Friday, September 22, 2023
முகப்புகர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
Array

கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்

-

vote-012கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கும், அவரது ஆட்சியின் அஸ்திவாரமாக இருந்துவரும் சுரங்க முதலாளிகளான ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே இரண்டு வார காலமாக நடந்து வந்த அதிகாரச் சண்டை, “கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவிற்கு நெருக்கமானவரும் அம்மாநிலத்தின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான ஷோபா கரந்த்லாஜேயைப் பதவியில் இருந்து அகற்றுவது; பெல்லாரி மாவட்டத்தில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்துவது; எடியூரப்பா, ஆட்சி தொடர்பாக எடுக்கும் எந்தவொரு முடிவையும் ரெட்டி சகோதரர்களைக் கலந்து ஆலோசித்து எடுப்பது” என்ற பேரத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.

“எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்ற ரெட்டி சகோதரர்களின் கோரிக்கையை, பா.ஜ.க. தலைமை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.  எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கியடித்தால், கர்நாடகா மாநிலத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கும், வாக்கு எண்ணிக்கையும் கொண்ட லிங்காயத்து சாதியினரைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்ற சாதி அரசியல்தான் இதற்குக் காரணமேயொழிய, வேறெந்தக் கொள்கையும் இதன் பின்னணியில் கிடையாது.

ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமாக இருந்தவரும், பா.ஜ.க.வில் நீண்ட காலம் பணியாற்றியவருமான ஜஸ்வந்த் சிங்கை ஒரே நொடியில் தூக்கியெறிந்த பா.ஜ.க. தலைமை, ரெட்டி சகோதரர்களைக் கட்சியிலிருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் தூக்கியெறியத் துணியவில்லை.  இதற்குக் காரணம், அச்சகோதரர்களின் பணபலம்!

பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.  இதற்கு நன்றிக் கடனாக

கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.

எடியூரப்பாவிற்கும் ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே அதிகாரச் சண்டை முற்றியபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டி சகோதரர்களோடு ஒட்டிக் கொண்டனர்.  ரெட்டி சகோதரர்களை இழந்தால், ஆட்சியையே இழக்க நேரிடும் என்பதால்தான், பா.ஜ.க. தலைமையால் ரெட்டி சகோதரர்களை ஜஸ்வந்த் சிங்கைப் போலக் கழட்டிவிட முடியவில்லை.

கர்நாடகா மாநில மக்கள் குழந்தை குட்டிகளோடு, பசி-பட்டினியோடு வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபொழுது, பா.ஜ.க.வைச் சேர்ந்த இந்த 50-60 சட்டமன்ற உறுப்பினர்கள், கோவாவிலும், ஹைதராபாத்திலும் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.  முதல்வர் எடியூரப்பாவோ தனது பதவியைக் காத்துக் கொள்ள தில்லிக்குக் காவடி தூக்கிக் கொண்டிருந்தார்.  பா.ஜ.க. தலைமையோ மாநிலத்தின் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, கட்சிக்குள் நடந்து வந்த அதிகாரச் சண்டையைத் தீர்த்து வைப்பதில்தான் மும்மரமாக இருந்தது.  இதிலிருந்து பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை “இந்துக்கள்’புரிந்து கொள்ளலாம்.

ரெட்டி சகோதரர்கள், எடியூரப்பா முதல்வராவதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தனர்.  தனது அதிகாரத்திற்கு இடையூறாக இருந்து வரும் ரெட்டி சகோதரர்களைப் போட்டுப் பார்த்துவிடக் காத்திருந்த எடியூரப்பா, வெள்ளச் சேதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.  வெள்ளச் சேதத்தை ஈடுகட்டுவது என்ற முகாந்திரத்தில், இரும்புத் தாதுவினை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு லாரியின் மீதும் கூடுதலாக 1,000 ரூபாய் வரி விதிக்கப்பட்டது; மேலும், ரெட்டி சகோதரர்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் அனைவரும் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.  தனது அடிமடியிலேயே கைவைக்கத் துணிந்த எடியூரப்பாவிற்கு எதிராக ரெட்டி சகோதரர்கள் ஆரம்பித்த கலகத்திற்கு இரும்புச் சுரங்க முதலாளிகள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.

இரண்டு கோஷ்டிகளும் வெள்ளச் சேதத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முயன்றன.  எடியூரப்பா இரும்புத் தாது மீது கூடுதலாக வரி விதித்தார் என்றால், ரெட்டி சகோதரர்களோ வெள்ளம் பாதித்த பகுதிகளில் 500 கோடி ரூபாய் செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தைத் தன்னிச்சையாக அறிவித்தனர். இதன்மூலம், தம்மை மாநில அரசுக்கு மேலானவர்களாகவும், பெல்லாரி மாவட்டம் தமது சொந்த நிலப்பகுதி போலவும் காட்டிட முயன்றனர்.

இத்துணைக்கும் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்கும் உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களது சுரங்கங்கள் பெல்லாரியையொட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதியில்தான் அமைந்துள்ளன. ஆனால், அவர்களோ ஆந்திர மற்றும் கர்நாடகா மாநில அரசுகளில் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெல்லாரியில் இருந்து இரும்புத் தாதுவைக் கடத்துவதை “அங்கீகரிக்கப்பட்ட’ தொழில் போலவே நடத்தி வருகின்றனர். தற்பொழுது, பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்களின் ஒப்புதல் இன்றி அதிகாரிகளை இடம் மாற்றவோ, புதிதாக நியமிக்கவோ எடியூரப்பா முயலக் கூடாது என பேரம் பேசப்பட்டிருப்பதால், ரெட்டி சகோதரர்களை பெல்லாரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாகவே அங்கீகரித்துவிட்டது, பா.ஜ.க.

எடியூரப்பா-ரெட்டி சகோதரர்களிடேயே நடந்துவரும் இந்த அதிகாரச் சண்டை ஒருபுறம் பா.ஜ.க.வின் உட்கட்சிப் பிரச்சினையாக இருந்தாலும், இன்னொருபுறம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் அரசாங்கங்களின் மூக்கணாங்கயிறு யார் கையில் இருக்கிறது என்பதை மிகவும் தெள்ளத்தெளிவாக அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் (அதாவது அரசிற்கும்) முதலாளிகளுக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையே இருந்துவரும் நெருக்கமும் ஒத்துழைப்பும் புதிய விசயம் கிடையாது. டாடா-பிர்லாக்களின் கட்சி என அறியப்பட்ட கட்சிதான் காங்கிரசுக் கட்சி.  முன்னாள் மன்னர்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகளின் கட்சியாக உருவானதுதான் பா.ஜ.க.  முதலாளிகள்-ஓட்டுக்கட்சிகள்-அரசு ஆகியவற்றுக்கு இடையே இருந்துவரும் நெருக்கமான பிணைப்பு, நாடாளுமன்றம், அனைவருக்கும் ஓட்டுரிமை ஆகியவற்றின் மூலம் மூடிமறைக்கப்படுகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நீண்டநாட்களுக்கு முன்பிருந்தே அம்பலப்படுத்தி வருகின்றனர். தனியார்மயமும், தாராளமயமும் இந்த மூடுதிரைகூடத் தேவையில்லை என அம்மணமாக முதலாளிகளின் ஆட்சியை நம் முன்னே நிறுத்திவிட்டன என்பதுதான் புதிய விசயம்.

கர்நாடக மாநில ஆட்சியை முன்பு சாராய அதிபர்கள் தீர்மானித்தார்கள் என்றால், இப்பொழுது சுரங்க முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆந்திராவில், பாசனக் கால்வாய்களைக் கட்டும் உரிமங்களைப் பெறும் ஒப்பந்தக்காரர்களும்; அரியானாவில் ரியல்-எஸ்டேட் அதிபர்களும்; ஜார்கண்டில் சுரங்க முதலாளிகளும்; மகாராஷ்டிராவில் கரும்பாலை அதிபர்களும்தான் உண்மையில் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில், தி.மு.க. தலைமையே பெரும் தொழில் குடும்பமாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.  மேற்கு வங்க இடதுசாரிக் கூட்டணி ஆட்சியைக்கூட, அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிரூபன் சக்கரவர்த்தி ஒப்பந்தக்காரர்களின் ஆட்சி என்று அம்பலப்படுத்தி இருக்கிறார்.

கோடீசுவரர்கள்தான் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தல்களில் போட்டியிட முடியும் என்பதை கடந்த சில தேர்தல்கள் நமக்கு உணர்த்திவிட்டன. நாடாளுமன்றத்தின் மேலவை என்பது தரகு முதலாளிகளும், அவர்களது நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் நுழையும் புறவாசலாகிவிட்டது.  அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் தரகு முதலாளிகள், பங்குச் சந்தை சூதாடிகள், வியாபாரிகள் ஆகியோரின் கூடாரமாகிவிட்டதாக “இந்தியா டுடே’ இதழே அம்பலப்படுத்திப் புலம்பும் அளவிற்கு முதலாளிகளின், புதுப் பணக்காரக் கும்பலின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக நடைபெறும் ஆட்சி எனப் பசப்பிவந்த காலம் மலையேறிவிட்டது. இது, முதலாளிகளுக்காக, முதலாளிகளால் நடத்தப்படும் ஆட்சி என்பதைத் தனியார்மயம் போட்டு உடைத்துவிட்டது.  மாறி மாறி எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டாலும், இந்த நிலை மாறிவிடாது.  எனவே, உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசை எப்படி அமைப்பது என்பதைக் கண்டுணர்ந்து, செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

-புதிய ஜனநாயகம்’ டிசம்பர், 2009

ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். இவர்களின் பணபலத்தையும், அதிரடி அரசியலையும் தமிழக மக்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இச்சகோதரர்களை, “பெல்லாரியின் அழகிரி’ எனக் குறிப்பிடலாம்.  “அண்ணன்’அழகிரி கடந்த தேர்தல்களில் 500 ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து ஓட்டுக்களை வாங்கினார் என்றால், ரெட்டி சகோதரர்களோ கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தலின்பொழுது 1,000 ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில்விட்டு, ஓட்டுக்களை விலை பேசுவதில் “தேசிய’சாதனையே படைத்தனர்.

இத்துணைக்கும் ரெட்டி சகோதரர்கள் பரம்பரை பணக்காரர்களோ, மிட்டா மிராசுகளோ அல்லர்.  ஆந்திராவைச் சேர்ந்த சாதாரண போலீசுக்காரனின் வாரிசுகள்.  இவர்களின் திடீர் வளர்ச்சிக்குத் தனியார்மயமும், தாராளமயமும் எந்தளவிற்கு உதவின என்பது குறித்துத் தனிப் புத்தகமே போடலாம்.

ஆந்திர மாநிலத்தின் எல்லையையொட்டி அமைந்துள்ள கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திற்குப் பிழைப்பு தேடி வந்த ரெட்டி சகோதரர்கள், “”என்னோபிள் சேவிங்க்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்”என்ற பெயரில் ஒரு “பிளேடு’கம்பெனியை (கவுரவமாகச் சொல்ல வேண்டுமென்றால் சீட்டுக் கம்பெனியை)த் தொடங்கினர்.  அதன் மூலம் மக்களுக்கு நாமம் போட்டு அவர்கள் அடித்த பகற்கொள்ளை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் தேறும் எனக் கூறப்படுகிறது.  ரெட்டி சகோதரர்கள் இந்த மோசடிக்காக ஒருநாள்கூட கம்பி எண்ணவில்லை.  அதே சமயம், வழக்குகளில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வில் புகலிடம் தேடிக் கொண்டனர்.

1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.  அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர்.

200 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு டன் இரும்பு, 2,000 ரூபாயாக அதிகரித்ததற்கு ஏற்ப இவர்களின் கல்லாப்பெட்டியும் நிரம்பி வழிந்தது.  பா.ஜ.க. மட்டுமின்றி, காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆகியோரும் ரெட்டி சகோதரர்களின் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்துள்ளனர்.  இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க அரசு கொடுத்துள்ள வரிச் சலுகைகள் ஒருபுறமிருக்க, இரும்புத் தாதுவைச் சட்டவிரோதமாக வெட்டியெடுத்துக் கடத்துவதன் மூலம்தான் இவர்கள் பெரும் கோடீசுவரர்கள் ஆனார்கள்.  இந்த வியாபாரத்தின் மூலம் ரெட்டி சகோதரர்களுக்கு ஆண்டொன்றுக்கு 4,000 கோடி ரூபாய் இலாபம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய வீரப்பனைச் சுட்டுக் கொன்ற அரசு, இந்த இரும்புக் கடத்தலுக்காக இச்சகோதரர்கள் மீது ஒப்புக்காக வழக்கொன்றை உச்சநீதி மன்றத்தில் நடத்தி வருகிறது.  இந்த வழக்கில் இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறைத் தண்டனையும், 1,000 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம்.  மாநில அரசினையை கவிழ்க்கும் அளவிற்குப் பண பலமும், குண்டர் பலமும், அரசியல் செல்வாக்கும் கொண்ட இத்திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு, உச்சநீதி மன்றம் எம்மாத்திரம்?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் கட்டுரைகள்

 1. தோழர் அடுத்த நாட்டு பிரச்சனை நமக்கெதுக்கு? காவிரிக்கு நாம் மாற்று வழி தேட வேண்டுமே தவிர அடுத்த நாட்டு அக்க போர்களின் ஏன் தலையிடவேண்டும்? மீந்த நதி நீரை உரிய கட்டணம் கட்டணம் கட்டி தமிழர் நாட்டுக்குள் அனுமதி அளிக்கவேண்டும் அது குறித்து சிந்திபீர்களா? இவண் ..
  ராஜ் குமார் ஊர்வலத்தால் பாதிக்க பட்ட ஒருவன்

 2. சொல்லும் விஷயம் நன்மை. செல்லிய விதமோ அருமை்
  எளிதிய விதமோ எளிமை. கருத்தில் தெரிவது வளமை.
  மொத்தத்தில் உமது பதிவு புதுமை.

 3. நீங்க எல்லாம் ஒரு மனிதர் உங்களுக்கு எல்லாம் ஒரு நாடு , முதலில் பெரிய அணுகுண்டு ஒன்று செய்து உங்கட மண்டையில் போடுங்கள் .

 4. மாத வருமானம் வாங்கும் ஊழியர்கள் வருமானவரி கட்டுரார்கள். இந்த அரசியல் அட்டுழியங்கள் என்று தான் முடியும். இதை கண்காணிக்க தனி துறை வேண்டும்.

 5. ராஜீவ்காந்தி கொலையின் உண்மையான குற்ரவாளிகள் தமிழீழ விடுதலை புலிகள் இல்லை என்பது உலகறிந்த உண்மை .
  உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியுமா

  • இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்…

   (1)1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறி பெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

   (2)பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

   (3)ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

   (4) சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

   (5)தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

   (6)1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.அதை ஏன் விசாரிக்கவில்லை..

   (7) வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?அவர்களை விசாரிக்க முதலில் மனு போட திரணி உண்டா இவர்களுக்கு?

   (8) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது காங்கிரசு களவாணிகள் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?சிறிபெரும்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. சிறி பெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்..

   (9) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

   (10) கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த பன்னாட்டு அரசியல் மாமா சப்புரமணி சுவாமி “நான் டில்லியிலே இருக்கிறேன்” .. என்று புளுகியது ஏன்?

   (11) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? “ஒழிந்தான் ராசீவு” என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே போபர்சு ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

   (12) நரி மூஞ்சி – நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

   (13) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலசுதீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

   (14) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை – சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

   (15) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

   (16) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

   (17) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் கருநாடக போலீசார் சாகடித்தது எதற்காக?

   (18) புலனாய்வு செய்த புண்ணாக்குகளிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

   (19) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் விசாரிக்கவில்லை.

   (20) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

   (21)சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?

   (22)திருபெரும்புதூர் உள்ள காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள்.
   லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
   இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?

   (23)திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
   ஆனால் இதுவரையில் மரகதம் சந்திரசேகர் மௌனமாக இருக்கிறார். ஏன்?

   (24) மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?

   (25)ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?

   (26) உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?

   (27) வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?

   -மூளையை மழுங்கடித்துக் கொண்டுள்ள முண்டங்களே விடை கூறுங்கள்..

   இன்றைக்கு தமிழகத்தில் வீச்சருவாள் வெட்டுக்கம்பு அடிதடி கலாச்சார அரசில் நடத்தும் காங்கிரசார்.. விடுதலைப்புலிகளுக்கு எதிராக வாச்சவமால்களை விடும் காங்கிரசார்.. தங்களது ஆட்சிக்காலத்தில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா? ஆல்லது இந்திய மட்டத்திலேயாவது நேர்மையான நீதியாளர்களைக் கொண்டு நீதியான ஒரு விசாரணையை நடத்த தயாரா?

   • நியாயமான ஆணித்தரமான கேள்விகள்
    அக மொத்தத்தில் கொலையாளிகள் இந்தியர்களே

    • தமிழன், நகுலன்,

     அது அப்படித்தான். ஊடகங்கள் என்ன சொல்கிறதோ அதையே நம்பி, நம்பி பழகிப்போய்விட்டது. இனிமேல் இப்படி கேள்வியெல்லாம் கேட்டாலும் பதில் வராது. //இந்திய அமைதிப்படை ஈழத்தில் இழைத்த கொடுமைகளை விசாரிப்பதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பதற்கு தயாரா//
     சரியாப்போச்சு, ராஜீவ்காந்தி கொலைக்கு மட்டும் தான் விசாரணை, கமிஷன், கைது, தண்டனை எல்லாம். ஆனாலும், அவர்கள் யாரையெல்லாம் சம்பந்தம் இல்லாவிட்டாலும் விசாரிக்க வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்களை மட்டும் தான் விசாரிப்பார்கள். விரும்பாவிட்டால், சம்பந்தம் இருந்தாலும் விசாரிக்கமாட்டார்கள். ஈழத்தமிழன் செத்தால் அதுக்கெல்லாம் ஒரு விசாரணையா? NO, NO , this is too much. ஈழத்தமிழனுக்கு என்றால் எப்போதும் அறம் பிறழும். நீதி பிழைக்கும். அதுதானே விதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க