Tuesday, July 14, 2020
முகப்பு சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!
Array

சாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்!

-

vote-012ஒரு மாதம் முன்பு பதிவர் அக்னி பார்வையை சந்தித்த போது நித்தியானந்தாவிற்கும் சாருவுக்கும் உள்ள  மெய்சிலிர்க்கும் உறவை விரிவாகப் பேசினார். அதையே ஒரு கட்டுரையாக எழுதவும், வாய்ப்பு கிடைக்கும் போது பெங்களூருவிலிருக்கும் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று தகவல் திரட்ட வேண்டுமென்றும் கேட்டபோது உற்சாகமாக ஒத்துக்கொண்டார்.

ஆசிரமம் செல்வதற்கு சற்று காலதாமதம் ஆகி ஒரு வழியாக சென்று விவரம் திரட்டப்பட்டது. சென்ற ஞாயிறு அவர் எழுதி அனுப்பியிருக்க வேண்டும். வேலைச்சுமையால் பெரும்பகுதி முடிக்கப்பட்ட அந்தக்கட்டுரை அவரது ட்ராப்ட்டில் இருந்தது. புதன் இரவு நடக்க இருக்கும் திவ்ய தரிசனத்திற்குப் பிறகுதான் அந்தக் கட்டுரை எழுதப்பட வேண்டுமென்பது காலத்தின் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?

________________________________________

புதன் இரவு 8.00 மணி: நண்பரொருவர் தொலைபேசியில் உடன் சன் நியூஸ் பார்க்குமாறு அவசரத்துடன் கூறினார். என்ன விடயம் என்றதும் சொன்னார். ஆனால் நாம் இருந்த இடத்தில் டி.வி இல்லை என்பதால் வாய்ப்பிருக்கும் நண்பர்களிடம் பார்க்கச் சொல்லி விட்டு அக்னி பார்வையிடம் விசயத்தைச் சொன்னோம். அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வழியிலிருந்தவர் ப்ரேக்கிங் நியூஸைக் கேட்டதும் உற்சாகமடைந்தார். உடன் சென்று கட்டுரையை முடித்து அனுப்புவதாக கூறினார். டி.வியைப் பார்த்தவர் இவ்வளவு தெளிவாக எடுத்திருக்கிறார்களே என்று வியந்து விட்டு கட்டுரையை அனுப்பினார்.

_________________________________

அதற்குள் தமிழ்மணத்தில் வார்த்தைகளாகவும், யூ டியூபில் காட்சியாகவும் நித்தியானந்தாவின் பள்ளி இரவு பவனி வர ஆரம்பித்தது. இடையில் தோழர் கில்லியிடம் சொல்லி சாருநிவேதிதா தளத்தின் முகப்பு பக்கத்தை காப்பி செய்யுமாறு கூறிவிட்டு காத்திருந்தோம்.

இரவு 12.00 மணி சுமாருக்கு சாருவின் தளத்தில் போஸ் கொடுத்த நித்தியானந்தா மாயமாக மறைந்து போனதை அக்னி பார்வை தெரிவித்தார். நல்லவேளை அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை சேமித்து விட்டோம்.

_______________________________________

கதவைத் திற காற்று வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கொஞ்சம் கவனிக்காமல் கதவை திறந்து வைத்ததால் அவரின் படுக்கையைறையில் காமிர நுழைந்து இப்பொழுது டீவிக்களில் நித்தியானந்தரின்  காமக்களியாட்டம் அரைமணி நேரத்திற்கொருமுறை நவராத்திரி பூஜையாக ஓடுகிறது.

முன்பு நினைத்தவுடன் அந்த பின்நவீனத்துவ எழுத்தாளரின் எதிரில் திடீரென்று காரில் கடந்து போகும் நித்தியானந்தர், இனி நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் உங்கள் செல்போன்களில் சிரித்தபடி ஒரு பெண்ணுடன் காட்சி தருவார்..

நித்தியானந்த சுவாமிகள், பக்தர்களுக்கு ஜீவன முக்தி கொடுத்து, தியான பீடம் நடத்தி, வாழக்கை வாழ கற்று கொடுத்துக்கொண்டிருந்தவர் ஒரு சில நொடி சலனப்படத்தால் இப்பொழுது சலனப்பட்டுக் கொண்டிருக்கலாம்!

___________________________________

திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகர் ஏதோ குறி சொல்லிக் கொண்டிருந்த பையனாக இருந்தவர் ஒரு இனிய நாளில் கார்ப்பரேட் சுவாமியாக களமிறக்கப்பட்டார். அகமுடை முதலியார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த இந்த பையன் ஆரம்பத்தில் கொஞ்சம் ஆன்மீகம், நிறைய சரக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். திருவண்ணாமலையில் ஓரளவு கணிசமாக வாழும் இந்தச்சாதிப் பிரமுகர்கள்தான் நித்தியானந்தாவை திட்டமிட்டு உருவாக்கினர். அரசியலில் அண்ணா, அன்பழகன் என்று பெரும் கைகள் உருவாயிருந்த இந்த சாதி வட தமிழகத்தில் எல்லா விதங்களிலும் முன்னேறிய சாதியாகும். எல்லாத் துறையிலும் கொடி கட்டிப் பறந்த இவர்களுக்கு ஆன்மீகத்தில் மட்டும் ஆளில்லை என்ற போது இந்தப்பையன் கிடைத்தான்.

ஆனந்த விகடனில் சுகபோதானந்தா ‘மனசே ரிலாக்ஸ்’ என்று பக்தர்களை பரவசப்படுத்திக் கொண்டிருந்த போது குமுதம் போட்டிக்காக நித்தியை ஆரவாரமாக இறக்கியது. சில வருடங்களுக்குள் நித்தியானந்தா கார்ப்பரேட் தரத்தை அடைந்து விட்டார்.

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நித்தியானந்தா ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒளிக் குறுந்தகடுகள், திரும்பிய இடமெல்லாம் விவேகானந்தர் போல, பரமஹம்சர் போல, முண்டாசு கட்டி, சிரித்தவாறு, என்று என்னன்னமோ தினுசுகளில் படங்கள்……….என்னடா ஒரு அரைலூசுப் பையன் இந்த போடு போடுகிறானே என்று தெரிந்தவர்களுக்கு ஆச்சரியம்.

___________________________________

பெங்களூரு மைசூர் சாலையில் புறநகரில் பல பத்து ஏக்கர் நிலத்தில் நித்தியானந்தாவின் தலைமை ஆசிரமம் இருக்கிறது. நவீன பளிங்குகள் பதிக்கப்பட்ட கட்டிடங்களைப் பார்த்தால் அது ஆசிரமம் அல்ல, ஐந்து நட்சத்திர விடுதி என்றே தோன்றும். விடுதிகள், தியான மண்டபங்கள், சாமி அருள்பாலிக்கும் அரங்குகள், புத்தக விற்பனை நிலையம் என்று எல்லா வசதிகளும் அங்கே நேர்த்தியாக இருக்கின்றன.

ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகள் தெரிந்த உதவியாளர்கள் – பெண்களையும் உள்ளிட்டு –  எல்லா பக்தர்களையும் மொழிபெயர்த்து சாமியிடம் சேர்ப்பதும் பின்னர் சாமி தமிழிலும், கன்னடத்திலும் பேசுவதை பக்தர்களிடம் சேர்ப்பிப்பதுமாய் இருப்பார்கள். பல்வேறு தியான பேக்கேஜ்கள் காலத்தைப் பொறுத்து 2500, 5000, 10,000 என்று எழுதி வைத்திருக்கிறார்கள். காசுக்கேற்ற தோசை. அல்லது சேலம் சிவராஜ வைத்தியரின் சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம், சாதா செட், ஸ்பெஷல் செட் போலவும் சொல்லலாம்.


நித்தியானந்தா தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிக செல்வாக்குடன் திகழ்ந்ததற்குக் காரணம் அரசியல்வாதிகள். முதலமைச்சர் எடியூரப்பா முதல் ஏனைய எதிர்க்கட்சி பிரபலங்கள் எல்லாம் சாமியின் தீவிர பக்தர்கள். அடுத்து குறுகிய காலத்தில் உடலையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பாதுகாப்பதற்கு விரும்பும் நவீன இளைய சமூகம் அதாவது ஜ.டி ஜென்டில்மேன்கள் ஆசிரமத்தை எப்போதும் நிரப்பி வந்தனர்.

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் முக்கியமான இடத்தை நித்தியின் ஆட்களை கைப்பற்றி ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். இந்த இடம் குறித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு உள்குத்து இருப்பதால் இப்போது இவர்கள் சாமி அம்பலப்பட்ட பிறகு எதிர்த்திருக்கிறார்கள். இரண்டு ஊர் ஆசிரமங்களையும் சேர்த்தால் நித்தியானந்தா பல கோடிகளுக்கு அதிபதி.

நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக வகுப்புக்கள பல சுயநிதிக் கல்லூரிகளில் நடந்திருக்கின்றன. தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் பிடுங்கிக்கொண்டு கல்லூரி முதலாளிகள் மாணவர்களை மிரட்டி கொண்டு வந்திருக்கின்றனர். சில கல்லூரிகளில் மாணவர்கள் எதிர்ப்பு காட்டியதும் அவ்வப்போது செய்தியாக கசிந்தது உண்டு.

அப்புறம் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிம்மதியை இடைவிடாமல் தெடும் வெள்ளைத் தோல் மனிதர்கள் வந்து சாமியை கண்டம் கடந்து தூக்கி சென்றார்கள். இப்படியாக ஒரு இளைஞன் பக்காவான கார்ப்பரேட் சாமியாக நிலைபெற்றான்.

____________________________________

கார்ப்பரேட் சாமியார்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது சொல்லில் புரியவைக்க கூடியதல்ல. ஏனெனில் அந்த உறவு ஒரு நேர்த்தியான மார்க்கெட் தந்திரம். சாமியாரின் அசட்டு பிசட்டு தத்துவ அவஸ்தைகளை விறுவிறுப்பான மொழியில் நுட்பமான கதை சொல்லாடல்களுடன் பக்தர்களிடம் அள்ளி வீசுவதற்கு நவீன இலக்கியவாதிகள் கட்டாயம் தேவை.

விசிறி சாமியாரைப் பற்றி பாலகுமாரன், சுகபோதானந்தாவிற்கு ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர்கள், ஈஷா யோக ஜக்கி வாசுதேவிற்கு இரட்டையர்கள் சுபா என்றால் நித்தியானந்தாவை குமுதம் பத்திரிகையே தத்து எடுத்துக் கொண்டது. ஆனாலும் குமுதம் விரும்பிய அளவிற்கு நித்தியானந்தாவின் பத்திகள் அவ்வளவாக எடுபடவில்லை.

இந்த இடத்தில் சாரு வருகிறார்.

__________________________________

சாருவின் அபிமானிகள் என்ன கருதுகிறார்கள் என்றால் அவர் தெரியாமல் நித்தியானந்தாவிடம் சிக்கிக் கொண்டாராம். ஸீரோ டிகிரி என்ற கொலாஜ் கூட்டெழுத்து கதை நாவலாக தமிழில் முளைத்து, மலையாளத்தில் திளைத்து, ஆங்கிலத்தில் கொடிநாட்டி, அப்புறம் பிரெஞ்சு வரைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றால் அது நிச்சயம் சிக்கிக் கொண்டவரின் தகுதியல்ல.

பார்க், சோழா டீக்கடைகளில் அந்துமணி இரமேஷோடு குடிக்கும் அளவு உயர்மட்டங்களில் நெருக்கம் உள்ள சாரு விரும்பியே இந்த பிராண்ட் அம்பாசிடர் வேலையை இணையத்தில் செய்து வந்தார். தனது எழுத்தின் அக்கப்போர் சுவராசிய வலிமை காரணமாக நித்தியானந்தாவை வலையுலகில் நிலைநாட்டுவதை ஒரு சவாலாகவே செய்து வந்தார்.

இதற்காக சாரு எவ்வளவு பணம் பெற்றிருப்பார்? கூச்சல் நிறைந்த டாஸ்மார்க் பாரில் ஒரு உன்னத தமிழ் எழுத்தாளனை குடிக்கவைத்து சித்ரவதை செய்யும் தமிழ் உலகோடு அற ஆவேசப் பகை கொண்டுள்ள அந்த எழுத்தாளன் ஒரு பெருங்கனவோடு இந்த காரியத்தை விருப்பத்துடனே ஏற்றிருக்க வேண்டும். ரிசல்ட் காட்டிய பின்புதான் பணம் என்பாதாகக் கூட அந்த ஒப்பந்தம் இருந்திருக்கலாம். ஒப்பந்தம் குறித்து சாருவே தெரிவித்தால்தான் உண்டு.

சாய்பாபாவின அற்புதக் கதைகள், வாயிலிருந்து லிங்கம், கையிலிருந்து தங்க நகை, காலன்டரிலிருந்து விபூதி, நிலவில் சாய்பாபா முகம் என்றெல்லாம் ஆன்மீக உலகை நிறைவித்து பழக்கியிருக்கிறது என்பதால் சாருவும் துணிந்து அடித்தார். விழுப்புரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த போது எதிர் காரில் நித்தியானந்தா ஆசிர்வதித்து சென்றாராம். உண்மையில் அந்த நேரம் நித்தியானந்தா பெங்களூருவில் இருந்தாராம். இவையெல்லாம் நமது கற்பனை அல்ல. நேரம் பார்த்து வைரசால் அழிக்கப்பட்ட சாருவின் புதைபொருள் பத்திகளில் எழுதப்பட்ட அற்புதக் காவியங்கள்.

மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட சாருவும், அவரது மனைவியும் பெங்களூரு ஆசிரமம் சென்றார்களாம். சாமியும் அவர்கள் காலில் குச்சியை தட்டியதும் வீக்கம் குறைந்து நோய் மறைந்ததாம். டி.ஜி.எஸ் தினகரின் முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், என்ற சாட்சிக்கதைகள் சாருவால் நவீன ஊடகமான இணையத்தில் அள்ளி வீசப்பட்டன.

இவையெல்லாம் தெரியாமல் செய்த தவறுகளா? இல்லை தெரிந்தே செய்த சதிகளா? நித்தியானந்தாவிற்கு தான் பொறுக்கி என்பது தெரிந்திருந்தாலும் முகத்தில் தேஜஸ்ஸுடன் ஆன்மீகத்தை ஒன்றிப் பேசும்போது அவனை மார்கெட் செய்யும் ஒரு தரகனும் தனது மோசடியை நீதியாக நிலைநாட்டத்தான் செய்வான். சாரு செய்தார்.

அவரது பின் நவீனத்துவ அறத்தின் படி இது ஒன்றும் தவறல்ல. இப்போது நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் குடும்பம் நடத்தும் காட்சிகளும் கூட அந்த அறத்தின் படி தெற்றல்ல. என்ன இருந்தாலும் செக்ஸ் என்பது கூட தாந்தீரிக யோகத்தின் படி  முக்தியை அடையும் ஒரு வழிதானே? ஆனாலும் சாரு தனது தளத்தில் தனது குருநாதனின் படத்தை அழித்து விட்டார். இது வேறு எதனைக்காட்டிலும் பின் நவீனத்துவத்திற்குச் செய்யப்படும் துரோகமாகும்.

இலக்கிய உலகின் கிசுகிசுக்களையும், அக்கப்போர்களையும் வாரமலரின் துணுக்கு மூட்டை தரத்தில் எழுதி இரசிகனுக்கு தீனி போட்ட ஒரு எழுத்தாளனின் குருநாதனும் அதே முறையில் ஆனால் கிசுகிசுவாக இல்லாமல் தெளிவான வீடியோ காட்சிகளாக பரபரப்பாக தமிழக இளைஞர்களுக்கு தீனி போட்டது நகை முரணல்ல. ஒத்ததை ஒத்ததுதான். ஆனால் முரண்பாடாக இருப்பது சாரு ஒரு நிலபிரபுத்தவ ஒழுக்க சீலனாக தன்னை இப்போது காட்டிக் கொள்ள நினைப்பதுதான்.

ஆனால் நாம் பின் நவீனத்துவத்தை ஏற்கவில்லை. பெரும் பணக்காரர்களின் பணத்தைக் கொண்டு உல்லாசமாக பொறுக்கியாக வாழும் ஒரு ஆசிரமப் பொறுக்கிக்கு இணையத்தில் தரகு வேலை பார்த்தவர்தான் சாரு நிவேதிதா. நித்தியானந்தாவை காறி உமிழ்பவர்கள் முதலில் குமுதத்தையும் அடுத்து சாருவையும்தான் கவனிக்க வேண்டும். ஆன்மீகத்திற்கு அறிவின் பெயராலும், மொழியின் கருவியாலும் அச்சாரம் போட்டு வாசகனை இழுத்து விட்டவர்கள் இவர்கள்தான்.

__________________________________________

சாய்பாபா, பிரேமானந்தா, சங்கராச்சாரி, தேவநாதன் என்ற வரிசையில் இப்போது நித்தியானந்தா. ஆனாலும் நித்தியானந்தா செய்திருப்பது சட்டப்படி குற்றமல்ல. அவர் நடிகை ரஞ்சிதாவை பாலியல் வன்முறை செய்யவில்லை. இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியிருக்கின்றனர். வேண்டுமானால் ரஞ்சிதாவிற்கு திருமணம் ஆகியிருந்தால் இது கள்ள உறவு. ஒரு வேளை அவர் விவகாரத்து பெற்றிருந்தால் இது கள்ள உறவும் அல்ல. ஆனால் இது ரஞ்சிதாவோடு மட்டும் இருந்திருக்கக்கூடிய உறவல்ல. ஊர்மேய்வதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருந்தால் ஒரு பொறுக்கி ஒன்றோடு நிறைவு பெறுவதில்லை.

தேவநாதனும் யாரையும் கற்பழிக்கவில்லை. இந்து ஆகம விதியின் படி கருவறையை பள்ளியறையாக பயன்படுத்துவது கல்லாலான சிலைகளுக்கு மட்டுமல்ல அந்த பேசா சிலைகளுக்கு தரகர்களாக இருக்கும் புரோகிதர்களுக்கும் உள்ள உரிமைதான் என்பதைக்கூட சாத்திரத்தை வைத்து நியாயப்படுத்தலாம். இப்போது தேவநாதன் ஜாமீனில் வெளியே கிராப் வைத்த தலையுடன் ஊர் உலகத்தில் செய்யாத தவறையா செய்து விட்டேன் என்று பேட்டி கொடுக்கிறான்.

சங்கரராமனை ரவுடிகளை வைத்து கொன்ற ஜெயேந்திரனும் கூட இப்போது எல்லா சாட்சிகளையும் பிறழ வைத்திருப்பதால் குற்றவாளியில்லைதான். மற்றபடி ஜெயேந்திரன் பெண்டாண்ட காட்சிகளை எந்த காமராவும் அவ்வளவு சுலபாமா எடுத்திருக்க முடியாது. அப்படி எடுத்திருந்தால் காமராக்காரன் இந்நேரம் பரலோகம் போயிருப்பான். நாளை நித்தியானந்தாவை மன்மதனாக சித்தரிக்கும் எல்லாப் பத்திரிகைகளும் ஜெயேந்தரனுக்கு பழைய லோககுரு பட்டத்தை எப்போதோ வழங்கி விட்டன.

சாய்பாபா  ஆசிரமத்தில் நடந்த கொலைகளும், பாபாவின் பாலியல் வன்முறைகளை வெளிநாட்டு சானல்களே அம்பலப்படுத்தியிருந்தாலும் அந்த ஹிப்பித் தலையனின் செல்வாக்கு மங்கவில்லை. இன்றும் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் அங்கே அடிபணிந்தே வணங்குகிறார்கள். மற்றொரு கார்ப்பரேட் சாமியாரிணியான மாதா அமிர்தானந்த மாயியின் ஆசிரமத்திலும் கூட கொலைகள் நடந்துள்ளன. ஆனால் அம்மாவை யாரும் அசைக்க முடியவில்லை.

கந்து வட்டிக்காரனிடம் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் விவசாயிகளின் நாட்டில்தான் இந்த இந்து மத சாமியார்கள் என்ற ஒரிஜனல் கிரிமினல்கள் சுத்த சுயம்புவாக வலம் வருகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டு போனாலும் இவர்களை மீட்டு வந்து பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கங்கள் கர்ம சிரத்தையாக தயாராக இருக்கின்றன. வேறு எதனையும் விட மதநம்பிக்கைகள் உளுத்துப் போவதை அவர்கள் தமது வலிமையால் எப்போதும் ஒட்டவைத்து வருகிறார்கள்.

மக்களும் குறிப்பாக நடுத்தர வர்க்கம் இந்த ஊழலை மத வாழ்க்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விடமால் பின் தொடர்கிறது. குறுக்கு வழியில் முன்னேறலாம் என்பது பொருளாதாரத்தில் கோலேச்சும்போது இந்த மோசடிப் பேர்வழிகளில் அவ்வளவு செல்வாக்கு இல்லாத சாமியார்களை போலிகள் என்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்வாக்குடன் திகழும் உண்மையற்ற சாமியார்களை நல்லவர்கள் என்று கொண்டாடப்படுகின்றனர். ஜெயேந்திரன் லீலைகள் சந்தி சிரித்துக்கொண்டிருந்த போது பார்ப்பனர்கள் மட்டும் கர்ம சிரத்தையாக பெரியவாள் தப்பு செய்யவில்லை என்று உறுதியாக நிற்கவில்லையா என்ன?

__________________________________

நித்தியானந்தாவாவோடு முரண்பட்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவரால் இந்த வீடியோ வெகு சிரத்தையாக எடுக்கப்பட்டு ஐந்து நாட்களுக்கு முன்னரே எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதை யாரும் வெளியிட விரும்பவில்லை. பெரும்பாலான பத்திரிகைகள் கார்ப்பரேட் சாமியார்களை வைத்து தமது நடுத்தரவர்க்கத்து வாசகர்களுக்கு நன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்ற மாயைகளை விதைத்து வந்தவர்கள் தங்களையே வில்லன்களாக காட்டுவதற்கு சம்மதிப்பார்களா என்ன?

சன் டி.வி இதைக் காட்டியதில் ஊடக முதலாளிகளிடம் உள்ள போட்டி பெரிதும் பங்காற்றியிருக்கிறது. கலைஞர் டி.வி தொடரில்தான் நடிகை ரஞ்சிதா நடித்து வருவதால் சன்.டி.விக்கு பாதிப்பில்லை. ஒரு வேளை சன் தொடர்புடைய நடிகைகளை கலைஞர் டி.வி காண்பிக்கும்பட்சத்தில்தான் சன்னுக்கு பிரச்சினை. ஆனாலும் இரண்டும் கழக கண்மணிகளின் சொத்து என்பதால் பெரிய பிரச்சினையில்லை.

நக்கீரன் பத்திரிகை நித்தியானந்தாவை வெளியிடுவதும் கூட போட்டி மற்றும் தனது குழும சாமியார் அல்ல என்ற தைரியம் மட்டும்தான். ஜக்கி வாசுதேவை நக்கீரன் உட்பட எல்லா பத்திரிகைளும் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன என்பதும் இங்கே முக்கியம்தான். ஒருவேளை ஜாக்கிக்கு இது நடந்திருந்தால் இந்த விடயம் வெளியே வந்திருக்காது. ஏனெனில் எல்லா பத்திரிகைகளும் அவரது அன்பில் நனைந்தவைதான்.

_________________________________________

கடந்த சில ஆண்டுகளாக நித்தியானந்தா புராணம் படித்த குமுதம் பத்திரிகை இதைப்பற்றி என்ன எழுதும்? பிரபலங்களின் காமக் களியாட்டங்களை ஆபத்தில்லாமல் கிசுகிசுவாக எழுதும் குமுதம் இப்போது தனது சாமியார் இப்படி அப்பட்டமாக சிக்கிக் கொண்டது குறித்து என்ன எழுதும்? அந்த பத்திரிகையை பத்து ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் வாசகர்கள் என்ன கருதுவார்கள்?

யாரும் குமுதம் பத்திரிகைக்கு செருப்படி தரப்போவதில்லை என்பதால் சற்று காலம் கழித்து இது மறக்கப்படும் என்பதுதான் அவர்களின் நம்பிக்கை. நித்தியானந்தா கூட இது மோசடிப்புகார் என்று சவடால் விட்டு இதை நீதிமன்றத்தில் நீருபிப்பேன் என்று பேசமாட்டார் என்பதற்கு உத்திரவாதமில்லை. அதனால் சாருவும்  கூட நம்பிக்கையை கைவிடவேண்டியதில்லை.

சாருவின் தளத்தில் வலப்பக்கத்தில் இருந்த நித்தியானந்தா இப்போது மறைந்துவிட்டார். இடப்பக்கத்தில் இருப்பது நல்லி விளம்பரம். நல்லி இடத்தில் காமரா நுழைவது சாத்தியமல்ல என்பதால் சாரு சற்று நிம்மதியாக இருக்கலாம். இத்தனைக்குப் பிறகும் இந்தப்பொறுக்கி சாமியாரின் இணையத் தரகனுக்கு அனுதாபம் தெரிவித்து ஆதரவு தெரிவிப்பதற்கு ஆட்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?

–   அக்கினிப்பார்வை, இராவணன் உதவியுடன் வினவு.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இமேஜ் அடிவாங்கிய குழப்பத்தில் சாரு !!! போட்டார் – தூக்கினார் !!!

பெரியதாய் பார்க்க படத்தை சொடுக்கவும் – நன்றி பதிவர் ரோமியோ

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்