  மற்றபடி

  வாழ்க (வல்லரசு) இந்தியா…
  18 Mar 2010

 11. அய்யா தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி கேவலப்படுத்தும்போதும் எந்த எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் எழவில்லையே என்ன செய்வது ?
  ஐஸ் கட்டியின் மீது படுக்கவைத்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளனரே? இதை மீனவர் சங்கங்களும் கூட மவ்னமாக இருக்கிறதே? பொதுமக்கள் வீதிக்கு வர வேண்டாமா? என்ன அவலம் இது? இதற்க்கு முன்னராவது இலங்கையிலே போர் என்ற ஒரு சூழல் இருந்ந்தது? இப்போது அதுவும் இல்லையே?

 12. […] அமல்படுத்தப்பட்டும் வரும் காட்டு வேட்டையின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் ம.க.இ.க […]

 13. Your cartoon showing Indian Emblem in a shoe is offensive. It is unacceptable to place the most important symbol of every Indian in a shoe. Apologise and remove this cartoon.

 14. 1. How the gorillas are funded?
  2. Where these gorillas get weapons?
  3. How these gorillas are recruited?
  4. For what these gorillas will use their weapons?
  5. Who gives these gorillas training?

  Thesa throgigala… Indiavukaga nan poraduven ana ayutham illama, aravazhiyil

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க