Sunday, September 24, 2023
முகப்புஇலக்கிய அறிமுகம் 2 - எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர்
Array

இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர்

-

இலக்கிய அறிமுகம் – 2 – எர்னெஸ்ட்டோ கார்டெனல் மார்ட்டினெஸ் (Ernesto Cardenal Martinez)

vote-0121925 சனவரி 20ஆம் நாளிற் பிறந்த கார்டெனால் வசதி படைத்த குடும்பத்திற் பிறந்தவர். அவர் முதலில் தனது தாய் நாட்டிலும் பின்பு மெக்சிகோவிலும், நியுயார்க்கிலும் இலக்கியத்துறையில் தனது கல்வியைத் தொடர்ந்தார். சொமோஸாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக 1954இல் நடந்த கிளர்ச்சியில் பங்கு பற்றினார். அதன் தோல்வியின் பின்பு அமெரிக்கா சென்று கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தார்.

மெக்சிகோவில் சில காலம் வாழ்ந்ததன் பின்பு நாடு திரும்பித் தனது ஊரான கிரானேடாவில் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். சொலன்டினாமே தீவில் சன்டினிஸ்ட்டா இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. அங்கிருந்து அவர்கள் 1977இல் ராணுவ முகாம் ஒன்றின் மீது தொடுத்த தாக்குதலால் முழுத்தீவுகளுமே சொமோசாவின் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டன.

அண்டை நாடான கொஸ்ட்டரீக்காவுக்குத் தப்பிச் சென்ற கார்டெனெல் 19 யூலை 1979இல் சான்டினிஸ்ட்டா, நாட்டை விடுதலை செய்ததை ஒட்டி நாடு திரும்பினார். அப்போது முதல் அமெரிக்கா உருவாக்கிய உள்நாட்டுப் போரின் விளைவான பொருளாதாரக் காரணங்களால் பண்பாட்டு அமைச்சு மூடப்படும் வரை, பண்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார்.

கருத்து வேறுபாடுகளால் 1994இல் சான்டினிஸ்ட்டா அமைப்பினின்று விலகிய போதும் தன்னை ஒரு இடதுசாரியாகவே அடையாளப்படுத்தி வந்துள்ளார். 1983ஆம் ஆண்டு சான்டினிஸ்ட்டா அமைச்சரவையினின்று விலகும்படி போப்பாண்டவர் இட்ட ஆணையை ஏற்க மறுத்த கார்டெனல் தொடர்ந்தும் பாதிரியாராக இருக்க இயலாது போயிற்று.

இலக்கிய விருதுகள் பல பெற்ற கார்டெனெல் 2005ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நியமிக்கப்பட்டு அதைப் பெறாமை அவருக்கு ஒரு தகுதியாகக் கூட இருக்கலாம். ஏனெனில் அவர் சிலரது கருத்தில் லத்தின் அமெரிக்காவில் வாழும் அதி முக்கியமான கவிஞராவார்.

பிறர் அவரது கருத்துக்களுடன் முரண்படுகின்றனரேயன்றி அவரது கவித்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அறியப்பட்ட அவரது பதினான்கு கவிதைத் தொகுதிகட்கும் மேலாக எழுதப்படிக்கத் தெரியாத ஒரு சமூகமாயிருந்த சொலன்டினாமோ தீவு மக்கள் மத்தியிலிருந்து, பல வயதுகளையுமுடைய புரட்சிக் கவிஞர்களை உருவாக்கியமை அவரது சமூக நோக்கிற்கு ஒரு வலிய சான்றாகும்.

அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. எனினும் அவை ஏகப்பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. ஒரு கவிஞராகவும் அரசியற் சிந்தனையாளராகவும் அவர் நிக்கராஹூவாவிலும் லத்தின் அமெரிக்காவிலும் மிக முக்கியமான ஒருவராகவே கொள்ளப்படுகிறார்.

——————————

எர்னெஸ்ட்டோவின் கவிதைகள்

57வது தோத்திரம்

சட்டத்தினதும் ஒழுங்கினதும் காவலர்களே
உங்களது சட்டம் ஒரு வர்க்கத்தினரின் சார்பானதில்லையா?
தனியார் உடைமை காக்க குடிசார் சட்டம்
ஒடுக்கப்பட்டோரை வதைக்கக் குற்றச் சட்டம்

நீங்கள் கூறுஞ் சுதந்திரம் மூலதனத்தின் சுதந்திரம்
உங்கள் ‘சுதந்திர உலகம்’ சுதந்திரமான சுரண்டல்
உங்கள் சட்டம் துப்பாக்கியின் சட்டம், உங்கள் ஒழுங்கு ஒரு காடு
பொலிசார் உங்களுடையோர்
நீதவான்கள் உங்களுடையோர்

சிறைகளிலே பெருங்காணிக்காரரோ வங்கி உரிமையாளர்களோ இல்லை
முதலாளிகள் தம் தாயின் கருப்பையிலேயே தவறாகிப் போகிறார்கள்
பிறந்த நாள் முதலே வர்க்க முற்சாய்வுடையோராகிறார்கள்
புடையன் பாம்பு விஷச்சுரப்பியுடன் பிறக்கிறது
பெரிய சுறா மனிதரைத்தின்னவே பிறக்கிறது

ஓ தேவனே இந்த நிலைமைக்கு ஒரு முடிவு கட்டும்
ஆளுங் கும்பலின் பற்களைப் பிடுங்கும்
மலசல கூடத்து நீர்போல அவர்களைக் கழுவித் தள்ளும்
பூச்சிக்கொல்லியின் கீழுள்ள புல்போல அவர்கள் வதங்கட்டும்

புரட்சி வரும்போது அவர்களே புழுக்கள்^ ஆவார்கள்
அவர்கள் உடலின் உயிர் கலகங்களில்ல, நோய்க்கிருமிகள்
புதிய மனிதரின் கையில் அழிய வேண்டிய விகாரங்கள்
முட்களை விதைக்கு முன் உழவுயந்திரங்கள் அவர்களைக் களையட்டும்

விசேசமாக ஒதுக்கப்பட்ட மன்றங்களில்
மக்கள் களிப்பை அனுபவிக்கட்டும்
தனியார் கம்பெனிகளை அவர்கள் தம் உடைமையாக்குவர்
மக்கள் நீதிமன்றங்களில் நியாயமானோர் மகிழ்வு பெறுவர்

பெரும் நகரச் சதுக்கங்களில் நாம்
புரட்சியின் ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடுவோம்
இருக்குங் கடவுள் பாட்டாளிகட்குரியவர்

———–
^புழுக்கள்: கியூபாவின் புரட்சியையடுத்து வெளியேறி அமெரிக்காவுக்கு ஓடியவர்களைக் குறிக்கும் சொல்

__________________________________________

மார்க்கச்சுக்களின் விலை

புரட்சி பற்றி என் மருமகள் ஒருத்தி முறைப்படுகிறாள்
ஏனெனில் மார்க்கச்சுக்களின் விலை அதிகம்
எனக்கு முலைகள் கொண்டிருந்து பழக்கமில்லை
ஆனாலுங் கச்சுக்கள் இல்லாமல் முலைகள் சமாளிக்கும் என நினைக்கிறேன்

என் நண்பன் ரஃபாயெல் கொர்டோவா
எஸ்கிபுலாஸ் கிராமத்தின் அருகே வாழ்கிறான்
வீதி வழியே பல மரண ஊர்வலங்கள் சிறிய சவப்பெட்டிகளுடன்
ஒவ்வொரு மத்தியானமும் நாலு, ஐந்து, எட்டு மரண ஊர்வலங்கள் என்று
எனக்கு சொல்லியிருக்கிறான்.
முதியோர் இவ்வளவுக்கு அடிக்கடி மரிப்பதில்லை
சில காலம் முன்பு எஸ்கிபுலானின் பிரேதப் பெட்டிக் கடைக்காரன்
அவனிடம் வந்தான்
“வைத்தியரே எனக்கு உங்களிடம் உதவி வேண்டும்
எனக்கு இப்போது மரணங்கள் இல்லை”
முன்னாட்களில் மலிவான மார்க்கச்சைகளிருந்தன
இப்போது எஸ்கிபுலாஸீல் மரண ஊர்வலங்கள் மிகக் குறைவு
நீயே சொல்லு எது பரவாயில்லை?

_________________________________________

5வது தோத்திரம்

ஓ தேவனே என் சொற்களைக் கேளும்
என் முனகல்களைக் கேளும்
என் ஆட்சேபத்தைக் கேளும்
ஏனெனில் நீர் சர்வாதிகாரிகளுடன் சினேகமான கடவுளோ
அவர்களது அரசியலை ஆதரிப்பவரோ
அவர்களது பிரசாராத்தாற் பாதிக்கப்பட்டவரோ அல்ல,
நீர் சண்டியர்களுடன் இணங்குபவரும் அல்ல

அவர்களது பேச்சுக்களிலோ
பத்திரிகை அறிக்கைகளிலோ நேர்மை இல்லை
யுத்த உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே
தம் உரைகளிற் சமாதானம் பற்றிப் பேசுகின்றனர்
சமாதான மாநாடுகளிற் பேசிக்கொண்டே
இரகசியமாகப் போருக்கு ஆயத்தமாகின்றனர்
இரவிரவாக அவர்களது பொய் சொல்லும் வானொலி இரையும்
அவர்களது மேசைகள் மீது பாதகத் திட்டங்களும்
கொடிய நடவடிக்கைகளும் அடுக்கப்பட்டுள்ளன
ஆயினும் நீர் என்னை அவர்களின் திட்டங்களினின்று காப்பீர்
அவர்கள் துப்பாக்கி வாய்களாற் பேசுவர்
அவர்களது ஒளிரும் நாக்குகள் துப்பாக்கிச் சனியன்கள்

ஓ தேவனே அவர்களை அழியும்
அவர்களது அரசியலை முறியடியும்
அவர்களது அறிக்கைகளைக் குழப்பும்
அவர்களது வேலைத்திட்டத்தை கவிழும்
எச்சரிக்கைச் சங்கின் வேளையில் நீர் என்னுடனிருப்பீர்
குண்டு விழும் நாளில் நீர் என் புகலிடமாயிருப்பீர்
அவர்களது பொய்யான விளம்பரங்களையும்
அரசியற் பிரச்சாரத்தையும் நம்பாதவர்களை ஆசீர்வதிப்பீர்
கவச வாகனங்கள் போன்று
உம் அன்பினாற் சூழுவீர்.

_______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. நிக்காரகுவா மக்கள் கவிஞரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. கவிதை மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் சற்று பழைய பாணியாக இருக்கிறதே…

  • ரியல் என்கவுண்டர், நன்றி.
   மூலக் கவிதையின் மொழிநடை அது கூறுகிற செய்தி போன்ற பலவற்றைக் கருத்தில் கொண்டே தமிழாக்கத்தின் மொழி நடை அமைகிறது.
   அதைவிட, ஒவ்வொருவரும் கவிதையை விளங்கிக் கொள்கிற முறையும் தமிழாக்கத்தைப் பாதிக்கிறது.

 2. இவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறார்கள்.ராஜதுரை-கீதா மொழிபெயர்த்த மூன்றாம் உலக கவிதைகள் உட்பட வேறு சிலவற்றில் இவர் கவிதைகளை மொழிபெயர்ப்பில் வாசித்ததாக நினைவு.சாண்டினிஸ்டாக்கள், விடுதலை இறையியல் குறித்து வினவின் கருத்து என்ன.

  • அன்னானி, பெயரோடு வந்து பதிவிட்டால்லதான் பதில் சொல்வது சரியானது. போகட்டும். சான்டினிஸ்ட்டாக்கள் நிக்காரகுவாவில் ஏகாதிபத்திய ஆதவரவு சர்வாதிகாரிகளை எதிர்த்து போரிட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கம். தற்போது இந்த தன்மை குறைந்து சமரசம் செய்து கொண்டு இருக்கிறார்கள். விடுதலை இறையியல் என்பது தென்னமெரிக்க நாடுகளில் கம்யூனிசத்திற்கு மாற்றாக ஏகாதிபத்தியங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சித்தாந்தம். தென்னமெரிக்காவில் ஏகாதிபத்திய ஆதவரு சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போது கம்யூனிசம் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இது உருவாக்கப்பட்டது. எனினும் இத்தகைய சிந்தனை உடைய பாதிரியார்களும் கூட சர்வாதிகாரிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

   • வினவு சார், மற்ற நாடுகளின் கவிஞர்களை பற்றி எழுதுவது இருக்கட்டும், நம்ம நாட்டு ஆளுங்கள பத்தி எதாவது எழுதி இருக்கீங்களா? இருந்தா கொஞ்சம் லிங்க் சொல்லுங்க. 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க