Friday, June 2, 2023
முகப்புஇது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.
Array

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

-

vote-012ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது.  17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர்.  இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார்.

அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… ..  ..

இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை.  ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது.  யாரிடமிருந்து காப்பதற்கு?  தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது?

ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள்.  ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள்.  இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள்.  தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள்.  அதனால் மறுத்தார்கள்.

ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள்.  பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள்.  குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது.

இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர்.  இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.  அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்;  ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர்.  ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது.  அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன்.  அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார்.

சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின.  ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர்.  மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்.  படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது.  அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது.  ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம்.

தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம்.  ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள்.  உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம்.  அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள்.  நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக?

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.  இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம்.  நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.  நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது?

அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது.  நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள்.  நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள்.  எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.  நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது.  அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள்.  மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள்.  வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள்.   ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது.

700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன.  ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை.  ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம்.  நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம்.  ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர்.  அங்கே வன்முறை இல்லை.  போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை.  ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது.  உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை.  அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது.   மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது.  காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது.  உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே.

வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள்.  நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள்.  தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம்.  நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை.  நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது?  இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும்.  நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம்.  அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா?  ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை?  ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை.  ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள்.  மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு.  கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.  ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள்.  அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு.

கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம்.  ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை.  கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது.  மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம்.  ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர்.  அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர்.  அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.  ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர்.  நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம்.  விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம்.  அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள்.  நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும்.  கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள்.  நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்?  இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள்.  இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.  நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம்.  ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன்.  ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே.  ஏன் பயப்படுகிறீர்கள்.  ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள்.  அவர்களும் உங்களை நேசிப்பர்.  ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள்.

வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார்.  அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன்.  ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது.  அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம்.  பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள்.  படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும்.  கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது.  எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன்.  காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம்.  இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான்.

நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்?  நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது.  உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது.  அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா?  ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம்.    நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம்.  இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி.  ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை.  யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?   ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது.  அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன.  நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு.

இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது.  இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது.  இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன.  இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு.  இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம்.  நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும்,   நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது.  எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம்.  இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை.  ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள்.  இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள்.  அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி.  சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா?  இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே.  நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான்.  இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது.  திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா?  அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா?  இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை.  அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான்.  சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள்.  தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான்.  இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.

இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம்.  மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு.  அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள்.  அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள்.  போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.  இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.  அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும்.

காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது.  அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை.  ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர்.  இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.  துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.  கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன.  அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது.  உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.  நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும்.  நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா?

அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.  ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது.  அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன்.  இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இது ஒரு இனப்படுகொலை.  மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது.  அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது.  இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும்.

இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை.  இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா?  இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள்.  நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை.  நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள்.  இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள்.

வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது.  சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது.  இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன்.  சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை.  இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள்.  உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள்.  ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள்.  எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை.

தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர்.  இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள்.  தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள்.

மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள்.  உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை.  இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள்.  அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.  இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள்.  ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள்.  எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள்.

அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது.  அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது.  நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம்.  நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள்.  முழுநேரப் போராளிகள் ஆவார்கள்.  அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும்.  அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும்.  அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள்.  ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே.

************

ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. பொருளாதார நிபுணர்களும் ,மனிதாபிமானிகளும் ,மென்மையான் கலையுனர்வுள்ள எழுத்தாளர்களும் ,தலித்திய வாதிகளும்,ஸ்டாலினிய ,மாவோயிச எதிர்ப்பாளர்களும் என்ன சொல்ல போகிறார்கள்?

  2. காந்தியவாதிகளோ . உங்களால் போலி கம்யீனிஸ்களாக்கப்பட்டவர்களோ இந்த பிரச்சனையை முன்னெடுத்திருந்தால் என்றாவது அந்த மக்கள் மீண்டெழ வாய்ப்புண்டு ,

    கூடா சேர்க்கையால் மனம் பிறழ்ந்த மார்க்ஸிட்டுகளிடம் சென்று சேர்ந்ததுதான் பிரட்சனை .

  3. காந்திய தேசத்தில் காந்திய வழி போராட்டங்கள் கூட செய்ய வழி இல்லை என்பதை ஹுமான்சு குமார் தன் நடைமுறையில் உணர்ந்திருக்கிறார். தன்னுடைய எளிய கேள்விகள் மூலம்… பலருக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி இருக்கிறார்.

    அமைதி. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் பல நூறு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் காடுகளையும், மலைகளையும், ஜீவனுள்ள நதிகளையும் கூட அடிமாட்டு விலையில் விற்றுவிட்டார்கள். இப்பொழுது எடுக்க போகும் பொழுது, அங்கு வசிக்கும் பழங்குடி மக்கள் எதிர்க்கிறார்கள். ஈழத்தில் புலிகள் என அப்பாவி மக்களை கொன்றார்களோ, அதே போல பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் முத்திரை குத்தி இந்திய அரசின் ராணுவமும், போலீசும் நாளும் கொல்கிறார்கள். இந்திய அரசு விரும்பும் அமைதி சுடுகாட்டு அமைதி.

    இந்த உண்மை பரந்து பட்டு எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும். தமிழகத்தில் மக்கள் கலை இலக்கிய கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் முன்கை எடுத்திருக்கின்றன. காட்டு வேட்டைக்கான எதிர்ப்பியக்கம் பற்றி படர வேண்டும்.

    இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை தொகுத்து வினவு ஒரு பதிவிட்டால் நல்லது.

  4. இன்றைய இந்தியச் சூழலில் மிகவும் தேவையானதும். போர் வெறிக்கு பின்னால் உள்ள நோக்கங்களையும், மக்களின் விடுதலை வேட்கையையும் உறுதிப்படுத்துகிற வாக்குமூலம் இது வாழ்த்துக்கள்.

  5. அரசின் மாவோயிஸ்ட் பூச்சாண்டியை எளிய முறையில் உண்மை நிலவரத்தை விளக்கியிருக்கிறார் ஹீமான்சு குமார்.
    ”ஜென்டில் மான்” கள் என்ன சொல்லப் போகிறார்கள்.

  6. Dear Vinavu, Good translation and the article by iteslf is simple yet powerful in its contend and outlook. the words are straight un complicated and telling us the real truth.Regards Krishna.

  7. அய்யோ என்ன கொடுமை இது?முதன் முதலில் நாட்டில் புரட்சியை கொண்டு வரப் போவது தோழர்கள் மருதையன் வினவு போன்ற் நக்சல் தீவிரவாதிக்ள் தான் என்ற என் நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிட்டாரே குமார்.

    • அய்யோ என்ன கொடுமை இது? எல்லாவற்றிற்கும் நக்கல்தானா? மக்களின் துன்பங்களை புரிந்துகொள்வார் யாரும் இல்லையா வலைத் தளங்களில்? 

  8. மிகச் சரியான நேரத்தில் வந்துள்ள பதிவு. இது மக்களைச் சென்று அடைய வேண்டும். சிதம்பர ஓநாய். அரசு தொலைகாட்சியில், “இப்போது நடைபெற்று வருகின்ற “ஆபரேசன் கீரீண் ஹண்ட்” திருப்தி அளிப்பதாகச் சொன்னதை” கண்டு வயிறு எரிகிறது. அரச பயங்கரவாதம் வெகுஜன ஊடகங்களை வெகு சாமார்த்தியமாக தமக்கு ஒத்தூதச் செய்கிறது. ஈழப்பிரச்சனையில் கருணாநிதி அரசு எப்படி கிளர்ச்சி செய்பவர்களை சிறையில் தள்ளி பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கி வெகுஜன எதிர்ப்பு பரவாமல் தடுத்ததோ, அதே போன்று இப்போதும் பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கி மக்கள் இவர்களின் கொலைகளை அறியாமல் தடுக்கின்றனர்.

    உழைக்கும் மக்களை அணிதிரட்டி, ஜாதி இன மொழி மாநில வேறுபாடுகளைக் கடந்து மக்கள் போராடினால் மட்டுமே இந்த அயோக்கியர்களை ஒழிக்க முடியும்.

    • //உழைக்கும் மக்களை அணிதிரட்டி, ஜாதி இன மொழி மாநில வேறுபாடுகளைக் கடந்து மக்கள் போராடினால் மட்டுமே இந்த அயோக்கியர்களை ஒழிக்க முடியும்.//

      அதெப்படி முடியும்? ஜெயராமன் வீட்டுல கல்லெடுத்து அடிப்பதையே இப்போதான் ‘க்ற்று’க் கொண்டு வருகிறோம்…. அதுக்குள்ள எல்லாரும் ஒத்துமையா போராடனும்னு பிரிவினைவாதம் பேசுறீங்களே?

  9. அந்த மண்ணின் மைந்தர்களிடம், இந்திய அரச பயங்கரவதத்தை மட்டுமல்ல, உலக பயங்கரவாதத்தையும் எதிர்கொள்ளும் துணிவு உண்டு.

  10. பசுமை வேட்டை என்ற பெயரில் சொந்த மக்களை கொன்று ஒழிக்கும் ப.சிதம்பரம் என்ற பன்னாடையை எப்படியாவது அந்த ஆதிவாசி மக்களின் கைகளில் ஒப்படைத்துவிட வேண்டும். மற்றதை அம்மக்கள் பார்த்துக்கொள்வார்கள். 

  11. Already they got big amounts from Tata and other group so they have to do something to satisfy those group. One day Sonia can leave India and go to Italy with kids and robbed wealth but what about these guys like Sithamparam. They are responsible to answer the public. Sathi.

  12. இவர்கள் சல்வா ஜுடூமை ஏவி விட்டு மக்களை அடித்து விரட்டி கொன்றது போதாதென்று இப்போது கிரீன் ஹுண்டாம்.மேதா பட்கர் கூறியது போல் ஏற்கெனவே சில மலைப்பகுதிகள் வேதாந்தாவிற்கும் ஜிண்டாலிற்கும் ஆதிவாசி மக்களிடம் இருந்து பிடுங்கி பட்டா போட்டு கொடுக்க பட்டுவிட்டது.அடுத்தது அம்பானிக்கு கொடுப்பார்கள் போல?
    மேலும் அன்று காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்றால் இரண்டு நாட்கள் பார்த்து விட்டு மேலும் தொடரந்தால் வெள்ளை காரன் உண்ணாநிலை இருப்பவர் செத்து விடக்கூடாதே என்று பதறி அடித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பான்.அந்த இறக்கம் கூட இன்று இந்த செல்வா சீமான்கள் நிறைந்த காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பொதுவாகவே தேசத்திற்கே கூட இல்லை என்பது வெட்க கேடு.உண்ணா நிலை இருக்கிறானா?அடித்து நொறுக்கு அவனை,தீவிரவாதி முத்திரை குத்தி உள்ளே தள்ளு.இதுதான் இரண்டாவது பெரிய சனநாயகம்,அடுத்த வல்லரசு என இவர்கள் பீற்றிகொள்ளும் இந்தியாவின் வெட்ககேடான நிலை,.
    பெரியார் கூறியது போல் வெள்ளைகாரனே மேல்..

  13. மேலும் இந்த மீடியா பன்னாடைகள் தொடர்ந்து ஆ புலி வருது!..கதையாக ஆ! இந்தியா வல்லசராவதை தடுக்கிறான்!..ஆ! டாடாவிற்கு இடுப்பு சுளுக்கிவிட்டது என்ற கதையாக தொடர்ந்து பெரு முதலாளிக்கும் அந்த முதாளிகளின் கைக்கூலி ப சிதம்பரத்திற்கும் ஆதரவாக நாய் போல் குறைத்து வருவது மானங்கெட்ட செயல்.இப்படிதான் சம்பாதிக்க வேண்டுமா இந்த அற்ப பதர்கள்?இதற்கு பிச்சை எடுக்கலாம்.

  14. இந்த போலி ஜனநாயக அரசு யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது,யாருக்கு ஆதரவாக அதிகாரத்தை செலுத்துகிறது என்று ஒரு காந்தியவாதியே சாட்சி சொல்லும்போது புரட்சியை நெருங்குவதுபோலவே தெரிகிறது தோழர்களே.

  15. ///கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்/// … ” போலீஸ் இல்ல பொருக்கி”

  16. ////கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம். ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை. கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது. மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம். ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்//////

    …..போலீஸ் இல்ல பொருக்கி……

  17. ஸ்டாலின் குருவின் இடுகையில் கூறிய பின்னூட்டத்தை இங்கே மீண்டும் மறுபதிவு செய்ய விரும்புகிறேன்.

    //அடக்கப்படும் ஒரு குழு அதன் குரலை உரக்கச் சொன்னால் அதற்கு மாவோயிசம் என்ற பெயர் சூட்டலால் மனித அவலங்கள் கொச்சைப் படுத்தப் படுகிறது.//

  18. திரைப்படம் என்பது மக்களுக்கானது அல்ல ஆனாலும் பேசுகின்ற செய்திகளை உரக்க வைப்பது கூட இன்றையக்கடமை
    போராண்மை படம் பேசுகின்ற சமூக உறவைப் புரிந்து கொள்ள முயற்சித்தல்
    பழங்குடி மக்களுக்கும் அதிகாரிகளுக்குமான உறவு (பாதணியை சுத்தம் செய்தல்> துருவன் குற்றவாளியாக்கும் முத்திரைகுத்தல் அல்லது சமூகத்தின் மீதான வடுவை ஆழப்படுத்துவது பற்றிய பார்வை )
    பழங்குடி மக்களுக்கும் சமூகத்தின் உயர்வர்க்கத்திற்குமான உறவு (மாணவிகளுக்கும் துருவனுக்குமான உறவு)
    உபரிப் பெறுமானத்தின் பெறுமதி ( மக்கள் கொடுக்கும் அன்பளிப்பு)
    கட்டமைக்கப்படும் வலிந்தெடுக்கப்படும் போலித் தேசியம்
    பழங்குடிமக்களை குற்றவாளிகளாக ஆக்குவது ( துருவனைத்தேடி அலைகின்ற போது அந்த மக்களின் வாழ்விடங்களை துவம்சம் பண்ணுவது) இவைகள் தான் அந்தப் படத்தின் வெற்றி நேர்மையாக முடிந்தவை அந்தமக்களை உலகிற்கு கொண்டுவருகின்றது. இதுதான் இன்றைய நிலை என்பதை உங்களின் எழுத்துக்களைவிட படக்காட்சியாக கொண்டுவந்து விடுகின்றது.
    இந்தப்படத்தைப் பார்த்தாலே போது பழங்குடி மக்களின் வாழ்நிலை எவ்வாறு இருக்கும் என்பது.

    ஆனாலும் முன்னர் குறிப்பிட்டது போன்று திரைப்படங்கள் மக்களுக்கானது அல்ல. அது வியாபார நோக்கில் அமைந்தது தான் இவை சமூகத்தை எவ்வகையிலும் மாற்றத்திற்கான உந்து சக்தியாக இருக்கப்போவதில்லை.

    ஆக இங்கு அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து வரும் அதிகார வர்க்கத்தின் வக்கிரமான எதிர்விழைவு நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்வின் தத்துவத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேற்கு நாட்டு க

    ஆக இங்கு அரைநிலபிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து வரும் அதிகார வர்க்கத்தின் வக்கிரமான எதிர்விழைவு நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடிகின்றது. பழங்குடி மக்களின் வாழ்வியலை அவர்களின் வாழ்வின் தத்துவத்தில் இருந்து புரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேற்கு நாட்டு கலாசாலை என்பது ஒரு சனரஞ்சக ஆய்வுகூடமாகப் பாதுகாத்து அவர்களின் வாழ்வைப் பாதுகாக்க முற்படுகின்றது. ஆனால் அரைநிலபிரபுத்துவ எச்சத்தின் வெளியில் இருக்கின்ற சமூகம் அவர்களி;டம் இருந்து எவ்வாறு உபரி உழைப்பை பெறமுடியும் என்றே நோக்கிச் செயற்படும் பொறிமுறைக்குள் இருக்கின்றுது.
    மானிடவியல் பாடத்திட்டத்திற்கு அல்லது மானிடவியல்பார்வைக்கு எழுத்துக்களுக்கு முதன்மையாக இருப்பது அரசு>குடும்பம் தனித்சொத்து ஆகியவற்றின் தோற்றம் இது தோழர் ஏங்கொல்ஸ்சால் எழுதப்பட்டதாகும். இதனைப் படித்தறிவதன் மூலம் பழங்குடிமக்கள் பற்றிய சரியான கோட்பாட்டு முடிவிற்கு வரமுடியும்.

  19. அரசாங்கத்தின் அட்டூழியங்களை எல்லாம் பார்க்கும்பொது, விவேக சிந்தாமணியின் கீழ்காணும் வரிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது:

    முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
    மடவனை வலியான் கொன்றால் மறலிதான் அவனைக் கொல்லும்
    தடவரை முலைமாதே இத் தரணியில் உள்ளோர்க்கு எல்லாம்
    மடவனை அடித்த கொலும் வலியினை அடிக்கும் கண்டாய்.

  20. இந்திய தேசத்தைப் பொறுத்தவரை பழங்குடியினதை ஒரு இனக்குழுவாக (ethnic groups ) கருதுகின்றார்களா? ஒரு சாதி என்று வரையறுக்கின்றார்களா?
    சாதியாக வரையறுத்தார்கள் ஆயின் அது முதலில் தவறானதாகும். சாதி என்று வரையறை செய்வதே வர்ணாசிமத்தின் எச்சமாகாதா?
    இனக்குழுக்களுக்கான அதிகார அலகை நோக்கிய விழிப்புணர்வு இன்றைக்கு முக்கியமான செயற்திட்டமாக உள்வாங்கப்பட வேண்டிய அவசியம் இருக்கின்றது. முதலாளிய சமூக உறவிற்குள் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகளை படிமுறை வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருக்கின்றது.
    அவர்களுக்கான அதிகார அலகை அவர்களின் உயிர்பாதுகாப்பு என்ற மைய நிலையில் இருந்து தொடங்கவேண்டிய கட்டாய வரலாற்றுக்கடமை இருக்கின்றது.

    • ஒரு மரபின இனக்குழு என்பது சரியானது, அது சாதியில்லை என்ற உங்கள் விளக்கம் சரியானது. ஆனால் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியா என்பது தேசம் அல்ல, நாடு என்ற வரையரை சரியானது. வடகிழக்கு மாநிலத்தின் பிரச்சனையை இப்பொழுது அனைத்து மாநிலத்தின் காடுகள் உள்ளடக்கிய மாநிலத்திலேயும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
      நீங்கள், எல்லாவற்றையும் விட ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் – லெனின், என்ற நூலினை படிக்கவும். எப்படி ஏகாதிபத்தியங்கள் மூலாதரங்களை கொள்ளையடிப்பதற்காக கடைகோடி நிலம் வரை தனதாக்கிக் கொள்வதற்கு சண்டையிட்டுக் கொள்கிறது, என்பதை அறிந்துகொள்ளவும். இதுதான் இன்றைய அடிப்படை ஆதரா நூல். நூறு ஆண்டுகளுக்கு முன் முன்னறிந்து வழிக்காட்டிய நூல். மூலப் பொருட்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆக்டோபஸ் கால்களை விரித்து அபகரிக்கும், சண்டையிடும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ளலாம். இதற்கு எடுபிடியாக பணியாற்றுவதுதான் இங்குள்ள அரசும் நிறுவனங்களும். இனி இதை போன்றதை புரிந்து கொள்ள உங்களுக்கு சிரமிருக்காது. ஆனால் சாதி, மரபினம் போன்றவற்றை புரிந்துகொள்ள அரசு குடும்பம் சொத்து ஆகியவற்றின் தோற்றம் உண்மையில் அவசியம். பிரச்சனையிலிருந்து திசை திரும்பாமல் இருக்கவேண்டிய அவசியம் கருதி ஒரு விசயத்தை மட்டும் கூறி முடிக்கிறேன். சாதியின் உருவாக்கம் உற்பத்தியின் மூலம் தொழிற்பிரிவு ஏற்பட்ட போதுமட்டுமே. கருத்தியலால் பொருளியலை படைக்க முடியாது, ஒழுங்கபடுத்தவும், இல்லையென்றால் தாக்கத்தை எதிர்மறையாகக் கூட உருவாக்கலாம். ஆனால் உருவாகாது. இந்த அடிப்படையைமட்டும் உள்வாங்குங்கள். அவ்வளவே. மக்கள் போராட்டம் வெல்லட்டம்.

  21. சிகப்பி அவர்கட்டு தங்களின் கருத்துக்கு நன்றி. இந்திய அரசியலமைப்பு எவ்வாறு வரையறுக்கின்றது என்பதை அறியும் பொருட்டே கேள்வி எழுப்பியிருந்தேன்.

  22. ஒரு சாதாரண பெண்ணாக படிக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. கண்ணீர் மட்டும் ஒன்றும் செய்து விட போவதில்லை. இது நடந்து பல நாட்கள் கடந்து விட்டன இன்று இது இன்னும் மோசமடைந்துள்ளது. அரசின் அடுக்குமுறை என்பது இப்போது மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க