Friday, June 9, 2023
முகப்புதேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
Array

தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?

-


vote-012தி.மு.க அரசு 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், ஒன்றரை ஆண்டுக்காலம் முறையாகப் பயின்ற 207 மாணவர்கள் பணி நியமனம் பெற இயலாமல் கடந்த 2 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். பார்ப்பன சாதியைச் சார்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் என்ற பிரிவினரைத் தவிர்த்து, பிற சாதியினரை அர்ச்சகராக்குவது ஆகமவிதிகளுக்கும், இந்துமத சம்பிரதாயங்களுக்கும் எதிரானது என்று மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் சிலர் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.

இந்தத் தடையாணையின் விளைவாக, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முடங்கிவிட்டன. சைவ / வைணவக் கோயில்களில் வடமொழி மற்றும் தமிழில்  வழிபாடு நடத்துவதற்கு முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்று, தீட்சையும் பெற்றிருக்கும் இந்த மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. 2009 நவம்பரில் இம்மாணவர்களை நாங்கள் சங்கமாகத் திரட்டினோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தோம். இதன் தொடர்ச்சியாக 2010 ஜனவரியில்தான் இவர்களுக்கான சான்றிதழே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் உச்ச நீதிமன்றத் தடையாணை காரணமாக இவர்கள் யாரும் இதுவரை அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை. இவ்வழக்கு 2010, பிப்ரவரி 10 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் இறுதி விசாரணைக்கு வருகிறது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சார்பில் இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (implead) கொண்டிருக்கிறோம்.

பார்ப்பன சாதியில் பிறந்த பட்டாச்சாரியார்கள் அல்லது சிவாச்சாரியார்கள் தவிர வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் கருவறையில் உள்ள சிலையைத் தீண்டினால், சிலை தீட்டுப்பட்டுவிடும் என்றும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார் என்றும் கூறுகின்ற தீண்டாமைக் கருத்துக்கு எதிரான இந்த வழக்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1970 இல் பெரியார் அறிவித்த கருவறை நுழைவுக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, 1971 இல் அர்ச்சகர் வேலையில் நிலவிவந்த வாரிசுரிமையை ஒழிக்கும் சட்டமொன்றைத் திமுக அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் “அர்ச்சகர்கள் எனப்படுவோர் இந்து அறநிலையத்துறையால் நியமிக்கப்படுபவர்கள் என்பதால், அதில் வாரிசுரிமை கோர முடியாது என்றும் தகுதியான நபர்களை அரசு தெரிவு செய்யலாம்” என்றும் கூறிய உச்சநீதிமன்றம், “அவ்வாறு அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியிலிருந்துதான் தெரிவு செய்யப்பட வேண்டும்“ என்றும் வலியுறுத்தியது. “இதனை மீறி அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது, அரசியல் சட்டம் வழங்கியுள்ள இந்து மத உரிமையில் தலையிடுவதாகும் “என்று கூறி, சாதியையும் ஆலயத் தீண்டாமையையும் அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். 1972 இல் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், 2006 இல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வண்ணம் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது.

ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள்  இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு 207 மாணவர்கள் பணி நியமனம் பெறுவது தொடர்பான வழக்கு மட்டுமல்ல; ஆலயத் தீண்டாமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழக்கு. சமூக நடவடிக்கைககளில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டிருந்தாலும், அர்ச்சகர் நியமனத்தைப் பொருத்தவரை தீண்டாமை என்பது இந்துமத உரிமையாகவே அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் பார்வையில், இந்த 207 மாணவர்களின் ஒரே தகுதிக் குறைவு அவர்களது பிறப்புதான். குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியில் பிறந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே இன்று பல்வேறு கோயில்களில் பணி செய்து வரும் அர்ச்சகர்கள் பலர், அவர்களே கூறுகின்ற ஆகம விதிகளின் அடிப்படயில் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திருமணமாகாதவர்கள், திருமணமாகி மனைவியை இழந்தவர்கள் போன்றோர் சாமி சிலையைத் தீண்டக்கூடாது என்று ஆகம விதிகள் கூறுகின்றன. ஆனால் அத்தகைய பலர் அர்ச்சகர்களாகப் பணி செய்து வருகின்றனர். அவர்களில் தேவநாதன் போன்ற “ நல்லொழுக்க சீலர்களும்“  அடக்கம். 207 மாணவர்களுக்கு தேர்வு நடத்தி அவர்களுக்குத் தகுதி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த தமிழக அரசு, தேவநாதன் உள்ளிட்டு இன்று பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் யாருக்கும் அத்ததகைய தேர்வு எதையும் நடத்தவில்லை. வழிபாட்டு முறைகள் தெரிந்தவர்களா, ஒழுக்கமானவர்களா என்று கண்காணிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு இருந்தும்கூட, அவ்வாறு யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதும் இல்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே தகுதி சாதி மட்டும்தான்.

மாதச் சம்பளம் வழங்குவதுடன், அர்ச்சனைத்தட்டில் பக்தர்கள் போடுகின்ற பணத்தை எடுத்துக்கொள்ளவும் அர்ச்சகர்களுக்கு உரிமை வழங்கியிருக்கிறது தமிழக அரசு. இந்து அறநிலையத்துறையின் உள்துறைப் பணியாளர்களாக இருந்து கொண்டு, மாதம் பல ஆயிரங்களை வருவாயாக ஈட்டும் மதுரைக் கோயில் பட்டர்கள்தான், அறநிலையத்துறை கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.  சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளலாமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு ஆண்டு கடந்த பின்னரும், இந்தக் கணம் வரை தில்லைக் கோயில் தீட்சிதர்கள், நகைகளையும், கணக்குகளையும், நிர்வாகத்தையும் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கவில்லை. அரசும் அவர்கள் மீது நடவடக்கை எடுக்கவில்லை.

அரசின் ஆணைகளையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் துச்சமாக மதிக்கும் அர்ச்சகர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறோம். தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்கள்தான், அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கில்  தமிழக அரசுக்கு எதிராக மதுரை பட்டர்கள் சார்பில் வாதாடுகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொருத்தமான தகுதி வாய்ந்த மூத்த வழக்குரைஞர்களை அமர்த்தி, தமிழக அரசு இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.

–          மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC), தமிழ்நாடு. செல்பேசி: 94432 60164


vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. எலி. காகம் கூட கோயிலுக்குள் சென்று வருகின்றன மனிதனுக்குத்தான் மறுப்பு.உச்சநீதிமன்று ஆண்டவநிடம்தான் பரத்தைபோடுமோ .
    தெரியாது !!!!!!!!!!!!

  2. //மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த நாங்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தலையிட்டிருக்கிறோம். ஆலயத்தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்த முயற்சியில் இறுதிவரை போராடுவோம்.// அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இந்த முயற்சி கூடிய விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  3. தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா? // ஆகா ஆகா என்ன ஒரு தலையங்கம். அட்டகாசம்.
    சரி இந்த பிரச்சனை பற்றி வீரமணி, ஏனைய திராவிட அரசியல்வாதிகள் பேச மாட்டார்களா?

  4. அரசு நடத்தும் பல தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கு தமிழக அரசு சார்ந்த எஸ்.ஐ.எஸ்.ஐ போன்ற நிறுவனங்கள் அப்ரண்டிஸ் அதாவது தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கின்றன உதவித் தொகையுடன். இதைப்போல அரசு நடத்திய பயிற்சியாகிய இதற்கும் தொழில் பழகுநர் உரிமையை கோரி வழக்கு தொடரலாம் எனக் கருதுகிறேன்.

  5. ” ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வந்த உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், பலதார மணம் போன்ற சமூகக் கொடுமைகளும், சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்த தேவதாசி முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலில் நுழையவிடாமல் தடுத்தல் போன்ற அநீதிகளும் “இந்து மத உரிமை“ என்ற பெயரில்தான் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் போராட்டங்கள் மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக இத்தகைய இந்து மத உரிமைகள் இன்று கிரிமினல் குற்றங்களாக்கப்பட்டு விட்டன. எனினும் ஆலயத் தீண்டாமை எனும் குற்றம், ஆகமவிதிகளின் பெயரால் மூடிமறைக்கப்பட்டு, அரசியல் சட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தாலும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது.”

    பெண்களும் அர்ச்சகர்களாகும் உரிமையையும் இந்த போராட்டத்தோடு சேர்த்துக் கொண்டால் மகிழ்ச்சி

  6. இந்த் தடையாணையை திரும்ப பெறுமாறு இந்து மதத்தின் மொத்த குத்தகைகாரர்களான சங் பரிவாரம் பார்ப்பனர்களிடம் கோரிக்கை வைத்ததாக நினைவில்லை. சாதி என்கிற அஸ்திவார கல்லை உருவி விட்டால் இந்து மதம் என்கிற கட்டிடமே இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  7. உள்ளும் புறமும் ஓயாது போர் தொடுப்போம் !- நம் ஒற்றுமை சிதையாமல் உரிமைகளை வென்றுஎடுப்போம் –

    ஆதிக்கச சாதிவெறி பகை முடிப்போம் -அதற்கென ஆயிரமாயிரம் தலை கொடுப்போம் – விடுதலை சிறுத்தைகள் பின்தொடர்ந்து வாரயீர் புதிய சாதியற்ற தமிழ் தேசியம் படைப்போம்

  8. எங்கே இந்து மதத்தில் ஜாதி இல்லை என்று சொன்ன ஒருவனையும் காணோமே …………………….!!!!!!!!!!!!!!!!!! …….????????????

  9. தில்லைத்தீட்சிதர்களின் கொட்டம் அடக்கிய வரலா ற்று சிறப்புமிக்க நிகழ்வைப்போல் மற்றுமொரு வரலர்ற்று நிகழ்விற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

  10. ஆதி தமிழன் ஆண்டவன் (சித்தர்கள்) ஆனான், மீதி தமிழன் அடிமைகள் ஆனான். – இது தான் இன்றைய தமிழனின் நிலை!!!

  11. வரகுண பாண்டியனுக்கு சிவலோகம் காட்டிய ,கல் யானைக்கு கரும்பூட்டிய
    நந்தனை நெருப்பில் வாட்டி சொர்க்கம் அனுப்பிய சிவனால் இது முடியாத்கா?

  12. இவனுங்களை யார் பூசை செய்ய வேணாம்னு சொன்னது?
    தாங்களே ஒரு கோயிலை கட்டி பூசை செய்யா வேண்டியது தானே?

    • சிதம்பரம் கோயிலை பார்ப்பானா கட்டினான். தமிழன்தானே கட்டினான். அவன் கட்டிய கோயிலில் அவன் பூசை செய்யாமல் அண்டி பிழைக்க வந்த உன்னை மாதிரி பார்பன கூட்டம் மட்டுமா பூசை செய்யணும். நல்ல இருக்குது கதை.

      கோயிலை கட்ட தமிழன் ஆனா அதில் குந்தியிருந்து சுரண்டி தின்னுவது பார்பான்.

    • பார்ப்பனர் தவிர பிற ஜாதியினர் கொடுக்கும் தட்சணையை வேண்டாமெனக் கூற வேண்டியதுதானே பார்ப்பனப் பூசாரிகள்?

  13. Instead of fighting for right to become “archagar”, we can shut down all temples/mosques/vihars and other worship places of other religions. These are the source of problem in society. We have to make them in to schools, hospitals, children’s home etc. No place for a god who is not here. If god has a better heaven, why to waste place, money and time for building a place for the god here in earth?

  14. அட லூசுகளா… பிராமணர்கள் எல்லோரும் கோயிலில் பூஜை செய்யலாம் என்று எந்த

    மடையன் சொன்னான். அது சரி எத்தனை கிராம கோயில்களில் பூசாரிகளாக தலித்துகள்

    உள்ளனர் என்பது தெரியுமா? 100 ரூபாய் வாங்கி கொண்டு ஒரு மாதம் முழுதும் வேலை

    செய்யும் ஆயிரகணக்கான பார்ப்பணர்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறாயா?

    சரி சர்சையும் வெள்ளைபாவாடைகளையும் விட்டால் உனக்கு வேறு என்ன தெரிய போகிறது?

    இருந்தாலும் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தோன்றியது எழுதி விட்டேன்.

  15. நீங்கள் ஒரு இணைய தளம் மூலம் உங்கள் அர்ச்சகர் சேவைகள் மக்களளுக்கு அறிமுக படுத்தலாம். தங்களது சேவையை நான் கண்டிப்பாக எனது வீடு விசேசத்திற்கு உபயோகபடுத்துவேன். I wish you all to do the pujas as Trained in the Temples, but, in the meantime, you could all get organised and do the pooja for house warming, marriage and other ceremony, for a good living. May be a web site and an online system to book your appointment will help to take your services. I would prefer to use your services if available and easy to get access.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க