முகப்புகாதலர் தினக் கொலைகள் !!
Array

காதலர் தினக் கொலைகள் !!

-


1. குமரியில் ஒரு கொலை!

vote-012குமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை அருகேயுள்ள சிதறால் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த தாஸ், கனகம் தம்பதியினரின் மகள் ஷர்மின்(24வயது) எம்.இ முடித்துவிட்டு நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஷாஜினை (25) ஷர்மின் காதலித்து வந்தார்.

முதலில் ஷாஜின் எம்.ஃபில். ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். இதை உண்மையென தனது தோழிகளிடம் ஷர்மின் பகிர்ந்திருக்கிறார். ஆனால் தோழிகளோ ஷாஜின் இப்படித்தான் பலரிடம் பொய் கூறி வருவதாக எச்சரித்தனர். எச்சரிக்கையடைந்த ஷர்மின் படிப்பு சான்றிதழ்களை கொண்டு வருமாறு ஷாஜினைக் கேட்டார். குட்டுடைந்த ஷாஜின் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு வேலையின்றி இருப்பதாக கூறினான்.

காதலின் தொடக்கமே பொய்யாக இருப்பதை எண்ணிய ஷர்மின் காதலைத் துண்டித்துவிட்டு ஷாஜினை சந்திப்பதை நிறுத்தினார். தனது தாயிடமும் காதலைக் குறித்தும் அதை முறித்துக் கொண்டது பற்றியும் தெரிவித்துவிட்டு தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கேட்டிருக்கிறார். இடையில் ஷாஜின் பெண் கேட்டுச் சென்றிருக்கிறான். ஷர்மினின் தாயார் அது சாத்தியமில்லையென்று மறுத்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த ஷாஜின் 16.2.10 அன்று காலை ஷர்மின் வீட்டிற்கு அவரது தாயார் இல்லாத நேரத்தில் சென்றிருக்கிறான். சமையலறைக்குள்ளிருந்த அந்தப் பெண்ணை ஆத்திரம் தீரும்வரை அரிவாளால் வெட்டிக் கொன்றான். பின்னர் ரயில் முன் பாய்ந்து சாக முயன்றிருக்கிறான். அந்த முயற்சி நிறைவேறாமல் தலையில் அடிபட்டு இப்போது போலீசின் பாதுகாப்பில் மருத்துவமனையில் உள்ளான். இந்தக் கொலை குறித்த அவனது வாக்குமூலத்தை வைத்து போலீசார் அவனைக் கைது செய்தனர்.

2. சென்னையில் ஒரு தற்கொலை!

சென்னை வில்லிவாக்கம் திருநகரைச் சேர்ந்த சண்முகவர்தினி (வயது 24) கே.கே.நகரிலுள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர். காலையில் பாடம் நடத்திவிட்டு மாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ மேற்படிப்புக்கும் சென்று வந்தார். இவரது தந்தை செல்லதம்பி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

16.2.10 காலையில் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற போது யாருடனோ செல்பேசியில் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி சென்ற பிறகு தனது அறையில் அழுது கொண்டிருந்தவர் காலை 10.30மணிக்கு ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயமடைந்த அவரை கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்து போனார்.

போலீசின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: சண்முகவர்தினி பி.இ படிக்கும்போது சக மாணவனான ஜெகனை காதலித்துள்ளார். படிப்பு முடிந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. ஆனால் சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறு மாப்பிள்ளையும் தேடத்துவங்கினர்.

இது தொடர்பாகத்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் செல்பேசியில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னர் தனது காதலன் ஜெகனோடு பேசினார். ஜெகனோ,”பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யும்படியும், தன்னை மறந்துவிடும்படியும்” கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் தந்தையும், காதலனும் பேசிய கருத்துக்களால் மனமுடைந்த சண்முகவர்தினி தனது முடிவை தேடிக்கொண்டார்.

_________________________________________________

இருபத்தி நான்கு வயதில் பூத்துக்குலங்க வேண்டிய இரண்டு மொட்டுக்கள் கருகிவிட்டன – இல்லை கருக்கப்பட்டன. காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை.

சோர்ந்து போகும் நடுத்தர வயது போலல்லாமல் வாழ்வை தேனியின் சுறுசுறுப்போடு உறிஞ்சும் இருபதுகளின் வயதில் அந்தப் பெண்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருந்திருப்பார்கள்? அநேக பெண்களுக்கு கிடைக்காத பொறியியல் கல்வி, அதிலும் முதுகலைக் கல்வியைத் தொட்டுவிட்ட அவர்களது மனதில் எதிர்காலம் குறித்த விருப்பம் எப்படியெல்லாம் கருக்கொண்டிருந்திருக்கும்? மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் இளம் ஆசிரியைகளாக கற்பிப்பதின் உற்சாகத்தை கண்டிருப்பவர்கள் ஏன் மரணத்திற்கு பயணித்தார்கள்?

அந்தப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள், தாங்கள் பாராட்டி சீராட்டி அரும்பாடுபட்டு படிக்கவைத்து ஆளாக்கியவர்கள், இன்று ஆற்றாமை தீராது நினைத்து நினைத்து அழுதுகொண்டிருப்பார்கள். தினசரிகளின் பரபரப்பு சம்பவங்களான அவர்களது மகள்களின் கதைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பத்தோடு ஒன்றாக இருக்கலாம். படித்து விட்டு சற்றே அனுதாபத்துடன் நினைத்துவிட்டு மறந்து போகும் வழமையாக இருக்கலாம். பெற்ற மனதிற்கோ அது இனி வாழ்நாள் முழுதும் பின்தொடரப்போகும் துயரத்தின் குறியீடாக செதுக்கப் பட்டிருக்கும். அவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

ஒருவேளை அந்த இரண்டு பேராசிரியைகளும் பெண்ணாகப் பிறந்ததுதான் பெருங்குற்றமா? இல்லை இளம்வயதில் இயல்பாக துளிர்க்கும் காதலை வரித்துக்கொண்டதுதான் குற்றமா? குரோமோசோம்களின் கலப்பையும், ஹார்மோன்களின் விளைவையும் அறிவியலின் விதியென்று புரிந்து கொள்வதா? இல்லை சமூகவியலின் சதியென்று சம்மதிப்பதா? கேவலம் ஒரு பெண்ணுயிர் காதலிப்பதும், காதலிக்க வேண்டாமென்று மறுப்பதும் உயிரைப் பறிக்கக் கூடிய கொலை குற்றங்களா?

நேசத்தை உணர்த்தவேண்டிய காதல் வெறுப்போடு மரணத்தை தழுவவைத்தது என்ன முரண்?

பிப்ரவரி 14 காதலர் தினம். பிப்ரவரி 16 அந்தப் பெண்களின் மரண தினம். இரண்டு நாள் வேறுபட்டாலும் இரண்டையும் காதல்தான் இணைக்கிறது. காதலர் தினம் வருடா வருடம் தனது கொண்டாட்டத்தை அதிகரித்தபடிதான் செல்கிறது. ஆனால் அந்த அதிகரிப்பு காதலின் தன்மையில் ஒரு முதிர்ச்சியையோ, அறிவையோ சார்ந்திருக்கவில்லை. ‘ஜோடி’ ஆஃபர்க்ளில் நவீன பொருட்கள்,  காதலர்கள் சந்திக்கும் பொது இடங்கள், ஊடகங்களின் காதல் நினைவுக் கதைகள், காதல் சினிமா வசனங்கள், காதல் கவிதைகள் என்று காதலின் உலர்ந்து உதிரும் அலங்காரங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் ஆர்ட்டின் பலூன்கள் அங்காடிகளையும், அலுவலகங்களையும் அழகுபடுத்துகின்றன. அன்பைக் காட்டும் அந்த இதயம் காதலுக்கென்று பரவசம் கொள்ள மட்டுமே நினைவுபடுத்தப்படுகிறது. ஆனால் அந்த அன்பை அடைவதற்கு பல தடைகளைக் கடக்கவேண்டும், போராடவேண்டுமென்ற நடைமுறை அந்த இதயத்தின் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்திய சமூகத்தில் காதலிப்பதற்கு என்னென்ன தடைகள், அந்த தடைகளை எப்படிக் கடக்கவேண்டும், கடந்தவர்களின் வீரக்கதைகள் என்றல்லவா இங்கு காதலர்தினம் கடைபிடிக்கப்படவேண்டும்? மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தம் புதிய செல்பேசியில் காதல் எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத்தான் ஊடகங்கள் கற்றுக் கொடுக்கின்றன.

ஷாஜின் அந்தப் பெண் ஷர்மினோடு கொண்டது காதலா இல்லை வன்மமா? தனது கல்வித்தகுதியை ஊதிப்பெருக்கி பொய் சொல்லி காதலித்திருக்கிறான். பொய்யை அறிந்ததும் காதலை இரத்து செய்கிறாள் ஷர்மின். இது இயல்பானதுதானே? தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்கும் ஒருவனை அதுவும் காதலுக்காக செய்யும் ஒருவனை எந்தப்பெண் காதலிப்பாள்? தனது உயர்கல்வியின் தகுதிக்கு நிகராக அவனது கல்வியில்லை என்பதற்காகக்கூட ஷர்மின் காதலை துண்டித்திருக்கட்டும். அப்போது கூட அது தவறென்று சொல்ல முடியாதே?

ஷாஜின் போன்ற ஆண்கள் பொய் சொல்லுவது கூடப்பிரச்சினையில்லை. காதல் என்று வரும் போது இருபாலாரும் தனது நல்லெண்ணங்களை மட்டும் வெளிப்படுத்த முயல்வார்கள். தத்தமது குறைகளை, பலவீனங்களை ஆனமட்டும் மறைக்க முனைவார்கள். போகட்டும். ஆனால் ஷாஜின் தன்னை சுதந்திரமான ஆணாகக் கருதிக்கொண்டது போல ஷர்மினை சுதந்திரமான பெண்ணாக அங்கீகரிக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய ஒரு காதல் அடிமை. அவன் அவளைக் காதலிக்கத்தொடங்கியதுமே அவளது சுதந்திரவாழ்க்கை முடிவுக்கு வந்தேயாகவேண்டும். அதைத் தாண்டி அவளுக்கு வாழ்க்கையில்லை.

எப்படி காதலிக்க உரிமையிருக்கிறதோ அப்படி காதலை இரத்து செய்யவும் உரிமையிருக்கிறது என்பது ஆண்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது. அப்படித்தான் அவர்கள் சினிமாவால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பதறி ஓடும் வெள்ளாட்டை விடாது துரத்தி வீழ்த்தும் வேட்டை நாயின் தந்திரங்கள்தான் தமிழ் சினிமாவின் காதல் பற்றிய பாடங்கள். இதனால் ஒரு பெண்ணிடம் ஜென்டிலாக காதலைத் தெரிவிப்பது நமது இளைஞர்கள் அறியாதது. மாறாக அந்தப்பெண் தன்னைக்காதலித்தே ஆகவேண்டும் என்று குறியாய் அலைவார்கள். இந்தத் தொந்தரவு தாங்காமலே அல்லது தன்னை இவன் இவ்வளவு வெறியாய் காதலிக்கிறானே என்றெண்ணி அந்தப்பெண்களும் அந்த ஆதிக்கக் காதலை அடிபணிந்து ஏற்றுக் கொள்வார்கள். எனில் இது எந்தவகைக் காதல்?

காமம் என்ற உணர்ச்சி மனிதனை உள்ளிட்டு எல்லாவகை விலங்குகளுக்கும் பொதுவானதுதான். காமத்திலிருந்து காதல் என்ற பண்பாடுதான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிக்கிறது. ஒத்த தகுதியுடைய மனிதர்களில் இன்னாரைத் தெரிவு செய்து காதலிப்பது என்பது மனிதன் உருவாக்கிய பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதே சமயம் தனிப்பட்ட இருவரது காதல் எப்போதும் தனிப்பட்ட விசயமாக மட்டும் இருப்பதில்லை. அது சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டே காரியசாத்தியமாகிறது. ஆனால் இன்னமும் தனிப்பட்ட வாழ்வில் அடிமைத்தனத்தின் பிடிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவள் தெரிவு செய்வதற்கும் மறுப்பதற்கும் உரிமை பெற்றவளாக இருப்பதில்லை.

பெண்களின் இந்த சமூக அடிமைத்தனத்தைத்தான் ஷாஜின் போன்ற ஆண்கள் கேடாகப் பயன்படுத்துகிறார்கள். தமது வாழ்க்கைத் துணைக்கு சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ அவர்கள் கிஞ்சித்தும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இத்தகைய ஆண்கள் கூட ஜனநாயகத்தின் வாசனையை தமது சமூக வாழ்க்கையில் நுகர்ந்திருப்பதில்லை. தந்தை மகன் உறவு, ஆசிரயர் மாணவன் உறவு, உற்றார் சாதியினரோடு தனிநபர் உறவு, முதலாளி தொழிலாளி உறவு, மேலதிகாரி ஊழியர் உறவு என எல்லா உறவுகளிலும் அடிமைத்தனத்தை ஒழுகிவாழும் ஒரு ஆண் தனது பெண்ணிடம் மட்டும் சரிசமமாக நடந்து கொள்வானா என்ன?

இப்படி சமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும். அதன்றி அவன் சொக்கத்தங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது கற்பனையில் கூட சாத்தியமில்லை. இந்த விசயத்தை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஷாஜின் தனது முன்னாள் காதலியை ஒரு பண்டமாக, பொருளாக தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய அடிமையாக, தான் மட்டுமே துய்த்துணரவேண்டிய காமச்சதைப் பிண்டமாக கற்பித்துக் கொண்டான். தனது காமவெறியை அல்லது காதலை மட்டும் தரிசிக்கவேண்டிய அந்த உடல் வேறு ஒரு ஆணுக்கு சொந்தமென்று ஆகப்போவதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த அஜீரணம்தான் அவனிடம் வன்மம் கொண்டு வெறியாய் கொலையில் முடிந்திருக்கிறது. ஷர்மினை அடிமையாக கருதிக்கொண்டு காதலித்ததால்தான் அவளை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி அவள் செத்ததை உறுதி செய்யும் நிதானம் அவனிடம் இருந்தது.

ஆனால் மனிதகுலத்தில் சரிபாதியான பெண்கள் அடிமையாக இருக்கும் போது ஆண்கள் மட்டும் சுதந்திரத்தின் வெளியை அனுபவிக்கமுடியாது. அதனால்தான் ஷாஜின் கொலை செய்த கையுடன் தற்கொலைக்கும் முயன்று தோற்றுவிட்டான். இனி ஆயுள்முழுவதும் கழுத்தறுப்பட்ட அந்தப் பேதைப்பெண்ணின் முகம் அவனை அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்யும். காதல் கற்றுக்கொடுக்காத ஜனநாயகத்தின் வாசனையை அவனது கோரக்கொலை சிறிதாவது கற்றுக்கொடுக்கும். இப்படி தன்னுயிரை பலிகொடுத்துத்தான் பெண்கள் ஆண்களுக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.

காதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.

இத்தகைய ஆண்கள் காரியவாதத்தில் மூழ்கி பிரச்சினையற்ற முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வார்கள். சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றால் அந்த எதிர்ப்பை மீறி மணம் செய்து வாழலாம் என்ற உறுதி இத்தகைய கோழைகளுக்கு இல்லை. காதல் என்றால் குடும்பம், உற்றார், உறவினர், சாதியினரின் எதிர்ப்பை மீறித்தான் நிறைவேற முடியும் என்பது இந்தியாவின் விதி. இதற்கு முகங்கொடுக்காமல் பெற்றோர் அனுமதியுடன்தான் காதலிக்க முடியுமென்றால் இங்கே காதலுக்கு இடமில்லை.

ஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை? அதன் விடை இந்தக்காலத்து படித்த இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் சிக்குண்டிருக்கிறது. பணம் கொடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் படிப்பதோ, பணமும், சிபாரிசும் கொடுத்து வேலை தேடுவதோ, பணமும், பொன்னும் வாங்கி திருமணம் புரிவதோ, பங்குசந்தையில் சூதாடி சம்பாதிக்கலாம் என முனைவதோ, சுயமுன்னேற்ற நூல்களைப்படித்து ‘அறிவை’ வளர்ப்பதோ, கார்ப்பரேட் சாமியார்களின் துணை கொண்டு உடல்நலத்தையும், தொழிலையும் குறுக்குவழியில் முன்னேற்ற நினைப்பதோ எல்லாம் ஊழலிலும், சுயநலத்திலும் மூழ்கித்தான் இந்தத் தலைமுறை வாழ்க்கையில் கால்பதிக்கிறது.

இந்தக் கால்தடத்தின் வலிமை கொண்டு காதலிக்கும் போது காதலும் அங்கே ஊழல்படுத்தப்படுகிறது. இயல்பான காதல் தடைகளைக்கூட இவர்கள் பொறுப்பதில்லை. இவ்வளவிற்கும் சண்முகவர்தினி பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலையில்தான் இருந்தார். ஜெகன் நினைத்திருந்தால் அந்த மணவாழ்க்கை பொருளாதாரச்சிக்கல் இல்லாமலேயே கூட ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவன் மனதில் என்ன இருந்திருக்கும்? பெற்றோர்கள் தடையால் வரும் சமூக விலக்கத்தின் இழப்பை லாப நட்ட கணக்கு போட்டிருப்பானோ? இல்லை சண்முகவர்தினியை விட அழகான, வசதிபடைத்த பெண்ணை அடையலாம் என்று யோசித்திருப்பானோ? இல்லை தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக யோசித்திருப்பானோ? நமக்குத் தெரியவில்லை.

நமக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் காதலியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய விரும்பவில்லை. அதனால் தன்னை மறந்து விடும்படி சண்முகவர்தினியிடம் முடித்துக் கொண்டான். இத்தகைய வீராதி வீரன் இதுதான் தன்னுடைய நிபந்தனை என்று காதலிப்பதற்கு முன்னரே சொல்லித் தொலைத்திருக்கலாமே? தான் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் இருப்பேன் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்திருக்கலாமே? கல்லூரிப்படிப்பின் போது பில்லியனில் உட்கார்வதற்கும், சினிமா பார்ப்பதற்கும், ஒரே கோக்கை இருவரும் குடிப்பதற்கும், கடற்கரையில் கைபிடித்து காலாற நடப்பதற்கு மட்டும்தான் அவனுக்கு சண்முகவர்தினி தேவைப்பட்டிருப்பாள் போலும்.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செட்டிலாவதற்காக என்பதுதானே இன்றைய இளைஞோரின் வாழ்க்கைச் சூத்திரம். ஆனால் சண்முகவர்தினி போன்ற அப்பாவிப் பெண்கள் சிலர் காதலை உண்மையாக பற்றி நடக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதனால்தான் அவள் இறப்பதற்கு முந்தைய விநாடி வரை தனது தந்தையிடம் விவாதித்திருக்கிறாள். அவளது தந்தை செல்லத்தம்பி எல்லா நடுத்தர வர்க்க தந்தையும் போல ஒரு தந்தை. மகளை உயர்கல்வி படிக்கவைத்து அழகு பார்த்தவர் அவளது காதலை மட்டும் அழகாக பார்க்கவில்லை. அங்கே என்னுடைய உடமை ஒன்று என்னை மீறி வெளியே செல்ல நினைப்பதா என்று அவர் இயல்பாக யோசித்திருக்கலாம்.

எம்.இ படிக்கும் தனது மகளுக்கு அறிவியலின் சிக்கலான சூட்சுமங்களை கற்றறிந்தவளுக்கு வாழ்க்கை குறித்தும் ஒரு சுயேச்சையான கண்ணோட்டம் இருக்கும் என்பதை இந்தத் தந்தைகள் உணர்வதில்லை. அறிவில், கல்வியில் தன்னைக் கடந்து செல்லும் மகளை வாழ்க்கையில்மட்டும் கடந்து செல்வதற்கு அனுமதிப்பதில்லை. ஒருவேளை இப்போது செல்லதம்பி தனது மகளின் தேர்வை அங்கீகரிக்காததன் துயரத்தை விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தையும் புரிதலையும் அருகே நின்று பார்க்க மகளில்லையே? தனது தந்தைக்கு ஒரு பெண்ணின் வலியை இப்படி ஐந்தாம் மாடியில் குதித்துத்தான் ஒரு மகள் உணர்த்த வேண்டியிருக்கிறது.

தந்தையின் கண்டிப்பான நிராகரிப்பை அடுத்து தனக்கு உள்ள ஒரே ஆதரவான காதலனிடம் பேசிய சண்முவர்தினி அவனும் கைவிட்டு விட்டதைக் கேட்டு மனமுடைந்திருக்கலாம். ஆனால் அவனது காதலின் யோக்கியதையை அவள் புரிந்து கொள்ளவில்லையே? இத்தகைய கோழையை ஏன்தான் காதலித்தோம் என்ற வெறுப்பு அல்லவா அவளிடம் வந்திருக்கவேண்டும். ஒருக்கால் அவள் கண்ட ஆண்களில் அவனே ஆகச்சிறந்தவனாக இருக்கட்டும். ஆனால் அந்த ஆகச்சிறந்தவனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உறுதி, காதல் மீதான நம்பிக்கை அவனிடம் இல்லையே?

இங்குதான் பெண்களும் தங்களது உண்மையான சுதந்திரமான காதல் தெரிவை கொண்டிருப்பதில்லை. அவர்களும் கூட அடிமை நிலையிலிருந்துதான் காதலையும் காதல் குறித்த பிரச்சினைகளையும் பார்க்கிறார்கள். அடிமை மனதிலிருந்து உதிக்கும் காதல், அது சாத்தியமில்லை என்றாகும் போது தனது வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது. இதனால் சண்முகவர்தினியின் மனப்போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்தவில்லை. தந்தையும், காதலனும் ஒருசேர கைவிரித்ததும், அதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள இயலாது என்ற உண்மையும் புரியாமல் இல்லை.

ஆனால் தனது காதலின் தகுதி இதுதான் என்று புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பில்லையா? இவனையா இத்தனை நாள் உயிருக்குயிராய் காதலித்தோம் என்று ஒரு குற்ற உணர்வும், அந்தக் குற்ற உணர்விலிருந்து தான் உருவாக்கிய காதல் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டிருக்கலாமே? வாழ்வின் இக்கட்டான தருணங்களில்தான் நாம் கொண்டிருக்கும் உறவுகளின் உண்மை முகத்தை அறிய நேரிடுகிறது. சமாதானக் காலங்களில் இனிய இசையாக நெஞ்சை வருடும் அதன் ராகங்களில் நாம் மனதை பறிகொடுத்திருக்கலாம். அதனால் போர்க்காலங்களில் அதே இசையை எதிர்பார்த்து கிட்டாத போது கடும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். என்றாலும் அந்த ஏமாற்றம் நமக்கு மனிதர்களின் உண்மை நிலையை நேருக்குநேர் காட்டிவிடுகிறது.

அது எந்த உறவாக இருந்தாலும் அதன் தராதரம் எத்தகையதாக இருந்தாலும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு என்பது அத்தனை சீக்கிரம் மறைந்து விடாதுதான். ஆனால் பொது நலன், சமூக அக்கறை, சுயநலமின்மை முதலான அளவுகோல்களை குறைந்த பட்சமாகவேனும் நாம் நமது உறவுகளை மதிப்பிடுவதற்கு முயலவேண்டாமா? ஒருவனது சுயநலத்தின் எல்லை எது என்பது பொதுநலனோடு அவன் முரண்படுவதில்தான் வெளிப்படும். சராசரி வாழ்க்கையில் உள்ளோருக்கு இந்த ஆய்வுமுறைகள் எதற்கு என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அதுபாட்டுக்கு சராசரியாகவே போய்விடாது. மேடுகளும், பள்ளங்களும், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டதுதான் வாழ்க்கை. அதில் சுமூகமாக பயணிக்கவேண்டுமென்றால் அடிப்படையில் நாம் ஒரு போராட்டக்காரராகத்தான் இருந்தாக வேண்டும்.

பொறியியலில் உயர்கல்வியெல்லாம் படித்து வந்த சண்முகவர்தினி வாழ்க்கை கல்வியில் படிப்பறிவற்ற பெண்களுக்கு இருக்கும் போராட்ட மனதினைக் கொண்டிருக்கவில்லை. ஏழை எளிய பெண்களைப் பொறுத்தவரை வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்காக சமூகத்துடன் கொண்டிருக்கும் அவர்களது உறவு அந்த குணத்தை பெற்றுத்தருகிறது. நடுத்தவர்க்க பெண்களுக்கு அது அமைவதில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்குள் புழுங்கிச் சாகிறார்கள். அந்த புழுக்கம் அளவை மீறும்போது வெடிக்கிறது. சிலசமயம் முடித்துக் கொள்ளவும் செய்கிறது.

காதலர் தினத்தின் கொண்டாட்டங்களில் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும்போது சண்முகவர்தினி மட்டும் நிறைவேற முடியாத தனது காதலை நினைத்து மனம் வெம்பியிருக்கலாம். இறுதி வரை தனது காதலை சாத்தியமாக்குவதற்கு அவள் தன்னளவில் தீவிரமாகத்தான் போராடியிருக்கிறாள். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அவளோடு இருந்து உதவுதற்கு யாரும் இல்லை. நிர்க்கதியான நேரத்தில் அனாதையாக்கப்பட்ட அவளது மனம் என்னவெல்லாம் கொந்தளித்திருக்கும் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாதது.

அவளது மரணம் திட்டமிடப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் தற்கொலை செய்வோர் வழக்கமாக செய்யும் முறைகளில் அவள் போயிருக்கக் கூடும். ஐந்தாவது மாடியில் இருந்து கபாலம் வெடித்துச் சிதறும் கொடூரமான முறையை நாம் கற்பனையில் கூட தாங்கிக் கொள்ளமுடியாது. அவள் கணநேரத்தில் அதை முடிவு செய்து துணிச்சலாகக் குதித்துவிட்டு முடித்துவிட்டாள்.

நான் வசிக்கும் சமூகத்தில், நாட்டில் இரண்டு பெண்கள் அநியாயமாக இறந்து போனதை இந்த இரண்டு நாட்களில் பலவிதங்களிலும் யோசித்துப் பார்த்து விட்டேன். மரணத்தை அவர்கள் எதிர்கொண்ட அந்த கடைசித் தருணங்களை நான் அசைபோட்டபோது என்னிடம் அதை எதிர்கொள்வதற்கு எந்த ஆயுதங்களும் இல்லை. அரிவாளால் அறுக்கப்பட்ட கழுத்து, தரையில் மோதித் தெறித்த தலை இரண்டும் என்னை மங்கலான தோற்றத்தில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. அந்த தோற்றத்தில் இரண்டு ஜோடிக் கண்களின் வலிமையான பார்வை குத்தீட்டியாக துளைப்பதை கண்ணீருடன் ஏற்றுக் கொள்கிறேன். அந்த எளிய, புத்துணர்ச்சியூட்டும் கண்களை காப்பற்ற வக்கில்லாத இந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாணிக் குறுகுகிறேன்.

_________________________________________________

வினவில் விமரிசனம் மட்டுமே எழுதுகிறீர்கள், தீர்வு குறித்து எதுவும் சொல்வதில்லை என பல நண்பர்கள் கருதுகிறார்கள். இந்தப்பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லமுடியும்?

வினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம். இது எங்களுக்கு சுமையல்ல. வேறு என்ன சொல்ல?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 1. சமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும்

 2. தன்னை இன்னதுதான் கட்டுப்படுத்துகிறது என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து விடுவதில்லை. காதலும் கூட அந்த அளவுக்கு அறிவுப்பூர்வமான நடவடிக்கை அல்ல• இயல்பான மனதில் எழும்பும் காதலுக்கு அப்படி தீர்மானமான முடிவுகள் அவசியம் என்பது எனக்கு உவப்பாக இல்லை.

  இரண்டாவது ஜெகன் கதையை கொஞ்சம் உல்டாவாக யோசித்து பாருங்கள். அப்போது பெண்ணை குறை சொல்வீர்களா… முதல் சம்பவம் உல்டாவாக நமது சமூகத்தில் வாய்ப்பில்லாத்தால் அதனை யோசிக்க முடிவில்லை

 3. வாழ்வின் எல்லா நிலைகளிலும், எல்லா கணங்களிலும் பெண் என்பவள் ஒரு அடிமையாகத்தான் பார்க்கப்படுகிறாள். நான் அப்படியில்லை என்று யாரும் இதில் விலகிவிடமுடியாது. வேறும் நினைவுகளால் அல்லாமல் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இந்த நினைப்பு பல்வேறு வடிவங்களில் கரைந்து நிலைகொண்டிருக்கிறது. போராடும் உறுதியில்லாதவர்களால் அதை கண்டறியவும் முடியாது, எதிர்த்து வீழ்த்தவும் முடியாது.

  விவசாயம், மருத்துவம், கட்டுமானம், உள்ளலங்காரம் என பல முக்கிய கலைகளை, வாழ்வியல் சாறுகளை மனிதகுலத்திற்கு வழங்கியது பெண்கள் தான் என்பதை ஆண்கள் உணர்வதே இல்லை.

  செங்கொடி

 4. //காதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.//
  ஷாஜின் குற்றவாளிதான் அதில் பிரச்சினையில்லை. ஆனால் ஜெகனை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? அதற்கு அடிப்படை என்ன?

  அவன் பிராக்டிகலாகத்தான் சிந்தித்திருக்கிறான். பெண்ணின் பெற்றோர் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்த பின்னால் அதையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தால் மணவாழ்க்கை எவ்வாறு நிம்மதியாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்.  தற்கொலை முடிவுக்கு சென்ற அவனின் காதலி ஸ்டேபிளான பெண்ணாகத் தோன்றவில்லை.

  அவள்தான் எனக்கு ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கமாக காட்சி அளிக்கிறாள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 5. “அவன் பிராக்டிகலாகத்தான் சிந்தித்திருக்கிறான். பெண்ணின் பெற்றோர் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்த பின்னால் அதையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தால் மணவாழ்க்கை எவ்வாறு நிம்மதியாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்.”

  பின்பு ஏன் அவன் காதலிக்கவேண்டும். தனது அனைத்து அவயங்களையும் மூடிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே.

 6. அருமையான பதிவு, ///வினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம்./// போராட்டத்திற்கு பயந்து தானே பல காதல் கானல் நீராகிறது….

 7. ஒரு தனிமனிதனின் சுய மதிப்பீடு, அவன்/அவள் எதிர்காலம் என்பதெல்லாம் ஒரு காதலின் வெற்றி, தோல்வியால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. அதையும் தாண்டி மனித உயிர் விலை மதிக்கமுடியாத ஒன்று. அதை காதலின் பெயரால் அழிக்காதீர்கள். 

 8. வினவு கூறியதை போல் பில்லியனில் உட்காருவதற்கு மட்டுமே காதலிக்கும் ஆண்கள் இருக்கவும் செய்கிறார்கள். நண்பர் ஒருவர் அப்படி இருந்தார். பெண்ணின் அப்பா அவரை அழைத்து பேசி முடிவெடுக்க அவனின் பெற்றோரை அழைத்தனர். மறுநாள் முதல் அந்தப் பெண்ணை இவன் சந்திக்கவே இல்லை. அவள் இவனை பச்சைத் துரோகி என தூற்றி விட்டு மூன்று மாதத்தில் திருமணம் முடித்து இன்று நன்றாகவே இருக்கிறாள். இத்தகைய முடிவு எல்லோரும் எடுக்க வேண்டுமே.

  இன்னொரு நட்பு, மூன்றாண்டு காதல் அனைவரும் மாலைநேர கல்லூரி நண்பர்கள். மூன்றாமாண்டு காதல் வீட்டிற்கு தெரிந்து விட்டது. நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பெண் வீட்டிலிருந்து ஒரு செய்தி வெட்டு குத்து என. நண்பன் அப்படியென்றால் காதலை விட்டுவிடுவதாக முடிவெடுக்கிறான். ஆனால் அந்தப் பெண் அவனிடம் உறுதியை அதிகப்படுத்தியதோடு, பெற்றோரின் மனதையும் மாற்றினாள். சாதி வேறு குறுக்கே. நண்பன் தாழ்த்தப்பட்ட சாதி, சாதக பொருத்தம் சுத்தமாக இல்லை. குழந்தை பாக்கியம் இல்லவே இல்லை. இப்படி பெண்ணின் தாயார் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்.

  எத்தனையோமுறை பெண்ணின் வீட்டிற்கு சென்ற என்னால், நண்பனின் சார்பாக நான் பெண் கேட்டு சென்றபோது ஏற்பட்ட தயக்கம், அப்போது பெண்ணின் அப்பா கண்ணீர் விட்டு தன் கனவுகளை சொன்னார். இருப்பினும் அவர் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்தார். ஆம் காதல் ஐந்தாம் ஆண்டு வெற்றிப் பெற்றது. ஏன் தெரியுமா அந்தப் பெண்ணின் உறுதி. மணந்தால் பெற்றோரின் சம்மதத்தோடு என்ற உறுதி, நான் இதில் ஒன்றுமே இல்லை. அவர்களின் வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. திருமணமான 10 மாதத்தில் குழந்தை. சாதகம் பொய்தது, காதல் வாழ்கிறது.

 9. /// சாதகம் பொய்தது, காதல் வாழ்கிறது/// என்றுமே சாதகம் பொய்தான்….. காதல் உண்மைதான்… – முன்னது பயம் காட்டுகிறது. பின்னது பயப்படுகிறது.

 10. “ஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை? ” – ஓகே – இதுவே பெண்கள் அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்த்து போராட தயாராய் இருக்கும் ஆணை விட்டு சென்றால் அதை பெண்களின் சுயநலம் என்று சொல்வீரா இல்லை பெண்களின் சமூக அடிமைத்தனத்தினால் தான் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்று சப்பை கட்டு கட்டுவீரா?? பிரிதலின் வலி உணராமல் செய்யும் பெண்களுக்கு என்ன பெயர் சொல்லி அளிப்பீர் ? Female chauvinism ??? இல்லை பொருக்கி பெண்கள் ??? 

 11. நல்ல கட்டுரை வினவு. இதை படித்தவுடன் என் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வு கண் முன்னே காட்சிப்பிம்பங்களாய் ஓடுகின்றன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் பிறகு நட்பு காதலாக மாறியது. பிறகு வழக்கம் போல் வீட்டிற்க்கு தெரிய பிரச்சனை ஆரம்பமானது. வழக்கமாக பெற்றோர்கள் முன் வைக்கும் சாதி பிரச்சனை ஒரு காரணம் என்றாலும் என் காதலியை விட எனக்கு கல்வி தகுதி சற்று குறைவு என்பது மற்றொரு காரணம். பிறகு ஒரு நாள் அவள் போன் செய்து அழுதுகொண்டே நீங்கள் என்னை மறந்து விடுங்கள் என்றார். பிறகு நான் ஒரு நிமிடம் யொசித்து முடிந்த வரை அவர் அவர் வீட்டில் போராடுவோம் என்றேன் அவளும் சம்மதித்தாள். பிறகு அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை அதை கண்டு சோர்வடையாமல் எங்கள் திருமணத்தை நாங்களே ( பார்பனிய சாங்கிய சடங்குகள் இல்லாத தாலி என்ற வேலி இல்லாத ஆடம்பரம் இல்லாத மாலை மட்டும் மாற்றி தோழர்கள் நண்பர்கள் என் மனைவியின் பெற்றொர்கள் முன்னிலையில் நீண்ட கரவொலிக்கிடையே ) நடத்தினோம். இன்று எங்களுக்கு 3 வயதில் ஒரு மகன் நாங்கள் எங்கள் குடும்பத்தில் எந்த சிக்கலும் குழப்பமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். காலப்போக்கில் என் பெற்றோரும் மனம் மாறி எங்களை புரிந்துகொண்டார்கள். இதை எதற்க்காக சொல்கிறேன் என்றால் அப்போது எங்களிடம் சமூகம் பற்றிய சிந்தனைகள் ஓரளவு இருந்தது மற்றும் போராட்டத்தின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை எங்களை வெற்றியடைய செய்துள்ளது. காதலிக்கும் ஒவ்வொரும் தன் காதலை நேசிக்கும் அளவுக்கு சமூகத்தையும் போராட்டத்தையும் நேசிக்க வேண்டும் என்பது எங்கள் காதல் வெற்றியின்பால் நாங்கள் கண்டிருக்கும் உண்மை.

Leave a Reply to செங்கொடி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க