2008 ஆம் ஆண்டு நாளிதழ்களில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்களுக்கு கண்பார்வை பறிபோனதை படித்திருப்பீர்கள். இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் (HRPC, ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) நடத்திய நீதிமன்ற போராட்டத்திற்கு இடைக்கால வெற்றி கிடைத்திருக்கிறது.
முதலில் அந்தப் பிரச்சினையை மீண்டும் நினைவு கூர்வோம். விழுப்புரம் மாவட்டம் நைனார்பாளையம் கடுவனூர் பகுதியிலிருந்து 66பேரை மருத்துவர் அசோக் தலைமையிலான குழு தேர்வுசெய்து பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச கண் அறுவை சிகிச்சை செய்தது. இப்படி செய்யப்படும் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் மூலம் அரசு பணம் 750 ரூபாய் வாங்கிக் கொண்டுதான் இலவசம் என்று நாடகம் போடுகிறார்கள். மேலும் வெளிநாட்டில் இதை வைத்து பிரச்சாரம் செய்தும் நன்கொடை திரட்டுகிறார்கள்.
29.7.2008 அன்று கண் அறுவைச் சிகிச்சை செய்த அனைவரும் கடுமையான வலியால் அவதிப்பட்டதை மருத்துவமனை ஊழியர்கள் கூட பொருட்படுத்தவில்லை. மறுநாள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் பெரிய டாக்டர் வந்து மீண்டும் சிகிச்சை செய்கிறார். பலன் இல்லை. கண்களில் சீழ்பிடித்து தலைமுழுவதும் கடுமையான வலியில் அந்த ஏழைகள் அலறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யக்கூட அருகில் உறவினர்கள் யாருமில்லை. கொஞ்ச நேரத்தில் வலி சரியாகிவிடும், பத்து நாட்களுக்கு சொட்டு மருந்து போடுங்கள் என்று தேனொழுக பேசிய மருத்துவமனை நிர்வாகம் அந்த மக்களை கொளுத்தும் வெயிலில் விட்டுவிட்டு ஓடிவிட்டது.
கண் பறிபோய்விடுமோ என்ற அவலநிலையில் அந்த ஏழைகள் கையிலிருக்கும் சொத்து பத்துக்களை விற்று, கடன்வாங்கி வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அப்போதுதான் கண் சீழ் பிடித்துவிட்டது, இனி தெரியாது, வலியை மட்டும் நிறுத்த மருந்து சாப்பிடலாம் என்ற அதிர்ச்சி உண்மையை மக்கள் தெரிந்து கொண்டார்கள். கண்ணில்லாமல் வேலைக்கு கூட போகமுடியாது என்ற நிலையில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர். வேறு சிலர் கோவை சங்கரா மருத்துவமனை சார்பில் நடந்த முகாமில் கலந்து கொண்டனர். அங்கேயும் கண் போனது போனதுதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
பிறகு மீண்டும் பெரம்பலூர் மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கே கண்ணுக்கு ஆபத்தில்லை, சொட்டு மருந்து போடுங்கள் சரியாகிவிடும் என்று கொஞ்சம் கூட கருணையோ மனிதாபிமானமோ இன்றி பச்சைப்பொய் சொன்னார்கள். மக்கள் கூடி நின்று இந்த அநீதியைக் கேட்டபோது டாக்டர்கள் “மருந்து கெட்டுவிட்டது நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று கைவிரித்தனர். இதற்குப் பிறகுதான் அந்த மக்கள் நடுத்தெருவில் இறங்கி மறியல் செய்ய, கண் பறிபோன இந்த அயோக்கியத்தனம் வெளிவுலகிற்குத் தெரியவந்தது.
அதுவரை கோமாவில் இருந்த அரசு நிர்வாகம் நடவடிக்கைகள் எடுப்பது போல காட்டிக்கொண்டது. இலவச கண் சிகிச்சை முகாமுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்று அப்ரூவர் ஆன அரசு அதை மீறியதற்காக ஜோசப் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். கண்பறிபோனவர்களுக்கு ஆளுக்கொரு இலட்சம் என்று அறிவித்தார்கள். கண்பறிபோன செய்தி காட்டுத்தீயாய் பரவாமல் இருப்பதற்காக பொது விசாரணை நடத்தப்போவதாகவும் அறிவித்தது அரசு. சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கெட்டுப்போன மருந்து அளித்திருந்தால் அந்தக் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஒரு இலட்சம் பணம் அதுவும் அரசு பணம் வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களின் சோகத்தை அவர்களின் வார்த்தையிலேயே கேளுங்கள்:
மூகனூர் கிராமத்தின் சுப்பராயலு, “கண் தெரியாட்டியும் வலியில்லாமல் இருந்தா போதும்னு தாங்கமுடியாம தற்கொலைக்கும் முயற்சி செய்தேன்”. மூகையூரின் வள்ளியம்மை, “தலைவலின்னு போனேன், அப்போ கண் நல்லா தெரிஞ்சுது. டாக்டர் ஆப்பரேஷன் செஞ்சா சரியாயிடும் என்றார். என் பொண்ணுங்க வேணாண்ணு சொல்லியும் வலுக்கட்டாயமா அழைச்சிட்டுப்போய் கண்ணை கெடுத்துட்டாங்க, வலி தாங்க முடியல.” கடுவனூரைச் செர்ந்த புத்தி சுவாதினம் இல்லாத குப்புவின் அம்மா,” லேசா தெரிஞ்ச கண்ணை லென்சு வைச்சா சரியாயிடும்னு டாக்டர கூட்டிக்கிட்டு போய் சுத்தமா கெடுத்துட்டாங்க, என்ன செய்யறதுன்னு தெரியல” என்று கண்ணீர் விடுகிறார்.
நைனார்பாளையத்தின் மருதாயி” ஒரு கண்ணு தெரியலைன்னு போனேன், இப்ப ரெண்டு கண்ணும் தெரியலை, இந்த டாக்டர்களை விடக்கூடாது”. நாவம்மாள், ” இடது கண்ணு தெரியலைன்னு போனேன் வலது கண்ணுல ஆபரேஷன் செஞ்சு இரண்டு கண்ணும் தெரியலை” முருகேசன்,” கால் வலின்னு காட்ட போனேன், கண்ணுல ஆப்ரேஷன் செய்யனும்னு சொல்லி கட்டாயப்படுத்தி கூப்டாங்க. இப்போ கண் போச்சு”. மற்றொரு முருகேசன்,” ஒரு நாளைக்கு ஏர்மாடு ஓட்டி ரூ.500 சம்பாதிப்பேன். இப்போ முடியல, கண் போயிடுச்சு. என் காட்ட வித்து அரசாங்கம் கொடுத்த ஒரு இலட்சம் செக்கோடு நானும் ஒரு இலடசம் தாரேன், என் கண் பார்வை கிடைக்குமா” என்கிறார்.
இப்படி எல்லா மக்களின் துயரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கும் போது இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியுடன் இம்மக்களை வற்புறுத்தி ஆடுமாடுகள் போல நடத்தியிருக்கின்றனர் என்பது தெரிகிறது. மக்களுக்கு கண்பார்வையை பிடுங்கிய ஜோசப் மருத்துவமனை இந்த உண்மையை 25நாட்களுக்கு மறைத்து வைத்தது. மக்களிடமும் வெள்ளை மாத்திரை, சொட்டு மருந்து என்று ஏமாற்றி வந்தது. இந்த இடைவெளியில் எல்லா தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது.
அப்போது பாதிக்கப்பட்ட இந்த ஏழை மக்களை அணிதிரட்டிய மனித உரிமை பாதுகாப்பு மையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள் தோழர்கள். கண்பார்வை பறிபோனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியது அரசுதான், ஆனால் மருத்துவமனை உரிய இழப்பீடு வழங்கவேண்டும், கிரிமினல் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டுமென்று ம.உ.பா.மை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இறுதி தீர்ப்புக்கு முன் இடைக்கால தீர்ப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு கண்புரை சிகிச்சை வல்லுனர் குழுவைக் கொண்டு அளிக்க வேண்டுமென்றும் எதிர்காலத்தில் தனியார் மருத்துவமனையின் தகுதியை பறிசோதித்து உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டுமென்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
இறுதி தீர்ப்பில் ஜோசப் மருத்துவமனையும் கண் பறிப்புக்கு பொறுப்பான மருத்துவர்களும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு ஏழைகளுக்கு உரிய நீதியை பெறுவதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடுகிறது.
ஏழைகள் என்பதால் கண்ணைப்பறிகொடுத்த மக்களுக்கான நீதி கூட அரசால் வழங்கப்படுவதில்லை என்பதை தோழர்களின் இந்த நீதிமன்றப்போராட்டம் நிரூபிக்கிறது. மேலும் ஜோசப் மருத்துவமனை எந்த குற்ற உணர்வுமின்றி, நிவாரணம் கூட வழங்காமல் தனது மருத்துவ வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இப்படி கண் பறிபோன விசயம் நடுத்தர வர்க்கத்திற்கோ, அல்லது மேல் தட்டு வர்க்கத்திற்கோ நடந்திருந்தால் ஆங்கில சேனல்கள் முதல் பலருக்கும் இது ஒரு தேசியப்பிரச்சினையாகி இருக்கும். நடவடிக்கைகளும் துரித கதியில் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏழைகள் என்றால் கண்ணைக்கூட பிடுங்கலாம் என்ற யதார்த்தம் மனிதாபிமானம் என்ற ஒன்று தங்களுக்கு உள்ளதாக நினைக்கும் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கட்டும்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!
தொடர்புடைய பதிவுகள்
- ஏழையின் கண்கள் என்ன விலை?
- மரணம் தொடரும் கொடூரம்! மருத்துவத்துறையில் தனியார்மயம்!!
- மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?
- பணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் !
- பன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா?
- தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்