Wednesday, September 27, 2023
முகப்புதுபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!
Array

துபாய் : உல்லாசபுரி சுடுகாடானது!

-

vote-012புர்ஜ் துபாய் என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் “ஜுமெரா பாம்” எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம் – எனக் கனவுலகை கண்முன்னே காட்டிய துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் உறைந்து கிடக்கிறது அந்நாடு.

ஐக்கிய அரபுக் குடியரசு எனப்படும் அமீரக சமஷ்டி கூட்டமைப்பிற்குள் ஒரு அங்கம்தான் துபாய். கடலில் மணலைக் கொட்டி, விரிந்த ஈச்சமர வடிவில் ஒரு தீவை உருவாக்கி, அதில் அடுக்கு மாடி ஆடம்பரக் குடியிருப்புகள்; இந்த உல்லாசத் தீவில் வீடு வாங்குவது ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்து என்ற மாயையில் உலக மகா கோடீசுவரர்கள் அதில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர். ஈச்சமர வடிவத் தீவுத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “துபாய் வேர்ல்ட்” என்ற புதிய வீட்டுமனைத் திட்டத்தை துபாய் அரசு கொண்டு வந்தது. உலகப் பட வடிவில் உருவாக்கப்படும் இப்புதிய தீவில் அடுக்குமாடி ஆடம்பரக் குடியிருப்புகள் கட்ட, கட்டுமானக் கழகங்களும் நிதி நிறுவனங்களும் போட்டி போட்டன. நகீல் என்ற அரசின் துணை நிறுவனம் இத்திட்டத்திற்கான கடன் பத்திரங்களை “சுகுக் பாண்டுகள்” என்ற பெயரில் 2004-இல் வெளியிட்டது. அது 2009-இல் முதிர்வடைவதால் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரவேண்டும். ஆனால், நகீல் நிறுவனத்தால் கடனைத் திருப்பித் தர முடியவில்லை.

துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் 80 பில்லியன் டாலர் (ஏறத்தாழ 4,00,000 கோடி ரூபாய்) கடன் சுமையால் தத்தளிக்கிறது. பணக்கார நாடாகச் சித்தரிக்கப்படும் துபாய், இந்தக் கடனையும் அதற்கான வட்டியையும் கட்ட முடியாமல் அனைத்துலக நாடுகளிடம் ஆறு மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இந்தச் செய்தி பரவி, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதும் தடதடவென ஆரம்பித்து விட்டது சரிவு. ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் தமது முதலீடுகளை அவசரமாக திரும்ப எடுத்துச் செல்லத் தொடங்கின. முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும்போது மீண்டும் சரிவு ஏற்பட்டது.

ஏழு பெருநகர அமீராட்சியும் தனித்தனி பட்ஜெட்டும் கொண்டுள்ள ஐக்கிய அரபுக் குடியரசில் ரஸ் அல் கைமாஹ், அபுதாபியைப் போல துபாயில் எண்ணெய் வளம் இல்லை. பெட்ரோலியம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வற்றத் தொடங்கிவிட்டதால், வீட்டுமனைத் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையில் துபாய் அதிக அழுத்தம் கொடுத்தது. கொளுத்தும் வெய்யிலில் பாலைவனத்தின் நடுவேயுள்ள முகாம்களில் வாழும் ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், தொழிற்தேர்ச்சி பெற்று அதிக சம்பளம் வாங்கி நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடும்பத்தோடு வாழும் நடுத்தர வர்க்கத்தினர், கோடானுகோடிகளை முதலீடு செய்துள்ள உலகின் பணக்கார வர்த்தகர்கள் எனப் பல்வேறு பிரிவு வெளிநாட்டவர்கள் துபாயில் குடியேறியுள்ளனர். துபாயின் மொத்த மக்கள்தொகையில் இவர்கள் ஏறத்தாழ 80 சதவீதம். துபாயில் கட்டப்படும் ஆடம்பர வீடுகளை வாங்குபவர்களுக்கு, அந்நாட்டில் நிரந்தரமாக வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் அளிக்கப்படும் என்று அரசு ஆசை காட்டியது. இதனால் நடுத்தர வர்க்கமும் பெரும் வர்த்தகர்களும் உல்லாசிகளும் இத்தகைய புதிய ஆடம்பர வீடுகளை வாங்கப் போட்டி போட்டனர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கியில் கடன் வாங்கியாவது வீடு வாங்க முண்டியடித்தனர்.

கடல் நடுவே பேரீச்சை மர வடிவில், உலக வரைபட வடிவில் என்றெல்லாம் செயற்கைத் தீவுகளை உருவாக்கி, அவற்றில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தரும் திட்டங்களை பன்னாட்டுக் கட்டுமானக் கம்பெனிகள் அறிவித்தன. கட்டடங்களை எழுப்பும் முன்னரே வீடுகளை விற்கும் திட்டம் தொடங்கியது. முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். நம்ம ஊரில் தேக்குப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் ஒரு மோசடித் திட்டத்தை அறிவித்து, இதோ உங்கள் தேக்கு கன்று வளர்ந்து வருகிறது என்று ஒரு புகைப்படத்தை அனுப்பி ஏய்த்ததைப் போலத்தான், வெறும் கட்டடப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கற்பனை வீட்டுக்காகப் பலரும் பணத்தைக் கட்டினர். நடுத்தர வர்க்கத்தினர் வங்கிகளில் கடன் வாங்கிக் கட்டினர்.

“இன்றைய உலகில் வீட்டுமனை-கட்டடத் தொழிலில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது. வீடுகளின் விலை குறைந்ததாக வரலாறில்லை” என்ற பங்குச்சந்தை சோதிடர்கள் கூறும் அருள்வாக்கை பலரும் நம்பினர். பங்குச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கப்பட்டு வீட்டுமனை விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்த அனைத்துலக ஏகபோக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கோடிகோடியாகக் கொள்ளையடித்த பிறகு, உண்மை மதிப்பு வீழ்ச்சியடையத் தொடங்கியது. முதலீடு செய்த வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வரப்போகும் வீழ்ச்சியை அறிந்து முன்கூட்டியே தமது முதலீடுகளை திரும்ப எடுத்துச் சென்றன. இதனால், கடன் சுமை அதிகரித்து துபாய் வேர்ல்டு என்ற அரசு சார்பு நிதி நிறுவனம் திவாலாகியது.

எல்லாம் இன்று குப்புற விழுந்துவிட்டது. பல நூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரைகுறையாக எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. ஆடம்பர வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கொட்டப்பட்ட குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கடன் கொடுத்த வங்கிகள் சும்மாயிருக்குமா? கடனை கட்டாமல் தப்பிக்க முடியாது என்று எச்சரித்து வசூல் வேட்டையைத் தீவிரப்படுத்துகின்றன.

மறுபுறம், குப்புற விழுந்துவிட்ட பொருளாதாரத்தால் துபாயில் வேலை இழப்பு தீவிரமாகியுள்ளது. இலட்சக் கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வருகின்றன. துபாய் சட்டப்படி, வேலையிழந்தவர்களின் தொழில் விசா ரத்து செய்யப்படும். ஒரு மாத இடைவெளியில் அவர்கள் வேறு வேலை தேடிக் கொண்டால் அந்நாட்டில் இருக்க முடியும். இல்லையேல், வெளியேற்றப்படுவர். இதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரைச் சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில் கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர் முதலானோர் வீடு வாங்கும் ஆசையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்த வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்துதான் கடனை அடைக்க வேண்டும். இதனால் கடனை அடைக்க வழிதெரியாத பலர் நாட்டைவிட்டுத் தப்பியோடுகின்றனர். எஞ்சியிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு, எவரிடமும் விற்க முடியாத தமது விலையுயர்ந்த கார்களையும் உடமைகளையும் அங்கேயே போட்டுவிட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலையத்தில் வாகன நிறுத்திமிடத்தில் கைவிடப்பட்டு யாரும் உரிமை கோராத கார்கள் மலைபோல குவிந்து கிடக்கின்றன. வீடுகள் காலியாகி, வீட்டுமனை விலை சரிந்து ஆளரவமற்ற தெருக்கள் பெருகி வருகின்றன.

“இருப்பினும் இது தற்காலிக நெருக்கடிதான். நிலைமை படிப்படியாக மாறி வருகிறது. அபுதாபி அமீரகம் கடன் கொடுத்து மீட்டு விட்டது. துபாயின் கனவுலகம் மீண்டும் ஒளிரும்”என்று ஊடகங்கள் ஆரூடம் கூறி வருகின்றன. துபாய் அரசாங்கம் புதிய ஊடக சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதே இதற்குக் காரணமாகும். இச்சட்டத்தின்படி, துபாயில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக எந்த ஊடகமும் செய்தியை வெளியிடக் கூடாது. மீறினால், இலட்சக்கணக்கில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எல்லா ஊடகங்களும் வதந்திகளையே பரப்பி வருகின்றன. ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

–          புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. உலக முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்கும் பதிவு.டவுசர் கிழிந்து போன அமெரிக்க ரௌடியை அம்மணமாக ஓட விடும் காலம் வெகு தொலைவில் இல்லை…

  2. நல்ல தகவல்களைக் கொண்ட கட்டுரை! வாழ்த்துக்கள்!

    ஆனால், இந்த பொருளாதார வீழ்ச்சியில் கம்யூனிச நாடான சீனாவும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கிறதே ? உங்கள் கூற்றுப் படி அந்நாடுகள் தப்பித்திருக்க வேண்டுமே ?

    • சீனா கம்மூனுச நாடு இல்லை இல்லை இல்லவே இல்லை, இதை வினவு தளத்தில் எத்தனை பேர் எத்தனை முறை கூப்பாடு போட்டாலும் எவர் காதிலுமே விழ மாட்டேங்குதே.

  3. This story is true in certain lines and not all. With regard to Dubai it is true but not for America. America the country as a whole did not become insolvent.

    Still USA is No1 in research or space technology or nano or solar techno. Dubai’s today posisition was predicted and well known to all in 2000 itself.

    • //Dubai’s today posisition was predicted and well known to all in 2000 itself.//
      அப்புறம் 10 ஆண்டுகளில் ஏன் தடுக்கவில்லை அல்லது தடுக்கமுடியவில்லை?

    • துபாய் வீழ்ந்து விடவில்லை. அளவுக்கு அதிகமான வளர்ச்சி. தேவைக்கு அதிகமான விரிவாக்கம். துபாய் இப்போது நார்மல் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது. அமெரிக்கா அப்படி அல்ல. அனைத்து உலக பிரைட்சனைக்கும் அமெரிக்கா தான் காரணம்.

  4. முதலாளித்துவத்துக்கு 300 ஆண்டு காலம் வயது இருக்குமா! இதற்குள் ஆயிரக்கணக்கான வங்கி திவால்கள்! பத்தாண்டுகளுக்கொருமுறை சுழற்சிமுறையில் வரும் தேக்கம்! நாடு பிடிக்கும் போட்டியில் மிகப்பெரும் சேதங்களை விளைவித்த இரண்டு உலகப்போர்கள்! எவ்வளவு சுரண்டல்! எவ்வளவு பஞ்சம்! ஒரு பக்கம் ஆயிரம் தலைமுறைக்கு சொத்து! அதே நாட்டில் அடுத்த வேளை சோற்றுக்கு திண்டாட்டம். இதுதான் முத‌லாளித்துவ‌த்தின் ல‌ட்ச‌ண‌ம். முத‌லாளித்துவ‌ம் தோற்றுக்கொண்டே இருக்கிற‌து. க‌ட‌ந்த‌ ஆண்டு த‌லை குப்புற‌ க‌விழ்ந்து கிட‌க்கிற‌து. இதைப் ப‌ற்றி பேச‌ ம‌றுக்கிறார்க‌ள். ஆனால்… சோச‌லிச‌ம் க‌ட்டிய‌மைத்த‌ சில‌ நாடுக‌ள், சில‌ காலமே இருந்தாலும், ‍ எவ்வ‌ள‌வு முன்னேற்ற‌ங்க‌ள். வ‌ள‌ர்ச்சிக‌ள். க‌ம்யூனிச‌ம் தோற்று போச்சு! என … முத‌லாளிக்கு வ‌க்கால‌த்து வாங்க‌ வ‌ரிசை க‌ட்டி நிற்கிறார்க‌ள் எல்லா வ‌ர்க்க‌ங்க‌ளிலும்.

    • திஸ் இஸ் வெரி குட் கொஸ்டின், அதியமான் ஜல்தி ஆவோ… 

      • அதியமான் அவர்கள் வருவதற்கு முன்னால் சன் டிவி நியூஸ் பார்த்து விட்டு வரவும்.indru ஹைதியில் ஒரு வேலை உணவுக்காக வீதியில் இறங்கி போராடும் ‘பயங்கரவாதி’கள் பற்றி லிங்க்கு குடுக்க வசதியா இருக்கும்…

    • ///சோச‌லிச‌ம் க‌ட்டிய‌மைத்த‌ சில‌ நாடுக‌ள், சில‌ காலமே இருந்தாலும்,///
      நன்றாக கவனிக்கவும்,சோச‌லிச‌ம் க‌ட்டிய‌மைத்த‌ சில‌ நாடுக‌ளுக்கு அல்பாயுசுதான்.

      • நான் மணி

        த‌னது பழைய எதிரிகளுடன் கள்ளக்கூட்டு வைக்காமல் சொந்தக் காலில் முதலாளித்துவம் ஓரு பத்தாண்டு கூட முழுவதும் உலகத்தில் இருந்த்தில்லை தெரியுமா….

  5. //முன்கூட்டியே பணத்தைத் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால், குடியேறுவதற்கு ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். // செவிவழி செய்திகளை வைத்து இந்த கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முதலில் செய்திகள் தவறானவை. இதில் வீடுக்கு தவணை முறையில் எந்தவிதமான தவறும் இதுவரை நடக்கவில்லை. இங்கு சொன்னால் சொன்ன தேதியில் வீட்டை கொடுத்து ஆகவேண்டும், அதுபோல் படத்தில் காட்டியது போல் வீடும் இருந்தாகவேண்டும், இல்லை என்றால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் பைன் அதிகம் ஆகவே இதுவரை பணம் கட்டியவர்கள் யாரும் ஏமாறவில்லை!

    • அப்படியானால் கட்டுமானப்பணிகள் வெற்றிகரமாகத்தொடர்கின்றனவா? அப்படியானால் ஒரு பிரச்சினையும் இல்லை என்றுதானே அர்த்தம்! ஏதோ இடிக்கிறதே!!!

      • ஏற்கனவே ஒப்புக்கொண்ட கட்டுமானப்பணிகள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. புதிதாய் ஏதும் ஆரம்பிப்பது இல்லை.

        //ஏதோ இடிக்கிறதே!!!// ஒருவேளை கொத்தனார் ஒழுங்கா பூசி மறைக்காமல் விட்டல் கம்பி இடிக்குதோ?:)))

  6. What ever reported in this article is correct.This facts are already telecasted in some channels of tamilnadu; particularly makkal tv.Recession,4 lakh crores loan,6 months time requested for repayment of Interest all these facts are correct.Oneday The share market also faced dip due to this news. Rajendran

  7. இந்தக் கட்டுரை 3 மாதங்களுக்கு முன்னால் எழுதப்பட்டதென்று நினைக்கிறேன். துபாயில் வேலையிழப்பு ஏற்படுவது உண்மையே. ஆனால் செய்திகளில் பார்க்கும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
    துபாய் வீழ்வதில் ஏன் அவ்வளவு மகிழ்ச்சி ஊடகங்களுக்கு?
    துபாய் வீழ்ந்தால் வேலையிழப்பதில் பெரும்பாலானோர் எளியவர்களே 🙁

  8. மிகவும் மிகைபடுத்தப்பட்ட கட்டுரை.
    கட்டுமான தொழிலில்தான் தேக்கம்.
    மற்ற தொழில்களில் எந்த பிரச்னையும் இல்லை.
    வீணாக வதந்தியை பரப்பாதீர்கள்.
    முரளி.
    துபாய்.

    • மிகைப்டுத்தியதாக தெரியவில்லை, jadel ali port ல் வந்து பார்க்கவும் ஒரு container storage area முழுவதும் காளியாகி கிடக்கிரது. trailor வாடகை எல்லாம் பாதியா குறைந்திருக்கு ( எ.கா: 450.AED யில் இருந்து 200 AED) காரனம் கேட்டால் வேலை குறைவு. (பல நிறுவனங்கள் தொடர்பு வுடையவர்கள் அவர்கலே)

      முகில்
      ஜபிலாளி, துபாய்

  9. ஈழத் தமிழர் உரிமைப் போராத்தில் தமிழ் நாட்டில் முக்கிய பங்கு வகித்த ம.க.இ.க இன்றைய இலங்கைச் சூழல் குறித்து எழுதாமல் மெளனம் சாதிப்பது வருத்தம் தரும் விடயம். ஒரு கட்டுரையாவது போடக்கூடாதா??

  10. துபாய் என்பது ஒரு தனி நாடு கிடையாது. ஐய்க்கிய அமீரகத்தின் ஒரு அங்கம். தமிழ் நாட்டிற்கு ஒரு பிரசனை வரும் போது இந்தியா எப்படி உதவுமோ அதே போல் அபு தாபி உதவி செய்து கொண்டு வருகின்றது. ஆட்குறைப்பு, விற்பனை மந்தம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் நீங்கள் மிகைப்படுத்துகின்றீர்கள்.

    வேலை இழந்தவர் அனைவரும் பெரும்பாலும் கட்டிடத் துறையைச் சேர்ந்த கடை நிலை ஊழியர்கள்தான். இவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எத்தனையோ குடும்பங்களின் கதியை நினைத்து வருந்துவதை விட்டு விட்டு….

    • நன்பா
      இந்தியா தமிழ்நாட்டுக்கு உதவுரகதை எல்லம் இங்கே கிடையாது, emirates tower. dubai airport, DNATA இது எல்லாம் ஏற்கனவே அபுதாபியிடம் அடகு வைத்தாயிற்று. புதிய செய்தி Burj Dubai ஏன் Burj khalifa என்று மாரியது என்று சிந்தித்துப்பார்க்கவும்.

  11. இடுகையில் மிகைப் படுத்தல் மட்டுமே தெரிகிறது.புதிய கட்டிடங்களின் தேக்கம்,சில துரித உணவு கடைகள் திடீர் என காணாமல் போனவை தவிர மாற்றங்கள் எதுவும் இல்லை.துபாய்,மற்றும் வளைகுடா நாடுகளின் வெற்றி என்பதும்,தோல்வி என்பதும் எண்ணை வளத்திலும்,அதன் மாற்று தளத்திலும் இருக்கிறது.இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு எரிபொருள் உலக மாற்றம் எதுவும் வருவதாக தெரியவில்லை.துபாய் வெல்லும்.

  12. சமீபத்தில் ஒரு கட்டுரையில், துபாயின் பொருளாதாரம் இப்போது பரவாயில்லை என்று படித்தேன்!

  13. துபாயின் நிலைமை – கட்டுரை ஆதாரங்களோடு எழுதப்பட்டிருக்கிறது. கட்டுரை மிகை மதிப்பீடு, வதந்தி என இந்தியாவில் இருந்து கொண்டோ, துபாயில் இருந்துகொண்டே ஒற்றை வரியில்… அல்லது ஒரு வார்த்தையில் சொல்வது சரியல்ல!. அதற்கான செய்திகளை திரட்டி பின்னூட்டமாக இட்டால்… அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

  14. ஐயா..துபாயில் பொருளாதார வீழ்ச்சி,,உண்மையே..ஆனால் அங்கு இருக்கும் எங்களுக்கு தான அதோட முழு நெலவரமும் தெரியும்…இங்க இருந்து நாங்க படிக்கிர,,தின மலர் போன்ற பத்திரிக்கைகள்,கதைதான் எழுதுராங்க….வேர ஒன்னும் இல்ல…கஷ்டம் இருக்க தான் செய்யுது,….வேலை இழப்பு இருக்கதான் செய்யுது..ஆனா,அடுத்த வருஷமே துபாயே இருக்காதுங்ர மாரி,ஷேக்கு தூக்கு போட்டுக்க போரார்ங்ர மாரில எழுதுரீங்க…..பேத்தலா இருக்கு…
    முதலாளித்துவம்,ஒகே கிழிங்க…அதுக்காக….சும்மா எவனாச்சு,சொன்னது,ஒளர்னதைலா இங்க குப்ப மாரி கொட்டாதீங்க….நாலு பேர் படிக்கிரான்,ரெண்டு பேர் பதில் தர்ரான்னு,,,எதுனாலும் எழுதப்டாது…..
    நாங்களும் துபாய்ல கடைநிலை ஊளியர்கள்தான்…வேலை இருக்கதான் செய்ய்து….எல்லா கால கட்டத்லையும் சில சிக்கல் இருக்கதான செய்யும்..ஆனா அதை சமாளிக்கிரது தான பெரிய விஷயம்….அத நல்லாவே செய்ய்ராங்க இங்க….
    இதுனால நம்ம நாடானுக்கு வேல போகுதேன்னு,கவல இல்ல….முதளாலிதுவம் தோக்குதாம்…அது தோத்தா தொழிலாளிக்குதானே கஷ்டம்….அது உங்களுக்கு தெரியளயா……

  15. நான் ஒரு துபாய் அரசாங்க ஊழியன். துபாய் அரசாங்கத்தின் நிலையை நன்றாக அறிவேன். துபாய் நிலைகுலைய வாய்ப்பே இல்லை. துபாய்தான் வளைகுடாவின் முதுகெலும்பு. இன்னும் சில மாதங்களிலேயே துபாய் பழைய நிலைக்கு திரும்பிவிடும். தயவுசெய்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

    • துபாய் நிலைகுலைகிறதா இல்லையா என்பதை விட துபாயின் வளர்ச்சி ஊகவணிபத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதைத்தான் கட்டுரை எடுத்தியம்புகிறது. ரியல் எஸ்டேட்ட் வீழ்ச்சி காரணமாக பாதிப்ப்படுவது நடுத்தர மக்களும், கட்டுமான தொழிலளார்களும்தான். முதலாளிகள் செய்ற்கையாக வீட்டுமனை விலைகளை ஏற்றி விட்டு இலாபம் சம்பாதித்துவிட்டு விலை இறங்கும் போது அதை மக்கள் தலையில் தள்ளிவிடுவார்கள்.

  16. மாண்புமிகு தலைவர் திரு ஷேக் சுல்தான் சாஹிப் அவர்களின் (நான் தான் அது) கணிப்பு வென்றது. நான் 5 மாதங்களுக்கு முன்பு சொன்னது போலவே நடக்கிறது. இப்போதெல்லாம் முன்பு போல துபாயில் ஆட் குறைப்பு கிடையாது. 2008 போல Business Traffic இல்லை என்றாலும் 2009 ஐ விட பல மடங்கு முன்னேற்றம் எனலாம். துபாய் சூடான நாடுதான் அதற்காக சுடுகாடு என்று இழிவு படுத்துவது எல்லாம் டூ மச்… கணிசமான இடங்களில் Recruitment ன் நடந்து கொண்டுதான் உள்ளது. புது கட்டிடங்கள் உருவாக தொடங்கி விட்ட்து. சாலைகளில் Traffic வளர்கிறது. கம்பெனிகளும் Increment, Bonus கொடுக்க தொடங்கி விட்டன. வாடகைகள் நிலைபடுத்தப்பட்டு விட்டன. குறுகிய காலத்தில் துபாயில் Financial Crisis கட்டுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன். துபாய் என்றும் சொர்க பூமிதான். எந்த ஒரு துபாய் சொத்தையும் அபுதாபி வாங்க வில்லை, வேறு யாரிடமும் துபாய் விற்கவும் இல்லை. ஆதாரம் இருந்தால் நிருபித்து காட்டுங்கள் இல்லை என்றால் நான் சொல்வதை ஏற்று கொள்ளுங்கள். சொர்க்க பூமி துபாய் வளர்க (எனக்கு வேளை இருக்கும் வரைக்கும்)

    • ஐயா துபாய் அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் அபுதாபியிடம் விலை போயாகிவிட்டது. இது கூட இன்னும் உங்களுக்கு தெரியவில்லை. ஆர்.டி.யே, உலக உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா, டினட்டா, ஜபில் அலி போர்ட், எமிரேட்ஸ் ஏர்லைன் இப்படி பல துபாய் நிறுவங்களின் பங்குகள் அபுதாபிக்கு விர்கப்பட்டாகிவிட்டது. சமீபத்தில் நான் நேரில் கண்ட காட்சி என்னவென்றால், பர்துபை பஸ் ஸ்டாண்டில் பேருந்துகளை ஒருங்கிணைக்கும் ஆர்.டி.யே அதிகாரிகலின் கட்டளைகளை சட்டை செய்யாமல் அபுதாபி பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பவும் டுபைலேர்ந்து அபுதாபி செல்வதற்கு அபுதாபி பஸ்சில ஏறினா 15 திர்ஹாம், துபாய் பஸ்லில ஏறினா 20௦ திர்ஹாம். இது தெரியுமா உங்களுக்கு.

    • மாண்புமிகு தலைவர் திரு ஷேக் சுல்தான் சாஹிப் அவர்களுக்கு
      //எந்த ஒரு துபாய் சொத்தையும் அபுதாபி வாங்க வில்லை,// burj dubai என்று பறவளாக விளம்பாரப் படுத்தப்பட்டு பிறகு திறப்பு விழாவிற்கு முன் அபுதாபி ஷேக் பெயரான கலீபா பெயரை burj khalifa வென வைக்க காரனம் என்ன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க